சுவையின் இருப்பிடம் நாக்கா மூக்கா மனமா என்பது ஒரு பதிலேதும் இல்லாத
கேள்வி.
எங்கோ காப்பியின் மணம் வீசினால் நம் நாக்கில் நீர் ஊறுகிறது. நமக்கு
மிகவும் பிடித்த உணவுப்பண்டங்களை நினைத்தாலே அவற்றை சுவைத்தது போல் ஓர் உணர்வு
வருகிறது .
எந்த உணவாயிருந்தாலும் சாப்பிட்டு நான்கு மணி நேரம் கழித்துத்தான்
சீரணம் எல்லாம் முடிந்து குருதியில் கலக்கும் ஆனால் காப்பி குடித்தவுடன் ஒரு
புத்துணர்ச்சி தோன்றுவதற்கு மனம்தான் காரணம்.
பொதுவாக நம் நாட்டு மக்களுக்கு சுவை உணர்வு அதிகம் (நாக்கு நீளம்
என்று சொன்னால் சிலருக்கு சினம் உண்டாகலாம் )
தமிழ்நாட்டுக்கு இது இன்னும் சற்று அதிகம். மிதமான விலையில் விற்கும்
உணவக சாப்பாட்டில் எத்தனை பண்டங்கள் பரிமாறுகிறார்கள்- சோறு, சாம்பார் ,வற்றல்
குழம்பு , மோர்க்குழம்பு ,ரசம் தயிர் மோர் அப்பளம், கூட்டு, பொரியல் அவியல்
ஊறுகாய், மிளகாய் வற்றல் என்று ஒரு பல்சுவை விருந்தே படைக்கிறார்கள்.
இத்தனை வகைகள் படைத்தாலும் அது ஒரு எளிதான வீட்டுச் சாப்பாட்டுக்கு
இணையாகாது
சிறுவயதில் நான் காரமான உணவுகளையும் அசைவத்தையும் தவிர்த்து விடுவேன்,
அந்த வயதில் நான் மிகவும் சுவைத்துச் சாப்பிட்டது நிறைய முருங்கைக்காய்
போட்டு கொத்தமல்லித்தழை வாசம் கமகமக்க அம்மா வைக்கும் சாம்பார்
காய்கறிக்குப்பதில் நிறைய தேங்காய்த் துண்டுகள் போட்டு வைக்கும்
சாம்பார் அம்மாவின் இன்னொரு சிறப்பு உணவு.
நெய்ச்சோறு, பிரியாணிக்கு பக்க உணவாக அம்மா வைக்கும் தாளிச்சா மிக மிக
சுவையாக இருக்கும். சிவப்பாக இல்லாமல் ஒரு மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
கறிப்பொரியல்- தேங்காய்த்துண்டுகள் போட்டு வைப்பதும் நினைவில்
நிற்கும் ஒரு சுவை.
தக்காளிச்சட்னி, கைமா அவரைக்காய் பொரியல், குஸ்கா , பால் கஞ்சி, எள்ளுத்துவையல், இடியாப்பப்பொரியல், கொத்துப்புரோட்டா ,
சத்து மாவு உருண்டை . இவையெல்லாம் அம்மாவின் பல சிறப்பு உணவுகளில் எனக்கு மிகவும்
பிடித்த சில. .பேறுகால மருந்தாக அம்மா
தயாரிக்கும் வெந்தயக்களி, பூண்டுக்களிஎல்லாம் மிக மிக சுவையாக இருக்கும்
என்ன ஒரேடியாக அம்மா புகழ் பாடுகிறாயே இப்போது அதெல்லாம்
கிடைக்கவில்லை என்ற ஏக்கமா என்று சிலர் கேட்பது காதில் விழுகிறது. என் துணைவியும்
எங்கள் இனம் என்பதால் இது வரை குறையொன்றும் இல்லை. போகும்
இடங்களில் எல்லாம் அங்குள்ள சிறப்பு உணவுவகைகளைக் கற்றுக்கொள்வதொடு ஊடகங்களில்
வரும் சமையல்குறிப்புகளை சிரத்தையோடு சேகரித்து செய்தும் பார்த்து சமையல் கலை
வல்லுனியாகவே ஆகிவிட்டது. சைவம் அசைவம், வட நாடு தென்னாடு வெளிநாடு வெளிமாநிலம்
சார்ந்த எல்லா சிறப்பு உணவுகளும் வீட்டிலேயே சுவைக்க வாய்ப்பு கிடைத்தது இறைவன்
அருள்
. அடுத்த தலைமுறைக்கு சமையல் பொறுப்பு மாறும்போது சில மாற்றங்கள்
ஏற்படுவது இயற்கைதானே
மகள் பாப்டிக்கு அவர்கள் அம்மா, அத்தம்மாவின் கைப்பக்குவம்
வந்திருப்பதில் எனக்கு ஒரு பெருமை
ஜோதி சொன்ன அவர்கள் வீட்டு சிறப்பு உணவுகள் சில
முளைகட்டிய பாசிப்பருப்பில் நெய் சீனி கலந்து உண்பது.
கேப்பைக்கூழில் சீனி நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிடுவது
இரண்டும் மிகச்சுவையான ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள்
எனக்கென்று சிலஉணவுக்கட்டுப்பாடுகள் உண்டு. தலை. கால், குடல்,
மண்ணீரல் நுரையீரல் (தொக்குசா= நுரையீரல்+ கடலைபருப்பு கூட்டு) இதெல்லாம் நான்
தொடவே மாட்டேன். எனவே என் துணைவிக்கு இந்த சமையல் எல்லாம் தெரியாமலே போய்விட்டது.
இனி என் வாழ்க்கைப்பயணத்தில் சுவைத்த, பார்த்த , கேள்விப்பட்ட சில உணவுகளின் சிறப்பு பற்றிப் பார்ப்போம்.
அம்மா பிரியாணி செய்யக்கற்றுக்கொண்டது ஆம்பூரில்.
கற்றுக்கொண்டதோடு சுற்றத்தார் அனைவருக்கும் கற்றும் கொடுத்தது.
சிற்றுலா செல்கையில் சாப்பாட்டுக்கு பக்க உணவாக அம்மா செய்த சுண்ட வைத்த
முழுப்பயிர் குழம்பு ஆம்பூர் மக்களின் மனதைக்கவர்ந்தது ஒரு வரலாறு.
விழுப்புரத்தில் வாசவி விகார் உணவு விடுதியில் பரிமாறும் இலந்தைப்பழ ஊறுகாயின் சுவை
இன்றும் நெஞ்சில் நிறைந்து நிற்கிறது .உணவு விடுதியைத்தான் காண முடியவில்லை
காரைக்குடியின் செட்டி நாட்டு சுவை பற்றி சொல்லவே வேண்டாம். தெருவில் வண்டியில்
விற்கும் அல்வா, பக்கோடா எல்லாம் நல்ல சுவையாக இருக்கும். சிறிய கடைகளில் பிறை
வடிவில் இருக்கும் பால்கோவா தனி சுவை.
காரைக்குடி பாம்பே ஆனந்த பவனில் சோன்பாப்டியும் கீரை பக்கோடாவும் சிறப்பான
சுவையில் இருக்கும்.
நன்னாரி சர்பத், நெய் சீவல் இவை காரைக்குடியின் சிறப்புகள்
அசைவ உணவும் காரைக்குடியின் பெரும்பாலான உணவு விடுதிகளில் சுவையாகவும்
விலை மலிவாகவும் இருக்கும்.
ஜென்னத் அக்கா திருமணம் சென்னையில் மிகச் சிறப்பாக நிறைவேறியது .காரைக்குடியில்
இருந்து சுற்றத்தாரை சென்னைக்கு
அழைத்துச் செல்ல இரண்டு பேருந்துகள்
ஏற்பாடு செய்யப்பட்டன. ஒரு பேருந்தில் செல்பவர்களுக்கு அம்மா தயிர் சோறும், தொட்டுக்கொள்ள மாங்காய்த்தொக்கும்
செய்து கொடுத்து விட்டது. அந்தத் தொக்கின் சுவை இன்றளவும் பேசப்படும் ஓன்று.
சென்னையில் திருமணத்தில் இருபத்தியொரு வகை உணவுப்பண்டங்கள் வைத்து
எல்லோரையும் அசர வைத்தார்கள்
திருநேல்வேலியின் சிறப்பு உணவுகள் வற்றல்
குழம்பு பாலமுது, வெண்ணிப்பழையது சுக்குக்காப்பி , கல் தோசை, சொதி
எல்லாவற்றுக்கும் மேல் திருநெல்வேலி அல்வா,
சிறிய உணவு விடுதிகளில் கூட
சுவையான ரொட்டி குழம்பு கிடைக்கும்,
நெல்லை சந்திப்பில் இருந்த சுல்தானியா உணவு விடுதியில் ரொட்டி குழம்பு
சாப்பிடவே வெளியூரிலிருந்து வருவார்கள்..சாம்பார் வடை போல் ரச வடை நெல்லையின்
சிறப்பு உணவு.
நெல்லையில் எனக்கு மிகவும் பிடித்தது விருந்துகளில் பரிமாறப்படும்
நெய்ச்சோறு . ஒரு தட்டில் நெய்ச்சோறு வைத்து குருமா ஊற்றி ஓரத்தில் தாளிச்சா
வைப்பார்கள். மிகச்சுவையாக இருக்கும். திருமண விருந்துகளுக்கு சுவையான பிரியாணி
செய்பவர் மேலப்பாளையத்தைச் சேர்ந்த குற அப்பாஸ் என்பவர்
என் திருமணத்தை ஒட்டி வங்கி ஊழியர்களுக்கும் குடும்ப நண்பர்களுக்கும்
பிரியாணி விருந்து கொடுத்தோம்..கிட்டத்தட்ட ஐம்பது பேருக்கு அம்மாவே சமைத்தது.
இன்று கூட அன்று விருந்து சாப்பிட்ட வங்கி ஊழியர்கள் யாரையாவது சந்தித்தால்
பிரியாணியின் சுவையும் வீட்டு ஊறுகாயின்
சுவையும் பேசப்படும்
நெல்லையில் இருந்து குற்றாலம் போகையில் புளிச்சோறும் கறிப்பொரியலும்
கொண்டு போவோம். அருவி குளியலுக்குப்பின் உண்டாகும் பசியிலும் உணவின் சுவையிலும்
மளமளவென சாப்பாடு இறங்கும்
பொள்ளாச்சியில் இருக்கும்போது அரிசி கிடைப்பது அரிதாகிப்போனது,.இதை சமாளிக்க அம்மா
செய்யும் சோளத்தோசை நல்ல மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.
வேலூரில் விடுதிகளின் சிறப்பு உணவு, ஆட்டுக்கால் பாயா . (எனக்குப்பிடிக்காது)
கேரளா திரூரில் நான் தங்கியிருந்த விடுதியில் நெய்ச்சோறு, ரொட்டி குருமா மிக சுவையாக
இருக்கும்.
கேரளாவின் சிறப்பு உணவு பத்ரி,.அரிசி மாவில் எண்ணெய் இல்லாமல் எட்டு முழ வேட்டி அளவுக்கு மெல்லியதாக
செய்வார்கள்.பக்க உணவு கோழிக்குழம்பு. சுடச்சுடப் பரிமாறினால் எளிதாக
பத்துப்பதினைந்து பத்ரி சாப்பிடலாம்.
மத்தி மீன் குழம்புடன் புரோட்டா, வேகவைத்த மரவள்ளிக்கிழங்கு, வேகவைத்த
நேந்திரம் பழம், பழம் பச்சி இவை கேரளா எளிய உணவு விடுதிகளின் உணவு வகைகள்
.தண்ணீருக்குப்பதில் சீரகத் தண்ணீர் கொடுப்பார்கள்
கேரளாவில் விருந்துகளில்பரிமாறப்படும் பிரியாணி, மசாலா அதிகம்
சேர்க்காமல் வெள்ளை நிறமாக இருக்கும் ஆனால் மிகச்சுவையாக இருக்கும். .நெய்ச்சோறுக்கு
ஒரு சிறிய கிண்ணத்தில் குழம்பு கொடுப்பார்கள். அப்படி ஒரு சுவை
அம்மாவின் முதலாம் ஆண்டு நினவுக்காக
கேரளாவில் உறவினர்கள் எல்லோரும்
கூடினோம். சமையலுக்கு ஒரே ஒருவர் வந்து அமைதியாக மிகச் சுவையான பிரியாணி செய்து
அழகாகப் பரிமாறிவிட்டும் போனார்.
திருச்சி என்றாலே நினைவில் வருவது மைகேல் ஐஸ் கிரீம் .விலை மலிவு சுவை
நாக்கில் ஒட்டிக்கொள்ளும். அண்மையில் ஒரு திருமணத்துக்காக திருச்சி போயிருந்தோம்.
மறக்காமல் மனம் நிறைய ஐஸ் கிரீமை சுவைத்து வந்தோம். திருச்சி சந்திப்பு அருகில்
ஒரு உணவகத்தில் கொத்துப்புரோட்டா நல்ல
சுவையுடன் கிடைக்கும். இப்போது அந்த உணவகத்தைக்காணோம்.
பீரங்கி தோசை – திருச்சியில் நான் சுவைக்காமல் விட்டுப்போனது. ஒரு
ஐந்தாறு பேருக்குப்போதுமானது போல இருந்த அதன் மிகப்பெரிய அளவைக்கண்டு வேண்டாம்
என்று சொல்லி விட்டேன்.
வங்கி அலுவலாக நாகப்பட்டினத்தில் சில நாட்கள் தங்கியபோது, ஒரு
உணவு விடுதியில் நல்ல சுவையுள்ள மீன் குழம்பு. நிறைய எறால் பொரியலுடன் சாப்பாடு
மிக மலிவாகக் கிடைத்தது
எங்கள் திருப்பத்தூரின் சிறப்பு உணவுகள் விருந்துகளில்
பரிமாறும் தாளிச்சோறு ,பொடிக்கறிகுழம்பு, காய்குழம்பு- திகட்டவே திகட்டாது
ராசாக்கிலி ,மாதவன் உணவக பிச்சுப்போட்டு ஊறவைத்த ரொட்டி குழம்பு, தெருஓர
உணவகங்களின் இட்லி, ஆப்பம், இடியாப்பம், பணியாரம்.. ,
வட மாநிலங்களில் உணவுப்பொருட்கள் எல்லாம் விலை மலிவாகவும்
தரமானதாகவும் இருக்கும்..சுவையும் நன்றாக இருக்கும்.
கல்கத்தாவில் மிருதுவான இட்லியும் சுவையான தேங்காய் சட்னியும் கிடைத்தது என்னை
வியக்க வைத்தது
சிவான் பீகாரில் காலைச் சிற்றுண்டி பூரி, மசாலா , இனிப்பு, தேனீர் எல்லாம் சேர்த்து
இரண்டு ரூபாய்க்குள்தான் வரும். மதிய உணவு ஒன்னரை ரூபாய் .அளவில்லாமல்
சப்பாத்தியும், சோறும் சாப்பிடலாம். எண்ணெய் இல்லாத சப்பாத்தியை நெருப்பில் வைத்து
எடுக்கும் காட்சி கண்களுக்கு விருந்தாய் அமையும்.
பீகாரில் விடுமுறை நாட்களில் மாலை நேரத்தில் தெரு ஓரத்தில் இருக்கும்
சிறிய சாட் கடைக்குப்போவோம் . சுவையான .பாணி பூரி, மசாலா பூரி தயிர் வடை என்று
கையில் கொடுத்துக்கொண்டே இருப்பார். ஓன்று அல்லது இரண்டு ரூபாய்க்கு மேல் கொடுத்த
நினைவு இலலை. சற்று தாமதமாகப் போனால் கடை மூடியிருக்கும்..
பீகாரில் பணியாற்றும்போது ஆய்வுக்காக ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த
இருவர் வந்தனர். நல்ல குளிர் காலம் அது ,ரொட்டியை (பிரட்) நிறைய வெண்ணெய் தடவி
வாட்டி, அதற்கு வெண்ணெயைத் தொட்டுக்கொண்டு சாப்பிடுவார்கள்
சாப்பாட்டுப்பிரியர்களின் சுவர்க்கம் பஞ்சாப் என்று சொல்வார்கள். இது
வட மாநிலங்கள் எல்லாவற்றிற்கும் பொருந்தும்.. சண்டிகரில் சாப்பிட்ட ஐஸ்
கரீமின் சுவையும் அளவும் தரமும் இந்தியா
காபி இல்லத்தில் சாப்பிட்ட கறி தோசையும்
(மட்டன் கீமா தோசை) இன்றும் மனதில் நிறைந்து
நிற்கின்றன
ஜலந்தரில் மிகப்பெரிய லவ்லி
இனிப்பகத்தில் கிலோ பதினாறு ரூபாய்க்கு மிகத்தரமான இனிப்புகள் கிடைக்கும் ( அந்தக்
கால கட்டத்தில் சென்னையில் ஒரு கிலோ நூறு ரூபாய் என நினைவு.)
குளிர் காலத்தில் இரவில் பந்தாட்டம் ஆடுவது ஜலந்தரில் ஆண்கள் வழக்கம்..
நடு இரவில் குளிரைத்தாண்டி ஒரு வெப்பம் பரவும். அப்போது விளையாட்டை நிறுத்தி
விட்டு ஐஸ் கிரீம் சாப்பிடுவார்கள்..மக்காச்சோளம் ,வாழைப்பழம் எல்லாவற்றிலும் சாட்
மசாலா தூள் கலந்து உண்பார்கள்.
ஜலந்தரில் குளிர்கால சிறப்பு உணவு மக்காச்சோள ரொட்டி.(மக்கீகா ரோட்டி)..இதற்கு
பக்க உணவும் மக்காச்சோளத்திலேயே குழம்பு போல் செய்வார்கள். மேலே ஒரு அரை
அங்குலத்துக்கு நெய் மிதக்கும்.
பேஸ்ட்ரீஸ் எனப்படும் கேக் வகைகள் நிறைய கிரீம் சேர்த்து சுவையாக, அழகாக
செய்யப்படும்
பத்தி தேநீர் பஞ்சாபின் சிறப்பு..ஒரு பெரிய கண்ணாடிக் குவளை நிறைய
பால் ஊற்றி மேலே சிறிது தேயிலை நீரை ஊற்றிக் கொடுப்பார்கள்
வங்கி ஊழியர்கள் மதிய உணவு சாப்பிடும் முறை மனதுக்கு இதமாக
இருக்கும்..எல்லோரும் கூடி அமர்ந்து நடுவில் ரொட்டிகளையும் சப்ஜிகளையும் பரப்பி
எல்லாவற்றையும் எல்லோரும் பகிர்ந்து உண்பார்கள்- கிட்டத்தட்ட சகன் சாப்பாடு போல்
நாசூக்காக சாப்பிடுவார்கள்
ஆய்வுப்பணியில் இருந்ததால் ஜலந்தரில் இருந்து பல மாநிலங்களைச் சேர்ந்த
பல ஊர்களுக்குப் போகும் வாய்ப்பு கிட்டியது அங்குள்ள உணவுகளையும் சுவைக்க
முடிந்தது .
ஜம்முவில் பல இடங்களில் தெருவில் கறி கபாப் விற்பார்கள் எப்போதும் கூட்டமாக
இருக்கும். அதனால் வாங்கி சுவைக்க முடியவில்லை. பேருந்து நிற்கும் இடங்களில்
பக்கோடா போல சிறிய அளவில் விற்கும் . மிகச்சுவையாக இருக்கும். எவ்வளவு
சாப்பிட்டாலும் வயிறு தாங்கும். ஜம்முவில் சாப்பிட்ட சுவை மிக்க காய்கறி புலவு,
கோழி வறுவலின் சுவையை மறைத்து விட்டது நான் சாப்பிட்ட( ஜர்தா) பீடா.
தொழில் நகரமான லூதியானாவில் உணவுப்பண்டங்களின் விலை அதிகமாக
இருக்கும் என்று நான் எண்ணியதற்கு மாறாக தரமான உணவு எளிய விலையில் கிடைத்தது
.தரைத்தளதிற்கு கீழ் உள்ள ஒரு உணவகத்தில் படியில் இறங்கும்போதே சுத்தமான நெய் வாசம்
மூக்கைத்துளைக்கும்..
தில்லியை அடுத்த பல்லப்கார்க் என்ற கிளைக்கு ஆய்வுப்பணிக்காகப்
போயிருந்தேன். கிளைக்கு அருகில் ஒரு
மிகச்சிறிய உணவகம். .சப்ஜி எனப்படும் காய்கறிப் பொரியல் குறிப்பாக காரட் சப்ஜி மிக
மிக சுவையாக இருக்கும். ஒரு தட்டு நிறைய இருக்கும். ஆனால் விலை ஒன்றோ இரண்டோ
ரூபாய்தான்..
வாழ்வில் மறக்க முடியாத உணவு நான் ராஜஸ்தான் ஜோத்பூரில்
சாப்பிட்ட மிர்ச்சி போண்டா என்ற பச்சை மிளகாயை அரைத்து உருட்டி பொரித்தெடுத்த
மிளகாய் போண்டா .கண், வாய், மூக்கு என எல்லா உறுப்புகளிலும் தண்ணீர் வரும்
அளவுக்கு உறைப்பு உறைப்பு அப்படியொரு
உறைப்பு/
வடக்கில் சரியான உணவு கிடைக்காத ஒரே இடம் ஹைலி மண்டி என்ற சிறு
ஊராகக்கிளைதான் .தில்லியில் தமிழக உணவகத்தில் இட்லி தோசை சாப்பிட்டுவிட்டு மதியத்துக்கும்
அதையே பொட்டலம் கட்டி எடுத்துக்கொண்டு
தொடரியில் பயணித்து அந்தக்கிளைக்குப் போவோம்.
தில்லி தலைநகர் என்றாலும் அங்கும் உணவு விலை மலிவாகத்தான்
இருக்கும்.உணவுப்பண்டங்களை அழகாக மண் சட்டியில் வைத்து பக்குவமாக இலையால்
மூடித்தருவார்கள் .இதே தில்லியில்தான் ஒரு வயிற்றுஎரிச்சலான உணவு நிகழ்வும்.
.ஒரு உணவு விடுதியில் கூட்டம் அலைமோதியது . அன்று விடுமுறை நாள்
என்பதால் என்னவென்று பார்க்கலாம் என்று உள்ளே நுழைந்தோம். விலைப்பட்டியலில் இது
வரை அறிந்திராத பல உணவுப்பெயர்கள் . விலையும் தில்லிக்கு சற்று அதிகமாகவே
தெரிந்தது . ஓரளவு தெரிந்த பெயராகவும் விலை மிதமாகவும் உள்ள ஒன்றைத் தெரிவு செய்து
கேட்டோம்.
பணத்தை வாங்கிக்கொண்டு ஒரு வில்லை கொடுத்தார்கள் .உங்கள் வில்லை எண்
அழைக்கப்படும் வரை காத்திருங்கள் என்றார்கள் .கிட்டத்தட்ட கால் மணி நேரம்
காத்திருந்தோம். சரி சுடச்சுட செய்து தருவார்கள் போலும் என்ற கற்பனை வேறு.
அழைப்பு வந்ததும் ஆவலுடன் போனோம். ஒரே ஒரு ரொட்டி (பன்) இரண்டாகப்பிளந்து
நடுவில் அரை பச்சை மிளகாயும் ஒரு மெல்லிய சிறிய துண்டு காரட்டும் வைத்து ஒரு
தட்டில் வைத்துக்கொடுத்தார்கள் .
.ஒரு முழுச்சாப்பாடு அளவுக்கு
விலை கொடுத்தும் வயிறும் நிறையவில்லை மனதிலும் ஒரு எரிச்சல் . அருகில் உள்ள ஒரு
கடையில் பெரிய ஐஸ் கிரீம் வாங்கி சாப்பிட்டு எரிச்சலைத் தணித்துக்கொண்டோம்
கொங்கு நாட்டு வீடுகளில் பக்க உணவும் குழம்பும் ஒன்றாக சேர்த்து செய்து
விடுவார்கள். பீர்க்கங்காய் கூட்டு என்றால் அதுதான் குழம்பு அதுவேதான் பக்க
உணவும். விருந்துகளில் நிறையபண்டங்கள் பரிமாறுவார்கள். சாப்பிட வருவதற்கு முன்பே
இலையைப் பரப்பி அதில் பலவற்றை பரிமாறிவிடுவதை அங்குதான் நான் முதலில் பார்த்தேன்.
அது இப்போது எல்லா இடங்களிலும் பரவி வருகிறது. இது எனக்குப் பிடிக்கதா ஒரு பழக்கம்
எறுவாடியில் நடக்கும் பெரும்பாலான திருமணங்களுக்கு எங்களுக்கு அழைப்பு வரும்.
வீட்டுக்கு உணவு கொடுத்து விடும் பழக்கமும் அங்கு உண்டு..ஒரே நாளில் இரு இடங்களில்
விருந்தென்றால் எங்கே நெய்ச்சோறு என்று தெரிந்து அங்கே போய் விடுவோம். அந்த
அளவுக்கு நெய்ச்சோறு குருமா சுவையாக இருக்கும்..
எறுவாடியில் பந்தி பரிமாறும் முறை மிக எளிதாக இருக்கும். தரையில் பாய்
விரித்து உட்கார வைப்பார்கள். ஒரு செய்தித்தாளை விரித்து அதன் மேல் இலை போட்டு
பரிமாறுவார்கள் . செய்தித்தாளோடு சேர்த்து சுருட்டி சாப்பிட்ட இலையை எடுத்து
விடுவார்கள். இலையிலேயே பல்குச்சியும் பாக்கும் வைத்து விடுவதால் வெற்றிலை இருக்கு
பாக்கு இல்லை என்ற நிலை வராது
வாணியம்பாடி பிரியாணி சுவை ஆம்பூரை மிஞ்சியதாக இருக்கும்.. பேருந்து நிலையம்
எதிரில் உள்ள உணவகம் பார்க்க எளிதாத தோன்றும். பிரியாணி ரொட்டி குருமா எல்லாம்
நல்ல சுவையாகவும் விலை மலிவாகவும் இருக்கும் ஒரு ரொட்டி (பரோட்டா ) நாலு ரூபாய்.
கோழிக்குழம்பு இருபது ரூபாய். நாலு ரொட்டியும் ஒரு கோழிக்குழம்பும் வாங்கினால்
இருவர் வயிறு நிறைந்து விடும்,
வாணியம்பாடியில் வட இந்திய நகை வணிகர் வீட்டுத் திருமண விருந்துக்கு
பைசலும் நானும் போயிருந்தோம். ஒரு கல்லூரியின் பெரிய விளையாட்டுத்திடல் முழுதும்
உணவுத்திருவிழா போல் எண்ணிலடங்கா ஸ்டால்கள் ஒவ்வொரு ஸ்டாலிலும் ஒரு உணவின் பல வகைகள் வடிவங்கள் –ஒரேஒரு
ஸ்டாலில் இட்லி தோசை பீடாவே பத்து வகைக்குமேல் .உள்ளே நுழையும்போதே நெய் வாசமும்
இனிப்பு வாசமும் கிறுகிறுக்க வைத்தது .
கரி சமோசாவும் பீப் பிரியாணியும் வாணியம்பாடியின் சிறப்பு உணவுகள் .
அந்த பிரியாணிக்காவே வாணியம்பாடிக்கு பலர் வருவார்கள் என்று சொல்வார்கள்.
சாம்பார், ரசம், மோர் இதெல்லாம் இசுலாமியர்களுக்குத் . தெரியாது.
.எல்லா நாளும் மூன்று வேளையும் அசைவம்தான்
இப்தார் விருந்துகளில் பல வகையான சுவைமிக்க அசைவ உணவுகளும்
இனிப்புகளும் குளிர் பானங்களும் பரிமாறுவார்கள்
சென்னையில் விருதுநகர் உணவகத்தில் மீன் குழம்பு நம் வீட்டுக் குழம்பு போல் இருக்கும்.
மற்ற உணவு வகைகளும் நல்ல சுவையாக இருக்கும்..
பிரியாணி வல்லுநர் ஹயாத் பாய் இருந்தவரை பெரும்பாலான நம் குடும்ப
நிகழ்ச்சிகளில் அவர்தான் சமையல்..மிகச்சுவையாக சமைப்பார்..பைசலின் திருமண
வரவேற்பில் அவர் சமைத்த பிரியாணியையும் கோழியையும் சுவைத்த பலரும் சமையல் யார்
என்று விசாரிக்கும் அளவுக்கு சிறப்பாக இருந்தது . அவர் வாரிசுகள் நன்றாக
சமைத்தாலும் அந்தக் கைப்பக்குவம் யாருக்கும் வரவில்லை
கடலூரில் நல்ல பிரியாணி சமைக்க சரியான ஆள் கிடையாது. ஆனால் எல்லா இசுலாமிய
வீட்டு நிகழ்ச்சிகளிலும் பிரியாணிதான் செய்வார்கள். பைசலின் புதுமனை புகு
விழாவிற்கு சென்னையிலிருந்து சகாவின் ஆஸ்தான சமையல்காரர் ஹுசைனை வரவழைத்தோம்.சைவம்
அசைவம் எல்லாம் மிகச்சிறப்பாகச் செய்து எல்லோரும் பாராட்டும்படி சுவையானா விருந்து
படைத்தார்.
லாப்பா , கடப்பா கடலூரின் சிறப்பு உணவுகள் . பாசிப்பருப்பு சாம்பாரின்
சற்று மாறுபட்ட வடிவம்தான் கடப்பா .சைவ உணவகங்களில் இட்லி தோசைக்கு சிறப்பு பக்க
உணவு
உருளைக்கிழங்கு பரோட்டா ( ஆலு பரோட்டா)வில் கிழங்குக்குப்பதிலாக
முட்டைப்பொரியலை வைத்து நிறைய எண்ணெய் ஊற்றி சுடுவது லாப்பா
காரைக்காலின் உணவுப்பழக்கம் சற்று மாறு பட்டிருக்கும். இரண்டு சமோசாவில் சாம்பார்
ஊற்றி சாப்பிட்டு காலை உணவை பலர் முடித்து விடுவார்கள் .. திருமணங்களில் அசைவ
விருந்து பெரிதாக சொல்லும்படி இருக்காது. சைவ விருந்துகளில் இலை முழுக்க பல வகையான
உணவுகளைப்பரிமாரி திணரடிப்பார்கள் .முர்தபா- கறி சேர்த்துச் செய்யப்படும் புரோட்டா
ஒரு சிறப்பு உணவு
கூர்க் குட்டாவில் இருக்கும் பள்ளிவாசல் திருமண
மண்டபத்தில் நடக்கும் விருந்துகளில் அனுமதிக்கப்பட்ட (ஹலால்) உணவுகள் மட்டுமே
பரிமாறப்படும். எனவே தயக்கமின்றி சாப்பிடலாம்.. .பணியிலிருந்து ஓய்வு பெறுவதை
முன்னிட்டு ஒரு பெருந்தோட்டத்தில் (எஸ்டேட்) அமைந்த இல்லத்தங்கல் விடுதியில் (ஹோம்
ஸ்டே) சைவம் அசைவம் விருந்து கொடுத்தேன். குட்டாவில் இப்படி எல்லாம்சுவையான உணவு கிடைக்குமா என்று வங்கி ஊழியர்கள்
வியப்படைந்தனர் .
என் உடன் பிறப்புக்கள் எல்லாம் சமையலிலும் உபசரிப்பிலும்
வல்லவர்கள் .முத்தக்கா சுடும் தோசை வட்டமாகப் பெரிதாக இருக்கும் என்று அத்தா
சொல்லுமாம்..ஜென்னத்தக்கா வீட்டில் விருந்தும் உபசரிப்பும் தடபுடலாக இருக்கும்.
மிகவும் வற்புறுத்தி சாப்பிடச்சொல்லுவார்கள்
வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் ஒவ்வொரு பரிமாணத்தையும் முழுமையாக
ரசித்து ருசித்து அனுவித்து வாழ்ந்த அத்தாவைப் பற்றி சொல்லாவிட்டால்
சுவைப்பயணம் முழுமை பெறாது.
அண்ணாமலைப்பல்கலைக்கழக விடுதியில் அசைவ உணவை அறிமுகப்பபடுத்தியது
அத்தாவின் மிகப்பல சாதனைகளில் ஓன்று. வாழைப்பழம் , முட்டை, பால் , மோர்,
ஊறுகாய் நாள் தவறாமல் சாப்பிடும் பழக்கம்
உண்டு
தேநீரில் வெண்ணெய் போட்டு சாப்பிடுவது அத்தாவின் கண்டுபிடிப்பு ..
அத்தாவைப்போல் .சாப்பிட
முயன்ற பலரை நான் அறிவேன். அதில் எத்தனை பேர் வெற்றியடைந்தார்கள் என்பது
தெரியவில்லை .
அத்தாவிடம் நான் கற்றுக்கொண்ட சுவைப்பாடங்கள் (சிலவற்றைத்தான்
நடைமுறைப்படுத்த முடிகிறது ):
<மாம்பழம் நிறைய சாப்பிட்டால் சூடான பால் குடிக்க வேண்டும்.>
<பலாச்சுளை நிறைய சாப்பிட்டால் தேன் சாப்பிட வேண்டும். தேன்
இல்லாவிட்டால் ஒரு பலாக்கொட்டையை சுட்டுச் சாப்பிடவேண்டும்.>
<திருமண விருந்துகளில் முதல் பந்தியில் சாப்பீட்டு விட வேண்டும்.
அசைவ விருந்தென்றால் சாப்பிட்டு முடித்து விட்டு சைவப்பகுதிக்குப்போய் ரசம்
குடிக்க வேண்டும்.>
வேறு சில சுவைக்கோட்பாடுகள்
மீன் சாப்பிட்டால் பால் குடிக்கக்கூடாது
மீனும் கறியும் ஒன்றாகச் சாப்பிடக்கூடாது
மீன் குழம்பு சாப்பிட்ட தட்டில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது
<மறந்து போன சில சுவைகள் >:
கெளுத்தி மீன்(ஆறு, குளத்தில் பிடித்தது) , .கிடைப்பதே இல்லை.
விரால் மீன், அயிரை மீன் நாட்டுக்கோழி – கிடைத்தாலும் சற்று சிரமமான
சமையல் முறையால் வாங்கத் தயக்கம்
அண்மையில் புதுச்சேரியில் நடைபெற்ற திருமண வரவேற்பில் கலந்து கொள்ள
வந்த சிலர் அயிரை மீன் சாப்பிட விரும்பி காமாட்சி உணவகம் சென்றார்கள் நேரம் கடந்து
விட்டதால் கிடைக்கவில்லை
அயிரை மீனை சுத்தம் செய்வதில்லையே அது ஹலாலா என்ற ஒரு வினாவை யாரோ
எழுப்ப்பினார்கள். இது பற்றி ஒரு ஆய்வரங்கம் நடத்தலாம்
(முன்பெல்லாம் கருணைக்கிழங்கு சமைத்தால் சாப்பிட்டால் கை கால் ,
தொண்டை நாக்கெல்லாம் அரிக்கும் .இப்போது இல்லையே ஏன் ? )
நான் கேள்விப்பட்ட, படித்தறிந்த சில சிறப்பு உணவுகள்
பற்றிக்குறிப்பிட்டு இந்த சுவைப் பயணத்தை நிறைவு செய்கிறேன்
<யானை முட்டை:>
வழுக்கை இல்லாத தேங்காயில் சிறிய துளை போட்டு நீரை வெளியேற்றிவிட்டு
அதே துளை வழியாக தேங்காய் கொள்ளும் அளவுக்கு நான்கைந்து முட்டைகளை உடைத்து ஊற்றி
துளையை அடைத்து வேக வைத்து பக்குவமாக
எடுத்தால் ஒரு பெரிய முட்டை வடிவில் இருக்கும். .தமிழக முதல்வர் காமராசருக்கு கொடுத்த
விருந்தில் இது போல் முட்டை வைக்கப்பட்டதாக அத்தா சொல்லக்கேட்டது
<முழு ஆடு >
அத்தாவின் நண்பர் நீதியரசர் ஒருவர் ஹஜ் யாத்திரை மேகொண்டபோது ,அரபு
மன்னர் கொடுத்த சிறப்பு விருந்தில் இந்தியா சார்பில் கலந்து கொண்டார்.. ஒவ்வொருவருக்கும்
ஒரு முழு சமைத்த ஆட்டை பரிமாறினார்கள் . அதைத்தொடவே தயங்கி சாப்பிடாமல்
அமர்ந்திருந்தவரின் அடுத்து
அமர்ந்திருந்தவர் நீதியரசரின் கையைப்பிடித்து ஆட்டின் மேல் வைத்தாராம்.
பக்குவமாக சமைக்கப்பட்டு மிக மிருதுவாக இருந்ததால் எளிதில் சாப்பிட முடிந்ததாம்
(முழுதும் சாப்பிட்டாரா என்பது தெரியவில்லை
இது உலகின் மிக விலை உயர்ந்த உணவுகளில் ஓன்று
<பனை ஓலையில் மீன்>
அடுத்து ஒரு நெய்தல் நாடு பற்றிய
கதையில் படித்த மீன் உணவு . ஒரு புதிதாகப் பறித்த பனை ஓலையில் சூடான சோறு
போட்டு புதிதாகப்பிடித்த வாவல் மீன் குழம்பை ஊற்றி பனை ஓலையை கூடை போல் மூடி
நன்றாகக் குலுக்க வேண்டும் ...பனை ஓலைமணம் மீன் குழம்பின் மணம், சுவை எல்லாம்
சூடான சோறோடு கலந்து தனி ஒரு மணமும் சுவையும் உண்டாகுமாம் . வஞ்சிர மீன் வறுவலைத்
தொட்டுக்கொண்டு .ஓலையில் இருக்கும் சோறை அப்படியே சாப்பிட வேண்டும். என்ன நாக்கில்
நீர் ஊறுகிறதா?
<காயல்பட்டினம் பிரியாணி>
ஒரு கிலோ அரிசிக்கு பத்து அல்லது பன்னிரண்டு கிலோ கறி சேர்த்து
பிரியாணி செய்வார்களாம்
இ((க)டைச்செருகல்
அரைகுறையாக நினைவில் இருந்த ஒரு பொன்மொழிக்காக வலையில் தேடியபோது நான்
தேடியது சிக்கவில்லை .
ஆனால் சிக்கிய வேறு பல பொன் மொழிகளைப்படித்த எனக்கு வியப்பு,
திகைப்பு.
நாம் மட்டுமல்ல மேல்நாட்டினரும் நமக்கு நிகராக சாப்பாட்டுப்பிரியர்கள்
என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டும் நூற்றுக்கணக்கான பொன் மொழிகள் . அவற்றில் வெகு
சிலவற்றை கீழே பார்க்கலாம்
"People
who love to eat are always the best people. - Julia Child"
. "We all eat, and it would be a sad waste of opportunity to eat
badly." -Anna Thomas
"The secret of success in life is to eat what you like and let
the food fight it out inside." -Mark Twain
There is no sincerer love than the
love of food. George Bernard Shaw
“First we eat, then we do everything else.”
-M.F.K. Fisher
“Food is symbolic of love when words are
inadequate.” -Alan D. Wolfelt
"All
happiness depends on a leisurely breakfast."
-John
Gunther
. “After a good dinner one can forgive
anybody, even one’s own relatives.” – Oscar Wilde
பின் குறிப்பு
சுவையில் பயணிக்கும்போது எல்லாமே எங்கோ ஏற்கனவே கேள்விப்பட்டது போல்
தோன்றும். நான் பயணக்கட்டுரையில் அங்கங்கே உணவு பற்றிக் குறிப்பிட்ட
செய்திகளைத்தான் இங்கு தொகுத்துத் தந்திருக்கிறேன்.
சுவையான நல்ல செய்திகளை திரும்பத்திரும்ப சுகமாக
அசைபோடுவதில் தவறில்லையே .
பின் பின் குறிப்பு
சற்று அதிக நீளமாகிப்போன இதை இரண்டு பகுதிகளாக
வெளியிட நினைத்தேன். விரைவில் புனித நோன்பு மாதம் துவங்குகிறது. அப்போது உணவு,
சுவை பற்றிப்பேசுவது அனுமதிக்கப்பட்டதா என்ற வீண் சர்ச்சையைத் தவிர்க்க எண்ணி ஒரே
பகுதியில் வெளியிட்டு விட்டேன்
தங்கள் கருத்துக்களை எதிர்நோக்குகிறேன்
இறைவன் அருளால்
மீண்டும் வேறொரு பயணத்தில்
சந்திப்போம்
வலை நூல் முகவரி
கூகிள் தேடலில்
sherfuddinp.blogspot.com