Saturday 29 June 2019

தமிழ் மொழி அறிவோம் 22. புதுப்புது அர்த்தங்கள்









 


22. புதுப்புது அர்த்தங்கள்




வெண்மையுடையார்
என்று யாராவது உங்களைப் பாராட்டினால் மயங்கி மகிழ்ந்து போகாதீர்கள் அது வஞ்சப்புகழ்ச்சியாக இருக்கலாம்

அதே போல் கம்னாட்டி என்ற சொல்லும் நீங்கள் நினைப்பது போல் அவ்வளவு கெட்ட சொல்  இல்லை

சென்னைதமிழுக்கு என்று ஒரு சிறப்பு உண்டு .
ஆங்கில மொழி, பிரெஞ்ச் மொழி தெலுங்கு உருது கன்னடம் என்ற பல மொழிகளின் தாக்கத்தை  சென்னைத்தமிழில் உணரலாம்

சென்னைதமிழில் புழங்கும் பல சொற்கள்  “ கெட்ட வார்த்தைகள்” என்று சொல்லப்படுகிறது
ஆனால் இணையத்தில் நான் கண்ட பதிவு ஒன்றில் பல சென்னைத்தமிழ்
“கெட்ட வார்த்தைகள் “ நல்ல சொற்கள்தான் என்று படித்தேன் .
படித்ததில் பிடித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்

அதே போல் வெண்மை என்ற சொல் தூய்மை, ஒளி போன்ற நல்லவற்றைச் சுட்டிக்காட்டும் சொல் என்றுதான் இது வரை எண்ணியிருந்தேன் . அந்தச் சொல்லுக்கும் ஒரு எதிர் மறைப்பொருள் அண்மையில் அறிந்தேன்
அது பற்றி பின்னால் சொல்கிறேன்
முதலில் சென்னைத்தமிழ் சொற்களைப் பாப்போம்

“கம்னாட்டி”
சொல்ல நாக்கூசும்  எழுத கை கூசும் ஒரு கெட்ட சொல்
ஆனால் இது ஒரு சொல்லே அல்ல . ஒரு ஆங்கில சொற்றொடரின் மருவிய ஒலிவடிவம்
ஆங்கிலோ இந்தியர்கள் குறும்பு செய்யும் குழந்தைகளை
கம் ஹியர் யூ நாட்டி
Come here you naughty
என்று அழைப்பார்களாம்
அதுதான் சுருங்கி உருமாறி ஒலி மாறி கம்னாட்டி என்று ஆனதாம்

கஸ்மாலம்
இதுவும் ஒரு இழிவான சொல்லாகக் கருதப்படுகிறது
வட மொழிச் சொல்லான இது அழுக்கு, அருவெறுப்பைக் குறிக்கும்

பேமானி
இது ஏமாற்றுப்பேர்வழியைக் குறிக்கும் உருது// பாரசீக மொழிச்சொல் பெய்மான் Beiman  என்பதன் ஒலி மாறிய வடிவம்

தாராந்(த்)துட்டான்
பொருளை, மானத்தை தொலைத்து விட்ட ஒருவரை நோக்கி தாராந்(த்)துட்டான் , என்பது சென்னை சொல் வழக்கு
தாரை வார்த்து விட்டான் என்பதன் மாறுபட்ட வடிவம் இது

ஜபுரு
பொய் சொல்வது பித்தலாட்டம் செய்வதே வழக்கமாகக் கொண்டிருப்பவரைப்பார்த்து  ஜபுரு காட்டதே என்று சொல்வது சென்னை மொழி வழக்கு
ஜபூர் என்பது வித்தைகள் செய்யும் மந்திரவாதியைக் குறிக்கும் உருது மொழிச் சொல்லாகும்
கூத்து ( கூத்திக்கோலி)
இது உட்காருவதைக்குறிக்கும்  கன்னட மொழிச் சொல் . சென்னைத்தமிழில் இது கூச்சு என்று வருகிறது
உட்காரு என்பதற்கான தெலுங்கு மொழிச் சொல்லான
குந்து என்பது அப்படியே சென்னை மொழியில் புழங்குகிறது
 நாஸ்தா – காலை உணவைக்குறிக்கும் இந்திச் சொல்
(அர்த்தம்தான் தெளிவாகி விட்டதே என்று யாரையும் கம்னாட்டி , பேமானி என்று கூப்பிட்டு வாங்கிக் கட்டிக்கொள்ளாதீர்கள் )

நிறைவாக
வெண்மை என்ற சொல் பற்றி
வெண்மை என்றால் மனதில் தோன்றுவது தூய்மை ,நேர்மைதான் .
இந்தச் சொல்லுக்கு அறிவின்மை  என்றொரு எதிர்மறைப்பொருள் இருக்கிறது


வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையாம்யாம் என்னும் செருக்கு      குறள் 844

தம்மைத்தாமே அறிவுமிக்கவராக எண்ணி செருக்கு கொள்வதே அறிவின்மை
என்ற பொருள் கொண்ட இக்குறளில்
வெண்மை என்பது அறிவின்மையைக் குறிக்கிறது

நாலடியாரிலும் வெண்மயுடையார் என்ற சொல் அறிவுக்குறைவு என்ற பொருளில் வருகிறது

பொன்னிறச் செந்நெல் பொதியோடு பீள் வாட
மின்னொளிர் கட்லுள்ளும் கான்றுகுக்கும்
வெண்மையுடையார் விழுச் செல்வம் எய்தியக்கால்
வன்மையும் அன்ன தகைத்து

பொன்னிறத்தில் உள்ள நெல்பயிர் மழைக்காக காத்திருக்கையில் மழை அங்கே பெய்யாமல் வீணாகக் கடலில் பெய்யும்
அதுபோல் வெண்மையுடையார் (அறிவில் குறைந்தவர்கள் ) தம் செல்வத்தால் செய்யும் உதவி பயனற்றுப் போகும்

(அப்போதே தண்ணீர் பிரச்சனை இருந்தது போலும் )

அடுத்து கம்பன்
வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்
திண்மை இல்லை நேர் செறுநர் இன்மையால்
உண்மை இல்லை பொய்உரை இலாமையால்
வெண்மை இல்லை பல் கேள்வி மேவலால்

கோசல நாட்டின் செல்வச் செழிப்பை கம்பன் விளக்கும்போது எதிர் மறைச் சொற்களை கையாள்கிறான்
கேள்வி ஞானம் நிறைந்த அந்த நாட்டில் வெண்மை (அறியாமை) இல்லையாம்
மேலும் தருமம் செய்பவர் யாரும் இல்லை வறுமை இல்லாததால்
போர் இல்லாததால் வலிமையை வெளிப்படுத்தவும் இடம் இல்லை
யாரும் பொய் சொல்வதில்லை எனவே உண்மையின் பெருமை தெரியவில்லை
வண்மை என்ற சொல் தருமம், அறம் என்ற பொருளில் வருகிறது

வண்மை இல்லை , திண்மை இல்லை உண்மை இல்லை வெண்மையும் இல்லை
கேட்க நன்றாகத்தான் இருக்கிறது
நம நாட்டிலும் நெய் வடியும் என்ற நம்பிக்கையோடு  




மீண்டும்  அடுத்த பகுதியில் சந்திப்போம்

வலை நூல் முகவரி
sherfuddinp.blogspot.com

B/F/W த/ 30062019 sun



Sunday 16 June 2019


நலவாழ்வு  4
மன அழுத்தம்
16 Jun 2019
டென்க்ஷன்
ஸ்ட்ரெயின்
ஸ்ட்ரெஸ்
என பல சொற்களில் வலம் வரும் மன அழுத்தம் பற்றியும் அதை குறைக்கும் எளிய வழிமுறைகள் பற்றியும்  பிப்ரவரி மாதம் பார்த்தோம்
4 மாத இடை வெளி
எனவே ஒரு சுருக்கமான மீள்பார்வை
மன அழுத்தம் குறைய
தண்ணீர் ,
இசை ,
தோட்ட வேலை,
மனம் திறந்த பேச்ச
ு போன்ற எளிய வழிகள் பற்றிப் பார்த்தோம்
இன்னும் சில எளிய வழிகள்
ஊஞ்சல்
ஊஞ்சலில் ஆடுவது மன அழுத்தத்தை பெருமளவில் குறைக்கும்
  தொட்டிலில் ஆடுவது போல்
இளமை நினைவுகள் திரும்பி மனம் ஊஞ்சல் ஆடுவதால் அழுத்தம் குறைகிறதாம்
மெழுகுவர்த்தி ஒன்றைப் பற்றவைத்து நீங்கள் உட்காரும் இருக்கைக்குப் பின்னால் பாதுகாப்பாக வைத்து விடுங்கள்
அறையின் மற்ற விளக்குகளை அணைத்து விட்டு தளர்வாக அமருங்கள்
மெழுகு வர்த்தியின் ஒளி பரவப்பரவ
மன அழுத்தம் நன்கு குறையும்
முடிந்தால் அருகில் உள்ள பள்ளி அல்லது முதியோர் காப்பகம் சென்று அங்குள்ளவர்களிடம் மனம் விட்டுப் பழகிப்பேசலாம்
முறையான பயிற்சி  பெற்றவர்கள
மட்டும்
தியானம் இறை வணக்கம்  யோகா மூச்சுப் பயிற்சி செய்து மன அழுத்தத்தை குறைத்து அமைதி பெற முயற்சி செய்யலாம்
பிடித்த தலைப்பில் உள்ள நூலை ஆழ்ந்து படித்தால் மனம் அமைதியடையும்
அழுத்தப் புள்ளி ( அகு பிரஷர் பாயிண்ட்) பற்றி சென்ற பகுதியில் குறிப்பிட்டிருந்தேன்
கை மணிக்கட்டுக்கு சற்று கீழே உள்ள இந்தப்புள்ளி பற்றியும்
இன்னும் சில பொதுவான உடல் நலத்துக்கான
புள்ளிகள் பற்றியும்
அடுத்த பகுதியில்
வலை நூல் முகவரி
sherfuddinp.blogspot.com
B / FB/ W 16!062019 sun
 


Sunday 9 June 2019

வண்ணச்சிதறல் 42



வண்ணச்சிதறல் 42
மண்டபம்  இராமேசுவரம்
அரசு அதிகாரி ஒருவர் தொடரியில் பயணித்து தான் பணிபுரியும் ஊரில் இறங்கி தன் அலுவலகம் நோக்கி நடக்கிறார்
கூட்டம் அதிகம் இல்லாத தொடரியில் தான் இருந்த அதே பெட்டியில் வந்த ஓரு பயணி தன் பின்னால் தொடர்ந்து நடந்து வருவதை உணர்கிறார்
அலுவலகம் சென்று தன் அறையில் இருக்கையில் அதிகாரி அமர்ந்தவுடன் பின் தொடர்ந்து வந்தவர் முறையாக அனுமதி பெற்று அறைக்குள் வந்து உட்காருகிறார்
அதன்பின் தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார்
அந்த அலுவலகத்தை ஆய்வு செய்ய வந்த ஆங்கிலேய உயர் அதிகாரி அவர்
உள்ளூர் அதிகாரி வியப்புடன் கேட்கிறார்
நாம் தொடரியில் ஒன்றாகவே பயணித்தோம் . என்னைப் பின்தொடர்ந்து அலுவலகம் வந்தீர்கள்
என்னை அழைத்திருக்கலாம் பேசியிருக்கலாமே என்று
அதற்கு அந்த ஆங்கிலேய அதிகாரி
அது முறையோ பண்போ நாகரிகமோ ஆகாது.
அரசு அலுவலாக வந்த நான் அதிகாரியான உங்களை அலுவலகத்தில் உங்களை சந்தித்துப் பேசுவதுதான் சரி
என்று சொன்னார்
ஆங்கிலப் பண்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த நிகழ்வு பற்றி எங்கள் தந்தை (அத்தா) பலமுறை சொல்லக் கேட்டிருக்கிறேன்
ஆங்கிலேய ஆட்சியில் இராமேசுவரம் மண்டபம் பகுதியில் ஊராட்சி நிர்வாக அதிகாரியாக இருந்த போது அத்தா சந்தித்த நிகழ்வு
இது
 
இதேபோல் அங்கு நடந்த இன்னொரு நிகழ்வு பற்றியும் அத்தா சொன்னதுண்டு
கோவில் திருவிழாவில் முதல் மரியாதையும் பரிவட்டமும்
தேர்வடம் பிடிக்கும் முதல் உரிமையும் அத்தாவுக்குத்தானாம்
உள்ளூர் அதிகாரி என்ற முறையில் அத்தாவுக்கு அளிக்கப்பட்ட மரியாதைகள் இவை
இவர் வேற்று மதத்தவர் என்ற உணர்வு எதிர்ப்பு எதுவும் வந்ததாய் அத்தா சொன்னதில்லை
இப்படி சாதி மத வேறுபாடின்றிதான் வளர்ந்தோம் வாழ்ந்தோம் வாழ விரும்புகிறோம்
எனக்கு பெரிய நட்பு வட்டம் கிடையாது
ஆனால் இருக்கும்  நண்பர்களில் ஒரு சிலரே என் மதம் சார்ந்தவர்கள்
இறை மறுப்பாளர்கள்
பல தெய்வக்கொள்கை உடையவர்கள்  எனப் பலரும் என் நண்பர்களாக பல்லாண்டுகளாக இருக்கிறார்கள்
புனித குர்ஆனில் ஒரு அழகான வசனம்
"அது அவர்கள் வழி
இது உங்கள் வழி"
என் மதக்கோட்பாடுகளில் அவர்களோ  அவர்கள் வழியில் நானோ குறுக்கிடுவது இல்லை
இன்னும் எனக்கு இனிமையாக பசுமையாக நினைவில் நிற்கிறது ஒரு தொடரி பயணத்தில் நாங்கள்
ரம்சான் நோன்பு நோற்றிருந்தோம்
நோன்பு திறக்கும் நேரம் நெருங்கியதும் எங்களுடன் யயணித்த மற்றவர்கள்  எங்களுக்கு இடம் கொடுத்து வேறு இடத்தில் போய் அமர்ந்ததும் நாங்கள் கேட்காமலே தண்ணீர் கொடுத்ததும்
ஆம்பூர் பெதெஸ்தா மருத்துவ மனையில் தன் மகள் பேறுகாலத்துக்கு வந்த ஒருவர் நடு இரவில் போதிய பணம் இல்லாமல் தவிக்க முன்பின் தெரியாத இசுலாமியர் ஒருவர் பணம் கொடுத்து உதவிய நிகழ்வு
மனதை நெகிழ வைத்தது
இப்படி அசைபோட எத்தனையோ இனிய நினைவுகள்
காலப்போக்கில் நடந்த சில நிகழ்வுகள் மனதை மிகவும் பாதித்தன
"இந்துக்களே இந்துக்கள் கடையிலேயே பொருட்கள் வாங்குங்கள்"
என மிகப்பெரிய அளவிலான சுவர் அறிவிப்பை நான் பார்த்தது ஈரோட்டில் என நினைவு
ஓகோ இப்படி எல்லாம் கூட இருக்கிறதா என்ற எண்ணம்
வருத்தம் தோன்றியது
அடுத்து ஒரு உறவினர் வீட்டில்.
அன்று ஆயுத பூசை என நினைவு
அண்டை வீட்டிலிருந்து பொறிகடலை கொடுத்து விட்டிருந்தார்கள்
உறவினர் வீட்டுக் குழந்தைகள்
ஆறு ஏழு வயது இருக்கும்
" இது வேறு மதத்தினர் கொடுத்தது. நாங்கள் சாப்பிட மாட்டோம் "
என்று சொல்லி  பொறிகடலையைத் தொடவே இல்லை
இந்தப்பிஞ்சு உள்ளங்களில் நச்சை விதைத்தது
யார்?
எனக்குப் புரியவில்லை
சமூக வலைதளங்களில் வரும் பதிவுகள் மனதை வலிக்க வைக்கின்றன
நன்கு படித்து  உயர் பதவியில் இருப்பவர்கள் கூட தயங்காமல் பிறர் மனம் புண்படும் வகையில் இழி சொற்களையும் கருத்துக்களையும் பதிவு செய்கிறார்கள்
சுட்டிக்காட்டினால்
உன் வேலையை பார்த்துக் கொண்டு போ என்பது போல் பதில்
இவர்களிடமிருந்து விலகிப்போவதுதான் ஒரே வழி
அவர் பச்சைத் தமிழரா இவர் இந்துவா இன்னும் அந்தணரா போன்ற ஆராய்ச்சிகளில் ஆக்க சக்தி  வீணடிக்கப் படுகிறது
இன்னும் நிறைய எழுதிக்கொண்டே போகலாம்
ஒரே ஒரு கருத்துடன் நிறைவு செய்கிறேன்
ராமுக்கும் ரகீமுக்கும் இடையே எந்த காழ்ப்புணர்ச்சியும் பகையும் கிடையாது
தங்களது சொந்த ஆதாயங்களுக்காக
நச்சை விதைத்து உரம் போட்டு வளர்ப்பது யாராக இருந்தாலும் அவர்களை இனம் கண்டு கொண்டு புறக்கணித்து ஒதுக்கித் தள்ளி ஒழிக்க வேண்டும்
இ(க) டைச்செருகல்
ஆங்கிலப் பண்பாடு பற்றிப்பார்த்தோம்
தேவையில்லாமல் நினைவில வருகிறது
உலகக்கோப்பை மட்டைப்பந்து தமிழ் வர்ணனை
அதிகமா ஒலிக்கும்
அவன் இவன் போன்ற சொற்கள்
என்ன பண்பாடு என்று தெரியவில்லை
இறைவன் நாடினால் மீண்டும்
சந்திப்போம்
வலை நூல் முகவரி
sherfuddinp.blogspot.com
B/f/FB 09062019 sun