Monday, 25 January 2016

வாழ்க்கைப பயணமும் வங்கி அனுபவங்களும்



ஆட்டோ கிராபோ ஆட்டோ பயோக்ராபியோ  எழுதும் அளவுக்கு நான் பெரிய டைரக்டரும் இல்லை சரித்திர நாயகனும் இல்லை இருந்தாலும் முப்பதுக்கும் மேற்பட்ட ஊர்களில் வாழ்ந்த வாழ்க்கையையும், ஏழு மாநிலங்களில் பதினெட்டு இடங்களில் பணி புரிந்த அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள எண்ணியே இந்த முயற்சியில் இறங்குகிறேன்.
எங்கு எப்படித் துவங்குவது என்பதிலேயே சிறு குழப்பம் பிறப்பில் ஆரம்பித்து வரிசையாக எழுதினால் எதோ வரலாற்றுப் பாடம் போல் அலுப்புத் தட்டும்.அதனால் எனக்குத் தோன்றிய ஒரு வரிசையில் எழதுகிறேன்.
1ஆம்பூர்
என்ன பிரியாணி வாசம் மூக்கைதுளைக்கிறதா? அம்மா இங்குதான் பிரியாணி செய்யக் கற்றுக்கொண்டார்கள் எங்கள் உற்றார் உறவினர்களில் முதலில் பிரியாணி செய்யத்தெரிந்தவர் என்ற பெருமையையும்அம்மாவுக்கு ஆம்பூர் வாங்கிக் கொடுத்தது மேலும் விடுமுறைக்கு ஆம்பூரில் எங்கள் வீட்டுக்கு வந்த மாமா பையனை பிரியாணி வேண்டவே வேண்டாம் என்று அலறும் அளவுக்கு பிரியாணி உபசரிப்பால் திணற அடித்த ஊர் ஆம்பூர் .
போதும் என்னும் அளவுக்கு பிரியாணி புகழ் பாடியாயிற்று. இனி வேறு செய்திகளைப் பார்ப்போம். அப்பா நகராட்சி ஆணையர். அந்த ஊரில் சிறுபான்மை இனத்தைச சேர்ந்த முதல் ஆணையர் என்பதால் பெரும் மதிப்பும் மரியாதையும் காண்பித்தார்கள்.மிகப் பெரிய தொழில் அதிபரின் வீட்டுக்கு எதிரில் விசாலமான எங்கள் வீடு.
தொழில் அதிபர் வீட்டில் இருந்து தினமும் மனோரஞ்சிதப்பூ கொடுத்து விடுவார்கள். அந்தப்பூவின் அழகிய பசுமை நிறமும் வடிவமும் இனிமையான மெல்லிய நறுமணமும் அறுபது ஆண்டுகள் கழித்தும் என் நெஞ்சில் நிறைந்து நிற்கின்றன.அதே போல் நாவிலும் மனதிலும் இனிப்பது பால் ஐஸ்.தெருவில் மூன்று பைசாவிற்கு விற்கும். இளஞ்சிவப்பு நிறத்தில் ஒரு கேக் அளவில் நல்ல சுவையும் மணமும் கொண்டிருக்கும். அதை பாலில் கலந்து குடித்தால ரோஸ்  மில்க் குடித்தது போல் இருக்கும்.
சைவ உணவு அந்தப்பகுதி மக்களுக்கு அரிதான் ஒன்று. வாரத்தில் ஏழு நாளும் தினமும் மூன்று வேளையும் அசைவம்தான். அதிலும் குறிப்பாக கறிதான்.ரசம், சாம்பார் இதெல்லாம் ஏன் மோர் கூட  அவர்கள் கேள்விப்படாத உணவுகள். சுற்றுப்பயணம் செல்வதற்காக எங்கள் வீட்டில் தயிர் சோறு செய்து தொட்டுக்ககொள்ள முழுப்பயிறு புளிக்குழம்பு சுண்ட வைத்து வைத்திருந்தார்கள் அம்மா . அந்தக் குழம்பை ருசி பார்த்த அண்டை வீட்டார் அதன் சிறப்பான சுவை பற்றி அக்கம் பக்கத்தில் தெரிவிக்க பல வீடுகளில் இருந்து மிக உயர்வான உணவு வகைகளைக் கொடுத்தனுப்பி பதிலுக்கு அந்த சுண்ட வைத்த புளிக்குழம்பை வாங்கி சுவைத்துப் பாராட்டியது ஒரு சரித்திரம்..
வெள்ளிகிழமையன்று கூட்டுத் தொழுகைக்காக சிறப்புக்குளியல் குளித்து நல்ல ஆடைகள் அணிந்து நறுமணம் பூசிப் புறப்படுவதும் நெய்சசோறு குருமா செய்வதும் ஒவ்வொரு வெள்ளியும் பெருநாள் போல் சிறப்பாக இருக்கும்..
தியாகத் திருநாளாம் பக்ரீத்துக்கு எல்லா வீடுகளிலும் ஆடு வெட்டுவார்கள். அதனால் சாக்கடையெல்லாம் சிவப்பாகி விடும்..ரம்சான் எனப்படும் ஈகைத் திருநாளும் அதற்கு முன் நோன்பு நோற்கும் ஒரு மாதமும் ஊரே திருவிழாக் கோலம் பூண்டிருக்கும்.
நாங்கள் வசித்த பகுதியில் சில சமூகக் கட்டுப்பாடுகள்  இருந்தன .பெண்கள்முகத்திரை இல்லாமல் வெளியே வரக்கூடது.அனாவசியமாக வீட்டிலிருந்து வெளியே போகக்கூடாது. வயது வந்த பெண்கள் பள்ளிக்கு போகக்கூடாது. மின் துறை, தொலைபேசித் துறை ஊழியர்கள் முன்னறிவிப்பு இல்லாமல் கம்பங்களிலோ உயராமன இடங்களில் ஏறக்கூடாது.தப்பித்தவறி அறிவிப்பின்றி ஏறி விட்டால் தண்டிக்கப்படுவர்.
ஆம்பூரில்தான் நான் ஆரம்பப்பள்ளிக் கல்வியைத் தொடங்கினேன். எனக்கு ஆறு வயது இளைய என் ஒரே தம்பி சகாபுதீன் பிறந்ததும் இந்த ஊரில்தான்(நாற்பத்தி ஐந்து ஆண்டுகள் கழித்து என் இரண்டாவது பேத்தி பிறந்ததும் ஆம்பூரில் உள்ள ஒரு மருத்துவ மனையில் என்பது கொசுறு) .
அந்த ஊரில் உருது மொழி பேசுபவர்கள் அதிகம். ஆனால் உருது எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் குறைவு.மேலும் சில தலைமுறைகள் முந்திய முதியவர்களுக்கு உருது பேசவும் தெரியாது,.தமிழ்தான் தெரியும் என்பது நான் பின்னால் கேள்விப் பட்ட செய்தி.
ஆம்பூரின் தனிச்சிறப்பு விருந்தோம்பல்.நோன்பு திறக்க அவர்கள் வைக்கும் உணவு வகைகள் நம்மை திகைக்க வைக்கும்.
மொத்தத்தில் ஆம்பூர் என்றால் விருந்தோம்பல் உபசரிப்பு பிரியாணி
iஇந்தத் தொடரின் முதல் பகுதி இது. மேலும் எனக்கு ஓராளவு விபரம் அறியும் பருவம் பற்றிய பகுதி இது. நான் மூன்றாவது தலைமுறையைப் பார்த்து விட்டேன். என் உடன் பிறப்புகள் நான்காம் தலைமுறையைப் பார்த்து விட்டார்கள்
அந்த இளைய தலைமுறையினர் புரிந்து கொள்வதற்காக எங்கள் குடும்பம் பற்றியும் அதோடு இணைந்த அந்தக் கால வாழ்கை முறை பற்றியம் சில செய்திகளைத் தெரிவிக்க, எண்ணுகிறேன்..
அந்தக்கால கட்டத்தில் குடும்பம் என்றால் நிறைய பிள்ளைகளோடு பெரிதாகத்தான் இருக்கும். எங்கள் குடும்பமும் அதற்கு விதி விலக்கில்லை.. .வீட்டிற்கு உற்றார் உறவினர் அடிக்கடி வந்து போவார்கள்..சமையலை பெரிய வேலையாகவோ விருந்தோம்பலை பெரிய செலவாகவோ யாரும் எண்ணியதில்லை..கல்வி,மருத்துவச்செலவு யாருக்கும் பெரிய பாரமாகத் தாக்கியதில்லை.உள்ளூர் பயணம் என்பது பெரும்பாலும் நடைதான்,அதிலும் மாணவர்களுக்கு (பள்ளி, கல்லூரி) சைக்கிள் கூட பெரிய ஆடம்பரம்தான். தனிக்கல்வி நோட்ஸ் இவை ஏளனப் பொருட்களாளாக இருந்தன.குளியல் அறை கழிப்பறை வீட்டின் பின் புறம்தான் இருக்கும். தொலைக்காட்சி,மிக்சி கிரைண்டர் வாஷிங் மெஷின்கணினி ,வலைத்தளம்,கைபேசி கட்செவி போன்றவை கிடையாது . மின் விசிறியே மிக அரிதாக அதுவும் ஒரு வீட்டில் ஒன்றுதான் இருக்கும்..கிணறுதான் நீர் ஆதாரம்.மோட்டார் கிடையாதுசிற்றூர் ,சிறிய நகரங்களில் குளிக்க குளம், ஆறு இருக்கும் எனவே பெரும்பாலும் நீச்சல் தெரியாத ஆண் பெண்கள் கிடையாது.
இரவு ஒன்பது மணிக்குப் படுத்து காலை ஆறு மணிக்கு எழுவோம்.. வீட்டுப் பாடம் படிக்க அரை அல்லது அதிகமாகப்போனால் ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகாது. தேர்வு நேரங்களில் காலை ஐந்து மணிக்கு எழுவோம்.இரவு கண் விழித்தல் கிடையவே கிடையாது
இதெல்லாம் உங்கள் தலை எழுத்து. இதைச்சொல்லி எங்களை ஏன் போர் அடிக்கிறீர்கள் என்று என் பேரன் பேத்திமார் கேட்பது காதில் விழுகிறது. இன்றுள்ள பெரும்பாலான உடல் மனம் சார்ந்த பிரச்சனைகளுக்குக் காரணம் நமது வாழ்க்கைமுறை , மிகச்சிறிய குடும்பங்கள் கல்வி முறை இவற்றோடு எதையும் பொருளாதார நோக்கில் பார்க்கும் மனப்பாங்குதான் என்று மருத்துவ,மனவியல் வல்லுனர்கள் அறுதியிட்டுக் கூறுகிறார்கள்.
இனி இது போல் இடையூறுகள் கூடிய மட்டும் இல்லாமல்               

பயணம் தொடரும்

 .             .