Saturday, 24 November 2018


வண்ணச் சிதறல் 37

கொஞ்சம் சிரிங்களேன்
“ எங்களோடு இணைந்து இதுவரை பணி புரிந்ததற்கு நன்றி . இப்போதைக்கு உங்கள் சேவையை எங்களால் பயன்படுத்திக் கொள்ள இயலாமைக்கு வருந்துகிறோம்  இத்துடன் அனுப்பியுள்ள காசோலைத் தொகை  அடுத்த பணியில் நீங்கள் சேரும் வரை உங்கள் தேவைகளை  நிறைவேற்றும் . மீண்டும் நன்றி “
உங்களுக்கு சீட்டுக் கிழிச்சு வீட்டுக்கு அனுப்பிவிட்டோம்
உங்களை பணி நீக்கம் செய்து விட்டோம் என்பதை எவ்வளவு மென்மையாகத் தெரிவிக்கிறார்கள்
பழமையான உலக அளவில் மிகப்பெரிய இந்திய  நிறுவனம் ஓன்று தன் பணியாளர்களின் சேவை நிறுவனத்தின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இல்லையென்றால் அவர்களுக்கு  அனுப்பும் செய்தி இது
ஆனால் இப்போது பெரும்பாலான மென்பொருள் நிறுவனங்கள் பணி நீக்கம் செய்யப்படுபவரை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் செயல்படுகின்றன.
பணியாளர்கள் கூட்டத்தை கூட்டி எல்லோர் முன்னிலையிலும் பணி நீக்கம் செய்யப்படுபவரின் அடையாள அட்டையைப் பிடுங்குவது –
 ஆம் தெரிந்தேதான்
பிடுங்குவது என்ற சொல்லை பயன்படுத்தியிருக்கிறேன்; மடிக்கணினி , பை எல்லாவற்றையும் பறிமுதல் செய்வது என்று இராணுவ நீதிமன்றம் போல் செயல்படுகிறார்கள் .
அவர் வெட்கித் தலைகுனிந்து நிலை குலைந்து கண்ணீர் விட்டால் அவர்களுக்கு ஒரு குரூரமான மன நிறைவு
மென்பொருள் நிறுவனத்தில் ஏன் இந்த வன்முறை ?
மேல்நாட்டிலிருந்து நுழைந்த தேவையற்ற பலவற்றில் இதுவும் ஓன்று போலும்
அண்மையில் கட்செவியில் பலபல முறை வலம் வந்த ஒரு பதிவு
“ஒரு டீக்கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம் டீயை விட சூடாக இருந்தது
--இருவடை எடுத்து ஒரு வடை என்பார்
திருவோடு ஏந்தி தெருவோடு போவார் –
இதற்குப் பொருள் விளக்கம் தேவையில்லை
நான் சொல்ல வந்தது இவ்வளவு கடுமையான சொல் பயன்பாடு தேவையா ?
இதற்கு முற்றிலும் மாறாக இருந்தது ஒரு பெரிய துணிக்கடையில் கண்ட அறிவிப்பு
“கொஞ்சம் சிரிங்கள் –உங்களைப் படம் பிடிக்கிறோம் “
“எச்சரிக்கை ! கண்காணிப்புக் காமரா பொருத்தப்பட்டுள்ளது “ என்ற வழக்கமான அறிவிப்பைத்தான் நயம்பட எழுதி வைத்துள்ளார்கள் .
“சந்தா பாக்கியிருந்தால் சந்தாக் (உடலத்தை சுமந்து செல்லும் மரக்கூடு போன்ற அமைப்பு)   கிடையாது “
பள்ளிவாசலில் அதுவும் மரணம் பற்றி இவ்வளவு கடுமையான அறிவிப்பு தேவையா ?
உத்தரவின்றி உள்ளே வராதே
அனுமதி பெற்று உள்ளே வரவும்
இரண்டும் ஒன்றுதான் ஆனால் எவ்வளவு மாறுபாடு    
அதே போல்தான் மரணிக்கும் வரை படிப்பேன் என்பதற்கும் வாழ்நாள் முழுதும் படிப்பேன் என்பதற்கும்
கடுஞ்சொற்களை எபடிப்பயன்படுதுவது என்பதில் பல்கலைக்கழகங்களே நடத்துகின்ற எல்லா தொலைக்காட்சிகளும் 
                                                           பெண்மையின் சிறப்பைப் புகழ்கிறோம் . ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் என்று முழங்குகிறோம் . மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்று பாடிய பாரதியைப் போற்றுகிறோம்
ஆனால் இன்று பெரும்பாலான தொலைக்காட்சி தொடர்களின் கருப்பொருள் மாமியார் கொடுமை அல்லது மருமகளின் பேயாட்டம்தான் . பெண்களை இழிவாக மிகக் கடுஞ்சொற்களால் தாக்கிப் பேசுவதற்கு என்றே ஒரு தொடரில் இரண்டு மூன்று பேர் இருப்பார்கள் .அதில் வேலை வெட்டி இல்லாத ஒரு ஆணும் இருப்பார்
நான் உன்னைக் கொன்று விடுவேன் – ஐ வில் கில் யூ- மிக இயல்பாக குடும்பப்பெண்கள் சொல்லும்சொல் – உன்னை என்பது துணைவனாக இருக்கலாம் மாமியாராக இருக்கலாம் ஒரு குழந்தையாகவோ கிழவன் கிழவியாகவோ இருக்கலாம்
இந்தத் தொலைக்காட்சி தொடர்கள் எந்த அளவுக்கு பார்ப்பவர் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று யாரவது ஆய்வு செய்யலாம்
எனக்குக் கண்கூடாகத் தெரிந்த தாக்கம் குற்றம் செய்தவர் குற்றத்தைக் கண்டுபிடித்தவரை குற்றவாளியாக்க முயல்வது  
அதற்குமேல் தொடர்ந்து பல்லைக்கடித்துக்கொண்டே பேசும் மாமியார் , எப்போதும் சிடுசிடுவென்று இருக்கும் ஒரு பெண் அதே போன்று அவரது ஆறேழு வயது மகள் இவர்கள் மன நிலை எந்த அளவுக்கு அவர்கள் சொந்த வாழ்கையில் தாக்கம் ஏற்படுத்துகிறது என்பதும் ஆராய்ச்சி செய்ய வேண்டிய ஓன்று
“தீய வேடத்தில் படங்களில் தொடர்ந்து நடித்து அவர் தீயவராகவே ஆகிவிட்டார் “
என்பது  நடிகர் எம் ஆர் ராதா பற்றி ஒரு வழக்கில் நீதியரசர் பதிவு செய்த கருத்து
கடுஞ்சொற்களை மிகப்பெரிய அளவில் பயன்படுதும் இன்னொரு ஊடகம் முக நூல் .வாஷிங் ஒன்ஸ் டர்ட்டி லினன் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள் வழக்குத் தமிழில் கழுவி ஊத்துவது என்று சொல்லலாம் .இதற்கு முகநூலில் நிறைய எடுத்துக்காட்டுகள் கிடைக்கும்
மிகக் கடுமையான சொற்கள் அடங்கிய பதிவு ஒன்று ஒரு மருத்துவர் வெளியிட்டிருந்தார். யோகம் படித்த மருத்தவர் நீங்கள் . இவ்வளவு கடுமையாக எழுதலாமா என்று கேட்டால் முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்கிறார்
இறை மறுப்பாளர்களை மிக இழிவாகப் பேசும் பதிவு அண்மையில் முக நூலில் பாத்தேன் . ஏன் இப்படி என்று நான் கேட்டதற்கு உங்களுக்கு என்ன வந்தது என்பது போல் ஒரு எதிர் பதிவு
அண்மையில் ஒரு பெருந்தலைவர் உடல் நலிவுற்றிருந்த்தபோது அவர் பற்றி வந்த பல பதிவுகள் முகம் சுளிக்க வைத்தன அவர் அப்பழுக்கற்றவர் என்று நான் சொல்லவில்லை . அதற்காக அவர் உயிர் எப்போது பிரியும் அவர் எப்போது கைது செய்யப்படுவார் என்ற கருத்தில் வெளியான பதிவுகள் மனதை நெருட வைத்தன
இறைநம்பிக்கை இல்லாத ஒருவருக்கு உணவளிக்க மறுத்த இப்ராகிம் நபி அவர்களை இறைவனே கண்டித்ததாய் வரலாறு சொல்கிறது
கனிவான சொற்களும் மிகப்பெரிய அறம் என்கிறது இசுலாம். அதே போல் கடுஞ்சொல்லோடு செய்யும் பொருள் அறமும் அறமாகாது என்கிறது
அகன் அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப்பெரின்

நபி பெருமான் அவர்கள் கண் தெரியாத எளியவரைப்பார்த்து முகம் சுளித்தற்கே இறைவன் அவரை கண்டித்து எச்சரித்தது திருகுரானில் பதிவு செய்யப்பட்டுள்ளது   
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்
இ(க)டைச்செருகல்
இனிமேல் வண்ணச்சிதறல் மாதம் ஒரு முறை

மூளைக்கு வேலை
திருக்குறளில் இடம்பெற்றுள்ள பழங்கள் எவை ?
இறைவன் நாடினால்
மீண்டும்
சந்திப்போம்

வலைநூல் முகவரி


B/F /W             25112018sun
 

Sunday, 18 November 2018

தமிழ் (மொழி) அறிவோம் 18 மணி என்ன?



 மணி என்ன?


Image result for bell


சம்பள தினம் – பணியில் இருப்பவர்கள் மிகவும்  ஆவலோடு எதிர்பார்க்கும் ஒரு நாள்
சம்பளம் ஆங்கிலத்தில் salary என்று சொல்லப்படுகிறது . இந்த salary  என்ற சொல்லின் மூலம் உப்பு –salt என்று படித்திருக்கிறேன்  பண்டைக்காலத்தில்  ரோமானிய படை  வீரர்களுக்கு ஊதியம் உப்பாக (salt) )வழங்கப்பட்டதால்  அதிலிருந்த salary  என்ற சொல் வந்ததாம்

அதே போல் சம்பளம் என்ற சொல்லுக்கும் உப்புதான் மூலம் என்பதை இப்போது வலையில் பார்த்தேன்

இது போல் இன்னும் சில வழக்குத் தமிழ் சொற்களின் மூலம் பற்றிய சுவையான தகவல்கள் வலையில் கண்ணில் பட்டன அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்

மணி

நேரதைக்குறிக்கும் சொல்லாக மணி என்ற சொல் புழக்கத்தில் உள்ளது
“மணி என்ன “ என்று கேட்கிறோம்

நேரம் காட்டிகள் பெரிய அளவில் பயன்பாட்டுக்கு வராத காலத்தில் ஒரு பெரிய மணி ஓன்று ஒலித்து ஊருக்கு நேரத்தை அறிவிக்கும் . நேரத்துக்கு ஏற்றாற்போல் ஒரு முறை முதல் பன்னிரெண்டு முறை வரை ஒலிக்கும் இதன் ஓசையிலிருந்து மக்கள் நேரத்தை அறிந்து கொள்வார்கள்

மணி ஒலித்துநேரம் அறிந்ததால் நேரம் என்ன என்பதற்கு மணி என்ன என்று கேட்கும் பழக்கம் வந்ததாம்

சம்பளம்

ஊதியத்தை நெல்லும் உப்புமாகக் கொடுக்கும் வழக்கம் தமிழ் நாட்டில் இருந்ததாம்

அந்தக்காலத்தில் பயிர் செய்யப்பட நெல்லின் பெயர் சம்பா என்பதாகும்
பளம்என்ற சொல் உப்பைக குறிக்கும்()உப்பளம்- உப்பு விளைவிக்கும் இடம்)
சம்பா+ அளம் = சம்பளம் என்று ஆனதாம்

சம்பளம் என்பது வேற்று மொழிச் சொல் என்று இதுவரை எண்ணியிருந்தேன் .இப்போது அது தூய தமிழ்ச் சொல் என்பது தெளிவாகிறது

வெட்டி வேலை

தென் தமிழ் நாட்டில் முற்காலத்தில் நீரை சேகரித்துப் பாதுகாக்க சிறிய குளங்கள் வெட்டும் வழக்கம் இருந்தது ..இது ஒரு சமுதாயப்பணி என்பதால் எல்லோரும் இதில் ஆர்வத்துடன்  ஈடுபடுபடுவார்கள்  அவர்களுக்கு ஊதியம் எதுவம் கிடையாது 
இது வெட்டி வேலை ( குளம் வெட்டும் வேலை) என்று அழைக்கப்பட்டது .  பிற்காலத்தில் இது வேலையில்லாதவர்களை வெட்டி என்று குறிப்பிடவும் ஊதியமில்லாத வேலையை வெட்டி வேலை என்று குறிப்பிடவும் பயன்படுத்தப்பட்டது

கறி

பதினைந்தாம் நூற்றாண்டில்தான் இந்திய சமையலில் மிளகாய் நுழைந்தது அதற்கு முன் மிளகுதான்  காரத்துக்குப் பயன்படுத்தப்பட்டது
கறி என்ற சொல் மிளகைக் குறிக்குமாம் . காய்களில் மிளகு சேர்த்துச் சமைத்தது காய் கறி எனப்பட்டது
அசைவ சமையலில் காரத்துக்காக மிளகு சற்று கூடுதலாகவே சேர்க்கப்பட்டது . காலப்போக்கில் கறி என்ற சொல்லே ஆட்டுக்கறி ,கோழிக்கறி என அசைவ உணவுகளைக் குறிக்கும் சொல்லானது

Curry எனும் ஆங்கிலச் சொல்ல தமிழ் கறியிலிருந்து வந்ததுதானம்.

மீண்டும் அடுத்த மாதம் 

Blog Address
sherfuddinp.blogspot.com
B/F/த 18112018  sun


Sunday, 11 November 2018

கதை நேரம் 10 செல்விருந்தும் வருவிருந்தும்


செல்விருந்தும் வருவிருந்தும்

அந்த மிக  நல்ல மனிதருக்கு ஒரு மிக மிக  நல்ல பழக்கம் .விருந்தாளி இல்லாமல் சாப்பிட மாட்டார்.. சுற்றம் நட்பு மட்டும்தான் விருந்தாளி என்று இல்லை . பசி என்று யார் வந்தாலும் அவர் விருந்தாளிதான்.அவரோடு சேர்ந்து உட்கார்ந்துதான் சாப்பிடுவார்
ஒரு நாள் இப்படி விருந்தாளியை எதிர்நோக்கி வெகு நேரம் காத்திருந்து ஒரு வழியாக வழிப்போக்கர் ஒருவரைக்கண்டு மகிழ்ந்து அவரை அழைத்து வந்து சாப்பிட இருவரும் உட்கார்ந்தனர்
தன் வழக்கப்படி இறைவனை புகழ்ந்து  வணங்கி விட்டுசாப்பிடத் துவங்கிய அந்த நல்லவர் விருந்தாளியிடம் நீங்கள் இறைவணக்கம் செய்யவில்லையா என்று கேட்க எனக்கு இறைவன் மேல் பெரிய நம்பிக்கை எல்லாம் கிடையாது என்று அவர் சொன்னார்
இறை வழியில் முழுமையாக இருந்த அந்த அன்பருக்கு கட்டுக்கடங்காத சினம் வந்து “இறை நம்பிக்கை இல்லாதவருக்கு என் வீட்டில் சாப்பாடு கிடையது “ என்று விரட்ட அந்த வழிப்போக்கர் பசியோடு எழுந்து போய்விட்டார்.
இப்போது அந்த நல்லவருக்கு குழப்பம் . தான் செய்தது சரியா , பசியோடு உணவு உண்ண உட்கார்ந்தவரை விரட்டி விட்டோமே இது மிக இழிவான செயல் அல்லவா ஏன் இந்தத் தடுமாற்றம் என்று பலவாராக எண்ண ஓட்டங்கள்
இந்த நிலையில் அந்த நல்லவரோடு இறைவன் பேசுகிறான்
“ மிகப்பெரிய தவறு செய்து விட்டிர்கள் . என் மேல் நம்பிக்கை கொள்ளாத அவருக்கு நான் அறுபது ஆண்டுகளாக உணவு அளித்து பாதுகாத்து வருகிறேன் .ஒரு வேளை உணவு அளிக்க உங்களால் முடியவில்லை .
அவர் நல்லவரா கெட்டவரா என்பதை படைத்த நான்தானே தீர்மானிக்க வேண்டும் ! உங்களுக்கு யார் அந்த உரிமையைக் கொடுத்தது
. .உங்களையும் அவரையும்  படைத்த ஏக இறைவன் அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் என்பது உங்களுக்கு மறந்து விட்டதா “
பதைபதைத்துப்போன அந்த நல்லவர் தாம் விரட்டிய முதியவரைத் தேடிக்கண்டுபிடித்து உணவருந்த வரும்படி அழைத்தார்..
பசியில் வாடியிருந்த அவர் உடனே வந்து உணவருந்தினார். பசி,, சோர்வு நீங்கியபின்  தங்கள் மனமாற்றத்துக்கு என்ன காரணம் என்று கேட்டார்
தனக்கு இறைவன் தெரிவித்ததை அவரிடம் எடுத்துச்சொல்ல அந்த முதியவர் கண் கலங்கி மனம் மாறி இதுவரை செய்த தவறுக்கு வருந்தி இறை நம்பிக்கையாளராக மாறி விட்டார்
நபி இப்ராஹீம் அலை அவர்கள் வாழ்வில் நடந்த நிகழ்வு இது . இறைவனே நட்பு கொள்ள விரும்பிய அந்த மாமனிதர் இப்ராஹீம் நபியின் சிறப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம் .
.இறைவன் ஆணையிட்டால் எதையும் இழக்கத் துணிந்த தியாகச்செம்மல். அந்த இறைவனையே கேள்வி கேட்ட பகுத்தறிவாளர்  கடும் தண்டனை கிடைக்கும் என்று தெரிந்தும் சிலை வணக்கத்தை எதிர்த்து போராடிய புரட்சியாளர் .இறைவன் உன்னை பலிகொடுக்கச் சொல்கிறான் இது பற்றி உன் கருத்தென்ன என்று சிறுவனாகிய தன மகனிடம் கேட்ட சமத்துவவாதி  இதற்கெல்லாம் மேல் அன்பும் பண்பும் இரக்க சிந்தனையும் நிரம்பியவர்
இத்தனை நற்குணங்கள் கொண்ட அந்த மாமனிதருக்கு இறைவன் மிகப்பெரும் சிறப்புகளை வழங்கியிருக்கிறான்
அவரை நினைவு கூறும் ஒரு கட்டாயக் கடமை- புனித ஹஜ் பயணம் , ஒரு தியாகத்திருநாள் , அவர் பெயரில் புனித மறை குர்ஆனில் ஒரு முழு அத்தியாயம் , ஒவ்வொரு தொழுகையிலும் அவர் பெயர் உச்சரிக்கப்படும் சிறப்பு புனித மறையாம் குரானில் அவர் பெயர் 69 இடங்களில் சொல்லப்படுவது  தாடி வளர்த்தல், மீசைகுறைத்தல் நகம் வெட்டுதல் போன்ற அவரின் வழிமுறைகள் இன்றளவும் பின்பற்றப்படுவது 
இப்ராகிம் நபி அவர்கள் வாழ்வில் ஒரு நிகழ்வு பற்றிப்பார்த்தோம். சிறிய நிகழ்வென்றாலும் உயர்ந்த வாழ்வியல் சிந்தனைகளைத் தருகின்றது
ஒன்று பசியென்று யார் வந்தாலும் உணவளிப்பது மனித நேயக்கடமை .அவர் இனம் என்ன மொழியென்ன, தேசமென்ன இதெல்லாம் ஆராயக்கூடாது
அடுத்து ஒரு மனிதனை நல்லவனா தீயவனா   இறை அருளுக்கு உரியவனா என்பதெல்லாம் தீர்மானிக்கும் உரிமை படைத்த ஏக இறைவனுக்கு  மட்டுமே உரியது .படைப்புகளான நமக்கு அந்த தகுதி கிடையாது   
இந்த நிகழ்வு பற்றி பலமுறை பலரும் கேட்டு, படித்து இருக்கலாம். அண்மையில் ஜனாப் அமீர் அலி இதை முக நூலில் வெளியிட்டிருந்தார்
நல்ல செய்திகளை எத்தனை முறை படித்தாலும் நல்லதுதான் 

மீண்டும் அடுத்த பகுதியில்
Blog Address
sherfuddinp.blogspot.com
B/F /w   11112018   





Monday, 5 November 2018






















அறிவொளி ஏற்றி அகவிருள் அகற்றுவோம்
Lead Kindly Light and dispel the Gloom 





Image result for lead kindly light

Saturday, 3 November 2018


அத்தாவின் எழுத்துக்கள் 1

கம்பன் காட்டும்  இலக்கியச் சுவை 1

 


பாலகாண்டத்தில் மிதிலைக்காட்சிப்படலம் என் கண்முன் காட்சியளிக்க அதில் கண்ட காட்சி சிறிது கூறுகிறேன்
.மிதிலையில் மணிக்கொடிகள் வருக வருகவென இராம, லக்குமான , முனிவரை வரவேற்கின்றன.
நகருக்குள் நுழைந்ததும் மாடவீதிகளைப் பார்க்கின்றனர்..வீதிகளில் மாலைகள் துவண்டு கிடக்கின்றன..அவற்றினின்று தேன் பெருக்கெடுத்து ஓடுகின்றது ..வண்டுகள் அவற்றின் மேல் மயங்கிக்கிடக்கின்றன
இந்த மாலைகள் ஏது? இனிய மொழியுடைய மாதர்கள் தங்கள் கணவருடன் ஊடிய காலத்து கோபித்து எடுத்தெறிந்த மாலைகள் அவை..
’ பண்தரு கிழவியார்கள் புலவியில் பிரிந்த கோதை’வண்டெனக்கிடந்து தேன் சொரிகின்றன
இவற்றைப் பார்த்ததும் கம்பனது கற்பனைத்தேர் வெகுவிரைவாக காமபுரிக்குப் புறப்படுகிறது .சோர்ந்த மாலை, அவற்றினின்று பெருகியோடும் தேன்,அங்கு மயங்கிக் கிடக்கும் களிவண்டுகள் இவற்றிற்கு உவமை என்ன தெரியுமா ?
கலவிப்போரில் ஒசிந்த மாதர் ,காமநீர் பெருக்கி மயங்கிய மைந்தர் ,
     கலவிப்போர் எத்தகையது என்றால் ,ஒருதலைக்காமத்தால் ஏற்பட்டதல்ல.. அவ்வாறாயின் மாதரும் மைந்தரும் இப்படி மயங்க மாட்டார்கள் .இது தலைத்தலை சிறந்த காதல் .மேலும் இது கள்ள நட்பல்ல .முறைப்படி சேர்ந்த பயமற்ற கலவிப்போர் .பயமற்ற மனமொத்த காதலால் ஏற்பட்ட கலவிப்போரில் மயங்கிய மாதர்போல தேன்பெருக்கு. அதே மயக்கத்தில் அவர் மீது கிடக்கும் ஆடவர் போல வண்டுகள் பாட்டைப் பருகுங்கள்
தண்டுதல் இன்றி ஒன்றி.
   
தலைத்தலைச் சிறந்த காதல்
உண்டபின். கலவிப் போரின்
   
ஒசிந்த மென் மகளிரேபோல்.
பண் தரு கிளவியார்தம்
   ?
புலவியில் பரிந்த கோதை.
வண்டொடு கிடந்து. தேன்சோர்.
   
மணி நெடுந் தெருவில் சென்றார்.

இனிஅவர்களின் செவிகளில் இன்பத்தேன் பாய்கிறது
.சங்கீத விருந்து அளிக்கபடுகிறது .தென்விளி என்னும்
 ராகம் அவர்கள் காதில் பாய்கிறது .
தென்விளிப்பாணி தீந்தேன் செவிமடுக்கின்றார்கள்;.
 இந்தக்கீதம் ஏது! இது புன்முறுவலோடுபெண்கள்
அளித்த விருந்து !
“வெள்ளிய முறுவல் தோன்ற விருந்தென மகளிர்
 அளித்த தென்விளிப்பாணித் தீந்தேன் “
இந்த அழகிகள் புன்முறுவல் பூத்தார்கள் .

ஆனால் வாயால் பாடவில்லை

பின்னர் பாட்டு ஏது!
“கள்ளென நரம்பை ஊக்கி கையொடு மனமும்
கூட்டி ஈந்த விருந்து;

தளிர்கை தோல் வீணையைப்பற்றி கள்ளென
நரம்பை ஊக்கி கையொடு மனமும் கூட்டி
வெள்ளிய முறுவல் தோன்ற விருந்தென மகளிர் ஈந்ததென்விளிப்பாணித் தீமதேன்”
செவி மடுத்தார்கள்

வள் உகிர்த் தளிர்க் கை நோவ
மாடகம் பற்றி, வார்ந்த
கள் என நரம்பு வீக்கி,
 கையொடு மனமும் கூட்டி,
வெள்ளிய முறுவல் தோன்ற,
விருந்து என மகளிர் ஈந்த
தெள் விளிப் பாணித் தீம் தேன்
செவி மடுத்து, இனிது சென்றார்.



.
அடுத்து நாட்டியம் ; ஐயநுண் இடையார்
ஆடுகிறார்கள் ;கைவழியே நயனம் செல்கிறது;
கண் வழியே மனமும் செல்கிறது
   
கை வழி நயனம் செல்ல, கண்வழி
மனமும் செல்ல,
ஐய நுண் இடையார் ஆடும்
ஆடக அரங்கு கண்டார்

இம் மாதிரி பந்தாடுதல், வட்டமாடுதல் முதலிய
 பல பல காட்சிகளைக் கண்டனர்
.ஓரிடத்தில் பெண்கள் ஊஞ்சல் ஆடுகிறார்கள் .
ஊஞ்சல் மரகதம் போன்ற பச்சைக் கமுகில்
கட்டப்பட்டுள்ளது . கமுகு மரங்களில்
பவளச் செங்காய்கள் கொத்துக் கொத்தாகத்
தொங்குகின்றன. இதிலிருந்து பெண்கள் ஆடுகிறார்கள்
. ஆனால் அவர்கள் மட்டுமா ஆடுகிறார்கள்
!



ஒவ்வொரு ஆட்டத்தின் போதும் அதைப்பார்த்து
 ஆடவரின் உள்ளமுமல்லவா ஊசலாடுகிறது .
இந்த ஆட்டத்தால் அவர் கூந்தலின் மலர்களில்
 மொய்க்கும் வண்டுகள் வெகுண்டெழுகின்றன,
.ஆனால் அந்த மங்கையரின் இடை இவ்வளவு
சிறிதாக இருக்கின்றதே என ஏங்குகின்றன
இந்த ஆட்டத்தை கற்பனை செய்கிறான்
கம்பன் .எப்படி ! பாபிகள் உலகில் வந்து
வந்து போவது போல் ஊசலில் வந்து போகிறார்கள்
 இந்த நுண்  இடை மாந்தர்கள்
பாட்டைப் பாருங்கள்

பூசலின் எழுந்த வண்டு
மருங்கினுக்கு இரங்கிப் பொங்க,
மாசு உறு பிறவி போல
வருவது போவது ஆகி,
காசு அறு பவளச் செங்காய்
மரகதக் கமுகு பூண்ட
ஊசலில், மகளிர், மைந்தர்
சிந்தையொடு உலவக் கண்டார்.

 இனி சீதையைக் கண்டு கண்ணொடு
கண்ணினைக் கௌவி இதயம் மாறிப்புக்கு
இப்படியெல்லாம் ஆகித் திரும்பி விட்டான் ராமன்

சீதை பாடு என்ன !

(அடுத்த பகுதியில்)


எழுத்தாக்கம்
ஹாஜி கா. பீர் முகமது
நகராட்சி ஆணையர் பணி ஓய்வு

(கம்பராமாயணத்தில் இலக்கியச் சுவை
என்ற தலைப்பை மட்டும்  
சற்றே சுருக்கியுள்ளேன்)
சிரமம் என்று சொன்னேன் .ஆனால்
 இவ்வளவு சிரமம் என்று நினைக்கவில்லை
.)
இறைவன் துணையிருப்பான்
வலைநூல் முகவரி
sherfuddinp.blogspot.com
B/F/W    04112018 sun