Tuesday, 22 March 2016

9.கடலூர்0

9.கடலூர்
ஆழிப்பேரலையின் சீற்றத்தை, வெள்ளப்பெருக்கின் தாக்கத்தை ,தானே புயலின் கோர தாண்டவத்தை மழை வெள்ளத்தின் கொடுமையை பலரும் தனித்தனியே உணர்ந்திருப்பார்கள் .
ஆனால் இவை அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து சந்தித்தும் தளாராமல் ஆற்றங்கரை நாணல் போல் நிற்கும் பெருமை கடலூருக்கு உண்டு.
இது மட்டும் அல்ல .வரலாறு படித்தவர்களுக்குத் தெரியும்.- இந்தியாவின் தலை நகராய் முதலில் கல்கத்தா இருந்தது. பின்புதான் (புது) தில்லி தலை நகராய் உருவாக்கப்பட்டது.
அதே போல் வெள்ளையர் ஆட்சியில் தமிழ் நாட்டின் தலை நகராய் இருந்த பெருமை கடலூருக்கு உண்டு.
இன்றும் மாவட்ட ஆட்சியர் இல்லம் அமைந்திருப்பது ராபர்ட் கிளைவ் வாழ்ந்த, ஆண்ட இடம்தான்.
ஒரு பக்கம் கடல், ஒரு பக்கம் சிறிய மலை மற்ற இரு பக்கங்களிலும் நதிகள் என்று அழகிய இயற்கை அமைப்பில் அமைந்திருந்த ஊர் .கடலூரின் வெள்ளிக்கடற்கரை சென்னை மெரீனா கடற்கரைக்கு அடுத்து அழாகான கடற்கரை..
ஆனால் இன்று எல்லாம் பழங்கதை ஆகி விட்டது. நதிகள் சாககடைகளாகி விட்டன .காற்று முழுக்க வேதிப்பொருள் கழிவுகளால் மாசு படிந்து விட்டது,  
எங்கு பார்த்தாலும் குப்பை கூளங்கள், தெருவில் ஓடும் சாக்கடை நீர் மேடு பள்ளமான சாலைகள்  ஒரு அமைப்பே இல்லாத பேருந்து நிலையம், தொடர் வண்டி நிலையம்.
பல நூறு கோடி ருபாய்களையும் பல உயிர்களையும் விழுங்கி பல ஆண்டுகள் தோண்டப்பட்ட பாதாள சாக்கடை எங்கே போயிற்று என்று தெரியவில்லை.
வாடிய பயிரைக்கண்டு வாடிய வள்ளலார் பெருமான் வன்முறைக்கும்பலால் தாக்கப்பட்டதும் இதே ஊரில்தான் .
 என்ன இப்படி ஊரைப்பற்றி வர்ணனை நீண்டு கொண்டே போகிறது என்று எனக்கே தோன்றுகிறது. காரணம் இதுதான் –இப்போது நான் இருப்பது கடலூரில்தான், வங்கிப்பணியில் மூன்று ஆண்டுகள் ,பிறகு நான்கு ஆண்டு இடைவெளிக்குப்பின் பணி மூப்பு பெற்று ஐந்து ஆண்டுகள் என எட்டு ஆண்டு வாழ்க்கையின் தாக்கம்.
சென்னையில் பணி புரிந்தபோது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட , கிட்டத்தட்ட் கிடைத்தது போலவே உயர் அதிகாரிகளால் சொல்லப்பட்ட பதவி உயர்வு கிடைக்கவில்லை (அதிகாரிகள் நல சங்கத்தின்  முதன்மைபொறுப்பில் இருந்த ஒருவர் என் உயர்வைத் தடுத்தார் என சமீபத்தில் கேள்விப்பட்டது எனக்கு ஒரு அதிர்ச்சித் தகவல். அவர் பரிந்துரை செய்த சில கடன்களை நான் கொடுக்க மறுத்தது ஒரு காரணமாக இருக்கலாம்.)
மகன் பைசலுக்கு திருமணம் உறுதி செய்யப்பட்டு விட்டது..அவர் இருப்பது கடலூரில்தான்.எனக்கும் சென்னை பரபரப்பு ஒத்து வரவில்லை. பதவி உயர்வு கிடைக்காத ஒரு சலிப்பு வேறு..
கடலூருக்கு மாறுதல் கிடைக்குமா என்று உயர் அதிகாரிகளிடம் கேட்டேன்.உலக மகா அதிசயமாக உடனே சரி என்று சொல்லிவிட்டார்கள் .பதவி உயர்வுக்குப் பதிலாக ஒரு ஆறுதல் பரிசு போல.
என்னில் உண்மையான அக்கறை கொண்ட உயர் அதிகாரிகளும் தோழர்களும் சென்னையை விட்டுப் போக வேண்டாம் என்று அறிவுறுத்தினார்கள், ஆனால் எனக்கு என்னமோ சென்னை வங்கி வாழ்க்கை வேண்டாம் என்று தோன்றி விட்டது .
பைசலின் திருமணம் சென்னையில் நான் பணிபுரிந்தபோது நிச்சயிக்கப்பட்டது. ஆனால் திருமணம்நடைபெறுவதற்குள்  நான் கடலூர் சென்று விட்டேன் கடலூர் கிளை சில மாதங்களாக மேலாளர் இன்றி இயங்கி வருகிறது எனவே நீங்கள் உடனே அங்கு சென்று பொறுப்பேற்க வேண்டும் என மேலிட ஆணை.
ஏற்கனவே பைசல் கடலூரில் இருந்த அறையில் நானும் தங்கிக்கொண்டேன். பேருந்து நிலையம்,வங்கி உணவு விடுதிகள் எல்லாம் அருகிலேயே இருந்தன,
திருமண வேலைகளுக்காக விடுப்பு எடுத்துக்கொண்டு பைசலும் நானும் பேருந்தில் சென்னை பயணித்து கோயம்பேட்டிலிருந்து தானியில் வீட்டுக்குப்போய் இறங்கினோம். சிறிது நேரம் கழித்து என் பெட்டியை தானியிலேயே விட்டது அறிந்து அதிர்ச்சி .பெட்டியில் முதற்கட்ட வேலைகளுக்காக ஓரளவு பணம் (40,000 என நினைவு) இருந்தது. என்ன செய்வேதென்று புரியாமல் காவல் துறை அதிகாரியான என் மைத்துனர் சிராசுதீனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். வண்டி எண் தெரியாமல் கண்டு பிடிப்பது சிரமம், நான் முடிந்த வரை முயற்சி செய்கிறேன் என்றார்.. வண்டியில் போய் சுற்றும் முற்றும் பார்த்து வந்தேன். எங்கும் காணவில்லை.
மனம் சற்று சலிப்படைந்து இருக்கையில் வீட்டு வாசலில் தானிச்சத்தம் .போய்ப்பார்த்த எங்களுக்கு வியப்பும் மகிழ்ச்சியும் தானி ஓட்டுனர் என் பெட்டியுடன் இறங்கி வந்தார். இறைவனின் கருணைக்கு மனம் நிறைந்த நன்றி பாராட்டிவிட்டு அந்த ஓட்டுனருக்கு நன்றி தெரிவித்தேன், பரிசாகக்கொடுத்த பணத்தை மறுத்து விட்டு தானி வாடகை மட்டும் பெற்றுக்கொண்டார்.
மனிதநேயம் இன்னும் மறைந்து போகவில்லை என்று எண்ணி மகிழ்ந்தோம் 
மீண்டும் இறைவனுக்கு நன்றி தெரிவித்து விட்டு திருமண வேலைகளைத துவங்கினோம்.. திருமண அழைப்பிதல் மிகச் சிறப்பாக இருப்பதாய் பலரும் பாராட்டினர்
திருவாரூர் மல்லிகை மகாலில் திருமணம். தனிப் பேருந்து அமர்த்தி உறவினர்களுடன் பயணித்தோம். மதிய உணவு வசந்த பவனில் அழகாக தட்டுக்களில் வைத்து கட்டிக்கொடுத்தார்கள். சுவையும் சிறப்பாக இருந்தது .பேருந்துக்கும் உணவுக்கும் சிறப்பாக ஏற்பாடு செய்தார்   மைத்துனர் சிராசுதீன்(பணம் நான் கொடுத்து விட்டேன்)
நாங்கள் தங்க திருவாரூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள செல்வி விடுதியில் ஏற்பாடு செய்திருந்தார்கள். இரவு உணவை திருமண மண்டபத்தில் முடித்து விட்டு விடுதிக்கு வந்தோம். நல்ல வசதியான விடுதி. காலை சிற்றுண்டியும் அங்கேயே சிறப்பாக அமைந்தது.
சில பல சிறிய குறைகளைத்  தவிர்த்து திருமணம் இறைவனருளால்   சிறப்பாக நடந்தேறியது..
கடலூர் வங்கிக்கிளையின் ஊழியர்கள் சிலரும் வாடிக்கையாளர் ஒருவரும் திருமணத்தில் கலந்து கொண்டனர். அவர்களிடம் சாப்பாடு சுவையாக இருந்ததா எனக் கேட்டேன்.  மணமகன் சார்பில் வந்திக்கிறோம் என்று சொன்னவுடன் விழுந்து விழுந்து உபசரித்தார்கள் அதிலேயே மனம் வயிறெல்லாம் நிரம்பி விட்டது என்றார்கள்.,
மாலை நலுங்கு, விளையாட்டுக்கள் எல்லாம் முடிந்து பைசலை மணமகள் இல்லத்தில் விட்டு விட்டு சென்னை புறப்பட்டோம். இரவு உணவும் மணமகள் வீட்டிலேயே ஏற்பாடு செய்திருந்தார்கள்.
 சென்னையில் இருந்து  புறப்படும் முன் ,ஒரு சிறிய குழப்பம் .ஜெமிலா குப்பியின்  முதுமையினாலும் உடல் நலக்குறைவாலும் திருவாரூர் அழைத்துச்செல்வதில் ஒரு  தயக்கம் இருந்தது. குப்பிக்கு பேரன் திருமணத்தில் கலந்து கொள்வதில் மிக மிக ஆர்வம். நீண்ட தூரப் பயணம். அவர் மகளுக்கோ அழைத்துச்செல்ல விருப்பம் ஒரு பக்கம் அச்சம் ஒரு பக்கம். இறுதியாக அழைத்துச்செல்வது என முடிவு செய்தோம்.திருவாரூரில் சற்று உடல் நிலை நலிவடைந்து மருத்துவ மனையில் சேர்த்து அதனால் பல மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டோம். .
அந்த வார இறுதியில் திருமண வரவேற்பு பெரம்பூர் குவீன் மகாலில் மிகச்சிறப்பாக நிறைவேறியது,.சமையலில் வல்லவரான ஹயாத் பாய் செய்த பிரியாணியும் மற்ற உணவுகளும் மிகவும் சுவையாக இருந்ததாக பலரும் பாராட்டினர். வரவேற்பு நிகழ்ச்சிக்கு பெரம்பூர் வங்கிக்கிளையின் அணைத்து ஊழியர்களும் வந்ததார்கள்.
வங்கிப் பொது மேலாளர் திரு ஜார்ஜ் ஜோசப், துணைப் பொது மேலாளர் திரு சாய் நாத் இருவரும் வந்து சிறப்பித்தார்கள்.
சைவ அசைவ உணவு எல்லாமே மிகவும் சுவையாக இருந்ததோடு நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக அமைந்திருந்ததாக எல்லோரும் பாராட்டினார்கள்..ஒரு சிலர் மட்டும் தங்களை சரியாக கவனித்து உபசரிக்கவில்லை என்று குறைபட்டுக்கொண்டது மிகவும் வருத்தமளிப்பதாக இருந்தது.. ஒரு வேளை அவர்கள் மிகவும் தாமதமாக வந்து, அந்த நேரத்தில் நாங்கள் மிகவும் களைப்படைந்ததனால் இருக்கலாம்..எப்படியும் தவறு எங்களுடையதுதான்..
வரவேற்பு நிகழ்ச்சிக்கு சில நாட்கள் கழித்து கடலூருக்கு இடம் பெயர்ந்தோம்..
கடலூரில் மிக அழகான விசாலமான வசதியான வீடு.(மருமகன் சேக் சொல்லித்தான் வீட்டின் சிறப்பை நான் உணர்ந்தேன்.) வங்கிக் கிளையும் அருகிலேயே இருந்தது.
வங்கி ஒரு மிகவும் வசதி குறைந்த ஒரு முதல் மாடியில் அமைந்திருந்தது .வெய்யில்வர வர கழிவு நீர் நாற்றம் மூக்கைத்துளைக்கும். கிளையை  . வேறு இடத்திற்கு மாற்ற எடுத்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.
கடலூரில் இருக்கும்போதுதான் பேரன் (பர்வேஸ் அஹமத் ) திருவாரூரில் பிறந்தான். தொலைபேசியில் செய்தி கிடைத்த உடனே என் துணைவியும் நானும் திருவாரூர் புறப்பட்டுச் சென்றோம்.பேரன் சர்ரென்று சிறுநீர் கழித்தது இன்னும் நினைவில் நிற்கிறது.
பேரனைக் கொஞ்சுவதிலும் சீராட்டுவதிலும் கடலூர் வாழ்கை மிக இனிமையாகக் கடந்து சென்றது. அவனும் எங்களிடம் மிகவும் பாசமாக ஒட்டிக்கொள்வான்,     
என் துணைவியும் நானும் ஹஜ் புனிதப் பயணம் சென்றதும் கடலூரிலிருந்துதான்.. (ஹஜ் பயணம் பற்றி இறைவன் நாடினால்  தனியே எழுதுவேன் )
அலுவலகப் பணியில் மாவட்டக் காவல் அலுவலகம் சென்றபோது அங்கே சகோதரர் ஜனாப் ஜாபர் அலி இ.கா.ப. அவர்கள் கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியதன் நினைவாக அவருடைய ஒரு பெரிய புகைப்படம் சுவரில் மாட்டியிருந்தது கண்டு மிகவும் பெருமையாக இருந்தது.. ரஹ்மத் அலி அண்ணனும் கடலூரில் விவசாய அதிகாரியாகப் பணியாற்றியிருக்கிறது. அத்தா விழுப்புரத்தில் பணியாற்றியபோது மாவட்ட ஆட்சியர் மற்ற அதிகாரிகளைச சந்திக்க கடலூர் வருவதுண்டு.
அதற்குப் பல ஆண்டுகள் கழித்து விழுப்புரம் தனி மாவட்டமாக உருவாகி மாவட்டத் தலை நகர் நல்ல வளர்ச்சி அடைந்து விட்டது. கடலூர் அப்படியே இருக்கிறதா அல்லது தேய்ந்து வருகிறதா என்பது கேள்விக்குறி .ஒரே ஒரு எடுத்துக்காட்டு..சென்னையிலிருந்து எலா மாவட்டத் தலை நகரங்களுக்கும் குளிர்பதன சொகுசுப பேருந்து இயக்க அரசு சார்பில் முடிவெடுக்கப்பட்டது. ஆனால் அதில் சரியான சாலை வசதி இல்லையென்று கடலூர் தனித்து விடப்பட்டது
தங்கை சுராஜ் மகன் நௌஷாத் புது மனை புகு விழாவுக்காக சென்னை பூந்தமல்லி சென்றிருந்தேன், அப்போது  சகோதரர் ஜனாப் ஜாபர் அலி என்னிடம் என்னப்பா கடலூரில் ஏதோ பெரிய பிரச்சனை என்று செய்தி வந்திருக்கிறது. என்னவென்று தெளிவாகத் தெரியவில்லை என்றார். உடனே வீட்டுக்குத் தொலைபேசியில் பேச முயற்சித்தேன்.எந்த அழைப்பும் போகவில்லை. அன்றுதான் பல கடல்கரை நகரங்கப் புரட்டிப்போட்டு பல்லாயிரக்காண உயிர்களைகாவு வாங்கிய ஆழிப்பேரலை என்ற சுனாமி தாக்கிய தினம்.
சென்னையில்ருந்து திரும்பி வந்து குடும்பத்தினர் எந்த பாதிப்பும் இல்லாமல் இறையருளால் நலமாக இருப்பதைப்பார்த்த பின்தான் மனம் சாந்தியடைந்தது.
அலுவலர் ஒருவரைத் துணைக்கு அழைத்துக்கொண்டு கடற்கரைப்பகுதியான தாழங்குடா போன்ற சிற்றூர்களைப் போய்ப் பார்த்தேன். பனைமரங்கள் உச்சியில் கருகி நின்றன, ஆழிப்பேரலை அவ்வளவு உயரத்திற்கு பனை மரம் கருகும் அளவுக்கு வெப்பத்துடன் தாக்கியிருக்கிறது. எங்கு பார்த்தாலும் வீடு வாசல் சுற்றங்களை இழந்தவார்களின் சோகக்கதறல்கள். உள்ளத்தைப் பிசைந்தான.
அரசு மருத்துவ மனைப்பக்கம் சென்றால் லாரி லாரியாக நூற்றுக்கணக்கில் சவங்கள் வந்து குவியும் கோரம்.
துப்புரவு ஊழியர் ஒருவர் மதுவின் மயக்கத்தில் வங்கிக்கு வந்தார். ஏன் இப்படிக்குடித்து உடம்பைக் கெடுத்துக் கொள்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் கூறிய பதில் ஏன் கேட்டோம் என்று ஆகி விட்டது. முழுதும் அழுகிய 15 உடல்களைப் புதைத்து விட்டு வருகிறேன். மதுவின் உதவி இல்லாவிட்டால் வாந்தியெடுத்து நான் சவமாயிருப்பேன் என்றார்.
வங்கியின் சார்பில் 1000 உணவுப்பொட்டலங்கள் தயாரித்து பாதிக்கப் பட்டவர்களுக்கு கொடுக்க எடுத்துச் சென்றோம்.. ஒரு முரண்தொகையாக வீடு வாசல் இல்லாமல் மண்டபங்களில் தங்கியிருந்தவர்கள் கையில் விலை உயர்ந்த ஆடைகள், படுக்கை விரிப்புக்கள், பால் பொடி போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகள். எங்கள் பொட்டலங்களை வாங்க ஆள் இல்லை. ஊரை விட்டு வெகு தொலைவு சென்று உணவு கிடைக்காத இடங்களைத் தேடிப்பிடித்துக் கொடுத்து விட்டு மிச்சம் இருந்தவற்றை அரசு அதிகாரிகளிடம் ஒப்டைத்து வந்தோம்.
இதற்கு எதிர் மாறான நிகழ்வு அடுத்த ஆண்டு பெருக்கெடுத்த வெள்ளத்தில் .1000 உணவுப் பொட்டலங்களுடன் அரசு அதிகாரிகள் சொன்ன ஒரு மண்டபத்திற்குப் போனோம், அங்கு இருந்த சமூக ஆர்வலர்கள் பசியுடன் காத்திருந்தவர்ளுககு மிகத்துரித கதியில் உணைவை பகிர்ந்தளிக்க ஒரு 15 நிமிடங்களுக்குள் அனைவரும் சாப்பிட்டு முடித்து நன்றியுடன்  பார்த்தனர். ஈத்துவக்கும் இன்பத்தை அன்றுதான் உணர்வு பூர்வமாகம அறிந்தேன்.
எதிர் பாராமல் ஒரு நாள் லியாகத் அலி அண்ணன் எங்கள் வீட்டுக்கு வந்தது.ஓரிரு நாள் தங்கி விட்டு பின் சென்னை திரும்பியது.(அக்கா ஜோதிக்கு தகவல் தெரிவித்ததால் கோபம்). நாங்கள் கடலூரில் இருக்கும்போதே ஒரு நல்ல மழைக்காலத்தில் புனித  ரம்சான் நோன்பு மாதத்தில்  சென்னையில் லியாகத் அண்ணனின் உயிர் பிரிந்தது.
லியாகத் அண்ணனும் நானும் ஒரு வயது தோழர்கள் போல் பழகுவோம்.சில பல குறைகள் இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்தவர்களில் அவரும் ஒருவர். புறம் பேசாதது அவருடைய சிறப்பு குணங்களில் ஒன்று.நல்ல அறிவு, தலைமைப்பண்பு பேச்சுத்திறன் எல்லாம் ஒருங்கினைந்து மிகவும் எளிமையாகப் பழகும் குணம் உடையவர்,
கும்பகோணத்தில் ஒரு திருமணத்தில் கலந்து கொண்டு சென்னை திரும்பும் வழியில் முத்தலிப் அண்ணன் ஜென்னத் அக்கா வகாப் மூவரும் கடலூர் வந்து மதிய உணவு அருந்தி விட்டு மாலை புறப்பட்டுச் சென்றனர். கோடை வெப்பத்தில் மிகவும் சிரமப்பட்டனர். வாஹாப் அவர்கள் காரில் குளிர் சாதனத்தை ஓட விட்டு காருக்குள் உட்கார்ந்து கொண்டார்.
கடலூர் புராணம் இதோடு போதும் என்று நினைக்கிறேன்.ஏதேனும் விட்டுப் போயிருந்தால் பின் ஒரு பகுதி எழுத எண்ணுகிறேன்/
பிரான் மலை பற்றி நிறையப்பேர் பாராட்டு தொலை பேசி, கட்செவி மூலமும் நேரிலும் தெரிவித்தார்கள். பாராட்டிய உடன் பிறப்புகள் மெஹராஜ் ஜோதி சுராஜ் சகா ,மற்றும் பாப்டி, ஷேக், ஷாகுல்  ,,கிரசன்ட் ஷேக் ,ஹிதாயத் ,அஜ்மீர் அலி (கவிதை வடிவில் ) கலிபுல்லா , அஸ்மத்,, யுனிவர்சல் ஷாஜகான் அனைவருக்கும் நன்றி. பிரான் மலை எல்லோருக்கும் நன்கு தெரிந்த இடம் என்பதால் அது பற்றிய பகுதி அனைவராலும் விரும்பிப் படிக்கப்பட்டது.,  ஷாகுல் மிக நீண்ட பயணம் என்று தெரிவித்தது இந்தத் தொடர் பற்றியா அல்லது பிரான் மலை பற்றியா என்பது தெளிவாக இல்லை.
கல்வி பற்றிய கருத்துக்கும் அனைவரும் வரவேற்பு தெரிவித்தனர். இறையருளால் விரைவில் கருத்து செயலாக உருவாகும். .
இ(க)டைச் செருகல்
பொதுவாக நான் ஆன்மீகம், மருத்துவம் பற்றி எழுதுவதில்லை .ஆனால் ஒரு சொற்பொழிவில் அத்தஹியாத் பற்றி என் காதில் விழுந்த விளக்கம் மிக அருமையாக இருந்ததாக எனக்குத்தோன்றியதால் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..
அத்தஹியாத் துவா மிராஜ் பயணத்தில் இறைவனுக்கும் இறை தூதருக்கும் இடையில் நடந்த ஒரு உரையாடல்
இறைவனை நோக்கி: இறைதூதர் :அத்தஹியாத்து , லில்லாஹி வஸ்ஸலவாத்து வத்தய்யிபாத்து
காணிக்கைகளும் வணக்கங்களும் வாழ்த்துக்களும் அல்லாஹு தஆலாவுக்கே உரியன.
இதற்கு இறைவன் கூறும் பதில் :அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு வரஹ்மத்துல்லாஹி வபரகத்துஹு
நபியே தங்கள் மீது சலாம் என்னும் சாந்தியும் அல்லாவுடைய ரஹ்மத்தும் அவனுடைய புனிதமும் உண்டாவதாகுக
அதற்கு மனித குலத்தின் மாபெரும் வழிகாட்டி இறைவனை நோக்கி :அஸ்ஸலாமு அலய்னா  வ அலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹின்
இன்னும் எங்கள் மீதும் உத்தமர்களான அல்லாவின் நல்லடியார்கள் மீதும் ஸலாம் எனும் சாந்தி உண்டாவதாக.
(அதாவது தனக்கு இறைவன் அளித்த சாந்தியை அல்லாவின் அடியார்கள் அனைவருக்கும் சொந்தமாக்கி விடுகிறார்கள் நபி(ஸல்) பெருமான் அவர்கள்)
இதைக்கண்டு வியப்பும் உவப்பும் அடைந்த வானவர்கள் ஒரே குரலில் :அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹதன் அப்துஹு வரஸுலுஹு
வணக்கத்துக்குரியவன் அல்லாவைத் தவிர வேறு யாரும் இல்லை.,மேலும் முகமது (நபி ஸல்) அவர்கள் அல்லாவுடைய நல்லடியாரும் திருத் தூதரும் ஆவார் என்று சான்று பகர்கிறார்கள்


பயணம் தொடரும்

  

    .      
 .



Friday, 11 March 2016

வாழ்க்கைப்பயணமும் வங்கி அனுபவங்களும் 8.பிரான்மலை



 முல்லைக்கொடி படர தன் தேரைக் கொடுத்த வள்ளல் பாரி பற்றி கேள்விப்பட்டிருக்கலாம் .பாரி ஆண்ட இடம்தான் பிரான்.மலை. திருப்பத்தூரிலிருந்து பிறந்த பிள்ளைக்கு முடி எடுக்கவும் வேறு பல நேர்த்திக்கடன்களுக்காகவும் மக்கள் அடிக்கடி செல்லும் தர்கா இந்த மலைமேல் அமைந்துள்ளது.
தர்கா செல்வது சரியா அது இசுலாத்தில் அனுமதிக்கப்பட்டதா போன்ற பெரிய தலைப்புகளில் விவாதிப்பது என் நோக்கமல்ல.
சில இடங்களுக்கு நாம் வழமையாக சென்று வருவோம். ஆனால் அங்கு தங்க மாட்டோம். இவை காலத்தின் எல்லையைத்தாண்டி நம் மனதில் பதிவாகின்றன,
பிரான்மலையும் அப்படித்தான் ,சிறு வயதில் அடிக்கடி  பிரான் மலை சென்று வந்த நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.
மிக உயரமான மலை என்றாலும் ஒரு முறை கூட மேலே ஏறாமல் வந்த நினைவு இல்லை.
அதிகாலையில் வெய்யில் வருவதற்கு முன்பே மலை ஏறுவதற்கு ஏதுவாக இரவே அங்கு போய் அடிவாரத்தில் உள்ள மண்டபத்தில் தங்குவோம். .எப்படியும் நாற்பது பேருக்குக். குறையாமல் போவோம்..மிகவும் முடியாத முதியவர்கள் மட்டும் அடிவாரத்திலேயே தங்கி விடுவார்கள்.
அடிவாரத்தில் உள்ள ஒரு சிறிய உணவு விடுதியில் புளிச்சோறும் சாம்பாரும் சுவையாக இருக்கும்.
அதிகாலையில் மலை ஏறத் தொடங்குவோம்.ஒரு சிலஇடங்களில் மட்டுமே படி , பாதுகாப்பு கம்பிகள் . இருக்கும். மற்ற இடங்களில் மலைப்பாறையில்தான் ஏறிச் செல்ல வேண்டும் கையில் தண்ணீர் கொண்டு போவதெல்லாம் பழக்கம் இல்லை ஒரு சில இடங்களில்  சுவையான சுனை நீர் கிடைக்கும்
வாழைச்சுனை என்ற இடத்தில் மலை சற்று சம தளமாக இருக்கும். அங்குதான் காலை உணவு
பழைய கஞ்சிக்கு தொட்டுக்கொள்ள மொச்சையும் கருவாடும் போட்ட புளிக்குழம்பு சுண்ட வைத்தது . மிகவும் சுவையாக இருப்பதாகச் சொல்வார்கள்.( சின்ன வயதில் நான் பெரும்பாலும் அசைவம் , கார உணவுகளைத் தவிர்த்து விடுவேன் ) கையினால் பந்தி பரிமாறும் அழகே தனி….அதற்காகவே அவர்களுக்கு பெரிய கைகள் அமைந்தது போல் தோன்றும்.
சில இடங்களில் ஏற மிகவும் சிரமமாக இருக்கும். அங்கெல்லாம் குதறத் குதறத் என்று ஒலி எழுப்பி இறைவனின் பாதுகாப்பைத்தேடுவோம்.குதறத் .என்ற ஒரு பறவை அந்தப் பகுதிகளில் இருப்பதாகச்சொல்வார்கள் .
10 மணிக்குள் மேலே போய் விடுவோம்.அதற்கு முன்பே சிலர் போய் மதிய உணவு தயாரிக்கும் பணியில் மும்முரமாக இருப்பார்கள்.தேங்காய துருவுவதில் சிறுவர்கள்  மிகவும் ஆர்வம் காட்டுவார்கள். காரணம் தெரிந்ததுதான்..
தர்கா சற்று தொலைவில தனியாக இருக்கும். அங்குள்ள சுனையில் எல்லோரும் குளிக்க வேண்டும், துணிகளை நனைக்க வேண்டும் என்பது ஒரு மரபு.தர்காவுக்கு மேல் கூரை இருக்காது. கட்டினாலும் தங்காது என்று ஒரு செவி வழிச் செய்தி சொல்கிறது
நிறைய குரங்குகள் திரியும். குறும்புச் சிறுவர்கள்.சோற்றுக்குள் கறித்துண்டை வைத்து குரங்குகளுக்கு வீசுவார்கள். வாயில் வைத்துப்பர்த்து விட்டு துப்பி விட்டு கோபத்துடன் முறைக்கும் .அந்தக்காலத்தில் குரங்குகள் சுத்த சைவமாய் இருந்தன .இப்போது எப்படி என்று தெரியவில்லை.இன்னும் சிலர் சோற்றில் இஞ்சித்துண்டை வைத்து வீசி இஞ்சி தின்ற குரங்கின் முக அழகைப் பார்ப்பார்கள்.
அங்குள்ள ஒரு மரத்தின் விதைகள் அழகிய இரண்டு சிறகுகளுடன் காணப்படும் (Winged Seeds). மேலே தூக்கிப் போட்டால் அழகாகப் பறக்கும்.. அதன் பெயர் சற்று வித்தியாசமாக இருக்கும்.(மாமியா மயிர் பிடுங்கி)
மேலே ஏறியதும் சிறுவர்கள் பலர் தங்கள் பெயர்களைப் பாறையில் செதுக்கத துவங்கி விடுவார்கள் (பல ஆண்டுகளுக்குப்பின் ஹஜ் பயணத்தில் அரபாத் மலைக்குன்றில் இது போல் பல பெயர்கள் செதுக்கப்பட்டிருப்பதைப் பார்த்தபோது எனக்கு பிரான் மலையின் நினைவு வந்தது..)
மலைப்பாறையில் அங்கங்கே கிடைக்கும் நிழலில் படுத்து மலைத்தென்றல் தாலாட்ட கண் அயர்வது  இயற்கையின் மடியில் உறங்குவது போல் ஒரு சுகமான அனுபவம்
ஒரு கடினமான பாதையைக் கடந்து வந்தால் ஊமைத்துரை ஒளிந்திருந்த ஒரு குகையைக் காணலாம் .பச்சைப் பசேலென்று மரம் செடி கொடிகளோடு மிக அழகாக இருக்கும்.
வள்ளல் பாரி பற்றிய குறிப்புகளோ , அவர் ஆட்சி புரிந்ததற்கான சின்னனங்களோ பார்த்த நினைவில்லை
பிரான் மலைக்கு அருகில் சதுர் வேதி மங்கலம் என்ற ஊரில் அத்தாவின் நெருங்கிய இளவயதுத் தோழர் சண்முக சுந்தரம் குடியிருந்தார்.. இவரைப்பற்றி பல வேடிக்கையான செய்திகளை அத்தா சொல்லக்கேட்டிறரூக்கிறேன். அத்தா பணியாற்றிய பல ஊர்களில் இவரைப் பார்த்த நினைவு 
பல தடவை பலருடன் பிரான் மலை ஏறியிருக்கிறேன், எப்போதும் நல்ல கோடையில் பள்ளி விடுமுறையில்தான் போவோம். என் நினைவில் நிற்பவற்றை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
மகன் பைசலுக்கு முடிஇறக்கப் போயிருந்தோம் .தலை முடி இறக்கப்பட்டவுடன் கண்ணாடியில் தன் தலையைக்கண்டு வியப்புடன் தடவித் தடவிப் பார்த்தான்.
ஜென்னத் அக்கா மகன் வகாபுக்கும் மும்தாஜ் அக்கா மகன் ராஜா(பீர்)வுக்கும் முடியிறக்க   பொள்ளாச்சியில் இருந்து போனதாக நினைவு..நகராட்சி ஊழியர் சுப்பிரமணி எங்களோடு வந்திருந்தார். இளைஞரான அவர் எதோ மாடிப்படியில் ஏறுவது போல் பல தடவை மலைமேல் ஏறி இறங்கியது வியப்பாக இருந்தது,
அதே போல் ராஜாவை(மெல்லிய பிள்ளை) அவன் வாப்பத்தம்மா கூலிக்கு குழந்தையைத் தூக்கி வரும் பெண்கள் யாரிடமும் கொடுக்காமல் தானே தூக்கி வந்தது மற்றொரு வியப்பு..முத்தலிப் அண்ணன் மடியில் உட்கார வைத்து இரு குழந்தைகளுக்கும் முடியிறக்கப் பட்டது .
ஒரு பயணத்தில் அம்மா சுக்கு மல்லி காபி குடிக்கக் கொடுத்த ஒரு ரூபாயை உறவினா ஒருவரிடம் கொடுத்து சுக்கு மல்லி காபி வங்கிக் குடித்து விட்டு அம்மாவிடம் சொல்ல அவரிடம் கொடுத்தால் மீதி வராதே என்று திட்டு வாங்கினேன்.(காபி விலை இரண்டு அல்லது மூன்று காசுகள் என நினைவு)
உறவினர் ஒருவர் கமிசனர் மக்கள்தான் மெஜாரிடியாகத் திரிகிறார்கள் என்று நக்கலாகச் சொல்ல  அருகில் இருந்த பீ.மு. மாமா தன்னை மறந்து  கோபத்தில் கண் சிவந்து சற்றும் சிந்திக்காமல் ஓங்கி ஒரு அறை விட்டதில் பொறி கலங்கி கண்ணீர் விட்டு நின்றார் அந்த நக்கலர். அவர் யார் என்று எனக்குத் தெரியாது. ஆனல் இன்றும் அவர் முகம் என் மனதில் படம்போல் தெளிவாகப் பதிந்து நிற்கிறது.(இது எந்தப் பயணத்தில் என்பது நினைவில்லை)
C H என்று அழைக்கப்படும் அமீது அண்ணன் நேர்த்திககடனுக்காக பிரான் மலை செல்ல ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கையில் அவர் மகன் அண்ணாதுரை வாகன விபத்தில் உயிரிழந்தது ஒரு சோக நிகழ்வு.
ஒரு முறை மலையேறி இறங்கி வந்த களைப்பு தீருவதற்குள் அன்று மாலையே எனக்கு .தம்பி சகாவுக்கு, மாமா மக்கள் சக்கரவர்த்தி, பீருக்கு சுன்னத் செய்ய ஏற்பாடு செய்தது அத்தாவின் அதிரடி நடவடிக்கைகளில் ஓன்று..மடமடவென்று ஆளுக்கு ஒரு புது வேட்டி துணி எடுத்து சட்டை தைத்து அரை மணி நேரத்தில் வாங்கப்பட்டது.-வெளிர் பச்சை நிறத்தில் மிக மெல்லிய சட்டைத்துணி என்பது இன்னும் நினைவில் நிற்கிறது.
வழக்கத்திற்கு மாறாக அரசு மருத்துவமனையில் செய்வதென்று முடிவு செய்து வயதில் மூத்தவரான சக்ரவர்த்திக்கு முதலில் செய்யப்பட்டது. அவர் அல்லா அல்லா என்று அலறியது சீதேவி தண்ணீரில் எதிரொலித்து ஊர் முழுதும்  அலை அலையாய் பரவியதில் எல்லோரும் அரண்டுபோய் மற்றவர்களுக்கு மரபுப்படி மாலியை வைத்தே செய்யப்பட்டது..
இறுதியாகப் பிரான் மலை போனது ஓன்று குப்பி மகன்  வக்கீல் ஜனாப்  அஜ்மீர் அலியுடன் போனது. அடுத்து மைத்துனர் பீர் முகமது தன் பிள்ளைகளுக்கு முடியிறக்கப் போனபோது
அதற்கப்புறம் எனக்குத்தெரிந்து சுற்றத்தில் யாரும் பிரான் மலை போன நினைவில்லை..தர்காகளுக்கு போகும் பழக்கமே நின்று விட்டதாகாச் சொல்ல முடியாது. எளிதாக செல்லக்கூடிய மற்ற இடங்களுக்குச் செல்கிறார்கள்.
ஒரு இனிய, எளிதான மலை ஏறும் அனுபவம் அடுத்தடுத்த தலை முறையினருக்கு கிடைக்காமல் போய் விட்டது. இது ஒரு மிகப்பெரிய இழப்பாக எனக்குத் தோன்றுகிறது.
ஒரு மலை ஏறும் பயிற்சி முகாம் என்றால் ஆயிரக்கணக்கில் செலவழித்து, அது போக சிறப்பு உடைகள் காலணிகள்,உபகரணங்கள் என்று வாங்க வேண்டியிருக்கிறது.. இது எதுவுமே இல்லாமல் எளிதாக எல்லா வயதினரும் மலை ஏறி இறங்கி வந்தோம்.. என் நினைவுக்கு எட்டி யாருக்கும் காயமோ மற்ற உடல் நலக் குறைவோ ஏறபடவில்லை.  
கடந்த பகுதி பற்றி மெகராஜ் அக்கா படித்து முடிக்கவில்லை என்று தெரிவித்திருந்தது  அந்தப்பகுதி அவ்வளவு சலிப்பூட்டியதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது குறைகளைத தெரிவித்தால் அவற்றைக் களைய முயற்சிப்பேன்.
மைத்துனர் சிராஜுதீன் பொருளும் நடையும் மிக நன்றாக இருக்கிறது என்று முக நூலிலும் தொலைபேசியிலும் பாராட்டினார். அவருக்கு நன்றி.
திருக்குறள் பற்றிய வினாவுக்கு  மெகராஜ் அக்காவிடமிருந்து “ஜோதியிடமே கேள் “ என்ற பதில் வினா வர “ஏற்கனவே கேட்டு விட்டேன் “ என்று பதில் சொல்லியிருந்தேன்,
மகள் பாப்டி தொடர் நன்றாகப் போவதாகவும் குறள் பற்றிய வினாவுக்கு விடை தெரியவில்லை என்றும் தெரிவித்தது பாராட்டுக்கு நன்றி
பேறுகாலம் என்பது ஒரு மாரத்தான் ஓட்டம் போல உடல்,மனம் உணர்ச்சிகள் அனைத்துக்கும் மிகபெரிய அளவில் சக்தி தேவைப்படும் ஒன்று., ஒரு நீண்ட தூர ஓட்டம் போல் உடலெங்கும் ஒரு மிகப் பெரிய அளவில் தாங்க முடியாத வலி ஏற்படும்.
அதற்கு மாற்றாக இறைவன் கொடுத்த வரம் –மூளையில் சுரக்கும் சில வேதிப்பொருட்கள் எண்டோர்பின்ஸ் ,பீட்டா எண்டோர்பின்ஸ் இவை போதை மருந்துகளைப்போல் உடல் வலியை மாற்றி ஒரு இனம் புரியாத பரவசத்தை மேனியெங்கும் பரவச் செய்கின்றன
இயற்கையின் போதைப்பொருட்களான( அபின் போன்ற )இவை குருதி ஓட்டத்தில் கலக்கும்போது ஏற்படும் அந்தப் பரவச இன்ப உணர்வுதான் வள்ளுவப் பெருந்தகை குறிப்பிடும் உவப்பு.
திருக்குறள் அறிவியல் சார்ந்தது என்பதைக் குறிப்பிடவே இந்த விளக்கம்.  .    
(வர்மக்கலை முதுநிலைப்படிப்பில் சிறப்பு சொற்பொழிவாற்றிய மருத்துவர் செம்மலின் உரையின் அடிப்படையில் வலையில் தேடிப் பிடித்தது }
இ(க)டைச்செருகல்
புட்டபருத்தி சாயி பாபா அறக்கட்டளை நடத்தும் கல்வி நிறுவனங்களில் ஆரம்பக் கல்வி முதல் முதுநிலைக்கல்வி வரை படிப்பு, உணவு உறைவிடம் அனைத்தும் கிட்டத்தட்ட முற்றிலும் இலவசமாகக் கிடைக்கிறதாம்.(சாதி மத பேதம் இல்லை ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லை என்கிறார்கள்))
ஏன் நாமும் அது போன்ற ஒரு முயற்சியில் இறங்கக்கூடாது? நல்ல முயற்சிகளுக்கு பணம் ஒரு பெரிய தடைக்கல் இல்லை .நூறு பேர் ஆளுக்கு ஆயிரம் ருபாய்  போட்டால் ஒரு லட்சம் .ஆயிரம் பேர் பத்தாயிரம் போட்டால் ஒரு கோடி. பத்தாயிரம் பேர் லட்சம் போட்டால் நூறு கோடி. 
இறங்கி வேலை செய்ய நம்மிடையே சமூக உணர்வு கொண்டவர்களுக்குப் பஞ்சம் இல்லை மழை வெள்ளத்தில் ராஜா நௌஷாத் ரபீக் இவர்களின் சேவையைப் பார்த்தோம். ஷஹா போன்ற கல்வியாளர்களும்..சேக் பீர் சாகுல் போன்ற சட்ட வல்லுனர்கள் நிறைய இருக்கிறார்கள் ,
தேவை ஒரு நல்ல துவக்கம் மட்டுமே. விதயைப்போட்டு வைத்தால் அது இறைவன் அருளால் ஆலமரம் போல் பரந்து விரிந்து இமயம் போல் உயர்ந்து வளரும்,
சற்று சிந்திப்போம் செயலில் துணிந்து இறங்குவோம்.
இந்தச் செய்தியை முகநூல், கட்டுரையில் பரப்பவும் கட்செவி குழு நிர்வாகிகள் தங்கள் குழுவுக்குப் பரப்பவும் வேண்டுகிறேன்,
(மலை பற்றி எழுதியதும் மனதில் உயந்த எண்ணங்கள் உதிக்கின்றனவோ?)
                                பயணம் தொடரும்

blog address

sherfuddinp.blogspot.com

Wednesday, 2 March 2016

வாழ்க்கைப் பயணமும் வங்கி அனுபவங்களும் 7..கோவை (கோயம்புத்தூர்) 2


போன பகுதி சற்று நீண்ட பயணமாக எனக்கே தோன்றியது,(அதன் வரிசை எண் 6 தவறுதலாக 7 என்று வந்து விட்டது. தவறுக்கு வருந்துகிறேன்).  அந்தப் பருவத்தின் நினைவுகள் மனதில் அதிகமாகப் பதிந்திருந்ததால் அப்படி என எண்ணுகிறேன். இந்தப்பகுதி அதன் தொடர்ச்சி அல்ல.நீண்ட இடைவெளிக்குப்பின் (முப்பது ஆண்டுகளுக்கு மேல்) நான் கோவை  வங்கியில் பணியாற்றிய காலம் பற்றியது இது.
ஈரோடு வங்கியில் கள ஆய்வுப்பணியில் (Field  inspection) மேலாளராகப் பணியாற்றிய எனக்கு கோவைக்கு மாறுதல் வந்தபோது  அதே பணிதான் என்று எண்ணியிருந்தேன்.ஆனால் சில நாட்களுக்குப் பிறகு கவுண்டம்பாளையம் கிளையில் இரண்டாம் நிலை மேலாளராக மாறுதல் ஆணை வந்தது..உடனே கோவை உதவிப் பொது மேலாளரை சந்தித்து எனக்கு இரண்டாம் இடத்தில பணி புரிய விருப்பம் இல்லை எனத் தெரிவித்தேன்.வழமை போல மிகக் கனிவாக என்னோடு உரையாடிய மேலதிகாரி “பொறுப்புகளை ஏற்க விரும்பும் உங்கள் எண்ணம் பாராட்டுக்குரியது,. ஆனால் இந்த ஆண்டு மாறுதல்கள் எல்லாம் முடிவுற்றுவிட்டன அடுத்த ஆண்டு பார்த்து செய்கிறேன் “ என்றார்.
இதுதான் எங்கள் வங்கியின் சிறப்பு .எனக்குத் தெரிந்து மூன்று பேர் என் இடத்துக்கு வர விருப்பம் தெரிவித்தனர்.நிர்வாகம் மனது வைத்திருந்தால் என் விருப்பத்தையும் அவர்கள் விருப்பத்தையும் நிறைவு செய்திருக்கலாம் ..நிர்வாகத்துக்கு மிக நெருக்கமாக இருக்கவேண்டும் அல்லது அலுவலர் சங்கத்தில் பதவியில் இருக்க வேண்டும் அப்போதுதான் நம் விருப்பப்படி மாறுதல் கிடைக்கும்.
கோவை வந்து கவுண்டம்பாளையம் கிளையில் சேர்ந்தாயிற்று.. வீடு பார்கக வேண்டும் மகளுக்கு கல்லூரியில் இடம் வாங்க வேண்டும் மகன் C A பயிற்சி பெற ஒரு கணக்காயரை ஏற்பாடு செய்ய வேண்டும்.
வீடு உடனே கிடைக்கததால் சுமார் ஒரு மாத காலம் ஈரோடில் இருந்து கோவைக்கு தினமும் வந்து சென்றேன் (போக வர 200 கி மீ) வங்கிக்கு தொடர்புடைய கணக்காயர் ஒருவரை முது நிலை மேலாளர் அறிமுகப்படுத்தி வைத்ததில் பையன்  பிரச்சனை முடிந்தது (?) வீடு தேடுவதில் வங்கியில் எழுத்தராக இருந்த சசிகலா ,அவர் துணைவர் ,,தின வசூல் முகவர் அந்தோணி மூவரும். மிகவும் உதவியாக இருந்தனர்.
ஒரு வழியாக ரத்தினபுரி பகுதியில் ஒரு வீடு பார்த்துக் குடியேறினோம்..மேல் தளத்தில் உரிமையாளர் குடும்பம்.மிகவும் நல்லவர்கள். நகராட்சி நீர் குழாய்க்கு பூட்டு போட்ட விந்தையை அங்குதான் கண்டேன் செல்லமாக ஞமலி என்று பெயர் வைத்திருந்தோம்.உரிமையாளரைப் பார்க்க வந்த அவர்கள் உறவுப்பெண்  எங்களைப்பார்த்து “ நான் ஒவ்வொரு முறை இங்கு வரும்போதும் வேறு வேறு குடித்தனக்காரர்களைப் பார்க்கிறேனே அது ஏன்” என்றார்.. அந்தப் மரபைப் பின்பற்றி நாங்களும் விரைவில்  வேறு வீட்டுக்குக் குடி போய் விட்டோம்.
அது சிறிய அழகான வீடு.,தோட்டம் பெரிய gate மகிழுந்து  நிறுத்த இடம் பின்னால் துணி துவைக்க , பாத்திரம் கழுவ என்று தனித்தனியாக இடம். எல்லாவற்றிற்கும் மேலாக வீடு தனி வீடு உரிமையாளர் அருகில் இல்லை..கோவைக்கே உரிய தண்ணீர் பற்றாக்குறை அங்கும் இருந்தது.. மற்றபடி வீடு மிகவும் பிடித்துப் போயிற்று.
அந்த வீட்டில் முன்பு குடியிருந்தவர் கம்பிவட (கேபிள்) இணைப்பு வைத்திருந்தார். சில நாட்கள் அதை இலவசமாகப் பார்த்தோம்.அப்போது இரவில் தமிழ் தொலைக்காட்சியில் வந்த காட்சியைப் பார்த்து விட்டு, வீட்டில் பிள்ளைகள் இருக்கும் வரை கம்பி வடம் வேண்டாம் என்று தீர்மானித்து அதை நிறைவேற்றவும் செய்தேன்.
மகள் பாப்டிக்கு கல்லூரியில் இடம் கிடைக்காததால் ஒரு ஆண்டு படிப்பில் இடைவெளி. அந்த ஒரு ஆண்டும் பாப்டி வீட்டு வேலைகளில் மிக முனைப்பாக பங்கெடுத்தது வியப்பாக இருந்தது. அந்த இடை வெளி இன்னும் அப்படியே இருப்பது எனக்கு ஒரு மனக்குறை.ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப்படிப்பு இரண்டாம் ஆண்டோடு திருமணம் ஆகி விட அதற்கப்புறம் படிக்கவே இல்லை.
கோவையில் இருக்கும்போது சோலாப்பூரில் இருந்த மைத்துனி சர்மதா வீட்டுக்குப் போய் சில நாட்கள் தங்கி வந்தோம் சர்மதாவும் துணைவர் அயுப் கானும் அன்போடு உபசரித்தார்கள். சோலாப்பூரின் சிறப்பு அம்சமான படுக்கை விரிப்புகள் நிறைய வாங்கி வந்தோம்.
கோவையிலும் அருகாமையிலும் சில பல உறவினர்கள் இருந்தார்கள். முதலில் இருந்த வீட்டுக்கு மிக அருகில் கரீம் அண்ணனின் மைத்துனரும் சம்பந்தியுமான வணிகவரி அதிகாரி ஜனாப் சாகுல் அமீது வீடு.புது வீட்டுக்கு அருகில் ஜமால் அண்ணன் மகன் வீடு.விமானப்படை அதிகாரிகள் குடியிருப்பில் பெரியத்தா மகன் அஜ்மல்,சுண்டக்கா முத்தூரில்  சுல்தான் மாமா மகள் ரசீதா(இசுமாயில்) அதற்கு சற்று அருகில் பெரியத்தா மகன் தல்லத், சரிவு மாமா மகன் பீர் முகமது சிட்கோவில் பெரிய முத்தக்கா மகள் பர்சான (பசீர்). அடிக்கடி இல்லாவிட்டாலும் அவ்வப்போது சந்திததுக் கொள்வோம். .
நான் முன்பே குறிப்பிட்டபோல் இரண்டாம் நிலை மேலாளராக பணி புரிவதில் எனக்கு விருப்பம் இல்லை. அதோடு சேர்ந்து எனக்கும் முதுநிலை மேலாளருக்கும் அடிக்கடி கருத்து ஓவ்வாமை ,ஏற்பட்டது..ஒரே ஒரு எடுத்துக்காட்டு – ஒரு நாள் அவருடைய காரில் வட்டார அலுவலகத்திற்கு அலுவலக வேலையாகச் சென்றோம்..காரை விட்டு இறங்கியவுடன் அவருடைய brief case  ஐ  என்னிடம்  நீட்டினார். நான் மௌனமாக என் மறுப்பையும் வெறுப்பையும் வெளிக்காட்டினேன்  (அவரைச் சொல்லிக் குற்றம் இல்லை எனக்கு முன் இருந்த இ.நி. மேலாளர் இது போல் ஊழியம் பல செய்வாராம்) என்னை வேறு இடத்துக்கு அதுவும் மலைப்பகுதிக்கு மாற்ற மிகவும் விரும்பினார். ஆனால் அவருக்குத்தான் கடல் பகுதிக்கு அருகில் மாற்றல் வந்தது.
அதற்கு அடுத்து வந்த மு.நி.மே.திரு இராசாராம். அவருக்கும் எனக்கும் எண்ணங்கள் ஒரே அலை வரிசையில் இருந்தன. குறிப்பாக நேர்மை ,சபலங்கள் இல்லாமை. மிகக்கடுமையாக உழைக்கும் அவரோடு ஒத்துப்போவது எல்லோரும் பயமுறுத்திய அளவுக்கு எனக்கு சிரமாக இல்லை.
அலுவலகப் பணியில் ஏற்பட்ட சில இடுக்கண்களைக் களைய அவருக்கு நான் உறு துணையாக நின்றேன்.
அவருடன் பணி புரிந்த காலத்தில் எனக்கு முது நிலை மேலாளராகப் பதவி உயர்வு கிடைத்தது. நெல்லை மாவட்டம் ஏருவாடிக்கு மாற்றலும் வந்தது.
கோவைக்கு முத்தலிப் அண்ணனும் ஜென்னத் அக்காவும் வந்து ஓரிரு நாட்கள் தங்கிச் சென்றார்கள்.
 தானி(ஆட்டோ)யை கிட்டத்தட்ட வீட்டுக்குள்ளேயே வந்து நிறுத்தி அக்காவை இறக்கி விட்டதும் காரில் கடைத்தெருவில் எல்லோரும் போய்க்கொண்டிருக்கையில் காரில் மின் கோளாறினால் சிறிய தீப்பொறியும் புகையும் வந்தவுடன் மிகப்பதற்றமாக அக்காவை இறக்கி விட்டதும் அண்ணன் அக்காவின் மேல் கொண்ட அதீத அக்கறையையும் பாதுகாப்பு உணர்வையும் வெளிப்படுத்தின.. காந்திபுரத்தில் உள்ள ஒரு மிகக் கறாரான  வணிக நிறுவனத்தில் பேரம் பேசி விலை குறைத்து வாங்கியதில் அண்ணனின் நாவன்மையைக் கண்டு வியந்தேன்.
அக்கா ,அண்ணன் தங்கிய  தினங்கள் இனிமையாகக் கழிந்தன. சென்னைக்குப் புறப்படும் நேரத்தில் தொடர் வண்டி பயணச்சீட்டு தொலைந்து போனது ஒரு பதற்றத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியது.
முஸ்தபா அண்ணனிடமிருந்து எதிர்பாராத ஒரு மடல் வந்தது, முத்தக்காவின் சார்பில் எங்கள் வீட்டில் பெண் கேட்பதாக அதில் எழுதியிருந்தது. எனக்கு உண்மையிலேயே ஒன்றும் புரியவில்லை. பாப்டியின் திருமணம் பற்றி நாங்கள் சிந்தித்ததே கிடையாது.. இது வரை ஒரு சேலை கூட வாங்கியது கிடையாது. பட்டப்படிப்பு முடிந்து விரும்பினால் மேல் படிப்பில் சேர்ப்பது அப்படி இல்லாவிட்டாலும் பட்டம் வாங்கி ஒரு ஆண்டு கழிந்துதான் திருமணம் கூடிய மட்டும் சொந்தம் அல்லாத இடத்தில் பார்ப்பது என்று எண்ணியுருந்தோம். அதற்கேற்றாற்போல் பணத்திற்கும் ஓரளவு திட்டமிட்டிருந்தேன்.
ஆனால் இறைவன் நாட்டம் வேறாக இருந்தது  எல்லாத்திக்குகளிலும் பல விதமாக உடனே திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள அழுத்தங்கள் வந்தன..வங்கி முது நிலை மேலாளரும் பத்தாம் வகுப்பு படிக்கும் தன் மகளுக்கு இப்படி ஒரு நல்ல பையன் வந்தால் உடன் சம்மதம் தெரிவித்திருப்பேன்  என்று சொன்னார்.. இதற்கிடையில் திருமணம் உறுதி செய்யப்பட்டு விட்டாதாக பரவலாக ஒரு செய்தி பரவ ஆரம்பித்தது. (கட்செவி, முகநூல்  இல்லாத அந்தக் காலத்திலேயே it went viral)
பல குழப்பங்கள் நெருக்கடிகள் எல்லாவற்றையும் தாண்டி திருமணம் இறையருளால் நான் ஏருவடியில் பணியாற்றியபோது சிறப்பாக நிறைவேறியது.
சையது சச்சா கோவை வந்திருந்தபோது ஒரு சாப்பாட்டு பேசன் நிறைய இருந்த பஜ்ஜியை தனியாகத் தின்று முடித்தது பல கிண்ணஸ் சாதனைகளில ஒன்று.(அடுத்த நாள் முழுப்பட்டினி)  
வீடு தேடும் போது வங்கி ஊழியர் ஒருவர் தமக்குத் தெரிந்த ஒரு தமிழ் அறிஞர் வீடுகள் கட்டிஇருக்கிறார் பார்க்கலாம் என அழைத்துச் சென்றார் .அவர் தொலைகாட்சியிலும் பட்டி மன்றங்களிலும் மனித நேயம், மனிதம் பற்றி சிறப்பாகப் பேசுபவர். (அவர் தந்தை வானொலி வாயிலாக எல்லோருக்கும் தெரிந்தவர் ) அந்த மனித நேயர் உட்காரக்கூடச் சொல்லவில்லை மிகக்கண்டிப்பான குரலில் இரண்டாயிராம் ரூபாய் வாடகை இருபதாயிரம் ரூபாய் அட்வான்ஸ் அல்லது மொத்தமாக ஒரு லட்சம் .இதைத்விர வேறு பேச்சு இல்லை என்று கிளி மொழியில் சொன்னார். மேடைப்பேச்சு வேறு நடைமுறை வேறு என்பதை முதன் முறையாக உணர்ந்தேன்.
வேதாத்ரி மகரிஷியின் வாழ்க வளமுடன் இயக்கத்தில் எளிய உடற்பயிற்சி, ,எளிய குண்டலினி யோகா. காயகல்ப பயிற்சி படித்தேன்.’சாயி பாபா குடியிருப்பில் அமைந்துள்ள அறிவுத் திருக்கோயிலுக்கு வாரம் மும்முறை பயிற்சிக்காகப போவேன். பயிற்சி முடிந்து திரும்புகையில் உடலும் மனமும புத்துணர்வு பெற்று பறப்பது போன்ற ஒரு பரவசம் ஏற்படும்..இருந்தும் தொடர்ந்து பயிற்சிக்குப் போகாமல் நிறுத்தி விட்டேன். காரணம் அடுத்தடுத்த உயர் நிலைப் பயிற்சிகளுக்குப் போகும்போது மனதில் ஒரு ஆணவம் ஏற்படுவதை என்னால் நன்கு உணர முடிந்தது. குடும்பத்தை விட்டு சற்று விலகிப்போவது போல் துணைவி உணர்ந்தார் .மேலும் ஒரு நிலையில் சில நாட்களுக்கு தொழுகையை நிறுத்தச் சொன்னார்கள். சரி கற்ற வரை நம் உடல் நலத்தைப்பேண போதும் என்று நிறுத்தி விட்டேன்.
ஈஷா இயக்கத்தின் நிறுவனர் எங்கள் வங்கிக்கு அவ்வப்போது வருவார். நல்ல உயரம். இளைஞராக இருந்த அவர் தம் இயக்கம் பற்றி தகவல் தாள்களைக் கொடுத்துச் செல்வார்.
பூந்தமல்லியில் உள்ள என் வீட்டில் குடியிருந்தவர் என் மேல் வழக்குத் தொடந்ததும் நான் கோவையில் பணி புரிந்த போதுதான்.. சொந்த வீடு என்ற தலைப்பில் நான் இது பற்றி விவரித்துள்ளேன்  (sherfuddinp.blogspot.com)  
.கடந்த பகுதி பற்றி கருத்துக்கள் ,பாராட்டுக்கள் தெரிவித்த உடன் பிறப்புக்களுக்கும் ஐயத்திற்கு விடை அளித்த இதயத்திற்கும் நன்றி. ஜோதி அக்கா அம்மாவைப்பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லை என்று கருத்து (தொலைபேசியில்) தெரிவித்தது.
 ஒரே வரியில் சொல்வதென்றால் குன்றில் இட்ட விளக்காய் ஒளி வீசிய அத்தாவுக்கு திரியாய் நெய்யாய் இருந்து சக்தி கொடுத்தது அம்மாதான். அம்மாவின் எண்ணத்திற்கேற்பவே அத்தாவின் முடிவு அமையும்.. அப்படி இல்லாவிட்டால் அது தவறான முடிவென்று காலப்போக்கில் தெரியும்.  அம்மா அத்தா பற்றி விரிவாகத் தனியாக எழுத எண்ணியுள்ளேன் (இன்ஷா அல்லா()
போந்தாகோழியும் வெள்ளைக் கோழியும் வேறு வேறு இனம் என எண்ணுகிறேன்
.இந்தத்தொடரில் காரைக்குடி பற்றி இனிமேல்தான் எழுதுவேன்..
நினைவுச் சாலையில் நிதானமாகப் பயணித்து பழைய இனிய நினைவுகளை அசை போடுவதுதான் (a stroll down memory lane) இத்தொடரின் முதன்மை நோக்கம். சுராஜின் கருத்தில் இருந்து அது ஓரளவு நிறைவேறியதை அறிந்து மிக்க மகிழ்ச்சி.
மரம் செடி கொடி பற்றி என் ஐயம் இன்னும் தீரவில்லை. 78% Nitrogen, 21% oxygen இதெல்லாம் தெரிந்த கணக்குத்தான்) . தொலைபேசியில் இதயத்துடன் பேசிய பின் இதன் கருத்துப் பரிமாற்றம் தொடரும்.
கடைச்செருகல் :எல்லோருக்கும் தெரிந்த குறள்
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் ..............தாய்.
 ஈன்ற பொழுதில் வலிபற்றி அறிவோம். அது என்ன உவப்பு? அறிந்ததைப் பகிரலாம். இதற்கான அறிவியல் விளக்கம் அடுத்த பகுதியில்          
பயணம் தொடரும்

  Blog address
sherfuddinp.blogspot.com