Friday, 30 September 2016

திருச்சி 30 .aவாழ்க்கைப்பயணமும் வங்கி அனுபவங்களும்


 

கேரளத்தில் இரண்டு ஆண்டு பணிக்குப்பின் தமிழ்நாடு .திருச்சி புத்தூர் கிளையில் பணி.
திரூரிலிருந்து வீட்டுச் சாமான்களை திருச்சி இப்ராகிம் ஸ்டோர்சுக்கு அனுப்பி விட்டு அத்தாவும் நானும் அங்கு போய் சில நாட்கள் தங்கினோம்.
குட்டை அம்பலம் என்று அழைக்கப்பட்ட முஹமதலி அண்ணன் அங்கு மேலாளர். இரண்டு பெஞ்சுகளை ஒன்றாகப்போட்டுத்தூங்குவார்.  தூங்கும்போது ஸ்டீரியோ போனிக் முறையில் பலத்த ஒலி வரும்.பெரிய குப்பி மகன் சாகுல சேகு பெரியாத்த மகன்  ஷேக் அப்துல்லா,அப்துல் காதர் சச்சா மகன் பெரோஸ் கான்  அங்கு பணியில் இருந்தார்கள் ..
தரகர்கள் மூலம் வீடு பார்க்க்கத்துவங்கினேன். அதில் ஒரு புது அனுபவம், படிப்பினை. வீடு பார்த்து மனதுக்குப் பிடித்து வாடகை, முன்பணமெல்லாம் பேசி முடித்தபின் பேர் கேட்பார்கள்..என் பெயரைச் சொன்னாவுடனே முகத்தில் அடித்தால் போல் முசுலிம்களுக்கு வீடு கிடையாது என்று சொல்லி விடுவார்கள். அதற்குப்பின் நான் வீடு பார்க்கப் போகும்போது முதலில் நான் முசுலிம் என்று சொல்லித்தான் பேசத் துவங்குவேன்.
கண்டோன்மென்ட் பகுதியில் ஒரு வீடு பிடித்தேன். சிறிய வீடுதான் ஆனால்  தண்ணீர் , குடிநீர் எல்லாம் வசதியாக இருந்தது . பேருந்து நிலையம்,,தொடரி சந்திப்பு, பேருந்து நிறுத்தம், வங்கி எல்லாவற்றிற்கும் அருகில் இருந்தது  
உரிமையாளர் அருகிலேயே குடியிருந்தார் .நவீன (உலர்?) சலவையகம் வைத்திருந்தார். துணிகள் துவைப்பது வீட்டில்தான். வேவையாட்கள் வராவிட்டால் அவரே வரிந்துகட்டிக்கொண்டு வேலையில் இறங்கி விடுவார். ஒரு மகன் இரண்டு மகள்கள் எல்லோரும் நன்றாகப் பழகுவார்கள்
வீட்டிற்கு அருகிலேயே காம்பியன் என்ற புகழ்பெற்ற ஆங்கிலோ இந்தியன் பள்ளி இருந்தது. அங்கு சேர்க்கை முடிந்துவிட்டதாகச் சொன்னார்கள்.. காவல் துறை அதிகாரி  ஜனாப் ஜப்பார் (செல்வி) செவன்த் டே அட்வெண்டிஸ் என்ற பள்ளியில் பைசல் பாப்டியை சேர்க்க உதவினார். மிக நல்ல பள்ளி .      
இப்ராகிம் ஸ்டோர்சில் தங்கியிருக்கையில் ஜனாப் அபூபக்க்கர் (ஓட்டை கிளாஸ்) வந்து  அத்தவுடன் அடிக்கடி ஞானம் , தத்துவம் பேசிக்கொண்டிருப்பார். ஒரு நாள் அவரிடம் இது மாதிரியான பெச்சுக்களால் என்ன பயன் என்று கேட்டேன். நீ சின்ன வயசு. இப்புப்ரியது. ஐம்பது அறுபது வயதுக்குமேல் புரியும் என்றார். ஐம்பது அறுபது எல்லாம் கடந்து போய்விட்டது ஞானமும் தத்துவமும் புரிந்ததா இல்லையா என்றே புரியவில்லை இது போன்ற ஒரு கருத்தைத்தான் மைத்துனர் அஜ்மீர் அலியும் அத்தம்மாவைப்பற்றி எழுதும்போது அகமியம் பற்றிக்  குறிப்பிட்டிருந்தார்
வீடு பிடித்து, பிள்ளைகளை பள்ளியில் சேர்த்தாகிவிட்டது..நல்ல பணிபெண்ணும் வீட்டு வேலைக்குக் கிடைத்தது .
வங்கிக்கிளையில் பெண்கள் பலர் பணியாற்றினார். ஒரு அதிகாரி (சுந்தரி ) இரண்டு சிறப்பு உதவியாளர்கள் ,நான்கு எழுத்தர்கள் பெண்கள். எல்லோருமே மிக இயல்பாகப் பழகுவார்கள் .சுந்தரி தன் மனதில் உள்ள எல்லாவற்றையும் என்னிடம் கொட்டிவிடுவார் . மேலாளர் அவர் சொல்வதற்கெல்லாம்- சரியோ தவறோ மற்றவர்கள் குறிப்பாக அதிகாரிகளான சுந்தரியும் நானும் அடங்கிப் போக வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் . அவருக்கும் எனக்கும் அவ்வப்போது மோதல் ஏற்படும்
தவ்லத் (ஷேக் அப்துல்லாவின்  சகோதரி ), அமானுல்லா திருச்சிக்கு அருகில் இருந்தார்கள் .அமானுல்லா தன்னை தவ்லத் புருஷன் என்ரூ அறிமுகம் செய்து கொள்வார் .ஈனா உறவினர் வீட்டில் பெண் எடுத்ததில் மிகப்பெருமை கொள்வார்
திருச்சிக்கு நான் மாற்றலாகி வந்த நேரத்தில்தான் தில்லியில் ஆட்சி மற்றம் ஏற்பட்டு , திரு மொரார்ஜி தேசாய் தலைமை அமைச்சராகப் பொறுப்பேற்றார். மந்திரம் போட்டது போல் சில மாற்றங்கள் நிகழ்ந்தன, குறிப்பாக சீனி. குடும்ப அட்டைக்குத்  தவிர வேறு எங்கும் கிடைக்காமல் இருந்தது எல்லாக்கடைகளிலும் குடும்ப அட்டைக்கு கிடைக்கும் அதே விலைக்கு தங்கு தடையின்றிக் கிடைத்தது  . இது போன்ற ஓரு நல்ல மாற்றம் அதற்குப்பின் நடந்த நினவு இல்லை. நல்லதுதான் நம் நாட்டுக்கு ஒத்து வராதே. விரைவில் திரு மொரார்ஜி பதவியிறக்கம் செய்யப்பட்டார்
திருச்சி பொதுவாக வாழ்வதற்கு நல்ல ஊர். தமிழ் நாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. எனவே தமிழ் நாட்டின் எந்தப்பகுதிக்கும் அண்டை மாநிலங்களுக்கும் எளிதில் போய்விடலாம் ,
திரு எம் ஜி ஆர்  முதல்வராய் இருந்தபோது திருச்சியை மாநிலத்தலை நகராக்க ஒரு நல்ல முயற்சி செய்தார் . ஏனோ அது நிறைவேறவில்லை.
திருச்சிக்கென்று சிறப்புகள் நிறைய உண்டு. மலைக்கோட்டை, மெயின் கார்ட் கேட்  பி ஹெச் ஈ எல், பாய்லர் தொழிற்சாலை, பொன்மலை ரயில் தொழிற்சசாலை,  வானொலி நிலையம ஆர் ஈ சீ (இப்போது என் ஐ ஈ டி )  ஜமால் முகமது கல்வி நிறுவனங்கள் , தூய ஜோசப் கல்லூரி, நத்தர்ஷா தர்கா , தெப்பக்குளம் ,ஸ்ரீரங்கம் உறையூர்  ஜிகர்தண்டா, கூடையில் விற்கும் நெய்பூந்தி இன்னும் பலப்பல
நாகரீக உடைகளையும் பாஷன்களையும் அறிமுகம் செய்வதில் திருச்சி முன்னணியில் இருப்பதாய்ச் சொல்வார்கள்
அருகில் உள்ள முக்கொம்பு, கல்லணை நல்ல சிற்றுலாத்தலங்கள்..
எல்லா இடங்களுக்கும் நகரப்பேருந்துகள் நிறைய இருக்கும். எனவே நகருக்குள் பயணம் எளிதாக இருக்கும்.
வீட்டுக்கு அருகில் இருந்த  மும்தாஜ் ஹோட்டல் என்னும் சிறிய உணவு விடுதியில் பிரியாணி, சமோசா ,பரோட்டா குருமா எல்லாம் நல்ல சுவையாக இருக்கும். .மெயின் கார்ட் கேட் பகுதியில் மைகேல் ஐஸ் கிரீம் மிகச்சுவையாகவும் விலை மலிவாகவும் இருக்கும்.
மிகச்சிறப்பாகப் பேசப்படும் குளத்தூரார்(அசைவ)  உணவு விடுதியில் இருமுறை சாப்பிட்டுப்பார்த்த்தேன். அப்படி ஒன்றும் சிறப்புத் தெரியவில்லை .பொதுவாக திருச்சியில் நல்ல கறி கிடைக்கும். அதுவும் மாலையில்கூட கிடைக்கும்..
பிராய்லர் கோழி அப்போதுதான் அறிமுகமாகி பரவிக்கொண்டிருந்தது.
திருச்சி சந்திப்பில் ஒரு உணவு விடுதியில் விலைப்பட்டியலில் பீரங்கி தோசை என்ற பேரைப் பார்த்து விட்டு நான்கு கொண்டு வரச்சொன்னேன். நல்லவேளை, உணவு விடுதிப்பணியாளர் முதலில் ஓன்று கொண்டு வருகிறேன் அதை நான்கு பேரும்  சாப்பிட்டு முடிப்பதே சிரமம். பிறகு அடுத்ததை வாங்கிகொள்ளலாம் என்று சொல்லி ஒரு பீரங்கி தோசையையும்  (வேறு யாருக்கோ கொண்டு போனது) காண்பித்தார். அவர் சொன்னது உண்மைதான். ஒரு ஐந்தாறு பேர் வயிறார சாப்பிடும் அளவுக்கு பெரிதாக இருந்தது. .அதோடு பீரங்கி தோசை ஆ.சையை விட்டு விட்டோம்,
அத்தா திருப்பத்தூர் பள்ளிவாசல் தலைவராக இருந்து , மலேசியா சிங்கபூர் ,பாங்காக் பயணம் போய் பள்ளிவாசல் கட்டிட நிதிக்காக ஒரு நல்ல தொகை பெற்று வந்தது . அந்தப்பயணம் போய் திரும்பி வந்து சில நாட்கள் திருச்சியில் தங்கிச் சென்றது
பள்ளிவாசல் பணம் அத்தாவின் பொறுப்பில் இருக்கும்போது உறவினர்கள் பலரும் ஆயிரம் கொடு. ஐயாயிரம் கொடு என்று நச்சரித்தது எரிச்சலாக இருந்தது .
கரீம் அண்ணன் ஒரு நாள் மாலை வங்கிக்கு வந்தது. இரவு  வீட்டுக்கு வந்து   விட்டு சென்னை போனது
ரஹீம் அண்ணன் அலுவல் வேலையாக திருச்சி வந்து ஒரு விடுத்யில் தங்கி இருந்தது . ஒரு நாள் வீட்டுக்கு வந்து விட்டுப் போனது.
மெஹராஜ் அக்கா உறவினர் பலருடன் திருமண அழைப்ப கொடுக்க வந்தது. அப்போது வீட்டில் நான் மட்டும்தான் இருந்தேன்..
இப்ராஹீம் ஸ்டோர்ஸில் பணியாற்றிய சாகுல், பெரோஸ்கான் அவ்வப்போது வந்து  போவார்கள்.
ஒரு நாள் நாகூர் தர்காவுக்குப்போனோம்...நுழையும் இடத்தில் சிலர் அமர்ந்திருந்தார்கள். நாகூர ஆண்டவருக்கு உங்கள் பெயரில் நூறு ரூபாய் எழுதியிருக்கிறது பணத்தை எடுங்கள் என்றார்கள். அதென்ன கணக்கு நூறு ரூபாய் யாரைக்கேட்டு எழுதினீர்கள் நான் நீங்கள் கேட்டதற்காக ஐந்து ரூபாய் தருகிறேன் என்றேன். ஐந்து ரூபாஎல்லாம் வாங்குவது இல்லை என்றார்கள். சரி விட்டு விடுங்கள் என்று அந்த இடத்திலிருந்து நகரப் போனேன். சரி உங்களை மனம் நோகச்செய்ய விரும்பவில்லை என்று சொல்லி ஐந்து ரூபாயை பிடுங்காத குறையாக வாங்கிக்கொண்டார்கள
தர்காவில் பல இடங்களில் நாகூர் ஆண்டவருக்கு படியில் ஒன்னேகால் ரூபாய் வையுங்கள் என்பார்கள் .யாராவது ஏமாந்து வைத்தால் அவர்கள் தலையை மயிலிறகால்  தடவி விட்டு பணத்தை எடுத்து சட்டைப்பையில் போட்டுக்கொள்வார்கள்  
இது போன்ற செயல்கள் தர்க்காவில் அடங்கியிருக்கும் அவுலியாக்களின் கண்ணியத்தைக் குறைக்கின்றன .
கண்டோன்மெண்டில் இருக்கும்போதுதான் முதன் முதலில் மிக்சி வாங்கினோம்
கண்டோன்மென்ட் வீடு முழுக்க முழுக்க நகராட்சி வழங்கும் நீரை நம்பியே இருந்ததால் தண்ணீர் பிரச்சனை உருவானது எனவே உறையூர் பகுதியில் ஒரு வீடு பார்த்துக் குடியேறினோம்.
மாடியில் எங்கள் வீடு. கீழே உரிமையாளர் வீடு. உரிமையாளர் ஷண்முகத்தேவர் , அவர் மனைவி நளாயினி பெண்மக்கள் ரமா ராஜி , ஆண்மக்கள் வேலாயுதம், பாஸ்கர் பாலு  அனைவரும் நெருங்கிய உறவினர் போல் மிக அன்பாகப் பழகுவார்கள்
அவர்கள் வீட்டில் என்ன சிறப்பு உணவு செய்தாலும் எங்களுக்குக் கொடுக்காமல் இருக்கமாட்டார்கள். எங்களுக்காக ஹலால் கோழி, கறி வாங்குவார்கள்.
புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிட மாட்டார்கள். அதற்கு ஈடு கட்டுவது போல் புரட்டாசிக்கு முதல் நாள் அசைவத்தில் என்ன என்ன வகைகள் சமைக்க முடியுமோ அவ்வவளவும் சமைத்து உண்பதொடு எங்களுக்கும் அவ்வளவும் கொடுத்து விடுவார்கள்.
கடல் மீன் சாப்பிட மாட்டார்கள். கூடிய மட்டும் உயிரோடு இருக்கும் நாட்டு மீன் வாங்கி  மண் சட்டியில் சமைத்து அடுத்த நாள்தான் சாப்பிடுவார்கள்
ஒரு நாள் பிரியாணி செய்து அவர்களுகுக் கொடுத்து விட்டோம். ஜோதி அள்ளி அள்ளி வைத்ததைப் பார்த்த பாப்டி “அம்மா நமக்கும் கொஞ்சம் இருக்கட்டும்” என்று சொன்னது  
தேவர் வீட்டில் இருக்கையில் ஷஹா அமீதா வந்து சில தினங்கள் தங்கிப்போனார்கள். முக்கொம்பு, கல்லணை போய் வந்தோம்.
எஸ் ஐ எஸ் அண்ணன் ஒரு முறை வந்து எதோ ஒரு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்துச் சென்றார்.
அத்தாவுடன் தாவன்னாப்பெரியத்தா வந்து போனார்கள்
கண்டோன்மென்ட் வீடு போல் இந்த வீட்டில் பணிப்பெண் அமையவில்லை . ஒரு பெண் மிக நன்றாக வேலை செய்தார். தரையை.த துடைத்தால் கண்ணாடி போல் பளபளக்கும்   அவர் நகரசுத்தித் தொழிலாளி என்பதால் வீட்டு உரிமையாளர் குடும்பம் அன்புடன்  எதிர்ப்புத் தெரிவித்தனால் நிறுத்தி விட்டோம்.
ரோசப்புப் போட்ட ஒரு அழகிய  உறுதியான சாப்பாட்டு மேசை தேவர் வீட்டில் இருக்கும்போது வாங்கினோம். இன்னும் கூட அது பயன்பாட்டில் இருக்கிறது.
பிள்ளைகளை வீட்டுக்கு அருகில் உள்ளா ஒரு பள்ளியில் சேர்த்தோம். அருகில் மதரசா இருந்ததால் ஓதவும் போய் வந்தார்கள் 
திருச்சியில் பணியாற்றியபோது பணி நிமித்தம்  பேரளம், பணிக்கம்பட்டி, தேவூர் தெடாவூர் வல்லம் கிளைகளுக்குப போய் வந்தேன்
.தேவூர் கிளைக்கு அருகில் உள்ள நாகப்பட்டினத்தில் ஒரு விடுதியில் தங்கி இருந்தேன். மதிய உணவுக்கு ஒரு விடுதிக்குப் போனேன். .மீன் குழம்பு, மீன் பொறியல், ஒரு சின்னத்தட்டு நிறைய சிறிய இறால் பொறியல் எல்லாம் மிகக்குறைந்த விலையில் சாப்பிட்டேன். பணம் குறைவாக வாங்கி விட்டார்களா என்ற ஐயத்தில் அடுத்த நாளும் அதே உணவு விடுதிக்குப்போய் அதே உணவு சாப்பிட்டேன். அதே தொகைதான் கேட்டார்கள் .
தெடாவூர். கிளை சேலம் ஆத்தூருக்கு அருகில் இருக்கிறது. அங்குள்ள முசுலீம்கள் பலர் நெற்றியில் பொட்டு பச்சை குத்தியிருந்தது பார்த்து வியப்பாக இருந்தது
திருச்சியில் வெள்ளிகிழமை கூட  தொழுகைக்குப் போன நினைவில்லை..நோன்பு விடாமல் வைப்போம்.
இத்துடன் இப்பகுதியை நிறைவு செய்கிறேன்,
சென்ற பகுதி பற்றி கருத்து, பாராட்டுத் தெரிவித்த பாப்டிக்கு நன்றி.
இணைய தளமும் , தரைவழித் தொலைபேசியும் ஒரு வாரமாக சரியாக இயங்கவில்லை. எனவே வேறு யாரும் கருத்துக்கள் தெரிவித்தார்களா என்று தெரியவில்லை .தெரிவித்திருந்தால் நன்றி
இ(க(டைச் செருகல் :
திருச்சி பற்றி இரு நினைவுகள்
நாங்கள் காரைக்குடியில் இருக்கும்போது ஜனாப் ஜாபர் அலி அண்ணன் திருமணம் திருச்சியில் நடைபெற்றது. பீயன்னா மூனா மாமா எம் பீ சச்சாவுடன் நான் முதல் நாளே போய் விட்டேன். இப்போது மிக முக்கியக் குடியிருப்பு /வணிகப் பகுதியாக விளங்கும் தில்லை நகர் அப்போதுதான் உருவாகிக்கொண்டிருந்தது . திருப்பத்தூர் மக்கள் பிரியாணி சுவைத்தது அந்தத் திருமணத்தில்தான் .மாவன்னாவாக இருக்குமோ என்று நக்கல் பேச்சு. வேறு .
அடுத்து இரண்டு மாதங்களுக்கு முன் காத்தூன் அக்கா, சரிவு மாமாவின் பேத்தி திருமணத்திற்காக ஜோதியும் நானும் திருச்சி போய் வங்கி விடுமுறை இல்லத்தில்  தங்கினோம்.. ஆட்டோ ஓட்டுனர்களும் உணவு விடுதியினரும் மிகக் கனிவாகப் பழகியது போல் தோன்றியது.
ஸ்ரீரங்கத்தில் கோயிலுக்கு மிக அருகில் உள்ள ஒரு தங்கும் விடுதியின் ஐந்தாறு அறைகளை  விடுமுறை இல்லமாக  பகுத்திருந்தார்கள் .பொதுவாக வங்கி விடுமறை இல்லத்தில் தங்கும்போது we will feel totally at home . அதற்கு நேர் மாறாக இருந்தது இந்த இல்லம். எங்கு பார்த்தாலும் அறைகளில் கூட  சாமி படங்கள், வழிபாட்டு நேரம் பற்றிய அறிவிப்புகள் ..அருகில் மசாலா ,பூண்டு வெங்காயம் சேர்க்காமல் சமைக்கும் உணவு விடுதி . கோவிலுக்கு வருபவர்களுக்காகவே உருவாக்கியது போல் இருந்தது .மொத்தத்தில் we felt like odd man out

இறைவன் அருளால்                                                                                                                                                                                                                        பயணம் தொடரும்

வலை நூல் முகவரி
கூகிள் தேடுதலில்
sherfuddinp.blog.com
   .  .  ,



Friday, 23 September 2016

திரூர்(கேரளா) 29. வாழ்க்கைப்பயணமும் வங்கி அனுபவங்களும்



“சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேர நன்னாட்டிளம் பெண்களுடன் -----“
என்று பாடினான் பாட்டுக்கொரு புலவன் பாரதி
கடவுளின் சொந்த நாடு (God’s own country ) என்று சிறப்பாகப் பேசப்படும் கேரளாவுக்கு பாரதியார் போனதாய் நான் படித்ததில்லை .
பாரதிக்குக் கிடைக்காத கேரள வாழ்க்கை எனக்கு வாய்த்தது
திருநெல்வேலி நகர்க்கிளையிலிருந்து பதவி உயர்வு. கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் கல்பகஞ்சேரி கிளைக்கு மாறுதல்
நெல்லையிலிருந்து தொடரியில் கொல்லம் போய் அங்கிருந்து இன்னொரு தொடரியில் திரூர் போய்ச் சேர்த்தேன்..அங்கொரு விடுதியில் தங்கி கல்பகஞ்சேரி கிளைக்குப் போனேன்.
கிளைக்குப் போய்ச் சேர்ந்த சில நாட்களில் மேலாளர் விடுப்பில் போனதால் பொறுப்பு மேலாளராகப் பணி புரிந்தேன்., வெளி நாட்டிலிருந்து திரும்பிய வாடிக்கையாளர் ஒருவர் ஒரு செய்தித்தாளில் பொதிந்த ஒரு பெரிய பொட்டலத்தை அன்பளிப்பாகக் கொடுத்தார். உள்ளே வெளி நாட்டுத்துணி, புடவை, நறுமணம், ஜம் ஜம் நீர் என பல பொருட்கள் . ஜம்  ஜம் நீர் தவிர மற்றவற்றை அவரிடமே திருப்பிக்கொடுத்து விட்டேன்,
கேரளாவுக்கே உரிய இயற்கை எழில், அழகிய பெண்கள் போக மலப்புரப் பகுதிக்கு இன்னும் சில சிறப்புக்கள உண்டு. நிறைய வெளி நாடு வாழ் மக்கள். ,கல்வியறிவு சற்றுக்குறைவு, மாப்பிளா முசுலிம்கள். விடுதலைப் போராட்டத்தில் அவர்கள் பங்கு  இவை அடிப்படைச் சிறப்புக்கள் 
கிளைக்கு அருகில் வீடு பார்க்கத் துவங்கினேன் . சில பல வீடுகளைப் போய்ப் பார்த்தேன். பெரும்பாலும் தோட்ட வீடுகள். ஆயிரம் தென்னை மரங்களுக்கு நடுவில் ஒரு வீடு இருக்கும். கழிப்பறை இருக்காது. மேலும் மிக உயரமான ,ஆழமான மேடு பள்ளங்கள் நிறைந்திருக்கும் சிறு குழந்தைகளுக்கு பாதுகாப்பானதாகத் தோன்றவில்லை , மேலும் பைசலை பள்ளியில் சேர்க்க வேண்டிய வயது வந்து விட்டது
எல்லாவற்றையும் எண்ணிப் பார்த்து திரூரில் வீடு பார்க்க முயற்சித்தேன். இதற்கிடையில் குருவாயூர் அருகில் உள்ள எடப்பால் என்ற கிளையில் மேலாளர் விடுப்பில் போவதால் அங்கு போய் பொறுப்பு ஏற்கும்படி பணிக்கப்பட்டேன், ஒரு மாத காலத்திற்கு மேல் திரூர் விடுதியில் தங்கி  அங்கு போய்வந்தேன்.
திரூரில் கே என் எஸ் ஹாஜியார் என்ற ஒரு பெரிய நிறுவனம் கயிறு விற்பனையில் ஈடு பட்டிருந்தது .அதன் உரிமையாளர், பெரும்பாலான பணியாளர்கள் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள். .திரூரில் இருந்த இரண்டாண்டு காலமும் மிகவும் உதவியாகவும் ஆதரவாகவும் இருந்தார்கள்.
அவர்கள் மூலம் ஒரு வீடு பார்த்தேன் .நல்ல வீடு, வாழப்புள்ளி ஹவுஸ் என்று பெயர், பூக்கொயில் பசார் என்ற பகுதியில் வீடு. வீட்டுக்குள் கழிவறை, தண்ணீர் மோட்டார், எல்லாம் இருந்தது .ஒரு அறையை உரிமையாளர் பூட்டி வைத்திருந்தார். அவர் அருகிலுள்ள ஊரில் அஞ்சலக அதிகாரியாக இருந்தார் .வீடு பிடித்ததும் விடுப்பு எடுத்துக்கொண்டு நெல்லை பேட்டை போனேன்..எதிர்பாராத அம்மா மறைவு. பின் எல்லோரும் திருப்பத்தூர் போனோம் .அங்கிருந்து திரூர் பயணம்
அத்தா எங்களுடன் திரூர் வந்தது . பேட்டையில் எங்கள் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்த லக்ஷ்மி, மைத்துனர் சம்சு இவர்களும் வந்தார்கள்
வீட்டு உரிமையாளருக்கு இவ்வளவு பேர் வந்தது பிடிக்கவில்லை. வீடு பார்க்க அழகாக இருந்தாலும் மிகவும்  வலுவற்றதாக இருந்தது. சற்று வேகமாக நடந்தால் தரை அமுங்குவது போல் இருக்கும்..ஒரு நாளைக்கு குறைந்தது ஒருமுறை உரிமையாளர் வீட்டுக்குள் நுழைவார் .அவர் தொல்லை பொறுக்காமல் வேறு வீடு பார்க்க வேண்டியதாயிற்று
அந்த வீட்டுக்கு எதிரில் இருந்த பாப்பு குடும்பம் முழுதும் மிகவும் தோழமையுடன் பழகுவார்கள். நிறைய பிள்ளைகள் பெற்ற பாப்புவின் மனைவியின் உடலமைப்பு ஒரு இளம்பெண் போல் இருக்கும். முகத்தைப் பார்த்தால்தான் வயது தெரியும்.
பாப்புவின் மகள் பானு ஜோதியின் நெருங்கிய தோழி. ஜோதிக்கு மலையாளம் தெரியாது பானுவுக்கு தமிழ் தெரியாது. இருவரும் மிக இயல்பாக நீண்ட நேரம் பேசிக்கொண்டிருப்பார்கள் பாப்புவின் பிள்ளைகள் எல்லாம் மிக அழகாக இருப்பார்கள், பாப்புவின் மகன் கரீம் அவர்கள் வீட்டில் எந்த வேலையும் செய்யமாட்டன். நாங்கள் என்ன சொன்னாலும் தட்டாமல் செய்வான்
வீடு மாறிய பின்பும் இந்த நட்பு தொடர்ந்தது நாங்கள் போன இரண்டாவது வீடு முக்ரி வீடு.. முகரி- பள்ளி வாசல் மோதினார் ) இது சற்றுப் பழைய வீடு. இங்கிருக்கும்போதுதான் அம்மாவின் முதல் ஆண்டு நினைவு அனுசரிக்கப்பட்டது .பலரும் வெளியூர்களில் இருந்து வந்திருந்தார்கள்.. சமையலுக்கு ஒரே ஒருவர் வந்து மிகச் சுவையான பிரியாணி செய்து பரிமாறி விட்டும் போனார்..பெரிய தொகை எதுவும் கேட்கவில்லை. காய்கறி வாங்க கருத்தக்கிளி அண்ணன் இன்னும் சிலரோடு நான் போயிருந்தேன். காய்கறிக்கூடையை வீட்டுக்குக் கொண்டுவர சுமை தூக்கிகள் கேட்ட கூலி காய்கறி விலைக்குமேல் இருந்ததால் நாங்களே தூக்கிகொண்டு வந்தோம். முக்ரி வீட்டில் கிணறு வற்றிவிட்டதால் முசலியார் வீட்டுக்குக் குடி பெயர்ந்தோம். (முசலியார்- அசரத்)
வீட்டைச்சுற்றி பாக்கு மரங்கள் இருக்கும். வெற்றிலைக்கொடிகள் பாக்கு மரத்தில் படர்ந்து வளரும்.,மரத்திலிருந்து பறித்த பச்சைபாக்கை வாயில் போட்டால் ஒருவித மயக்கம் உண்டாகும்.
பைசல் அங்குதான் பள்ளியில் சேர்ந்தான் ஒரு கிறித்தவபெண் துறவிகள் நடத்தும் பள்ளி. எப்போது நாங்கள் பள்ளிக்குப் போனாலும் விருந்தினர் போல் அன்பாக உபசரிப்பார்கள். நான் பணி நிமித்தம் வெளியூர் சென்றிருந்தேன். அத்தாவும் மைத்துனர் சக்ரவர்த்தியும் பைசலை பள்ளியில் சேர்க்கப்போனர்கள . பள்ளியில் சேர்த்து விட்டு ஐயாவைப்பார்த்து பேரன் அழுக, பேரனைப்பார்த்து ஐயா கண்கலங்க ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தார்கள்
தினமும் பைசலை பள்ளிக்கு அழைத்துச்சென்று. கூட்டிக்கொண்டு வருவது பணிப்பெண் லக்ஷ்மி..
பள்ளியில் ஒரு கலை நிகழ்ச்சியில் பங்கேற்று ஒரு பரிசும் வாங்கினான் பைசல் . இசுலாமியர்கள் நிறைந்த பகுதி என்பதால் பள்ளியில் சிறுநீர் கழிக்கும் இடம் கூட நிறையத் தண்ணீருடன் சுத்தமாக இருக்கும்.
சிறு குழந்தையாக இருந்த பாப்டி எப்போதும் தரையில் உட்காராது, ஏதாவது உயரத்தில்தான் உட்காரும். பூனையைக் காண்பித்தால்தான் ஒழுங்காக சாப்பிடும்.
பலமாநிலங்களைச் சேர்ந்த பல இடங்களில் வாழ்ந்து, பணியாற்றிய எனக்கு கேரளக் கலாச்சாரம் மிகவும் மறுபட்டதாகத் தெரிந்தது.
குறிப்பாகத் திருமணம். ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் பெண்ணுக்கு இரண்டு முறை திருமணம் முடிந்து முறிந்தது அறிந்து  அதிர்ச்சியும் வியப்பும் அடைந்தேன்.
திருமணமாகி உடனே பிள்ளை பெற்றுக்கொள்ள மாட்டார்கள் ஓரிரு ஆண்டுகள் டேட்டிங் போல் சேர்ந்து வாழ்வார்கள். மனம் ஒத்துப்போகாவிட்டால்  உடனே மண முறிவு.
மண முறிவு என்பது பெரும்பாலும் பெண் தரப்பில் இருந்துதான் ஏற்படுகிறது
ஆண்கள் வெளிநாடு போய்விடுவதால் பெண்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும். வெளியில் போகும்போது புடவை , வீட்டில் கைலி .மாலை ,இரவில் வெளியே போவது இல்லை
கல்வியறிவு அதிகம் இல்லாததால் வெளி நாடுகளில் பெரும்பாலும் கூலித் தொழிலாளி போன்ற பணிகளுக்குத்தான் ஆண்கள் போகின்றார்கள். ஒரு மாத விடுமுறையில் வந்து சில நாட்களில் பெண் தேடத்துவங்கி பெண் கிடைத்து திருமணம் முடிந்து சில நாட்களில் விடுமுறை முடிந்து விடும். திரும்ப வெளி நாடு போகவேண்டும் இதனால் நிறைய கலாச்சார சீர்கேடுக்ள, ஒழுக்கக்கேடுகள்
விமானப்போக்குவரத்து பம்பாயிலிருந்துதான். அங்கிருந்து தொடரியில் கள்ளிக்கோட்டை வந்து அங்கிருந்து வாடகை மகிழுந்தில் பந்தாவாக ஊருக்கு வருவார்கள். குடும்பத்துடன் விலை உயர்ந்த உணவு விடுதிகளுக்குப் போவார்கள். நோய் எதுவுமே இல்லாவிட்டாலும் மருத்துவரிடம் போய் வருவார்கள்.
இப்படி தாராளமாக செலவழித்து விட்டு, விடுமுறை முடிந்து விமானத்தைபிடிக்க பம்பாய் போவதற்கு கையில் பணம் இருக்காது .கைகடிகாரம், மோதிரம் எதையாவது விற்று, அடகு வைத்துப் பணம் புரட்டுவார்கள
ஜூன் பிறந்துவிட்டால் குழாயைத் திறந்து விட்டது போல் மழை. கொட்டோ கொட்டென்று கொட்டிக்கொண்டே இருக்கும்.  மழை சிறிது நேரம் நின்றால் தண்ணீர் எங்கும் தேங்கி நிற்காமல் வடிந்து விடும்
பத்ரி என்பது அந்தபகுதியின் சிறப்பு உணவு..அரிசி மாவில் எண்ணெய் சிறிதும் இல்லாமல் வரையோட்டில்(மண் பானையின் உடைந்த பகுதி) வைத்துச் சுடுவார்கள். எட்டு முழ வேட்டி அளவுக்கு மெலிதாக இருக்கும். இதற்கு பக்க உணவு கோழிக்குழம்பு .நல்ல பசியில் இருந்தால் பதினைந்து இருபது பத்ரி எளிதாகச் சாப்பிடலாம்
உணவு விடுதிகளில் சீரகத் தண்ணீர் குடிக்கக் கொடுப்பார்கள்
அந்தப்பகுதியில் நடக்கும் திருமணம் போன்ற எல்லா விழாக்களுக்கும் எங்களை வற்புறுத்தி விருந்துக்கு அழைத்துச் செல்வார்கள். நெய்ச்சோறு, பிரியாணி மிக்ச்சுவையாக இருக்கும் . மாட்டுக்கறி என்று தெரிந்தால் தவிர்த்து விடுவோம்.
பொருளாதார நிலைக்கு ஏற்ப ஆடு  கோழி, மாடு சமைப்பார்கள்.  சில விழாக்களில் மூன்றுமே சமைத்து வரும் விருந்தினரின் தகுதிக்கேற்ப பரிமாறும் இழி செயலும் நடக்கும்
திருமண அழைப்பிதல் அடிக்கும் பழக்கம் இல்லை. நேரில் போய் சொல்வது மட்டுமே. திருமணத்தில் பெண் யார், மணமகன் யார் திருமணம் எப்போது  என்றெல்லாம் பார்க்கும் வழக்கம் இல்லை. வந்தோமா  சாப்பிட்டோமா போனோமா என்றிருப்பார்கள். . மணமகன் வீட்டில் இருந்து மொத்தம் ஒரு பத்துப் பேருக்குமேல் வரமாட்டார்கள் . மிக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே மண விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்     
மத்தி மீன் மிகப்புதிதாகக் கிடைக்கும். தினமும் காலையில் பணிபெண் சொல்லாமலே வாங்கி வரும் ஒரு ரூபாய்க்கு பத்துப்பதினைந்து கிடைக்கும். நல்ல சுவையாக இருக்கும். உடல் நலத்துக்கு, குறிப்பாக இதயத்துக்கு மிகவும் உகந்தது என்பார்கள்
மீன் கிடைக்கும் அளவுக்கு புதிய காய்கறிகள் கிடைக்காது. கீரை முதல் முருங்கைகாய் வரை எல்லாம் கிலோ கணக்கில்தான் விற்பார்கள். பேரம் பேசும் பழக்கம் கிடையாது கடைக்கு யாரும் பை கொண்டு போக மாட்டார்கள் . எது வாங்கினாலும் செய்தித்தாளில் பொதிந்து கொடுப்பார்கள்
ஞாயிற்றுக்கிழமைகளில் வாரச்சந்தை நடக்கும்,அத்தா  சம்சு ,நான் மூவரும் போவோம். .விலை குறைத்துக் கேட்ட்டால் உடனே “நீங்கள் பாண்டி நாடா ?” என்று கேட்பார்கள் .
பழக்கமில்லாததால் மாட்டுக்கறிக் கடையைப் பார்த்தாலே வயிற்றைப் புரட்டும். அதிலும் எருமை மாடு – பார்க்கவே அச்சமாக இருக்கும்.  அங்குள்ள தட்ப வெப்ப நிலைக்கு அதுதான் உடலுக்கு நல்லது என்கிறார்கள். அது போல் ஒலைப்பாய்தான் படுக்கப் பயன்படுத்துவார்கள் . கோரைப்பாய் வாதம் உண்டாக்கும் என்று தவிர்த்து விடுவார்கள்
சந்தையில் ஓடுடன் கூடிய புளியங்காய் கிடைக்கும் .அதை மீன் குழம்புக்குப் பயன்படுத்துவார்கள். நமக்குக் காய்கறி போல அவர்களுக்கு மீன். சற்றுப் பழையதாய் இருந்தாலும் வாங்கி விடுவார்கள்.
சுத்தத்தை மிகவும் பேணுவார்கள். வீட்டில் ஒரு தூசு தும்பு இல்லாமல் பளிச்சென்று இருக்கும். காலைகழுவாமல் வீட்டுக்குள் நுழைய மாட்டார்கள். நின்று கொண்டுகுனிந்த நிலையில் பாத்திரம் கழுவுவார்கள், துணி துவைப்பார்கள் , மீன் சுத்தம் செய்வார்கள். பார்க்கும் நமக்கு முதுகு வலிப்பது போல் இருக்கும். மிகக்குறைந்த நீரைப்பயன்படுத்தி பளீரென்று சுத்தமாக்கி விடுவார்கள்
மீனை முதலில் அவித்துப் பிறகு பொறிப்பார்கள்.. ஜோதி அவிக்காமல் பொறிப்பதைப் பார்த்து வியப்படைந்து “ பெரிய பணக்காரர்கள்தான் இப்படி நிறைய எண்ணெய் ஊற்றிப் பொரிப்பார்கள் என்று சொல்வார்கள்.
பாலிலிருந்து தயிர் வரும் என்பது அவர்களுக்கு புதிய செய்தி. அவர்களுக்குத் தயிர் என்றால் தகரப் பெட்டியில் வரும் ஊத்துக்குளி புளித்த தயிர்தான் .
மிக்சியை காட்சிப்பொருளாகப் பார்த்து வியப்பார்கள்.  
திருட்டுப்பயம் இல்லையென்றே சொல்லலாம். தப்பித்தவறி திருட்டு நடந்தால் அது  தனியே அவற்கொரு குணம் உண்டு என்று பாடல்பெற்ற   நம் இனத்தவரின் வேலயாயத்தான் இருக்கும். .வெள்ளிகிழமைகளில் பிச்சை கேட்டு வருவபர்களும் நல்ல தமிழ் பேசுவார்கள்.
மலைப்பாங்கான் பூமி என்பதால் வீடு கட்ட அடிக்கல் பெரிதாகப் போட மாட்டார்கள். சில வீடுகளைப்பார்க்க   அந்தரத்தில் தொங்கிக்கொண்டு இருப்பது போல் தோன்றும்.
மிகப்பள்ளமான இடங்களில் அமைந்திருக்கும்  வீடுகளில் இருந்து மேலே மிக எளிதாக ஏறி வருவார்கள்.
செக்கிழுக்கும் செம்ம்மல்களை நிறையக்காணலாம் திரூரில்.வீடுகளில் இருக்கும் செக்கில்  தேங்காயைப்போட்டு இரண்டு பெண்கள் சுற்றி எண்ணெய் எடுப்பார்கள் .
முசுலிம்கள் நிறைந்த பகுதி என்றாலும் பெருநாளெல்லாம் சிறப்பாகக் கொண்டாட மாட்டார்கள் . வெளி நாட்டில் இருப்பவர் எப்பபோது  விடுப்பில் வருகிறாரோ அன்றுதான் எல்லாப பெருநாளும்
வங்கியில் ஒரு வாடிக்கையாளர் குடையை தோளில் மாட்டிக்கொண்டு வருவார். ஒவ்வொரு முறையும் மறக்காமல் கேட்கும் கேள்வி நீங்கள்தானே மேனேஜர் .  நிறையப்பணம் போடும் அவர் வங்கி பாதுகாப்புப் பெட்டகத்தை உறுதியாக இருக்கிறதா என்று  தட்டிப் பார்ப்பார் .
வங்கிக்கு அருகில் கூரை வேய்ந்த  ஒரு சிறிய தேநீர்க்கடை இருக்கும். அங்கு தேநீர் அருந்தி பீடி புகைக்கும் ஒருவர் சிறிது நேரத்தில் வங்கிக்கு ஒரு பெருந்தொகையுடன் வருவது முதலில் வியப்பாக இருந்தது. போகப்போக பழகி விட்டது.
பெரும்பாலான வாடிக்கையாளர்கள் வேட்டியுடன்தான் வருவார்கள்.மேலாளர் அறைக்குள் வரும்போது காலணியைக் கழற்றி விட்டு வருவார்கள்  .வங்கியில் புதிதாகச் சேரும் எழுத்தர்கள் தகுதிகாண் பருவம் முடியும்வரை வேட்டியில் வருவார்கள். வேலை உறுதியானவுடன் கால்ச்சட்டைக்கு மாறுவார்கள்
திரூர் போன புதிதில்  சஹா வந்து ஒரு சில நாட்கள் தங்கிப்போனான்.
எம் பீ சசசாவும் அஜுமலும் ஒருமுறை வந்து போனார்கள் அஜ்மலுடன் மூன்று முடிச்சு படம் பார்த்தேன். எப்போதாவது தமிழ் படம் போடுவார்கள் .திரைஅரங்கில் இடைவேளை விட்டவுடன் சிகரட் லைட்டரால் பீடி பற்ற வைப்பது ஒளியும் ஒலியுமாகத் தோன்றும்
எம் பீ சச்சாவுடன் அத்தா வால்பாறை (இந்தியன் வங்கி சக்கரவர்த்தி, அமீதா) போய் வந்தது
தாவன்னாப் பெரியாத்தா ஓரிரு நாட்கள் வந்து தங்கினார்கள் . இந்த்க்காட்டுக்குள் எப்படி வழியறிந்து நடமாடுகறார்கள் என்று வியப்புத் தெரிவித்தார்கள்   
பேச்சுத்திறனாலும் கைரேகை பார்ப்பதாலும் அத்தாவுக்கு நிறைய நண்பர்கள். .மலையாளமொழியைக் கற்று தேர்ந்த அத்தா ஒரு கூட்டத்தில் மலையாளத்தில் உரையாற்றி சாதனை புரிந்தது
கே என் எஸ்இல்  அடிக்கடி விருந்து நடக்கும் ..உணவு சுவையாக இருக்கும் .உணவுக்குமுன் பசியைத்தூண்ட ஒரு கருப்புத்தேநீர் கொடுப்பார்கள் .அதுவும் நல்ல மணமாகவும் பசியைத்தூண்டுவதாகவும் இருக்கும். அத்தா வாரவாரம் ஜும்மாத் தொழுகைக்குப் பின் அங்கு சாப்பிடப்போகும்
திரூர் போன புதிதில் ஒரு மாதம் சென்னையில் வங்கி அலுவலர் பயிற்சி .மவுண்ட் சாலையில் மினர்வா விடுதியில் தங்கினேன். அருகில் உள்ள மினர்வா திரை அரங்கில் பதினாறு வயதினிலே படம் ஓடிக்கொண்டிருந்தது. போ ய்ப்பார்த்தேன் .  
 ஷஹா திருமணம் திருப்பத்தூரில் நடந்தது..அதற்காக விடுமுறையில் எல்லோரும் அங்கு போனோம். பணிப்பெண் லட்சுமியை திரூரில் விட்டுப்போனோம்.
. ஷஹா திருமணம் முடிந்த சில நாட்களில் எனக்கு திருச்சிக்கு மாறுதல் ஆகியிருப்பதாய்  தந்தி வந்தது.
அத்தாவும் நானும் மட்டும்  வீட்டைக்காலி செய்ய திரூர் போனோம். அங்கு பணிப்பெண் சற்று மாறுபட்ட மனநிலையில் இருந்தது..மிகவும் சிரமப்பட்டோம். பிறகு கே என் எஸ்ஸில் பணியாற்றும் ஒருவர் திருநெல்வேலிக்காரர் –அவரிடம் பணிப்பெண்ணின் இரண்டு ஆண்டு ஊதியமும் வழிச்செலவுக்குப் பணமும் கொடுத்து திருநல்வேலியில் கொண்டு ஒப்படைக்கச்சொன்னோம். மிகவும் சிரமப்பட்டு பேட்டையில் கொண்டு போய் ஒப்டைததாய்ச் சொன்னார்.
வீட்டுச்சாமன்களை சிப்பம் கட்டி சுமையுந்தில் ஏற்றுவதிலும் கே என் எஸ் மிகவும் ஒத்தாசையாக இருந்தார்கள்
சாமான்களை திருச்சி இப்ராஹீம் ஸ்டோர்ஸ் கிட்டங்கிக்கு அனுப்பி வைத்தோம். பிறகு அத்தாவும் நானும் திருச்சி போனோம் .
இத்துடன் இப்பகுதியை நிறைவு செய்கிறேன்.
சென்ற பகுதி பற்றி கருத்துக்கள் பாராட்டுகள் தெரிவித்த பாப்டி, சாகுல் சாஜித்,நஸ் ரீன்  ,சகா சகோதரிகள் மெஹராஜ் ஜோதி சுராஜ் அனைவருக்கும் நன்றி
மெஹராஜ்
திருநெல்வேலி நினைவுகள் மிகவும் அருமை .கம்ப்யூட்டரில் ஸ்டோர் பண்ணி வைத்தது போன்ற உன் அடுக்கடுக்கான நினைவுகள் ஆச்கரியம் கொடுக்கிறது (மாஷா அல்லாஹ்). ஷாகுல், வஹாப், ராஜாத்தி,இப்ராஹீம் எல்லோருடைய செயல்களையும் ஞாபகமாக எழுதியது ஆச்சரியம் .அம்மாவின் மறைவு பற்றி விரிவாக எழுத முடியும் ஆனால் முடியவில்லை என்ற வரிகள் மனதைக்கலங்க வைத்தது .
அத்தம்மா நல்ல ரசனையோடு சாப்பிடும். காலையில் புரோட்டா குழம்பு. மதியம் நெய் இல்லாமல் சாப்பிடாது .கோ;லா உருண்டையை வெயிலில் காய வைத்து பல நாட்கள் சாப்பிடும் . திருப்பத்தூர் முழுதும் நம் உறவினர்கள் .மிக நன்றாக இருக்கும்
நஸ் ரீன் :
சூப்பர் மாமா எதுக்கு முடியனும் எழுதுங்கள் நாங்களும் தெரிந்து கொள்வோம்
மெஹராஜ் (நெல்லை.2)
நன்றாக உள்ளது. .கோவைக்குப்பிறகு மற்ற ஊர்கள் அதிகம் தெரியாது .விருந்தாளியாக வருடம் ஒருமுறைதான். அம்மாவின் உபசரிப்பு சிறப்பாக இருக்கும் .முட்டைதோசை, பட்டர் டீ, நெஸ்காபி என எல்லாம் ஸ்பெஷல் .எல்லோருக்கும் பிறந்த எல்லாகுழந்தைகளுக்கும் பிறந்த பின் அம்மா செய்யும் கவனிப்பு வேறு யாரும் செய்ய முடியாது .ஹாஸ்பிடல் போகும் முன் குளிக்க வைத்து இரட்டைச்சடை,.குழந்தை பிறந்தபின் வெற்றிலையில் கோரோசனை, தேன்.. குழந்தைக்கு மண் கிண்ணத்தில் மோதிரம் உரசி தேன் பாங்கு சொல்லி ஊட்டப்படும்.. காலையில் டெட்டால் கலந்த வெந்நீர் குளியல், கருப்பட்டி காபி, இஞ்சிச்சாறு, அஞ்சு மருந்து .வாராவாரம் லேகியம் சூப், நாற்பது அன்று வீட்டுக்கூரை தவிர எல்லாம் கழுவப்படும் ,
சாகுல்
 என் இரண்டாம் வகுப்பு பாதி குறுக்குதுறை, பாதி பேட்டை
சகா
மணியம்மா கணவர் ஜான் அருமை தேவதாஸ் (JAD)    
ஜோதி
நெல்லை பற்றி எத்தனை வாரங்கள் எழுதினாலும் சுவாரசியம் குறைவதில்லை  அத்தம்மாவின் மறைவு சேதி- சட்டென்று சோகம்  உண்டானது அம்மாவின் மறைவு நிகழ்ச்சியை வெளிப்படுத்திய விதம் சிந்தனையை உறைய வைத்தது ,இப்ருவை இதயக்கனி என்று குறிப்பிட்டதில் மனம் நெகிழ்ந்து பாரமாகிவிட்டது
அத்தம்மா பற்றி ஜோதி நிறைய எழுதியுள்ளது .அதை இப்போது திருப்பத்தூர் ஜமாஅத் குழுவுக்கு அனுப்புகிறேன். பிறகு எப்போதாவது வலை நூலில் சேர்கிறேன் (நிறையக் கருத்துக்கள், )   
சுராஜ் ,
தொடர் பகுதி மிக அருமை .அம்மாவின் கடைசி நாட்கள் படித்து உடல் இயக்கமே பத்து நிமிடம் நின்று விட்டது .சிட்டு, நௌஷாத் மற்றும் எல்லாப்பிள்ளைகளின் குண நலன்களை இவ்வளவு உன்னிப்பாகக் கவனித்திருப்பது ஆச்சரியமாகவும் மகிழ்சியாகவும் இருக்கிறது 
இ(க)டைச்செருகல்
தகழி  சிவசங்கரன் பிள்ளை – புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் . இவரை நேர்முகம் கான ஊடகத்தினர் சிலர் வந்திருந்தனர். நல்ல உடையணிந்து நாற்காலியில் அமர்ந்திருந்தார் தகழி . பேச்சில், வினாக்களுக்கு விடை அளிப்பதில் ஒரு தயக்கம் , மயக்கம் . ஊடகத்தாருக்கு ஒன்றும் புரியவில்லை. நல்ல கலகலப்பாக உரையாடுபவர் .உடல் நிலை சரியில்லையோ என்ற ஐயம்
கொஞ்சம் பொறுங்கள் என்று சைகை காண்பித்து விட்டு உள்ளே சென்றார் எழுத்தாளர் .தான் போட்டிருந்த உடைகளைக் களைந்து விட்டு இடுப்பில் ஒரு துண்டு, மேலே ஒரு துண்டோடு வெளியே வந்தவர் தரையில் ஒரு பலகையில்  தூணில் சாய்ந்து அமர்ந்தார். இப்போது எந்த விதத் தடங்கலும் இல்லாமல் சரளமாகப் பேசினார்.
இறைவன் அருளால்
பயணம் தொடரும்
வலை நூல் முகவரி
கூகிள் தேடலில்

sherfuddinp.blogspot.com

Saturday, 17 September 2016


வாழ்க்கைப்பயணமும் வங்கி அனுபவங்களும்

28.திருநெல்வேலி  3

(இந்தப்பகுதியோடு நெல்லை நிறைவுறுமா ???)



ரோசி ஹோம் –இதுதான் அத்தா பணி மூப்புப் பெற்றபின் பேட்டையில் நாங்கள் குடியேறிய முதல் வீட்டின் பெயர். பெயருக்கேற்ப இளஞ்சிவப்பு நிற வண்ணம் பூசிய சுவர். இரண்டு பகுதிகளாக இருந்த வீடு முழுதுமாக எடுத்துக்கொண்டோம்.
அரசுப்பணியில் வெளியூரில் பணியாற்றிய வீட்டு உரிமையாளரின் குடும்பம் சிறியது – அவரும் துணைவியாரும் மட்டும்தான் .அவருக்காக கட்டிய வீடு.
நெல்லை நகரிலிருந்து ஐந்தாறு கிலோமீட்டர் தொலைவிலுள்ள பேட்டை நிறைய இசுலாமியர்கள் வாழும் பகுதி. பெரிய பள்ளிவாசல் அதிலேயே அரபுப்பள்ளி  . பள்ளிவாசல் சன்னதித்தெரு என்ற நீளமான தெரு. அதிலிருந்து பிரிந்து செல்லும் பல தெருக்கள் இவை மிகப்பெரும்பாலும் இசுலாமியகள் வாழும் பகுதி .
ரோசி ஹோம் சற்றுத்தள்ளி திரிபுரசுந்தரி அம்மன் கோயில் தெருவில் இருந்தது.
நகரிலிருந்து பேட்டை செல்லும் சாலையில் முதலில் ஒரு கல் மண்டபம் வரும். அடுத்து ஒரு தர்கா பிறகு செக்கடி அதையடுத்து காவல் நிலையம் ..நேரே போனால் வீரபாகு நகர் என்ற  புதிய குடியிருப்புப்பகுதி .அதையும் தாண்டி ம தி தா இந்துக்கல்லுரி அதற்கு முன் தொழில் பேட்டை
பேட்டை வாழ்க்கையும் பல பகுதிகளை உள்ளடக்கியது. மூன்று வீடுகளில் குடியிருந்தோம்
அத்தாவின் நடை உடையில் எத்தனை மாற்றங்கள் ! வெள்ளைகைலி, ஜிப்பா தலையில் தொப்பி. முகத்தில் தாடி .அதை விட மிகப்பெரிய மாற்றம் பையை எடுத்துக்கொண்டு கறி, மீன் வாங்கக்கிளம்பி விட்டது
பேட்டையில் அத்தாவுக்குக் கிடைத்த நல்ல நண்பர் ஜனாப் அஜீஸ் (தானா மூனா மகன்) அவர்கள் .மிக நல்ல நேர்மையான மனிதர். பெரும் செல்வமும் செல்வாக்கும் நிறைந்த குடும்பத்தைச் சேர்ந்த அவர் மிக எளிமையான தோற்றத்தில் இருப்பார். இசுலாமிய முறைப்படி முழங்காலுக்கு சற்றே கீழ இறங்கிய கைலி (நெல்லை மொழியில் சாரம் ) . பள்ளிக்குப் போகையில் மட்டும் மேல் சட்டை..
அவருடைய நட்பு பணி மூப்புப்பெற்ற அத்தாவுக்கு உறுதுணையாக இருந்தது..அத்தா கூடவே போவதும் வருவதுமாக இருப்பார்.
வேம்படிக் கண்டர் என்ற கோரை வணிகரிடம் அத்தாவுக்கு வணிகத் தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்தார்
பேட்டையில் பாய் நெசவு பெரிய தொழிலாக இருந்தது, அடுத்து பீடித்தொழில் .நல்ல செல்வம் படைத்த வீட்டுப் பெண்கள் கூட பொழுதை வீணாக்காமல் பீடி சுற்றுவார்கள் ,பாயின் ஓரத்தை முடிவார்கள்,
பாய் பிடிக்கும் பழக்கம் பேட்டையில் பின்பற்றப்பட்டது..பெண்கள் மாட்டு வண்டியில் போகும்போது அதில் இரு பெண்கள் பாயுடன் வருவார்கள்.. வீடுகளில் வண்டி வாசல் ஓன்று தனியாக இருக்கும். அந்த வாசலுக்கு நேராக வண்டியை நிறுத்தி பெண்கள் வண்டியில் ஏறும்போதும் இறங்கும்போதும் வாசலுக்கும் வண்டிக்கும் இடையே உள்ள இடை வெளியை மறைக்க இருபுறமும் பெண்கள் பாயை விரித்து திரை போல் பிடித்துக் கொள்வார்கள் .நகராட்சிப் பெண்கள் பள்ளியிலும் வண்டி வாசல் தனியாக இருந்தது. அங்கும் பாய் பிடிககபடும்  
செட்டி நாடு போல் பெரிய வீடுகளைப் பார்க்கலாம் .
சகோதரிகள் நூர் ஜோதி, சுராஜ், ஷாஹ , நான் அத்தா அம்மா ரோசி ஹோமில் இருந்தோம். நான் கல்லூரியில் பட்டப்படிப்பு, ஷஹா பள்ளிப்படிப்பு
ஷாஹுலும் வஹாபும் எங்கள் வீட்டில் இருந்தார்கள். பொதுவாக சாப்பாட்டை சட்டை செய்யாமல் இருக்கும் வஹாப் ஷாஹுலோடு போட்டி போட்டுக்கொண்டு  மிக விரைவாகச் சாப்பிடுவான்.
ஷாஹுலுக்கு அங்கு சுன்னத் செய்யப்பட்டது வஹாபுக்குமா என்பது நினைவில்லை .
அத்தம்மா திருப்பத்தூரில் காலமானதாக ஒரு நாள் காலை தந்தி வந்தது. அப்போது வீட்டில் அத்தாவும் நானும் மட்டும் இருந்த நினவு. அத்தாவின் கண்களில் கண்ணீர் ..மிதி வண்டியில் பாளையங்கோட்டை போய் கருத்தக்கிளி அண்ணனிடம் இந்த செய்தியை தெரிவித்து வந்தேன்.
அரிசி, பருப்பு, காய்கறி, மீன்,முட்டை  எண்ணெய் என்று வீட்டுக்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் தெருவில் விற்பனைக்கு வருவது பேட்டையின் சிறப்பு
ராஜாத்தி (மெஹராஜ்)க்கு மருந்து புகட்டுவது ஒரு வேடிக்கை விளையாட்டக இருக்கும். அம்மா (மெஹராஜ்) கையில் மருந்து மாத்திரையை வைத்துக்கொண்டு கூப்பிட்டால் வர மாட்டேன் என்று அடம் பிடித்து வீடு முழுக்க பந்து போல்உருண்டு ஓடும். பிடித்து மடியில் படுக்க வைத்தால் எந்த வித மறுப்புமின்றி மருந்து மாத்திரையை விழுங்கி விடும் .
மணியம்மா – நகராட்சி மருத்துவ சேவை ஊழியர் – அவர்,கள் குடும்பம் முழுதும் எங்கள் குடும்பத்துடன் மிக நட்பாகப் பழகுவார்கள் ( பதவி தாண்டிய நட்பு) கணவர் தேவசகாயம் (சார் வாள்) நகராட்சிப் பள்ளி ஆசிரியர். மிக மெல்லிய தோற்றம் .உடல் பொருத்தம் இல்லாவிட்டலும் மனமொத்த தம்பதி . .சார்வாள் ஷஹாவுக்கு ஆசிரியர். ஆங்கில வகுப்பு மிக சிறப்பாக நடத்துவாராம் ;இவர்கள் மகன் இன்பா –ஷஹாவுக்கு நெருங்கிய நண்பன்  , நல்ல பையன்.
பாப்டியின் திருமணத்திற்கு இவர்களைத் தேடிக் கண்டு பிடித்து அழைப்புக் கொடுத்து வந்தோம்.. மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள்  விழாவில் இன்பா கலந்து கொண்டதாய் நினைவு  .
ரோசி ஹோமின் உரிமையாளர் பணி மூப்புப் பெற்று வந்ததால் பள்ளிவாசல் அருகில் வேறு வீட்டுக்குக் குடி போனோம்/ அந்த வீட்டின் கழிவறைப் பிரச்சனையால் மற்றுமொரு வீட்டுக்குப் போனோம்.
பேட்டையில் இது மூன்றாவது வீடு. . 123 , சர்க்கரை விநாயகர் கோயில் தெரு வில் அமைந்த இந்த வீடு எங்கள் வாழ்வில் மறக்க முடியாத ஒரு அங்கம்.
இதன் உரிமையாளர் ஜனாப் சபூர் ராவுத்தர் . ஜனாப் அஜீஸ் அவர்களின் உடன்பிறப்பு .உருவம் உள்ளம் எல்லாம் மிகவும் மாறு பாடானவை. ஆண்டுக்கு ஒரு முறை  .புனித இரவில் விடாமல் தொழுது வரும் அவர் பள்ளிவாசல் தலைவரும் கூட.
மிகப்பெரிய வீட்டை குறைந்த வாடகைக்குக் கொடுத்தார் அந்த வீட்டின் வாசல்படி நகராட்சி நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்திருந்ததால் நகராட்சி ஊழியர்கள் வந்து படியை இடித்தார்கள் ..பிறகு வீட்டின் பெரும்பகுதியை அடைத்து விட்டு ஒரு பகுதியைக் கொடுத்தார். அதுவே விசாலாமக போதுமானதாக இருந்தது
அத்தா பணி.மூப்புப் பெற்றபிறகு ஆயுள் காப்பீட்டு முகவராகி மிகச்சிறப்பாகப் பணியாற்றி பல பரிசுகள் வென்றது. வளர்ச்சி அதிகாரி திரு கணபதியப்பன் அடிககடி வீட்டுக்கு வருவார். சாப்பாட்டு வகைகள்- (பிரியாணி முதல் பழைய கஞ்சி வரை) பற்றி சுவை படப் பேசுவார்.
அரசு நூல்களை தமிழில் மொழிபெயர்க்கும் பணியிலும் அத்தா ஈடுபட்டது. ஆயிரம் சொற்களுக்கு பத்து ரூபாய் ஊதியம் கொடுப்பார்கள்.
சங்கரன்கோயில் பள்ளிவாசல் தலைவர் பக்டோன் என்ற மூட்டைபூச்சி மருந்து நிறுவன உரிமையாளர். அத்தா முன்பு சங்கரன்கோயிலில் நடந்த மீலாது விழாவில் கலந்து கொண்டதில் பழக்கமானவர் . அவர் கேட்டுக்கொண்டதற்காக அத்தா அந்தப்பள்ளியின் நிர்வாகத்தைகே கொஞ்ச நாள் கவனித்துக்கொண்டது 
ஷிரீன் பிறந்தது ஒரு மறக்க முடியாத நிகழ்வு. பேறுகாலம் சிக்கலாக இருக்கும் என்று பயமுறுத்திய மருத்துவர்கள், மேட்டுத்திடல் (ஹை கிரவுண்ட் ) அரசு  மாவட்டத் தலைமை மருத்துவ மனைக்கு கொண்டு போகச் சொன்னார்கள்.
அந்த மருத்தவமனை ஒரு கொடுங்கோல் ஆட்சிக்கூடம்  போல் இருந்தது. மருத்துவர் முதல் பணியாளர்கள் வரை அனைவரும் கடுவன் பூனை போல் சிடுசிடுத்த முகமாக இருப்பார்கள். நோயாளிளின் அருகில் யாரும் இருக்க விடாமல் விரட்டுவார்கள் .ஆனால் நொடிக்கொருமுறை அதை வாங்கிவா இதைக்கொண்டு என்று சொல்வார்கள் அதற்கெல்லாம் மேல் நோயாளிகளைத் திட்டியும் அடித்தும் கொடுமைப் படுத்துவார்கள்
உடனடியாக பெதடின் ஊசி மருந்து வேண்டும் என்று சொன்னார்கள். அது சந்திப்பில் உள்ள ஒரே கடையில்தான் கிடைக்கும் என்றும் அவர்களே சொன்னார்கள். மருத்துவ மனைக்கும் அந்தக்கடைக்கும்  ஏழு.எட்டு கி மி தொலைவு இருக்கும். நான் மிதிவண்டியில் போய் வாங்கி வருவதற்குள் குழந்தை பிறந்து விட்டது.
வீட்டுக்கு வந்ததும் அத்தா .அரசுக்கு மருத்துவமனை பற்றி விரிவாக ஒரு புகார் கடிதம் எழுதியது. அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன ( ஆக்கபூர்வமாக இயங்கும் அரசு ஒரு காலத்தில் தமிழ் நாட்டில்  இருந்தது ).
 பேட்டை ம தி தா இந்துகல்லூரியில்  இரண்டு மூன்றாம் ஆண்டு பட்டப் படிப்புப் படித்தேன்.;கல்லூரி கட்டமைப்பும் சரி, ஆசிரியர் குழுவும் சரி பொள்ளாச்சிக்கு இணையாக இல்லை என்பது என் கருத்து.
கல்லூரி முதல்வர் திரு சோமசுந்தரம் அத்தாவின் நண்பர். அவர் மகன் திரு கல்யாண சுந்தரம் வேதியல் துறையில் விரிவுரையாளர். .முதன்மைப்பாடமாக வேதியல். துணைப்பாடமாக இயற்பியலும் தாவரவியலும் எடுத்திருந்தேன். பேட்டை கல்லூரியில் வேதியலுக்குத் துணைப்பாடமாக கணிதமும் இயற்பியலும் தான் இருந்தது . தாவரவியல் இல்லை. எனவே விலங்கியல் மாணவர்களுக்கு நடக்கும் தாவரவியல் துணைப்பாட வகுப்பில் கலந்து கொள்வேன்.
என்னுடைய பட்டச் சான்றிதழில் நான் படிக்காத கணிதத்தைத் துணைப்பாடமாகக் குறிப்பிடபட்டிருக்கிறது.. இது பற்றி உடனே நான் ஒப்புகையுடன் கூடிய பதிவுக் கடிதம் ஓன்றுமதுரை பல்கலைக் கழகத்துக்கு  அனுப்பினேன் .இன்றும் அந்த ஒப்புகைச் சான்று என்னிடம் இருக்கிறது (1969 ஆம் ஆண்டு) .அங்கிருந்து மறுமொழி எதுவும் வரவில்லை  . மதுரைப் பல்கலைக்கழகத்தின் முதல் அணி பட்டதாரிகள் நாங்கள் (First set of graduates)  முதல் கோணல் ?
வேலை கிடைக்க ஒரு ஆண்டு காத்திருந்தேன்.வரும் விளம்பரங்கள் அனைத்துக்கும் எழுதிப் போடுவேன் (நூறுக்குப் பக்கம் இருக்கும்)
அத்தாவின் நண்பர் திரு பூமிநாதன்-(பூமி) அவருடைய சித்ரா ஸ்டுடியோ அப்போது நெல்லையில் நல்ல பேருடன் இயங்கியது அவருய துணைவி நகராட்சி  மருத்துவர் வள்ளி .
பூமிக்கு ஒளிப்படக்கலைஞர் என்ற முறையில் நல்ல செல்வாக்கு உண்டு. அவர் நெல்லைக்கு அருகில் உள்ள குளோரின் வாயு உற்பத்தி செய்யும் பெரிய நிறுவனமான தாரங்கதாரா கெமிகல்ஸ்ஸில் உயர் அதிகாரிகள் அனைவரும் தமக்குத் தெரிந்தவர்கள் .வேதியல் படித்தவர்களுக்கு எளிதில் அங்கு வேலை கிடைக்கும் என்றார். அதை நம்பி நானும் விடாமல் இருபது முறைக்குமேல் அவரது ஸ்டுடியோவுக்குப் போயிருக்கிறேன்.. ஒவ்வொரு முறையும் எதாவது சாக்குப்போககுச்சொல்வார்.. ஒரு முறை கூட அந்த நிறுவனத்திற்கு அழைத்துச் சென்றதில்லை . அத்தாவிடம் சொன்னேன். இனிமேல் அவரிடம் போக வேண்டாம் என்று சொல்லி விட்டது.
இதே நிறுவனத்தில் ஜாபர் அண்ணன்( ஐ பீ எஸ்) முயற்சியால் சக்ரவர்த்திக்கு வேலை கிடைத்து, அதை அவர் உதறி விட்டு(உதறப்பட்டு) வந்து விட்டார்.
கனரா வங்கி நகர்க்கிளை மேலாளர் திரு நரசிங்க ராவ் அத்தாவின் நல்ல நண்பர் . அவர் மூலம் கனரா வங்கி எழுத்தர் பணிக்கு விண்ணப்பித்தேன்.
சந்திப்புக் கிளையில் எழுத்துத் தேர்வு எழுதினேன். இதற்கிடையே காரைக்குடி செக்ரியில் பணியில் சேர்ந்து விட்டேன் கனரா வங்கி பெங்களூர் தலைமை அலுவலகத்துக்கு நேர்முகத்துக்கு வருமாறு   அழைப்புக் கடிதம் வந்தது. அப்போது அத்தா அம்மாவும் வெளியூர் போயிருந்தார்கள் அவர்கள் திரும்பி வருவதற்குள் நேர்முக நாள் கடந்து விட்டது.
அத்தா திரும்பி வந்தவுடன் வங்கி அலுவலகத்துக்கு நடந்ததை ஒரு தந்தி மூலம் தெரிவித்த்து . விளக்கத்தை ஏற்றுக்கொண்டு வேறு நாளில் நேர்முகத்துக்கு வரும்படி அறிவித்தார்கள்
காரைக்குடியில் இருந்து பெங்களூர் போய் நேர்முகத்தில் கலந்துகொண்டு வேலையும் கிடைத்து சந்திப்புக் கிளையில் பணி கிடைத்தது அதுதான் இந்தத் தொடரின் துவக்கம.
வங்கிப்பணியில் சேரும்போதும் அத்தா அம்மா ஊரில் இல்லை. ரஹீம் அண்ணன் ,மும்தாஜ் அக்கா பேட்டையில் இருந்தார்கள்
சந்திப்புக் கிளை நிறைய அலுவலர்களுடன் கூடிய பெரிய கிளை. எங்கு பார்த்தாலும் தூசியும் குப்பையுமாக இருக்கும். என்னைப்போல் புதிதாகச் சேர்ந்த இருவர் – ஜாய்சிங், ஜனார்த்தனன் –இருந்தனர். மேலாளர் திரு வெங்கட்ராமனுக்கு இரவு ஒன்பது மணிக்கு முன் வீட்டுக்குப் போக மனசு வராது. அதுவரை புதியவர்கள் மூவரும் வேலை இல்லாவிட்டாலும்  உட்காந்திருக்க வேண்டும்..மேலாளரும் அதிகாரி திரு மகாதேவனும் மூக்குப்பொடி போடுவார்கள்.
மொத்தத்தில் இந்தக்கிளை எனக்குப் பிடிக்கவில்லை .ஜனாப் சிக்கந்தர் (திருப்பத்தூர் ஜனாப் கான் ராவுத்தர் மகன்)வங்கி சேவைக்காக அங்கு வந்தவர் நான் அங்கு இருப்பது கண்டு பெரிதும் மகிழ்ச்சி அடைந்தார்.
ஜனாப் பானா தா மீரான் அத்தாவின் இன்னொரு நண்பர் .கம்பீரமான தோற்றம், குரல், பள்ளிவாசலுக்கு மிக அருகில் வீடு. அடிக்கடி வந்து அத்தாவிடம் பேசிக்கொண்டிருப்பார், பேட்டை உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு அருணாச்சல முதலியார், மற்றொரு நண்பர் . எங்கள் வீட்டுக்கு அடுத்த தெருவில் குடியிருந்த திரு நாராயணசாமி குறுகிய காலப் பழக்கத்தில் மிக நெருககமாகிவிடார்.. அவர் மகளின் திருமண விருந்து எங்கள் வீட்டில் நடந்தது .மிக அழகாகப் பேசும் அவர் ஏனோ தன்னைத் தானே மாய்த்துக்கொண்டார் .மருத்துவர் கபீர் ,தமிழ்ப்பேராசிரியர் தியாகராசன்,(ராஜகுமாரி) இன்னும் பல நண்பர்கள்
நண்பர்களுடன் குற்றாலத்துக்குக் குளிக்கப்போயிருந்த சுல்தான் மாமாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு கண்ணொளி மங்கி, நடமாட்டம் குறைந்து படுத்த படுக்கையாய் இருந்து மறைந்து விட்டது
அத்தா பேட்டை கூட்டுறவு சங்கத்தில் ஒரு பொறுப்பில் இருந்தது . சங்கத்தில் நல்ல பச்சை அரிசி போட்டால் உடனே அன்று` எங்கள் வீட்டில் பிரியாணி –
இதயத்துல்லா எங்கள் வீட்டில் இருந்தான், வயதுக்கு மீறிய பேச்சு, நல்ல சொல் வளம்.
இப்ரு அழகிய தோற்றம் உதட்டுச்சாயம் பூசியது போன்ற உதடுகள் .என்றும் இதயக்கனிதான் இப்ரு ஒரு தடவை மாடியின் திறந்த வெளியில் (மொட்டை மாடியில்) இருந்து பக்கத்து வீட்டுக்குள் விழுந்து விட்டான் . மிக உயரத்தில் இருந்து விழுந்தும் இறைவன் அருளால் அடி, காயம் எதுவில்லாமல் தப்பித்தான் .
சிட்டு –எழுத்தும் படங்களும் மிக அழகாக இருக்கும். நவ்ஷாத்தின் அமைதியான நிதானமான குறும்புத்தனம் ரசிக்கும்படி இருக்கும்.
ஒருமுறை நான் வெளியூர் போனபோது பயணப்பெட்டியை மிக அழகாக பாப்பா அடுக்கிக்கொடுத்து வியக்க வைத்தது
முத்தக்கா மெஹராஜ் அக்காவின் புடவையைக் கட்டிப்பார்க்க, கைக்குழந்தையாக இருந்த இப்ராஹீம் உற்று உற்றுப் பார்த்த பார்வை தாங்க முடியாமல் முத்தக்கா உடனே புடவையை மாற்றி விட்டது (நோக்கு வர்மம்?)
மொ.மாடியில்தான் நான் இரவில் படுத்துத் தூங்குவேன். கட்டையில் விரிப்ப மாட்டிய கட்டில் தொட்டிபோல் சுகமாக இருக்கும். கொசுத்தொல்லை அப்போது இல்லையா அல்லது தெரியவில்லையா என்பது புரியவில்லை
வீட்டுக்கு அடுத்த ஓட்டுக் கட்டிடத்தின் சாய்வான பகுதி எங்கள் வீட்டு மாடியை ஒட்டி இருக்கும். இரவில் அதில் சாய்ந்து கொண்டு வானத்தின் அழகை ரசித்தபடி கைவானொலியில் மெல்லிய ஓசையில் திரைப்படப் பாடல்களைகேட்டு மெய்மறப்பது எனக்கு மிகவும் பிடித்த பொழுது போக்கு
கல்செக்கு நல்லெண்ணெய் பேட்டையின் சிறப்புக்களில் ஓன்று .செக்கு எண்ணெய் கொண்டு வரும் செட்டியார், அவர் மகள், முட்டைகாரம்மா  அவல் விற்கும் பெண், ஓமத்திராவகம் விற்கும் பாய் தெருவில் வடை, சமோசா விற்பவர் இவர்களெல்லாம் எங்கள் வீட்டின் ரெகுலர் விசிட்டர்ஸ்.
லட்சுமி, செல்லம்மாள்,இன்னொரு லட்சுமி இவர்கள் எங்கள் வீட்டில் வேறு வேறு காலங்களில்  பணிப்பெண்கள்   
கனரா வங்கி சந்திப்புக்கிளையில் சில மாதங்கள் பணி.பிறகு உடன்குடிக்கிளைக்கு இடமாற்றம் .அங்கு சரியாக ஒரு ஆண்டு . பின் நெல்லை நகர் கிளை – ஐந்து ஆண்டுகள்
சந்திப்புக் கிளைக்கும் நகர்க்கிளைக்கும் நிறைய வேறுபாடுகள்..சுத்தம், நல்ல பணிச்சூழல் .நாற்பது ஆண்டு வங்கி வாழ்க்கைக்கு  அடித்தளமாக இருந்தது உடன்குடி, நெல்லை நகர் கிளைகள்தான்.. குறிப்பாக நகர்க்கிளையில்தான் . வங்கிச் சேவையின் எல்லாப் பரிமாணங்களையும் நன்கு கற்றுகொண்டது     
 மேலாளராக இருந்த திரு கோபாலன், அதிகாரி திரு நாராயணன் இருவரும் நல்ல அறிவும் ஆற்றலும் கொண்ட நேர்மையான  வங்கியாளர்கள்
அந்தக்கிளையில் என்னோடு பணியாற்றிய பலரில் சிவராமகிருஷ்ணன் , சுந்தரம்,கே.சுந்தரம்  ராகவன் இவர்கள் மிக நெருங்கிய நண்பர்கள் .சுந்தரம் என் கல்லூரித் தோழர் ..சிவராமக் கிஷ்ணன் , சுந்தரம் இன்றும் தொடர்பில் இருக்கிறார்கள்
எங்கள் வங்கியில் துணைப்பொது மேலாளராக பதவி உயர்வு பெற்ற முதல் தமிழரான திரு வெங்கட்ராமன் நெல்லை வந்தபோது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில் அத்தா உரையாற்றியது. கம்ப ராமாயணம் பற்றி அத்தா பேசியதை திரு வெங்கட்ராமன் மிகப் புகழ்ந்து பேசினார்
நான் அதிகமாகத் திரைப்படங்கள் பார்த்தது நெல்லையில் வங்கிப்பணியில் இருந்தபோதுதான். வெளியாகும் எல்லாப்படங்களையும் பார்த்து விடுவோம்.
திருமணம், இரண்டு பிள்ளைகள் பிறந்ததும் நெல்லை பேட்டை வாழ்வில்தான் .திருப்பத்தூரில் திருமணம் .பேட்டை வீட்டில் வரவேற்பு, பிறகு வங்கி ஊழியர்கள் கேட்டதால் ஒரு நாள் வீட்டில் பிரியாணி விருந்து வைத்தோம். வங்கி ஊழியர்கள்,,உள்ளூர் உற்றார் உறவினர்கள் ,நண்பர்கள் எல்லாம் சேர்த்து ஐம்பது பேருக்குக் குறையாமல் இருக்கும்.
அவ்வளவு பேருக்கும் அம்மாவே சமைத்தாய் நினைவு,.இவ்வளவு சுவையான பிரியாணியை இதுவரை கண்டதில்லை உண்டதில்லை என்று வயிறாரச் சாப்பிட்டார்கள் வீட்டில் அம்மா செய்த   ஊறுகாயின் சுவையை வானளாவப் புகழ்ந்தார்கள்
சமையல் எரிவாயு அப்போது அறிமுகமானது அது வேண்டாம் என்று அம்மா வன்மையாக மறுத்து விட்டது 
பேட்டையில் அத்தாக்கண்ணு கார் மிகவும் பிரபலமான ஓன்று. மோட்டார் சுந்தரம் பிள்ளை கார் போல் இருக்கும். பெட்ரோலும் மண் எண்ணெயும் கலந்து ஊற்றி அத்தாக்கண்ணு ஓட்டுவர்..கலவை விகிதம் அவருக்கு மட்டும்தான் தெரியும். அவர் மட்டும்தான் அதை ஓட்ட முடியும் .அந்த வண்டியில் கரிக்காத்தோப்பு. என்ற பகுதிக்கு ஜனாப் மஸ்தான் மகள் திருமணத்திற்கு அத்தா அம்மா ஜோதி போனார்கள். (சுல்தான் மாமா மகன் மைதீன் மாமனார் மஸ்தான்.) அந்த வண்டியில் போனது ஒரு மகிழ்ச்சியான் பதிவாக மனதில் நிற்பதாக ஜோதி சொன்னது
வங்கியில் பதவி உயர்வுக்கான தேர்வில் எங்கள் கிளையில் நான் உட்பட எழுதிய மூவரும் தேறி, திருவனந்தபுரத்தில் நேர்முகத்திலும் வெற்றி பெற்று ,பதவி உயர்வு பெற்றோம். எனக்கு கேரளம் மலப்புர மாவட்டம் கல்பகஞ்சேரி கிளைக்கு மாறுதல் ஆனது
அங்கு போய் அருகிலுள்ள திரூரில் வீடு பார்த்து அத்தா அம்மா எல்லோரையும் அழைத்து வர விடுப்பில் நெல்லை வந்தேன்..வீட்டுப் பொருட்கள் எல்லாம் திரூர் கொண்டு செல்ல டி வீ எஸ் சுமையுந்து அலுவலகம் போய்விட்டது.
அப்போதுதான் அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் ஹை கிரவுண்ட் மருத்துவ மனையில் சேர்த்திருந்தது
மே மாதம் பதிமூன்றாம் நாள் வெள்ளிக்கிழமை மாலை பைசல் பாப்டி ஜோதியோடு மருத்துவ மனை செல்ல பேருந்து நிறுத்தத்தில் நின்றேன் . மணிக்கணக்கில் காத்திருந்தும் பேருந்து கிடைக்காததால் வீடு திரும்பினோம்.
சற்று நேரத்தில் அம்மாவின் உடல் வீட்டுக்கு வந்தது
அம்மாவின் மறைவு பற்றி விரிவாக எழுத முடியும் ஆனால்  முடியாது .
என் அறுபத்தி ஆறு ஆண்டு வாழ்வில் எனக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சோகம் இதுதான்
அந்த துக்கமான சூழ்நிலையிலும் நடந்த சண்டை சச்சரவுகள், சிலரைக்குறி வைத்து தாக்க, அவமானப்படுத்த  ஏவப்பட்ட சொல்லம்புகள் என்னை மிக மிக பாதித்தன ,
நாற்பது ஆண்டுகள் கழித்து இந்தப் பகுதியை எழுதும்போதுதான் ஒரு தெளிவு பிறந்தது . மணிக்கணக்கில் காத்திருந்த நாங்கள் பேருந்தில் ஏறி மருத்துவ மனை போயிருந்தால் ?  இறைவனுக்கு நன்றி
ஒரு வழியாக நெல்லை பகுதியை நிறைவில்லாமல்(too many loose ends) நிறைவு செய்கிறேன்..
சென்ற பகுதி பற்றி கருத்துகள் பாராட்டுகள் தெரிவித்த அஜ்மல்,(ரொம்ப  ஓவர் ) சகோதரி ஜோதி சுராஜுக்கு நன்றி
. Ajmal  

குறுக்குதுறை வீடு வர்ணனை பொன்னியின் செல்வனில் கல்கியின் காவிரி ஆற்றுக்கரை வர்ணனையை நினைவூட்டுகிறது. 
சுராஜ் –குற்றால அருவிபோல் கொட்டும் நினைவுகள்
ஜோதி – பல நிகழ்ச்சிகளை நினவு கூர்ந்தது.- அம்மாவின் கைஎலும்பு முறிவு, மணியம்மாவின் உண்மையான அன்பு, அம்மா மருத்துவமனையில் இருக்கும்போது அங்கிருந்த அத்தாவுக்கு கறிக்குழம்பு, மாங்காய்த்தொக்கு செய்து கொண்டு போனது , அம்மாவின் மறைவுக்கு எஸ் எம் எழுதிய கவிதை  இன்னும் பலப்பல
இ(க)டைச்செருகல்
பாய் பிடிக்கும்  பழக்கம் போல் பேட்டையில்  இன்னொரு வழக்கம் ஊர் அழைப்பவர் என்று சிலரை நியமித்திருப்பது. இசுலாமியர் இல்லத் திருமணம் போன்ற விழாக்களுக்கு அழைக்கவேண்டியவர்கள் பட்டியலை விழா நடத்துபவர்கள் இவர்களிடம் கொடுத்து விடுவார்கள். இவர்கள் வந்து அழைத்தால் விழா நடத்துபவர்கள் நேரில் வந்து அழைத்ததாகக் கருதப்படும்
அது போக, விழாவில் அழைக்கப்பட்டவர்கள் வந்து விட்டார்களா என்பது பட்டியலில் குறிக்கப்படும் (வருகைப் பதிவேடு போல). யாரவது வராமல் இருந்தால் அவர்களைத் திரும்பத் திரும்ப அழைக்கும் வழக்கமும் உண்டு

இறைவன்                
அருளால்
பயணம் தொடரும்
(எப்போதுதான் பயணம் நிறைவுறும் என சிலர் உரக்கசிந்திப்பது காதில் விழுகிறது . இறைவன் நாடினால் இந்த ஆண்டுக்குள் நிறைவுறும் )

வலை நூல் முகவரி
கூகிள் தேடலில்
sherfuddinp.blogspot.com     


      
    .
   ..