Sunday, 14 July 2019

கதை நேரம் 15 மார்ட்டின்




மார்ட்டின்


மார்ட்டின்
நல்ல உழைப்பாளி .காலணிகள் செய்வதில் கை தேர்ந்தவர் சொன்னதைச் செய்யும் செய்வதை மட்டுமே சொல்லும் ஒரு உன்னத மனிதர்
தன் பணிக்கூடத்தில் எப்போதும் எறும்பின் சுறுசுறுப்புடன் இயங்கிக்கொண்டிருப்பார் . அடித்தளத்தில் உள்ள அந்த அறையில் ஒரே ஒரு சன்னல்தான் இருந்தது . அதன் வழியே தெருவில் செல்பவர்களின் கால்களைப் பார்த்தே இவர் இன்னார் என்று கண்டுகொள்ளும் அளவுக்கு அந்த ஊர் மக்கள் அனைவருக்கும் காலணி செய்து கொடுத்திருக்கிறார்.
ஒரு மூன்று வயது குழந்தை மட்டுமே அவர் குடும்பம். துணைவியும் மற்ற குழந்தைகளும் காலமாகிவிட்டார்கள்
   பல சிரமங்கள் இருந்தாலும் குழந்தையை தானே வளர்த்து வந்தார். ஆனால் அந்தக் குழந்தையும் நோய்வாய்பட்டு மறைந்து விட மனம் உடைந்து போனார் மார்ட்டின் . உண்மையில் இறைவன் என்ற ஒருவன் இருக்கிறானா என ஐயம் கொண்டார்
தன்னை சந்திக்க வந்த ஒரு சமயப் பரப்பாளரிடம் தன் துயரங்களையும் இறை பற்றிய மன நிலையையும் எடுத்துரைத்தார் மார்ட்டின்
அவரோ இறைவனை மறுக்க நமக்கு எந்த உரிமையும் கிடையாது . இறைவழியில் வாழ்வது நம் கடமை என்று அறிவுரை கூறினார் . மார்ட்டினின் மனதில் இது ஆழமாகப் பதிந்து ஒரு மாற்றத்தை உண்டு பண்ணியது .மறை நூல்களை வாங்கி வந்தார்
 தயக்கத்துடன் மறை நூலைப் படிக்கத்துவங்கினார். போகப்போக அதில் நாட்டம் அதிகமாகி அதில் மன அமைதியும் மகிழ்ச்சியும் அடைந்தார் . ஒரு நாள் மறை நூலில் இயேசு பிரானின் கால்களைத்தன் கண்ணீரால் ஒரு பெண் கழுவியது பற்றிபபடித்தார் .தன்னையே அந்தப்பெண்ணாக கற்பனை செய்து கொண்டு அப்படியே உறங்கி விட்டார்  
.உறக்கத்தில் ஒரு நினைவோட்டம் .” மார்ட்டின் உன்னைப்பார்க்க நான் நாளை வருவேன் “ என இறைவன் சொல்வது போல்-
  அடுத்த நாள் காலை ஒரு ஐயம் கலந்த பதற்றத்துடன் இறைவனை எதிர்பார்த்து சன்னல் ஓரமாக அமர்ந்திருந்த மார்ட்டின்

தெருவில் பனி அள்ளிக்கொண்டிருந்த ஒரு முதியவரை அழைத்து குளிருக்கு இடமாக சூடான தேனீர் கொடுத்து அன்பாக ஆறுதலாகபேசினார் .இறைவன் வருவது பற்றியும்சொன்னார் .உடலுக்கும் மனதுக்கும் இதமளித்த மார்ட்டினுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துச் சென்றார் அந்த முதியவர்

அடுத்து கைக்குழந்தயுடன் ஒரு பெண் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்த மார்ட்டின் அந்தப்பெண்ணுக்கு உணவும் உடையும் பணமும் கொடுத்து உதவி செய்தார். இறைவன் வருகை பற்றி அந்தப் பெண்ணிடமும் சொன்னார்
சிறுவன் ஒருவன் ஒரு மூதாட்டியிடம் திருடி மாட்டிக்கொண்டான் . மார்ட்டின் அவர்களிடம் போய் அன்பாகப்பேசி அவர்கள் சண்டையை தீர்த்து வைத்தார்
 இறைவன் வரவில்லை என்ற ஏக்கத்துடன் தூங்கி விட்டார் மார்ட்டின் .
அப்போது
 தான் அன்று உதவி செய்த மூவரும் ஒருவர் பின் ஒருவராய் வந்து
“ மார்ட்டின் நான்தான்   எனக்கு நீ  செய்தத உதவி  இறைவனுக்கு செய்த உதவி ” “ என்று சொல்வதை கேட்டார்  
உண்மையில் இறைவன் மூவர் வடிவில்  வந்து போனதையும் தான் இறைவனுக்கு நன்கு பணிவிடை செய்ததையும் அறிந்து மன நிறைவுற்றார்

இது ரசிய எழுத்தாளர் டால்ஸ்டாய் எழுதிய புகழ்பெற்ற கற்பனைக்  கதை ஒன்றின் சுருக்கமான மொழிமாற்றம்


அடுத்கு ஒரு வரலாற்று நிகழ்வு

அந்த மிக  நல்ல மனிதருக்கு ஒரு மிக மிக  நல்ல பழக்கம் .விருந்தாளி இல்லாமல் சாப்பிட மாட்டார்.. சுற்றம் நட்பு மட்டும்தான் விருந்தாளி என்று இல்லை . பசி என்று யார் வந்தாலும் அவர் விருந்தாளிதான்.அவரோடு சேர்ந்து உட்கார்ந்துதான் சாப்பிடுவார்
ஒரு நாள் இப்படி விருந்தாளியை எதிர்நோக்கி வெகு நேரம் காத்திருந்து ஒரு வழியாக வழிப்போக்கர் ஒருவரைக்கண்டு மகிழ்ந்து அவரை அழைத்து வந்து சாப்பிட இருவரும் உட்கார்ந்தனர்
தன் வழக்கப்படி இறைவனை புகழ்ந்து  வணங்கி விட்டுசாப்பிடத் துவங்கிய அந்த நல்லவர் விருந்தாளியிடம் நீங்கள் இறைவணக்கம் செய்யவில்லையா என்று கேட்க எனக்கு இறைவன் மேல் பெரிய நம்பிக்கை எல்லாம் கிடையாது என்று அவர் சொன்னார்
இறை வழியில் முழுமையாக இருந்த அந்த அன்பருக்கு கட்டுக்கடங்காத சினம் வந்து “இறை நம்பிக்கை இல்லாதவருக்கு என் வீட்டில் சாப்பாடு கிடையது “ என்று விரட்ட அந்த வழிப்போக்கர் பசியோடு எழுந்து போய்விட்டார்.
இப்போது அந்த நல்லவருக்கு குழப்பம் . தான் செய்தது சரியா , பசியோடு உணவு உண்ண உட்கார்ந்தவரை விரட்டி விட்டோமே இது மிக இழிவான செயல் அல்லவா ஏன் இந்தத் தடுமாற்றம் என்று பலவாராக எண்ண ஓட்டங்கள்
இந்த நிலையில் அந்த நல்லவரோடு இறைவன் பேசுகிறான்
“ மிகப்பெரிய தவறு செய்து விட்டிர்கள் . என் மேல் நம்பிக்கை கொள்ளாத அவருக்கு நான் அறுபது ஆண்டுகளாக உணவு அளித்து பாதுகாத்து வருகிறேன் .ஒரு வேளை உணவு அளிக்க உங்களால் முடியவில்லை .
அவர் நல்லவரா கெட்டவரா என்பதை படைத்த நான்தானே தீர்மானிக்க வேண்டும் ! உங்களுக்கு யார் அந்த உரிமையைக் கொடுத்தது
. .உங்களையும் அவரையும்  படைத்த ஏக இறைவன் அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் என்பது உங்களுக்கு மறந்து விட்டதா “
பதைபதைத்துப்போன அந்த நல்லவர் தாம் விரட்டிய முதியவரைத் தேடிக்கண்டுபிடித்து உணவருந்த வரும்படி அழைத்தார்..
பசியில் வாடியிருந்த அவர் உடனே வந்து உணவருந்தினார். பசி,, சோர்வு நீங்கியபின்  தங்கள் மனமாற்றத்துக்கு என்ன காரணம் என்று கேட்டார்
தனக்கு இறைவன் தெரிவித்ததை அவரிடம் எடுத்துச்சொல்ல அந்த முதியவர் கண் கலங்கி மனம் மாறி இதுவரை செய்த தவறுக்கு வருந்தி இறை நம்பிக்கையாளராக மாறி விட்டார்
நபி இப்ராஹீம் அலை அவர்கள் வாழ்வில் நடந்த நிகழ்வு இது . இறைவனே நட்பு கொள்ள விரும்பிய அந்த மாமனிதர் இப்ராஹீம் நபியின் சிறப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம் .
.இறைவன் ஆணையிட்டால் எதையும் இழக்கத் துணிந்த தியாகச்செம்மல். அந்த இறைவனையே கேள்வி கேட்ட பகுத்தறிவாளர்  கடும் தண்டனை கிடைக்கும் என்று தெரிந்தும் சிலை வணக்கத்தை எதிர்த்து போராடிய புரட்சியாளர் .இறைவன் உன்னை பலிகொடுக்கச் சொல்கிறான் இது பற்றி உன் கருத்தென்ன என்று சிறுவனாகிய தன மகனிடம் கேட்ட சமத்துவவாதி  இதற்கெல்லாம் மேல் அன்பும் பண்பும் இரக்க சிந்தனையும் நிரம்பியவர்
இத்தனை நற்குணங்கள் கொண்ட அந்த மாமனிதருக்கு இறைவன் மிகப்பெரும் சிறப்புகளை வழங்கியிருக்கிறான்
அவரை நினைவு கூறும் ஒரு கட்டாயக் கடமை- புனித ஹஜ் பயணம் , ஒரு தியாகத்திருநாள் , அவர் பெயரில் புனித மறை குர்ஆனில் ஒரு முழு அத்தியாயம் , ஒவ்வொரு தொழுகையிலும் அவர் பெயர் உச்சரிக்கப்படும் சிறப்பு புனித மறையாம் குரானில் அவர் பெயர் 69 இடங்களில் சொல்லப்படுவது  தாடி வளர்த்தல், மீசைகுறைத்தல் நகம் வெட்டுதல் போன்ற அவரின் வழிமுறைகள் இன்றளவும் பின்பற்றப்படுவது 
இப்ராகிம் நபி அவர்கள் வாழ்வில் ஒரு நிகழ்வு பற்றிப்பார்த்தோம். சிறிய நிகழ்வென்றாலும் உயர்ந்த வாழ்வியல் சிந்தனைகளைத் தருகின்றது
ஒன்று பசியென்று யார் வந்தாலும் உணவளிப்பது மனித நேயக்கடமை .அவர் இனம் என்ன மொழியென்ன, தேசமென்ன இதெல்லாம் ஆராயக்கூடாது
அடுத்து ஒரு மனிதனை நல்லவனா தீயவனா   இறை அருளுக்கு உரியவனா என்பதெல்லாம் தீர்மானிக்கும் உரிமை படைத்த ஏக இறைவனுக்கு  மட்டுமே உரியது .படைப்புகளான நமக்கு அந்த தகுதி கிடையாது   
இந்த நிகழ்வு பற்றி பலமுறை பலரும் கேட்டு, படித்து இருக்கலாம். நல்ல செய்திகளை எத்தனை முறை படித்தாலும் நல்லதுதான் 

கற்பனைக்கதையும் வரலாற்று நிகழ்வும் நமக்கு கற்பிக்கும் பாடம் இதுதான்
மக்கள் சேவையே இறைவன் சேவை
இதை முழுமையாக உணர்ந்து செயல்பட்டால் பல குழப்பங்கள் சண்டை சச்சரவுகள் போர்கள் நீங்கி வீடும் நாடும் உலகும் அமைதிப்பூங்காவாக மாறும்
மீண்டும் அடுத்த பகுதியில் சந்திப்போம்

வலைநூல் முகவரி
sherfuddinp.blogspot.com

B F W 14072019 sun








Saturday, 13 July 2019

English 51 CHICKEN GAME-







CHICKEN GAME

What is it ?

Chicken Game is dangerous game in which  two drivers drive towards each other in a collision course.

One must swerve or both may die in the crash

If one swerves and the other does not the driver who swerved is called a CHICKEN           meaning     Coward

This term is used by media to describe the confrontation between US and Iran



B F W 13072019 Wed










Wednesday, 10 July 2019

Photo Cloud





பறவைக்கூட்டம் போல் தவழும் மேகம்
Cloud or flock of Birds !!

10072019 B F W Wed

Tuesday, 9 July 2019

கடலூர்


SHERFUDDIN P sherfuddinp@gmail.com

7:45 PM (2 hours ago)
to SHERFUDDIN
கடலூர் பெருநகராட்சி எல்லை அறிவிப்பு பலகை கடலூர் நெல்லிக்குப்பம் சாலையில் செம்மண்டலம் பகுதியில் இருந்தது

இப்போது அதே சாலையில் கோண்டூர்
 அஞ்சல் அலுவலகம் தாண்டி சிறிது தொலைவில் புதிதாக ஒரு பலகை காணப்படுகிறது.(படம்)

பெருநகராட்சி எல்லை விரிவு படுத்தப்பட்டுள்ளதா?

சாவடி கோண்டூர் நகராட்சி எல்லையில் வருகிறதா?

இதற்கான அரசாணை அறிவிப்பு வெளியிடப்பட்டதா ;?

விளக்கம் கிடைக்குமா?s


B  F(K) W(K)  07092019 su

Saturday, 6 July 2019

ENGLISH 49 Hog






HOG-
One of the many meanings of the word is
TO GRAB MORE THAN ONE’S SHARE- particularly FOOD

ROAD HOG
One who drives recklessly without concern  for other drivers




Thursday, 4 July 2019

அத்தாவின் எழுத்துக்கள்5 படமும் பாடமும்





படமும் பாடமும்



வாணியம்பாடி முஸ்லிம் கல்லூரி மாணவர் சங்கத் தலைவர் கூறிய ஒரு செய்தி

வேலூர் தியசாபிகல் சங்கத் தலைவர் திரு சி ராஜகோபாலாச்சாரியார் என்று ஒரு வழக்கறிஞர் – குர் ஆன் ஹதீஸ் இன்னும் இசுலாமிய நூல்கள் அத்தனையும் நன்கு கற்றவர் .இவரை ஒருமுறை கல்லூரி மீலாது விழாவில் சிறப்புரையாற்ற அழைத்தோம் 
.
ஆழ்ந்த கருத்துக்களை அள்ளி அள்ளித்தந்தார் கேட்டோம் .முடிவில் புகைப்படம் எடுக்க அழைத்தோம் அதற்கு அவர் கூறிய விடை எங்களைத் தூக்கிவாரிப்போட்டது

உயிர்ப் பிராணிகள் உருவத்தை வரைவதும் சிலை செய்வதும் இறைவனுக்கு இணை வைப்பதற்கு அழுத்தம் திருத்தமாக கண்டித்துள்ள திரு நபி அவர்களின் நினைவு நாளில் அதுவும் அவரைப்பற்றி பேசிய என்னையா புகைப்படம் எடுத்துக்கொள்ள அழைக்கிறீர்கள்
வள்ளுவர் கூற்றுப்படி அவ்வாறு புகைப்படத்துக்கு இசைந்தால் என்னிலும் பேதையர் இல்லை

ஓதி உணர்ந்து பிறர்க் குரைத்தும் தாம் அடங்காப்
பேதையிற் பேதையர் இல் *
என்று நம்மில் சொல்லுக்கும் செயலுக்கும் பொருத்தமில்லா மாக்களை கண்டித்துள்ளார் வள்ளுவர்
 .
அவ்வாறிருக்க இனிப்பை அதிகம் சாப்பிட வேண்டாமென்று சிறு பையனுக்கு புத்தி கூறுவதற்காக தானே பலநாள் இனிப்பு உண்பதை நிறுத்திக்கொண்ட மகானைப் பற்றி பேசிவிட்டா நான் மனம் வேறு சொல் வேறு மன்னுத் தொழில் வேறு என்று நடந்து கொள்ள வேண்டும் என்று எங்களுக்கெல்லாம் சூடு கொடுத்தார்

அப்புறம் ஏன் நங்கள் போட்டோ எடுக்கப்போகிறோம் !

எங்கே எப்பொழுது நம் படங்கள் பத்திரிகைகளில் வெளி வரும் என்று ஏங்கித் திரிகிறோம்
எங்கெல்லாம் நம் படங்களைத் திறந்து வைப்பர்கள் என எண்ணமிட்டவாறு இருக்கிறார்கள் நம் தலைவர்கள்
மௌத் ஆனபின் புதைக்கும் இடத்தையே உறுதியாகக்கட்டகூடாதென்று உபதேசித்த நபி பிரானைப்பின்பற்ற்ய நாம் உயிருடன் இருக்கும்போதே ஞாபகச் சின்னங்கள் வைக்க ஏற்பாடு செய்து கொள்கிறோம்

இன்னும் திருமனாத்தில் பிறந்த நாளில், அறுபதாவது ஆண்டு விழாவில் மேளதாளங்கள், பாண்டு வாத்தியங்களுடன் பவனி வருகிறோம்

இது சரியா ?
திரு சி ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் சூடு நமக்கு ஒரு பாடமாக வேண்டாமோ

எழுத்தாக்கம்
ஹாஜி கா. பீர் முகமது
நகராட்சி ஆணையர் பணி ஓய்வு
(படம் என்றதும் படமெடுத்தாடினார் திரு. சி .ராஜகோபாலாச்சாரி என்ற தலைப்பை படமும் பாடமும் என்று மாற்றியிருக்கிறேன்

*குறள் 834)




வலைநூல் முகவரி
sherfuddinp.blogspot.com
F B W த 03072019 wed


Saturday, 29 June 2019

தமிழ் மொழி அறிவோம் 22. புதுப்புது அர்த்தங்கள்









 


22. புதுப்புது அர்த்தங்கள்




வெண்மையுடையார்
என்று யாராவது உங்களைப் பாராட்டினால் மயங்கி மகிழ்ந்து போகாதீர்கள் அது வஞ்சப்புகழ்ச்சியாக இருக்கலாம்

அதே போல் கம்னாட்டி என்ற சொல்லும் நீங்கள் நினைப்பது போல் அவ்வளவு கெட்ட சொல்  இல்லை

சென்னைதமிழுக்கு என்று ஒரு சிறப்பு உண்டு .
ஆங்கில மொழி, பிரெஞ்ச் மொழி தெலுங்கு உருது கன்னடம் என்ற பல மொழிகளின் தாக்கத்தை  சென்னைத்தமிழில் உணரலாம்

சென்னைதமிழில் புழங்கும் பல சொற்கள்  “ கெட்ட வார்த்தைகள்” என்று சொல்லப்படுகிறது
ஆனால் இணையத்தில் நான் கண்ட பதிவு ஒன்றில் பல சென்னைத்தமிழ்
“கெட்ட வார்த்தைகள் “ நல்ல சொற்கள்தான் என்று படித்தேன் .
படித்ததில் பிடித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்

அதே போல் வெண்மை என்ற சொல் தூய்மை, ஒளி போன்ற நல்லவற்றைச் சுட்டிக்காட்டும் சொல் என்றுதான் இது வரை எண்ணியிருந்தேன் . அந்தச் சொல்லுக்கும் ஒரு எதிர் மறைப்பொருள் அண்மையில் அறிந்தேன்
அது பற்றி பின்னால் சொல்கிறேன்
முதலில் சென்னைத்தமிழ் சொற்களைப் பாப்போம்

“கம்னாட்டி”
சொல்ல நாக்கூசும்  எழுத கை கூசும் ஒரு கெட்ட சொல்
ஆனால் இது ஒரு சொல்லே அல்ல . ஒரு ஆங்கில சொற்றொடரின் மருவிய ஒலிவடிவம்
ஆங்கிலோ இந்தியர்கள் குறும்பு செய்யும் குழந்தைகளை
கம் ஹியர் யூ நாட்டி
Come here you naughty
என்று அழைப்பார்களாம்
அதுதான் சுருங்கி உருமாறி ஒலி மாறி கம்னாட்டி என்று ஆனதாம்

கஸ்மாலம்
இதுவும் ஒரு இழிவான சொல்லாகக் கருதப்படுகிறது
வட மொழிச் சொல்லான இது அழுக்கு, அருவெறுப்பைக் குறிக்கும்

பேமானி
இது ஏமாற்றுப்பேர்வழியைக் குறிக்கும் உருது// பாரசீக மொழிச்சொல் பெய்மான் Beiman  என்பதன் ஒலி மாறிய வடிவம்

தாராந்(த்)துட்டான்
பொருளை, மானத்தை தொலைத்து விட்ட ஒருவரை நோக்கி தாராந்(த்)துட்டான் , என்பது சென்னை சொல் வழக்கு
தாரை வார்த்து விட்டான் என்பதன் மாறுபட்ட வடிவம் இது

ஜபுரு
பொய் சொல்வது பித்தலாட்டம் செய்வதே வழக்கமாகக் கொண்டிருப்பவரைப்பார்த்து  ஜபுரு காட்டதே என்று சொல்வது சென்னை மொழி வழக்கு
ஜபூர் என்பது வித்தைகள் செய்யும் மந்திரவாதியைக் குறிக்கும் உருது மொழிச் சொல்லாகும்
கூத்து ( கூத்திக்கோலி)
இது உட்காருவதைக்குறிக்கும்  கன்னட மொழிச் சொல் . சென்னைத்தமிழில் இது கூச்சு என்று வருகிறது
உட்காரு என்பதற்கான தெலுங்கு மொழிச் சொல்லான
குந்து என்பது அப்படியே சென்னை மொழியில் புழங்குகிறது
 நாஸ்தா – காலை உணவைக்குறிக்கும் இந்திச் சொல்
(அர்த்தம்தான் தெளிவாகி விட்டதே என்று யாரையும் கம்னாட்டி , பேமானி என்று கூப்பிட்டு வாங்கிக் கட்டிக்கொள்ளாதீர்கள் )

நிறைவாக
வெண்மை என்ற சொல் பற்றி
வெண்மை என்றால் மனதில் தோன்றுவது தூய்மை ,நேர்மைதான் .
இந்தச் சொல்லுக்கு அறிவின்மை  என்றொரு எதிர்மறைப்பொருள் இருக்கிறது


வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையாம்யாம் என்னும் செருக்கு      குறள் 844

தம்மைத்தாமே அறிவுமிக்கவராக எண்ணி செருக்கு கொள்வதே அறிவின்மை
என்ற பொருள் கொண்ட இக்குறளில்
வெண்மை என்பது அறிவின்மையைக் குறிக்கிறது

நாலடியாரிலும் வெண்மயுடையார் என்ற சொல் அறிவுக்குறைவு என்ற பொருளில் வருகிறது

பொன்னிறச் செந்நெல் பொதியோடு பீள் வாட
மின்னொளிர் கட்லுள்ளும் கான்றுகுக்கும்
வெண்மையுடையார் விழுச் செல்வம் எய்தியக்கால்
வன்மையும் அன்ன தகைத்து

பொன்னிறத்தில் உள்ள நெல்பயிர் மழைக்காக காத்திருக்கையில் மழை அங்கே பெய்யாமல் வீணாகக் கடலில் பெய்யும்
அதுபோல் வெண்மையுடையார் (அறிவில் குறைந்தவர்கள் ) தம் செல்வத்தால் செய்யும் உதவி பயனற்றுப் போகும்

(அப்போதே தண்ணீர் பிரச்சனை இருந்தது போலும் )

அடுத்து கம்பன்
வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்
திண்மை இல்லை நேர் செறுநர் இன்மையால்
உண்மை இல்லை பொய்உரை இலாமையால்
வெண்மை இல்லை பல் கேள்வி மேவலால்

கோசல நாட்டின் செல்வச் செழிப்பை கம்பன் விளக்கும்போது எதிர் மறைச் சொற்களை கையாள்கிறான்
கேள்வி ஞானம் நிறைந்த அந்த நாட்டில் வெண்மை (அறியாமை) இல்லையாம்
மேலும் தருமம் செய்பவர் யாரும் இல்லை வறுமை இல்லாததால்
போர் இல்லாததால் வலிமையை வெளிப்படுத்தவும் இடம் இல்லை
யாரும் பொய் சொல்வதில்லை எனவே உண்மையின் பெருமை தெரியவில்லை
வண்மை என்ற சொல் தருமம், அறம் என்ற பொருளில் வருகிறது

வண்மை இல்லை , திண்மை இல்லை உண்மை இல்லை வெண்மையும் இல்லை
கேட்க நன்றாகத்தான் இருக்கிறது
நம நாட்டிலும் நெய் வடியும் என்ற நம்பிக்கையோடு  




மீண்டும்  அடுத்த பகுதியில் சந்திப்போம்

வலை நூல் முகவரி
sherfuddinp.blogspot.com

B/F/W த/ 30062019 sun