செய்திகள் பல , படிப்பிணை ஓன்று
“ஆட்டோ ஏற்றி மாவட்ட நீதிபதி கொலை “
“மருத்துவருக்கு பீர் பாட்டில் குத்து “
“மக்களை விரட்ட வெடிகுண்டு வீசிய சிறுவர்கள் “
இந்த மூன்றும் இன்றைய(30072021) நாளேட்டில் வந்த செய்திகள்
குற்றங்கள் மலிந்து விட்ட நிலையில் இது போன்ற பல செய்திகள் ஒரே நாளில் வருவது இயல்பானதே
ஆனால் இந்த மூன்று செய்திகளுக்கும் ஒரு ஒற்றுமை , ஒரே மாதிரியான பின்னணி
நீதிபதி கொலை ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் –
அதிகாலை நடைபயிற்சி போன நீதிபதியை போக்கு வரத்தே இல்லாத அந்த நேரத்தில் ஒரு தானி வந்து அவர் மேல் மோதி உயிரைப் பறித்துச் செல்கிறது
அந்தக்காட்சி தற்செயலாக இல்லாமல் தெளிவாகப் படம் பிடிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் வெளியிடப்படுகிறது
இதன் பின்னணி என்ன ?
தன்பாத் நகரில் உள்ளபன்னாட்டு பயங்கர வாத *மாபியா) கும்பலைச் சேர்ந்தவர்கள் மீதான வழக்குகளை விசாரித்து வந்த அந்த நீதபதி , அண்மையில் அதில் இருவருக்கு பிணை (ஜாமீன்)வழங்க மறுத்து விட்டார் .
அதற்குப் பழி வாங்க, மற்றவர்களுக்கு எச்சரிக்கை விடுக்க இந்தக் கொலை, படப்பிடிப்பு , வெளியீடு
இதில் மேலும் ஒரு செய்தி விபத்து என்பதை மாற்றி கொலை என்று பதிவு செய்வதை காவல் துறை தாமதப் படுத்துகிறது .இதுபற்றி ஜார்கண்ட் தலைமை நீத்பதி காவல் துறைக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்
மற்ற இரண்டு செய்திகளைப் பார்க்குமுன் சில நாட்களுக்கு முன்பு திருவாரூர் அருகில் ஒரு நிகழ்வு
தானியங்கி பணப்பொறி (ATM) யில் கொள்ளை அடிக்க வந்தவர்களைத் தடுக்க முயற்சிக்கிறார் ஒருவர் . விளைவு—கொள்ளையர்கள் கடப்பாரையால் குத்தியதில் உயிரிழப்பு
ஜார்கண்ட் நிகழ்வோடு ஒப்பிட்டால் புதுச்சேரியில் நடந்த இரு நிகழ்வுகள் மிகவும் சிறியவை
“மருத்துவருக்கு பீர் பாட்டில் குத்து “
அரசு மருத்துவக்கல்லூரியில் பணி புரியும் மருத்துவர் ஒருவர் தினமும் வளை மட்டைபந்து (ஹாக்கி) விளையாட்டுப் பயிற்சிக்காக ஒரு விளையாட்டுதிடலுக்குப் போவது வழக்கம் . அங்கு ஒரு ரவுடி இவரிடம் மாமூல் கேட்டுத் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார் . பலநாள் கேட்டும் மாமூல் வராததால் பீர் பாட்டிலை அவர் தலையில் குத்தி கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்
மூன்றாவது செய்தி
“மக்களை விரட்டிய வெடிகுண்டு வீசிய சிறுவர்கள் “
தொடர் திருட்டில் ஈடுபட்ட சிறுவர்களைப் பிடித்து விசாரித்து காவல் துறையிடம் ஒப்படைத்த சிலர் மேல் சிறுவர்களுக்குக் கோபம் .அதன் விளைவு , நாட்டு வெடி குண்டுகளை வீசி மக்களை பயமுறுத்தி எச்சரித்திருக்கிறார்கள் .
சிறுவர்களுக்கு எப்படி வெடி குண்டு கிடைத்தது என்பது தெரியவில்லை
நிறைவாக என் அனுபவம் ஓன்று
எங்கள் பகுதியில் கொஞ்ச நாளாக பன்றித் தொல்லை அதிகமாக இருக்கிறது ..இது பற்றி பல முறை உள்ளூர் கட்செவிக்குழுவில் எழுதியிருக்கிறேன் .
உடனே ஒரு தொலை பேசி அழைப்பு வரும் “ எங்கே இதெல்லாம் இருக்கிறது” என்று சற்று அதட்டலான குரலில் ..
“எங்கே இல்லை என்று “ நான் கேட்பேன்
“ எங்கள் தலைவர் உங்களிடம் இது பற்றிப் பேசுவார் “ என்று ஒரு பதில் . அவ்வளவுதான் அதற்கப்புறம் ஒன்றும் இருக்காது .யார் அந்தத் தலைவர் என்று தெரியவில்லை . இது வரை அவர் பேசியதும் இல்லை
சில மாதங்களுக்கு முன்பு நான் மீஎண்டும் கட்செவியில் இது பற்றி எழுதியபோது ஒரு அன்பர் “ பத்தூ முறையாவது இது பற்றி எழுதியிருப்பீர்கள் “ என்று குறிப்பிட்டிருந்தார் .
“பிரச்சினைதீரும் வரை எழுதுவேன் . இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை ?” என்று நான் கேட்டதற்கு அவர் “ எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை . இது ஒரு பெரிய மாபியா , தீர்க்க முடியாத பிரச்சினை . உங்களுக்கு பிரச்சினை வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் “ என்று பதில் அளித்கார்
அக்கம் பக்கம் உள்ளவர்களும் “பன்றி வளர்ப்பவர் ஒரு பெரிய ரவுடி “ என்று எச்சரித்தனர் .
இது வரை சொன்ன நிகழ்வுகள் சொல்லும் படிப்பினை ஒன்றுதான்
மிக உயரிய பதவியில் இருப்பதாகக் கருதப்படும் நீதிபதி முதல் சாதாராண மனிதன் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை .குற்றம செய்பவர்களுக்கு எந்த வித பயமும் தயக்கமும் இல்லை
குற்றம் செய்யாதவர்களும் ,குற்றம் செய்பவரை கண்டிப்பவர்களும் தண்டிப்பவர்களும் கடுமையாக தண்டிக்கப் படுகிறார்கள் .
பாதகம் செய்பவரைக்கண்டால் பயந்து விடு பாபபா
மோதி மண்டையை உடைத்துக்கொள்ளதேபாப்பா
முகத்தை மறைத்துக்கொண்டு ஓடி விடு பாப்பா
என்று பாரதி பாடலை திருத்திக்கொண்டு நாம் உண்டு நம் வேலை உண்டு என்று இருக்கவேண்டுமா ?
இறைவன் நாடினால் நாளை வேறொரு பதிவில் சிந்திப்போம்
31072021sat
Sherfuddin P