3.என் மகன் ?
கஜினி நாட்டில் ஒரு மூதாட்டி வசித்து வந்தாள். அவளுக்கு ஒரே மகள்
பருவம் அடைந்தாள். தங்கப்பதுமை போல் பொலிவுற்று விளங்கிய மகளைப் பார்த்து
பரிதவித்தாள் ஏழைத்தாய்.. தகுதியுள்ள மாப்பிள்ளை பார்த்து இப்பூங்கொடியைத் தழுவ
விடவேண்டும் .
இதற்கிடையில் ஒரு
சமூகப்புல்லுருவி தோன்றினான் .பலாப்பழத்தை ஈ மொய்ப்பதுபோல் சுற்றினான். பல
பெண்களைக் கெடுத்த பாவி என்றும் மணம் முடிக்க மனமற்றவன் என்று அறிந்தாள் மூதாட்டி
அக்கயவன் வீட்டைச் சுற்றுவதைத் தடுக்க முடியவில்லை அத்தாயால்.
மாமூத் என்ற காட்சிக்கு எளியனான கலீபாவிடம் முறையிட்டாள் சீற்றம்
கொண்ட தாய்.
கலீபா வெகுண்டார். .” எனது ஆட்சியில் இந்த அநீதியா ? அத்தறுதலையின்
தலையை தறித்து விடுகிறேன் ! இன்று அவனை உன் வீட்டில் அடைத்து வைத்து விட்டு
என்னிடம் தெரிவி “ என்று கூறி அனுப்பி விட்டார்
பால் பானையை சுற்றும் பூனைபோல அன்றிரவு வந்தான் அயோக்கியன். மகளை
வெளியே அனுப்பிவிட்டு தந்திரமாக அக்கயவனை உள்ளே அழைத்து விரைவில் வருவாள் மங்கை
என்று கூறி கதவைத் தாளிட்டு விட்டு ஓடோடிச் சென்றாள் கலிபாவிடம்
கத்தியுடன் மூதாட்டியைத்தொடர்ந்த கலீபா ‘ தாயே உன் வீட்டின் உள்ளே
சென்று விளக்கை அணைத்து விடு “ என்றார் .வியப்புற்ற தாய் அவ்வாறே செய்ய கலிபா
உள்ளே சென்றார்
கன்னியைக் கட்டித் தழுவத் துடித்த கயவனின் மேனியை கலிபாவின்
பட்டாக்கத்தி தழுவி புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள்போல் மறுபுறம் வந்தது . இரு
துண்டாய் வீழ்ந்தான் காமப்பித்தன்
“அம்மையே விளக்கேற்றும்” என்றார் கலிபா . ஏற்றியதும் வேதனை நிறைந்த
உள்ளத்துடன் வீழ்ந்தவனின் முகத்தை உற்று நோக்கினார் . முகம் மலர்ந்தது
முசல்லாவை(தொழுகைக்கான தரை விரிப்பு) விரிக்கச் சொல்லி அங்கேயே
இறைவணக்கம் செய்தார்
வியந்து நின்ற விளக்கம் கேட்க கூறுகிறார் மாமூத் .” அம்மையே ! என்மகன்
வயது வந்தவன் .சில சமயம் இவ்வாறு திரிவதாகக் கேள்வியுற்றேன் . என் மகன் என்றதால்
நான் கண்டிக்கும் அளவுக்கு உறுதியாக புகார் செய்ய யாரும் முன்வரவில்லை
இவன் அவனாக இருக்குமோ என ஐயம்
கொண்டேன் .கலிபா என்னும் முறையில் அவனைத்தண்டிக்க்க சந்தர்ப்பம் கிடைத்தது
குறித்து மகிழ்ந்தேன். ஆனால் ஏழை மாமூதின் எண்ணம் மைந்தன்பால் பரிவுற்றது
இயற்கைதானே தாயே !
எனவே அவன் முகத்தைப் பார்த்தால் சுயநலம் சுடர்விட்டு கிலாபத்தின்
நேர்மை கெட்டுவிடுமோ என அஞ்சினேன். அதனால்தான் விளக்கை அணைக்கச் செய்தேன்
ஆனால் வெட்டுண்டு வீழ்ந்தவன் இந்த ஏழை மாமூதின் மகன் அல்ல என்று
அறிந்ததும் இறைவனுக்கு வணக்கம் செலுத்தினேன் “என்று கூறி வெளியேறினார்
மனுநீதிச்சோழனின் கதை நமக்கு இங்கு ஞாபகம் வருகிறதல்லவா ! தன்
குலத்துக்கு ஒரே மகன் இருந்தான் .அவன் தெருவில் தேரின்மேல் செல்லும்போது வழி தவறிய
ஒரு பசுங்கன்று தேர்க்காலில் சிக்குண்டு மரித்தது. கலங்கிய தாய்ப்பசு அரண்மனையில்
வந்து ஆராய்ச்சி மணியை அசைத்தது
அதன் கலக்கத்தை அறிந்த மனுச்சோழன் அதைத் தீர்ப்பதற்கு தானும் அத்துயரை
மேற்கொள்வது ஒன்றுதான் வழி என்று கருதினான்
“அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின் நோய்
தம் நோய்போல் போற்றாக்கடை” *
என்ற வள்ளுவர் வாக்குப்படி தன குலக்கொழுந்தின் மார்பின் மீது தேரைச்
செலுத்தினான்
இந்தக்கதைக்கும் கலீபா மாமூத்தின் சரித்திர நிகழ்ச்சிக்கும் எத்தனைப்
பொருத்தம் !
எழுத்தாக்கம்
ஹாஜி கா. பீர் முகமது
நகராட்சி ஆணையர் பணி ஓய்வு
(மனுநீதிச் சோழன் வழியில் கலிபா என்ற தலைப்பை என் மகன் ? என்று மாற்றி
கதையை உயிரோட்டம் குறையாமல் சற்றே சுருக்கி எழுதியிருக்கிறேன்
*குறள் 315)
வலைநூல் முகவரி
sherfuddinp.blogspot.com
27022019wed B/F/த/W