Monday, 27 March 2017

வாழ்க்கைப்பயணம் –பணி மூப்புக்குபின் 5









அமிழ்-
பஞ்சகர்மா போல இன்னொரு படிப்பின் பெயரோ என்று முணுமுணுக்கிறீர்களா?
இல்லை  இல்லவே இல்லை  
தொடரின் இப்பகுதியில் படிப்புக்கு முழு விடுமுறை
பொதுவாக நம் இல்லத் திருமணங்கள்., அது தொடர்பான நிகழ்வுகள் எல்லாம் சென்னையிலேயே நடை பெறுகின்றன . சென்னைக்கு வெளியே சில நிகழ்வுகள் அரிதாக இடம்பெறுகின்றன .
நூரக்கா மகள் ஷிரீன் மகள் அனிஷா திருமணம் சென்னையில் நடந்த ஒரிரு தினங்களில் ராசபாளையத்தில் வரவேற்பு நிகழ்ச்சி . ஒரு குழுவாக இரவில் தொடரியில் பயணித்து காலை ஊரை அடைந்தோம்.
அங்கு நாங்கள் தங்க ஏற்பாடு செய்திருந்த விடுதியின் பெயர் ஹோட்டல் அமிழ்.( எதற்காக இந்தப்பெயர்   என்பது இது வரை எனக்கு விளங்கவில்லை )
மிக அழகான , வசதியான விடுதி, நல்ல உணவு. நீச்சல் குளம், சிறுவர்கள் பூங்கா என விசாலமான வளாகம் .
அறைகளும் நல்ல வசதியாக இருந்தன. நானும் இதுவரை எத்தனையோ பெரிய விடுதிகளில் தங்கியிருக்கிறேன்.; அங்கெல்லாம் இல்லாத சில சிறப்புகள் இங்கு கண்டேன் . ஓன்று குளியல் அறைக்கும்  கழிவறைக்கும் இடையே ஒரு முழு நீள கண்ணாடித்தடுப்பு, அடுத்து படிப்பதற்கு ,எழுதுவதற்கு வசதியாக ஒரு மேசை,, அதன் மேல் ஒரு படிப்பு விளக்கு . பொதுவாக விடுதி அறைகளில் பளீரென வெளிச்சம் தரும் விளக்குகள் இருக்காது . செய்தித்தாள் படிப்பது கூட சிரமமாக இருக்கும்..
சுராஜ் தன் அக்கா , அக்கா மகள், அக்கா பேத்தி மூவரையும் பற்றி ஒரு அழகான கவிதை எழுதி எல்லோரையும் உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது.சாகுல், சேக் ஆசை தீர நீச்சல்குளத்தில் விழுந்து கிடந்தார்கள் . உணவுக்கூடத்தில் மணிக்கணக்காக சிலர் சாப்பிட்டு மகிழ்ந்தார்கள் .
அரை நாள் தங்கியிருந்தாலும் விடுதிப்பணியாளர்கள் கவனிப்பும் மணமகன் வீட்டார் உபசரிப்பும் மனதில் நிற்கின்றன . ஷிரீன் சம்பந்தி வீட்டாருக்கும் பயண ஏற்படுகளை சிறப்பாக செய்திருந்த சாஜித் , அஷ்ரப் , பீருக்கும் பாராட்டுக்கள் .எல்லாவற்றையும் எல்லோரையும் ஒருங்கிணைத்து செயல் படுத்திய நூரக்காவுக்கு இரட்டைப்பாராட்டுக்கள்
அடுத்து
காரைக்குடி என்றாலே அந்த நாள் நினைவுகள் நெஞ்சில் வந்து நிலவுகள் கூடி வானில் பறக்கும் நிலைக்கு மனம் சிறகடித்துச் செல்லும். விசாலமான வீடு,மாடு கோழி பலாமரம் கிணறு, திருமணம், படித்த பள்ளி எனநினைவுகள் பின்னோக்கிச் செல்லும்.
இதற்கெல்லாம் பின்புலமாக இருந்த அந்த  வீட்டை அண்மையில் காரைக்குடியில் நடந்த பானு சாலிஹான் இரண்டாவது மகன் திருமணத்திற்குப்போனபோது பார்த்தோம்
திருமணக் கூடத்துக்கு மிக அருகில்தான் அந்த வீடு. ஆனால் அருகில் சென்று பார்க்கத்தோன்றவில்லை – காரணம் அதுஇப்போது மதுக்கூடமாகிவிட்டது.
திருமணம் சிறப்பாக நடைபெற்றது .தங்குவதற்கும் உணவுக்கும் நல்லமுறையில் ஏற்பாடுகள் செய்திருந்தார் சாலிஹான்
,சஹா  தான் படித்த பொறியியல் கல்லூரியைப்பார்த்து புத்துணர்வு பெற்று வந்தார்
எனது வங்கி நண்பர் சுந்தரத்தை நாற்பது ஆண்டுகளுக்குப்பிறகு சந்தித்தேன். நாங்கள் தங்கியிருந்த அறைக்கு வந்தார். வெகு நேரம் மனம் திறந்து பேசிக்கொண்திருந்தோம்
அத்தா, கரீம் அண்ணன் ,ரகீம் அண்ணண் எல்லோருக்கும்  நண்பர், உறவினர்  குத்துஸ். திருமண நிகழ்ச்சியில் அவரைப்பார்த்தது, பழைய அன்பு மாறாமல் அவர் தன் வீட்டுக்கு வரும்படி அழைத்தது எல்லாம்  மன நிறைவைக்கொடுத்தது .
இதெல்லாம் ஏற்கனவே படித்தது போல் தோன்றுகிறதா ? அதுதான் மலரும் நினைவுகள்
மைத்துனர் சம்சுதீன் (பசரியா) மகள் சாஜிதா திருமணமும் வரவேற்பும் அண்மையில் புதுக்கோட்டையில் நல்ல முறையில்  நடைபெற்றன .புதுக்கோட்டையில் போய் இறங்கியதில் இருந்து திரும்பும் வரை மூன்று நாட்களும் நல்ல உபசரிப்பு நல்ல கவனிப்பு பைசல், பானு பர்வேஸ் .சேக் பாப்டி ஆத்திகா ரிபாவும் கலந்து கொண்டது எங்களுக்கு ஒரு மகிழ்ச்சி
.இதில் குறிப்பிட்டு ஒன்றைச் சொல்ல வேண்டும்.சில ஆண்டுகளுக்கு முன் (மூன்று ஆண்டு இருக்கும்)  சம்சுதீன் திருமணத்துக்கு மண்டபம் பாத்தாச்சு என்றார் .சரி எதோ பிதற்றுகிறார் என்று எண்ணினோம் அப்போது திருமணம் பற்றி எந்தப்பேச்சும் எந்த ஏற்பாடும் நடக்கவில்லை ..
இறைவன் நாட்டப்படி அதே கூடத்தில் திருமணம் நல்ல முறையில் நடைபெற்றது . அதோடு அன்று சம்சு சொன்ன அதே சமையல்காரர் , அதே சீரகச் சம்பா அரிசி பிரியாணி..
திருமணம் முடிந்து சாப்பிட்டுக்கொண்டிருகையில் அண்ணே என்று பாசமாக அழைக்கும் குரல் கேட்டது ..திரும்பிப்பார்த்தால் நீளமான உடையுடன் நின்றவர் குரல் நன்கு பழக்கப்பட்டதுதான் ஆனால் இப்படி ஒரு தோற்றத்தில் நமக்குத் தம்பி யாரும் இல்லையே என்ற எண்ணம்.. பிறகுதான் பெரியத்தா மகன் ரம்ஜான் என்று தெரிந்தது..உடை பற்றி அவர் அளித்த விளக்கம் : “உடையைப் பார்த்தால் ஆணா பெண்ணா என்ற வேறுபாடு தெரியாத அளவுக்கு இரூக்கவேண்டும் “
இது மிகவும் மாறுபாடான விளக்கம் என்று எனக்குத்தோன்றியது .
என் துணைவியின் உடன்பிறப்புகள் எல்லாம் ஓன்று கூடினால் சொத்துப்பிரிவினை பற்றி பேசுவது வழக்கம்( ஒரு பொழுது போக்கு என்றும் சொல்லலாம் )
அந்த வழக்கம் மாறாமல் அடுத்த நாள் சொத்துப்பிரிவினையைப் பதிவு செய்யலாம் என்று ஒரு செய்தி வந்ததால் இரவோடு இரவாக அயுப்கான் (சர்மதா) மகிழுந்தில்  திருப்பத்தூர் போய் ராசாக்கிளி உணவகத்தில் பரோட்டா சாப்பிட்டுவிட்டு விடுதி அறையில் தங்கினோம்.(குழம்பு சுவையே இல்லாமல் சப்பென்று இருந்தது .பழைய ராசாக்கிளி சுவையெல்லாம் எங்கே பறந்து போனது என்று தெரியவில்லை )
அடுத்த நாள் சம்பந்தப்பட்ட எல்லோரும்  திருப்பத்தூரில் இருந்தோம், வழக்கம் போல் தேதி.மாதம், ஆண்டு ,யுகம் குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது ,ஒத்தி வைக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது
அன்று இரவு நானும் ஜோதியும் மதுரை போய் மெஹராஜ் அக்கா வீட்டில் தங்கி, விருந்து உபசரிப்பில் மகிழ்ந்து ஈனா கடையில் சில பல பொருட்கள் வாங்கிகொண்டு  பின் கடலூர் வந்து சேர்ந்தோம்..
மறக்க முடியாத இரவு அது. அன்றுதான் ஐநூறு ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மைய அரசு அறிவித்து நாட்டையே நிலை குலைய வைத்தது
இரண்டு ஆண்டுகளுக்கு முன் சையது பாத்து அக்கா (சுல்தான் மாமா)வைப் பார்க்க நெல்லை போயிருந்தோம் . .கல்லூரியில் உடன்படித்து, வங்கியிலும் உடன் பணியாற்றிய சுந்தரத்தைப் பார்க்க அவர் வீட்டுக்கு நெல்லை (பீடா) பீருடன்  போயிருந்தேன். வீட்டில் அவர் இல்லை . அவர் பணியாற்றும் நிறுவனத்தில் இருந்து அங்கு வந்திருந்த ஒருவர் சுந்தரத்தின் தொலைபேசி எண்ணைக்கொடுத்ததுடன் நான் அவரைத்தேடி வந்திருப்பதையும் சுந்தரத்திடம்  தெரிவித்தார்..
“பாய்” என்று உரக்க விளித்து நட்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தினார். நாற்பது ஆண்டுகள் தாண்டியும் வீட்டை அடையாளம் கண்டு வந்தது அறிந்து வியப்படைந்தார் .
நான் தங்கியிருந்த விடுதி அவர் பணியாற்றும் நிறுவனத்துக்கு அருகில்தான் இருக்கிறது  அங்கு வரமுடியுமா என்று கேட்டேன் .தனக்கு இதய அறுவை செய்திருப்பதால் மாடி ஏறி வர முடியாது என்று சொன்னார் .
அடுத்த நாள் அவர் வீட்டில் போய் சந்தித்துப்பேசினேன்.. ஒரு திருமண வேலையாக நாகர்கோவிலுக்கு சுந்தரம் போக வேண்டியிருந்ததால் அதிக நேரம் பேச முடியவில்லை.
(காரைக்குடியில் நான் சந்தித்த சுந்தரம் வேறு;இவர் வேறு)
சுந்தரத்திடம் சிறிது நேரம் பேசியதில் மிக நெருங்கிய நெல்லை நட்பு சிவராமகிருஷ்ணன் தொடர்பு எண் .கிடைத்தது . அவரைத் தொடர்பு கொண்டவுடன் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து “பாய்:” என்று அழைத்தார் .அப்போது அவர் பூனாவில் இருந்தார். விரைவில் சென்னை திரும்பி விடுவேன், சென்னையில் சந்திக்கலாம் என்று சொன்னார். அடுத்து சென்னை போயிருக்கையில் அவர் பாப்டி வீட்டுக்கு வந்து , வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.. அப்புறம் அவர் வீட்டுக்கும் நான் போய், பழைய கதையெல்லாம் பேசி விட்டு,இரவு உணவை அங்கேயே உண்டு விட்டு வந்தேன்.
நெல்லையிலிருந்து அடுத்த நாள் இன்னொரு பழைய நண்பரைப்பார்க்க மதுரை போனேன். சீ ஆர் வீ  என்று அழைக்கப்படும் அவர் என்னை விட வயதில் மிகவும் மூத்தவர் . தொழிற்சங்க நடப்புகளில் பெரிதும் பங்கேற்பவர் . வங்கியில் நான் சேர்ந்த நாளில் இருந்தே நல்ல பழக்கம். துறையூரில் நான் அதிகாரியாப் பணிபுரிந்தபோது கிளை முதுநிளைமேலாளராக அவர் இருந்தார். அப்போது நட்பு இன்னும் நெருக்கமாகி குடும்ப நட்பானது . அவர் துணைவி மதுரமும் பைசல் பாப்டியிடம் பாசமாகப் பழகுவார்
மதுரையில் அவர்கள் வீட்டுக்குப்போனதும் அகமும் முகமும் மலர வரவேற்றார்கள் .தாடியைத் தவிர முப்பது ஆண்டில் எந்த மாற்றமும் இல்லை என்றார்கள் .பல மணி நேரம் பேசிவிட்டு மாலை நெல்லை வந்து சேர்ந்தேன் .சில வாரங்களில் சீ ஆர் வீ மறைந்த செய்தி வந்தது . முதியவர்தான் , வயது எழுபத்தி ஐந்து இருக்கும். இருந்தாலும் அண்மையில் பார்த்துப் பேசிய ஒருவர் இன்று இல்லை என்பது ஒரு அதிர்ச்சி தரும் தகவலாகவே இருந்தது
 ஒரு நாள் கடலூரில் மீன் வாங்கப்போயிருந்தேன்.அங்கு நின்றிருந்த ஒருவர் நீங்கள் கனரா பேங்க் மேனேஜர்தானே என்று பேசத் துவங்கினார். .அவர் பெயர் சலாம்..வெளிநாட்டில்  பொறியராக இருந்த அவர் இப்போது இந்தியா வந்து முதுநிலப்படிப்பு  படிப்பதாகச் சொன்னார் . மனை ஓன்று விற்பனைக்கு இருப்பதாய்ச் சொன்னார் .பலதடவை பார்த்து பல பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு பைசலுக்கு அந்த இடத்தை வாங்கி, வீடு கட்டி புதுமனை புகு விழா நடத்தினோம். இறைவனருளால் விழா சிறப்பாக நடைபெற்றது . அழைத்தவர்கள் எல்லோரும் (ஒரு சிலரைத்தவிர ) வந்தது மகிழ்ச்சியாக இருந்தது .
வீடு அமைப்பும் விருந்தும்(சைவம் அசைவம் இரண்டும்) மிகச் சிறப்பாக இருந்ததாக எல்லோரும் பாராட்டினார்கள்
கனார வங்கி ஓய்வூதியர்கள் சங்க மாநாடு கொச்சியில் இரண்டு தினங்கள் நடைபெற்றது . நீண்ட தொடரிப்பயணத்தின் பின் கொச்சியை அடைந்தேன். அங்கு பழைய நண்பர்கள் பலரை சந்திக்க ஒரு வாய்ப்புக் கிடைத்தது.குறிப்பாக ஜனாப் சம்சுதீன் (மதுரைக்காரர்).எழுபத்திஐந்து வயது தாண்டியும், தொழில் சங்க செயல்பாடுகளில் தீவிரமான ஆர்வம்,ஈடுபாடு. .ஈரோட்டில் அவரும் நானும் வங்கி ஆய்வுத்துறையில் ஒன்றாகப் பணியாற்றினோம். மதுரைக்கு மாறுதல் அவர் கேட்டிருக்க பெயர் குழப்பத்தால் (??) எனக்கு மாறுதல் செய்தி வர அவர் உடன் வட்ட அலுவலகம் சென்று தவறைச் சரி செய்து   வந்தார்.
வங்கி விதிமுறைகளை நன்கு கற்றவர் என்ற பெயர் அவருக்கு உண்டு. ஒருமுறை அவர் சொன்ன ஒரு கருத்து எனக்கு சரியென்று படவில்லை. தலைமை அலுவலகத்துக்கு எழுதிக்கேட்டதில் என் கருத்தே சரியென்று தெளிவு படுத்தினார்கள். அது முதல் என்னை மிகவும் மதிப்பாகவும் பாசமாகவும் நடத்துவார். .
ஒரு வழியாக கல்வி பற்றி எதுவும்சொல்லாமல் இந்தப் பகுதியை நிறைவு செய்து விட்டேன்.
இன்னும் சில செய்திகள் ஏற்கனவே படித்தது போல் தெர்கிறதா ? அதுதான் மலரும் நினைவுகளைத் தொடரும் நினைவுகள்
இறையருளால் அடுத்த பகுதியியில் கல்வி பற்றி சில செய்திகளையும் மருத்துவம் பற்றி என் கருத்துக்களையும் சொல்லி அதோடு இந்தத் தொடரை நிறைவு செய்ய எண்ணுகிறேன்
சென்ற பகுதி பற்றி கருத்துக்களும் பாராட்டுகளும் தெரிவித்த ஷாகுல், வர்மா கம்பன் கவிரா ,கிரசன்ட் ஷேக், ரவிராஜ் மெஹராஜ் அக்கா, ஷஹா ஹமீதா , பாப்டி அனைவருக்கும்  , ,நன்றி    
     . [16:18, 3/18/2017] Shahul
ஒரு மனிதராலே எத்தனை கற்க முடியும் ஆய கலைகள் 64 கற்று தேற்சி பெற முடிவு செய்தது போல். தெரிகிறது                        
[1                       
 [16:21, 3/18/2017] Shahul: நானும் ஒரு சில லற்றை கற் றுக் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது6:21,
( என் கருத்து தமிழ் நாடு திறந்த நிலைப்பல்கலைக் கழகத்தில் இசுலாம் பற்றிய படிப்பு நீ படிக்கலாம் .மிகக்குறைந்த கட்டணம் .அரபு மொழியில் நல்ல தேர்ச்சி இருந்தால் முதுநிலப்பட்டம் ,இல்லாவிட்டால் இளநிலைப்பட்டப்படிப்பு படிக்கலாம் )
             
மாமா நீங்கள் படிப்பதை பார்க்கும் பொழுது நான்கு வருடம் பொறியர்கல்வி அதை விடுத்து Geology MSC வரை 5 வருடம் இன்னும் research என்ற பெயரில் 4 வருடம் என எனது மகன் படிப்பை தொடர்வேன் என சொல்வதில் வியப்பே இல்லை. ஏதோ ஒரு ஜீன் தான் அவனை அவ்வாறு தூண்டி வருகிறது என நினைக்கிறேன்

Varma 108 Kamban Kavira 18 03 17
உங்கள் பதிவினை படித்துவிட்டு சற்றே மெய்மறந்து போனேன்.. வர்மா முதுநிலை பயிற்சி தங்களோடு இணைந்து நிறைவு செய்ததை நினைத்து மகிழ்ச்சி கொள்கின்றேன்.. வளரும் தலைமுறைக்கு உங்கள் பதிவு ஒரு ஊன்றுகோல் h 👏 என்பதில் பெருமைபடுகின்றேன்..
Crescent Sheik 18 03 17
Subahanalla
CB rtd Raviraj 18  03 17
[20:16, 3/18/2017] Cb rtd Raviraj:  My wishes to you Sir for emerging a new life as writer after retirement_                       
[20:16, 3/18/2017] Cb rtd Raviraj: Even in services you are interested in yoga and unani medicines.                       
[20:16, 3/18/2017] Cb rtd Raviraj: Now you are free from the tensions prevailed in banking career and this is the high time to live for ourselves..

Meharaaj 18 03 17
அஸ்ஸலாமு அலைக்கும் ஷர்புதீன்
போன பயணக்கட்டுரைக்கு விமர்சனம் எழுதாதது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. அடிக்கடி ஞாபகம் வரும்.அதாவது யோகாவையும் இஸ்லாத்தையும் இணைத்து நீ முன்பு எழுதியிருந்தாயல்லவா, அது ஏதோ சும்மா யோசித்து எழுதியது என நினைத்தேன்.
போன கட்டுரை படித்த பின் தான் தெரிந்தது 
அதற்கு நீ எவ்வளவு தூரம் படித்து ஆய்வு செய்திருக்கிறாய் என்பது.அதை அவசியம் பாராட்டி எழுத வேண்டும் என நினைத்துக் கொண்டே இருப்பேன் ஆனால் நேரமே கிடைக்க வில்லை.
P hd  செய்து அண்ணா யுனிவர்சிட்டி யில் சமர்ப்பித்த தெல்லாம் யாருக்குமே தெரியாத ஆச்சரியப்பட்ட விஷயங்கள்.
இந்த வாரமும் படித்து மலைத்துப் போனேன்.
படிப்புக்கு எல்லையே இல்லை என உன் மூலம் தெரிந்து கொண்டேன்.
ஆர்வம் இருந்தால் எவ்வளவு வேண்டுமானாலும் படிக்கலாம் என்ற உணர்வை எல்லாம் வல்ல அல்லாஹ் நம் சந்ததிகளுக்கெல்லாம் கொடுத்தருளட்டும்.
உன் சைக்காலஜி கனவும் நிச்சயம் வெற்றி பெறும்.
மாஷா அல்லாஹ்
(என் கருத்து  நான் படித்தது அண்ணாமலையில் எம். எஸ் சீ யோகா )
[08:27, 3/19/2017] Shaha Hameeda: உங்கள் பயண கட்டுரை படிக்க ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும்                       
[08:27, 3/19/2017] Shaha Hameeda: ஆனால் இன்னும் இந்த வார கட்டுரை படிக்கவில்லை இனிமேல் தான் படிக்கனும்                       
[08:28, 3/19/2017] Shaha Hameeda: அல்ஹம்துலில்லாஹ்
பாப்டி (தொலைபேசியில்) மிக நன்றாக இருந்தது
இ(க)டைச் செருகல்
மகாபாரதத்தில் ஒரு வில் வித்தை பற்றி வரும். மேலே ஒரு மீன் உருவ பொம்மை சுழன்று கொண்டு மேலும் கீழும் ஆடிக்கொண்டிருக்கும். கீழே ஒரு தொட்டியில் உள்ள தண்ணீரில் தெரியும் மீன் பிம்பத்தைப்பார்த்து மேலே பார்க்காமல் அந்த மீன் பொம்மையை அம்பெய்து வீழ்த்த வேண்டும். வில் வித்தையில் மிகவும் தேர்ச்சி பெற்ற அர்ச்சுனன், கர்ணன் போன்றவர்கள்தான் இதைச் செய்ய முடியும்.
தொடர் வண்டியில் காலைக்கடனை முடித்து காலைக்கழுவி வரும் நம் மக்கள்  இப்படி ஒரு வித்தையை மிக இயல்பாக தினமும்  செய்கிறார்கள்
குவளைகளுக்கு எப்போது விலங்கில் இருந்து விடுதலை ?
உங்கள் கருத்துக்களை எதிர் நோக்குகிறேன்
இறையருளால்
அடுத்த பகுதியில்
சந்திப்போ



வலை நூலில் படிக்க

கூகிள் தேடலில்
sherfuddinp.blogspot.com

 

 ம்

Saturday, 18 March 2017

வாழ்க்கைப்பயணம் –பணி மூப்புக்குபின் 4




உளவியல் படிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏனோ தள்ளிக்கொண்டே போனது.
நான் மிகவும் விரும்பிய யோகாவில் முதுநிலைப்பட்டம் பெற்றவுடன் அதற்கு மேல் யோகாவில் ஆய்வுப்படிப்புத் தொடர விரும்பினேன். அண்ணாமலையில்  கட்டணம் மிக அதிகமாக இருந்ததால் தமிழ்நாடு உடற்பயிற்சி பல்கலைக்கழகத்தைத் தொடர்பு கொண்டேன். நேரிலும் போய் யோகா துறைத் தலைவரை இருமுறை  சந்தித்துப்பேசினேன். கட்டணம் குறைவாகத்தான் இருந்தது ஆனால் அந்தப்பல்கலைக்கழகம் ஒரு தனிமையான ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் இருக்கிறது சரியான போக்குவரத்து வசதியோ சாலையோ கிடையாது அங்கு தங்கிப்படிப்பதெல்லாம் அவ்வளவு எளிதல்ல .
இப்போது அதை அடுத்து மிகப்பெரிய அளவில் காவலர் குடியிருப்பு உருவாகியுள்ளது .இனிமேல் ஓரளவு போக்குவரத்து வசதிகள் உருவாகலாம் . ஆனல் இப்போது கட்டணம் பன்மடங்கு உயர்ந்து விட்டது
எனவே அந்த எண்ணத்தை -விட்டு விடவில்லை – ஒத்தி வைத்திருக்கிறேன். இறைவன் நாடினால் படிக்கலாம் .
யோகாவுக்கு அடுத்து நான் படிக்க விரும்பியது உளவியல்.அதற்காக உடற்பயிற்சி பல்கலைக்கழகத்தின் கல்வி மையத்தை அணுகினேன்,. மையத் தலைவர் சொன்னார்- “ஏற்கனவே யோகா, அக்குபஞ்சர் படித்துள்ளதால் நீங்கள் வர்மக்கலை படிப்பது பொருத்தமாக இருக்கும். மேலும் குறைந்தது பத்துப் பேராவது சேர்ந்தால்தான் உளவியல் படிப்பு நடத்துவார்கள் .அதற்கு அவ்வளவு பேர் சேருவார்கள் என்று சொல்லமுடியாது “
அவர் சொல்லாத ஒரு காரணமும் இருக்கிறது – அது உளவியலுக்கும் வர்மக்கலைக்கும் உள்ள கட்டண வேறுபாடு ‘ கட்டணத்தில் ஒரு பகுதி கல்வி மையத்திற்குக் கிடைக்கும்.,
அரை மனதோடு ஓராண்டு  வர்மக்கலை முதுநிலைப்பட்டயப் படிப்பில் சேர்ந்தேன் படிக்க எளிதாக இருந்தது வர்மக்கலை , தடவல் முறை, மூலிகைகள் பற்றி பல செய்திகளை ஏட்டளவிலாவது அறிந்த கொள்ள முடிந்தது  
இந்தப்படிப்பு நிறைவுற்றதும் அடுத்து உளவியல் படிக்க எண்ணினேன். அப்போது வர்மா வகுப்பு நடத்திய மரு. மாரியப்பன், வர்மா போன்ற முதுநிலைப்பட்டப் படிப்புகளுக்கு ஆங்கில மருத்துவர்களிடமிருந்து  ` பலத்த எதிர்ப்பு கிளம்பி வருகிறது .இது இன்னும் வலுத்தால் இந்தப்படிப்புகள்  நிறுத்தப்படலாம் எனவே இந்த ஆண்டு முது நிலைப் பட்டப்படிப்பில் சேர்ந்து விடுங்கள் என்று அறிவுறுத்தினார் சரி என்று அதிலும் சேர்ந்து நிறைவு செய்தேன்.
நிறைய மருத்துவர்கள் அறிமுகம் கிடைத்தது .வர்மா படிப்பில் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் பல தலைமுறைகளாக சித்த, வர்ம முறை வைத்தியம் செய்து வருபவர்கள் . நன்கு கற்றுத் தேர்ச்சி பெற்றவர்கள்
அதில் இருவர் மாவட்ட மருத்துவ அதிகாரிகள் . ஒருவர் நீதி அரசர், ஐந்தாறு பேர் வழக்கறிஞர்கள் ,விவசாய முதுநிலைப்பட்டம் பெற்ற அரசு ஊழியர் ,நீதி மன்ற அலுவலர்கள் அழகு நிலையம் நடத்துபவர்கள்  எனப் பலதரப்பட்டவர்கள் .மலேசியாவிலிருந்து ஒரு பெண்ணும்  வந்திருந்தார்
வர்மா முதுநிலைப் பட்டப்படிப்பின்  தேர்வுகளுக்கு முன் ஒரு சிற்றூரில் மருத்துவ முகாம் ஓன்று மாணவர்கள் அனைவரும் சேர்ந்து நடத்த வேண்டும்.
நாங்கள் தேர்வு செய்தது கிழக்குக் கடற்கரையில் உள்ள கூவத்தூர்
(நூற்றுக்கணக்கானோர்   அடைக்கப்பட்டு தீவனம்  போடப்பட்டு தண்ணி காட்டப்பட்டு  மேய்ந்த அதே ஊர்தான்).
மாணவர்களுள் ஒருவர் அந்த ஊரைச்சேர்ந்தவர், சித்த வைத்தியர், தானே முன்வந்து எல்லா ஏற்பாடுகளும் செய்தார் உள்ளூர் மக்கள் பலரும் வந்து இலவச மருத்துவம் பெற்றுச்சென்றனர் அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது- பல ஆண்டுகளாக நிலையில் அமரவும், நேராக நடக்கவும் முடியாத ஒரு தொழிலாளி நாற்பது நிமிட வைத்தியத்துக்குப்பின் நன்றாக உட்காரவும் நடக்கவும் முடிந்தது
இரண்டாண்டு வர்மம்படிப்பு நிறைவுற்றதும் உளவியல் படிக்க கட்டணத்தோடு உடற்பயிற்சி பல்கலைக்கழகத்துக்கு நேரடியாக விண்ணப்பித்தேன். சில வாரங்கள் கழித்து அங்கிருந்து தொலைபேசியில் உளவியல் படிப்புக்கு போதுமான மாணவர்கள் விண்ணப்பிக்கவில்லை. எனவே உங்கள் பணத்தைத் திருப்பி அனுப்பி விடுகிறோம். அல்லது நீங்கள் விரும்பினால் வேறு படிப்பு படிக்கலாம் என்று சொன்னார்கள்
வர்மா வகுப்பு நடத்திய மருத்துவரைக் கலந்துபேசி, பஞ்சகர்மா படிப்பில் சேர்ந்தேன். இது ஆயுர்வேதத்தின் ஒரு பகுதி.
இதில் வரும் குருதி வடிய விடும் மருத்துவம் (Bloodletting)  முழுக்க முழுக்க இசுலாமிய வைத்திய முறையில் வலியுறுத்திப்பேசப்படும் இரத்தம் குத்தி வாங்குதல் எனப்படும் முறையாகும் (இந்தபெயர்கள் எல்லாம் உச்சரிக்கவே சற்று அச்சமும் வெறுப்பும் வரும் . என்ன செய்வது – படிக்க முனைந்து விட்டால் எல்லாவற்றையும் படித்துத்தான் ஆகவேண்டும்)
மூட்டு வலி எந்த முற்றிய நிலையில் இருந்தாலும், மூட்டு மாற்று அறுவை செய்யாமல் இருந்தால் பஞ்ச கர்மா மூலம் குணப்படுத்தி விடலாம் என்று சொல்கிறார்கள் .
பஞ்சகர்மா தொடர்பு வகுப்பு பல்கலைக்கழக வளாகத்திலேயே நடத்தினார்கள் முன்பே குறிப்பிட்டது போல் சரியான போக்குவரத்து வசதிகள் இல்லாததால் அங்கேயே தங்கித்தான் ஆகவேண்டும்,விடுதி அறைகள் எல்லாம் நிரம்பியிருந்ததால் .ஒரு பெரிய கூடத்தில் தங்க இடம் கொடுத்தார்கள் . என் வயதுக்காக ஒரு கட்டில் கொடுத்தார்கள் .உணவு விடுதி உள்ளேயே இருந்தது . நல்ல, தூய்மையான காற்று. சுவையான தண்ணீர் ஒரு மாறுபட்ட அனுபவமாக இருந்தது .
நாங்கள் தங்கியிருந்த கூடத்தில்தான் தொலைக்காட்சிப்பெட்டி இருந்தது . அது பெரும்பாலும் வேலை செய்யாது.
மட்டைப்பந்து போட்டி ஒளிபரப்பாகும் நாட்களில் எப்படியாவது யாரையாவது பிடித்து அதை இயங்க வைத்து விடுதி மாணவர்கள் நடு இரவு வரை மகிழ்ச்சி ஆரவாரத்துடன் பார்த்து மகிழ்வார்கள் அதுவும் நன்றாகத்தான் இருந்தது
பஞ்சகர்மா செயல்முறை வகுப்பில் சளியை நீக்கும் முறையை ஆசிரியர் ஒரு மாணவருக்கு மூக்கிலும் தொண்டையிலும் சொட்டு மருந்து விட்டு செய்து காண்பித்தார் .பார்த்தால் அச்சம் கொள்ளும் அளவுக்கு சளி வெளியேறி, முகமே சுருங்கியது போல் ஆகிவிட்டது
பஞ்ச கர்மா தொடர்பு வகுப்பில் கிடைத்த சில குறிப்பிடத்தக்க அறிமுகங்கள்
-முரளி- சென்னை வாசி .மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார். யோகா முதுநிலைப்பட்டம் பெற்றவர்.. எதோ நீண்ட நாள் தெரிந்தவர் போல் மிகவும் நட்புடன் எளிமையாகப் பழகுவார்,. வர்மாவுக்கு கூவத்தூரில் மருத்துவ முகாம் நடத்தியது போல் பஞ்ச கர்மாவுக்கு சென்னையை அடுத்த நன்மங்கலம் என்ற சிற்றூரில் நடைபெற்றது பெயரளவில்தான் சிற்றூர். நல்ல சாலை வசதி, தெருவெங்கும் நிழல்தரும் மரங்கள், பெரிய பெரிய வீடுகள் என ஒரு முழு நகரத் தோற்றத்தில் இருந்தது சென்னை நகருக்கு தண்ணீர் பகிர்மானம் செய்யும் நீர் ஆதாரம் அருகில் இருப்பதாய்ச் சொன்னார்கள். அதோடு அடர்ந்த காடும் (reserve forestஅருகில் இருக்கிறதாம்.
சென்னைக்கு அருகில் காடு இருப்பது இதுவரை நான் அறியாத  ,வியப்பூட்டும் செய்தி.
நன்மங்கலம் செல்ல எங்கள் வீட்டுக்கு வந்துவிடுங்கள் நாம் அங்கிருந்து போகலாம் என்று முரளி சொன்னார்., அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு கடலூரிலிருந்து பேருந்தில் சென்னைக்குப் பயணித்தேன். .சென்னை அசோக் நகரில் கடலூரிலிருந்து செல்லும் பேருந்து நிறுத்தம் அருகே அவர் வீடு. பேருந்திலிருந்து இறங்கும்போது அங்கு எனக்காக வண்டியுடன் காத்திருந்தார்.. காலை சிற்றுண்டி அவர் வீட்டில் முடித்து விட்டு அவர் வண்டியில் அவரும் இன்னொருவரும் பயணிக்க, நான் அவரது இன்னொரு வண்டியை ஓட்டிக்கொண்டு நன்மங்கலம் போய்ச் சேர்ந்தோம். சென்னையில் பணியாற்றும்போது மாநகரத்தில் வண்டி ஓட்டியது , பத்து ஆண்டு இடைவெளிக்குப்பின் அன்று வண்டி ஓட்டினேன்.( முரளிக்கு நன்றி) .இன்னுமொரு வியப்பு மதிய உணவு எனக்கும் சேர்த்துக் கொண்டு வந்திருந்தது.. மாலை அவர் வீட்டுக்குப் போய் காபி சாப்பிட்டு விட்டு அவர் வீட்டுக்கு அருகிலேயே கடலூர் பேருந்தில் ஏறி வீடு வந்து சேர்ந்தேன்.
முரளி வீடு சொந்த வீடு இல்லை மிகப் பெரிய வீடும் இல்லை,  துணைவி ஆசிரியை இரண்டு பெண்கள் . அவர் மனம் மிக மிக விசாலமானது .அவர் துணைவியாரும் அவரோடு ஒத்துப்போகிறார். இன்னொரு முறை அவரது வீட்டுக்குப் போகையில் நிறைய மாங்காய் பறித்துக் கொடுத்தார்
அடுத்து மரு.சையத் முபாரக் .மதுரை அருகிலுள்ள மேலூரைச் சேர்ந்த இளைஞர் . சட்டம் பயின்ற அவர்  தன உறவினர் ஒருவருக்கு ஆங்கில மருத்துவத்தினால் விளைந்த தீங்கை நேரில் பார்த்து அதனால் மாற்று மருத்துவம் படித்தவர் . ஏற்கனவே  ஓமியோபதியில் பட்டம் பெற்ற அவர் வர்மாவும் பஞ்சகர்மாவும் படித்து வந்தார்., மேலூரில் முழு நேர மருத்துவமனை நடத்தி வருகிறார். அவர் பேச்சு , செயல் எல்லாம் நம் நெருங்கிய உறவினர் போல் எண்ணத் தோன்றியது . எங்கள் மருத்துவ மனைக்கு பணியாற்ற  வந்து விடுங்கள், உங்களுக்கு வேண்டிய வசதிகள் செய்து தருகிறேன் என்று சொன்னார் .
அதற்கடுத்து விடுதியில் தங்கி விளையாட்டுத்துறை பட்டப்படிப்பு பயின்று வந்த ஆம்பூரைச் சேர்ந்த இளைஞர் (.பெயர் நினைவில் இல்லை ) முபாரக்கும் நானும் அருகில் உள்ள ஊரில் வெள்ளிக்ளிழமை கூட்டுத் தொழுகையில் கலந்து கொள்வதற்கா யாரிடமோ வண்டி வாங்கி எங்களை அழைத்துச்சென்று திரும்ப விடுதியில் கொண்டு வந்து சேர்த்தார் .இவ்வளவுக்கும் இரண்டு நாள் பழக்கம்தான்
இன்னொரு மறக்க முடியாத அறிமுகம் ரஜோதா
.வர்மாவிலும் பின் பஞ்ச கர்மாவிலும் உடன் படித்தவர் . நாற்பது வயதைத்தாண்டியவர் பார்த்தால் முப்பதுக்குள்தான் மதிக்கலாம். கடுமையான பயிற்சி செய்து உடலை கட்டுக்குலையாமல் பாதுகாத்து வந்தார். நேரந்தவறாமல் வகுப்புக்கு வருவது, சிரத்தையுடன் பாடத்தை கவனித்து குறிப்பு எடுப்பது என்று ஒரு உண்மையான மாணவனாக இருந்தார். அதிகம் பேசாமலேயே எல்லோருடனும் நன்றாகப் பழகுவார்
ஒரு முறை வர்மா பயிற்சி வகுப்பில் தடவல் செய்முறை காண்பிக்க இவரை அழைத்தபோது சட்டையைக் கழற்றி உடலைக் காண்பித்தால் கண் பட்டு விடும் என்று சிரித்தபடியே மறுத்து விட்டார்.
ஒய் எம் சீ ஏ வளாகத்தில் பஞ்சகர்மா தேர்வு நிறைவுற்று அங்குள்ள திடலில் நின்று வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தார் .
பொறியியல் பட்டதாரியான அவர், ஐ பீ எம் நிறுவனத்தில் மிக நல்ல ஊதியத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார்..வேலைப்பளுவினால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக உடன் பணியாற்றிய ஒரு சிலர் இளமையிலேயே காலமானதால் ஒரு அச்ச உணர்வோடு, பணியிலிருந்து விலகி விட்டார். .பணியில் அமர்த்திக்கொள்வதாக உறுதி அளித்திருந்த மற்றொரு நிறுவனம் எதிர் பாராமல் கையை விரித்து விட செய்வதறியாமல் திகைத்து நிற்க துணைவியின் ஊதியத்துக்குள் சமாளிக்க வேண்டிய நிலை, மன அழுத்தம் .பரம்பரை வர்மா மருத்துவரான அவரது தாத்தாவிடம் வர்மக்கலையை கற்றுகொண்டார். வர்மத்தில் முதுநிலைப்பட்டம் பெற்று அழகு நிலையம்  நடத்தி வருகிறார். தலை முடி அடர்த்தியாக கருப்பாக வளர  ஒரு மருந்து அவரே கண்டுபிடித்து விற்பனை செய்து வந்தார்
மகள் பத்தாம் வகுப்பில் மிக நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற இனி நீங்கள் படிப்பதை நிறுத்தி வீட்டு மகள் படிப்பில் கவனம் செலுத்துங்கள் என்று துணைவி சொல்லிவிட்டாராம்
இப்போது  ஓரளவு  வருமானம் வருகிறது .விரைவில் .உலக வர்த்தக மையத்தில் நடைபெற இருக்கும் கண்காட்சியில் தான் செய்த அழகுப்பொருட்களை காட்சிப்படுத்த திட்டமிட்டிருந்தார்   அது தன் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமையும்
இவ்வளவு செய்திகளையும் மனம் திறந்து வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தார் .நாற்பது வயதில் படிப்பதை நான் ஒரு பெரிய சாதனை என்று எண்ணினேன், ஆனால் நீங்களோ அறுபது தாண்டியும் படிப்பது எங்களுக்கெல்லாம் ஒரு ஊக்க மருந்து போல் செயலாற்றுகிறது என்று என்னைப்பாராட்டினார்
எதற்கு யாரோ ஒருவரைபற்றி இவ்வளவு விளக்கம் என்று நீங்கள் முனுமுனுப்பது எனக்குக்கேட்கிறது .
எண்ணி முப்பது நாளில் கட்செவியில் ரஜோதா. காலமான செய்தி! மிகவும் அதிர்ச்சியுற்றேன் .
மூன்று ஆண்டுகளில் பேசாத பேச்செல்லாம் முப்பது நிமிடத்தில் பேசி முடித்து முப்பதே நாட்களில் பிரிந்து மறைந்து விட்டார்  ,
இத்துடன் இந்தப்பகுதியை நிறைவு செய்கிறேன்
இன்னும் ஒன்றிரண்டு பகுதிகளில் இந்தத்தொடரை நிறைவு செய்ய எண்ணுகிறேன்  .

. சென்ற பகுதி
பற்றி கருத்துகளும் பாராட்டுகளும் தெரிவித்த இதயத்துக்கும் ஒய்வு பெற்ற கனரா வங்கி அலுவலர் ரவி ராஜுக்கும் நன்றி
,
Hidayat 08 03 17
மேற்கின் இறையியலை(இஸ்லாம்) கிழக்கின் வாழ்வியலோடு(யோகா)சந்திக்க  வைத்த ஒரு பெருமுயற்சி உங்கள் ஆராய்ச்சி கட்டுரை. இது இஸ்லாத்துக்கான தொண்டா அல்லது தமிழுக்கான கொடையா! காலம் முடிவு செய்யும்.

இதுவரை யாரும் அணுகாத .அணுக அஞ்சும் ஒன்றை கருபொருளாய் கொண்டு,ஆய்ந்து,ஆராய்ச்சி செய்து ஆய்வு கட்டுரையாய் ஆவணம் செய்தமைக்கு எங்கள் ஆயிரம் நன்றிகள்.
...
CB Rtd Ravi Raj 09 03 17
Nice sharing Sir...
Keep it.....
My wishes

சென்ற பகுதியில்
ABCD எழுத்துகள் இல்லாத நூறு ஆங்கிலச்  சொற்கள் விரைந்து சொல்லவேண்டும் என்று ஒரு எளிய வினா கேட்டிருந்தேன்,
Zero to 99 என்று சரியான விடை தெரிவித்த தங்கை சுராசுக்கும் பாப்டிக்கும் பாராட்டுகள்
Zero to 99999 --  ABC எழுத்துகள் இல்லாத ஒரு லட்சம் ஆங்கிலச் சொற்கள்
Zero to 9999999BC எழுத்துகள் இல்லதா ஒரு கோடி ஆங்கிலச் சொற்கள்
எண்ணைக்குறிக்கும் எந்த ஆங்கில சொல்லிலும் B வருவதில்லை
இ(க)டைச் செருகல்
அண்மையில் ஒரு திருமண வரவேற்பில் கலந்து கொள்ள திருச்சி போயிருந்தேன். நாற்பது ஆண்டுகளுக்கு முன் திருச்சியில் பணியாற்றியபோது சுவைத்து மகிழ்ந்த மைக்கேல் ஐஸ் கிரீம் நிலையத்தைதேடிப்போனேன். அதே இடத்தில் அதே அமைப்பில் நிலையம் இருந்தது சுவையும் அதே சுவை, .உரிமையாளர் கூட முன்பு பார்த்த அதே நபர் போல்தான் இருந்தார்
மாற்றம் ஒன்றுதான் மாற்றமில்லாதது – இந்த விதிக்கு  சில விலக்குகளும் உண்டு போலும்  
உங்கள் கருத்துகளை எதிர் நோக்குகிறேன்
இறைவன் அருளால்
அடுத்த பகுதியில்
சந்திப்போம்

வலை நூலில் படிக்க
கூகிள் தேடலில்
sherfuddinp.blogspot.com   .