Friday, 11 March 2016

வாழ்க்கைப்பயணமும் வங்கி அனுபவங்களும் 8.பிரான்மலை



 முல்லைக்கொடி படர தன் தேரைக் கொடுத்த வள்ளல் பாரி பற்றி கேள்விப்பட்டிருக்கலாம் .பாரி ஆண்ட இடம்தான் பிரான்.மலை. திருப்பத்தூரிலிருந்து பிறந்த பிள்ளைக்கு முடி எடுக்கவும் வேறு பல நேர்த்திக்கடன்களுக்காகவும் மக்கள் அடிக்கடி செல்லும் தர்கா இந்த மலைமேல் அமைந்துள்ளது.
தர்கா செல்வது சரியா அது இசுலாத்தில் அனுமதிக்கப்பட்டதா போன்ற பெரிய தலைப்புகளில் விவாதிப்பது என் நோக்கமல்ல.
சில இடங்களுக்கு நாம் வழமையாக சென்று வருவோம். ஆனால் அங்கு தங்க மாட்டோம். இவை காலத்தின் எல்லையைத்தாண்டி நம் மனதில் பதிவாகின்றன,
பிரான்மலையும் அப்படித்தான் ,சிறு வயதில் அடிக்கடி  பிரான் மலை சென்று வந்த நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.
மிக உயரமான மலை என்றாலும் ஒரு முறை கூட மேலே ஏறாமல் வந்த நினைவு இல்லை.
அதிகாலையில் வெய்யில் வருவதற்கு முன்பே மலை ஏறுவதற்கு ஏதுவாக இரவே அங்கு போய் அடிவாரத்தில் உள்ள மண்டபத்தில் தங்குவோம். .எப்படியும் நாற்பது பேருக்குக். குறையாமல் போவோம்..மிகவும் முடியாத முதியவர்கள் மட்டும் அடிவாரத்திலேயே தங்கி விடுவார்கள்.
அடிவாரத்தில் உள்ள ஒரு சிறிய உணவு விடுதியில் புளிச்சோறும் சாம்பாரும் சுவையாக இருக்கும்.
அதிகாலையில் மலை ஏறத் தொடங்குவோம்.ஒரு சிலஇடங்களில் மட்டுமே படி , பாதுகாப்பு கம்பிகள் . இருக்கும். மற்ற இடங்களில் மலைப்பாறையில்தான் ஏறிச் செல்ல வேண்டும் கையில் தண்ணீர் கொண்டு போவதெல்லாம் பழக்கம் இல்லை ஒரு சில இடங்களில்  சுவையான சுனை நீர் கிடைக்கும்
வாழைச்சுனை என்ற இடத்தில் மலை சற்று சம தளமாக இருக்கும். அங்குதான் காலை உணவு
பழைய கஞ்சிக்கு தொட்டுக்கொள்ள மொச்சையும் கருவாடும் போட்ட புளிக்குழம்பு சுண்ட வைத்தது . மிகவும் சுவையாக இருப்பதாகச் சொல்வார்கள்.( சின்ன வயதில் நான் பெரும்பாலும் அசைவம் , கார உணவுகளைத் தவிர்த்து விடுவேன் ) கையினால் பந்தி பரிமாறும் அழகே தனி….அதற்காகவே அவர்களுக்கு பெரிய கைகள் அமைந்தது போல் தோன்றும்.
சில இடங்களில் ஏற மிகவும் சிரமமாக இருக்கும். அங்கெல்லாம் குதறத் குதறத் என்று ஒலி எழுப்பி இறைவனின் பாதுகாப்பைத்தேடுவோம்.குதறத் .என்ற ஒரு பறவை அந்தப் பகுதிகளில் இருப்பதாகச்சொல்வார்கள் .
10 மணிக்குள் மேலே போய் விடுவோம்.அதற்கு முன்பே சிலர் போய் மதிய உணவு தயாரிக்கும் பணியில் மும்முரமாக இருப்பார்கள்.தேங்காய துருவுவதில் சிறுவர்கள்  மிகவும் ஆர்வம் காட்டுவார்கள். காரணம் தெரிந்ததுதான்..
தர்கா சற்று தொலைவில தனியாக இருக்கும். அங்குள்ள சுனையில் எல்லோரும் குளிக்க வேண்டும், துணிகளை நனைக்க வேண்டும் என்பது ஒரு மரபு.தர்காவுக்கு மேல் கூரை இருக்காது. கட்டினாலும் தங்காது என்று ஒரு செவி வழிச் செய்தி சொல்கிறது
நிறைய குரங்குகள் திரியும். குறும்புச் சிறுவர்கள்.சோற்றுக்குள் கறித்துண்டை வைத்து குரங்குகளுக்கு வீசுவார்கள். வாயில் வைத்துப்பர்த்து விட்டு துப்பி விட்டு கோபத்துடன் முறைக்கும் .அந்தக்காலத்தில் குரங்குகள் சுத்த சைவமாய் இருந்தன .இப்போது எப்படி என்று தெரியவில்லை.இன்னும் சிலர் சோற்றில் இஞ்சித்துண்டை வைத்து வீசி இஞ்சி தின்ற குரங்கின் முக அழகைப் பார்ப்பார்கள்.
அங்குள்ள ஒரு மரத்தின் விதைகள் அழகிய இரண்டு சிறகுகளுடன் காணப்படும் (Winged Seeds). மேலே தூக்கிப் போட்டால் அழகாகப் பறக்கும்.. அதன் பெயர் சற்று வித்தியாசமாக இருக்கும்.(மாமியா மயிர் பிடுங்கி)
மேலே ஏறியதும் சிறுவர்கள் பலர் தங்கள் பெயர்களைப் பாறையில் செதுக்கத துவங்கி விடுவார்கள் (பல ஆண்டுகளுக்குப்பின் ஹஜ் பயணத்தில் அரபாத் மலைக்குன்றில் இது போல் பல பெயர்கள் செதுக்கப்பட்டிருப்பதைப் பார்த்தபோது எனக்கு பிரான் மலையின் நினைவு வந்தது..)
மலைப்பாறையில் அங்கங்கே கிடைக்கும் நிழலில் படுத்து மலைத்தென்றல் தாலாட்ட கண் அயர்வது  இயற்கையின் மடியில் உறங்குவது போல் ஒரு சுகமான அனுபவம்
ஒரு கடினமான பாதையைக் கடந்து வந்தால் ஊமைத்துரை ஒளிந்திருந்த ஒரு குகையைக் காணலாம் .பச்சைப் பசேலென்று மரம் செடி கொடிகளோடு மிக அழகாக இருக்கும்.
வள்ளல் பாரி பற்றிய குறிப்புகளோ , அவர் ஆட்சி புரிந்ததற்கான சின்னனங்களோ பார்த்த நினைவில்லை
பிரான் மலைக்கு அருகில் சதுர் வேதி மங்கலம் என்ற ஊரில் அத்தாவின் நெருங்கிய இளவயதுத் தோழர் சண்முக சுந்தரம் குடியிருந்தார்.. இவரைப்பற்றி பல வேடிக்கையான செய்திகளை அத்தா சொல்லக்கேட்டிறரூக்கிறேன். அத்தா பணியாற்றிய பல ஊர்களில் இவரைப் பார்த்த நினைவு 
பல தடவை பலருடன் பிரான் மலை ஏறியிருக்கிறேன், எப்போதும் நல்ல கோடையில் பள்ளி விடுமுறையில்தான் போவோம். என் நினைவில் நிற்பவற்றை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
மகன் பைசலுக்கு முடிஇறக்கப் போயிருந்தோம் .தலை முடி இறக்கப்பட்டவுடன் கண்ணாடியில் தன் தலையைக்கண்டு வியப்புடன் தடவித் தடவிப் பார்த்தான்.
ஜென்னத் அக்கா மகன் வகாபுக்கும் மும்தாஜ் அக்கா மகன் ராஜா(பீர்)வுக்கும் முடியிறக்க   பொள்ளாச்சியில் இருந்து போனதாக நினைவு..நகராட்சி ஊழியர் சுப்பிரமணி எங்களோடு வந்திருந்தார். இளைஞரான அவர் எதோ மாடிப்படியில் ஏறுவது போல் பல தடவை மலைமேல் ஏறி இறங்கியது வியப்பாக இருந்தது,
அதே போல் ராஜாவை(மெல்லிய பிள்ளை) அவன் வாப்பத்தம்மா கூலிக்கு குழந்தையைத் தூக்கி வரும் பெண்கள் யாரிடமும் கொடுக்காமல் தானே தூக்கி வந்தது மற்றொரு வியப்பு..முத்தலிப் அண்ணன் மடியில் உட்கார வைத்து இரு குழந்தைகளுக்கும் முடியிறக்கப் பட்டது .
ஒரு பயணத்தில் அம்மா சுக்கு மல்லி காபி குடிக்கக் கொடுத்த ஒரு ரூபாயை உறவினா ஒருவரிடம் கொடுத்து சுக்கு மல்லி காபி வங்கிக் குடித்து விட்டு அம்மாவிடம் சொல்ல அவரிடம் கொடுத்தால் மீதி வராதே என்று திட்டு வாங்கினேன்.(காபி விலை இரண்டு அல்லது மூன்று காசுகள் என நினைவு)
உறவினர் ஒருவர் கமிசனர் மக்கள்தான் மெஜாரிடியாகத் திரிகிறார்கள் என்று நக்கலாகச் சொல்ல  அருகில் இருந்த பீ.மு. மாமா தன்னை மறந்து  கோபத்தில் கண் சிவந்து சற்றும் சிந்திக்காமல் ஓங்கி ஒரு அறை விட்டதில் பொறி கலங்கி கண்ணீர் விட்டு நின்றார் அந்த நக்கலர். அவர் யார் என்று எனக்குத் தெரியாது. ஆனல் இன்றும் அவர் முகம் என் மனதில் படம்போல் தெளிவாகப் பதிந்து நிற்கிறது.(இது எந்தப் பயணத்தில் என்பது நினைவில்லை)
C H என்று அழைக்கப்படும் அமீது அண்ணன் நேர்த்திககடனுக்காக பிரான் மலை செல்ல ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கையில் அவர் மகன் அண்ணாதுரை வாகன விபத்தில் உயிரிழந்தது ஒரு சோக நிகழ்வு.
ஒரு முறை மலையேறி இறங்கி வந்த களைப்பு தீருவதற்குள் அன்று மாலையே எனக்கு .தம்பி சகாவுக்கு, மாமா மக்கள் சக்கரவர்த்தி, பீருக்கு சுன்னத் செய்ய ஏற்பாடு செய்தது அத்தாவின் அதிரடி நடவடிக்கைகளில் ஓன்று..மடமடவென்று ஆளுக்கு ஒரு புது வேட்டி துணி எடுத்து சட்டை தைத்து அரை மணி நேரத்தில் வாங்கப்பட்டது.-வெளிர் பச்சை நிறத்தில் மிக மெல்லிய சட்டைத்துணி என்பது இன்னும் நினைவில் நிற்கிறது.
வழக்கத்திற்கு மாறாக அரசு மருத்துவமனையில் செய்வதென்று முடிவு செய்து வயதில் மூத்தவரான சக்ரவர்த்திக்கு முதலில் செய்யப்பட்டது. அவர் அல்லா அல்லா என்று அலறியது சீதேவி தண்ணீரில் எதிரொலித்து ஊர் முழுதும்  அலை அலையாய் பரவியதில் எல்லோரும் அரண்டுபோய் மற்றவர்களுக்கு மரபுப்படி மாலியை வைத்தே செய்யப்பட்டது..
இறுதியாகப் பிரான் மலை போனது ஓன்று குப்பி மகன்  வக்கீல் ஜனாப்  அஜ்மீர் அலியுடன் போனது. அடுத்து மைத்துனர் பீர் முகமது தன் பிள்ளைகளுக்கு முடியிறக்கப் போனபோது
அதற்கப்புறம் எனக்குத்தெரிந்து சுற்றத்தில் யாரும் பிரான் மலை போன நினைவில்லை..தர்காகளுக்கு போகும் பழக்கமே நின்று விட்டதாகாச் சொல்ல முடியாது. எளிதாக செல்லக்கூடிய மற்ற இடங்களுக்குச் செல்கிறார்கள்.
ஒரு இனிய, எளிதான மலை ஏறும் அனுபவம் அடுத்தடுத்த தலை முறையினருக்கு கிடைக்காமல் போய் விட்டது. இது ஒரு மிகப்பெரிய இழப்பாக எனக்குத் தோன்றுகிறது.
ஒரு மலை ஏறும் பயிற்சி முகாம் என்றால் ஆயிரக்கணக்கில் செலவழித்து, அது போக சிறப்பு உடைகள் காலணிகள்,உபகரணங்கள் என்று வாங்க வேண்டியிருக்கிறது.. இது எதுவுமே இல்லாமல் எளிதாக எல்லா வயதினரும் மலை ஏறி இறங்கி வந்தோம்.. என் நினைவுக்கு எட்டி யாருக்கும் காயமோ மற்ற உடல் நலக் குறைவோ ஏறபடவில்லை.  
கடந்த பகுதி பற்றி மெகராஜ் அக்கா படித்து முடிக்கவில்லை என்று தெரிவித்திருந்தது  அந்தப்பகுதி அவ்வளவு சலிப்பூட்டியதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது குறைகளைத தெரிவித்தால் அவற்றைக் களைய முயற்சிப்பேன்.
மைத்துனர் சிராஜுதீன் பொருளும் நடையும் மிக நன்றாக இருக்கிறது என்று முக நூலிலும் தொலைபேசியிலும் பாராட்டினார். அவருக்கு நன்றி.
திருக்குறள் பற்றிய வினாவுக்கு  மெகராஜ் அக்காவிடமிருந்து “ஜோதியிடமே கேள் “ என்ற பதில் வினா வர “ஏற்கனவே கேட்டு விட்டேன் “ என்று பதில் சொல்லியிருந்தேன்,
மகள் பாப்டி தொடர் நன்றாகப் போவதாகவும் குறள் பற்றிய வினாவுக்கு விடை தெரியவில்லை என்றும் தெரிவித்தது பாராட்டுக்கு நன்றி
பேறுகாலம் என்பது ஒரு மாரத்தான் ஓட்டம் போல உடல்,மனம் உணர்ச்சிகள் அனைத்துக்கும் மிகபெரிய அளவில் சக்தி தேவைப்படும் ஒன்று., ஒரு நீண்ட தூர ஓட்டம் போல் உடலெங்கும் ஒரு மிகப் பெரிய அளவில் தாங்க முடியாத வலி ஏற்படும்.
அதற்கு மாற்றாக இறைவன் கொடுத்த வரம் –மூளையில் சுரக்கும் சில வேதிப்பொருட்கள் எண்டோர்பின்ஸ் ,பீட்டா எண்டோர்பின்ஸ் இவை போதை மருந்துகளைப்போல் உடல் வலியை மாற்றி ஒரு இனம் புரியாத பரவசத்தை மேனியெங்கும் பரவச் செய்கின்றன
இயற்கையின் போதைப்பொருட்களான( அபின் போன்ற )இவை குருதி ஓட்டத்தில் கலக்கும்போது ஏற்படும் அந்தப் பரவச இன்ப உணர்வுதான் வள்ளுவப் பெருந்தகை குறிப்பிடும் உவப்பு.
திருக்குறள் அறிவியல் சார்ந்தது என்பதைக் குறிப்பிடவே இந்த விளக்கம்.  .    
(வர்மக்கலை முதுநிலைப்படிப்பில் சிறப்பு சொற்பொழிவாற்றிய மருத்துவர் செம்மலின் உரையின் அடிப்படையில் வலையில் தேடிப் பிடித்தது }
இ(க)டைச்செருகல்
புட்டபருத்தி சாயி பாபா அறக்கட்டளை நடத்தும் கல்வி நிறுவனங்களில் ஆரம்பக் கல்வி முதல் முதுநிலைக்கல்வி வரை படிப்பு, உணவு உறைவிடம் அனைத்தும் கிட்டத்தட்ட முற்றிலும் இலவசமாகக் கிடைக்கிறதாம்.(சாதி மத பேதம் இல்லை ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லை என்கிறார்கள்))
ஏன் நாமும் அது போன்ற ஒரு முயற்சியில் இறங்கக்கூடாது? நல்ல முயற்சிகளுக்கு பணம் ஒரு பெரிய தடைக்கல் இல்லை .நூறு பேர் ஆளுக்கு ஆயிரம் ருபாய்  போட்டால் ஒரு லட்சம் .ஆயிரம் பேர் பத்தாயிரம் போட்டால் ஒரு கோடி. பத்தாயிரம் பேர் லட்சம் போட்டால் நூறு கோடி. 
இறங்கி வேலை செய்ய நம்மிடையே சமூக உணர்வு கொண்டவர்களுக்குப் பஞ்சம் இல்லை மழை வெள்ளத்தில் ராஜா நௌஷாத் ரபீக் இவர்களின் சேவையைப் பார்த்தோம். ஷஹா போன்ற கல்வியாளர்களும்..சேக் பீர் சாகுல் போன்ற சட்ட வல்லுனர்கள் நிறைய இருக்கிறார்கள் ,
தேவை ஒரு நல்ல துவக்கம் மட்டுமே. விதயைப்போட்டு வைத்தால் அது இறைவன் அருளால் ஆலமரம் போல் பரந்து விரிந்து இமயம் போல் உயர்ந்து வளரும்,
சற்று சிந்திப்போம் செயலில் துணிந்து இறங்குவோம்.
இந்தச் செய்தியை முகநூல், கட்டுரையில் பரப்பவும் கட்செவி குழு நிர்வாகிகள் தங்கள் குழுவுக்குப் பரப்பவும் வேண்டுகிறேன்,
(மலை பற்றி எழுதியதும் மனதில் உயந்த எண்ணங்கள் உதிக்கின்றனவோ?)
                                பயணம் தொடரும்

blog address

sherfuddinp.blogspot.com

No comments:

Post a Comment