பதவி உயர்வு என்பது மகிழ்ச்சியானதுதான். அதுவும்
முப்பத்திநான்கு வயதில் அரசுடமை வங்கியில் மேலாளர் நிலைக்கு உயர்த்தப்பட்டது ஒரு
கொண்டாடக்கூடிய நிகழ்வுதான். ஆனால் இனைந்து வந்த இடமாற்றம் அதுவும் வடமநிலமாகிய
பீகாருக்கு எனும்போது சற்று வயிற்றில் புளியைக் கரைத்து மகிழ்ச்சியை
மட்டுப்படுத்தி விட்டது.
இதுவரை மும்பையைத் தாண்டி சுற்றுலா கூடப்
போனதில்லை. ஒரு வார்த்தை கூட இந்தி தெரியாது (நன்றி இந்தி எதிர்ப்பு போராட்டம்)
இதற்கெல்லாம் மேல் பீகாரில் ஏற்கனவே பணி அனுபவம் உடைய என் நண்பரும் வழி காட்டியுமான
எங்கள் கிளை மேலாளர், “ உங்களுக்கெல்லாம் பீகார் ஒத்து வராது பாய். சற்று ஆபத்தான
இடம். படகில் போகையில் ஆற்றில் பிடித்து தள்ளி விடுவார்கள் .ஆற்றில் நிறைய
முதலைகள் இருக்கும்” என்று பயமுறுத்தி விட்டார்./
ஒரே குழப்பம், பதவி உயர்வு வேண்டாம் என்று
சொல்லி விடலாமா அல்லது இன்னும் ஒருபடி மேலே (கிழே ) போய் எழுத்தராக பதவி இறக்கம்
பெற்று விடலாமா என்று பல்வேறான சிந்தனைகள். ஆனால் பதவி உயர்வு வேண்டாம் என்ற எண்ணத்திற்கு என் குடும்பத்திலேயே யாரும் ஆதரவு
தரவில்லை. குறிப்பாக அதிகம் பேசாத என் பத்து வயது மகன் தன் கடுமையான எதிர்ப்பை
மௌனமாக வெளிக்காட்டினான்..அப்பாவிடம் கலந்து ஆலோசித்தபோது மிகதெளிவாக உறுதியாகச்
சொன்னார் “வேலை என்று வந்து விட்டால் பதவி உயர்வு வேண்டாம் .பீகார் என்றால்
போகமாட்டேன் என்று சொல்வது மிகப்பெரும் தவறு அதற்கு பேசாமல் வேலையை விட்டு விட்டு
வேறு ஏதாவது வழியைப்பார்.” என்று சொல்லிவிட்டார் (அவர் சொல்ல நினைத்து சொல்லாமல் விட்டது- வேலையை
விட்டால் வேறு என்ன தெரியும் உனக்கு)
சரி இடமாறுதல் ஏதாவது கிடைக்குமா என்று முயற்சி
செய்ய சென்னை வட்ட அலுவலகம் சென்று மனித வளத்துறை அதிகாரிகளை சந்தித்துப்
பேசினேன்..வழக்கம்போல் மிகக்கனிவாக
முடியாது என்று சொல்லிவிட்டார்கள். சிவான்
ஒரு நல்ல இடம் என்று நினைக்கின்றேன் என்று ஒரு அதிகாரி சொன்னார். உங்களுக்கு
எப்படித் தெரியும் நீங்கள் வட மாநிலங்களில் பணி புரிந்ததுண்டா என்று கேட்டேன்.
அதற்கு அவர் இல்லை இல்லை சிவான் என்ற பெயர் பெரிதாக ஊடகங்களில் அடிபடவில்லை அதனால் வெள்ளம் ,வன்முறை , கலவரம்
போன்ற நிகழ்வுகள் ஏதும் அங்கே இல்லை என்று எண்ணத்தோன்றுகிறது என்று ஒரு புதிய
சித்தாந்த விளக்கம் கொடுத்தார்,(தற்காலத் த தமிழகம் குற்றமற்ற மாநிலமாக விளங்குவது
நினைவுக்கு வருகிறது.) அவருக்கு என் நன்றியைத்தெரிவித்து விட்டு அடுத்து என்ன
செய்வது என்று சிந்தித்தேன்..
சிவான் கிளை கல்கத்தா வட்டத்தின் கீழ் வருகிறது..
எனவே கல்கத்தா வட்ட அலுவலகம் சென்று அந்த வட்டதின் கீழ் வரும் வேறு கிளைக்கு
மாற்றல் பெற முயற்சித்துப் பார்ப்போம். அப்படிக் கிடைக்காவிட்டால் அருகில்தான்
சிவான் இருக்கும் அதையும் பார்த்து விட்டு வந்து விடுவோம் என்ற எண்ணத்தில்
கல்கத்தாவுக்கு பயணச்சீட்டு முன்பதிவு செய்து புறப்பட ஆயத்தம் செய்தேன்..
முன்பே குறிப்பிட்டது பல இது வரை வட இந்தியாவுக்கு
சுற்றுப்பயணம் கூடப் போனது கிடையாது. இந்தியும் சுத்தமாகத் தெரியாது..ஏற்கனவே
ஓரளவு அறிமுகமான ஒரு அலுவலர் கல்கத்தாவில் பணி
புரிந்து வருகிறார். அவருக்கு நான் கல்கத்தா வரும் நாள் நேரத்தைத் தெரிவித்து,,
தொடர் வண்டி நிலையத்தில் வந்து சந்திக்கும்படி கேட்டுக்கொண்டேன்,
பயண நாள் வந்தது. மிகக்குறைவான சுமையுடன்
(அதுதான் மனச்சுமை நிறைய இருக்கிறதே) தொடர் வண்டியில் ஏறினேன்.அரசுப்பணியில்
இருந்து ஒய்வு பெற்ற ஓருவர் என் சக பயணியாக வந்தார். அவரிடம் பேசியபோது நான்
பீகார் செல்வதாகக் கூறினேன். எதோ சிறைதண்டனை பெற்ற கைதியிடம் கேட்பது போல் எத்தனை
ஆண்டு என்றார்.
பயணம் இனிதே முடிந்து அடுத்த நாள் காலை ஹவுரா
நிலையத்தில் இறங்கினேன். கூட்டம் என்றால் அப்படியொரு கூட்டத்தை நான் அன்று வரை
பார்த்ததில்லை. அந்தக்கூட்டத்தில் என்னை
சந்திக்க வந்த நண்பரைப் பார்க்க முடியாமல் போய்விட்டது, அவரும் காத்திருந்து
பார்த்து விட்டுப் போய்விட்டார்.. எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.
நடைமேடையில் இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்து சுமைகளை இறுகப்பற்றிகொன்டேன்.
எவ்வளவு நேரம் அப்படியே இருப்பது ஏதாவது செய்தாகவேண்டுமே.
இவ்வளவு பெரிய நகரில் ஆங்கிலம் பேசும் யாரவது கிடைப்பார்கள் அவர்களிடம் வழி
கேட்கலாம் என்று முடிவு செய்து துணிந்து நடைமேடையை விட்டு வெளியே வந்தேன் .. சுற்றுலாப்பயணிகள்
வழிகாட்டு மையம் ஒன்று கண்ணில் பட்டது .அங்கிருந்த ஊழியரை தயக்கத்துடன் அணுகினேன்.
மிக அழகான ஆங்கிலத்தில் கனிவுடன் பேசினார்..தமிழர்கள் நடத்தும் தங்கும் விடுதிக்கு
வழி கேட்டேன். கல்கத்தாவின் வரைபடம் ஒன்றைக் கையில் கொடுத்து மிகத்தெளிவாக வழியை
விளக்கினார்..
அவருக்கு என் நன்றியைத் தெரிவித்து விட்டு அவர்
சொன்னபடி சிற்றுந்தில் பயணித்து விடுதிக்கு பக்கத்தில் இறங்கினேன். விடுதியில்
குளித்து சிற்றுண்டியை முடித்து வட்ட அலுவலகத்திற்கும் என் நண்பர் பணி புரியும்
அலுவலகத்திற்கும் வழி கேட்டுக்கொண்டு புறப்பட்டேன் . நல்ல வேலையாக இரண்டு
அலுவலகங்களும் அருகருகே இருந்ததோடு விடுதியில் இருந்தும் தொலை தூரத்தில் இல்லை.
நண்பரை சந்தித்து விட்டு வட்ட அலுவலகம் சென்று
அங்கு ஒரு தமிழ் நண்பரைப் பார்த்து பேசி விட்டு வட்ட அலுவலகத்தின் உயர் அதிகாரியை
சந்தித்தேன். கிளை மாற்றித்தரும்படி கோரிக்கை வைத்தேன். மிக நட்புடன் ஒன்றரை மணி
நேரம் என்னுடன் உரையாடினார். இறுதியில் சிவான் மிக நல்ல இடம், நன்கு
வளர்ச்சியடையும் கிளை. அங்கு போனால் விரைவில் பதவி உயர்வுகள் கிட்டும் என்று ஆறுதல் கூறியதோடு எந்த சூழ்நிலையிலும்
குடும்பத்தை விட்டுப் பிரியாமல் இருங்கள் என்று அறிவுரையும் கூறி அனுப்பி வைத்தார்/.
சரி கல்கத்தா வரை வந்து விட்டோம், அருகில்தான்
சிவான் இருக்கும் அதையும் போய்ப் பார்த்து விடலாம் என்று எண்ணி, நண்பருடன்
தொடர்வண்டி நிலையத்திற்குப் போய் விசாரித்தால் ஒரு அதிர்ச்சி. கல்கத்தாவிலுருந்து
சிவானிற்கு விரைவு வண்டியில் சுமார் ஒரு நாள் பயணம்.
அடுத்த நாள் பயணத்திற்கு முன் பதிவு செய்து
விட்டு அன்று இரவையும் அடுத்த நாளையும் கல்கத்தா தமிழ் நண்பர்களுடன் கழித்துவிட்டு
சிவான் பயணத்தைத் துவக்கினேன். குளிர்பதப்பெட்டி என்பதால் பயணம் மிக சுகமாக
இருந்தது.
மாலை ஆறு மணியளவில் சிவானில் இறங்கிய எனக்கு
கண்ணைக்கட்டிக் காட்டில் விட்டது போல் இருந்தது. மாவட்டத்தலைநகரான சிவானில்
எங்கும் இருள்.. அங்கங்கே நாடாத்திரி விளக்குகள் இருட்டை விலக்க
முயற்சித்துக்கொண்டிருந்தன. தமிழ் நாட்டில் மின் வெட்டு என்ற ஒன்றை யாரும்
கண்டிராத அந்தக்காலகட்டத்தில் இந்தசூழ்நிலை எனக்கு இனம்புரியாத உணர்சிகளை
உண்டாக்கியது.
இதற்கிடையில் வங்கிகிளை அடைக்கப்படுமுன் அங்கு
போய்ச்சேர வேண்டும் என்ற பரபரப்பில் தொலைபேசி மூலம் வங்கிகிளையைத் தொடர்பு கொள்ள
முயற்சித்தேன். மொழிப்பிரச்சனையால் அதுவும் முடியவில்லை. எப்படியோ எந்த மொழியோ
பேசி ஒரு சைக்கிள் ரிக்க்ஷா பிடித்து
வங்கிகிளையை அடைந்தேன்,கிளை திறந்திருந்தது. இறைவனுக்கு நன்றி செலுத்தி
விட்டு மாடிப்படியில் ஏறி கிளை மேலாளரைச்சந்திதேன்,
அகமும் முகமும் மலர உற்சாகமாய் வரவேற்ற அவர்
மற்ற அதிகாரிகளை அறிமுகம் செய்து வைத்தார். கிளை மேலாளர் குஜராத்திக்காரர்., ஏழு
அதிகாரிகளில் ஒருவர் தமிழ்நாடு ;ஒருவர் கர்நாடகா ஒருவர் ஒரிசா ஒருவர் வங்காளி
ஒருவர் ஆந்ரா இருவர் பிகாரிகள் என ஒரு குட்டி இந்தியாவே அங்கிருந்தது..ஓரளவு மனம்
சமாதானம் அடைந்தது.
தமிழ் நாட்டுக்காரர் தங்கியிருந்த விடுதியில்
ஒரு அறையில் தங்கிக்கொண்டேன். அடுத்த ஓரிரு நாட்களில் பள்ளிக்கூடம் பற்றி
விசாரிக்க ஆரம்பித்தேன், என் மகன் மகள் படிக்கும் வகுப்பில் ஆங்கில வழிக்கல்வி
அந்த ஊரிலேயே இல்லை என்பது அறிந்து
மிகுந்த மனச்சோர்வு ஏற்பட்டது..
ஒரு வாரப்பொழுதை எப்படியோ ஓட்டி விட்டேன் .மனம்
இருப்புக்கொள்ளாமல் தவித்தது. எப்படியாவது ஊர் போய் குடும்பத்தைப் பார்க்க
வேண்டும் என்ற எண்ணம் மிகுந்தது. தமிழ் நண்பருடன் கலந்தாலோசித்தேன்.. இவ்வளவு
விரைவில் ஊருக்குப் போக வேண்டுமா என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.,போகத்தான்
வேண்டும் என்றால் கல்கத்தா வழியாக முன்பதிவு இல்லாமல் போக முடியாது, கல்கத்தாவை
விட குறைந்த தூரத்தில் உள்ள ஒரு கோரக்பூர் சந்திப்புக்கு சிவானில் இருந்து சற்று
எளிதாக தொடர் வண்டியில் போய் விடலாம்.அங்கிருந்து தமிழ் நாட்டுக்கு பல வண்டிகள்
போகின்றன என்று சொன்னார்.
கிளை மேலாளரிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு
பயணத்தைத் தொடங்கினேன். நண்பர் சொன்னபடி கோரக்பூர் மிகப்பெரிய சந்திப்பாகத்தான்
இருந்தது.கோட் டய்யில் வாட்ட சாட்டமாக இருந்த நிலைய மேலாளரை அணுகினேன். நான்
ஆங்கிலத்தில் பேச அவர் இந்தியில் பதில் பேச இப்படியே இருபது நிமிடம் ஓடி விட்டது.
இதைப்பார்த்துக்கொண்டிருந்த கொண்டிருந்த தமிழ் நாட்டை சேர்ந்த படை வீரர் என்
உதவிக்கு வந்தார். இன்னும் சிறிது நேரத்தில் சென்னைக்கு ஒரு வண்டி இருக்கிறது.
அதில் கூட்டம் அதிகம்.இல்லை பயணச்சீட்டு
வாங்கி வண்டியில் உட்காருங்கள்..இடையில் பரிசோதகரிடம் கேட்டு படுக்கும் வசதி
வாங்கிக்கொள்ளலாம் என்று சொன்னார்.. அவர் சொன்னபடி ஒரு வழியாக் பயணத்தை முடித்து
சென்னை வந்து சேர்ந்தேன்.
தம்பி வீட்டுக்குப்போய் அப்பாவைப் பார்த்து விட்டு
குடும்பத்தைப் பார்க்க கிளம்பினேன்.மிகநட்பாக இருந்த வீட்டு உரிமையாளர்
பயமுறுத்தும் பாணியில் வீட்டை உடனே காலி
செய்யச்சொன்னார். பள்ளிகள் திறக்கும் நாள் நெருங்கி விட்டது, எனவே சொந்த ஊரில்
அப்பாவின் வீட்டில் வாடகைக்கு இருந்தவர்களை காலி செய்யக் கேட்டுக்கொண்டு அந்த
வீட்டில் குடியேறினோம். சொந்த ஊர் என்பதால் பள்ளியில் இடம் எளிதாக வாங்க
முடிந்தது. சொந்த ஊரில் வசிக்கும் முதல் அனுபவம் எனக்கு. என் மனைவியின் வீடும்
அருகில் இருந்ததால் பாதுகாப்பு பிரச்சனை இல்லை . இரண்டு மாதங்களுக்கு மேல்
விடுப்பில் இருந்தேன். இட மாற்றல் எதுவும் கிடைக்காது என்று ஒரு முடிவு
தெரிந்ததும் தனியே சிவான் போவது என்று முடிவு செய்து சென்னை போய் கல்கத்தா வழியாக
சிவான் போய்ச் சேர்ந்தேன்
இந்தக்கதையின் கருவையும் பெயர் தெரியாத
கதாநாயகனையும் பற்றி விவரிக்குமுன் சிவானைப்பற்றியும் பிகாரைபற்றியும் சில செய்திகள், அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள
விரும்புகிறேன்,
*கனிம வளம், நீர் வளம் மக்கள் வளம் நிறைந்த
அந்தப்பகுதி உடல் நலத்துக்கு மிகவும் உகந்த இடம். சிவானில் இருந்து விடுமுறையில்
ஊருக்கு வந்தபோது என்னைச்சந்தித்தவர்கள் பத்து வயது குறைந்ததுபோல் தெரிவதாகச்
சொன்னார்கள்.. குறிப்பாக நரை முழுதும் மாறி தலைமுடி கருப்பாகி விட்டது, *உணவுப்பொருட்கள்
விலை மிக மலிவு. இரண்டு ரூபாய்க்கு அளவில்லாமல் சோறும் சப்பாத்தியும் சாப்பிடலாம்.
விடுமுறை நாட்களில் பாணி பூரி சாப்பிடப் போவோம்.. பாணி பூரி தயிர் வடை எல்லாம்
போதும் போதும் என்கிற அளவுக்குச் சாப்பிட்டாலும் ஒரு இரண்டு ரூபாய்க்கு மேல் வராது
*மிக அன்பாக, நட்புடன் பழகும் மக்கள். சிவானில் ஏழு மாதம் பணி புரிந்து விட்டு
மாற்றலாகிப் போகையில் கிளையில் உள்ள அத்தனை ஊழியர்களும் தொடர் வண்டி நிலையத்திற்கு
வந்து வழியனுப்பி வைத்தார்கள். *வெளி
மாநிலத்தில் பணிபுரியும்போது சில பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
சிவானில் எனக்கு மிகப் பெரிய பிரச்சனையாக இருந்தது குளிர்.நடுக்கும் குளிர்
என்றால் அதுதான்.. இரவில் படுக்கும்போது தலையில் கம்பளித்தொப்பி உடலில் சட்டைக்கு
மேல் கம்பளி ஆடை கைகால்களில் கம்பளி உறை கால் முழுதும் மறைக்கும் ஒரு உள்ளாடை
அதற்குமேல் முழுக்கால்சட்டை அணிந்து படுக்கையில் மெத்தைக்குமேல் ஒரு கம்பளி
விரித்து மேலே மெத்தை போல் இருக்கும் ரசாயைப் போர்த்திக்கொண்டு படுப்பேன். அதையும்
மீறிக் குளிர் வாட்டி எடுக்கும்.இவ்வளவு குளிரிலும் உடல் சுகவீனம் எதுவும் ஏற்படவில்லை..சிவானில்
வாங்கிய கம்பளி ஆடைகள் முப்பது ஆண்டுகள் கழிந்தும் இன்றும் அணியும் நிலையில்
உள்ளன
*.அந்தக்குளிரிலும் நாள் தவறாமல் பச்ச்சைத்தண்ணீரில் குளித்தது ஒரு சுகமான
அனுபவம்.
*மின்சாரம் மிகவும் அரிதான ஒன்று..இரவு
பன்னிரண்டு மணியில் இருந்து ஒரு மணி நேரத்துக்கு மட்டும் மின் விநியோகம்
இருக்கும். வங்கிகள், அலுவலகங்கள் வசதியான வீடுகள் வர்த்தக நிறுவனங்கள் தங்கும்
விடுதிகள் உணவகங்கள் எல்லாவற்றிலும் ஜெனரேட்டர் ஓடிக்கொண்டே இருக்கும். *சிவான் ஒரு குற்றப்பகுதியாக அறிவிக்கப்பட்ட
இட(Declared crime belt) என்று கேள்விப்பட்டேன். *செலவச்செழிப்பும்
வறுமையும் ஒரு சேரக் காட்சி அளிக்கும் இடம்.
இப்போது கதையின் கருவுக்கு வருகிறேன்..தொடர்ந்து
ஆறு நாட்கள் வங்கி விடுமுறை,. சக ஊழியர்கள் அனைவரும் தம் ஊர்களுக்குப்போய்
விட்டார்கள்.. சமீபத்தில் ஊர் போய் திரும்பியிருந்த நான் தனிமையில்
மாட்டிக்கொண்டேன். குளிர் முடிந்து இளவேனில் பருவம் தொடங்கும் இதமான பருவ நிலை.
காலை சிற்றுண்டியை முடித்து விட்டு ஒரு
நடைப்பயணம் சென்றேன். வழியில் திரை அரங்கு ஒன்று கண்ணில் பட நுழைவுச்சீட்டு வங்கி
உள்ளே போய் அமர்ந்தேன். படம் ஆரம்பிக்க இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் என்பது போல்
ஒரு செய்தி கிட்டியது. சரி இன்னும் சற்று நேரம் நடக்கலாமே என்று வெளியே வந்தேன்,
திரை அரங்கு வாசலில் எலுமிச்சை சாறு கலந்த கருப்புதேணீர் விற்றுக்கொண்டிருந்தார்கள்.
இதமான குளிரில் சூடான் தேநீர் சுவையாக இருந்தது/
ரசித்துக்குடித்து விட்டு பணம் கொடுத்து
விட்டு நடக்கத்தொடங்கினேன்/ சிறிது நேரத்தில் யாரோ என்னைப் பின் தொடர்வது போல் ஒரு
உணர்வு. திரும்பிப்பார்த்த எனக்கு மூச்சே நிற்பது போல் இருந்தது நெடிது வளர்ந்து
உழைப்பில் உரமேறிய ஒரு உருவம் –இடையில் லங்கோடு மட்டும்அணிந்து என்னை நோக்கி
வேகமாக வந்து கொண்டிருந்தது.. தேநீர்க்கடைக்காரர் என்னைத்துரதுகிறார் என்பது
புரிந்து என் நடையை ஓட்டமாக மாற்றினேன்,.
மனதில் என்னென்னமோ எண்ணஓட்டங்கள் – மொழி தெரியாத
புது இடத்தில அனாதையாக உயிரிழக்கப்போகிறோம் .என்னசெய்தோமோ தெரியவில்லை .. பெரிதாக
எதோ தவறு நிகழ்ந்திருக்கிறது இல்லாவிட்டால் இப்படி நம்மைத்துரத்தி வர மாட்டார். எதேனும் அசம்பாவிதமாக் நடந்தால்
குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்கக்கூட யாரும் இல்லையே என்று ஒரு பரிதவிப்பு.
இதற்குமேல் ஓட முடியாது என்ற நிலையில்
மனதைதேற்றிக்கொண்டு நின்றேன்..வேகமாக வந்த அவர் என்னைப்பார்த்து பெரிய கும்பிடு
போட்டார். சரி இந்த ஊர் வழக்கம் போலிருக்கிறது- பலி கிடாவுக்கு மாலை போடுவது போல்
கும்பிட்டு விட்டுத்தான் அடிப்பார்கள்
போலும் என்று எண்ணினேன். அவர் என் கையில்
ஐம்பது பைசா நாணயதைத் திணித்து விட்டு வந்த வேகத்தில் திரும்பி விட்டார்...
என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்ள எனக்கு
சில நொடிகள் தேவைப்பட்டதன ...நான் குடித்த தேனீரின் விலை ஐம்பது காசு. நான் ஒரு
ரூபாய் கொடுத்து விட்டு வந்து விட்டேன். சில்லரைபாக்கியை கொடுப்பதற்காக
தேநிருக்ககக் காத்திருக்கும் கூட்டத்தைப் புறக்கணித்து விட்டு சுமார் பத்து
நிமிடங்கள்.என் பின்னால் வந்திருக்கிறார்.
இந்தத்தெளிவு வந்தபோது ஏற்பட்ட உணர்ச்சிகளை
என்னால் சீரணிக்கவும் முடியவில்லை.வர்ணிக்கவும் வார்த்தை இல்லை நூறு சதவீதம்
நேர்மையான ஒரு மனிதர் தான் அப்படிபட்டவர் என்ற ஒரு உணர்வு கூட இல்லாத ஒரு
வெள்ளந்தியான ஆத்மா – அந்ததேநீர்க்காரர் என் மனதில் இமயம் போல் உயர்ந்து
நின்றார்..என்னென்னமோ அவரைப்பற்றி தப்பாக வீண் கற்பனை செய்து. நன்றி சொல்லக்கூட
வாய் வராமல் விதிர்துப்போன நான் கூனிக் குறுகி உணர்ந்தேன்.,
அற்பமாக நாம் எண்ணக்கூடிய ஒரு ஐம்பது காசால்
பிகாருக்கும் இந்தியாவுக்கும் ஏன் மனித குலத்துக்கே பெருமை தேடித்தந்த அந்த
தேநீர்க்காரர் இந்த நிகழ்வு நடந்து
முப்பது ஆண்டுகள் கழிந்தும் என் நெஞ்சில் நிறைந்து நிற்கிறார்..
பெயர் தெரியாத அந்த மாமனிதருக்கு என் பாராட்டுதான் இந்தக்கதை.
, . .
.
. .
Effective narration with simple language. We get a feeling as if we are there. Good work. Continue..
ReplyDeleteமிக்க நன்றி
ReplyDeleteமிக்க நன்றி
ReplyDeleteDear Sir,
ReplyDeleteStill u r writing? Interesting narration. I'm a native of Karaikudi!
Siraj
20/07/2017