Thursday, 21 April 2016

வாழ்க்கைப்பயணமும் வங்கி அனுபவங்களும் 12.கண்டது கேட்டது உணர்ந்தது படித்தது

வாழ்க்கைப்பயணமும் வங்கி அனுபவங்களும் 12.கண்டது கேட்டது உணர்ந்தது படித்தது
22042016
பயணம் அலுப்புத் தட்டாமல் இருக்க அவ்வப்போது இடைவெளி தேவைப்படுகிறது.. இந்தப்பகுதியில் நினைவில் நிற்கும் நகைச்சுவைகள் துணுக்குகள் போன்றவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன்.
ஒரு நகைச்சுவை- நீண்ட நாட்களுக்கு முன் குமுதத்தில் வந்தது என எண்ணுகிறேன்:
ஒரு பல் மருத்துவ மனையில் .நோயாளி இருக்கையில் மயங்கிய நிலையில் சாய்ந்திருக்கிறார். மருத்துவர் நினைக்கிறார். “ அடடே பல்லைப்  பிடுங்குவதற்குப்பதில் நாக்கைப்பிடுங்கி விட்டேனே . பணம் தருவானோ மாட்டானோ தெரியலையே “
சாவி (ஆம் அப்படி ஒரு வார இதழ் இருந்தது )யில் வந்தது:
“ஏன் வெற்றிலையின் நடுவில் சுண்ணாம்பு தடவாமல் ஓரத்தில் தடவுகிறீர்கள்?”
“எனக்குக் கை கொஞ்சம் குட்டை . நடுவில் தடவ எட்டாது “..
விகடன் புகழ் பெற்றதே அட்டைப்பட சிரிப்புகளாலும் தொடர் கதைகளாலும்தான்,.
(இரண்டு வாரங்களுக்கு முன் வந்த விகடனைப் படித்த எனக்கு யதார்த்தம் என்ற போர்வையில் ஏன் இப்படி விகடன் தரம் தாழ்ந்து போனது என எண்ணத் தோன்றியது. பீப் பிரியாணி என்ற சிறு கதை ஒவ்வொரு சொல்லும் வரியும் குமட்ட வைக்கும் அளவுக்கு அருவெறுப்பு . கதையைப் படித்து முடித்தால் வாந்தி எடுத்து விடுவோம் என்ற எண்ணத்தில் பாதியிலேயே நிறுத்தி விட்டேன், அடுத்து துபாய் பாச்சிலர் என்ற கவிதை (?) ஆபாசத்தை அள்ளித் தெளித்தது போல் இருந்தது, விகடன் வாங்குவதையே நிறுத்தி விட எண்ணுகிறேன் இந்த வாரம் வெளியான காதல் 2086 சிறுகதை படிக்கவே ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்துகிறது)
பழைய விகடனில் வந்த அட்டைப்பட சிரிப்பொன்று :
தென்னை மரத்தில் இரண்டு பேர் காய் பறிக்க ஏறிய நிலையில் அந்த மரத்தை யானை ஓன்று வேரோடு பறித்து தூக்கிக்கொண்டு ஓடுகிறது.. அப்போது மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒருவர் இன்னொருவருக்கு ஆறுதல் கூறுகிறார்
“அண்ணே கவலைபடாதீங்க யானைக்கு மரம் ஏறத் தெரியாது “
இன்னொரு விகடன் அட்டைப்பட சிரிப்பு
“என்ன அடுப்பைப் பத்த வைக்காமல் சமையல் பண்றே ?”
“சமையல் புக்கில் அடுப்பைப் பற்ற வைக்கச் சொல்லவில்லையே “ 
அத்தா அருப்புக்கோட்டையில் பணியாற்றியபோது (அப்போது நான் பிறக்கவில்லை) வீட்டுக்கொல்லையில் நிறைய தக்காளிச்செடி குப்பை போல வளர்ந்து பழங்கள் நிறைந்து நிற்குமாம். இதை சமையலுக்கு பயன் படுத்தலாம் என்று யாரோ அம்மாவிடம் சொல்ல அதெல்லாம் தெரியாத பொருட்களை சமைக்க முடியாது என்று மறுத்து விட்டதாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன். இன்றோ தக்காளி இல்லாமல் சமையலே இல்லை எனும் நிலை..
சச்சாவின் புகழ் பெற்ற ‘ஒரு மொளகா’ நிகழ்வும் அருப்புக்கோட்டையில்தான் என நினைவு.. விருந்தாளிகள் வந்ததால் பரபரவென சமைத்துக் கொண்டிருந்த அம்மா பச்சை மிளகாய்களை சச்சாவிடம் கொடுத்து இரண்டிரண்டாக கிள்ளித் தரும்படி சொல்லி விட்டு சமையலைக் கவனித்துக் கொண்டிருக்கையில் திடீரென ஒரு  உரத்த குரல் ஒலித்தது “ அக்கா ஒரு மொளகா மிஞ்சிப் போச்சு “ ஒன்றும் புரியாமல் அம்மா போய்ப் பார்த்தால் மிளகாய்களை இரண்டிரண்டாக தொடர் வண்டி போல் அடுக்கி வைத்து விட்டு ஒரு மிளகாய் மிஞ்சியதால் அதை என்ன செய்வதென்று புரியாமல் குரல் கொடுத்திருக்கிறார்.

வெளியூர் பேருந்துகள் அரசு அலுவலர்கள் வீட்டு வாசலில் காத்துக்கிடந்து அவர்கள் ஏறிய பின்தான் புறப்படுமாம் அருப்புக்கோட்டையில் .
Readers Digest  எனும் ஆங்கில மாத இதழ் பலருக்கும் நினைவிருக்கலாம். ஒவ்வொரு இதழும் ஒரு கலைக்களஞ்சியம் போன்று துணுக்குகள்      உண்மைச் சம்பவங்கள் நகைச்சவைகளை உள்ளடக்கியதாக இருக்கும் . ஒரு இதழை முழுதாகப் படிக்க ஒரு மாதம் போதாது. பொதுவாக வார மாத நாளிதழ்கள் இத்தனை பிரதிகள் விற்கிறோம் என்று விளம்பரம் செய்வது வழக்கம் .ஆனால் Readers Digest  சற்று மாறுபட்டு இத்தனை பிரதிகள் வாங்கப்படுகின்றன என்று போடுவார்கள். பொருளாதார நெருக்கடியால் சில ஆண்டுகளுக்கு முன் அந்த இதழ் நிறுத்தப்பட்டது.
அதில் வந்த ஒரு துணுக்கு. : அமெரிக்காவில் ஒரு மருத்துவர் தன் மருத்துவ மனையில் நீர்க்குழாயில் ஏற்பட்ட ஒழுக்கை சரி பண்ண குழாய் சரி செய்பவரைக்கூப்பிட்டார் . விலை உயர்ந்த மகிழுந்தில் வந்த அவர் ஐந்து நிமிடத்தில் வேலையே முடித்து விட்டு நூறு டாலர் கூலி கேட்டார். மருத்துவர் நானே இவ்வளவு தொகை  வாங்குவதில்லையே என்றார். அதற்கு குழாய்ககாரர்  ஐயா நானும் உங்களைப்போல் தகுதி வாய்ந்த மருத்துவர்தான் . அந்தத் தொழில் கட்டு படியாகமல்தான் இந்த தொழிலுக்கு வந்து நிறைய சம்பாதிக்கிறேன் என்றாராம் .
Readers Digest   இதழில் Drama in real life  என்ற தலைப்பில் வெளியான ஒரு உண்மைச் சம்பவம் இன்னும் என் மனதில் நிற்கிறது. பல பக்கங்களில் வந்த அதை சுருக்கமாக இங்கே தருகிறேன். மூழ்கும் நிலையில் இருக்கும் கப்பல் ஓன்று எங்களைக் காப்பாற்றுங்கள் என்று செய்தி அனுப்புகிறது..அந்தச் செய்தியைப் பெற்ற மீட்புப்பணிக் கப்பல் ஓன்று மூழ்கும் கப்பலை நோக்கி விரைகிறது..மூழ்கும் கப்பல் உண்டாக்கும் சுழல்களால் மீட்புக் கப்பல்  ஒரு அளவுக்கு மேல் நெருங்கிப் போகமுடியாது. மீட்புக் கப்பல் தலைவர் நான்கு இளம் வீரர்களை அழைத்து அவர்களிடம் மீட்புப் பணியை ஒப்படைத்து அவர்களில் ஒருவரை குழுத்தலைவராய் நியமித்து அவரிடம் சொல்கிறார் “உங்களுக்கு வேண்டிய படகுகள் இதர கருவிகள் தேவைப்பட்டால் அதிக வீரர்களை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லி விட்டு “விசைப் படகா கைப்படகா என்பதையும் உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன் “ என்று முடித்து விட்டார்.
பலமணி நேரக் கடுமையான, மிகக் கடுமையான போராட்டத்திற்குப் பின் மூழ்கும் கப்பலில் உள்ள அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப் பட்ட பின் மூழ்கும் கப்பல் மூழ்கிய கப்பலாகி விட்டது.
மீட்புக் கப்பலின் தலைவர் குழுத் தலைவரிடம் குழுவின் வீரம் , தீரம் , விடா முயற்சி உயிரைப்பணயம் வைத்த துணிச்சல் அனைத்தையும் மனதாரப் பாராட்டுகிறார். இறுதியில் சொல்கிறார் “ விசைபடகைத் தவிர்த்து , கைப்படகை எடுத்துச் சென்றது மிகத் துணிச்சலான மிகச் சரியான முடிவு . உங்கள் குழுவின் வெற்றிக்கு இந்த முடிவு பெரிதும் பங்களித்தது “ என்கிறார்.
அப்போதுதான் குழுத் தலைவருக்கு ஒரு மிகப் பெரிய உண்மை புலப்படுகிறது.  விசைப் படகை எவ்வளவு முயன்றாலும் அதன் சக்திக்கு மேல் இயக்க முடியாது .கைப்படகு அப்படியல்ல . மனிதன் தன் வலிமை, முயற்சிககேற்ப சூழ்நிலைக்கேற்ப  மிக வேகமாக இயக்க முடியும். இது அனுபவம் கற்றுத்தரும் ஒரு படிப்பினை.
அத்தா பயணத்திற்காக மாட்டு வண்டி வாங்கியதும் அருப்புக்கோட்டையில்தான்  என நினைக்கிறன். அலுவலக வேலையாகமாட்டு வண்டியில் பயணிக்கும்போது கடை நிலை ஊழியரை(Peon) வண்டி ஓட்டச் சொல்வது வழக்கம். இது பெரிய குற்றம் போல் மன்ற உறுப்பினர்களால்(கவுன்சிலர்ஸ்) பேசப் பட்டு  இது பற்றி மன்றம் ஒரு மடலும் வரைந்து மாநில அரசுக்கு அனுப்பி வைத்தது. இது பற்றி அரசு அத்தாவிடம் விளக்கம் கேட்க அதற்கு அத்தா அனுப்பிய மறுமொழி மடல்தான் இந்த நிகழ்வின் உச்ச கட்டம்::
“அரசு அதிகாரி என்ற முறையில் அலுவலகப் பணிக்காக வெளியே செல்லும் போது ஒரு கடை நிலை ஊழியரை என்னுடன் அழைத்துச் செல்ல எனக்கு அனுமதி உண்டு.
என்னிடம் உள்ள வாகனமான மாட்டு வண்டியை பயன் படுத்தவும் எனக்கு அனுமதி இருக்கிறது.
`வண்டிக்கு ஒரு வண்டிக்காரர் (ஓட்டுனர்) வைத்துக் கொள்ளும் அளவுக்கு எனக்கு வசதி இல்லை.
இந்த நிலையில் ஓன்று நான் வண்டிக்குள் உட்கார்ந்து கொண்டு ஊழியரை ஓட்டச் சொல்லலாம். அல்லது ஊழியரை வண்டிக்குள் உட்கார வைத்து நான் வண்டியை ஓட்டலாம்.
இதில் எது  சரி என்று அரசு கருதுகிறதோ அதன் படி நான் செயல் படுகிறேன்”
இப்படி ஒரு மறுமொழியினால் வாயடைத்துப் போன அரசு “ அரசு அதிகாரிகள் அலுவல் நிமித்தமாய் தங்கள் மாட்டு வண்டியில் பயணிக்கும்போது கடை நிலை ஊழியரை வண்டி ஓட்டப் பயன்படுத்திக் கொள்ளலாம் “  என்ற ஒரு பொது ஆணையே பிறப்பித்ததாம் .
தொடர் கதைகளில் முதலில் நான் படித்தது சுஜாதாவின் நைலான் கயிறு என்று நினைக்கிறன்- குமுதத்தில் வந்தது..விறுவிறுப்பான நடை, நல்ல கதை, ஒரு மாறுபட்ட கதை சொல்லும் பாணி எதிர் பாராத முடிவு- இன்னும் மனதில் நிற்கிறது.
குமுதத்தின் திரைப்பட விமர்சனங்கள் வாசகர்களால் விரும்பிப் படிக்கப்படும். ஒரு படத்திற்கு கதாநாயகியின் படத்தைப் போட்டு –இவர்தான் கொஞ்சப்படுபவர் என்றும் நாயகனின் படத்தைப்போட்டு –இவ்ர்தான் கொஞ்சுபவர் என்றும் காதில் பூ சுற்றப்படுபவர்கள் ரசிகர்கள் என்றும் சுருக்கமாக முடித்திருந்தது. (படம்-கொஞ்சும் குமரி)
இன்னொரு படம் –பெயர் மறந்து விட்டது- படத்தில் இருவர் பேசிக்கொள்ளும்  ஒரு காட்சியைப்போட்டு   ------------------படத்தைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள் என்று போட்டு அடுத்து படத்தில் ஒருவர் மற்றவர் சட்டையைப் பிடிக்கும் காட்சியை போட்டு “அதைப் பற்றிக் கேட்டால் கொன்று விடுவேன் “ என்று சொலவது போல் போட்டு  முடித்து விட்டார்கள். தாய் மகளுக்கு கட்டிய தாலி என்ற படத்திற்கு வெட்கக்கேடு என்ற ஒரு சொல் விமர்சனம்.
குமுதத்தில் வந்த இன்னொரு சிரிப்பு
வீட்டுக்கு வந்த விருந்தாளியிடம் வீட்டுக்காரர் இதை உங்கள் வீடாக நினைத்துக் கொள்ளுங்கள் என்கிறார். அடுத்த நொடி படாரென்று ஒரு ஓசை –வீட்டுக்காரரை உதைத்து வெளியேற்றி விடுகிறார் விருந்தாளி.
அம்புலி மாமா என்ற சிறுவர் இதழ் இப்போது வருகிறதா என்று தெரியவில்லை) .அதில் வரும் விக்ரமாதித்யன், வேதாளம் கதை படிக்க நன்றாக இரூக்கும். ஒவ்வொரு பகுதியும் ஒரே மாதிரி- தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன்- என்று துவங்கி- இந்தப் பதிலால் விக்கிரமாதித்தன் மௌனம் கலைந்ததால் வேதாளம் மறுபடி முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது. -என்று முடியும்.
இந்தக்கதையின் இறுதிப்பகுதிதான் இயக்குனர் பாலச்சந்தரின் அபூர்வ ராகங்கள் படத்தின் கரு (பதிலேதும் இல்லாத கேள்வி)
அத்தா அடிக்கடி சொல்லக்கேட்ட ஒரு நகைச்சுவைத் துணுககுடன் இந்தப்பகுதியை நிறைவு செய்கிறேன்”
மிக ஐதீகமான ஆசாரமான ஒரு குடும்பத்தில் பெண் பார்க்க பையன் வீட்டார் வந்திருக்கிறார்கள். பெண்ணின் அப்பா மெதுவாகத் தயங்கியபடி பையனைப்பற்றி விசாரிக்கிறார்.. “மாப்பிள்ளை வெங்காயம் சாப்பிடுவாரா ?” (வெங்காயம் சாப்பிடுவதே ஒரு  பாவமாகக்கருதும்  ஆசாரம்). பையனின் நண்பன் மிக அலட்சியமாக - எப்போவாவது நான் வெஜ் சாப்பிடும்போது வெங்காயம் சேரும் -
“ஐயையோ நான் வெஜ் எல்லாம் சாப்பிடுவாரா “
-ஏன் பதறுகிறீர்கள் இருக்கிற விலை வாசியில் டெய்லியா நான் வெஜ் சாப்பிட முடியும்?  எப்போதாவது தண்ணி போடும்போது மட்டும்தான் நான் வெஜ் சாப்பிடுவார் –
“கடவுளே தண்ணிப் பழக்கமும் உண்டா!”
-பெரியவரே நீங்கள் பயப்படும் அளவுக்கு மொடாக்குடியர் இல்லை. எப்போதாவது சீட்டாடும்போது மட்டும்தான் தண்ணி போடுவார் ;-
“எனக்கு தலை சுற்றுகிறது ஒன்னொன்னாகச் சொல்லாமல் மொத்தமாகச் சொல்லி முடியப்பா” என்றார்
-நீங்கள் நினைப்பது போல் ஒன்றும் இல்லை ,எப்போதாவது இரவு விடுதிக்குப் போகும்போது மட்டும் சீட்டாடுவார்.
அடிக்கடி இரவு விடுதிக்குப் போகமாட்டார்.. எப்போதாவது ஜெயிலை விட்டு வெளியே இருக்கும்போது மட்டும்தான் போவார் .அவ்வளவுதான்,-

  ஏறுவாடி பகுதியில் கேட்ட வினாக்களில் முதல் வினாவிற்கு யானை என்ற  சரியான விடை அளித்த இதயத்திற்குப் பாராட்டுக்கள்..;நெய்வேலி ராஜா (புதிய வாசகர்) கதையின் நடையைப் பாராட்டி பழைய பகுதிகளுக்கு மறு பதிப்பு உண்டா என்று கேட்டிருந்தார். எனது எல்லா எழுத்துக்களும் sherfuddinp.blogspot.com   என்ற வலைப்பதிவில் வெளியிடப்பட்டுள்ளன. .கட்செவியில் படிப்பதை விட எளிதாக வலைப்பதிவில் படிக்கலாம்.
அக்கா ஜோதி தொடர் விறுவிறுப்பாகச் செல்வதாகக் கூறி தொடர்ந்து எழுதும்படி சொன்னது .தங்கை சுராஜ் ஏறுவாடிக்குப்போய்ப் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுவதாக இருந்தது அந்த ஊர் பற்றிய வர்ணனை என்று எழுதியிருந்தது
பாராட்டுக்களுக்கு நன்றி.
வாத்து ஒலி பற்றி வந்த வினாவுக்கு  :வாத்தின் ஒலிக்கு எதிரொலி கிடையாது என்பதே விடை . ஏனென்று யாருக்கும் தெரியவில்லை.
இ(க)டைச்செருகல்
சென்ற ஆண்டு மகள் வீட்டுக்குப் போயிருக்கையில் ஒன்பதாவது வகுப்புப் படித்துக் கொண்டிருந்த என் குட்டிப் பேத்தி ரிபாத் –அய்யா தமிழ் ப்ராஜெக்ட்டுக்கு வறட்சி என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதிக் கொடுங்கள் என்று கேட்டது (என்ன தமிழ் ப்ராஜெக்டோ தமிழுக்குத்தான் வெளிச்சம். ) எனக்கு கவிதையெல்லாம் தெரியாது என்று நான் மறுக்க இல்லை வேண்டும் என்று பேத்தி நச்சரிக்க கைப்பேசியில் எழுதிப் பார்த்தேன் .கவிதை மாதிரி ஏதொ வர அதைப் பேத்தியிடம் கொடுத்தேன், அடுத்த நாள் பள்ளியிலிருந்து திரும்பிய பேத்தி கவிதை நன்றாக இருந்தது என்று தமிழாசிரியை பாராட்டியதாகச் சொன்னது . எனக்கு வியப்பாகவும் பெருமிதமாகவும் இருந்தது. அந்தக் கவிதை:
அணை கட்டினோம்                                              ஆழ்துளை போட்டோம்                                          ஆழியையும் பகுத்தோம்                                          தீரவில்லை நீர் வறட்சி
மருந்தடித்தோம்                                            உரம்போட்டோம்                                                    மரபணுவும் மாற்றினோம்                                            தீரவில்லை உழவர் வறட்சி
அனலில் எடுத்தோம்                                                புனலில் எடுத்தோம்                                             அணுவிலும் எடுத்தோம்                                          தீரவில்லை மின் வறட்சி
பருத்தி எடுத்தோம்                                                      பட்டு எடுத்தோம்                                                   பல்லிழையும் எடுத்தோம்                                             தீரவில்லை உடை வறட்சி
முன்தோன்றி மூத்த செம்மொழிக்குடியில்                                     பண்பாட்டு வறட்சி                                                      கலாச்சார வறட்சி                                                      மொழியிலும் வறட்சி
இறைதுதித்து                                                        இயற்கை போற்றி                                                               மனித நேயம் காத்து                                                வறட்சி போக்கி வளம்.பெற வாழ்வோம்
இறைவன் நாடினால் பயணம் தொடரும்


வலைப்பதிவு முகவரி

Sherfuddinp.blogspot.com

Tuesday, 12 April 2016

வாழ்க்கைப்பயணமும் வங்கி அனுபவங்களும் 11.ஏறுவாடி


ஏறுவாடி என்ற பெயரைக்கேட்டவுடன் தர்கா மனநலம் குன்றியர்வர்களுக்கு ஒதிப்பார்ப்பது தீ விபத்து என்றெல்லாம் கற்பனையைப் பறக்க விட வேண்டம். அந்த ஏறுவாடி கீழக்கரை அருகில் கடற்கரையில் உள்ள ஊர். வேறு மாநிலத்திலிருந்து ஏறுவாடிக்கு மாற்றலான எங்கள் வங்கி அதிகாரி ஒருவர்  கீழக்கரை ஏறுவாடிக்குப் போய் தவறுதலாகப் போய் திரும்பி வந்த நிகழ்வும் உண்டு 
இது நெல்லை மாவட்டத்தில் நெல்லையிலிருந்து நாற்பது கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அழகிய ஊர்.மேற்குத் தொடர் மலைக்கு அருகில் இருப்பதால் எப்போதும் ஒரு சுகமான தட்ப வெட்ப நிலை.கொஞ்சம் வெயில் அதிகம் அடித்தால் உடனே ஒரு சிறு மழை பெய்து சரி செய்து விடும்..ஐந்தாறு கிலோமீட்டர் தூரத்தில் சலசலக்கும்  நம்பியாறு
கோவையிலிருந்து முது நிலை மேலாளராகப் பதவி உயர்வு பெற்று ஏறுவாடி வந்தேன்.நிறைய வெளி நாடு வாழ் இந்தியர்கள் வசிக்கும் அமைதியான ஊர்..அந்தச் சின்ன ஊரில் கிட்டத்தட்ட பத்து பள்ளி வாசல்களும் ஒரு அரபிக் கல்லூரியும் இருக்கின்றன.(அத்தா நெல்லையில் பணி புரிந்த காலத்தில் அரபுக்கல்லூரியில் மீலாது விழாவில் உரையாற்ற வந்தபோது நானும் அத்தாவுடன் வந்ததாக ஒரு மெல்லிய நினைவு)
கிளையில் பொறுப்பு ஏற்குமுன் ஒரு வாரம் திருநெல்வேலியில் தங்கி தினமும் பேருந்தில் போய் வந்தேன்.இடையில் ஒரு நாள் விடுமுறை வந்தது. நாங்கள் முன்பு திருநெல்வேலியில் இருந்தபோது நெல்லை சந்திப்பில்  மிகவும் புகழ் பெற்ற ஒரு அசைவ உணவு விடுதியில்.. ரொட்டி குருமா சாப்பிடுவதற்காகவே  அக்கம் பக்கம் உள்ள ஊர்களிருந்து நெல்லை வருவார்கள்.
அந்த நினைப்பில் காலைச்சிற்றுண்டி சாப்பிட அந்த விடுதிக்குப் போனேன். மிகவும் பொலிவிழந்து போயிருந்ததையும் பொருட்படுத்தாது உள்ளே போய் அமர்ந்தேன். ஒரு நீண்ட பத்து நிமிட இடைவெளிக்குப்பின் என்ன சாப்டிரிங்க என்று ஒரு குரல் கேட்டது. ரொட்டியும் குருமாவும் கொடுங்கள் என்று சொன்னேன். மீண்டும் ஒரு பத்து நிமிட இடைவெளிக்குப்பின் இன்னொருவர் வந்து என்ன சாப்டிரிங்க என்றார். ஏற்கனவே சொல்லிவிட்டேன் என்று சொன்னவுடன் முதலில் கேட்டவர் அசரீரியாக நான் இல்லை அவரிடம்தான் சொல்லவேண்டும் என்றார் , மறுபடி ரொட்டி குருமா என்று சொன்னேன். மீண்டும் ஒரு பத்து நிமிட இடைவெளி.மூன்றாவதாக ஒருவர் வந்து ரொட்டி குருமா கொஞ்சம் பழசாக இருக்கும் பரவாயில்லையா என்று கேட்டார். புதிதாக என்ன இருக்கிறது என்று கேட்டேன்,முந்தா நாள் மாலை போட்ட சமோசா சுட வைத்து புதிதாக்கித் தருகிறோம் என்றார்.  தப்பித்தேன் பிழைத்தேன் என்று வெளியேறி விட்டேன்,
ஏற்கனவே நான் திருநெல்வேலியில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறேன். எனவே ஏறுவாடி கிளையில் தெரிந்த முகங்கள் பல இருந்தன.ஒரு குழுவாக மிகச்சிறப்பாக பணியாற்றியதால் பணிகள் எல்லாம் முடிந்து  ஐந்தரை மணிக்கெல்லாம் கிளையைப் பூட்டி விடுவோம்.
கிளையில் பெண்களுகென்று தனியாக ஒரு நுழைவாயில் ,  தனி அறை இருந்தது. ஆண்கள் வெளி நாடு சென்று விடுவதால் பெண்கள்தான் அதிக அளவில் வங்கிக்கு வருவார்கள்.
Money is what it does என்று ஒரு பொருளாதாரக் கோட்பாடு இருக்கிறது,.அதன்  உண்மையான பொருளை நான் உணர்ந்தது ஏறுவாடியில்தான். அங்கிருக்கும்போதுதான் பாப்டியின் திருமணம நடைபெற்றது. திருமணம் பற்றி எந்த சிந்தனையும் முன்னேற்பாடும் இல்லாத ஒரு நிலையில் இறைவன் நாட்டப்படி திருமணம் கூடி வந்தது மகிழ்ச்சிதான் .ஆனால் பொருளாதாரப் பிரச்சனை என்னை நிலை குலைய வைத்தது .வங்கியைத் தவிர வேறு எங்கும் கடன் கைமாத்து வாங்கி அறியாத நான்  வெளியே கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டேன்.
மணமகன் (முத்தக்கா) வீட்டில் நகை சீர் என்று எதுவும் கேட்கவில்லை. சென்னை விஜயா திருமணக் கூடத்தில்  திருமணம் நடத்த வேண்டும் என்பது மட்டும்தான் அவர்கள் சொன்னது.ஆனால் ஒரு வங்கி மேலாளர் மகள் ,நகராட்சி ஆணையர் பேத்தி திருமணம் எப்படி இருக்க வேண்டும் எவ்வளவு நகை போடவேண்டும் என்ன சீர் செய்ய வேண்டும் என்ற சமூக அழுத்தத்திற்கு மேல் என்  , குடும்பத்தினரின் அதற்கெல்லாம் மேல் என் மகளின்  விருப்பங்களை (அவர்கள் வெளியே சொல்லாவிட்டாலும்) நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு.
  மங்கலப்பட்டி அன்பு நண்பர் குப்புசாமி என் தொலைபேசி அழைப்பை மதித்து எந்த வித ஆவணம் பிணையமும் இல்லாமல் ஒரு லட்சம் ரூபாய் என் மைத்துனர் சிராசுதீன் பேரில் வங்கி வரைவோலையாக அனுப்பி வைத்தார்...காலத்தினால் செய்த அந்த உதவியை என் வாழ்வில் மறக்கவே முடியாது. நானே முன் வந்து திருப்பிச்செலுத்தும்வரை ஒரு தடவை கூட அது பற்றி நினைவூட்டவும் இல்லை.(முதலில் அந்தக் கடனைத்தான் அவர் கேட்காத வட்டியோடு அடைத்தேன்)
இது போக வெளியேயும் கடன் வாங்க வங்கி ஊழியர்கள் நடராசனும் கிருஷ்ணகுமாரும் பெரிதும் உதவி செய்தனர்..ஒரு குக்கிராமத்தில் இருந்த ஒரு தொழில்முறை கடன் வழங்குவரிடம் அழைத்துச் சென்றனர்..
வங்கியில் மேலாளராக இருந்த எனக்கு அவரின் மிக எளிய கடன் வழங்கு முறை வியப்பூட்டியது. என் சக ஊழியர் நடராசனைப் பார்த்து “இவரை எனக்குத் தெரியும் இவருக்கு நெல்லையை அடுத்த புறநகர்ப் பகுதியில் சொந்த வீடு இருக்கிறது. இவர் உறுதி கொடுத்தால் பணம் தருகிறேன் “ என்றார் . நடராசன் சம்மதம் தெரிவித்தவுடன் சில பல ஆவணங்களிலும் காசோலைகளிலும் கையொப்பம் வங்கிக் கொண்டு அடுத்த நாள் வரச்சொல்லி பணம் கொடுத்து விட்டார். இப்படி ஒரு தொகையை வங்கியில் கடனாக  வாங்க குறைந்தது இரண்டு மாத காலம் ஆயிருக்கும்.
சில செய்திகளை இங்கு நான் குறிப்பிட்டாக வேண்டும். முதலாவது வங்கி மனது வைத்திருந்தால் எளிதாக என் பிரச்னைக்கு தீர்வு கொடுத்திருக்கலாம் கடனுடன் கூடிய தொடர் வைப்பு நிதியில் நான் பணம் செலுத்தி வந்தேன். அதற்குரிய கடன் தொகையைக் கொடுக்க வங்கி துணைப் பொது மேலாளர் வன்மையாக மறுத்து விட்டார்.. அதற்கு தகுந்த விளக்கமும் கொடுக்கவில்லை. இன உணர்ச்சியா என்ற ஐயம்.
இந்தக்கடன் சம்பந்தமாக பலமுறை நான் நெல்லை மதுரையில் உள்ள உயர் அலுவகலங்களுக்கு அலைய வேண்டி இருந்தது, அப்போது அங்குள்ள ஒரு நண்பர் (மேலாளர்) எனக்கு கூறிய அறிவுரை (அழிவுரை ?) : என்ன சார் கிளை மேலாளர் பொறுப்பில் இருந்து கொண்டு இப்படி பணத்துக்கு அலைகிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு பணம் தேவையோ அதற்கேற்றாற்போல் பல பெயர்களில் வங்கிக் கடன் போட்டு எடுத்துக் கொள்ளவேண்டியதுதானே .முடிந்த அளவுக்குத் திருப்பிக் கட்டுங்கள். மீதமுள்ள தொகை காலப்போக்கில் தள்ளுபடியாகி விடும் என்றார். அவருக்கு என் நன்றியைத் தெரிவித்து விட்டு  இது போன்ற தவறுகளைச் மனதாலும் நினைக்கக்கூடாது என்று உறுதி பூண்டேன் .
வங்கி வாடிகையாளர்களிடம் கடன் கேட்கலாம் என்ற எண்ணத்தை சக ஊழியர் கிருஷ்ணகுமாரிடம் தெரிவித்தேன். உங்கள் குணத்துக்கு இது ஒத்து வராது.,அவர்கள் ஒரு சொல் சொன்னால் உங்களால் தாங்க முடியாது. எனவே இந்த எண்ணத்தைக் கைவிடுங்கள் என்று சொன்னார்.
இறையருளால் திருமணமும் அது தொடர்பான நிகழ்வுகளும் மிகச்சிறப்பாக எந்தக் குறையும் இன்றி நடைபெற்றன.. காலைச்சிற்றுண்டி நிறைய மீதமிருந்தது. (அப்போது நல்ல சேவை நிறுவனமாய் இருந்த)உதவும்   கரங்கள் என்ற அமைப்பைத் தொடர்பு கொண்டு அவர்களுக்கப் போக்கு வரத்துக் கட்டணமும் கொடுத்து உணவை அனுப்பி வைத்தோம்
திருமணத்திற்கு பலவிதங்களிலும் உறுதுணையாக இருந்தனர் என் உடன் பிறப்புக்கள், மைத்துனர்கள் , சேக்கின் சச்சாக்கள். குறிப்பாக நூறக்கா ,ஜென்னத் அக்கா முத்தலிப் அண்ணன் , லியாகத் அண்ணன் மைத்துனர் சிராஜுதீன், சக்ரவர்த்தி. சஹா ,கபீர்
மிகச்சிக்கனமாக வாழ்க்கை நடத்தி மூன்றே ஆண்டுகளில் கடனை விட்டு வெளியே வந்தது எனக்கே வியப்பாக இருந்தது.
திருமணம் முடிந்து பாப்டி சேக்குடன் தொடர் வண்டியில் ஏறுவாடிக்குப் பயணித்தோம். பயணத்தில் சாப்பிட முத்தக்கா (மண மகன்) வீட்டில் எங்களுக்குக் கொடுத்தனுப்பிய  பிரியாணியும் கோழியும் மிகவும் சுவையாகவும் நிறையவும் இருந்தது. எங்கள் பெட்டியில் இருந்த பயணிகள் அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்தோம்..
பணப்பிரச்சனை தவிர்த்து ஏறுவாடி வாழ்க்கை நன்றாகவே இருந்தது. ஊர் மக்கள் மிகவும் உரிமையோடும் பாசத்தோடும் பழகுவார்கள் .. அந்த ஊர் வழக்கப்படி திருமண வீடுகளிலிருந்து எங்கள் வீட்டுக்கு உணவு கொடுத்து விடுவார்கள். நெய்ச்சோறு குருமா நல்ல சுவையாக இருக்கும்.
பாப்டி ஷேக் எங்கள் வீட்டுக்கு வருவதும் போவதும் என பொழுது  இனிமையாகக் கழிந்தது. அருகில் உள்ள குமரி முனைக்கும் அவ்வப்போது சென்று வருவோம். கடற்கரையில் அமர்ந்து கடல் அலைகளைப் பார்த்துக் கொண்டே இருப்பது எனக்கு மிகவும் பிடித்த பொழுது போக்கு..
காரையார் என்ற மலைக்கு வங்கி ஊழியர்களுடன் சிற்றுலா போகையில் ஷேக்கையும் அழைத்துச் சென்றேன்.
திருமணம் முடிந்த சில மாதங்களில் பைசலுக்கு மஞ்சள் காமாலை. அரசு மருத்துவர் கூறியபடி காரையார் மலையில் உள்ள ஒரு சிற்றூருக்கு அழைத்துச் சென்றேன்..அந்த ஊருக்குப்போனாலே நோய்கள் எல்லாம் பறந்துவிடும் . அவ்வளவு தூய்மையான காற்று.தரை பளீரென்று தெரியும்படி கண்ணாடி போல் தண்ணீர் ஓடும் ஆறுகள்.. அங்கேயே தங்கி விட எண்ணம் தோன்றும் அளவுக்கு இயற்கை எழில். ஒரே ஒரு முறை போய் ஐந்து ரூபாய் மருந்து சாப்பிட்டதில் நோய் முற்றிலும் நீங்கி விட்டது
அடுத்து பேத்தி வரவு.,  பாப்டி தாய்மை அடைந்தவுடன் பெரிய பதவி உயர்வு பெற்ற மகிழ்ச்சி..ஒரு மலரின் வளர்ச்சியை அரும்பிலிருந்து படிப்படியாகப்பார்ப்பது போல் அணுஅணுவாக ரசித்துப் பிறந்து வளர்ந்த குழந்தை பேத்தி ஆத்திக்கா  சாக்கினா அக்தர்.
எந்த மருத்துவ மனைக்குப்போவது என்பதில் பெரும் குழப்பம். ஊரில் ஒவ்வொருவரும் வேறு வேறு மருதுமனைகளைப் பரிந்துரைத்தார்கள். இறுதியில்  எங்கள் வங்கி கன்யாகுமரி கிளை மேலாளரின் அண்ணி திருமதி சரஸ்வதி MD.,DGO.,(நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் விரிவுரையாளர்) அவர்களிடம் காண்பித்தோம். குடும்ப உறுப்பினர் போல்  எளிமையாகப் பேசிப் பழகினார். ,
அவர் குறிப்பிட்ட தேதியில் மருத்துவ மனை சென்றோம். போகும் வழியில் பாளையங்கோட்டையில் ஒரு உணவு விடுதியில் மதிய உணவு சாப்பிட்டோம். வீட்டு சமையல் போல் மீன் குழம்பு, பொரியல் மிகவும் சுவையாக இருந்தது..  வசதியான் ஒரு தனி அறை எடுத்துக்கொண்டோம்.மருத்துவ மனையில் உள்ள உணவு விடுதியில் தரமான உணவு கிடைத்தது .
அறுவை சிகிச்சை (சிசேரியன்) செய்ய வேண்டியது அவசியம் என்று மருத்துவர் சொன்னவுடன் மனம் பதைபதைத்துப் போனோம்..இறைவனியம் மனம் உருகி வேண்டிக் கொண்டோம்.
சில மணி நேரங்களில் பிறந்த பிள்ளையைக் காண்பித்தார்கள். பிறந்து சில நாட்களுக்கு இமைகள் மூடியே இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் இமைகள் திறந்த நிலையில் அழகிய ரோசாப்பு போல் சிரித்த முகத்துடன் இருந்தது குழந்தை .எப்போதும் சிரிப்பத்தான். ,குளிப்பாட்டினால் கூட அதை ரசித்துச் சிரிக்கும் சிரிப்பு. ஊசி போட்டால் ஒரு சிறிய அழுகை மீண்டும் சிரிப்பு.
என்னிடம் மிகப் பாசமாக ஒட்டிகொள்ளும் பேத்தி பக்கத்து வீட்டில் இருந்து மூதாட்டி ஒருவர் நாட்டு மருந்து கொடுக்க வருவார். அவர் வந்து நுழைந்தவுடனே கோபப் பார்வையுடன் மருந்து சாப்பிட்டது போல் முகத்தைக் கோனலாக்கிகி கொள்ளும். அடிக்கடி மருந்தும் சாப்பாடும் ஊட்டும் தன் நனிமாவையும் மூக்கைக் கடித்து விடும்.
ஏறுவாடியில் உள்ள ஒரு அங்காடியில் பொருட்கள் மிக மலிவாக விற்பதாகக்கூறி அக்கம் பக்கங்களில் உள்ள ஊர் மக்கள் , அரசு அலுவலர்கள் எல்லாம் வந்து வாங்கிப் போவார்கள்.. நாங்கள் ஒரே முறை அங்கு வாங்கிப் பார்த்தோம்.
திருநெல்வேலி நாகர்கோயில் தொடர் வண்டிப் பாதை நாங்குநேரி ஏறுவாடி வள்ளியூர் வழியே செல்லவேண்டும்.தங்கள் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில் டெல்லி வரை சென்று பேசி, கொடுக்க வேண்டியதைக் கொடுத்து ஏறுவாடிக்கு தொடர் வண்டி நிலையம் வராமல் தடுத்து பொது மக்கள் வசவுகளை வாங்கிக் கட்டிக்கொண்ட பெருமை சில ஊர்ப் பெரிய மக்களுக்கு உண்டு.(அந்த நிலங்கள் அதற்குப் பின் விளைச்சலே இல்லாமல் போனது ஒரு கிளைக் கதை.)
சலாகுதீன் என்பது ஏறுவாடியில் மிகவும் பரவலாகப் பயன் படுத்தப் படும் பெயர். வீட்டுக்கு ஒரு சலாகுதீன் இருப்பார். அடையாளம் தெரிவதற்காக ஆடிட்டர் சலாகுதீன் தப்லீக் சலாகுதீன் என்று அடை மொழியோடு சொல்வார்கள். (தப்லீக்கில் போவதை மட்டுமே வாழ்க்கை நடை முறையாகக் கொண்டவர் தப்லீக் சலாகுதீன்)
மிகச் செழிப்பான விவசாய நிலங்கள் நிறைந்த அந்த ஊரில் உரக்கடை , துணிக்கடை போன்ற வணிகங்களிலும் விவசாயத்திலும், கட்டிடங்கள் வாடகைக்கு விடுவதிலும் முன்னணியில் இருந்தது ஜனாப் அலி குடும்பம்..மிக(மிக மிக) எளிமையாக இருப்பார்கள்.
வங்கியில் நீண்ட நாள் நகை மதிப்பீட்டாளராக இருந்தவர் மேலாளருக்கும் தெரியாமல் விதிகளுக்குப் புறம்பாக  குறைந்த காரட் உள்ள நகைகளுக்கு தொகையைக் குறைத்து கொடுப்பதை பல ஆண்டுகளாக வழமையையாய்க் கடைப்பிடித்து வந்தார். கிளை ஆய்வில் அது கண்டு பிடிக்கப்பட்டு ஒப்பந்தப் பணியாளரான அவர் வெளியே அனுப்பப்பட்டார். தன் செயலால் வங்கிக்கு எந்த வித இழப்பீடும் இல்லை,என்றும்  தேவைப்பட்டால் லட்சக்கணக்கில் பிணைத் தொகை செலுத்துவதாயும் சொல்லிப்பார்த்தார்.. ஆனால் வங்கி நிர்வாகம் ஒரே உறுதியாக அவரை வெளியேற்றி விட்டது. 
திருநெல்வேலியில் இருந்து சுல்தான் மாமா குடும்பத்தினர் ஏறுவாடி வந்து போவார்கள். தம்பி  ஷஹா தன் மைத்துனருடன் ஒரு முறையும் குடும்பத்துடன் ஒரு முறையும் நெய்வேலி ராஜா குடும்பத்துடன் ஒரு முறையும் வந்து சென்றார். மைத்துனர் பீர் தன் தொழில் நிமித்தமாய் அவ்வப்போது வந்து தங்கிச் செல்வார்.
பாப்டி திருமணத்தை ஒட்டி மாமா குப்பியும் கொஞ்ச நாள் தங்கிச்சென்றார்கள். ஆத்திக்கா, பாப்டியை அழைத்துச் செல்ல ஷேக்,சாகுல்,முத்தக்கா வந்தார்கள்.  மைத்துனர் சம்சு வேலை (?) தேடி(??) வந்தார் சென்றார்,.சையது சச்சா பலமுறை வந்ததில் ஒரு முறை திருவனந்தபுரம் குமரி முனை சென்று வந்தது.
வெளிநாடு சென்றதுணைவனைப் பிரிந்து வாழும் பெண்கள் முகத்தில் ஒரு சொல்லவொண்ணா ஏக்கம் சோகம் (எங்களைப்போல ) குடும்பத்துடன் சேர்ந்திருப்பவர்களைக் கண்டால் தன்னை அறியாமல் ஒரு காழ்ப்புணர்ச்சி.
திருமணம் வரை முகத்திரையுடன் இருக்கும் பெண்கள் திருமணம் முடிந்தவுடன் அதற்கு  விடை கொடுத்து விடுவார்கள்
 ஏறுவாடியில் ஷரியத் நீதி மன்றம் ஓன்று இருக்கிறது. அந்தச் சிறிய ஊரில் ஒரு நாளைக்கு ஒரு மணமுறிவு வழக்கு வருவதாய்க் கேள்விப்பட்டது அதிர்ச்சியாக இருந்தது. பெரும்பாலும் மணமுறிவு கோரிக்கைகள் பெண் சார்பில் இருந்துதான் வருமாம். வெளி நாடுகளில் பணி புரிபவர்கள் தம் மனைவியரை தங்கள் வீட்டில் வைத்துச் செல்வார்கள். மாமியார் மருமகள் ஒத்துப்போகாததே மண முறிவுக்கு முக்கிய காரணமாகக் கூறப்பட்டது. பணத்துக்காக மட்டும் வெளி நாடு செல்பவர்கள்  தங்கள் வாழ்க்கையையே இழந்து  நிற்கும் பரிதாபம்.
.  ஏறுவாடியிலிருந்து வாணியம்பாடிக்கு மாற்றல் வந்தது. என் சேவையைப் பாராட்டி ஊர்ப்பொது நிகழ்ச்சி ஒன்றுக்கும் ஐக்கிய ஜமாஅத் நிகழ்ச்சி ஒன்றுக்கும் ஏற்பாடு செய்வதாய்ச் சொன்னார்கள். அதெல்லாம் வேண்டாம் என்று மறுத்து மதுரையிலிருந்து வாணியம்பாடி திருப்பத்தூருக்கு பயண முன்பதிவு செய்து விட்டேன். . வங்கிக் கிளைப் பொறுப்புக்களை அதிகாரியிடம் ஒப்படைத்து விட்டு கிளம்பி விட்டேன்.
கடலூர் பகுதி பற்றி பலரும் பாராட்டியது எனக்கு மிகவும் வியப்பாகவும் பெருமையாகவும் இருந்தது. கடலூர் பொதுவாக யாருக்கும் தெரியாத ஊர் என்பதோடு அந்தப்பகுதி மிக நீளமாக இருந்ததாகத் தோன்றியது.
அக்கா ஜோதி ஒரேடியாக நீ அரசியலில் குதி என்று தன் பாராட்டைத் தெரிவித்தது என் நிறை குறைகள் எனக்கு ஓரளவுக்குத் தெரியும். அதனால் இந்த வயதில் அரசியலில் குதித்து கையைக் காலை உடைத்துக்கொள்ள நான் விரும்பவில்லை.
அக்கா மெகராஜ் நீ எதாவது நாள் குறிப்பைப(டைரி) பார்த்து எழுதுகிறாயா என்று கேட்டது. எனக்குப் பள்ளிப் பருவத்தில் இருந்தே நாள் குறிப்பு எழுதும் பழக்கம் உண்டு, ஆனால் இந்தத் தொடரில் முழுக்க முழுக்க என் நினைவில் பதிந்த நிகழ்வுகளை மட்டுமே பகிர்ந்து கொள்கிறேன்.  இந்தத் தொடரின் நோக்கமே பழைய இனிய நினைவுகளை அசைபோடுவதுதான் (a stroll down the memory lane)
அதற்கு அடுத்த பகுதியான ஈரோடுக்கு தங்கை சுராஜ் மட்டும் மிகவும் நன்றாக இருப்பதாய் தொலைபேசியில் தெரிவித்தது. வேறு யாரும் கருத்துத் தெரிவிக்கவில்லை.
கருத்துத் தெரிவித்தவர்களுக்கு என் நன்றி
இ(க)டைச்செருகல்
விலங்குகள் பற்றி இரண்டு சிறிய வினாக்கள்
1.பாலூட்டிகளில் (mammal)  குதிக்க முடியாத ஒரே விலங்கு எது ?
2. வாத்து – எல்லோரும் கேள்விப்பட்டும் பார்த்தும் இருப்பீர்கள். வாத்தின் ஒலிக்கு ஒரு சிறப்புத் தன்மை உண்டு . அது என்ன ?
தெரிந்தவர்கள் கட்செவியில் தெரிவிக்கலாம். அடுத்த பகுதியில் விடை.
இறைவன் நாடினால் பயணம் தொடரும்
Blog address
Sherfuddinp.blogspot.com    




Saturday, 2 April 2016

வாழ்க்கைப்பயணமும் வங்கி அனுபவங்களும் 10.ஈரோடு


 பெரியாரின் ஊரான ஈரோடைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. .ஈரோடு என்றதும் ஒரு நகைசசுவைத் துணுக்கு நினைவுக்கு வருகிறது .(அத்தா சொல்லக் கேட்டது என எண்ணுகிறேன்) மதுரைக்குப் புதிதாய் வந்த ஒருவர் தான் செல்ல வேண்டிய இடத்திற்கு ஒரு கடையில் வழி கேட்கிறார். .கேரளத்தைச் சேர்ந்த கடைக்காரருக்கு தமிழ் சரியாக வராது. இருந்தாலும் வழி கேட்டவருக்கு உதவி செய்யும் ஆர்வத்தில் “ஈரோடு போய் திரிச்சி வரணும்”“என்கிறார்.  வழி கேட்டவருக்கு வியப்பும் சினமும். மதுரையில் உள்ள ஒரு இடத்திற்கு வழி கேட்டால் இவர் ஈரோடு திருச்சி என்கிறாரே நம்மைக் கேலி செய்கிறாரோ என்ற எண்ணம். கடைக்காரர் சொன்னதில் தவறு ஒன்றும் இல்லை. இந்த ரோட்டில்(ஈரோடு) போய் திரும்பி (திரிச்சி) போக வேண்டும் என்பதை அவர் தம் மொழியில் சொல்லியிருக்கிறார்.
(Erode என்ற ஆங்கில வார்த்தைக்கு அரித்தல் என்று பொருள்)
ஈரோடு மாவட்டம் மங்கலப்பட்டியில் நான்கு ஆண்டுகள் கிளை மேலாளராகப் பணி நிறைவுற்றவுடன் அதே மாவட்டத்தில் கொளப்பலூர் என்ற ஊருக்கு மாறுதல் வந்தது. பிள்ளைகள் படிப்பு வசதிக்காக ஈரோடு கொடுங்கள் என்று மேலிடத்தில் கேட்டேன். ஈரோட்டில் கிளை மேலாளர் பதவி  இப்போது கிடைக்காது தணிக்கை (எங்கள் வங்கியில் inspection  ஆய்வுப்பணி என்று சொல்வார்கள்) மேலாளராகப போக நீங்கள் சம்மத்தித்தால்  ஈரோடுக்கு மாற்றல் தருகிறேன் என்றார்கள். சரி என்று ஒத்துக்கொண்டேன்.
ஈரோட்டில் வீடு தேட மிகவும் உதவி செய்தவர் திரு கார்மேகம் என்பவர். இவரை மங்கலபட்டியிலேயே ஓரளவுக்குத் தெரியும். மிக நல்ல நண்பரான திரு குப்புசாமியின் நண்பர் இவர். கிட்டத்தட்ட ஒரு மாத காலம் அலைந்து ஒரு நல்ல வீட்டைப் பிடித்துக் கொடுத்தார்.
வீடு நகரின் மையப் பகுதியில் இருந்தது. பெரிய கூடம், சாப்பாட்டுக் கூடம். ஒரு பெரிய படுக்கை அறை மற்றொரு சிறிய அறை என்று வசதியாகத்தான் இருந்தது.. ஆனால் அந்த வீடு எங்களுக்கு சரிப்பட்டு வரவில்லை. ஒரு தனி வீடாகவும் இல்லை அடுக்ககம் மாதிரியும் இல்லை, ஒரு கட்டிடத்தில் கீழ் தளத்தில் ஒரு வீடு. முதல் தளத்தில் நாங்கள்,அதற்கு மேல் இன்னொரு வீடு. இது வரை தனி வீட்டிலேயே இருந்து பழகியதால் இந்த அமைப்பு சற்று வித்தியாசமாகப் பட்டது. வீட்டு உரிமையாளர் அருகிலேயே இன்னொரு வீட்டில். வீட்டுக்கு அருகில் வாகனங்களுக்கு வண்ணம் பூசும் பட்டறை ஓன்று இருந்தது. அந்த நாற்றம் மூக்கைத் துளைக்கும். வேலைக்காரியும் சரியாக அமையவில்லை. இருந்தாலும் ஈரோடு வாழ்க்கை முழுக்க அந்த வீட்டிலேயே கழிந்தது.
மகன் பைசல் ஈரோடு கலைககல்லூரியில் படித்தார். அவரோடு பள்ளியில் படித்த தோழர்கள் பலரும் அந்தக் கல்லூரியில் படித்தார்கள். மதிப்பெண் அடிப்படையில் கல்லூரி மாணவர் தலைவனாகத் தேர்வு செய்யப்பட்டார். கல்லூரியில் முதல் மாணவனாக பட்டப் படிப்பை முடித்து தங்கப் பதக்கமும் பெற்றார் .
மகள் பாப்டி ஒரு நல்ல கிறித்தவப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்புப் படிப்பை முடித்தார்.
ஆய்வுப்பணி என்பதால் அடிக்கடி வெளியூர் பயணிக்க வேண்டியிருக்கும். ஆனால் பெரும்பாலும் மாலை வீடு வந்து விடுவேன்.
பொதுவாக ஈரோடு மாவட்டமே ஒரு நல்ல முன்னேற்றம் காணும் பகுதி. மக்களின் கடும் உழைப்பே அதற்குக்காரணம்.. நல்ல,நேரம் தவறாத  பேருந்து வசதி, சிற்றூர்களில் கூட இரு சக்கர வாகனங்கள் பழுது பார்க்குமிடங்கள்.
ஈரோடு மஞ்சள் சந்தையும் துணிச் சந்தையும் உலக அளவில் புகழ் பெற்றவை...மஞ்சள் விளைந்து அறுவடை செய்யும் காலத்தில் மஞ்சள் சந்தை.. ஆண்டு முழுதும் வாரம் மூன்று நாள் துணிச் சந்தை. துணிச் சந்தையில் மட்டும் தினமும் பல கோடி ரூபாய் அளவில் வணிகம் நடப்பதாய்ச்  சொல்வார்கள்.
வங்கியின் ஒரு பெரிய கிளைக்கு ஆய்வுக்காகப் போயிருந்தேன்.உணவுக் கூடத்தில் நுழைந்த எனக்கு அதிர்ச்சி, வியப்பு, சினம் எல்லாம் ஓன்று சேர வந்தது. கூடத்தின் தரை முழுதும் ஒரு அங்குல உயரத்திற்கு கருப்பாக அழுக்குப் படிந்திருந்தது,. கிளை மேலாளரிடம் காண்பித்து உடனே அதை சுத்தம் செய்யப் பணிக்குமாறு கேட்டுக்கொண்டேன். அந்தக் கிளையில் துப்புரவு ஊழியர்கள் மூன்று பேர் இருந்தார்கள்..மூவரும் சேர்ந்து மூன்று மணி நேரம் சுத்தம் செய்தார்கள்.எத்தனை ஆண்டு அழுக்கோ !
சையது சச்சா ஈரோடு வருவதற்காக பீ.மு.மாமாவிடம் முகவரி கேட்க, மாமா தர மறுக்க, அதை ஒரு அறைகூவலாக எடுத்துக்கொண்டு முகவரி இல்லாமலே ஈரோடு வந்த சச்சா தொடர் வங்கி விடுமுறையால் எங்கள் வீட்டைக் கண்டு பிடிக்க முடியாமல் திரும்பி திருப்பத்தூர் போனது சச்சாவின் பயண சாதனைகளில் ஒரு பின்னடைவு.
பின்னர் ஒரு முறை சச்சா தனியாகவும் பிறகு  ஜனாப் அஜ்மீர் அலியுடன் ஒரு முறையும் எங்கள் வீட்டுக்கு வந்து போனது.
பொங்கல் விளையாட்டுப் போட்டிகளையொட்டி அலுவலகப் பணியாக  ஈரோடு வந்த லியாகத் அலி அண்ணன் வீட்டுக்கு வந்து ஒரு நாள் தங்கிச் சென்றது.
ஒருநாள் மாலைப்பொழுதில் முத்தக்காவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது அத்தாவுக்கு உடல் நலம் சரியில்லை நீங்கள் உடனே புறப்பட்டு வரவும் என்று சொன்னது. உடனே எல்லோரும் பேருந்தில் பயணித்து சென்னை சென்றோம்.
அத்தா பூந்தமல்லியில் நூரக்கா வீட்டில் இருந்தார்கள் .படுத்தபடி இருந்தாலும் மிகத்தெளிவான சிந்தனையில் இருப்பது போல்தான் தோன்றியது. தேறி எழுந்து இன்னும் சில காலமாவது நம்முடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கையோடுதான் நான் (எல்லோரும்) இருந்தேன்,
ஒரு வழியனுப்பு  நிகழ்வு  போல பிள்ளைகள் அனைவரும் அத்தாவைச் சுற்றி இருந்தோம். மருத்துவர் வந்து பார்த்து விட்டு he is alright  என்று சொல்லி விட்டு வாசல் வரை போயிருப்பார்..என் மகன் பைசல் ஐயா வாயில் காபி ஊற்ற அத்தாவின் உயிர் பிரிந்தது என்று சொல்வதை விட ஒரு சகாப்தம் நிறைவடைந்தது என்பதே பொருத்தமாக இருக்கும்.
பிறப்பிலும் சிறப்பு, வளர்ப்பிலும் சிறப்பு,படிப்பிலும் சிறப்பு, பணியிலும் சிறப்பு, இல்லறத்திலும் சிறப்பு இலக்கியத்திலும் சிறப்பு இறை வழியிலும் சிறப்பு  பணி மூப்பிலும் சிறப்பு ,முதுமையிலும் சிறப்பு என வாழ்வாங்கு வாழ்ந்த அத்தாவின் பிரிவும் மிகச் மிகச் சிறப்பாகவே இருந்தது.
பிறந்த ஊரான திருப்பத்தூர் கொண்டு செல்லவேண்டும்,,சென்னையில் அதிகமாக அத்தா வாழ்ந்த வடபழனி கொண்டு செல்லவேண்டும் போன்ற கருத்துக்களை எல்லாம் உறுதியாக மறுத்து பூந்தமல்லியிலேயே அடக்கம் செய்ய முடிவு பண்ணி செயலாக்கப்பபட்டது.
அத்தா பூந்தமல்லியில் இருந்தது சில மாதங்கள்தான். ஆனால் இது வரை யாருக்கும் வராத மக்கள் கூட்டம் அத்தாவுக்கு வந்தது. இதையெல்லாம்தான் எச்சத்தால் அறியப்படும் என்று வள்ளுவன் சொன்னானோ என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது.
இதற்கெல்லாம் மேலாக பூந்தமல்லிப் பள்ளிவாசலில் தோன்றில் புகழோடு தோன்றுக என்ற குறளுக்கு இலக்கணமாய் வாழ்ந்த  அத்தாவுக்காக ஒரு சிறப்புத் தொழுகை நடத்தினார்கள்.  அந்தத் தொன்மையான பள்ளியில் இப்படி ஒரு தொழுகை முதல் முறையாய் நடப்பதாய் கேள்விப்பட்டேன்.
இவையெல்லாம்  ஏற்படுத்திய ஒரு வகை பிரமிப்பு பிரிவுத் துயரைக் குறைக்கத் துணை புரிந்தது.  
ஆனால் இப்போது தொடர்ந்து எழுத முடியாத அளவுக்கு நெஞ்சை அடைப்பது போல் இருக்கிறது.
இறைவனாருளால் பயணம் தொடரும்