Sunday, 26 February 2017

வாழ்க்கைப்பயணம் –பணி மூப்புக்குபின். 2



வானத்தில் வண்ணக்கோலம் சின்னாளப்பட்டி அருகில் நெடுஞ்சாலையில்


இப்படிப் படித்துக்கொண்டே போகிறாயே இதனால் என்ன பலன்?
முதலில் படித்த அக்குபஞ்சரை ஒழுங்காக நடைமுறைப்படுத்தினாலே போதுமே
என்னிடம் அடிக்கடி பலரும் கேட்பது இது
எனக்கும் இந்த மாதிரி ஒரு எண்ணம் அவ்வப்போது உதிப்பதுண்டு.  .சிந்தனை இன்னும் உள்நோக்கிப்போகும்போது -
மணிக்கணக்கில் முகநூலிலும் கட்செவியிலும் உட்காருகிறோம்
சகிக்கமுடியாத தொலைகாட்சித்தொடர்களை பொறுமையாக சிரத்தையுடன் பார்க்கிறோம்
நாள் முழுதும் ஒரே செய்தியை உடைக்கும் செய்தியாகப் போட்டாலும் உற்றுப்பார்க்கிறோம்
குப்பைதொட்டியாக  இருக்கும் வார மாத  இதழ்களை முன் அட்டையிலிருந்து பின் அட்டை வரை படிக்கிறோம்
இது எதுவுமே தவறு என்று சொல்லவில்லை. “றோம்” என்பதில் நானும் இருக்கிறேன்.
இவையெல்லாம் பொழுதுபோக்கு என்று சொல்லுவது போல் படிப்பும் எனக்கு ஒரு நல்ல பொழுதுபோக்கு.
படிப்பதில் நான் கண்ட பலன்கள்/
ஒவ்வொரு படிப்பிலும் பயனுள்ள புதிய செய்திகளை அறிந்து கொள்ள முடிகிறது
ஒரு வகுப்பில், கல்லூரியில் , பல்கலைக்கழகத்தில் நுழையும்போது நம் வயது குறைந்து இளமை திரும்பியது போல் தோன்றும்.
 அண்ணாமலை பல்கலைக்கழகத்தின்  , அகன்ற வீதிகள், நாட்டுக்கோட்டை பாணியில் உயர்ந்து நிற்கும்  கட்டிடங்கள், விவசாயப்பபிரிவு, பொறியியல் பிரிவு, யோகா மையம் என்று பரந்து விரிந்த  வளாகங்கள், அடர்ந்து வளர்ந்த நிழல் தரும் மரங்கள் இவையெல்லாம் மனதில் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தும்.
அதுவும் அத்தா படித்த, , நம் உடன்பிறப்புகள் படித்த அண்ணாமலையில் நாமும் படிக்கிறோம் என்ற எண்ணம் ஒரு மதர்ப்பையும் உற்சாகத்தையும் பொங்க வைக்கும்
மெஹராஜ் அக்கா பேத்தியுடன் டோக் பெருமாட்டி கல்லூரிக்குப் போனபோது இந்த சிலிர்ப்பை உணர்ந்து அனுபவித்திருக்கும்.
ஓய்வை நெருங்கிக்கொண்டிருக்கும் பல்கலைக்கழகப்.பேராசிரியர் ஷஹா தான் படித்த காரைக்குடி பொறியியல் கல்லூரிக்கு சென்றபோது சின்னப்பிள்ளை போல் துள்ளிக்குதித்து ஓடியது பலரும் கண்ட காட்சி
இதற்கெல்லாம் மேல் தேர்வில் வெற்றி பெற்ற செய்தி வரும்போது ,மனது சிறகடித்துப் பறக்கும்..
மகளுக்கு இணையாக சட்டம் படிக்கும் சிட்டு இதை உணர்ந்திருக்கும்
அதற்காக எல்லோரும் படிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. மனதில் ஒரு சலிப்பு ஏற்படும்போது அருகிலுள்ள எதாவது ஒரு பள்ளிக்குச் சென்று குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி விட்டு ஒரு அரை மணி நேரம் இருந்து பாருங்கள்..அவர்களோடு பேச வேண்டம், கலந்துரையாட வேண்டம். அவர்களைப் பார்துக்கொண்டிருந்தாலே சலிப்பு மறைந்து மனம் அமைதி பெறும்..
முடிந்தால்  பிள்ளைகளோடு கலந்து பேசினால் உற்சாகம் பொங்கி வரும் .
படிப்பின் பெருமையை சற்று அளவுக்கு அதிகமாகவே சொல்லிவிட்டேன்..நல்ல செய்திகளை விரிவாகப்பேசுவது நல்லதுதானே. இறைவனருளால் பணி மூப்புக்குப்பின்  தொடர்ந்து ஆறாவது ஆண்டாக மாணவனாக இருந்து வருகிறேன். இது வரை எழுதிய ஐந்து தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண்(எழுபது விழுக்காடுக்கு மேல்) எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளேன்.
படிப்பதை விட எழுதுவது எனக்கு சிரமமான ஓன்று. அதிலும் கோடு போடாத தாளில் என்னால் நேராக எழுதவே முடியாது. எனவே வெள்ளைத்தாளுக்கு கீழே கோடிட்ட தாளை வைத்துத்தான் எழுதுவேன்..
பணி மூப்பு வாழ்வில் நான் கண்ட  மாறுபட்ட இரு நிகழ்வுகள் பற்றி சொல்ல எண்ணுகிறேன் ஓன்று திக்ரு எனப்படும் இசுலாமிய தியானம் மற்றொன்று சித்த விஞ்ஞானம்
இருபது   ஆண்டுகளுக்கு முன்பே இசுலாமிய ஆன்மீகம் பற்றி இரண்டு பகுதிகள் கொண்ட ஒரு நூல் வாங்கிப்படித்தேன்.. புரிந்தும் புரியாமலும் இருந்தது . சென்னையில் போய் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றினாலும் எதோ ஒரு தயக்கம்.
ஒய்வு பெற்ற அடுத்த ஆண்டில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அனுப்பியவர் புதுக்கோட்டை மருத்துவர் பஷீர் – அக்கு பஞ்சர் மூலம் கிடைத்த முகம் காணாத நட்பு,.- சனவரி 14, 15 ,16  மூன்று தினங்கள் சென்னையில் நடை பெற உள்ள திக்ரு பயிற்சி பற்றியது அது.. தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்ன ஏது என்று கேட்டேன்.. மூன்று நாள் அங்கேயே தங்க வேண்டும் . உணவும் அங்கேயே கொடுத்து விடுவார்கள் . வந்து கலந்து கொள்ளுங்கள் நன்றாக இருக்கும்  என்றார்.
நிறைய ஐயங்கள், வினாக்கள் , பள்ளிவாசலில் தங்க முடியுமா என்ற தயக்கம் அனைவற்றையும் புறந்தள்ளிவிட்டு முதல் நாளே புறப்பட்டுப்போய் சென்னையில் மைத்துனர் சிராசுதீன் வீட்டில் தங்கி அடுத்த நாள்  ஏழு கிணறு தெருவில் உள்ள அந்த இடதிற்கு மைத்துனர் வண்டியில் போய்  கண்டு பிடித்து இறங்கினேன். ஒரு தனியார் மசூதி, உரிமையாளர் வீடு, அவரது தொழிற்சாலை துணைவியாரின் மருத்துவ மனை அனைத்தும் அடங்கிய ஒரு வளாகம்.
நல்ல கூட்டம், நிறைய வட இந்தியர்கள் . பனிரெண்டு வயது சிறுவன் முதல் எண்பதைத் தாண்டிய முதியவர் வரை இருந்தனர். ஆண்கள் மட்டும்தான்..
தியானம் செய்யும் முறை சொல்லிக்கொடுத்தார்கள் .. ஒன்னரை மணி நேரமாக இரு முறை குழுவோடு சேர்ந்து தியானம் செய்தேன்..
. சுவையான மதிய உணவுக்குப்பின்  அசர் நேரம் வரை ஒய்வு..அசருக்குப்பின் இரவு தொழுகைக்குள் மீண்டும் இரண்டு முறை தியானம்
உடல் முழுதும் அப்படி ஒரு அசதி, அப்படி ஒரு வலி. இதுவரை நான் கண்டிராத  ஒரு பசி . இரவு உணவுக்கு பூரி கொடுத்தர்கள். பெரிய (சோலே பூரி ) அளவில் இருந்த அந்தப் பூரியை ஐந்து சாப்பிட்டேன் . அப்படி ஒரு பசி . இரவில் படுத்தால் அப்படி ஒரு சுகமான ஆழ்ந்த தூக்கம் . அதி காலை தஹஜ்ஜத் தொழுகைக்கு எழுந்து விட வேண்டும் என அறிவிப்பு வேறு
இன்னும் இரண்டு நாள் தங்கினால் உடம்பு தாங்குமா, இதோடு காலையில் எழுந்து ஊருக்குப் போய்விடலாமா என பல சிந்தனைகள் . சரி வந்து விட்டோம். ஒரு முழுமையான பயிற்சி பெற்றதாக இருக்கட்டுமே , என்ன ஆனால் என்ன இத்தனை பேர் இருக்கிறார்கள் , இறைவன் பார்த்துக்கொள்வான் என துணிந்து விட்டேன்,
அடுத்த இரண்டு நாட்களில் திக்ருவின் நுட்பங்கள் புலப்பட்டன.உடலிலும் மனதிலும் ஒரு நல்ல அமைதி ஏற்பட்டது
பயிற்சியில் ஐவேளையும் கூட்டுத் தொழுகை, தஹஜ்ஜத், இஷ்ராக் லுகா , அவ்வாபின் ,சுன்னத் நபீல் என்று மொத்தம் எழுபத்தியிரண்டு ரக்காத் தொழ வேண்டும் .ஒரு நாளில் ஆறு முறை தியானம் செய்ய வேண்டும். கூடிய மட்டும் வெளியே போகக்கூடாது
அங்கு நான் கற்றுக்கொண்ட பயிற்சி, யோகாசனம், மூச்சுப்பயிற்சி , தியானம் மூன்றையும் உள்ளடக்கிய ஒன்று,..உட்கார்ந்த நிலையில் குதிரை ஓட்டுவதுபோல் தலை முதல் கால் வரை அசைக்கவேண்டும். அதோடு வேகமான சுவாசத்தோடு மனதுக்குள் அல்லா அல்லா என்று உச்சரிக்க வேண்டும், அடுத்த கட்டத்தில் அமைதியாக உடலை அசைக்காமல் அமர்ந்து இயல்பாக மூச்சு விட்ட நிலையில் இறைவனின் திருநாமங்களையும் திருக்குர்ஆன்  வரிகளையும் மனதுக்குள் ஓத வேண்டும். நமது கோரிக்கைகளை இறைவனிடம் வைத்து துஆவோடு  தியானத்தை முடிக்க வேண்டும்.
அவ்வளவு கூட்டத்துக்கும் நான்கைந்து குளியல்,கழிவறைகள்தான் இருந்தன. எப்போதுமே அவை சுத்தமாக இருந்தது இசுலாமியப் பரிசுத்தத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு .
அதுபோல் உணவு பரிமாறுவதும் உண்பதும் ஒரு ஒழுங்குக்குக் கட்டுப்பட்டு மிக கண்ணியமாக இருக்கும்
மூன்று நாள் பயிற்சி முடிந்த ஊருக்கு வந்தேன்..மனதுக்குள் ஒரு சிறிய ஐயம் –இது எதாவது இசுலாமிய மார்க்கத்துக்கு முரணானதாக இருக்குமோ என்று..எனவே அங்கு கொடுத்த நூல்களை கடலூரில் நல்ல மார்க்க ஞானத்துடன் இலக்கண சுத்தமாக அரபு பேச எழுதவும் தெரிந்த ஒரு அசரத்திடம் கொடுத்து தியான நடைமுறைகளையும் சொன்னேன் .
இது முழுக்க முழுக்க இசுலாமிய நெறிமுறைகளுக்கு உட்பட்டதுதான் என்று அவர் தெளிவு படுத்தினார் . அதன் பிறகுதான் வீட்டில் பயிற்சியை துவங்கினேன் .ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்து வருகிறேன்.
ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் நடைபெறும் மூன்று நாள் பயற்சியில் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் கலந்து கொண்டேன். போன ஆண்டும் இந்த ஆண்டும் போக முடியவில்லை
இந்த பயிற்சியில் நான் கண்ட பலன் நல்ல உடல் நலம். ஒரு நாளைக்கு எழுபத்தியிரண்டு ரக்கத் தொழுகையும் இரண்டு முறை தியானமும் செய்யும்போது வேறு எந்த உடற் பயிற்சியோ யோகாசன பயிற்சியோ தேவைப்படவில்லை .நல்ல பசி நல்ல தூக்கம் உண்டாகிறது  மன நலம் ஆன்மீக நலம் பற்றி அவரவர் செய்து பார்த்துதான் அறிந்து கொள்ள வேண்டும்.
.அக்குபஞ்சர் மருத்துவர் அப்துல்லா சேகு எழுதிய ரெய்கி அக்குபஞ்சர் என்ற நூலில் சித்த விஞ்ஞானி சுவாமி ஹரிதாசிடம் பயிற்சி பெற்றதாகவும் மதுரை காந்தி மியுசியத்தில் இதற்கான ஒருநாள் பயிற்சி அளிக்கப்படும் . யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாலம்  என்றும் குறிப்பிட்டிருக்கிறார்
மதுரைக்கு தொலைபேசியில் பேசியதில் இப்போது அந்தப்பயிற்சி அளிப்பவர் சின்னாளப்பட்டி அருகில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கிறார் என்று தெரிவித்தார்கள் .அங்கு தொடர்பு கொண்டு பேசி அங்கு பயிற்சி அளிக்கும் நாளைத் தெரிந்து கொண்டு தொடரியில் திண்டுக்கல் போனேன்.
தொடர்வண்டி நிலையத்திலிருந்து வெளியேறி  பேருந்து நிலையம் செல்ல  வழி கேட்கும்போது ஒரு கட்டண மகிழுந்து ஓட்டுனர் வாங்க நம் வண்டியில் போகலாம் என்றார்/, எவ்வளவு கட்டணம் என்றேன். நாற்பது ரூபாய் என்றார். என்னால் நம்பவே முடியவில்லை தானியில் ஏறினாலே ஐம்பது ரூபாய் கேட்கும் இந்தக்  காலத்தில் மகிழுந்துக்கு நாற்பதா இல்லை அவர் நானூறு கேட்டாரா என்ற ஐயம் வண்டியை விட்டு இறங்கி பணம் கொடுக்கும் வரை இருந்தது .இடையில் காலைத் தொழுகைக்காக பள்ளிவாசலில் பத்து நிமிடம்  நிறுத்திக் கூட்டிச் சென்றார் .
சித்தர் சாமியைக் கைபேசியில் தொடர்பு கொண்டு அவர் சொன்ன பேருந்தில் ஏறி அவர் சொன்ன இடத்தில் இறங்கினேன்.இறங்கிய இடம் ஆள் நடமாட்டமில்லதா இடம்.. தேசிய நெடுஞ்சாலை. நீண்டு வளைந்து ஊர் ஏதும் இல்லாமல்  வெறிச்சோடிக்கிடந்தது .சற்றுத்தயக்கத்துடன்  அங்கிருந்து  நடந்தேன். ஒரு தொடர்வண்டி மேம்பாலத்தைக்கடந்து  சாதிநாயக்கன்பட்டி என்ற சிற்றூரின் வெளிப்புறத்தில் அமைந்திருந்த சித்தர் இருப்பிடத்தை  அடைந்தேன் . நீரில்லாத ஒரு ஓடையின் மேல் ஒரு சிறிய அழகிய பாலத்தைகடந்து செல்ல வேண்டும். ஒரு பொட்டல் காடு போல் தோன்றியது. அதனூடே சில கட்டிடங்கள் மரங்கள், தண்ணீர் குழாய் எல்லாம் ஒரு தயக்கம் ஏற்பட்டதே தவிர அச்ச உணர்வு ஏற்படவில்லை
சித்தர்  எளிமையாக  இயல்பானவராக இருந்தார்..ஒரு காவி வேட்டி, அரைக்கைச்சட்டை நீண்ட முடியோ தாடியோ அங்கியோ இல்லை ஆணும்பெண்ணுமாக ஐம்பது பேர் வந்திருப்போம். ஏற்கனவே பயிற்சி பெற்ற சிலரும் புத்தாக்கப் பயிற்சி பெற வந்திருந்தனர. இஹ்ராம் உடை போல இரண்டு துண்டு ஆடையுடன் ஒருவர் வந்திருந்தார் .இசுலாமியர் ஒருவரைப்பார்த்து இந்த ஆடை அணிந்து வருவதாய்ச் சொன்னார்
சில எளிய பயிற்சி முறைகளை சொல்லிக்கொடுத்தார்கள் , சித்தர் நோக்கு வர்மம் மூலம் தன ஞானத்தை எல்லோருக்கும் பகிர்ந்தளித்தார் .அங்கே மதியத் தொழுகையை முடித்து உணவு உட்கொண்டுவிட்டு திண்டுக்கல் போய் பேருந்தில் கடலூர் வந்து சேர்ந்தேன்.
நெடுஞ்சாலையில் பேருந்து நிலையம் செல்லும் நகரப்பேருந்துக்காகக் காத்திருக்கும்போது வானம் மிக அழகாகக் காட்சி அளித்தது உடனே கைப்பேசியில் படம் பிடித்தேன். ஆண்டுகள் உருண்டோடியதில் கைப்பேசிகள் பல மாறி விட்டன .அந்தப்படம் இருந்தால் இந்தப்பகுதியில் வெளியிடுகிறேன்
நல்ல , எளிய முறையாகத்தான் இருந்தது அங்கே கற்றுக்கொண்டது . ஆனால் சில நடைமுறைகள் இசுலாமிய மார்க்கத்துக்கு முரணாகத் தோன்றியதால் அதை விட்டு விட்டேன்
தம்பி சகா மகன் நாமிக் திருமணம் சென்னை எஸ் இ ஈ டி மண்டபத்தில் நடை பெற்றது. அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் திரு மன்னர் சவகர் விழாவில் கலந்து கொண்டார்.
சகா சம்பந்தி ஜனாப் குமாயுன் கபீர் நல்ல சமூக ஆர்வலர்.. எண்பது வயதைத்தாண்டிய அவரது தந்தை திரை அச்சுக்கலையில் தமிழ் நாட்டில் முன்னோடியாகத் திகழ்ந்தவர்
திருமண  வரவேற்பு நிகழ்ச்சி கிழக்குக் கடற்கரையில் உள்ள ப்ளு லாகூனில் மிகச் சிறப்பாக நடைபெற்றது ,.நகரத்தின் நெருக்கடி ,சந்தடி, நெரிசலை விட்டு விலகி ஒரு ஏகாந்தமான சூழலில் நிகழ்ச்சி நடந்தது ஒரு புதுமையாக நன்றாக இருந்தது  இரவு என்பதால் கடலின் அழகை முழுதாய் உணர, ரசிக்க முடியவில்லை
இந்தக்குறையை ஈடு செய்வது போல் மைத்துனர் சிராசுதீன்- சமீமா  மகள் ரெகுனா திருமணம் ,வரவேற்பு எல்லாம் இதே ப்ளு லகூனில் மிகச் சிறப்பாக நிறைவேறியது மூன்று தினங்கள் அங்கேயே தங்கினோம்..பூங்காக்கள், நீச்சல் குளம், சிறிதும் பெரிதுமாய் பல கூடங்கள், பல வகையில் குடில்கள் என மிகப்பரந்த வளாகம். காலை காபியில் இருந்து இரவு உணவு வரை மிகச் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தார் மைத்துனர். மணமகன் அவரது (என் துணைவிக்கும்) தங்கை சர்மாதா – அயுப்கான் மகன் யாசர். மணமகன் வீட்டு வரவேற்பும் அங்கேயே சிறப்பாக நிறைவுற்றது
கடற்கரைதான் பெரிய ஏமாற்றமாய்ப்போய்விட்டது .பளு லாகூன் வளாகத்துக்குள்ளேயே ஒரு கேட் அமைத்து அதைத்தாண்டிப்போனால் கடற்கரையை அடைவது போல் வழி இருந்தது. ஆனால் சுத்தமாக  
ப்ளு லாகூனிளிருந்து வெள்ளிகிழமை கூட்டுத் தொழுகைக்கு வெட்டுவாங்கேணியில் உள்ள பள்ளிக்குப் போனோம்.. மிகவும் வசதி படைத்த ஜமாஅத் என்பதை பள்ளியின் ஒவ்வொரு இடமும் பறைசாற்றிக்கொண்டிருந்தது .விலை உயார்ந்த் கிரானைட் கற்கள், தரை ஓடுகள் மரம் என்று இழைத்து இழைத்துக் கட்டியிருந்தார்கள்
இறை இல்லமான பள்ளிவாசல் அழகாக, விசாலமாக ,சுத்தமாக இருக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது .அதற்காக வீண் ஆடம்பரம் தேவையில்லை என்பது என் சொந்தக் கருத்து .
குறிப்பாக தரை.- எப்படியும் பாயோ, விரிப்போ விரிக்காமல் இருக்கப்போவதில்லை...அதற்கு ஏன் கிரானைட்டும் தரை ஓடுகளும் ..
அதே போல் குளிர்பதன வசதியும் பள்ளிவாசல்களில் தேவையில்லை என்பது என் கருத்து .குறிப்பாக உயரமாக விசாலமாகக் கட்டப்பட்ட தடாகங்களுடன் (ஹவ்ல்) கூடிய  பழைய பள்ளிகள் நல்ல காற்றோட்டமாக குளிர்ச்சியாக இருக்கும். அவற்றில் சன்னலை அடைத்து இயற்கைக்காற்றைத் தடுத்து செயற்கைக்குளிரை உண்டாக்குவது சுற்றுச்சூழலை மாசுபடுத்தும்.
இத்துடன் இந்தப்பகுதியை நிறைவு செய்கிறேன்
சென்ற பகுதி பற்றி கருத்துக்களும் பாராட்டுக்களும் தெரிவித்த இதயத்,,சாஜித்,சர்மதா , அயுப்கான்  மெஹராஜ் அக்கா பாப்டி , ராஜா சுப்பிரமணி(முன்னாள் கனரா வங்கி ) அனைவருக்கும்  நன்றி.

[20:30, 2/16/2017] Hidayat:
 ரிட்டயரானதம் ஈஸி சேரில உட்காந்து இந்து பேப்பர்
படிச்சிக்கிட்டு இருப்பேன்னு நினச்சியா
ஓய்வுக்குப்றம் சந்திச்சத சாதிச்சத சரித்திரமாய் சொல்ல
வந்துட்டேன் சொல்லு, திரும்பி வந்துட்டேன்னு சொல்லு
 (இது (கொம்பு சீவி விடுவதா உசுப்பேத்தி விடுவதா ?)
                      
[21:13, 2/16/2017] Shajith:
 Sherfuddin Mama, nice that you started writing again 😊. So now we can expect some interesting reads from time to time.
Meharaj 17 02 17
அஸ்ஸலாமு அலைக்கும் ஷர்புதீன்
திரும்ப உன் எழுத்துக்கள் பார்த்து மிகவும் மகிழ்ச்சி.
 ஆரம்பமே நன்றாக இருந்தது. உன் பயணத்தோடு நாங்களும் பயணிக்க ஆவலாக உள்ளோம்
Ayub Sharmada 1902 17
Very good memory power-masha Allah. I learnt many pure tamil words

CB retd Raja Subramani 16 02 17
Nice
Ayubkhan 16 02 17
அண்ணா, தங்களது "பணி மூப்புக்கு பின் பாகம் 1 "
படித்தேன். சுவாரஸ்யமான விஷயங்கள் பல குறிப்பிட்டுட்டிருந்தீர்கள். தங்களின் எழுத்து பணிகள் மென்மேலும்  தொடர எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானக. ஆமீன்
பாப்டி (தொலைபேசியில்)
மிக நன்றாக இருந்தது .
க(இ)டைச்செருகல் :
Jacuzziஎன்றால் ஏன்ன?
விடை அடுத்த பகுதியில்
உங்கள் கருத்துக்களை எதிர் நோக்குகிறேன்

இறைவன் அருளால்                                                                                     அடுத்த பகுதியில்
சந்திப்போம்
வலை நூலில் படிக்க
கூகிள் தேடலில்
sherfuddinp.blogspot.com