Monday 15 September 2014

சொந்த வீடு

சொந்த வீடு என்பது ஒரு சராசரி மனிதனின் கனவு என்பார்கள் . ஆனால் எனக்கு அப்படி ஒரு பெரிய ஆசையோ கனவோ பொதுவாக இருந்ததில்லை. இன்னும் சொல்லப்போனால் என் அறுபத்தி மூன்று வயது வாழ்க்கையில் சொந்த வீட்டில் வாழும் வாய்ப்பு இது வரை அமையவில்லை .அப்பா மாநில அரசு அதிகாரி .. நான் வேலை பார்த்தது அரசுடைமை வங்கி ( நாற்பது ஆண்டுப் பணியில் ஏழு மாநிலங்களில் பதினெட்டு இடங்களில் வேலை பார்த்த அனுபவம் ). இது வரை தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் ஒரு ஊரிலோ ஒரு வீட்டிலோ வசித்த நினைவு இல்லை.
இப்படி ஒரு நாடோடி வாழ்க்கை அமைந்ததும் சொந்த வீடு பற்றிய எண்ணம் பெரிதாக ஏற்படாததற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம் .இருந்தாலும் வங்கியில் பணி புரிந்து கொண்டு வீட்டுக்கடன் வாங்காவிட்டால் பெரிய பாவம் என்ற ஒரு சமுதாய அழுத்தம் செலுத்தப் பட்டதால் அரை மனதோடு அதற்கான முயற்சிகளைத் தொடங்கினேன் .
1970 ம் ஆண்டு என் இருபது வயதில் வங்கியில் சேர்ந்தேன் .ஐந்து ஆண்டுகளில் அதாவது 1975 ல் ரூபாய் 75000/ வரை வீட்டுக்கடன் பெறத் தகுதி இருந்தது . (அந்தக்கால கட்டத்தில் அது மிகப்பெரிய தொகை ) எனவே பணம் ஒரு பெரிய பிரச்னை இல்லை . ஆனால் அதை விட மிகப்பெரிய குழப்பங்கள் ஏற்பட்டன.
முதல் குழப்பம் வீடு கட்டுவதா அல்லது கட்டிய வீட்டை வாங்குவதா .அடுத்து சென்னையிலா சொந்த ஊருக்கு அருகிலா இல்லை வேலை பார்க்கும் இடத்திலா (எனக்கும்  என் மனைவிக்கும் நிறைய   உடன் பிறப்புகள் . எனவே அறிவுரைகளுக்கும்  கருத்துக்களுக்கும் பஞ்சமே இல்லை).
சென்னையில் எங்கள் அக்கா வீட்டுக்கு அருகில் அழகான வடிவான  வீடு  விலைக்கு வந்தது . ஆனால் ரூபாய் ஒரு இலட்சத்துக்கு மேல் சொன்னதால் வேண்டாம் என்று சொல்லி விட்டேன் .(நாற்பது ஆண்டுகள் கடந்தும் இன்றும் என் மைத்துனர் அந்த வீட்டை வாங்காமல் விட்டு விட்டாயே என்று தன் ஆதங்கத்தை அவரை சந்திக்கும் போதெல்லாம் வெளிப்படுத்துவார்.)
அடுத்து காரைக்குடியில் ஒரு மிகப்பெரிய நகரத்தார் வீடு (மாளிகை என்றே சொல்லலாம் ). விலையும் ரூபாய் நாற்பது ஆயிரதுக்குள்தான் , ஆனால் வீடு ஒரு குறுகலான சந்தில் இருந்தது . மேலும் பல ஆண்டுகளாக கிட்டங்கியாக பயன்படுத்தியதால் ஒரு பொலிவில்லாமல் இருந்தது எனக்கு மனம் ஒப்பவில்லை .(பின்னர் அந்த வீட்டை வெறும் முப்பது ஆயிரத்துக்கு வாங்கியவர்  அதை இடித்து அதிலிருந்த பர்மா தேக்கை மட்டும் பல லட்சங்களுக்கு விற்றதாக கேள்விப்பட்டேன் ,-ஒரு பெருமூச்சு))
இதற்கிடையில் எனக்கு பதவி உயர்வோடு கேரள மாநிலத்துக்கு மாறுதல் அடுத்து என் அம்மா காலமானது எல்லாம் சேர்ந்து வீட்டு முயற்சிக்கு ஒரு அரைப் புள்ளி வைக்கபட்டது .கேரள வாசம் முடிந்து திரும்பியபின் திருச்சி ,புதுக்கோட்டை ,திருப்பத்தூர் சென்னை என்று பல இடங்களில் பார்த்தும் ஒன்றும் அமையவில்லை.
கால வெள்ளம் ஓடிய ஓட்டத்தில் மீண்டும் ஒரு பதவி உயர்வு பீகாருக்கு மாறுதல்.. என் இரண்டாவது மைத்துனர் எடுத்த விடா முயற்சியால் சென்னை பூந்தமல்லியில் ஒரு கிரௌண்ட் இடம் பீகாரில் இருக்கும்போதே வாங்க முடிந்தது .பீகாரில் பிள்ளைகள் படிப்புக்கு வசதி இல்லாததால் பஞ்சாப் மாநிலம் ஜலந்தருக்கு நானே முயற்சி எடுத்து மாறுதல் வாங்கினேன்.
ஜலந்தரில் நானே தேடி அலைந்து ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்தேன் . நல்ல விசாலமான வசதியான அழகான புது வீடு. அந்த வீட்டைப் பார்க்க பார்க்க எனக்கும் இந்த மாதிரி ஒரு வீடு கட்ட வேண்டும் என்று எண்ணம் தோன்றியது .ஜலந்தரில் இரண்டு ஆண்டுகள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு தமிழ்நாடு திரும்பியவுடன் வீட்டுக் கடன் வாங்க ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தேன் .
பூந்தமல்லியில் இடம் இருக்கிறது , வீட்டுக்கடன் தொகையும் இரண்டரை லட்சமாக உயர்ந்து விட்டது. எனவே ஜலந்தர் வீட்டைப்போல் கட்டுவதில் பிரச்னை ஏதும் பெரிதாக வராது என்று எண்ணி வேலையை ஆரம்பித்தேன்.
முதலில் வீட்டுக்கு வரைபடம் போட பொறியரிடம் போய் ஜலந்தர் வீட்டு மாதிரியில் வரைபடம் தயாரிக்கச் சொன்னேன்,. நீங்கள் சொல்வது போல் மூன்று பக்கம் வாசல் வைத்து கம்பியில்லாமல் பெரிய ஜன்னல்கள் வைத்து வீடு கட்டினால் வீட்டில் உள்ள பொருட்கள் மட்டும் அல்ல வீடே காணமல் போய் விடும் என்று பொறியர் பயமுறுத்தி விட்டார். மனதை தேற்றிக்கொண்டு முடிந்த வரை ஜலந்தர் வீட்டு மாதிரியில் வரைபடம் தயாரித்து  ஊராட்சி அலுவலகத்தில்  ஒப்புதலும் வாங்கிவிட்டேன். சில பல பக்கங்கள் கொண்ட வங்கிக்கடன் விண்ணப்பதை நிரப்பி ஒப்புதலுடன் கூடிய வரைபடம்,,சட்ட அறிக்கை, திட்ட மதிப்பீடு என்று தேவையான எல்லாவற்றையும் இணைத்து வட்ட அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தேன்.
சில நாட்கள் கழித்து வட்ட அலுவலகத்தின் சட்டப்பிரிவில் இருந்து பதினாறு கேள்விகளுடன்  நீண்ட ஒரு கடிதம் வந்தது. சாதாரணமாக சட்ட அறிக்கை ஒரு நான்கைந்து பக்கங்கள் இருக்கும். ஆனால் என் இடத்துக்கு கொடுக்கப்பட்ட சட்ட அறிக்கை மிக நீளமாக பதினான்கு பக்கங்கள் கொண்டது . ஒரு பக்கத்துக்கு ஒரு கேள்வி என்ற கணக்கையும் மீறி பதினாறு கேள்வி கேட்டதோடு நான் அனுப்பிய சட்ட அறிக்கையே சரியில்லை வேறு ஒன்று வாங்கி அனுப்புங்கள் என்று சொல்லியிருந்தார்கள்\. இதுதான் என் மனதுக்கு நெருடலாக இருந்தது..என் இடத்துக்கு சட்ட அறிக்கை கொடுத்த வழக்கறிஞர் மிகத் திறமையானவர்,இடபபறிமாற்றத் துறையில் வல்லுநர் .அப்படிப்பட்டவர் கொடுத்த அறிக்கை சரியில்லாமல் இருக்காது என்று என் மனம் சொன்னது, பொறுமையாக சட்ட அறிக்கையின் ஒவ்வொரு பக்கத்தையும் வரி வரியாகப் படித்தேன். பின் சட்டப்பிரிவில் இருந்து வந்த பதினாறு கேள்விகளையும் நிதானமாகப் படித்துப்  பார்த்தேன் . எல்லாக் கேள்விகளுக்கும் மிகத் தெளிவான பதில் சட்ட அறிக்கையில் இருந்தது. கடிதப்போக்குவரத்து மூலம்  இதைத் தெளிவு படுத்த ஆரம்பித்தால் என் பணிக்காலமே முடிந்து விடும் என்று எண்ணத்தோன்றியது.
சட்ட அறிக்கையில் சட்டப்பிரிவு கேட்ட கேள்விகளுக்கான பதில்களை அடிக்கோடு போட்டு குறித்துக்கொண்டு வட்ட அலுவலகத்தின் சட்டப்பிரிவுக்குப்போனேன் , வேறு சட்ட அறிக்கை கொண்டு வந்தீர்களா என்று கேட்ட அதிகாரியுடன் ஒரு நாற்பது மணித்துளிகள் பேசி ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சட்ட அறிக்கையில் இருப்பதை சுட்டிக்காட்டினேன் . அவரும் அதை ஒப்புக்கொண்டு கேள்விகள் அனைத்தையும் நீக்கிவிட்டார்,. அதற்குப்பிறகு கடன் பிரிவில் கேட்ட சில பல கேள்விகளுக்கு பொறுமையாகவும் சில இடங்களில் சூடாகவும் பதில் எழுதி ஒரு வழியாக கடன் அனுமதி கிடைத்து விட்டது.
வீடு கட்டும் இடத்துக்கு அருகில் உள்ள வங்கிக் கிளை மூலம் கடன் வழங்கப்படும்.. என் பெயரில் கணக்கு திறக்கவும், அடமானப் பத்திரம் கையெழுத்துப் போடவும் அதன்பின் கடன் பத்திரம் கையெழுத்துப் போடவும் என பல முறை வங்கிக் கிளைக்கு சென்ற போது சற்றும் எதிர் பாராத சில சிக்கல்கள் எழுந்தன. வங்கி அலுவலர் ஒருவர் என்னிடம் அவர் குறிப்பிடும் ஒப்பந்தக்காரரிடம் வீடு கட்டும் வேலையை ஒப்படைத்தால் நல்லது,அப்போதுதான் கடன் தொகை வழங்குவது எளிதாக இருக்கும் என்று மிரட்டாத குறையாகச்  சொன்னார் .கிளை உதவி மேலாளர் எனக்குத் தெரிந்தவர் என்பதால் அவர் தலையிட்டு இந்தப் பிரச்னை தீர்ககப்பட்டது .
அடுத்து கடன் சம்பந்தமான பத்திரங்கள் எல்லாம் பூர்த்தி செய்யப்பட்டு என் கைஎழுத்தோடு கிளை மேலாளரிடம் போனது, நானும் அவர் அறைக்குப்  போனேன். என்னை மேலும் கீழும் பார்த்த அவர் என்ன இவ்வளவு பொடியாக கையெழுத்துப் போட்டு இருக்கிறீர்கள். ஏதோ கொசு பறப்பது போல் இருக்கிறது உங்கள் கையெழுத்து. இதை வைத்து நான் எப்படி கடன் கொடுப்பது என்று கேட்டார், நான் பதில் எதுவும் சொல்லவில்லை. நானும் ஒரு கிளை மேலாளர் என்பதால் என் கைஎழுத்துப் பிரதி எல்லாக் கிளைகளிலும் தலைமை அலுவலகத்தால் அனுப்பப்பட்டு இருக்கும்.மேலும் என்னையும், என் அப்பாவையும் அவருக்கு நன்றாகத் தெரியும்.. நான் வாய் மூடி இருந்ததால் அவர் வட்ட அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார் . அங்கிருந்து இவர்தான் இன்னார் என்று உங்களுக்கு தெரிந்தால் கடன் கொடுங்கள அதில் சந்தேகம் இருந்தால் கொடுக்காதீர்கள் என்று சொல்லிவிட்டர்க,ள்  வேறு வழியில்லாமல் அரை மனதாகக் கடனுக்கு ஒப்புதல் அளித்தார் .
ஒரு வழியாக கடன் பிரச்சனை தீர்ந்தது . அடுத்து கட்டுமானப்பணியை ஆரம்பிக்க வேண்டும். நான் ஈரோடு அருகில் ஒரு கிளையில் மேலாளராக இருந்தேன். கட்டிட வேலையை யாரிடம் ஒப்படைப்பது என்பது இப்போதுள்ள கேள்வி . இதற்கிடையில் லாரி பேக்கர் மாதிரியில் வீடு கட்டலாம் என்று ஒரு எண்ணம் உதித்தது .அதற்கான அலுவலகத்தை அணுகிய போது மிக உற்சாகமாக வரவேற்று விபரங்கள் சொல்லி ஒரு விண்ணப்ப படிவத்தையும் கொடுத்தார்கள் , கணினி என்பது மிக அரிதாக இருந்த அந்தக்காலத்திலேயே அந்த அலுவலகத்தில் ஒவ்வொரு இருக்கையிலும் ஒரு கணினியைப் பார்க்க வியப்பாக இருந்தது, (ஆனால் கணினியை வெறும் தட்டச்சு பொறியாகத்தான் பயன் படுத்தினார்கள்).
விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதற்குரிய கட்டணத்தையும் சேர்த்து கொடுத்து சில நாட்களில் கட்டிடக்கலை முதுநிலைப் பொறியர் ஒருவரை அணுகும்படி சொன்னார்கள். அந்தப்பொறியரின் முகவரியைப் பல கோப்புகளில் சுமார் ஒரு  மணி நேரம் தேடிக்கண்டு பிடித்தார்கள். இதையெல்லாம் கணினியில் போட்டு வைத்திருந்தால் பார்க்க எளிதாக இருக்குமே என்று நான் சொன்னதற்கு  இதெல்லாம் சாத்தியமா என்பது போல் ஒரு வியப்பான பார்வைதான் பதிலாக வந்தது..
பொறியரைத் தேடி என் தம்பி , இடம் விற்ற என் நண்பர், நான் மூன்று பேரும் போனோம்.. காற்று வேகமாக வீசினால் பறந்து விடும் அளவுக்கு ஒரு ஒல்லியான பெண்ணை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. சற்று குண்டான எங்கள் உருவத்தைப் பார்த்து பயந்தது போல் இருந்தார். ஒரு வழியாக அவர் பயத்தை நீக்கி இடத்தைப் பார்வையிட அழைத்துச்சென்றோம்.
மலையைத் தூக்குகிறேன் என்று சவால் விட்ட பயில்வானை நினைவு கூறும் வகையில் சில நிபந்தனைகளை விதித்தார் அவர்.
கிணறு நாங்கள் தோண்டித் தர வேண்டும் , அஸ்திவாரம் தோண்டுவது எங்கள் பொறுப்பு கட்டுமானப்பொருட்கள் அனைத்தையும் நாங்களே வாங்கி கட்டும் இடத்துக்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்று சொன்னார். இடம் விற்ற என் நண்பரிடம் இது பற்றி நான் பேசினேன். , அவர் ஒரு சிறிய கட்டணத்துக்கு இதையெல்லாம் செய்வதாக நட்புக்காக ஒப்புக்கொண்டார்.  ஆனால் தொடர்ந்து பலமுறை பேசியும் அந்தப் பொறியர் ஒரு எதிர் மறை எண்ணத்துடனே இருப்பதாகத் தோன்றியது,
அப்போது இடம் விற்ற என் நண்பர் நீங்கள் சம்மதித்தால் நானே வீட்டைக் கட்டித் தருகின்றேன் என்று சொன்னார். அவர் இது வரை வீடு எதுவும் கட்டியதில்லை என்றாலும், இடம் விற்றதில் அவர் காட்டிய ஒழுங்கு, நேர்மை எல்லாம் அவர் மேல் முழு நம்பிக்கை கொள்ள வைத்தது அந்த நம்பிக்கை சிறிதும் சிதையாத அளவுக்கு மிக நேர்த்தியாக வீட்டைக் கட்டி முடித்தார். ஒரே ஒரு குறை மழை நீர் சேகரிப்பைப் பற்றி ஏதோ ஒரு இதழில் படித்து விட்டு அது மாதிரி செய்யச்\சொன்னேன் . பழக்கம் இல்லாததெல்லாம் செய்தால் வீடு வலிமை இழந்து விடும், மாட்டேன் என்று சொல்லிவிட்டார்.  .   
இதற்கிடையில் சந்தித்த சில எதிர்பாராத நிகழவுகள் பல அனுபவப் பாடங்களை கற்றுத்தந்தது அவற்றை விவரிக்க எண்ணம் இல்லை  

! இறைவன் அருளால்  வீடு நல்லவிதமாக கட்டி முடிந்தது. 
சென்னையில் என் தம்பி வீட்டில் அப்பா இருந்தார், கட்டிடம்  கட்டிய நண்பரே தன் காரில் அவர்களை கூட்டிக்கொண்டு போய் அவ்வப்போது வீட்டைக் காண்பித்து வருவார். நான் மிக அரிதாக வந்து வீட்டைப் பார்ப்பேன். எந்த விதப்பிரச்சனையும் இல்லாமல் வீட்டு வேலை நடந்து, நல்ல முறையில் முழுமையயும் அடைந்தது.
இதற்கிடையில் . திடிரென்று என் வங்கி முகவரிக்கு என் உறவின எழுதிய மடல் வந்தது.“ சரியான மேற்பார்வை இல்லாததால்   உன் வீட்டு வேலைகள் முறையாக நடக்கவில்லை. /கட்டுனர் தன் வருமனைத்தைப் பெருக்குவதிலேயே குறியாக இருக்கிறார் .வீடு அரைகுறையாக 
நிற்பது போல் தெரிகிறது  என்றுஎழுதியிருந்தார், உடனே விடுப்பு எடுத்துக்கொண்டு சென்னை போய் தம்பியிடமும் அப்பாவிடமும் அந்த மடலைக்காண்பித்தேன். என் தம்பியும் நானும் கட்டுனரின் துணையில்லாமல் பூந்தமல்லி போய் வீட்டைப் பார்த்தோம். எந்தக்குறையும் எங்கள் கண்களுக்கோ கருத்துக்கோ தெரியவில்லை. ஏதோ வேறு வீட்டைப் பார்த்து விட்டு எழுதியது போல் தெரிகிறது என்று என் தம்பி சொன்னான். வீட்டைப்பார்த்த நிறைவோடு ஊருக்கு திரும்பி வந்தேன் 

வீடு கட்டி முடிந்து புது மனை புகு விழா சிறப்பாக நடந்தது . முதல் நாள்  நூறு கடவுளின்  பிள்ளைகளை அழைத்து விருந்து.. அடுத்த நாள் சுற்றம் நட்புக்கு விருந்து எல்லாம் இனிதே நிறைவேறியது.
அடுத்து  வாடகைக்கு விட வேண்டும்.விடுப்பு காலம் முடிந்து பணிக்கு செல்ல வேண்டிய நாள் நெருங்கி விட்டது.. அப்பாவிடம் வீட்டு பொறுப்பை ஒப்படைத்து விட்டு நான் கிளம்பிவிட்டேன். சில நாட்கள் கழித்து மாநில அரசு வாரியம் தன் அலுவலகத்திற்கு இடம் கேட்பதாகவும் அவர்களுக்கு வீட்டை விட எண்ணியிருப்பதாகவும் அப்பா தகவல் அனுப்பியிருந்தார் .நானும் அலுவலகம் என்றால் ஓரளவு சுத்தமாக வைத்திருப்பார்கள் ,வாடகை ஒழுங்காக வரும் என்று எண்ணினேன். இரண்டொரு நாட்களில் தின இதழில் வந்த செய்தி ஒன்று அதைப்பொய்யாக்கியது . அதே வாரியத்தின் மதுரைக்கிளை வாடகை பாக்கிக்காக நீதி மன்ற ஆணை மூலம் வீட்டு உரிமையாளரால் வெளியற்றப்பட்டதை அறிந்து உடனே அந்த அலுவலகத்துக்கு வீட்டை விட வேண்டாம் என்று அப்பாவுக்கு தகவல் அனுப்பினேன்.. ஆனால் அதற்குள் அந்த அலுவலகம் வீட்டில் குடியேறி விட்டது.
வார இறுதியில் வீட்டைபார்க்கபோனேன். வீட்டில் எங்கு பார்த்தாலும் மிக நீள\மான இரும்புக் குழாய்கள் கிடந்தன. வீட்டில் உள்ள மூன்று படுக்கை அறைகளில் ஒன்றை என் புழக்கத்துக்கு பூட்டி வைத்துக்கொண்டு இரண்டு அறைகளைத்தான் வாடகைக்கு விட எண்ணியிருந்தேன். அந்த மூன்றாவது அறையில் அலுவலகக் காவலர் தன் அறையாக புழங்கிக்கொண்டு மகிழ்ச்சியுடன் இருந்தார். அவரை ஒரு வழியாக வெளியேற்றி அந்த அறையைப் பூட்டி வைத்தேன்..ஒரு மன வருத்தத்தோடு ஊர் திரும்பினேன்..
சரி வாடகையாவது ஒழுங்காக அனுப்புவார்கள் என்று எண்ணினேன். ஒரு மாதம் முடிந்தது , இரண்டு மாதம் முடிந்தது, மூன்றாவது மாதமும் முடிந்தது. வாடகையைப்பற்றி பேச்சே இல்லை. மறுபடி பூந்தமல்லி சென்று அந்த அலுவலகத்தின் பொறுப்பு அதிகாரியை சந்தித்துப் பேசினேன். அவர சொல்லிய விளக்கம் எனக்கு தலை சுற்றலை ஏற்படுத்தியது. அலுவலகம் பூந்தமல்லியில் இருப்பதால் காஞ்சிபுரத்தில் உள்ள அவர்கள் கோட்ட அலுவலகத்தில் இருந்து ஒரு அலுவலர் வந்து வீட்டை அளந்து பார்த்து ஆய்வு செய்து பேசிய வாடகை சரிதான் என்று சான்று அளிக்கவேண்டும் .அந்தச்சான்று திருச்சியில் உள்ள வட்ட அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் தங்கள் பரிந்துரைகளுடன் சென்னை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பார்கள். சென்னை அலுவலகத்தில் இருந்து ஒப்புதல் ஆணை வந்தவுடன் வாடகை கொடுத்துவிடுவோம் என்று சொன்னவுடன் சரி இப்போதைக்கு வாடகை வராது என்பது தெளிவானது .
இதற்கிடையில் எனக்கு ஈரோடுக்கு மாற்றல் ஆகி விட்டது. வீடு பார்ப்பது, குடும்பத்தைக் கூடிக்கொண்டு போவது, கல்லூரி பள்ளியில் இடம் பிடிப்பது என்று சில மாதங்கள் ஓடி விட்டன. வீடு வாடகைக்கு விட்டதில் இருந்து சரியாக ஒரு ஆண்டு கடந்து ஒரு வழியாக வாடகை வந்து சேர்ந்தது .அதுவும் பேசிய வாடகையில் இருபது சதம் குறைவாக வந்தது. இன்னும் இறுதி அனுமதி வரவில்லை. அது வந்த பின் அந்த இருபது சதம் கிடைக்கும் என்று சொன்னார்கள்.
நான் நேரே பூந்தமல்லி போய் வீட்டை உடனே காலி செய்து விடுங்கள் என்று அழுத்தம் கொடுத்தேன். இது அரசு அலுவலகம் இப்படியெல்லாம் நீங்கள் பேசக்கூடது நாங்கள் காலி செய்யவும் மாட்டோம் என்று மிரட்டினார்கள் .
வீட்டைபார்த்த என்கண்களில் ரத்தக்கண்ணீர். அந்த அலுவலக்காவலர் அங்கேயே தங்கி சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார், அதில் தப்பில்லை. ஆனால் அவர் சமையலுக்கு பயன் படுத்திய எரிபொருள் இயந்திரங்களை இயக்கப் பயன் படும் எண்ணெய்.. எனவே வீடு முழுவதும் கரி பிடித்து கட்டி பல ஆண்டுகளாக சுத்தம் செய்யாத வீடு போல் தோன்றியது, சமையலறை கருப்பு வண்ணம்தான் நாம் கட்டும்போதே பூசினோமோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியது
சுற்றியுள்ள காலி இடம் முழுக்க செழித்த காடு போல களைச்செடிகள் மண்டியிருந்தன . போதாக்குறைக்கு அந்த அலுவலகத்தில் வேலை பார்த்தவர்கள் ஒரு ஆண்டாக  சாப்பிட்டுப் போட்ட எச்சி இலைகள் செடிகளுக்குள் கிடந்தன .மொத்தத்தில் கட்டி முடித்து ஒரு ஆண்டே ஆன புது வீடு ஒரு பாழடைந்த தோற்றத்தில் காட்சி அளித்தது.
இதை இப்படியே விட்டால் வீடு முற்றிலும் சிதிலமடைந்து விடும், அதற்குள் எதாவது விரைந்து செயல் பட்டு வீட்டை மீட்க வேண்டும் என்ற எண்ணம் உதித்தது.
நேரே அந்த வாரியத்தின் தலைமை அலுவலகத்துக்கு சென்று வாரியத் தலைவரை சந்திக்க முயன்றேன். இறைவன் அருளால் அவரை அன்றே சந்திக்க முடிந்தது. என் பிரச்சனைகளை தெளிவாக எடுத்துச் சொன்னேன்.. .இந்திய ஆட்சிப்பணி அதிகாரியான அவர் நான் சொன்னதைக்  கவனமாகக் கேட்டார். என்னிடம் அவர் கேட்ட முதல் கேள்வி எதற்காக இந்த அலுவலகத்துக்கு வீட்டை அதுவும் புதிய வீட்டை வாடகைக்கு கொடுத்தீர்கள் என்பதுதான் சரி நீங்கள் அமைதியாக இருங்கள் உங்கள் வீடு உங்களுக்கு கிடைக்கும் என்று கருணையுடன் சொன்னார் .சொன்னது மட்டுமல்ல செய்தும் காண்பித்தார்.. குறுகிய காலத்திலே வீடு என் கைக்கு வந்தது.
கிடைத்த ஒரு ஆண்டு வாடகை வீட்டை புதுப்பிக்கவும் சுத்தம் செய்யவுமே சரியாகி  விட்டது.. அடுத்து ஒரு நல்ல, பிரச்சனை இல்லாத ஒருவருக்கு வாடகைக்கு விடவேண்டும் என்று முற்சித்துக்கொண்டிருக்கையில் அடுத்த அதிர்ச்சி வீட்டின் மின் இணைப்பு துண்டிக்கபட்டது. விசாரித்ததில் அந்த அலுவலகம் ஒரு தடவை கூட மின் கட்டணம் செலுத்தவில்லை என்பது தெரிந்தது . அரசு அலுவலகம் என்பதால் இணைப்பை துண்டிக்காமல் விட்டு வைத்திருந்தார்கள்,. இப்போது அவர்கள் வெளியேறி விட்டதால் உடனே துண்டித்து விட்டார்கள், அலுவலகம் என்பதால் கூடுதல் கட்டண விகிதம்,, தண்டத்தொகை மறு இணைப்புக்கட்டணம் என்று ஒரு பெரிய தொகை கட்டச்சொன்னர்கள்.
மின் கட்டணம் செலுத்தப்படாமல் இருப்பதை இடம் பெயர்ந்து போன வாரிய அலுவலத்தை தேடிக் கண்டுபிடித்து தெரிவித்தபோது அவர்கள் கூறிய பதில், இந்தத்தொகை எங்கள்  செலவு வரம்புக்கு அப்பாற்பட்டது , எனவே  செலுத்த முடியாது என்ற எடுத்தேரியான விளக்கம்தான் .
மறுபடியும் தலைமை அலுவலகத்துக்குப் பயணம், மீண்டும் வாரியத் தலைவருடன் ) இ ஆ ப அதிகாரி) சந்திப்பு. இந்த முறையும் அதே கனிவுடன் உதவி செய்தார்.. என்னை வைத்துக்கொண்டே பூந்தமல்லி கிளை அலுவலகத்தை தொலை பேசியில் தொடர்பு கொண்டு அங்கிருந்து சொல்லப்பட்ட எந்த விளக்கத்தையும் ஏற்றுக்கொள்ளாமல் உடனடியாக மின்கட்டணம் முழுவதையும் செலுத்திவிட்டு உடனே தனக்கு தகவல் கொடுக்குமாறு பணித்தார்,. இதுபற்றி நீங்கள் கவலை கொள்ளவேண்டாம் என்று என்னிடம் சொன்னார். மனதாலும் நாவாலும் அவருக்கு ஆயிரம் நன்றி கூறி விட்டுப் புறப்பட்டேன்,.
இருபத்திஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த இந்த நிகழ்வுகளை இப்போது நினைத்துப் பார்த்தால் இப்போது வியப்பு மேலிடுகிறது. அந்த மூத்த இ ஆ ப அதிகாரியை இதற்கு முன் நான் சந்தித்தது கிடையாது, எனக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இருந்தது இல்லை.. அரசியல் அழுத்தமோ, அதிகாரிகள் பரிந்துரையோ இல்லாமல்தான் நான் போனேன். ஆனால் இரு முறையும் அவரை எளிதில் முன்னறிவிப்பு இன்றி சந்திக்க முடிந்தது. அது மட்டுமல்ல் , நான் நாடிசென்ற இரண்டு உதவிகைளையும் மிக எளிதாக செய்து முடித்தார். அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்
மறுபடி குடிவைக்க ஆள் தேடும் படலம். ஏற்கனவே நான் குறிப்பிட்ட என் நெருங்கிய உறவினர் அவருக்குத் தெரிந்த ஒருவரை பரிந்துரைத்தார். மழலையர் பள்ளி நடத்த இடம் தேடிகொண்டிருந்த அவர் என் வீட்டைக் கேட்டார் , பள்ளிக்கூடம் என்றால் ஒரு பெரிய சமூக சேவை. வீடு கொடுப்பதால் நாமும் அந்த புனித சேவையில் பங்கு கொள்கிறோம் என்ற கற்பனையில் நானும் சம்மதித்து பதினோரு மாத ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு விட்டு ஊர் திரும்பினேன் . மாத வாடகை ஒழுங்காக வங்கி வரைவோலை மூலம் வந்து கொண்டிருந்தது. சரி இனிமேல் எதுவும் சிக்கல் வராது என்று நிம்மதியாக இருந்தேன்..ஆனால் இரு பெரும் பிரச்சனைகள் இதற்குப்  பின்னால்தான் எழுந்தன.
வீடு கட்டிகொடுத்த என் நண்பர் ஒரு நாள் என்னைத் தொடர்பு கொண்டார். ஒரு தவறு நிகழ்ந்து விட்டது என்றார். என்ன சொல்லுங்கள் என்றேன். வீட்டை மாற்றிக் கட்டி விட்டேன் என்றார். முன்பே என்னிடம் வீட்டு வரை படத்தை இடம் வலமாக மாற்றி வீட்டைகட்டுகிறேன், அளவு மாறாததால் ஒன்றும் பிரச்சனை வராது என்றும் சொல்லியிருந்தார். அதைத்தான் இப்போதும் குறிப்பிடுகிறார் என்று எண்ணினேன். ஆனால் அவர் சொன்னது அப்படி எளிதான பிரச்சனைஅல்ல. என் வீட்டை வேறு ஒருவரின் மனையில் மாற்றிக கட்டி விட்டாராம். மனை விற்றவரும் அவர்தான், வீடு கட்டியதும் அவர்தான். ஆனாலும் மாற்றிக் கட்டி விட்டார்.   .
வீடு கட்ட ஆரம்பித்ததில் இருந்து தொடர்ந்து அதிர்ச்சிகளையே சந்தித்ததாலோ என்னவோ இவ்வளவு பெரிய தவறு என்னை அதிகமாப் பாதிக்கவில்லை. அடுத்த மனைக்காரர் வீடு கட்ட எண்ணி தன் மனையைப் பார்க்க வந்தவர் தன் மனையில் வீடு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து மனை விற்றவரைப் போய் பார்த்து சத்தம் போட்டிருக்கிறார். அப்பொழுதான் மனை விற்றவரும் என் வீட்டைக் கட்டியவருமான அவருக்குத் தான் செய்த பெரும் பிழை தெரிந்திருக்கிறது.
மிகவும் பயந்த குரலில் பேசிய கட்டுனரிடம் இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன், நான் வங்கியில் கடன் வாங்கியிருப்பதால் முதலில் அவர்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்களின் அறிவுரைப்படி வங்கி வழக்குரைஞரைக் கலந்து மற்று ஒப்பந்த ஆவணம்  ஒன்று எழுதி அதில் நானும் என் வீடு கட்டப்பட்ட மனையின் உரிமையாளரும் கையொப்பமிட்டு அந்த ஆவணத்தைப் பதிவு செய்ய வேண்டும். இதற்கான செலவு முழுவதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று கட்டுனர் சொன்னார். (பின்னர் என் அமைதியான போக்கைக் கண்டு செலவை என் தலையிலேயே கட்டி விட்டார். இதில் வருமான வரிச் சிக்கல் எதுவும் வராமல் பார்த்துக்கொள்கிறேன் என்று சாக்குச்  சொல்லிவிட்டார்))
பெரிய நடை முறைச் சிக்கல் எதுவும் இதில் ஏற்படவில்லை. வங்கி வட்ட அலுவலகத்தில் தெரிவித்து விட்டு என் மனைக்கு சட்ட அறிக்கை கொடுத்த அதே வழக்குரைஞரிடம் போனேன். அப்போதுதான் அவரை முதன் முதலில் சந்தித்தேன்.. என் எதிர்பார்ப்புக்கு நேர் மாறாக மிகவும் நகைச்சுவை உணர்வு மிக்க மனிதராக இருந்தார்.. மிக எளிதாக ஒரு மணி நேரத்துக்குள் மாற்று ஆவணம் தயாரித்துக் கொடுத்தார். அதற்கு கட்டணம் எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். ஓரிரு மாதங்களில் நானும் மாற்று மனைக்காரரும் சென்னையில் சந்தித்து, அந்த ஆவணத்தில் கையெழுத்து இட்டு பதிவு அலுவலகத்தில் பதீவு செய்தோம்..
ஒரு நிம்மதிப் பெருமூச்சோடு ஊர் திரும்பினேன்.. ஒரு சில மாதங்களில் அடுத்த இடி..
அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கும் போது என் பெயருக்கு ஒரு நீதி மன்ற அறிவிப்பு வந்தது.. வங்கிப்பணியில் அலுவல் சார்ந்த நீதி மன்ற அறிவிப்புகள் நிறைய வரும். அதில் சில அறிவிப்புகள் வங்கி மேலாளர் பெயரிலும் வரும்.. வாடிக்கையாளர்கள் நேரம் முடிந்து அதைப் படித்த எனக்கு பெரிய அதிர்ச்சி.. பூந்தமல்லி வீட்டில் குடியிருப்பவர் என்மேல் வழக்குத் தொடுத்துள்ளார் என்பது புரிந்தது.இது வரை சொந்த அலுவலாக நீதி மன்றம் சென்றிராத எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலில் அறிவிப்பை கவனமாகப் படிக்க கூட முடியவில்லை. .ஒரு வழியாக வங்கி அலுவல்களை முடித்து விட்டு எங்கள் வங்கி வழக்குரைஞர் அலுவலகம் சென்று அந்த அறிக்கையைக் காண்பித்து விவரம் கேட்டேன்..
உங்கள் வீட்டில் குடியிருப்பவர் நீங்கள் அடியாட்களை வைத்து மிரட்டி வீட்டைகாலி செய்ய ஏற்பாடு செய்ததாக வழக்குதொடுதிருக்கிறார். அந்த வழக்கில் உங்களை நீதி மன்றத்திற்கு வரும்படி அறிக்கை வந்திருக்கிறது என்று விளக்கினார். நான் அப்படி ஒன்றும் செய்யவில்லையே என்றேன. அண்மையில் வீட்டைக் காலி செய்யும்படி எதாவது சொன்னீர்களா என்று வழக்குரைஞர் கேட்டார். ஆம் , என் மகளின் திருமணப் பேச்சு நடந்து கொண்டிருக்கிறது.அது முடிவானால் வீடு தேவைப்படும் என்று சொன்னேன் என்று விளக்கினேன். அவர்களுக்கு இப்போது வீட்டைக் காலி செய்யும் எண்ணம் இல்லை.. எனவே இப்படி ஒரு வழக்கைத் தொடுத்திருக்கிறார்கள் , எப்படியும் வழக்கு முடிய பல ஆண்டுகள் ஆகி விடும். அது வரை அவர்களை அசைக்க முடியாது.என்றார்.
இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன். வக்காலத் நமூன என்ற படிவத்தில் என் கையெழுத்தை வங்கிக் கொண்டு., அடுத்த மாதம் நீதி மன்றத்துக்கு நீங்கள் போவதைத் தள்ளி வைக்க இப்போதைக்கு ஏற்பாடு செய்கிறேன் , இதற்கிடையில் நீங்கள் பூந்தமல்லி சென்று அங்குள்ள வழக்குரைஞர்,, உங்கள் உறவினர்கள், மனை விற்றவர் இவர்களைக் கலந்து மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று சிந்தியுங்கள் என்று சொன்னார். மறுபடி சென்னை பயணம்.. கட்டுனர் தன் உதவியாளர் ஒருவர் பூந்தமல்லி ஊராட்சி மன்ற உறுப்பினராக இருக்கிறார் , அவரைப் போய்ப் பாருங்கள் என்று சொன்னார். உதவியாளர் மிகவும் உற்சாகமாகப் பேசினார்.. ஆனால் அவர் பேச்சு எனக்கு அச்சம் உண்டாக்கியது. நீங்கள் ஒரு வார்த்தை சொன்னால் போதும் அவர்களைத் தூக்கி விடுகிறேன் என்றார்.. இந்த மூன்றாம் தர முறையெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது என்று எண்ணி பூந்தமல்லியில் இருந்த, ஓரளவு பழக்கமான ஒரு வழக்குரைஞரை சந்தித்தேன்.
அவர் முதலில் அடியாட்களை வைத்து முயற்சி செய்யுங்கள் அதுதான் விரைவில் ஒரு தீர்வைத் தரும், சட்டப்படி போனால் வழக்கு முடிய ஆறு ஆண்டுகளுக்கு மேலாகும் என்றார். பிறகு அவரே உங்கள் பதவிக்கும், உங்கள் குணத்துக்கும் அடியாள் முறை  ஒத்து வராது. நான் இந்த வழக்கை நடத்தித் தருகிறேன். எவ்வளவு காலம் வழக்கு நீடிக்கும் என்று இப்போது சொல்ல முடியாது, ஆனால் உங்கள் வீடு உங்களுக்கு கிடைக்கும் என்பதை உறுதியாக நம்பலாம் என்று ஆறுதல் சொன்னார்.
அவர் சொன்ன படியே வழக்கு பல ஆண்டுகள் நீடித்தாது. மிகுந்த மன உளைச்சல். ஆனால் அதிக அலைச்சல் இல்லாமல் என் வழக்குரைஞர் (இப்போது மிகவும் நெருக்கமான நண்பராகி விட்டார்)) பார்த்துக்கொண்டார். ஒரு வழியாக வழக்கு முடிந்து எனக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.அந்த வழக்குரைஞர் நண்பருக்கு என் மனமார்ந்த நன்றியை நான் தெரிவித்துக்கொள்கிறேன். அலட்டிக்கொள்ளாமல், அதிகம் பேசாமல் செயல் பட்ட அவர் கட்டணம் எதுவும் பெரிதாக வாங்கவில்லை.
இதற்கிடையில் நான் நான் கோவையில் இருந்து மாறுதல் ஆகி, இரண்டு கிளைகளில் மூன்று மூன்று ஆண்டுகள் பணி புரிந்து விட்டு சென்னைக்கு வந்து விட்டேன்.. சரி சொந்த வீட்டில் குடியிருக்கலாம் என்று எண்ணினேன். ஆனால் நான் பணி புரிந்த கிளைக்கும் வீட்டுக்கும் வெகு தொலைவாக இருந்ததால் கிளைக்கு அருகிலேயே ஒரு நல்ல அருமையான தனி வீட்டை பிடித்துக் கொண்டு நிம்மதியாக் இருந்தேன்..
இவ்வளவு மன உளைச்சலும் அலைச்சலும் உண்டாக்கிய பூந்தமல்லி வீட்டை விற்று விடலாமா என்று ஒரு எண்ணம். மறுபுறம் இத்தனையும் தாண்டி வீடு இறைவன் அருளால் நம் கைக்கு கிடைத்து விட்டது எனவே விற்கக்கூடாது என்று ஒரு மனம்..
வீட்டை வாடகைக்கு விடுவதற்கும் தயக்கமாக இருந்தது,. மிக நன்றாகத் தெரிந்தவர் அல்லது தெரிந்த நல்லவர்கள் சொன்னால்தான் வாடகைக்கு விடுவது என்று முடிவு பண்ணி வீட்டைப் பூட்டியே வைத்திருந்தேன்,. பூநதமல்லியிலும் மற்ற இடங்களிலும் தெரிந்தவர்களிடம் சொல்லியிருந்தேன்,இதில் உண்டான ஒரு சிக்கலைச் சொல்லி இந்தக் கதையை இத்துடன் இப்போதைக்கு நிறைவு செய்ய எண்ணுகிறேன் .
பூநதமல்லியிப் பள்ளிவாசலில் தொழுகை நடத்தும் இமாமிடமிருந்து தொலைபேசி அழைப்பு ஒரு நாள் வந்தது.. ஒரு நல்லவர் வீட்டைக் கேட்கிறார், நீங்கள் வந்து என்னை சந்தித்துப் பேசுங்கள் என்று சொன்னார். நானும் அடுத்த நாள் அவரைப் பள்ளிவாசலில் சந்திக்கப் போனேன். அலுவலகத்துக்கு தாமதமாகி விடக்கூடாது என்ற பரபரப்பில் வீடு கேட்டவர் இங்கே வருவாரா அல்லது நாம் போய் அவரைப் பார்க்க வேண்டுமா என்று கேட்டேன்.அவரோ மிகவும் நிதானமாக முதலில் தேனீர் அருந்துவோம் பிறகு பேசலாம் என்றார்...தேநீர் வந்தது, அவர் நிதானம் சற்றும் குறையாமல் சுவைத்துக் குடித்தார்.நான் மறுபடியும் பரபரப்போடு நாம் போக வேண்டுமா அவர் இங்கே வருவாரா என்று கேட்டேன்.
சற்று நேரம் அமைதியாக இருந்த அவர் எனக்குத்தான் வீடு கேட்டேன் என்றார். எனக்கு ஒரே குழப்பமும் அதிர்ச்சியும். தொலைபேசியில் தனக்கு வீடு வேண்டும் என்று அவர் சொல்லவில்லை. மேலும் இமாம்களுக்கு கொடுக்கப்படும் ஊதியத்தில் அவர்களுக்கு வாடகை கொடுக்க இயலாது என்பதால் பள்ளிவாசல்களில் வீடு கொடுத்து தனியாள் என்றால் உணவுக்கும் ஏற்பாடு செய்து விடுவார்கள். இந்த நிலையில் இவருக்கு நம் வீட்டுக்கு வாடகை கொடுக்க வசதிபப்படுமா என்று சிந்திக் கொண்டிருந்தேன். அதைக்கலைக்கும் வகையில் அடுத்த அம்பை எய்தார் அவர்.
வீடு பூட்டியே கிடந்தால் தூசி அடைந்து அழுக்காகிறது.. இப்படியே விட்டால் வீடு களையிழந்து செல்வாக்கு குறைந்து விடும். நான் வேண்டுமென்றால் உங்களுக்காக அங்கே குடியிருந்து கொண்டு கூட்டிப்பெருக்கி சுத்தமாக வைத்திருக்கிறேன்.. காலையும் மாலையும் வேதம் ஓதினால் வீட்டின் செல்வாக்குக் கூடும் ,.. இதற்காக நீங்கள் எனக்கு ஊதியம் எதுவும் தரவேண்டாம். என்று இலவசமாக வீட்டைக் கேட்டதோடு,  எனக்கு பெரிய உதவி செய்வது போல் பேசினார் கட்டுப்படுத்த முடியாத சினமும் ஆத்திரமும் வந்தது. கண்டபடி அவரைத திட்ட வேண்டும் என்று தோன்றியது. அவர் இமாம் என்ற ஒரே காரணத்துக்காக என்னை நானே கட்டுப்படுதிக்கொண்டேன்.. அதை அவரிடமும் சொல்லி விட்டேன்.

இத்துடன் இந்தக்கதையை நிறைவு செய்வவதற்கு முன் சில சொற்கள் :.
முதல் முயற்சியான இந்தக்கதையில் முழுமையாக இல்லாவிட்டாலும்  முடிந்த அளவுக்கு பிற மொழிச் சொற்களைத் தவிர்த்திருக்கிறேன்.. ( இதனால் கதையின் ஓட்டம் சில  தடை பட்டாலும் அதைப் பொருட்படுத்தவில்லை.)
இப்போது உங்கள் கருத்துக்களுக்காகக் காத்திருக்கிறேன்  
.



   

.


    .