Saturday, 18 March 2017

வாழ்க்கைப்பயணம் –பணி மூப்புக்குபின் 4




உளவியல் படிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏனோ தள்ளிக்கொண்டே போனது.
நான் மிகவும் விரும்பிய யோகாவில் முதுநிலைப்பட்டம் பெற்றவுடன் அதற்கு மேல் யோகாவில் ஆய்வுப்படிப்புத் தொடர விரும்பினேன். அண்ணாமலையில்  கட்டணம் மிக அதிகமாக இருந்ததால் தமிழ்நாடு உடற்பயிற்சி பல்கலைக்கழகத்தைத் தொடர்பு கொண்டேன். நேரிலும் போய் யோகா துறைத் தலைவரை இருமுறை  சந்தித்துப்பேசினேன். கட்டணம் குறைவாகத்தான் இருந்தது ஆனால் அந்தப்பல்கலைக்கழகம் ஒரு தனிமையான ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் இருக்கிறது சரியான போக்குவரத்து வசதியோ சாலையோ கிடையாது அங்கு தங்கிப்படிப்பதெல்லாம் அவ்வளவு எளிதல்ல .
இப்போது அதை அடுத்து மிகப்பெரிய அளவில் காவலர் குடியிருப்பு உருவாகியுள்ளது .இனிமேல் ஓரளவு போக்குவரத்து வசதிகள் உருவாகலாம் . ஆனல் இப்போது கட்டணம் பன்மடங்கு உயர்ந்து விட்டது
எனவே அந்த எண்ணத்தை -விட்டு விடவில்லை – ஒத்தி வைத்திருக்கிறேன். இறைவன் நாடினால் படிக்கலாம் .
யோகாவுக்கு அடுத்து நான் படிக்க விரும்பியது உளவியல்.அதற்காக உடற்பயிற்சி பல்கலைக்கழகத்தின் கல்வி மையத்தை அணுகினேன்,. மையத் தலைவர் சொன்னார்- “ஏற்கனவே யோகா, அக்குபஞ்சர் படித்துள்ளதால் நீங்கள் வர்மக்கலை படிப்பது பொருத்தமாக இருக்கும். மேலும் குறைந்தது பத்துப் பேராவது சேர்ந்தால்தான் உளவியல் படிப்பு நடத்துவார்கள் .அதற்கு அவ்வளவு பேர் சேருவார்கள் என்று சொல்லமுடியாது “
அவர் சொல்லாத ஒரு காரணமும் இருக்கிறது – அது உளவியலுக்கும் வர்மக்கலைக்கும் உள்ள கட்டண வேறுபாடு ‘ கட்டணத்தில் ஒரு பகுதி கல்வி மையத்திற்குக் கிடைக்கும்.,
அரை மனதோடு ஓராண்டு  வர்மக்கலை முதுநிலைப்பட்டயப் படிப்பில் சேர்ந்தேன் படிக்க எளிதாக இருந்தது வர்மக்கலை , தடவல் முறை, மூலிகைகள் பற்றி பல செய்திகளை ஏட்டளவிலாவது அறிந்த கொள்ள முடிந்தது  
இந்தப்படிப்பு நிறைவுற்றதும் அடுத்து உளவியல் படிக்க எண்ணினேன். அப்போது வர்மா வகுப்பு நடத்திய மரு. மாரியப்பன், வர்மா போன்ற முதுநிலைப்பட்டப் படிப்புகளுக்கு ஆங்கில மருத்துவர்களிடமிருந்து  ` பலத்த எதிர்ப்பு கிளம்பி வருகிறது .இது இன்னும் வலுத்தால் இந்தப்படிப்புகள்  நிறுத்தப்படலாம் எனவே இந்த ஆண்டு முது நிலைப் பட்டப்படிப்பில் சேர்ந்து விடுங்கள் என்று அறிவுறுத்தினார் சரி என்று அதிலும் சேர்ந்து நிறைவு செய்தேன்.
நிறைய மருத்துவர்கள் அறிமுகம் கிடைத்தது .வர்மா படிப்பில் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் பல தலைமுறைகளாக சித்த, வர்ம முறை வைத்தியம் செய்து வருபவர்கள் . நன்கு கற்றுத் தேர்ச்சி பெற்றவர்கள்
அதில் இருவர் மாவட்ட மருத்துவ அதிகாரிகள் . ஒருவர் நீதி அரசர், ஐந்தாறு பேர் வழக்கறிஞர்கள் ,விவசாய முதுநிலைப்பட்டம் பெற்ற அரசு ஊழியர் ,நீதி மன்ற அலுவலர்கள் அழகு நிலையம் நடத்துபவர்கள்  எனப் பலதரப்பட்டவர்கள் .மலேசியாவிலிருந்து ஒரு பெண்ணும்  வந்திருந்தார்
வர்மா முதுநிலைப் பட்டப்படிப்பின்  தேர்வுகளுக்கு முன் ஒரு சிற்றூரில் மருத்துவ முகாம் ஓன்று மாணவர்கள் அனைவரும் சேர்ந்து நடத்த வேண்டும்.
நாங்கள் தேர்வு செய்தது கிழக்குக் கடற்கரையில் உள்ள கூவத்தூர்
(நூற்றுக்கணக்கானோர்   அடைக்கப்பட்டு தீவனம்  போடப்பட்டு தண்ணி காட்டப்பட்டு  மேய்ந்த அதே ஊர்தான்).
மாணவர்களுள் ஒருவர் அந்த ஊரைச்சேர்ந்தவர், சித்த வைத்தியர், தானே முன்வந்து எல்லா ஏற்பாடுகளும் செய்தார் உள்ளூர் மக்கள் பலரும் வந்து இலவச மருத்துவம் பெற்றுச்சென்றனர் அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது- பல ஆண்டுகளாக நிலையில் அமரவும், நேராக நடக்கவும் முடியாத ஒரு தொழிலாளி நாற்பது நிமிட வைத்தியத்துக்குப்பின் நன்றாக உட்காரவும் நடக்கவும் முடிந்தது
இரண்டாண்டு வர்மம்படிப்பு நிறைவுற்றதும் உளவியல் படிக்க கட்டணத்தோடு உடற்பயிற்சி பல்கலைக்கழகத்துக்கு நேரடியாக விண்ணப்பித்தேன். சில வாரங்கள் கழித்து அங்கிருந்து தொலைபேசியில் உளவியல் படிப்புக்கு போதுமான மாணவர்கள் விண்ணப்பிக்கவில்லை. எனவே உங்கள் பணத்தைத் திருப்பி அனுப்பி விடுகிறோம். அல்லது நீங்கள் விரும்பினால் வேறு படிப்பு படிக்கலாம் என்று சொன்னார்கள்
வர்மா வகுப்பு நடத்திய மருத்துவரைக் கலந்துபேசி, பஞ்சகர்மா படிப்பில் சேர்ந்தேன். இது ஆயுர்வேதத்தின் ஒரு பகுதி.
இதில் வரும் குருதி வடிய விடும் மருத்துவம் (Bloodletting)  முழுக்க முழுக்க இசுலாமிய வைத்திய முறையில் வலியுறுத்திப்பேசப்படும் இரத்தம் குத்தி வாங்குதல் எனப்படும் முறையாகும் (இந்தபெயர்கள் எல்லாம் உச்சரிக்கவே சற்று அச்சமும் வெறுப்பும் வரும் . என்ன செய்வது – படிக்க முனைந்து விட்டால் எல்லாவற்றையும் படித்துத்தான் ஆகவேண்டும்)
மூட்டு வலி எந்த முற்றிய நிலையில் இருந்தாலும், மூட்டு மாற்று அறுவை செய்யாமல் இருந்தால் பஞ்ச கர்மா மூலம் குணப்படுத்தி விடலாம் என்று சொல்கிறார்கள் .
பஞ்சகர்மா தொடர்பு வகுப்பு பல்கலைக்கழக வளாகத்திலேயே நடத்தினார்கள் முன்பே குறிப்பிட்டது போல் சரியான போக்குவரத்து வசதிகள் இல்லாததால் அங்கேயே தங்கித்தான் ஆகவேண்டும்,விடுதி அறைகள் எல்லாம் நிரம்பியிருந்ததால் .ஒரு பெரிய கூடத்தில் தங்க இடம் கொடுத்தார்கள் . என் வயதுக்காக ஒரு கட்டில் கொடுத்தார்கள் .உணவு விடுதி உள்ளேயே இருந்தது . நல்ல, தூய்மையான காற்று. சுவையான தண்ணீர் ஒரு மாறுபட்ட அனுபவமாக இருந்தது .
நாங்கள் தங்கியிருந்த கூடத்தில்தான் தொலைக்காட்சிப்பெட்டி இருந்தது . அது பெரும்பாலும் வேலை செய்யாது.
மட்டைப்பந்து போட்டி ஒளிபரப்பாகும் நாட்களில் எப்படியாவது யாரையாவது பிடித்து அதை இயங்க வைத்து விடுதி மாணவர்கள் நடு இரவு வரை மகிழ்ச்சி ஆரவாரத்துடன் பார்த்து மகிழ்வார்கள் அதுவும் நன்றாகத்தான் இருந்தது
பஞ்சகர்மா செயல்முறை வகுப்பில் சளியை நீக்கும் முறையை ஆசிரியர் ஒரு மாணவருக்கு மூக்கிலும் தொண்டையிலும் சொட்டு மருந்து விட்டு செய்து காண்பித்தார் .பார்த்தால் அச்சம் கொள்ளும் அளவுக்கு சளி வெளியேறி, முகமே சுருங்கியது போல் ஆகிவிட்டது
பஞ்ச கர்மா தொடர்பு வகுப்பில் கிடைத்த சில குறிப்பிடத்தக்க அறிமுகங்கள்
-முரளி- சென்னை வாசி .மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார். யோகா முதுநிலைப்பட்டம் பெற்றவர்.. எதோ நீண்ட நாள் தெரிந்தவர் போல் மிகவும் நட்புடன் எளிமையாகப் பழகுவார்,. வர்மாவுக்கு கூவத்தூரில் மருத்துவ முகாம் நடத்தியது போல் பஞ்ச கர்மாவுக்கு சென்னையை அடுத்த நன்மங்கலம் என்ற சிற்றூரில் நடைபெற்றது பெயரளவில்தான் சிற்றூர். நல்ல சாலை வசதி, தெருவெங்கும் நிழல்தரும் மரங்கள், பெரிய பெரிய வீடுகள் என ஒரு முழு நகரத் தோற்றத்தில் இருந்தது சென்னை நகருக்கு தண்ணீர் பகிர்மானம் செய்யும் நீர் ஆதாரம் அருகில் இருப்பதாய்ச் சொன்னார்கள். அதோடு அடர்ந்த காடும் (reserve forestஅருகில் இருக்கிறதாம்.
சென்னைக்கு அருகில் காடு இருப்பது இதுவரை நான் அறியாத  ,வியப்பூட்டும் செய்தி.
நன்மங்கலம் செல்ல எங்கள் வீட்டுக்கு வந்துவிடுங்கள் நாம் அங்கிருந்து போகலாம் என்று முரளி சொன்னார்., அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு கடலூரிலிருந்து பேருந்தில் சென்னைக்குப் பயணித்தேன். .சென்னை அசோக் நகரில் கடலூரிலிருந்து செல்லும் பேருந்து நிறுத்தம் அருகே அவர் வீடு. பேருந்திலிருந்து இறங்கும்போது அங்கு எனக்காக வண்டியுடன் காத்திருந்தார்.. காலை சிற்றுண்டி அவர் வீட்டில் முடித்து விட்டு அவர் வண்டியில் அவரும் இன்னொருவரும் பயணிக்க, நான் அவரது இன்னொரு வண்டியை ஓட்டிக்கொண்டு நன்மங்கலம் போய்ச் சேர்ந்தோம். சென்னையில் பணியாற்றும்போது மாநகரத்தில் வண்டி ஓட்டியது , பத்து ஆண்டு இடைவெளிக்குப்பின் அன்று வண்டி ஓட்டினேன்.( முரளிக்கு நன்றி) .இன்னுமொரு வியப்பு மதிய உணவு எனக்கும் சேர்த்துக் கொண்டு வந்திருந்தது.. மாலை அவர் வீட்டுக்குப் போய் காபி சாப்பிட்டு விட்டு அவர் வீட்டுக்கு அருகிலேயே கடலூர் பேருந்தில் ஏறி வீடு வந்து சேர்ந்தேன்.
முரளி வீடு சொந்த வீடு இல்லை மிகப் பெரிய வீடும் இல்லை,  துணைவி ஆசிரியை இரண்டு பெண்கள் . அவர் மனம் மிக மிக விசாலமானது .அவர் துணைவியாரும் அவரோடு ஒத்துப்போகிறார். இன்னொரு முறை அவரது வீட்டுக்குப் போகையில் நிறைய மாங்காய் பறித்துக் கொடுத்தார்
அடுத்து மரு.சையத் முபாரக் .மதுரை அருகிலுள்ள மேலூரைச் சேர்ந்த இளைஞர் . சட்டம் பயின்ற அவர்  தன உறவினர் ஒருவருக்கு ஆங்கில மருத்துவத்தினால் விளைந்த தீங்கை நேரில் பார்த்து அதனால் மாற்று மருத்துவம் படித்தவர் . ஏற்கனவே  ஓமியோபதியில் பட்டம் பெற்ற அவர் வர்மாவும் பஞ்சகர்மாவும் படித்து வந்தார்., மேலூரில் முழு நேர மருத்துவமனை நடத்தி வருகிறார். அவர் பேச்சு , செயல் எல்லாம் நம் நெருங்கிய உறவினர் போல் எண்ணத் தோன்றியது . எங்கள் மருத்துவ மனைக்கு பணியாற்ற  வந்து விடுங்கள், உங்களுக்கு வேண்டிய வசதிகள் செய்து தருகிறேன் என்று சொன்னார் .
அதற்கடுத்து விடுதியில் தங்கி விளையாட்டுத்துறை பட்டப்படிப்பு பயின்று வந்த ஆம்பூரைச் சேர்ந்த இளைஞர் (.பெயர் நினைவில் இல்லை ) முபாரக்கும் நானும் அருகில் உள்ள ஊரில் வெள்ளிக்ளிழமை கூட்டுத் தொழுகையில் கலந்து கொள்வதற்கா யாரிடமோ வண்டி வாங்கி எங்களை அழைத்துச்சென்று திரும்ப விடுதியில் கொண்டு வந்து சேர்த்தார் .இவ்வளவுக்கும் இரண்டு நாள் பழக்கம்தான்
இன்னொரு மறக்க முடியாத அறிமுகம் ரஜோதா
.வர்மாவிலும் பின் பஞ்ச கர்மாவிலும் உடன் படித்தவர் . நாற்பது வயதைத்தாண்டியவர் பார்த்தால் முப்பதுக்குள்தான் மதிக்கலாம். கடுமையான பயிற்சி செய்து உடலை கட்டுக்குலையாமல் பாதுகாத்து வந்தார். நேரந்தவறாமல் வகுப்புக்கு வருவது, சிரத்தையுடன் பாடத்தை கவனித்து குறிப்பு எடுப்பது என்று ஒரு உண்மையான மாணவனாக இருந்தார். அதிகம் பேசாமலேயே எல்லோருடனும் நன்றாகப் பழகுவார்
ஒரு முறை வர்மா பயிற்சி வகுப்பில் தடவல் செய்முறை காண்பிக்க இவரை அழைத்தபோது சட்டையைக் கழற்றி உடலைக் காண்பித்தால் கண் பட்டு விடும் என்று சிரித்தபடியே மறுத்து விட்டார்.
ஒய் எம் சீ ஏ வளாகத்தில் பஞ்சகர்மா தேர்வு நிறைவுற்று அங்குள்ள திடலில் நின்று வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தார் .
பொறியியல் பட்டதாரியான அவர், ஐ பீ எம் நிறுவனத்தில் மிக நல்ல ஊதியத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார்..வேலைப்பளுவினால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக உடன் பணியாற்றிய ஒரு சிலர் இளமையிலேயே காலமானதால் ஒரு அச்ச உணர்வோடு, பணியிலிருந்து விலகி விட்டார். .பணியில் அமர்த்திக்கொள்வதாக உறுதி அளித்திருந்த மற்றொரு நிறுவனம் எதிர் பாராமல் கையை விரித்து விட செய்வதறியாமல் திகைத்து நிற்க துணைவியின் ஊதியத்துக்குள் சமாளிக்க வேண்டிய நிலை, மன அழுத்தம் .பரம்பரை வர்மா மருத்துவரான அவரது தாத்தாவிடம் வர்மக்கலையை கற்றுகொண்டார். வர்மத்தில் முதுநிலைப்பட்டம் பெற்று அழகு நிலையம்  நடத்தி வருகிறார். தலை முடி அடர்த்தியாக கருப்பாக வளர  ஒரு மருந்து அவரே கண்டுபிடித்து விற்பனை செய்து வந்தார்
மகள் பத்தாம் வகுப்பில் மிக நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற இனி நீங்கள் படிப்பதை நிறுத்தி வீட்டு மகள் படிப்பில் கவனம் செலுத்துங்கள் என்று துணைவி சொல்லிவிட்டாராம்
இப்போது  ஓரளவு  வருமானம் வருகிறது .விரைவில் .உலக வர்த்தக மையத்தில் நடைபெற இருக்கும் கண்காட்சியில் தான் செய்த அழகுப்பொருட்களை காட்சிப்படுத்த திட்டமிட்டிருந்தார்   அது தன் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமையும்
இவ்வளவு செய்திகளையும் மனம் திறந்து வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தார் .நாற்பது வயதில் படிப்பதை நான் ஒரு பெரிய சாதனை என்று எண்ணினேன், ஆனால் நீங்களோ அறுபது தாண்டியும் படிப்பது எங்களுக்கெல்லாம் ஒரு ஊக்க மருந்து போல் செயலாற்றுகிறது என்று என்னைப்பாராட்டினார்
எதற்கு யாரோ ஒருவரைபற்றி இவ்வளவு விளக்கம் என்று நீங்கள் முனுமுனுப்பது எனக்குக்கேட்கிறது .
எண்ணி முப்பது நாளில் கட்செவியில் ரஜோதா. காலமான செய்தி! மிகவும் அதிர்ச்சியுற்றேன் .
மூன்று ஆண்டுகளில் பேசாத பேச்செல்லாம் முப்பது நிமிடத்தில் பேசி முடித்து முப்பதே நாட்களில் பிரிந்து மறைந்து விட்டார்  ,
இத்துடன் இந்தப்பகுதியை நிறைவு செய்கிறேன்
இன்னும் ஒன்றிரண்டு பகுதிகளில் இந்தத்தொடரை நிறைவு செய்ய எண்ணுகிறேன்  .

. சென்ற பகுதி
பற்றி கருத்துகளும் பாராட்டுகளும் தெரிவித்த இதயத்துக்கும் ஒய்வு பெற்ற கனரா வங்கி அலுவலர் ரவி ராஜுக்கும் நன்றி
,
Hidayat 08 03 17
மேற்கின் இறையியலை(இஸ்லாம்) கிழக்கின் வாழ்வியலோடு(யோகா)சந்திக்க  வைத்த ஒரு பெருமுயற்சி உங்கள் ஆராய்ச்சி கட்டுரை. இது இஸ்லாத்துக்கான தொண்டா அல்லது தமிழுக்கான கொடையா! காலம் முடிவு செய்யும்.

இதுவரை யாரும் அணுகாத .அணுக அஞ்சும் ஒன்றை கருபொருளாய் கொண்டு,ஆய்ந்து,ஆராய்ச்சி செய்து ஆய்வு கட்டுரையாய் ஆவணம் செய்தமைக்கு எங்கள் ஆயிரம் நன்றிகள்.
...
CB Rtd Ravi Raj 09 03 17
Nice sharing Sir...
Keep it.....
My wishes

சென்ற பகுதியில்
ABCD எழுத்துகள் இல்லாத நூறு ஆங்கிலச்  சொற்கள் விரைந்து சொல்லவேண்டும் என்று ஒரு எளிய வினா கேட்டிருந்தேன்,
Zero to 99 என்று சரியான விடை தெரிவித்த தங்கை சுராசுக்கும் பாப்டிக்கும் பாராட்டுகள்
Zero to 99999 --  ABC எழுத்துகள் இல்லாத ஒரு லட்சம் ஆங்கிலச் சொற்கள்
Zero to 9999999BC எழுத்துகள் இல்லதா ஒரு கோடி ஆங்கிலச் சொற்கள்
எண்ணைக்குறிக்கும் எந்த ஆங்கில சொல்லிலும் B வருவதில்லை
இ(க)டைச் செருகல்
அண்மையில் ஒரு திருமண வரவேற்பில் கலந்து கொள்ள திருச்சி போயிருந்தேன். நாற்பது ஆண்டுகளுக்கு முன் திருச்சியில் பணியாற்றியபோது சுவைத்து மகிழ்ந்த மைக்கேல் ஐஸ் கிரீம் நிலையத்தைதேடிப்போனேன். அதே இடத்தில் அதே அமைப்பில் நிலையம் இருந்தது சுவையும் அதே சுவை, .உரிமையாளர் கூட முன்பு பார்த்த அதே நபர் போல்தான் இருந்தார்
மாற்றம் ஒன்றுதான் மாற்றமில்லாதது – இந்த விதிக்கு  சில விலக்குகளும் உண்டு போலும்  
உங்கள் கருத்துகளை எதிர் நோக்குகிறேன்
இறைவன் அருளால்
அடுத்த பகுதியில்
சந்திப்போம்

வலை நூலில் படிக்க
கூகிள் தேடலில்
sherfuddinp.blogspot.com   .







No comments:

Post a Comment