Sunday, 17 March 2019

கதை நேரம் 14 ஆடம்பரத்தில் எளிமை



ஆடம்பரத்தில்  எளிமை





Top of Form



சுலைமான் நபியின் பிரமாண்டமான அரியாசனம்((ஓவியனின் கைவண்ணம்)


பல அரிய சிறப்புகள் இறையருளால்  பெற்ற ஒரு மகத்துவமான மனிதர் பற்றி சென்ற பகுதியில் பார்த்தோம்
அவர்தான் நபி சுலைமான் (அலை) அவர்கள்.
சாலமன் என்று பைபிளில் வரும் .

இவரின் தந்தையும் ஒரு நபி,. அவர்தான் குழந்தை வழக்கில் முதல் தீர்ப்பு வழங்கிய தாவூத் நபி அலை அவர்கள்

மாபெரும் நாட்டுக்கு மன்னராக இருந்த சுலைமான் நபி அலை உண்மையிலேயே ஒரு அரசனைப்போல் வாழ்ந்தார்

Living Life King Size என்பார்கள். அதற்கேற்றபோல் மிகப்பிரமாண்டமான வாழ்க்கை வாழ்ந்த சுலைமான் நபியின் மிக நீண்ட வரலாற்றில் ஒரு சில சுவையான பகுதிகளைப் பார்ப்போம்

ஓராயிரம் கண்ணாடி மாளிகைகள், இரண்டாயிரம் குதிரைகள்

 ஐம்பதாயிரம் சதுர கிலோமீட்டரில் படைத்தளம், அது நான்காகப் பிரிக்கப்பட்டு ஒரூ  பிரிவில் மனிதப்படை இரண்டாம் பிரிவில் ஜின் படை மூன்றாம் பிரிவில் பறவைகள் படை , நான்காம் பிரிவில் விலங்குகள் படை .இவ்வளவு கூட்டம் இருந்தும் ஒரு சண்டை சச்சரவு இல்லை

இந்தப்படைகளுக்கு உணவளிப்பதற்காக தினமும் பல்லாயிரக்கணக்கான ஆடுகளும் ஒட்டகங்களும் அறுக்கப்பட்டு, சமைக்கப்படும்

அவருடைய அரியாசனத்தை வைக்க விரிக்கப்படிருந்த ஒரு அற்புதமான விரிப்பின் பரப்பளவு ஐந்து சதுர கிலோமீட்டர்

அரியாசனம் மிகப்பெரிய அளவில் தங்கம் வெள்ளியால் செய்யப்பட்டது .அதற்குக்கீழ் இரண்டு சிங்கங்கள் கட்டப்பட்டிருக்கும். அவை தம் முன்னம்கால்களை நீட்ட அதில் ஏறி அரியாசனத்தில் அமர்வார் நபி சுலைமான்

அரியாசனத்துக்கு வலப்புறம் ஐந்தாயிரம் தங்க நாற்காலிகளும் இடப்புறம் ஆறாயிரம் வெள்ளி நாற்காளிகளும் இருக்கும்

இன்னொரு அற்புதமான நாற்காலி சுலைமான் அவர்களிடம் இருந்தது . ஆயிரம் பகுதிகள் கொண்ட அந்த நாற்காலியின் ஒவ்வொரு பகுதியிலும் ஆயிரம் அறைகள் இருந்தன .அவற்றில் மனிதர்களும் ஜின்களும் தங்கி இருப்பார்கள் . நபி செல்லும் இடமெல்லாம் காற்று அந்த நாற்காலியை கொண்டு போய் சேர்த்து விடுமாம் 

நபி சுலைமான் கூறிய சில நற்போதனைகள் 
:
“-மிகத் தூய்மையாவனான இறைனைத்தவிர எல்லாமே அழியக்கொடியவை

-படைக்கப்பட்டது இறப்பதற்காகவே

-அளிக்கப்பட்டது இழப்பதற்காகவே

-அன்பைச் செலுத்தாதவன் அன்பைப்பெறமாட்டான்

-வாய்மூடி அமைதி காத்தால் ஈடேற்றம் பெறலாம்

-ஒருவனுடைய செயலுக்கேற்ப அவனுக்கு கூலி கிடைக்கும் “

மிகப் பிரமாண்டமான கட்டமைப்பைப் பெற்றிருந்த சுலைமான் நபி மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தார் என்பது ஒரு வியப்பான உண்மை
இது பற்றியும் இன்னும் சில சுவையான தவகல்களையும் குறிப்பாக இறைவன் இவருக்கு அளிக்க மறுத்த  ஓன்று பற்றியும்

அடுத்த பகுதியில் பார்ப்போம்

வலைநூல் முகவரி
sherfuddinp.blogspot.com

கநே 14 B/F/W(17032019sun
Top of Form



Saturday, 2 March 2019


வண்ணச் சிதறல் 41


 

படியா! தடையா !!




“உதவி செய்வதாய் நினைத்து அந்தக் குழந்தையின் தன்னம்பிக்கையை குலைத்து விட்டீர்கள் “ என கடிந்து கொள்கிறார் ஒரு மேல்நாட்டவர்
குதிரை சவாரி செய்து கொண்டிருந்த ஒரு சிறு குழந்தை தவறி விழுந்துவிட பதறிப்போய் தூக்கி விட்டவருக்குத்தான் இந்தக் கடி .
கடிந்தவர் குழந்தையின் தந்தை

ஊட்டியில் பல ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த நிகழ்வு பற்றி அத்தா பல முறை சொல்லக் கேட்டிருக்கிறேன் .

பிறர் செய்யும் உதவி நமக்குக் கைகொடுக்கிறதா இல்லை முன்னேற்றத்தை தடுக்கிறதா என்பது ஒரு கேள்வியாகவே இருக்கிறது 

சின்னக் கதை ஒன்று. எல்லோருக்கும் தெரிந்த கதைதான்
ஒரு விவசாயியின் வயல் .
.வயல்பரப்பு முழுதும்  விளைந்து முற்றி அறுவடைக்குகாத்திருக்கும் பயிர்கள்
விவசாயி தன் மனைவி மக்களுடன் வந்து வயலைப் பார்வையிடுகிறார் .
 “என் நண்பர்களை வரச் சொல்லி இருக்கிறேன் . அவர்கள் உதவியுடன் நாளை அறுவடை செய்யத்துவங்கிவிடலாம் “
என்று தம் குடும்பத்தாரிடம் சொல்கிறார்

விளைந்த பயிர்களுக்கிடையில் ஒரு பறவை கூடுகட்டி முட்டையிட்டு குஞ்சு பொறித்து தாய்ப்பறவையும் குஞ்சுகளுமாக வசித்து வருகிறது
விவசாயியின் பேச்சைகேட்டு குஞ்சுகள் திடுக்கிடுகின்றன . “
‘நாம் உடனே வேறு எங்காவது போய்விடலாம் .அறுவடை துவங்கி விட்டால் நமக்கு இங்கு பாதுகாப்பு இல்லை “
என்று தாய்பறவையிடம் சொல்கின்றன . 

தாய் எந்த பதற்றமும் இல்லாமல் “பொறுங்கள் , எனக்குத் தெரியும் எப்போது போவது என்று” என்று சொல்லி குஞ்சுகளை அமைதிப்படுத்துகிறது 

அடுத்த நாள் விவசாயி குடும்பம் வந்து வயலருகே நண்பர்கள் வரவுக்காகக் காத்திருக்கிறது ..நண்பர்கள் யாரும் வரவில்லை. ஏமாற்றமடைந்த விவசாயி தன் மகனிடம் “ நீ போய் நமது உறவினர்களிடம் நாளை வரும்படி  சொல்லிவா . அவர்கள் உதவியுடன் வேலையை துவங்குவோம் “ என்று சொல்லி அனுப்புகிறார்

மீண்டும் பறவைக்குஞ்சுகள் படபடக்க , தாய் அமைதிப்படுத்துகிறது
உறவினர்களுகாகக் காத்திருந்து அடுத்த நாளும் வீணாக விவசாயி “இன்று மாலை நம் அண்டை அயலாரிடம் சொல்லி அவர்களை நாளை வரச்சொல்லி அவர்கள் உதவியோடு  அறுவடைப் பணியை துவங்குவோம் “ என்கிறார்

இப்போது பறவைக்குஞ்சுகளும் பதற்றமில்லாமல் இருக்கின்றன
அடுத்த நாளும் இதே கதைதான் . 

இத்தனை நாள் அமைதி காத்த விவசாயியின் துணைவி வாயைத்திறக்கிறார்
“ இனிமேலும் பிறர் உதவியை எதிர்பார்த்துக் காத்திருந்தால் பயிர் வீணாகிவிடும் . நாளை அதிகாலை நாம் அனைவரும் களத்தில் இறங்க வேண்டியதுதான்  அறுவடையை துவங்க வேண்டியதுதான் “ என்று சொல்ல விவசாயியும் மக்களும் அதுதான் சரி என்று சொல்லுகிறார்கள்

இப்போது தாய்ப்பறவை பரபரப்பாகிறது.
இத்தனை நாளும் பிறர் உதவியை எதிர்பார்த்து காத்திருந்தார்கள் . அதனால் நானும் பொறுமை காத்தேன் . இப்போது அவர்களே பணியில் இறங்க முடிவு செய்து விட்டார்கள். இனி நாம் காத்திருக்க முடியாது
என்று சொல்லி வேறு இடம் தேடப் புறப்படுகிறது.

சிறிய கதை என்றாலும் கருத்துள்ள ஓன்று

பிறர் உதவியை எதிர்பார்ப்பது மட்டுமல்ல .பிறர் உதவியே ஒருவரின் முன்னேற்றத்துக்கு தடைக்கல் என்று மேலாண்மை வல்லுனர்கள்   ஒரு கருத்தை முன்வைக்கிறார்கள்

இந்தக்கருத்து சரியா தவறா என்பது ஒரு பதிலேதும் இல்லாத கேள்வி . மேலாண்மைத் துறையில் அதிலும் குறிப்பாக மனித வளம் பற்றிய கருத்துகளில் சரி தவறு என்று எதுவும் கிடையாது . உண்டென்றால் அது உண்டு இல்லையென்றால் அது இல்லை

 அதிசய மனிதர் திரு ஜி டி நாயுடு தன் கண்டுபிடிப்புகளை ஒரு கண்காட்சியாக கோவையில் வைத்திருக்கிறார் . அதில் பல இடங்களில்
“உன் தாய் தந்தைதான் உன் முதல் எதிரி :”
என்ற அறிவிப்புப் பலகையைப் பார்க்கலாம் . 

மேலோட்டமாக இதைப் பார்த்தால் ஒரு எரிச்சல் யாருக்கும் வரும் . சற்று அமைதியாக ஆழமாக சிந்தித்தால் அதில் முழுதாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு உண்மை இருப்பது புலப்படும்
குறிப்பாக படிப்பு, வேலை என்று வரும்போது பெற்றோர் தம் கருத்துக்களை பிள்ளைகள் மேல் திணிப்பது தொடருகிறது

நான் பஞ்சாப் ஜலந்தரில் பணியாற்றியபோது எங்கள் மகனும் மகளும் பள்ளிக்கு ரிக்சாவில் போய்க்கொண்டிருந்தார்கள். ஊர் ஓரளவு பழகியபின் இருவருக்கும் மிதிவண்டி வாங்கிக் கொடுத்தேன் .
அதை அவர்கள் கண்டுகொள்ளாமல் வழக்கம் போல் ரிக்சாவில் போய் வந்து கொண்டிருந்தார்கள்

ஒரு நாள் ரிக்சாவை நிறுத்தி விட்டேன் ,அடுத்த நாள் முதல் மிதிவண்டியில் பள்ளி  சென்று வந்தார்கள்

உதவி பற்றி பல குறள்கள் இருக்கின்றன .எனக்கு மிகவும் பிடித்தது
உதவி வரைத்தன் றுதவி  வுதவி                                         செயப்பட்டார் சால்பின் வரைத்து (குறள் 105)

இதற்கு பெரிய விளக்கம் தேவையில்லை .வாழ்க்கை கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த ஒரு சிலர் பிறர் செய்யும் துரும்பு போன்ற சிறிய உதவியைப் பற்றிக்கொண்டு மீண்டு வந்து முன்னேறி காலத்தினால் செய்த நன்றியை மிகப்பெரிதாக எண்ணி வாழ்நாள முழுதும் நன்றி உணர்வோடு இருப்பார்கள்

இதற்கு மாறாக சிலர் பெரிய அளவில் அவர்களுக்கு மற்றவர்கள் உதவினாலும் “ எங்கள் தேவைக்கு இது யானைப்பசிக்கு சோளப்பொறி போல “என்று : பேசிக்கொண்டு என்றும் பிறர் கையை எதிர்பார்த்தே வாழ்வார்கள்

“”இறைவன் உங்களுக்கு உதவியாக இருந்தால் உங்களை வெல்ல யாரால் முடியும் ?
இறைவன் தன் உதவியை நிறுத்திக்கொண்டால் உங்களுக்கு உதவ யாரால் முடியும் ?”.
உதவி பற்றி திரு மறைக்குரானில் இவ்வாறு இறைவன் சொல்கிறான் 
 பல வேறு கருத்துகளைப் பார்த்தோம்

நிறைவாக 
ஒரு சிறிய வேடிக்கை விளயாட்டு
இந்த விளயாட்டுக்கு ஐந்தாறு பேருக்குக் குறையாத ஒரு குழு வேண்டும் . பத்துக்கு மேற்பட்டவர்கள் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்
ஒரு அங்குலம் நீளம்,அகலம் ,உயரம் கொண்ட ஒரே அளவிலான மரத்துண்டுகள் இருபதுக்கு மேல்  வேண்டும்
மேசையில்  குவியலாக உள்ள இந்த மரத்துண்டுகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்க வேண்டும்
கீழே விழாமல் எத்தனை துண்டுகள் அடுக்க முடிகிறதோ அத்தனை மதிப்பெண் கிடைக்கும்

மிக எளிதாகத் தெரிகிறதா :?
இரண்டு சிறிய நிபந்தனைகள்
ஓன்று அடுக்குபவரின் கண்கள் கட்டப்பட்டிருக்கும்
இரண்டு இடது கையால் மட்டுமே அடுக்க வேண்டும்

முதலில் ஒருவர் தனியாக அடுக்க வேண்டும்
அடுத்து அவருக்கு உதவி செய்ய ஒருவர் வருவார் . அவர் கையினால் மரத்துண்டுகளை தொடாமல் வாய்மொழியாக உதவி செய்யவேண்டும்
தனியாக அடுக்கிய மதிப்பெண்களையும் உதவியுடன் அடுக்கிய மதிப்பெண்களையும் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்

குழுவில் உள்ள அனைவரும் அடுக்கி முடித்தவுடன் மதிப்பெண்களை பாருங்கள்
என்ன தெரிகிறது ?

நீங்களே பார்த்து புரிந்து கொள்ளுங்கள் . முடிந்தால் எனக்கும் அனுப்பி வையுங்கள்

இ(க)டைச்செருகல்
பல்வேறு பணிகள் இருப்பதால் மார்ச் முதல் ஜூன் முடிய எழுத்துப்பணியை  சிறிது ஒத்தி வைக்க வேண்டியிருக்கலாம் .கூடிய மட்டும் என் அட்டவணைப்படி எழுத முயற்சிக்கிறேன்

மூளைக்கு வேலை
இனிமேல் மூளைக்கு வேலை கிடையாது

இறைவன் நாடினால்
 மீண்டும்
சந்திப்போம்
வலைநூல் முகவரி
sherfuddinp.blogspot.com
வசி4103032019sun


Wednesday, 27 February 2019

அத்தாவின் எழுத்துக்கள் 3.என் மகன் ?






 3.என் மகன் ?



கஜினி நாட்டில் ஒரு மூதாட்டி வசித்து வந்தாள். அவளுக்கு ஒரே மகள் பருவம் அடைந்தாள். தங்கப்பதுமை போல் பொலிவுற்று விளங்கிய மகளைப் பார்த்து பரிதவித்தாள் ஏழைத்தாய்.. தகுதியுள்ள மாப்பிள்ளை பார்த்து இப்பூங்கொடியைத் தழுவ விடவேண்டும் .

இதற்கிடையில்  ஒரு சமூகப்புல்லுருவி தோன்றினான் .பலாப்பழத்தை ஈ மொய்ப்பதுபோல் சுற்றினான். பல பெண்களைக் கெடுத்த பாவி என்றும் மணம் முடிக்க மனமற்றவன் என்று அறிந்தாள் மூதாட்டி

அக்கயவன் வீட்டைச் சுற்றுவதைத் தடுக்க முடியவில்லை அத்தாயால்.
மாமூத் என்ற காட்சிக்கு எளியனான கலீபாவிடம் முறையிட்டாள் சீற்றம் கொண்ட தாய்.

கலீபா வெகுண்டார். .” எனது ஆட்சியில் இந்த அநீதியா ? அத்தறுதலையின் தலையை தறித்து விடுகிறேன் ! இன்று அவனை உன் வீட்டில் அடைத்து வைத்து விட்டு என்னிடம் தெரிவி “ என்று கூறி அனுப்பி விட்டார்

பால் பானையை சுற்றும் பூனைபோல அன்றிரவு வந்தான் அயோக்கியன். மகளை வெளியே அனுப்பிவிட்டு தந்திரமாக அக்கயவனை உள்ளே அழைத்து விரைவில் வருவாள் மங்கை என்று கூறி கதவைத் தாளிட்டு விட்டு ஓடோடிச் சென்றாள் கலிபாவிடம்

கத்தியுடன் மூதாட்டியைத்தொடர்ந்த கலீபா ‘ தாயே உன் வீட்டின் உள்ளே சென்று விளக்கை அணைத்து விடு “ என்றார் .வியப்புற்ற தாய் அவ்வாறே செய்ய கலிபா உள்ளே சென்றார்

கன்னியைக் கட்டித் தழுவத் துடித்த கயவனின் மேனியை கலிபாவின் பட்டாக்கத்தி தழுவி புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள்போல் மறுபுறம் வந்தது . இரு துண்டாய் வீழ்ந்தான் காமப்பித்தன்
“அம்மையே விளக்கேற்றும்” என்றார் கலிபா . ஏற்றியதும் வேதனை நிறைந்த உள்ளத்துடன் வீழ்ந்தவனின் முகத்தை உற்று நோக்கினார் . முகம் மலர்ந்தது

முசல்லாவை(தொழுகைக்கான தரை விரிப்பு) விரிக்கச் சொல்லி அங்கேயே இறைவணக்கம் செய்தார்

வியந்து நின்ற விளக்கம் கேட்க கூறுகிறார் மாமூத் .” அம்மையே ! என்மகன் வயது வந்தவன் .சில சமயம் இவ்வாறு திரிவதாகக் கேள்வியுற்றேன் . என் மகன் என்றதால் நான் கண்டிக்கும் அளவுக்கு உறுதியாக புகார் செய்ய யாரும் முன்வரவில்லை

இவன் அவனாக இருக்குமோ  என ஐயம் கொண்டேன் .கலிபா என்னும் முறையில் அவனைத்தண்டிக்க்க சந்தர்ப்பம் கிடைத்தது குறித்து மகிழ்ந்தேன். ஆனால் ஏழை மாமூதின் எண்ணம் மைந்தன்பால் பரிவுற்றது இயற்கைதானே தாயே !

எனவே அவன் முகத்தைப் பார்த்தால் சுயநலம் சுடர்விட்டு கிலாபத்தின் நேர்மை கெட்டுவிடுமோ என அஞ்சினேன். அதனால்தான் விளக்கை அணைக்கச் செய்தேன்

ஆனால் வெட்டுண்டு வீழ்ந்தவன் இந்த ஏழை மாமூதின் மகன் அல்ல என்று அறிந்ததும் இறைவனுக்கு வணக்கம் செலுத்தினேன் “என்று கூறி வெளியேறினார்

மனுநீதிச்சோழனின் கதை நமக்கு இங்கு ஞாபகம் வருகிறதல்லவா ! தன் குலத்துக்கு ஒரே மகன் இருந்தான் .அவன் தெருவில் தேரின்மேல் செல்லும்போது வழி தவறிய ஒரு பசுங்கன்று தேர்க்காலில் சிக்குண்டு மரித்தது. கலங்கிய தாய்ப்பசு அரண்மனையில் வந்து ஆராய்ச்சி மணியை அசைத்தது

அதன் கலக்கத்தை அறிந்த மனுச்சோழன் அதைத் தீர்ப்பதற்கு தானும் அத்துயரை மேற்கொள்வது ஒன்றுதான் வழி என்று கருதினான்

“அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின் நோய்
தம் நோய்போல் போற்றாக்கடை” *
என்ற வள்ளுவர் வாக்குப்படி தன குலக்கொழுந்தின் மார்பின் மீது தேரைச் செலுத்தினான்

இந்தக்கதைக்கும் கலீபா மாமூத்தின் சரித்திர நிகழ்ச்சிக்கும் எத்தனைப் பொருத்தம் !

எழுத்தாக்கம்
ஹாஜி கா. பீர் முகமது
நகராட்சி ஆணையர் பணி ஓய்வு

(மனுநீதிச் சோழன் வழியில் கலிபா என்ற தலைப்பை என் மகன் ? என்று மாற்றி கதையை உயிரோட்டம் குறையாமல் சற்றே சுருக்கி எழுதியிருக்கிறேன்

*குறள் 315)


வலைநூல் முகவரி
sherfuddinp.blogspot.com
27022019wed        B/F/த/W





Saturday, 23 February 2019

உடல் நலக் குறிப்புகள்3. நலந்தானா உடலும் உள்ளமும்






3. நலந்தானா

உடலும் உள்ளமும்

 

 

 

 

 

“ஒரே டென்ஷன்”
சிறு குழந்தை முதல் முதியவர் வரை பயன்படுத்தும் சொல்
டென்ஷன் , ஸ்ட்ரெஸ் , ஸ்ட்ரெயின் – எல்லாம்
மிக இயல்பான சொற்களாகி விட்டன .

உளவியல் இந்தச் சொற்களுக்கு தரும் விளக்கம் படித்தால் மனதில் அதுவே ஒரு அழுத்தமாக வரும்
எனவே அதை எல்லாம் ஒரு புறம் ஒதுக்கி வைத்து விட்டு  இப்போதைக்கு மன அழுத்தம் மன இறுக்கத்தை குறைப்பது எப்படி என்று பார்ப்போம் 

இறைவணக்கம் , தியானம், ஆசனங்கள் , கடும் உடல்பயிற்சி  விளையாட்டு என்று அடுக்கிக்கொண்டே போகலாம்
ஆனால் தொடர்ந்து பயிற்சியில் உள்ளவர்கள் மட்டுமே இதெல்லாம் செய்யமுடியும்

மற்றவர்கள் ?

எல்லோருக்கும் பொருந்தும் எளிய வழிகள்  சில
முதலாவது குளிர்ந்த நீரில் கை கால் முகம் கழுவினாலே மன அழுத்தம் ஓரளவு குறைந்து விடும் . அப்படியே சாய்ந்து தளர்வாக  அமர்ந்து இமைகளை மூடிக்கொண்டு மூச்சை நன்றாக இழுத்து விடுங்கள் சிறிது நேரத்தில் அழுத்தம் மறையாவிட்டாலும் பெருமளவு குறைந்து விடும்

அடுத்து மனம் விட்டுப் பேசுவது
வீட்டில் இருப்பவர்களிடம் கொட்டித் தீர்த்து விடுங்கள் .
ஆனால் தனிமைதான் மன அழுத்தம் உண்டாகவே காரணம் என்றால் இருக்கவே இருக்கிறது தொலைபேசி . உங்களுக்கு நெருக்கமானவர்கள் நீங்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்பவர்கள் யாரிடமாவது தயக்கமின்றி பேசுங்கள்

கேட்பவர் உங்கள் பிரச்சினைக்கு தீர்வு சொல்பவராகவோ அறிவுரை சொல்பவராகவோ இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை . நீங்கள் சொல்வதை கவனமாகக் கேட்டாலே போதும் .

எனக்கு அதிகம் பேசும் பழக்கம் இல்லை . இருந்தாலும் என்னிடம் நேரிலோ தொலைபேசியிலோ பேசினால் மன அழுத்தம் குறைவதாக என் உடன் பணி செய்பவர்கள்,,உயர் அதிகாரிகள் ,வங்கி வாடிக்கையாளர்கள் பலரும் சொன்னதுண்டு

இதை நான் பெருமைக்காகச் சொல்லவில்லை. தேவைப்பட்டால் நீங்களும் பேசிப்பார்க்கலாம் என்பதற்காகத்தான் சொல்கிறேன்

இசை மன அழுத்தத்தை பெருமளவில் குறைக்கும் .அது திரைப்பாடலாக , பக்திப்பாடலாக வீணை போன்ற கருவி  ஒலியாக  மேற்கத்திய இசையாக இருக்கலாம்

ஆனால் ஒளிக்காட்சி வேண்டாம், தொலைக்காட்சி மன இறுக்கத்தை,மேலும்  கூட்டி உடலிலும் சோர்வை உண்டாக்கும்

தோட்டவேலை மிக எளிதில் மன அழுத்தத்தைக் குறைக்கும். அதற்காக மண் வெட்டி, கடப்பாறை எல்லாம் தூக்கிக்கொண்டு கொண்டு போக வேண்டியதில்லை .தோட்டத்தில் போய் நின்று செடிகொடி இலை பூக்களைப் பார்ப்பதே மனதுக்கு இதமாக இருக்கும் . செடிகளுக்கு தண்ணீர் எளிதாக ஊற்றலாம்

அடுக்கத்தில் (அபார்ட்மெண்ட்) இருப்பவர்கள் தொட்டியில் செடி வளர்க்கலாம்

மன அழுத்தம் குறைய ஒரு அழுத்தப் புள்ளி (acupressure point ) இருக்கிறது .அது பற்றியும் இன்னும் சில வழிகள் பற்றியும்

அடுத்த பகுதியில்,

வலைநூல் முகவரி
sherfuddinp.blogspot.com
B/F/W  24022019 sun