Saturday, 17 October 2015



இக்பால்

அப்துல் ரகுமான் –பெயருக்கேற்ப அன்பும் இரக்கமும் மிகுந்தவர்  .நேர்மை இறையச்சம் துன்புறுபவர்களுக்கும் நலிந்தவர்களுக்கும் வலியச் சென்று உதவும் ஈகை உள்ளம்..என்று மிக நல்ல மனிதராகத் திகழ்ந்தார்
நல்ல குடிப்பிறப்பு ,பட்டப்படிப்பு நல்ல குடும்பத்தைச்சேர்ந்த நல்ல வாழ்க்கைத்துணை என இனிமையான இல்லறம்..பட்டப்படிப்பு முடிந்தவுடன் திருமணம் அடுத்த ஆண்டே ஒரு பெண் குழந்தை அந்தப்பெண்ணுக்கு பதினெட்டு வயதில் திருமணமாகி அடுத்த ஆண்டே ஒரு குழந்தையைப் பெற நாற்பது வயதிலேயே பேரனுக்குத் தாத்தவாகி விட்டார் ரகுமான். பெண் குழந்தைக்குப்பின் சில ஆண்டுகள் சென்று ஒரு ஆண் குழந்தை
குடுமபத்தொழிலான பீடி இலை வணிகத்தை இவரும் தொடர்ந்து செய்தார்.. தரமான பொருள், குறைந்த லாபம் என்று நேர்மையான முறையைக் கைகொண்டதால் வணிகம் செழிப்பாக இருந்தது. குறிப்பாக கடன் வாங்குவதும் கொடுப்பதும் சொந்த  வாழ்க்கையிலும்  இல்லை வணிகத்திலும் இல்லை என்பதில் உறுதியாக் இருந்ததால் வாழ்கை சீராக அமைந்தது.. வங்கியில் அனுமதிக்கப்பட்ட அதிகப்பற்றுக் கணக்கைக் கூட இதுவரை பயன்படுத்தியது இல்லை..
இப்படித்தெளிந்த நீரோடை போல் ஓடிகொண்டிருந்த வாழ்க்கையில்  எதிர் பாராத சுழல்கள் சூழ்ந்தன
பீடி இலைகளை மொத்த வணிகர்களிடம் கொள்முதல் செய்து ஓரளவு லாபம் வைத்து விற்பதுதான் ரகுமானின் குடும்ப வழக்கமாக இருந்தது. இதற்கு மாற்றாக வணிக நண்பர் ஒரு ஆலோசனை சொன்னார்.
மொத்த வணிகர்களிடம் கொள்முதல் செய்வதை விட பீடி இலை விளையும் வட மாநிலங்களுக்கு போய் நேரடியாகப் பார்த்து வாங்கினால் விலை மிக மலிவாக இருக்கும் என்று சொன்னார். சிந்தித்துப் பார்த்தால் நல்ல ஒரு கருத்தாகத்தான் பட்டது ரகுமானுக்கு.


அதற்கான ஏற்பாடுகளைக் செய்து பணம் ஓரளவு திரட்டிக் கொண்டு தன் நண்பருடன் பயணம் மேற்கொண்டார்.. மாநில அரசே பீடி இலைகளே விற்பதால் ஓரளவு நம்பி வாங்கலாம் என்று நண்பர் சொன்னார்.
அரசு நடத்திய ஏலத்தில் பங்கேற்று தேவையான பீடி இலைகளை வாங்கிய ரகுமானுக்கு மிகவும் திருப்தியாக இருந்தது. உள்ளுரில் வாங்கும் விலையில் கிட்டதட்ட பாதி விலைக்கு பொருள் கிடைத்ததில் மனம் மகிழ்ந்த ரகுமான் இறைவனுக்கும் வணிக நண்பருக்கும் நன்றியைத் தெரிவித்தார்.
வந்த வேலை இனிதே முடிந்தது. இனி பீடி இலைகளை பக்குவமாகப் பொதியாக்கி தொடர் வண்டியில் ஏற்றி விட்டு ஊருக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டியதுதான்.
இந்தத் தருணத்தில்தான் ஒரு அதிர வைக்கும் உண்மை தெரிய வந்தது.. அரசிடம் வாங்கிய பீடி இலைகளின் பெரும்பகுதி மிகத் தரத்தில் தாழ்ந்தவை; விலை போகாதவை. கலங்கிப்போன ரகுமான் நண்பருடன் அரசு அதிகாரிகளைச சந்திக்க விரைந்தார்..நீண்ட காத்திருப்பிற்கு பிறகு உயர் அதிகாரியை சந்திக்க முடிந்தது. அவர் தெளிவாகவும் சுருக்கமாகவும் சொல்லிவிட்டார்.:”இதெல்லாம் சரக்கு வாங்குமுன்பே சரி பார்த்திருக்க வேண்டும்.. எப்பொழுது இலைகள் உங்கள் வசம் வந்து விட்டதோ எங்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை.”     
குழம்பி நின்ற ரகுமானுக்கு அங்கிருந்த உள்ளூர் வணிகர்கள் ஆறுதல் கூறினார்கள்..”இதெல்லாம் சாதாரணமாக நடப்பதுதான். நீங்கள் நேரடிக்கொள் முதலை தவிர்த்து உள்ளூர் தரகர்கள் மூலம் போயிருக்க வேண்டும். அவர்கள் கேட்கும் தரகு ஒரு நல்ல தொகையாக இருந்தாலும் அவர்கள் அனுபவமும் பழக்கமும் இத்தகைய பெரும் இழப்பைத் தவிர்த்திருக்கலாம்” என்று சொன்னார்கள்.




நிலைமை கை மீறிப் போனது தெளிவானது ரகுமானுக்கு.. இனி அடுத்து என்ன செய்வது என்ற கேள்வி மனதை வாட்டத் தொடங்கியது.
இந்த இழப்பை புத்திக்கொள்முதல் என்று எண்ணிக்கொண்டு பேசாமல் ஊர் போய்ச் சேருங்கள் என்றார்கள் சிலர்.
இன்னும் சிலர் இப்போது கூட தரகர்களை அணுகி அவர்கள் மூலமாக அரசு அதிகாரிகளிடம் முறையிடலாம் ஆனால் அதில் தரகு அன்பளிப்பு என்று பெருந்தொகை செலவழிக்க வேண்டியிருக்கும் என்றனர்.
நல்ல ஒரு வழக்கறிஞர் மூலமாக நீதி மன்றத்தில் முறையிடலாம் என்ற ஒரு கருத்தும் எழுந்தது. 
நீதி நேர்மை என்ற வாழ்கை நெறியில் வளர்ந்த ரகுமானுக்கு  ஆழ்ந்த நீண்ட சிந்தனைக்குப்பின்  நீதி மன்றத்தை அணுகுவதுதான் சரியென்று பட்டது.. உள்ளூர் வணிகர்கள் மூலம் ஒரு நல்ல வழக்கரறிஞரை அணுகினார்.
வழக்கறிஞர் ரகுமனைப்போல்  நேர்மையானவராக இருந்தார். தெளிவாகச்சொல்லி விட்டார் : “வழக்கு முடிய எவ்வளவு நாள் ஆகும் என்பதும் வழக்கின் முடிவு எப்படி இருக்கும் என்பதும் தெரியாது..என்னால் முடிந்த அளவுக்கு என் கட்டணத்தைக் குறைத்துக்கொள்கிறேன். ஆனால் நீதி மன்றச செலவுகள் நீங்கள் ஒவ்வொரு முறையும் வந்து போகும் செலவுகள் எல்லாம் தவிர்க்க முடியதவை. இவை எல்லாவற்றையும் கணக்குப்பார்த்து நீங்கள் முடிவெடுத்தால் வழக்குத் தொடர்ந்து விடலாம்”
திரும்பவும் சற்று நேரம் சிந்தித்துப் பார்த்து விட்டு வழக்குத் தொடரவே முடிவு செய்தார் ரகுமான். பாவம் நேர்மை நியாயம் என்றே வாழ்ந்து வரும் அவருக்கு சட்ட நடைமுறைகள் அவற்றின் காலவறை இல்லாத இழுத்தடிப்புகள் அதனால் ஏற்படும் செலவினங்கள் நேர விரயம் போன்றவற்றை பற்றி எண்ணிப்பார்க்கத் தோன்றவில்லை.. நாம் ஏதும் தவறு செய்யவில்லை அதனால் நமக்கு நீதி மன்றத்தில் விரைவில் நியாயம் கிடைக்கும் என்று எண்ணினார்.

வழக்குத் தொடரவே  நீண்ட நெடுங்காலம் பிடித்தது.  வழக்கறிஞர் கோடி காட்டியது போல் வழக்கு ஆண்டுகள் பல கடந்து ஓடிக்கொண்டே இருந்தது.
வணிகத்தின் முதல் கொள்முதலில் முடங்கி விட்டது, அதோடு தொடர்ந்து பல ஆண்டுகள் நீதி மன்றத்திற்கு அலைந்ததில் வணிகம் மிகவும் பாதிக்கப்பட்டு வருமானம் இல்லாத நிலைக்கு வந்து விட்டது.
இதற்கிடையில் குடும்,பத்தில் சில பல பிரச்சனைகள். மகளின் இரண்டாவது மகபேற்றில் ஏற்பட்ட சிக்கல்கள் மனைவிக்கும் மகனுக்கும் ஏற்பட்ட உடல் நலக்குறைவுகள் இவற்றால்,ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல்கள் எல்லாம் சேர்ந்து ரகுமானை நிலை குலையச் செய்து விட்டன.
ரகுமானின் மாமனார் நல்ல வசதி படைத்தவர் நல்ல மனமும் கொண்டவர்.. ஆனால் மருமகனின் மனம் புண்பட்டு விடுமோ என்று அஞ்சி மௌனம் காத்து விட்டார்.
மேலும் ரகுமான் தனக்குள்ள பிரச்சனைகளை யாரிடமும்- மனைவியிடம் கூட தெரிவிக்கமாட்டார். பிறர் உதவியை நாடவும் மாட்டார்.
இப்படியே சிக்கல்கள் இறுகி இடியாப்பச்சிக்கலாகி குடும்பத்தை நடத்துவதே சிரமம் என்ற நிலை வந்து விட்டது/
இந்த இறுக்கமான சூழலில்தான் இக்பால் வருகிறார். இனிப்பகம் நடத்தி வந்த இக்பாலின் எண்ணம் பேச்சு செயல் எல்லாமே இனிமை இனிமை இனிமை. ரகுமானுக்கு ஒரே நெருங்கிய நண்பர் இக்பால்.நட்பென்றால் சாதாரண நட்பல்ல. எடுக்கவோ கோக்கவோ அளவுக்கு நெருக்கம். ரகுமான் மனம் விட்டுப் பேசுவது என்றால் இக்பாலிடம் மட்டும்தான்.
வெளி நாடு சுற்றுப்பயணம் சென்ற இக்பால் ஊர் வந்ததும் வீட்டுக்குப் போனாரோ இல்லையோ ரகுமானைப் பார்க்க ஓடி வந்து விட்டார்..நண்பபைப் பார்த்ததுமே எதுவுமே சரியாக இல்லை என்பதை உணர்ந்த இக்பால் ரகுமானைக் கூட்டிக்கொண்டு வெளியே பொய் விட்டார்.


பிரிந்தவர் மீண்டும் சேரும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி. ரகுமான் அழுது முடியும் வரை பொறுமைகாத்தார் இக்பால். அழுது ஓய்ந்தவுடன் ஆறுதல் கூறி ரகுமானை மனம் திறந்து பேச வைத்து பொறுமையாக கவனமாக செவி மடுத்தார்.
ரகுமான் பேசி முடித்ததும் இக்பால் -- இவ்வளவு தூரம் சிக்கலை வளரவிடாமல் எனக்கு தொலை பேசியில் தகவல் தெரிவித்திருந்தால் நான்அடுத்த விமானத்தில் பறந்து வந்திருப்பேனே. உன்னை விட என் சுற்றுப்பயணம்என்ன எதுவுமே எனக்கு பெரிதல்ல – என்று சொல்லி விட்டு சரியாக ஐந்தே நிமிடம் சிந்தித்து விட்டு- சரி கவலையை விடு.. நீ நினைப்பது போல் இது ஒன்றும் அவிழ்க்க முடியாத முடிச்சல்ல என் மகள் திருமணத்துக்காக இருநூறு பவுன் நகை செய்து வைத்திருக்கிறேன். அது வெட்டியாக வங்கி பெட்டகத்தில் தூங்கிக் கொண்டிருக்கிறது.. என் மகளின் படிப்பு பற்றிய கனவுகளைப் பார்க்கும்போது இன்னும் பத்து ஆண்டுகள் ஆகும் போல் தெரிகிறது. அதை அப்படியே உன்னிடம் கொடுத்து விடுகிறேன், நீ அதை விற்பாயோ அதை வைத்துக் கடன் வாங்குவாயோ அதெல்லாம் உன் விருப்பம் உன் முடிவு..என்னைப் பொறுத்தவரை உன்னிடம் கொடுத்து விட்டால் அது உன் நகை. என் மகளுக்குத் திருமணம் கூடி வரும்பொது நீ அதே அளவு நகையோ தங்கமோ கொடுத்தால் போதும் இப்போதைக்கு இது நமக்குள் இருக்கட்டும் சமயம் பார்த்து நான் என் மனைவியிடம் சொல்லிக்கொள்கிறேன். இன்னும் மூன்று நாட்கள் வங்கி விடுமுறை. புதன் கிழமை காலை வங்கி திறந்ததும் உன்னையும் வங்கிக்கு அழைத்துக் கொண்டு போய் நகையை உன்னிடம் கொடுத்து விடுகிறேன் மற்ற விசயங்களை நாம் பிறகு விரிவாகப் பேசிக்கொள்ளலாம் என்று மிக இயல்பாக வா தேனீர் சாப்பிடலாம் என்பத போல் சொல்லி முடித்தார் . அது தான் இக்பால். எந்தச்சிக்கலையும் தன் சொந்தப் பிரச்சனையாகக் கருதி  சிந்தித்து ஒரு நல்ல தீர்வு கண்டு அதை முழு மனதுடன் செயல் படுத்தவும் செய்வார்.


ரகுமனுக்கு சற்று நேரத்திற்கு ஒன்றுமே புரியாத திகைப்பு.. காண்பதும் கேட்பதும் கனவா நனவா என்ற மயக்கம்.. இக்பால் சொன்னதின் முழு அர்த்தமும் அது தன் வாழ்வின் மிகப் பெரும் சிக்கலைத் தீர்த்து ஒரு மறு வாழ்வு மலரச் செய்யவிருக்கிறது என்பது சற்று நேரத்தில் புரிய தன்னை அறியாமல் ஓ என்று சிறிது நேரம் கண்ணீர் விட்டு அழுதார். பிறகு இறைவனுக்கு நன்றி சொல்லிவிட்டு நண்பனைக் கட்டி பிடித்து தன மகிழ்ச்சியையும் நன்றிப் பெருக்கையும் வெளிபடுத்தினார்..
எதுவுமே நிகழாதது போல் இக்பால் ரகுமானைத் தன் இனிப்பகதிற்கு அழைத்துச் சென்று உயர்வகை இனிப்புகள் நிறையக் கொடுத்து அவர் வீட்டில்கொண்டு விட்டு பிட்டுப் போனார்.
ரகுமானின் முகத்தில் நீண்ட இடைவெளிக்குப்பின் நிம்மதியையும் ஆனந்தத்தையும் கண்ட துணைவி இறையருளால் எதோ நல்லது நடந்திருக்கிறது என்று புரிந்து கொண்டார். நீண்ட நாட்களுக்குப் பிறகு ரகுமான் கவலையற்று உறங்கினார்..
பொழுது புலர்ந்ததும் ரகுமான் எழுந்து பள்ளி சென்று தொழுககயை முடித்து வீடு வந்து எட்டுமணியாளவில் சிற்றுண்டியை முடித்து விட்டு செயல் பட வேண்டிய வழி முறைகளைப் பற்றி சிந்திதுக் கொண்டிருந்தார். தரைவழித் தொலைபேசி ஒலிக்க எடுத்துப் பேசினார். பேசியது கமால் என்ற வணிகத்தொடர்பு நண்பர்.அற்ற குளத்து அரு பறவை போல ரகுமானின் துன்ப நிலை கண்டு பேச்சைக் கூடத் தவிர்த்தவர்.
அதை  எல்லாம் மறந்து ரகுமான் உணர்ச்சி பொங்கப் பேசினார். –“ நண்பா என் துன்பம் துயரம் எல்லாம் தீர்ந்து விட்டது. என் உயிர் நண்பன் இக்பால் கருகிப்போன என் வாழ்வுக்கு புத்துயிர் கொடுத்து விட்டான். இறைவன் அருளால் நான் விரைவில் என் பழைய செல்வா நிலையை அடைவேன் “
எதிர் முனையில் இரண்டே வார்தைகளுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது..
-“இக்பால் இறந்து விட்டார்”


பின் கதை:
இக்பால் போனபின் தனக்கு வாழ்வே இல்லை என்பதுபோல் ரகுமான் உடல் தளர்ந்து மனம் சிதைந்து உருக்குலைந்து நடைப்.பிணமாகி விட்டார். ஆனால் எல்லாம் சில மாதங்கள்தாம்.
இக்பாலின் கடைசிப் பேச்சு அடிக்கடி நினைவுக்கு வர வாழ்வின் உண்மை நிலை பளிரென்று தெரிந்தது ரகுமானுக்கு..முதல் உண்மை முடங்கி கிடக்கும் சொத்துககளை வீண் கெளரவம் பாராமல விற்றால் நிறைய பணம் கிடைக்கும்.அது வணிகத்தை புதுப்பிக்க உதவும். இரண்டாவது இந்த மாதிரி இக்கட்டான சூழ்நிலைகளில் ஒரு மனித உதவி மிகவும் அவசியம்.
இதெல்லாம் எண்ண எண்ண மனதில் தெளிவும் துணிவும் பிறந்தது. தன மாமனாரை வீட்டுக்கு வரவழைத்தார். மகள் குடும்பத்துக்கு உதவி செய்யக் காத்திருந்த அந்த நல்ல மனிதர் ஓடோடி வந்தார். முதன் முறையாக மாமனாரும் மருமகனும் மனம் திறந்து பேசிக் கொண்டார்கள். தான் குடியிருக்கும் மிகப்பெரிய வீட்டை நல்ல விலைக்கு விற்றுத் தருமாரும் குடியிருக்க நல்ல ஒரு வீடு வாடகைக்குப் பிடித்துத் தரவும் வணிகத்தைப் புதுப்பிக்க ஒரு துணையாக இருந்து அறிவுரைகள். ஆலோசனைகள் கூறுமாறும் மாமனாரிடம் மருமகன் கேட்டுக் கொண்டார்.
மாமனார் சொன்னார்- வீட்டை நானே இன்றைய சந்தை மதிப்பிற்கு வாங்கிக் கொள்கிறேன்.நீங்கள் வீட்டைக் காலி பண்ணவும் வேண்டாம். ஒரு நீதமான மாத வாடகை கொடுத்து விடுங்கள். நிலைமை சரியானவுடன் அன்றைய சந்தை மதிப்பில் வீட்டைத் திரும்ப வாங்கிக்க்கொள்ளுங்கள்.. நீங்கள் அவசியம் என்று எண்ணினால்  இதை நமக்குள் ஒரு ஒப்பந்தமாக எழுதிக்கொள்ளலாம். இதன் மூலம் பத்திரச் செலவு மிச்சமாகும். மேலும் நான் வணிகப் பொறுப்புகள் அனைத்தையும் என் மக்களிடம் ஒப்படைத்து விட்டேன்..


 எனவே தேவைப்பட்டால் தினமும் உங்கள் வணிக நிறுவனத்துக்கும் மற்ற இடங்களுக்கும் செலவ்தில் எனக்கு ஒரு சிரமமும் இல்லை
அடுத்து வேலைகள் மட மடவென்று நடந்தன. முன்பை விட பன்மடங்கு கடுமையாக உழைத்து தன வணிக நிறுவனத்திற்கு மாமனார் துணையோடு புத்துயிர் ஊட்டினார். ஓரளவுக்கு நிலைமை சீரானவுட்ன் வழக்கை மேற்கொண்டு தொடரவேண்டம்  என்று எண்ணி அதை செயல்படுத்த வட மாநிலம் சென்றார் ரகுமான்..வழக்கறிஞரை சந்தித்தபோது அங்கு ஒரு அதிர்ச்சி
ஆனால் இந்த முறை இன்ப அதிர்ச்சி. வாங்கள் நானே உங்களை தொலை பேசியில் தொடர்பு கொள்ள எண்ணியிருந்தேன். என்று அகமும் முகமும் மலர வரவேற்ற வழக்கறிஞர் மேலும் சொன்னார்- வழக்கு உங்கள் பக்கம் தீர்ப்பாகும் போல், இருக்கிறது. அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் தொடர்ந்து செய்து வந்த பெரிய அளவிலான ஊழல் நீங்கள் தொடர்ந்த வழக்கால் நீதி மன்றத்தின் கவனந்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஒரு தனி விசாரணைக்குழு இது பற்றி ஆய்வு செய்து கொண்டிடுக்கிறது. தாமதமானாலும் உங்கள் பணம் உறிய இழப்பீட்டுத் தொகையுடன் திரும்பக் கிடைக்கும்.. உங்கள் நேர்மைக்கும் பொறுமைக்கும் இறை நம்பிக்கைக்கும் கிடைத்த மிகப் பெரிய வெற்றி இது.
இப்படி எல்லாம் கூடி வர மூன்றே ஆண்டுகளில் ரகுமான் தன பழைய நிலைக்கு மேல் உயர்ந்து விட்டார். வீட்டை மாமனாரிடம் இருந்து திரும்ப வாங்கி வீட்டிற்கும் தனது வணிக நிறுவனத்திற்கும் இக்பால் பேரை சூடி தன நன்றியைத் தெரிவித்தார். மேலும் நலிந்து போன வணிகர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் உதவி செய்ய தன சொந்தப் பணத்தில் ஒரு அறக்கட்டளை நிறுவி அதற்கும் இனிய நண்பன் பேரையே சூடி அவர் பெயர் என்றும் நிலைத்திருக்கச் செய்தார். இக்பால் குடும்பத்துக்கு உறு துணையாக நின்று வழி நடத்தினார்.     
  .              .----------------------------------------------------------------------------

Tuesday, 10 February 2015

என்றும் இருபத்தியொன்று




ஆச்சி மெஸ் என்றால் தெரியாதவர்கள் அந்தப்பகுதியில் அரிது. மாதம் முப்பத்தி ஐந்து ரூபாயில் வாரம் இருமுறை அசைவத்தோடு மூன்று வேலையும் வயிறாரா உணவு என்பது அந்தக் காலகட்டத்தில் (அறுபதுகளில்)( வியப்பான செய்தி அல்ல.
ஆனால் ஆச்சி மெஸ்ஸுக்கு சில பல சிறப்புகள் உண்டு, ஒன்று ஆச்சியின் கைமணம். ஆச்சி ரசம் வைத்தல் கூட ஊரே மணக்கும், அடுத்து ஆச்சியின் தாயன்போடு கூடிய உபசரிப்பபு. பணத்துக்காக மட்டும் அல்லாமல் உணவளிப்பதை ஒரு சேவையாக எண்ணி மலர்ந்த முகத்துடன் வயிறும் மனமும் குளிரும்படி பரிமாறுவார்.
ஆச்சிக்கு மெஸ் நடத்தி சம்பாதிக்க வேண்டும் என்றெல்லாம் இல்லை. கணவர் வெளிநாட்டில் கை நிறைய சம்பாதிக்கிறார்.. அவர் அனுப்பும் பணத்திலேயே பாதிக்குமேல் மிச்சம் பிடித்து நகைநட்டு, நிலம் நீச்சு வாங்குவது வட்டிக்கு விடுவது என்று பெருக்குவதோடு தர்ம காரியங்களுக்கும் நன்றாக செலவு செய்வார். ஒரே மகன் விடுதியில் தங்கிப் படிக்கிறான்.
கடல் போல் பரந்து விரிந்த வீடு. உருப்படாத ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்டு அவன் ஓடிப்போய்விட படிப்பு வராத மகளுடன் வந்து ஆச்சி வீட்டில் ஒட்டிக்கொண்ட ஒன்று விட்ட நாத்தனார் –இவைதான் ஆச்சி மெஸ் ஆரம்பிக்க மூல காரணங்கள்.
ஆச்சி மெஸ்ஸின் எழுதப்படாத எளிமையான ஆனால் கடுமையான சட்டங்கள் சில :
மாணவர்களுக்கு அனுமதி இல்லை ;
 மாத ஊதியம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் முன்னுரிமை.
வெற்றிலை,பாக்கு சிகரட்டுக்குத் தடை
உறக்கப்பேசுவது, கெக்கலிப்பது கூடாது
இரவு எட்டரை மணிக்கு மேல்,யாருக்கும் அனுமதி இல்லை..
இப்படி விளையாட்டுபோல் நான்கு பேருடன் ஆரமிக்கப்பட்ட மெஸ் குறுகிய காலத்தில் வேகமாக வளர்ந்து நாற்பது பேரின் சாப்பாட்டுக் கூடமாக மாறியது.அதற்கு மேலும் வளரும் .ஆனால் ஆச்சி இது போதும் என்று ஒரு வரையறை வைத்துக்கொண்டார்
தெளிர் நீரோடையாகப் போய்க்கொண்டிருந்த மெஸ்ஸில் புதிதாக ஒரு அரசு அதிகாரி வந்து சேர்ந்தார். கண்ணியமான தோற்றம், அமைதியான பேச்சு அடக்கமான சுபாவமாக இருந்த அவரை ஆச்சிக்கு மிகவும் பிடித்து போயிற்று. முன்பணம் கொடுக்கையில் மிகவும் கூச்சத்தோடு தனக்கு காலை உணவு ஏழரை மணிக்கெல்லாம் தேவைப்படும் என்றும் சற்று அதிகமாக வேண்டியிருக்கும் என்று தெரிவித்தார். “அதற்கென்ன ஏழு மணியளவில் இட்லி தயாராகிவிடும் வந்து வயிற்ருக்கு வஞ்சகம் செய்யாமல் நன்றாக சாப்பிடுங்கள் “என்றார் ஆச்சி வரப்போகும் பிரச்சனையை உணராமல்,.
அடுத்த நாள் காலை சரியாக ஏழு பதினைந்துக்கு கொக்குபோல் சத்தமில்லாமல் வந்தார் புதியவர்.. வயிற்றுப்பசி முகத்தில் தெரிந்தது. உட்காரவைத்து இலை போட்டு தண்ணீர் வைதது இட்லி தட்டை வைத்து விட்டுப பொடி எண்ணை எடுக்கப்போனார்ஆச்சி. அதற்குள் அவர் வெறும்  இட்லி ஒன்றை சாப்பிடத்தொடங்கி விட்டார். சற்றுபொறுங்கள் இதோ எண்ணை பொடி.ஒரு நிமிடத்தில் சட்னி சாம்பார் எல்லாம் ரெடி ஆகிவிடும் என்று சொல்லி விட்டுத்திரும்புவதற்குள் இரண்டு இட்லியை இலையில் வைத்து தாரளமாக எண்ணையை மட்டும் ஊற்றிக்கொண்டு சாப்பிட்டார்.. அடுத்து மூன்று இட்லியை இலையில் அழகாக அடுக்கி எண்ணை பொடியில் குளிப்பாட்டி சுவைத்தார். அதற்குள் சுடச்சுட சட்னி ரெடியாகி விட்டது.அதன் துணையோடு நாலு இட்லி அடுத்து சாம்பாருடன் ஐந்து என்று காலி பண்ணினார். கடைசியாக ஒரு ஆறு இட்லியை இலையில் வைத்து அணை கட்டினார். வெள்ளம்போல் சாம்பாரை ஊற்றி அதன் மேல் சட்னி பிறகு பொடி எண்ணை என்று ஊற்றி நிதானமாக ஒவ்வொரு விள்ளலாக ரசித்து சுவைத்து சாப்பிட்டார். பிறகு ஒரு \ஒரே ஒரு குவளை காபி.
ஆச்சிக்கு லேசாக தலை சுற்றியது. ஒன்று , இரண்டு ,மூன்று என்று எண்ண ஆரம்பித்தார். பிறகு சே சே எங்கேயோ சரியான சாப்பாடு கிடைக்காமல் நாக்கு செத்துப்போய் வந்திருக்கிறார். சுவையான உணவில் மயங்கி முதல் நாள் என்பதால் நிறைய சாப்பிட்டார். போகப்போக சரியாகிவிடும் என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திகொண்டார்..  
ஆனால் ஆச்சியின் கணக்கு பொய்த்துப்போனது. முதல் நாளைப் போலவே வரும் எல்லா நாட்களும் இருந்தன இட்லியோ தோசையோ சரியாக இருபத்தொன்று அதற்கு கூடவும் மாட்டார் குறையவும் மாட்டார். ஆச்சிக்கு மெதுவாக ஒரு பய உணர்ச்சி தோன்றியது. இப்படியே விட்டால் அவர் ஒரு மாதத்திற்கு கொடுக்கும் பணம் காலை சிற்றுண்டிக்கே பத்தாது.. அதற்கும்  மேல் இவரைப்போல் இன்னும் சிலபேர் சாப்பிட ஆரம்பித்தால் மெஸ் பெருத்த நஷ்டத்தில் போய் மூட வேண்டிய நிலை வந்து விடும்.
ஆச்சியும் நேரடியாகவும் மறைமுகமாகவும் சொல்லிப்பார்த்தார். அவர் அதையெல்லாம் காதில் வாங்கவே இல்லை. அவர் சாப்பிட வந்தால் கண்டுகொள்ளாமல் முகம் திரிந்து நோக்குவது ; இட்லி வைத்து விட்டு சட்னி சாம்பார் பரிமாறாமல் விட்டு விடுவது,; இருபத்தயொன்று இட்லிகளை மொத்தமாக் அவர் இலையில் கொட்டுவது என்று பல முயற்சிகளை ஆச்சி கையாண்டு பார்த்தார். ஆனால் அவரோ விடாக்கண்டன் கொடாக்கண்டனாக இருந்தார் .
சரியாக காலை எழு இருபத்துக்கு உள்ளே நுழைபவர் தன் இலக்கான இருபத்திஒன்றை கர்ம சிரத்தையுடன் முடிக்காமல் நகர மாட்டார்..அதற்காக மதியம் இரவெல்லாம் குறைத்து சாப்பிட மாட்டார்..
இந்தா அந்தா என்று ஒரு மாதம் முடியப்போனது. ஆச்சி யோசித்து யோசித்து இறுதியாக ஒரு வழி கண்டுபிடித்தார்..
அன்று விடுமறை நாள் மதியம். சாப்பாடுக்கூடம் நிரம்பியிருந்தது. ஆச்சி நேராக அந்தப் புதியவரிடம் போனார். ஒரு பெரிய கும்பிடு போட்டு “அண்ணா என்னை மன்னியுங்கள். இதோ நீங்கள் கொடுத்த முன்பணம் . இது வரை நீங்கள் சாப்பிட்டது இந்த தங்கை கொடுத்த விருந்தாக இருக்கட்டும் தயவு செய்து இத்துடன் விட்டுவிடுங்கள் “என்று அழாக் குறையாக கூறி பணத்தை அவர் முன் வைத்தார்.
ஒரு நிமிடம் திகைத்து நின்ற அந்தப் புதியவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. பணத்தை அங்கேயே விட்டு விட்டு விருட்டென்று வெளியே போய்விட்டார்.. ஆச்சிக்கு வருத்தம் கலந்த ஒரு நிம்மதி.
ஆச்சி மெஸ்ஸின் எழுதப்படாத சட்டங்களில் ஒரு புதிய சேர்க்கை- காலை சிற்றுண்டி எண்ணிக்கை ஏழைத்தான்டக் கூடாது .
புதியவர் கொடுத்த பணத்தை ஆச்சி சற்றும் தயங்காமல் தர்மத்துக்கு கொடுத்துவிட்டார்..      
 
  


Sunday, 8 February 2015

(சிவன் அல்ல) சிவான்





பதவி உயர்வு என்பது மகிழ்ச்சியானதுதான். அதுவும் முப்பத்திநான்கு வயதில் அரசுடமை வங்கியில் மேலாளர் நிலைக்கு உயர்த்தப்பட்டது ஒரு கொண்டாடக்கூடிய நிகழ்வுதான். ஆனால் இனைந்து வந்த இடமாற்றம் அதுவும் வடமநிலமாகிய பீகாருக்கு எனும்போது சற்று வயிற்றில் புளியைக் கரைத்து மகிழ்ச்சியை மட்டுப்படுத்தி விட்டது.
இதுவரை மும்பையைத் தாண்டி சுற்றுலா கூடப் போனதில்லை. ஒரு வார்த்தை கூட இந்தி தெரியாது (நன்றி இந்தி எதிர்ப்பு போராட்டம்) இதற்கெல்லாம் மேல் பீகாரில் ஏற்கனவே பணி அனுபவம் உடைய என் நண்பரும் வழி காட்டியுமான எங்கள் கிளை மேலாளர், “ உங்களுக்கெல்லாம் பீகார் ஒத்து வராது பாய். சற்று ஆபத்தான இடம். படகில் போகையில் ஆற்றில் பிடித்து தள்ளி விடுவார்கள் .ஆற்றில் நிறைய முதலைகள் இருக்கும்” என்று பயமுறுத்தி விட்டார்./
ஒரே குழப்பம், பதவி உயர்வு வேண்டாம் என்று சொல்லி விடலாமா அல்லது இன்னும் ஒருபடி மேலே (கிழே ) போய் எழுத்தராக பதவி இறக்கம் பெற்று விடலாமா என்று பல்வேறான சிந்தனைகள். ஆனால் பதவி உயர்வு வேண்டாம் என்ற  எண்ணத்திற்கு என் குடும்பத்திலேயே யாரும் ஆதரவு தரவில்லை. குறிப்பாக அதிகம் பேசாத என் பத்து வயது மகன் தன் கடுமையான எதிர்ப்பை மௌனமாக வெளிக்காட்டினான்..அப்பாவிடம் கலந்து ஆலோசித்தபோது மிகதெளிவாக உறுதியாகச் சொன்னார் “வேலை என்று வந்து விட்டால் பதவி உயர்வு வேண்டாம் .பீகார் என்றால் போகமாட்டேன் என்று சொல்வது மிகப்பெரும் தவறு அதற்கு பேசாமல் வேலையை விட்டு விட்டு வேறு ஏதாவது வழியைப்பார்.” என்று சொல்லிவிட்டார்  (அவர் சொல்ல நினைத்து சொல்லாமல் விட்டது- வேலையை விட்டால் வேறு என்ன தெரியும் உனக்கு)
சரி இடமாறுதல் ஏதாவது கிடைக்குமா என்று முயற்சி செய்ய சென்னை வட்ட அலுவலகம் சென்று மனித வளத்துறை அதிகாரிகளை சந்தித்துப் பேசினேன்..வழக்கம்போல்  மிகக்கனிவாக முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.  சிவான் ஒரு நல்ல இடம் என்று நினைக்கின்றேன் என்று ஒரு அதிகாரி சொன்னார். உங்களுக்கு எப்படித் தெரியும் நீங்கள் வட மாநிலங்களில் பணி புரிந்ததுண்டா என்று கேட்டேன். அதற்கு அவர் இல்லை இல்லை சிவான் என்ற பெயர் பெரிதாக ஊடகங்களில்  அடிபடவில்லை அதனால் வெள்ளம் ,வன்முறை , கலவரம் போன்ற நிகழ்வுகள் ஏதும் அங்கே இல்லை என்று எண்ணத்தோன்றுகிறது என்று ஒரு புதிய சித்தாந்த விளக்கம் கொடுத்தார்,(தற்காலத் த தமிழகம் குற்றமற்ற மாநிலமாக விளங்குவது நினைவுக்கு வருகிறது.) அவருக்கு என் நன்றியைத்தெரிவித்து விட்டு அடுத்து என்ன செய்வது என்று சிந்தித்தேன்..
சிவான் கிளை கல்கத்தா வட்டத்தின் கீழ் வருகிறது.. எனவே கல்கத்தா வட்ட அலுவலகம் சென்று அந்த வட்டதின் கீழ் வரும் வேறு கிளைக்கு மாற்றல் பெற முயற்சித்துப் பார்ப்போம். அப்படிக் கிடைக்காவிட்டால் அருகில்தான் சிவான் இருக்கும் அதையும் பார்த்து விட்டு வந்து விடுவோம் என்ற எண்ணத்தில் கல்கத்தாவுக்கு பயணச்சீட்டு முன்பதிவு செய்து புறப்பட ஆயத்தம் செய்தேன்..
முன்பே குறிப்பிட்டது பல இது வரை வட இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் கூடப் போனது கிடையாது. இந்தியும் சுத்தமாகத் தெரியாது..ஏற்கனவே ஓரளவு அறிமுகமான ஒரு அலுவலர் கல்கத்தாவில் பணி  புரிந்து வருகிறார். அவருக்கு நான் கல்கத்தா வரும் நாள் நேரத்தைத் தெரிவித்து,, தொடர் வண்டி நிலையத்தில் வந்து சந்திக்கும்படி கேட்டுக்கொண்டேன்,
பயண நாள் வந்தது. மிகக்குறைவான சுமையுடன் (அதுதான் மனச்சுமை நிறைய இருக்கிறதே) தொடர் வண்டியில் ஏறினேன்.அரசுப்பணியில் இருந்து ஒய்வு பெற்ற ஓருவர் என் சக பயணியாக வந்தார். அவரிடம் பேசியபோது நான் பீகார் செல்வதாகக் கூறினேன். எதோ சிறைதண்டனை பெற்ற கைதியிடம் கேட்பது போல் எத்தனை ஆண்டு என்றார்.
பயணம் இனிதே முடிந்து அடுத்த நாள் காலை ஹவுரா நிலையத்தில் இறங்கினேன். கூட்டம் என்றால் அப்படியொரு கூட்டத்தை நான் அன்று வரை பார்த்ததில்லை. அந்தக்கூட்டத்தில்  என்னை சந்திக்க வந்த நண்பரைப் பார்க்க முடியாமல் போய்விட்டது, அவரும் காத்திருந்து பார்த்து விட்டுப் போய்விட்டார்.. எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. நடைமேடையில் இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்து சுமைகளை இறுகப்பற்றிகொன்டேன்.
எவ்வளவு நேரம் அப்படியே இருப்பது ஏதாவது செய்தாகவேண்டுமே. இவ்வளவு பெரிய நகரில் ஆங்கிலம் பேசும் யாரவது கிடைப்பார்கள் அவர்களிடம் வழி கேட்கலாம் என்று முடிவு செய்து துணிந்து நடைமேடையை விட்டு வெளியே வந்தேன் .. சுற்றுலாப்பயணிகள் வழிகாட்டு மையம் ஒன்று கண்ணில் பட்டது .அங்கிருந்த ஊழியரை தயக்கத்துடன் அணுகினேன். மிக அழகான ஆங்கிலத்தில் கனிவுடன் பேசினார்..தமிழர்கள் நடத்தும் தங்கும் விடுதிக்கு வழி கேட்டேன். கல்கத்தாவின் வரைபடம் ஒன்றைக் கையில் கொடுத்து மிகத்தெளிவாக வழியை விளக்கினார்..
அவருக்கு என் நன்றியைத் தெரிவித்து விட்டு அவர் சொன்னபடி சிற்றுந்தில் பயணித்து விடுதிக்கு பக்கத்தில் இறங்கினேன். விடுதியில் குளித்து சிற்றுண்டியை முடித்து வட்ட அலுவலகத்திற்கும் என் நண்பர் பணி புரியும் அலுவலகத்திற்கும் வழி கேட்டுக்கொண்டு புறப்பட்டேன் . நல்ல வேலையாக இரண்டு அலுவலகங்களும் அருகருகே இருந்ததோடு விடுதியில் இருந்தும் தொலை தூரத்தில் இல்லை.
நண்பரை சந்தித்து விட்டு வட்ட அலுவலகம் சென்று அங்கு ஒரு தமிழ் நண்பரைப் பார்த்து பேசி விட்டு வட்ட அலுவலகத்தின் உயர் அதிகாரியை சந்தித்தேன். கிளை மாற்றித்தரும்படி கோரிக்கை வைத்தேன். மிக நட்புடன் ஒன்றரை மணி நேரம் என்னுடன் உரையாடினார். இறுதியில் சிவான் மிக நல்ல இடம், நன்கு வளர்ச்சியடையும் கிளை. அங்கு போனால் விரைவில் பதவி உயர்வுகள் கிட்டும் என்று  ஆறுதல் கூறியதோடு எந்த சூழ்நிலையிலும் குடும்பத்தை விட்டுப் பிரியாமல் இருங்கள் என்று அறிவுரையும்  கூறி அனுப்பி வைத்தார்/.
சரி கல்கத்தா வரை வந்து விட்டோம், அருகில்தான் சிவான் இருக்கும் அதையும் போய்ப் பார்த்து விடலாம் என்று எண்ணி, நண்பருடன் தொடர்வண்டி நிலையத்திற்குப் போய் விசாரித்தால் ஒரு அதிர்ச்சி. கல்கத்தாவிலுருந்து சிவானிற்கு விரைவு வண்டியில் சுமார் ஒரு நாள் பயணம்.  
அடுத்த நாள் பயணத்திற்கு முன் பதிவு செய்து விட்டு அன்று இரவையும் அடுத்த நாளையும் கல்கத்தா தமிழ் நண்பர்களுடன் கழித்துவிட்டு சிவான் பயணத்தைத் துவக்கினேன். குளிர்பதப்பெட்டி என்பதால் பயணம் மிக சுகமாக இருந்தது.
மாலை ஆறு மணியளவில் சிவானில் இறங்கிய எனக்கு கண்ணைக்கட்டிக் காட்டில் விட்டது போல் இருந்தது. மாவட்டத்தலைநகரான சிவானில் எங்கும் இருள்.. அங்கங்கே நாடாத்திரி விளக்குகள் இருட்டை விலக்க முயற்சித்துக்கொண்டிருந்தன. தமிழ் நாட்டில் மின் வெட்டு என்ற ஒன்றை யாரும் கண்டிராத அந்தக்காலகட்டத்தில் இந்தசூழ்நிலை எனக்கு இனம்புரியாத உணர்சிகளை உண்டாக்கியது.
இதற்கிடையில் வங்கிகிளை அடைக்கப்படுமுன் அங்கு போய்ச்சேர வேண்டும் என்ற பரபரப்பில் தொலைபேசி மூலம் வங்கிகிளையைத் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். மொழிப்பிரச்சனையால் அதுவும் முடியவில்லை. எப்படியோ எந்த மொழியோ பேசி ஒரு சைக்கிள் ரிக்க்ஷா பிடித்து  வங்கிகிளையை அடைந்தேன்,கிளை திறந்திருந்தது. இறைவனுக்கு நன்றி செலுத்தி விட்டு மாடிப்படியில் ஏறி கிளை மேலாளரைச்சந்திதேன்,
அகமும் முகமும் மலர உற்சாகமாய் வரவேற்ற அவர் மற்ற அதிகாரிகளை அறிமுகம் செய்து வைத்தார். கிளை மேலாளர் குஜராத்திக்காரர்., ஏழு அதிகாரிகளில் ஒருவர் தமிழ்நாடு ;ஒருவர் கர்நாடகா ஒருவர் ஒரிசா ஒருவர் வங்காளி ஒருவர் ஆந்ரா இருவர் பிகாரிகள் என ஒரு குட்டி இந்தியாவே அங்கிருந்தது..ஓரளவு மனம் சமாதானம் அடைந்தது.
தமிழ் நாட்டுக்காரர் தங்கியிருந்த விடுதியில் ஒரு அறையில் தங்கிக்கொண்டேன். அடுத்த ஓரிரு நாட்களில் பள்ளிக்கூடம் பற்றி விசாரிக்க ஆரம்பித்தேன், என் மகன் மகள் படிக்கும் வகுப்பில் ஆங்கில வழிக்கல்வி அந்த ஊரிலேயே இல்லை என்பது அறிந்து  மிகுந்த மனச்சோர்வு ஏற்பட்டது..
ஒரு வாரப்பொழுதை  எப்படியோ ஓட்டி விட்டேன் .மனம் இருப்புக்கொள்ளாமல் தவித்தது. எப்படியாவது ஊர் போய் குடும்பத்தைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மிகுந்தது. தமிழ் நண்பருடன் கலந்தாலோசித்தேன்.. இவ்வளவு விரைவில் ஊருக்குப் போக வேண்டுமா என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.,போகத்தான் வேண்டும் என்றால் கல்கத்தா வழியாக முன்பதிவு இல்லாமல் போக முடியாது, கல்கத்தாவை விட குறைந்த தூரத்தில் உள்ள ஒரு கோரக்பூர் சந்திப்புக்கு சிவானில் இருந்து சற்று எளிதாக தொடர் வண்டியில் போய் விடலாம்.அங்கிருந்து தமிழ் நாட்டுக்கு பல வண்டிகள் போகின்றன என்று சொன்னார்.
கிளை மேலாளரிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு பயணத்தைத் தொடங்கினேன். நண்பர் சொன்னபடி கோரக்பூர் மிகப்பெரிய சந்திப்பாகத்தான் இருந்தது.கோட் டய்யில் வாட்ட சாட்டமாக இருந்த நிலைய மேலாளரை அணுகினேன். நான் ஆங்கிலத்தில் பேச அவர் இந்தியில் பதில் பேச இப்படியே இருபது நிமிடம் ஓடி விட்டது. இதைப்பார்த்துக்கொண்டிருந்த கொண்டிருந்த தமிழ் நாட்டை சேர்ந்த படை வீரர் என் உதவிக்கு வந்தார். இன்னும் சிறிது நேரத்தில் சென்னைக்கு ஒரு வண்டி இருக்கிறது. அதில் கூட்டம் அதிகம்.இல்லை  பயணச்சீட்டு வாங்கி வண்டியில் உட்காருங்கள்..இடையில் பரிசோதகரிடம் கேட்டு படுக்கும் வசதி வாங்கிக்கொள்ளலாம் என்று சொன்னார்.. அவர் சொன்னபடி ஒரு வழியாக் பயணத்தை முடித்து சென்னை வந்து சேர்ந்தேன்.
தம்பி வீட்டுக்குப்போய் அப்பாவைப் பார்த்து விட்டு குடும்பத்தைப் பார்க்க கிளம்பினேன்.மிகநட்பாக இருந்த வீட்டு உரிமையாளர் பயமுறுத்தும் பாணியில் வீட்டை  உடனே காலி செய்யச்சொன்னார். பள்ளிகள் திறக்கும் நாள் நெருங்கி விட்டது, எனவே சொந்த ஊரில் அப்பாவின் வீட்டில் வாடகைக்கு இருந்தவர்களை காலி செய்யக் கேட்டுக்கொண்டு அந்த வீட்டில் குடியேறினோம். சொந்த ஊர் என்பதால் பள்ளியில் இடம் எளிதாக வாங்க முடிந்தது. சொந்த ஊரில் வசிக்கும் முதல் அனுபவம் எனக்கு. என் மனைவியின் வீடும் அருகில் இருந்ததால் பாதுகாப்பு பிரச்சனை இல்லை . இரண்டு மாதங்களுக்கு மேல் விடுப்பில் இருந்தேன். இட மாற்றல் எதுவும் கிடைக்காது என்று ஒரு முடிவு தெரிந்ததும் தனியே சிவான் போவது என்று முடிவு செய்து சென்னை போய் கல்கத்தா வழியாக சிவான் போய்ச் சேர்ந்தேன்
இந்தக்கதையின் கருவையும் பெயர் தெரியாத கதாநாயகனையும் பற்றி விவரிக்குமுன் சிவானைப்பற்றியும் பிகாரைபற்றியும்  சில செய்திகள், அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்,
*கனிம வளம், நீர் வளம் மக்கள் வளம் நிறைந்த அந்தப்பகுதி உடல் நலத்துக்கு மிகவும் உகந்த இடம். சிவானில் இருந்து விடுமுறையில் ஊருக்கு வந்தபோது என்னைச்சந்தித்தவர்கள் பத்து வயது குறைந்ததுபோல் தெரிவதாகச் சொன்னார்கள்.. குறிப்பாக நரை முழுதும் மாறி தலைமுடி கருப்பாகி விட்டது,                                      *உணவுப்பொருட்கள் விலை மிக மலிவு. இரண்டு ரூபாய்க்கு அளவில்லாமல் சோறும் சப்பாத்தியும் சாப்பிடலாம். விடுமுறை நாட்களில் பாணி பூரி சாப்பிடப் போவோம்.. பாணி பூரி தயிர் வடை எல்லாம் போதும் போதும் என்கிற அளவுக்குச் சாப்பிட்டாலும் ஒரு இரண்டு ரூபாய்க்கு மேல் வராது *மிக அன்பாக, நட்புடன் பழகும் மக்கள். சிவானில் ஏழு மாதம் பணி புரிந்து விட்டு மாற்றலாகிப் போகையில் கிளையில் உள்ள அத்தனை ஊழியர்களும் தொடர் வண்டி நிலையத்திற்கு வந்து வழியனுப்பி வைத்தார்கள்.        *வெளி மாநிலத்தில் பணிபுரியும்போது சில பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். சிவானில் எனக்கு மிகப் பெரிய பிரச்சனையாக இருந்தது குளிர்.நடுக்கும் குளிர் என்றால் அதுதான்.. இரவில் படுக்கும்போது தலையில் கம்பளித்தொப்பி உடலில் சட்டைக்கு மேல் கம்பளி ஆடை கைகால்களில் கம்பளி உறை கால் முழுதும் மறைக்கும் ஒரு உள்ளாடை அதற்குமேல் முழுக்கால்சட்டை அணிந்து படுக்கையில் மெத்தைக்குமேல் ஒரு கம்பளி விரித்து மேலே மெத்தை போல் இருக்கும் ரசாயைப் போர்த்திக்கொண்டு படுப்பேன். அதையும் மீறிக் குளிர் வாட்டி எடுக்கும்.இவ்வளவு குளிரிலும் உடல் சுகவீனம் எதுவும் ஏற்படவில்லை..சிவானில் வாங்கிய கம்பளி ஆடைகள் முப்பது ஆண்டுகள் கழிந்தும் இன்றும் அணியும் நிலையில் உள்ளன                                                    *.அந்தக்குளிரிலும் நாள் தவறாமல் பச்ச்சைத்தண்ணீரில் குளித்தது ஒரு சுகமான அனுபவம்.
*மின்சாரம் மிகவும் அரிதான ஒன்று..இரவு பன்னிரண்டு மணியில் இருந்து ஒரு மணி நேரத்துக்கு மட்டும் மின் விநியோகம் இருக்கும். வங்கிகள், அலுவலகங்கள் வசதியான வீடுகள் வர்த்தக நிறுவனங்கள் தங்கும் விடுதிகள் உணவகங்கள் எல்லாவற்றிலும் ஜெனரேட்டர் ஓடிக்கொண்டே இருக்கும்.  *சிவான் ஒரு குற்றப்பகுதியாக அறிவிக்கப்பட்ட இட(Declared  crime belt) என்று கேள்விப்பட்டேன்.                                           *செலவச்செழிப்பும் வறுமையும் ஒரு சேரக் காட்சி அளிக்கும் இடம்.
இப்போது கதையின் கருவுக்கு வருகிறேன்..தொடர்ந்து ஆறு நாட்கள் வங்கி விடுமுறை,. சக ஊழியர்கள் அனைவரும் தம் ஊர்களுக்குப்போய் விட்டார்கள்.. சமீபத்தில் ஊர் போய் திரும்பியிருந்த நான் தனிமையில் மாட்டிக்கொண்டேன். குளிர் முடிந்து இளவேனில் பருவம் தொடங்கும் இதமான பருவ நிலை.
காலை சிற்றுண்டியை முடித்து விட்டு ஒரு நடைப்பயணம் சென்றேன். வழியில் திரை அரங்கு ஒன்று கண்ணில் பட நுழைவுச்சீட்டு வங்கி உள்ளே போய் அமர்ந்தேன். படம் ஆரம்பிக்க இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் என்பது போல் ஒரு செய்தி கிட்டியது. சரி இன்னும் சற்று நேரம் நடக்கலாமே என்று வெளியே வந்தேன், திரை அரங்கு வாசலில் எலுமிச்சை சாறு கலந்த கருப்புதேணீர் விற்றுக்கொண்டிருந்தார்கள்.
இதமான குளிரில் சூடான் தேநீர் சுவையாக இருந்தது/ ரசித்துக்குடித்து விட்டு பணம்  கொடுத்து விட்டு நடக்கத்தொடங்கினேன்/ சிறிது நேரத்தில் யாரோ என்னைப் பின் தொடர்வது போல் ஒரு உணர்வு. திரும்பிப்பார்த்த எனக்கு மூச்சே நிற்பது போல் இருந்தது நெடிது வளர்ந்து உழைப்பில் உரமேறிய ஒரு உருவம் –இடையில் லங்கோடு மட்டும்அணிந்து என்னை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது.. தேநீர்க்கடைக்காரர் என்னைத்துரதுகிறார் என்பது புரிந்து என் நடையை ஓட்டமாக மாற்றினேன்,.
மனதில் என்னென்னமோ எண்ணஓட்டங்கள் – மொழி தெரியாத புது இடத்தில அனாதையாக உயிரிழக்கப்போகிறோம் .என்னசெய்தோமோ தெரியவில்லை .. பெரிதாக எதோ தவறு நிகழ்ந்திருக்கிறது இல்லாவிட்டால் இப்படி நம்மைத்துரத்தி  வர மாட்டார். எதேனும் அசம்பாவிதமாக் நடந்தால் குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்கக்கூட யாரும் இல்லையே என்று ஒரு பரிதவிப்பு.
இதற்குமேல் ஓட முடியாது என்ற நிலையில் மனதைதேற்றிக்கொண்டு நின்றேன்..வேகமாக வந்த அவர் என்னைப்பார்த்து பெரிய கும்பிடு போட்டார். சரி இந்த ஊர் வழக்கம் போலிருக்கிறது- பலி கிடாவுக்கு மாலை போடுவது போல் கும்பிட்டு விட்டுத்தான்  அடிப்பார்கள் போலும்  என்று எண்ணினேன். அவர் என் கையில் ஐம்பது பைசா நாணயதைத் திணித்து விட்டு வந்த வேகத்தில் திரும்பி விட்டார்...
என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்ள எனக்கு சில நொடிகள் தேவைப்பட்டதன ...நான் குடித்த தேனீரின் விலை ஐம்பது காசு. நான் ஒரு ரூபாய் கொடுத்து விட்டு வந்து விட்டேன். சில்லரைபாக்கியை கொடுப்பதற்காக தேநிருக்ககக் காத்திருக்கும் கூட்டத்தைப் புறக்கணித்து விட்டு சுமார் பத்து நிமிடங்கள்.என் பின்னால் வந்திருக்கிறார்.
இந்தத்தெளிவு வந்தபோது ஏற்பட்ட உணர்ச்சிகளை என்னால் சீரணிக்கவும் முடியவில்லை.வர்ணிக்கவும் வார்த்தை இல்லை நூறு சதவீதம் நேர்மையான ஒரு மனிதர் தான் அப்படிபட்டவர் என்ற ஒரு உணர்வு கூட இல்லாத ஒரு வெள்ளந்தியான ஆத்மா – அந்ததேநீர்க்காரர் என் மனதில் இமயம் போல் உயர்ந்து நின்றார்..என்னென்னமோ அவரைப்பற்றி தப்பாக வீண் கற்பனை செய்து. நன்றி சொல்லக்கூட வாய் வராமல் விதிர்துப்போன நான் கூனிக் குறுகி உணர்ந்தேன்.,
அற்பமாக நாம் எண்ணக்கூடிய ஒரு ஐம்பது காசால் பிகாருக்கும் இந்தியாவுக்கும் ஏன் மனித குலத்துக்கே பெருமை தேடித்தந்த அந்த தேநீர்க்காரர்  இந்த நிகழ்வு நடந்து முப்பது ஆண்டுகள் கழிந்தும் என் நெஞ்சில் நிறைந்து நிற்கிறார்..
பெயர் தெரியாத அந்த மாமனிதருக்கு  என் பாராட்டுதான் இந்தக்கதை.
     

 ,     .     .

.
 
    
   .       .