ஓலா ஓட்டுனர்கள்
பேரம் பேச வேண்டாம்
மீட்டருக்கு மேல் போட்டுத்தர வேண்டாம்
கணக்குப்பார்த்தால் தானியை (ஆட்டோ) விட குறைந்த கட்டணம்
சுகமான குளிர்ச்சியான சொகுசுப்பயணம்
ஓட்டுனர்கள் பெரும்பாலும் கனிவானவர்கள்
இப்படிப் பல நல்லவற்றைக் கொண்ட ஓலா சென்னை போன்ற நகர வாசிகளுக்கு ஒரு
வரம் என்றே சொல்லலாம்
ஓலா ஓட்டுனர்களிடம் பேசிக்கொண்டே பயணித்ததில் அறிந்த சில சுவையான
நிகழ்வுகள் கீழே
வடபழனியிலிருந்து பூந்தமல்லி செல்ல வந்த வண்டியின் ஓட்டுனரைப்
பார்த்ததும் சற்று வியப்பு, தயக்கம்
தூய வெள்ளுடை , தொப்பியில் இருந்த அவருக்கு ஒரு எழுபத்தி ஐந்து வயது
இருக்கும். முதுமையின் வெளிப்பாடு முகத்திலும் உடலிலும்
“அஸ்ஸலாமு அலைக்கும் “ என்று அவர் சொன்னது மனதுக்கு இதமாகத்தான்
இருந்தது
பார்ப்பதற்கு எங்கள் சையது சச்சா போல் இருந்தது இன்னும் தயக்கத்தை அதிகமாக்கியது.
சச்சா வண்டி ஓட்டிய கதையை மாமா சொல்லிச் சொல்லி சிரிக்க
வைப்பர்கள்
அவரிடமே கேட்டேன் – நன்றாக ஓட்டுவீர்களா என்று
மிகவும் பாதுகாப்பாக ஓட்டுவேன் என்று சொன்னதோடு நிற்காமல்
வழக்கமாக நான் ஓட்டும் வண்டி இல்லாததால் இன்று வேறு வண்டி
கொடுத்திருக்கிறார்கள் .இருந்தாலும் ஒன்றும் பிரச்சனை இல்லை என்றார்
இறைவனிடத்தில் பொறுப்பை ஒப்படைத்து விட்டு வண்டியில் உட்கார்ந்தோம்
.நன்றாகத்தான் ஓட்டினார் .
முன் இருக்கையில் உட்கார்ந்து அவருடன் பேசிக்கொண்டே வந்தேன்
காலையில் பள்ளியில் தொழுது விட்டு வீட்டில் சிற்றுண்டியை உண்டு, மதிய
உணவை கையில் எடுத்துக்கொண்டு புறப்படுவாராம் .
மதியத் தொழுகை நேரம் நெருங்கியதும் அருகிலுள்ள பள்ளிவாசலில் தொழுது
விட்டு, மதிய உணவையும் அங்கேயே முடித்து விட்டு ,கைப்பேசியை அணைத்து விட்டு
பள்ளியில் படுத்து மாலை (அசர்) தொழுகை வரை உறங்கி விடுவாராம் .
இரவு எட்டு மணியளவில் வீட்டுக்குக் கிளம்பி விடுவாராம்
இந்த நடை முறைக்கு இதுவரை நிர்வாகமோ வாடிக்கையாளர்களோ எதிர்ப்புத்
தெரிவித்தது இல்லை .
பிள்ளைகள் இருந்தும் உழைத்துப் பொருளீட்ட வேண்டிய கட்டாயம்
இந்த வயதிலும் ஒரு கண்ணியமான தொழிலை செய்து பொருள் ஈட்ட வழி கிடைத்தது
இறைவன் அருள் என்றார்
.
முதுமையை ஒரு பொருட்டாக எண்ணாத அவருடைய தன்னம்பிக்கை, உழைப்பு இறை
நம்பிக்கை இதெல்லாம் பார்த்தால்
பெருமையாகத்தான் இருந்தது . மகிழ்ச்சியாகவும் இருந்தது
.
அதையும் மீறி மனதில் ஒரு நெருடல்
அறுபது வயதுக்குமேல் ஒருவர் வேலைக்குப் போகிறார் என்றால் அது அவர்
பிள்ளைகளின் குற்றம் என்று எங்கோ படித்தது நினைவில் வந்தது. வந்து முட்டியது
அடுத்து இன்னொரு ஓலா பயணம் கோடம்பாக்கத்திலிருந்து வடபழனி வரை-
மிகக் குறைவான தொலைவுதான்.இருந்தாலும் முப்பது ரூபாய்க்குக் குறைவாக கட்டணம் என்பது நம்ப
முடியாத ஒரு இன்ப அதிர்ச்சி . ஏதோ ஆபரில்
(Offer) இது போல் குறைந்த கட்டணம் என்று விளக்கினார் ஓட்டுனர் .
நந்தனதுக்கு ஒரு பயணம் . இறங்குமிடத்தில் ஓட்டுனர் :எதற்காக இங்கே
போகிறீர்கள் ? “ என்று கேட்டார் ஓட்டுனர் .
தேர்வு எழுதப்போகிறேன் என்று சொன்னேன்
“சார் என்ன சொல்றிங்க ! எனக்கு உடல் முழுதும் புல்லரிக்குது .இந்த
வயதில் பரிட்சையா .நீங்க ரியல்லி கிரேட் சார் “
என்றார் உணர்ச்சி வயப்பட்டவராக
.
அடுத்த நாள் ஒரு பயணத்தில் இது போன்ற உணர்ச்சி எனக்கு .
ஓட்டுனர் நோன்பின் சிறப்பு பற்றிக்கேட்டார் .சொன்னேன். பிறகு நீங்கள்
என்ன படித்திருக்கிறீர்கள் என்று கேட்டேன் . அவர் சொன்னது உண்மையிலேயே எனக்குத்
தூக்கி வாரிப்போட்டது அவருடைய கல்வித்தகுதி
கட;ல் வாழ் உயிரியலில் முது நிலைப்பட்டம் (M.Sc., Marine Biology).
எனக்குத் தெரிந்த வரை தமிழ்நாட்டில் அண்ணாமலையில் மட்டுமே இருக்கும்
ஒரு அரிய படிப்பு இது
இது போக ஆய்வகத் தொழில் நுட்பமும், (லேப் டெக்னிசியன்) நர்சிங்
படிப்பும் முடித்திருக்கிறார் .
Male Nurse
சரியான தமிழ்ச்சொல் தெரியவில்லை . யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்
இவ்வளவு படித்து ஏன் ஓட்டுனர் பணிக்கு வந்தீர்கள் என்று கேட்டதற்கு
அவர் சொன்னது வருத்தமளிப்பதாக இருந்தது
“ என் மகள் பதிமூன்று வயதில் மறைந்ததில் இருந்து என்னால் எங்கும்
நிலையாக இருக்க முடியவில்லை . பல இடங்களில் என் படிப்புக்கேற்ற வேலை கிடைத்தது
.எங்குமே என்னை வேண்டாம் என்று யாரும் ஒதுக்கியதில்லை .நானே விலகி வந்து விடுவேன்
.
ஓட்டுனர் பணியில் வருமானம் ஓரளவுதான் என்றாலும் மனதுக்கு நிம்மதியாக
இருக்கிறது
கடலூரில் மருத்துவ ஆய்வகம் வைத்திருக்கிறேன் .பீ டெக் படித்த என் துணைவி
அதைப் பார்த்துக்கொள்கிறார் வாரம் ஒரு முறை கடலூர் போய் வருவேன்” என்றார்.இறைவன்
நாட்டம் என்பதைத்தவிர வேறொன்றும் எண்ணத்தோன்றவில்லை
எனக்குத் தெரிந்த அளவுக்கு ஆறுதல் கூறினேன் வேறென்ன செய்யமுடியும் !
இன்னொரு ஓட்டுனர் சொன்ன கதை :
“அதிகம் படிக்காத நான் கடுமையாக உழைத்து இரண்டு மகிழுந்துகள் வாங்கி வாடகைக்கு
விட்டு வசதியாக இருந்தேன். .நண்பர்களை நம்பி வண்டியைக் கொடுத்தேன். வருமானம்
அவர்களுக்கு இழப்பகள் எனக்கு என்று மோசம் செய்து விட்டார்கள் .
இப்போது என் துணைவி வீட்டு வேலைக்குப் போகும் அளவுக்கு என்
பொருளாதாரம் நசித்து விட்டது .
இருந்தாலும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது . இன்னும் சில ஆண்டுகளில்
சொந்தமாக வண்டி வாங்கி நானே ஓட்டுவேன்
“
இந்தக்கதைகளைக் கேட்கும்போது நமக்கெல்லம் இறைவன் அருளை வாரி வாரி
வழங்கியுள்ளது தெளிவாகிறது .. மேலும் மேலும் ஆசை பேராசைகளை வளர்துக்கொள்ளாமல் அவன்
கொடுத்ததுக்கு நன்றி தெரிவித்து மன நிறைவோடு வாழ்ந்தால் பிரச்சனைகளுக்கே இடம்
இருக்காது
சில கசப்பான ஓலா நிகழ்வுகளும் உண்டு
பங்கு வண்டியில் (ஓலா ஷேர்) ஒரு முறை பயணித்தேன் .ஓட்டுனர் ஏதோ
முனங்கிக் கொண்டே இருந்தார்.பயணிகளிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார் .
நான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் நான் சொல்லியும் நிற்காமல்
நகரப்பேருந்து போல் வேறு இடத்தில் நிறுத்தினார்
மற்றொரு முறை கொளுத்தும் வெயிலில் வண்டி எண் என் கண்ணில் படவில்லை ..
நான் நிற்கும் இடத்திற்கு பத்தடி தொலைவில் நின்ற அந்த வண்டி ஓட்டுனர் என் தொலைபேசி
இணைப்பு கிடைக்கவில்லை . எனவே பதிவு ரத்தாகி விட்டது என்றார்
புறநகர்பகுதிகளில் ஓலா எளிதாககிடைப்பதிலை. ஒரு முறை
தண்டையார்பேட்டையிலிருந்து பயணிக்க பல முறை முயற்சி செய்தும் உங்கள் இருப்பிடம்
தெளிவாக இல்லை என்று சொல்லி வண்டி வரவில்லை. இவ்வளவுக்கும் நான் இருந்தது தினசரி
காய்கறி சந்தையின் அருகில் இருந்த பெரிய பள்ளிவாசல்.
இன்னொரு குறை . பதிவு செய்யும் முறை.. செயலி மூலம்தான் பதிவு செய்ய
வேண்டும் என்றில்லாமல் தொலைபேசி அழைப்புக்கு வண்டி வந்தால் மிக எளிதாக எல்லோரும்
பயன்படுத்த முடியும்
புதுக்கோட்டையில் உள்ளூர் பயண நிறுவனங்கள் இது போல் தொலைபேசி
அழைப்புக்கு வண்டி அனுப்புகின்றன. உள்ளூர் பயணத்துக்கு அவர்கள் வசூலிக்கும்
கட்டணம் தானி கட்டணத்தை விட குறைவாகவே இருக்கிறது
ஓலா போன்ற நிறுவனங்கள் முழுமையாக செயல்பாட்டில் இறங்கினால் சொந்த
வண்டிக்கு தேவையே இருக்காது . போக்குவரத்து நெரிசலும் ஓரளவு குறையும்
மூளைக்கு வேலை
சென்ற பகுதியில் கேட்ட புதிருக்கு இது வரை யாரும் விடை சொல்லவில்லை.
பெருநாள் பரபரப்பில் யாரும் படிக்காமல் விட்டிருக்கலாம் .அல்லது இவ்வளவு எளிய
புதிருக்கெல்லாம் விடை சொல்வது கால விரயம் என்று எண்ணியிருக்கலாம்
எப்படி இருந்தாலும் இந்த வாரமும் அதே புதிர்தான்
0 0 0
0 0 0
0 0 0
இந்த ஒன்பது புள்ளிகளை கையை எடுக்காமல், கோட்டின் மேல் கோடு வராமல்
நான்கு நேர் கோடுகளால் இணைக்க வேண்டும்
விடை அடுத்த பகுதியில்
இ(க)டைச்.செருகல்
திருநெல்வேலியில் ஓலாவில் பயணிக்குபோது முன் இருக்கையில்
உட்கார்ந்துகொண்டு கைப்பேசியை நோண்டிக்கொண்டே வந்தால் ஒட்டுனருக்குப் பிடிக்காது
என்று முக நூலில் நண்பர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்
ஒரு சில முறை திருநெல்வேலி ஒலாவில் பயணித்திருக்கிறேன் .ஓட்டுனர்கள்
மிக எளிமையாக நட்போடுதான் இருக்கிறார்கள்
என் கைப்பேசி இன்னும் என் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது
கைப்பேசியின் கட்டுப்பாட்டில் நான் இல்லை
அதனால் ஓட்டுனரின் இந்த மனநிலையை உணர
வாய்ப்பு இல்லாமல் போயிருக்கலாம்
இறைவன் நாடினால்
மீண்டும்
அடுத்த வாரம்
சந்திப்போம்
வலை நூல்
முகவரி
கூகிள்
தேடலில்
sherfuddinp.blogspot.com