22. புதுப்புது அர்த்தங்கள்
வெண்மையுடையார்
என்று யாராவது உங்களைப் பாராட்டினால் மயங்கி மகிழ்ந்து போகாதீர்கள்
அது வஞ்சப்புகழ்ச்சியாக இருக்கலாம்
அதே போல் கம்னாட்டி என்ற சொல்லும் நீங்கள் நினைப்பது போல் அவ்வளவு
கெட்ட சொல் இல்லை
சென்னைதமிழுக்கு என்று ஒரு சிறப்பு உண்டு .
ஆங்கில மொழி, பிரெஞ்ச் மொழி தெலுங்கு உருது கன்னடம் என்ற பல மொழிகளின்
தாக்கத்தை சென்னைத்தமிழில் உணரலாம்
சென்னைதமிழில் புழங்கும் பல சொற்கள்
“ கெட்ட வார்த்தைகள்” என்று சொல்லப்படுகிறது
ஆனால் இணையத்தில் நான் கண்ட பதிவு ஒன்றில் பல சென்னைத்தமிழ்
“கெட்ட வார்த்தைகள் “ நல்ல சொற்கள்தான் என்று படித்தேன் .
படித்ததில் பிடித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
அதே போல் வெண்மை என்ற சொல் தூய்மை, ஒளி போன்ற நல்லவற்றைச்
சுட்டிக்காட்டும் சொல் என்றுதான் இது வரை எண்ணியிருந்தேன் . அந்தச் சொல்லுக்கும்
ஒரு எதிர் மறைப்பொருள் அண்மையில் அறிந்தேன்
அது பற்றி பின்னால் சொல்கிறேன்
முதலில் சென்னைத்தமிழ் சொற்களைப் பாப்போம்
“கம்னாட்டி”
சொல்ல நாக்கூசும் எழுத கை கூசும்
ஒரு கெட்ட சொல்
ஆனால் இது ஒரு சொல்லே அல்ல . ஒரு ஆங்கில சொற்றொடரின் மருவிய ஒலிவடிவம்
ஆங்கிலோ இந்தியர்கள் குறும்பு செய்யும் குழந்தைகளை
கம் ஹியர் யூ நாட்டி
Come here
you naughty
என்று அழைப்பார்களாம்
அதுதான் சுருங்கி உருமாறி ஒலி மாறி கம்னாட்டி என்று ஆனதாம்
கஸ்மாலம்
இதுவும் ஒரு இழிவான சொல்லாகக் கருதப்படுகிறது
வட மொழிச் சொல்லான இது அழுக்கு, அருவெறுப்பைக் குறிக்கும்
பேமானி
இது ஏமாற்றுப்பேர்வழியைக் குறிக்கும் உருது// பாரசீக மொழிச்சொல்
பெய்மான் Beiman என்பதன் ஒலி மாறிய வடிவம்
தாராந்(த்)துட்டான்
பொருளை, மானத்தை தொலைத்து விட்ட ஒருவரை நோக்கி தாராந்(த்)துட்டான் ,
என்பது சென்னை சொல் வழக்கு
தாரை வார்த்து விட்டான் என்பதன் மாறுபட்ட வடிவம் இது
ஜபுரு
பொய் சொல்வது பித்தலாட்டம் செய்வதே வழக்கமாகக்
கொண்டிருப்பவரைப்பார்த்து ஜபுரு காட்டதே
என்று சொல்வது சென்னை மொழி வழக்கு
ஜபூர் என்பது வித்தைகள் செய்யும் மந்திரவாதியைக் குறிக்கும் உருது
மொழிச் சொல்லாகும்
கூத்து ( கூத்திக்கோலி)
இது உட்காருவதைக்குறிக்கும்
கன்னட மொழிச் சொல் . சென்னைத்தமிழில் இது கூச்சு என்று வருகிறது
உட்காரு என்பதற்கான தெலுங்கு மொழிச் சொல்லான
குந்து என்பது அப்படியே சென்னை மொழியில் புழங்குகிறது
நாஸ்தா – காலை
உணவைக்குறிக்கும் இந்திச் சொல்
(அர்த்தம்தான் தெளிவாகி விட்டதே என்று யாரையும் கம்னாட்டி , பேமானி
என்று கூப்பிட்டு வாங்கிக் கட்டிக்கொள்ளாதீர்கள் )
நிறைவாக
வெண்மை என்ற சொல் பற்றி
வெண்மை என்றால் மனதில் தோன்றுவது தூய்மை ,நேர்மைதான் .
இந்தச் சொல்லுக்கு அறிவின்மை என்றொரு எதிர்மறைப்பொருள் இருக்கிறது
வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையாம்யாம் என்னும் செருக்கு குறள்
844
தம்மைத்தாமே அறிவுமிக்கவராக எண்ணி செருக்கு
கொள்வதே அறிவின்மை
என்ற பொருள் கொண்ட இக்குறளில்
வெண்மை என்பது அறிவின்மையைக் குறிக்கிறது
நாலடியாரிலும் வெண்மயுடையார் என்ற சொல் அறிவுக்குறைவு என்ற பொருளில் வருகிறது
பொன்னிறச் செந்நெல் பொதியோடு பீள் வாட
மின்னொளிர் கட்லுள்ளும் கான்றுகுக்கும்
வெண்மையுடையார் விழுச் செல்வம்
எய்தியக்கால்
வன்மையும் அன்ன தகைத்து
பொன்னிறத்தில் உள்ள நெல்பயிர் மழைக்காக காத்திருக்கையில் மழை அங்கே
பெய்யாமல் வீணாகக் கடலில் பெய்யும்
அதுபோல் வெண்மையுடையார் (அறிவில் குறைந்தவர்கள் ) தம்
செல்வத்தால் செய்யும் உதவி பயனற்றுப் போகும்
(அப்போதே தண்ணீர் பிரச்சனை இருந்தது போலும் )
அடுத்து கம்பன்
வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்
திண்மை இல்லை நேர் செறுநர் இன்மையால்
உண்மை இல்லை பொய்உரை இலாமையால்
வெண்மை இல்லை பல் கேள்வி மேவலால்
கோசல நாட்டின் செல்வச் செழிப்பை கம்பன் விளக்கும்போது எதிர் மறைச்
சொற்களை கையாள்கிறான்
கேள்வி ஞானம் நிறைந்த அந்த நாட்டில் வெண்மை (அறியாமை) இல்லையாம்
மேலும் தருமம் செய்பவர் யாரும் இல்லை வறுமை இல்லாததால்
போர் இல்லாததால் வலிமையை வெளிப்படுத்தவும் இடம் இல்லை
யாரும் பொய் சொல்வதில்லை எனவே உண்மையின் பெருமை தெரியவில்லை
வண்மை என்ற சொல் தருமம், அறம் என்ற பொருளில் வருகிறது
வண்மை இல்லை , திண்மை இல்லை உண்மை இல்லை வெண்மையும் இல்லை
கேட்க நன்றாகத்தான் இருக்கிறது
நம நாட்டிலும் நெய் வடியும் என்ற நம்பிக்கையோடு
மீண்டும் அடுத்த
பகுதியில் சந்திப்போம்
வலை நூல் முகவரி
sherfuddinp.blogspot.com
B/F/W த/ 30062019 sun
No comments:
Post a Comment