Saturday, 17 October 2015



இக்பால்

அப்துல் ரகுமான் –பெயருக்கேற்ப அன்பும் இரக்கமும் மிகுந்தவர்  .நேர்மை இறையச்சம் துன்புறுபவர்களுக்கும் நலிந்தவர்களுக்கும் வலியச் சென்று உதவும் ஈகை உள்ளம்..என்று மிக நல்ல மனிதராகத் திகழ்ந்தார்
நல்ல குடிப்பிறப்பு ,பட்டப்படிப்பு நல்ல குடும்பத்தைச்சேர்ந்த நல்ல வாழ்க்கைத்துணை என இனிமையான இல்லறம்..பட்டப்படிப்பு முடிந்தவுடன் திருமணம் அடுத்த ஆண்டே ஒரு பெண் குழந்தை அந்தப்பெண்ணுக்கு பதினெட்டு வயதில் திருமணமாகி அடுத்த ஆண்டே ஒரு குழந்தையைப் பெற நாற்பது வயதிலேயே பேரனுக்குத் தாத்தவாகி விட்டார் ரகுமான். பெண் குழந்தைக்குப்பின் சில ஆண்டுகள் சென்று ஒரு ஆண் குழந்தை
குடுமபத்தொழிலான பீடி இலை வணிகத்தை இவரும் தொடர்ந்து செய்தார்.. தரமான பொருள், குறைந்த லாபம் என்று நேர்மையான முறையைக் கைகொண்டதால் வணிகம் செழிப்பாக இருந்தது. குறிப்பாக கடன் வாங்குவதும் கொடுப்பதும் சொந்த  வாழ்க்கையிலும்  இல்லை வணிகத்திலும் இல்லை என்பதில் உறுதியாக் இருந்ததால் வாழ்கை சீராக அமைந்தது.. வங்கியில் அனுமதிக்கப்பட்ட அதிகப்பற்றுக் கணக்கைக் கூட இதுவரை பயன்படுத்தியது இல்லை..
இப்படித்தெளிந்த நீரோடை போல் ஓடிகொண்டிருந்த வாழ்க்கையில்  எதிர் பாராத சுழல்கள் சூழ்ந்தன
பீடி இலைகளை மொத்த வணிகர்களிடம் கொள்முதல் செய்து ஓரளவு லாபம் வைத்து விற்பதுதான் ரகுமானின் குடும்ப வழக்கமாக இருந்தது. இதற்கு மாற்றாக வணிக நண்பர் ஒரு ஆலோசனை சொன்னார்.
மொத்த வணிகர்களிடம் கொள்முதல் செய்வதை விட பீடி இலை விளையும் வட மாநிலங்களுக்கு போய் நேரடியாகப் பார்த்து வாங்கினால் விலை மிக மலிவாக இருக்கும் என்று சொன்னார். சிந்தித்துப் பார்த்தால் நல்ல ஒரு கருத்தாகத்தான் பட்டது ரகுமானுக்கு.


அதற்கான ஏற்பாடுகளைக் செய்து பணம் ஓரளவு திரட்டிக் கொண்டு தன் நண்பருடன் பயணம் மேற்கொண்டார்.. மாநில அரசே பீடி இலைகளே விற்பதால் ஓரளவு நம்பி வாங்கலாம் என்று நண்பர் சொன்னார்.
அரசு நடத்திய ஏலத்தில் பங்கேற்று தேவையான பீடி இலைகளை வாங்கிய ரகுமானுக்கு மிகவும் திருப்தியாக இருந்தது. உள்ளுரில் வாங்கும் விலையில் கிட்டதட்ட பாதி விலைக்கு பொருள் கிடைத்ததில் மனம் மகிழ்ந்த ரகுமான் இறைவனுக்கும் வணிக நண்பருக்கும் நன்றியைத் தெரிவித்தார்.
வந்த வேலை இனிதே முடிந்தது. இனி பீடி இலைகளை பக்குவமாகப் பொதியாக்கி தொடர் வண்டியில் ஏற்றி விட்டு ஊருக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டியதுதான்.
இந்தத் தருணத்தில்தான் ஒரு அதிர வைக்கும் உண்மை தெரிய வந்தது.. அரசிடம் வாங்கிய பீடி இலைகளின் பெரும்பகுதி மிகத் தரத்தில் தாழ்ந்தவை; விலை போகாதவை. கலங்கிப்போன ரகுமான் நண்பருடன் அரசு அதிகாரிகளைச சந்திக்க விரைந்தார்..நீண்ட காத்திருப்பிற்கு பிறகு உயர் அதிகாரியை சந்திக்க முடிந்தது. அவர் தெளிவாகவும் சுருக்கமாகவும் சொல்லிவிட்டார்.:”இதெல்லாம் சரக்கு வாங்குமுன்பே சரி பார்த்திருக்க வேண்டும்.. எப்பொழுது இலைகள் உங்கள் வசம் வந்து விட்டதோ எங்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை.”     
குழம்பி நின்ற ரகுமானுக்கு அங்கிருந்த உள்ளூர் வணிகர்கள் ஆறுதல் கூறினார்கள்..”இதெல்லாம் சாதாரணமாக நடப்பதுதான். நீங்கள் நேரடிக்கொள் முதலை தவிர்த்து உள்ளூர் தரகர்கள் மூலம் போயிருக்க வேண்டும். அவர்கள் கேட்கும் தரகு ஒரு நல்ல தொகையாக இருந்தாலும் அவர்கள் அனுபவமும் பழக்கமும் இத்தகைய பெரும் இழப்பைத் தவிர்த்திருக்கலாம்” என்று சொன்னார்கள்.




நிலைமை கை மீறிப் போனது தெளிவானது ரகுமானுக்கு.. இனி அடுத்து என்ன செய்வது என்ற கேள்வி மனதை வாட்டத் தொடங்கியது.
இந்த இழப்பை புத்திக்கொள்முதல் என்று எண்ணிக்கொண்டு பேசாமல் ஊர் போய்ச் சேருங்கள் என்றார்கள் சிலர்.
இன்னும் சிலர் இப்போது கூட தரகர்களை அணுகி அவர்கள் மூலமாக அரசு அதிகாரிகளிடம் முறையிடலாம் ஆனால் அதில் தரகு அன்பளிப்பு என்று பெருந்தொகை செலவழிக்க வேண்டியிருக்கும் என்றனர்.
நல்ல ஒரு வழக்கறிஞர் மூலமாக நீதி மன்றத்தில் முறையிடலாம் என்ற ஒரு கருத்தும் எழுந்தது. 
நீதி நேர்மை என்ற வாழ்கை நெறியில் வளர்ந்த ரகுமானுக்கு  ஆழ்ந்த நீண்ட சிந்தனைக்குப்பின்  நீதி மன்றத்தை அணுகுவதுதான் சரியென்று பட்டது.. உள்ளூர் வணிகர்கள் மூலம் ஒரு நல்ல வழக்கரறிஞரை அணுகினார்.
வழக்கறிஞர் ரகுமனைப்போல்  நேர்மையானவராக இருந்தார். தெளிவாகச்சொல்லி விட்டார் : “வழக்கு முடிய எவ்வளவு நாள் ஆகும் என்பதும் வழக்கின் முடிவு எப்படி இருக்கும் என்பதும் தெரியாது..என்னால் முடிந்த அளவுக்கு என் கட்டணத்தைக் குறைத்துக்கொள்கிறேன். ஆனால் நீதி மன்றச செலவுகள் நீங்கள் ஒவ்வொரு முறையும் வந்து போகும் செலவுகள் எல்லாம் தவிர்க்க முடியதவை. இவை எல்லாவற்றையும் கணக்குப்பார்த்து நீங்கள் முடிவெடுத்தால் வழக்குத் தொடர்ந்து விடலாம்”
திரும்பவும் சற்று நேரம் சிந்தித்துப் பார்த்து விட்டு வழக்குத் தொடரவே முடிவு செய்தார் ரகுமான். பாவம் நேர்மை நியாயம் என்றே வாழ்ந்து வரும் அவருக்கு சட்ட நடைமுறைகள் அவற்றின் காலவறை இல்லாத இழுத்தடிப்புகள் அதனால் ஏற்படும் செலவினங்கள் நேர விரயம் போன்றவற்றை பற்றி எண்ணிப்பார்க்கத் தோன்றவில்லை.. நாம் ஏதும் தவறு செய்யவில்லை அதனால் நமக்கு நீதி மன்றத்தில் விரைவில் நியாயம் கிடைக்கும் என்று எண்ணினார்.

வழக்குத் தொடரவே  நீண்ட நெடுங்காலம் பிடித்தது.  வழக்கறிஞர் கோடி காட்டியது போல் வழக்கு ஆண்டுகள் பல கடந்து ஓடிக்கொண்டே இருந்தது.
வணிகத்தின் முதல் கொள்முதலில் முடங்கி விட்டது, அதோடு தொடர்ந்து பல ஆண்டுகள் நீதி மன்றத்திற்கு அலைந்ததில் வணிகம் மிகவும் பாதிக்கப்பட்டு வருமானம் இல்லாத நிலைக்கு வந்து விட்டது.
இதற்கிடையில் குடும்,பத்தில் சில பல பிரச்சனைகள். மகளின் இரண்டாவது மகபேற்றில் ஏற்பட்ட சிக்கல்கள் மனைவிக்கும் மகனுக்கும் ஏற்பட்ட உடல் நலக்குறைவுகள் இவற்றால்,ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல்கள் எல்லாம் சேர்ந்து ரகுமானை நிலை குலையச் செய்து விட்டன.
ரகுமானின் மாமனார் நல்ல வசதி படைத்தவர் நல்ல மனமும் கொண்டவர்.. ஆனால் மருமகனின் மனம் புண்பட்டு விடுமோ என்று அஞ்சி மௌனம் காத்து விட்டார்.
மேலும் ரகுமான் தனக்குள்ள பிரச்சனைகளை யாரிடமும்- மனைவியிடம் கூட தெரிவிக்கமாட்டார். பிறர் உதவியை நாடவும் மாட்டார்.
இப்படியே சிக்கல்கள் இறுகி இடியாப்பச்சிக்கலாகி குடும்பத்தை நடத்துவதே சிரமம் என்ற நிலை வந்து விட்டது/
இந்த இறுக்கமான சூழலில்தான் இக்பால் வருகிறார். இனிப்பகம் நடத்தி வந்த இக்பாலின் எண்ணம் பேச்சு செயல் எல்லாமே இனிமை இனிமை இனிமை. ரகுமானுக்கு ஒரே நெருங்கிய நண்பர் இக்பால்.நட்பென்றால் சாதாரண நட்பல்ல. எடுக்கவோ கோக்கவோ அளவுக்கு நெருக்கம். ரகுமான் மனம் விட்டுப் பேசுவது என்றால் இக்பாலிடம் மட்டும்தான்.
வெளி நாடு சுற்றுப்பயணம் சென்ற இக்பால் ஊர் வந்ததும் வீட்டுக்குப் போனாரோ இல்லையோ ரகுமானைப் பார்க்க ஓடி வந்து விட்டார்..நண்பபைப் பார்த்ததுமே எதுவுமே சரியாக இல்லை என்பதை உணர்ந்த இக்பால் ரகுமானைக் கூட்டிக்கொண்டு வெளியே பொய் விட்டார்.


பிரிந்தவர் மீண்டும் சேரும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி. ரகுமான் அழுது முடியும் வரை பொறுமைகாத்தார் இக்பால். அழுது ஓய்ந்தவுடன் ஆறுதல் கூறி ரகுமானை மனம் திறந்து பேச வைத்து பொறுமையாக கவனமாக செவி மடுத்தார்.
ரகுமான் பேசி முடித்ததும் இக்பால் -- இவ்வளவு தூரம் சிக்கலை வளரவிடாமல் எனக்கு தொலை பேசியில் தகவல் தெரிவித்திருந்தால் நான்அடுத்த விமானத்தில் பறந்து வந்திருப்பேனே. உன்னை விட என் சுற்றுப்பயணம்என்ன எதுவுமே எனக்கு பெரிதல்ல – என்று சொல்லி விட்டு சரியாக ஐந்தே நிமிடம் சிந்தித்து விட்டு- சரி கவலையை விடு.. நீ நினைப்பது போல் இது ஒன்றும் அவிழ்க்க முடியாத முடிச்சல்ல என் மகள் திருமணத்துக்காக இருநூறு பவுன் நகை செய்து வைத்திருக்கிறேன். அது வெட்டியாக வங்கி பெட்டகத்தில் தூங்கிக் கொண்டிருக்கிறது.. என் மகளின் படிப்பு பற்றிய கனவுகளைப் பார்க்கும்போது இன்னும் பத்து ஆண்டுகள் ஆகும் போல் தெரிகிறது. அதை அப்படியே உன்னிடம் கொடுத்து விடுகிறேன், நீ அதை விற்பாயோ அதை வைத்துக் கடன் வாங்குவாயோ அதெல்லாம் உன் விருப்பம் உன் முடிவு..என்னைப் பொறுத்தவரை உன்னிடம் கொடுத்து விட்டால் அது உன் நகை. என் மகளுக்குத் திருமணம் கூடி வரும்பொது நீ அதே அளவு நகையோ தங்கமோ கொடுத்தால் போதும் இப்போதைக்கு இது நமக்குள் இருக்கட்டும் சமயம் பார்த்து நான் என் மனைவியிடம் சொல்லிக்கொள்கிறேன். இன்னும் மூன்று நாட்கள் வங்கி விடுமுறை. புதன் கிழமை காலை வங்கி திறந்ததும் உன்னையும் வங்கிக்கு அழைத்துக் கொண்டு போய் நகையை உன்னிடம் கொடுத்து விடுகிறேன் மற்ற விசயங்களை நாம் பிறகு விரிவாகப் பேசிக்கொள்ளலாம் என்று மிக இயல்பாக வா தேனீர் சாப்பிடலாம் என்பத போல் சொல்லி முடித்தார் . அது தான் இக்பால். எந்தச்சிக்கலையும் தன் சொந்தப் பிரச்சனையாகக் கருதி  சிந்தித்து ஒரு நல்ல தீர்வு கண்டு அதை முழு மனதுடன் செயல் படுத்தவும் செய்வார்.


ரகுமனுக்கு சற்று நேரத்திற்கு ஒன்றுமே புரியாத திகைப்பு.. காண்பதும் கேட்பதும் கனவா நனவா என்ற மயக்கம்.. இக்பால் சொன்னதின் முழு அர்த்தமும் அது தன் வாழ்வின் மிகப் பெரும் சிக்கலைத் தீர்த்து ஒரு மறு வாழ்வு மலரச் செய்யவிருக்கிறது என்பது சற்று நேரத்தில் புரிய தன்னை அறியாமல் ஓ என்று சிறிது நேரம் கண்ணீர் விட்டு அழுதார். பிறகு இறைவனுக்கு நன்றி சொல்லிவிட்டு நண்பனைக் கட்டி பிடித்து தன மகிழ்ச்சியையும் நன்றிப் பெருக்கையும் வெளிபடுத்தினார்..
எதுவுமே நிகழாதது போல் இக்பால் ரகுமானைத் தன் இனிப்பகதிற்கு அழைத்துச் சென்று உயர்வகை இனிப்புகள் நிறையக் கொடுத்து அவர் வீட்டில்கொண்டு விட்டு பிட்டுப் போனார்.
ரகுமானின் முகத்தில் நீண்ட இடைவெளிக்குப்பின் நிம்மதியையும் ஆனந்தத்தையும் கண்ட துணைவி இறையருளால் எதோ நல்லது நடந்திருக்கிறது என்று புரிந்து கொண்டார். நீண்ட நாட்களுக்குப் பிறகு ரகுமான் கவலையற்று உறங்கினார்..
பொழுது புலர்ந்ததும் ரகுமான் எழுந்து பள்ளி சென்று தொழுககயை முடித்து வீடு வந்து எட்டுமணியாளவில் சிற்றுண்டியை முடித்து விட்டு செயல் பட வேண்டிய வழி முறைகளைப் பற்றி சிந்திதுக் கொண்டிருந்தார். தரைவழித் தொலைபேசி ஒலிக்க எடுத்துப் பேசினார். பேசியது கமால் என்ற வணிகத்தொடர்பு நண்பர்.அற்ற குளத்து அரு பறவை போல ரகுமானின் துன்ப நிலை கண்டு பேச்சைக் கூடத் தவிர்த்தவர்.
அதை  எல்லாம் மறந்து ரகுமான் உணர்ச்சி பொங்கப் பேசினார். –“ நண்பா என் துன்பம் துயரம் எல்லாம் தீர்ந்து விட்டது. என் உயிர் நண்பன் இக்பால் கருகிப்போன என் வாழ்வுக்கு புத்துயிர் கொடுத்து விட்டான். இறைவன் அருளால் நான் விரைவில் என் பழைய செல்வா நிலையை அடைவேன் “
எதிர் முனையில் இரண்டே வார்தைகளுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது..
-“இக்பால் இறந்து விட்டார்”


பின் கதை:
இக்பால் போனபின் தனக்கு வாழ்வே இல்லை என்பதுபோல் ரகுமான் உடல் தளர்ந்து மனம் சிதைந்து உருக்குலைந்து நடைப்.பிணமாகி விட்டார். ஆனால் எல்லாம் சில மாதங்கள்தாம்.
இக்பாலின் கடைசிப் பேச்சு அடிக்கடி நினைவுக்கு வர வாழ்வின் உண்மை நிலை பளிரென்று தெரிந்தது ரகுமானுக்கு..முதல் உண்மை முடங்கி கிடக்கும் சொத்துககளை வீண் கெளரவம் பாராமல விற்றால் நிறைய பணம் கிடைக்கும்.அது வணிகத்தை புதுப்பிக்க உதவும். இரண்டாவது இந்த மாதிரி இக்கட்டான சூழ்நிலைகளில் ஒரு மனித உதவி மிகவும் அவசியம்.
இதெல்லாம் எண்ண எண்ண மனதில் தெளிவும் துணிவும் பிறந்தது. தன மாமனாரை வீட்டுக்கு வரவழைத்தார். மகள் குடும்பத்துக்கு உதவி செய்யக் காத்திருந்த அந்த நல்ல மனிதர் ஓடோடி வந்தார். முதன் முறையாக மாமனாரும் மருமகனும் மனம் திறந்து பேசிக் கொண்டார்கள். தான் குடியிருக்கும் மிகப்பெரிய வீட்டை நல்ல விலைக்கு விற்றுத் தருமாரும் குடியிருக்க நல்ல ஒரு வீடு வாடகைக்குப் பிடித்துத் தரவும் வணிகத்தைப் புதுப்பிக்க ஒரு துணையாக இருந்து அறிவுரைகள். ஆலோசனைகள் கூறுமாறும் மாமனாரிடம் மருமகன் கேட்டுக் கொண்டார்.
மாமனார் சொன்னார்- வீட்டை நானே இன்றைய சந்தை மதிப்பிற்கு வாங்கிக் கொள்கிறேன்.நீங்கள் வீட்டைக் காலி பண்ணவும் வேண்டாம். ஒரு நீதமான மாத வாடகை கொடுத்து விடுங்கள். நிலைமை சரியானவுடன் அன்றைய சந்தை மதிப்பில் வீட்டைத் திரும்ப வாங்கிக்க்கொள்ளுங்கள்.. நீங்கள் அவசியம் என்று எண்ணினால்  இதை நமக்குள் ஒரு ஒப்பந்தமாக எழுதிக்கொள்ளலாம். இதன் மூலம் பத்திரச் செலவு மிச்சமாகும். மேலும் நான் வணிகப் பொறுப்புகள் அனைத்தையும் என் மக்களிடம் ஒப்படைத்து விட்டேன்..


 எனவே தேவைப்பட்டால் தினமும் உங்கள் வணிக நிறுவனத்துக்கும் மற்ற இடங்களுக்கும் செலவ்தில் எனக்கு ஒரு சிரமமும் இல்லை
அடுத்து வேலைகள் மட மடவென்று நடந்தன. முன்பை விட பன்மடங்கு கடுமையாக உழைத்து தன வணிக நிறுவனத்திற்கு மாமனார் துணையோடு புத்துயிர் ஊட்டினார். ஓரளவுக்கு நிலைமை சீரானவுட்ன் வழக்கை மேற்கொண்டு தொடரவேண்டம்  என்று எண்ணி அதை செயல்படுத்த வட மாநிலம் சென்றார் ரகுமான்..வழக்கறிஞரை சந்தித்தபோது அங்கு ஒரு அதிர்ச்சி
ஆனால் இந்த முறை இன்ப அதிர்ச்சி. வாங்கள் நானே உங்களை தொலை பேசியில் தொடர்பு கொள்ள எண்ணியிருந்தேன். என்று அகமும் முகமும் மலர வரவேற்ற வழக்கறிஞர் மேலும் சொன்னார்- வழக்கு உங்கள் பக்கம் தீர்ப்பாகும் போல், இருக்கிறது. அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் தொடர்ந்து செய்து வந்த பெரிய அளவிலான ஊழல் நீங்கள் தொடர்ந்த வழக்கால் நீதி மன்றத்தின் கவனந்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஒரு தனி விசாரணைக்குழு இது பற்றி ஆய்வு செய்து கொண்டிடுக்கிறது. தாமதமானாலும் உங்கள் பணம் உறிய இழப்பீட்டுத் தொகையுடன் திரும்பக் கிடைக்கும்.. உங்கள் நேர்மைக்கும் பொறுமைக்கும் இறை நம்பிக்கைக்கும் கிடைத்த மிகப் பெரிய வெற்றி இது.
இப்படி எல்லாம் கூடி வர மூன்றே ஆண்டுகளில் ரகுமான் தன பழைய நிலைக்கு மேல் உயர்ந்து விட்டார். வீட்டை மாமனாரிடம் இருந்து திரும்ப வாங்கி வீட்டிற்கும் தனது வணிக நிறுவனத்திற்கும் இக்பால் பேரை சூடி தன நன்றியைத் தெரிவித்தார். மேலும் நலிந்து போன வணிகர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் உதவி செய்ய தன சொந்தப் பணத்தில் ஒரு அறக்கட்டளை நிறுவி அதற்கும் இனிய நண்பன் பேரையே சூடி அவர் பெயர் என்றும் நிலைத்திருக்கச் செய்தார். இக்பால் குடும்பத்துக்கு உறு துணையாக நின்று வழி நடத்தினார்.     
  .              .----------------------------------------------------------------------------