Tuesday, 10 February 2015

என்றும் இருபத்தியொன்று




ஆச்சி மெஸ் என்றால் தெரியாதவர்கள் அந்தப்பகுதியில் அரிது. மாதம் முப்பத்தி ஐந்து ரூபாயில் வாரம் இருமுறை அசைவத்தோடு மூன்று வேலையும் வயிறாரா உணவு என்பது அந்தக் காலகட்டத்தில் (அறுபதுகளில்)( வியப்பான செய்தி அல்ல.
ஆனால் ஆச்சி மெஸ்ஸுக்கு சில பல சிறப்புகள் உண்டு, ஒன்று ஆச்சியின் கைமணம். ஆச்சி ரசம் வைத்தல் கூட ஊரே மணக்கும், அடுத்து ஆச்சியின் தாயன்போடு கூடிய உபசரிப்பபு. பணத்துக்காக மட்டும் அல்லாமல் உணவளிப்பதை ஒரு சேவையாக எண்ணி மலர்ந்த முகத்துடன் வயிறும் மனமும் குளிரும்படி பரிமாறுவார்.
ஆச்சிக்கு மெஸ் நடத்தி சம்பாதிக்க வேண்டும் என்றெல்லாம் இல்லை. கணவர் வெளிநாட்டில் கை நிறைய சம்பாதிக்கிறார்.. அவர் அனுப்பும் பணத்திலேயே பாதிக்குமேல் மிச்சம் பிடித்து நகைநட்டு, நிலம் நீச்சு வாங்குவது வட்டிக்கு விடுவது என்று பெருக்குவதோடு தர்ம காரியங்களுக்கும் நன்றாக செலவு செய்வார். ஒரே மகன் விடுதியில் தங்கிப் படிக்கிறான்.
கடல் போல் பரந்து விரிந்த வீடு. உருப்படாத ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்டு அவன் ஓடிப்போய்விட படிப்பு வராத மகளுடன் வந்து ஆச்சி வீட்டில் ஒட்டிக்கொண்ட ஒன்று விட்ட நாத்தனார் –இவைதான் ஆச்சி மெஸ் ஆரம்பிக்க மூல காரணங்கள்.
ஆச்சி மெஸ்ஸின் எழுதப்படாத எளிமையான ஆனால் கடுமையான சட்டங்கள் சில :
மாணவர்களுக்கு அனுமதி இல்லை ;
 மாத ஊதியம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் முன்னுரிமை.
வெற்றிலை,பாக்கு சிகரட்டுக்குத் தடை
உறக்கப்பேசுவது, கெக்கலிப்பது கூடாது
இரவு எட்டரை மணிக்கு மேல்,யாருக்கும் அனுமதி இல்லை..
இப்படி விளையாட்டுபோல் நான்கு பேருடன் ஆரமிக்கப்பட்ட மெஸ் குறுகிய காலத்தில் வேகமாக வளர்ந்து நாற்பது பேரின் சாப்பாட்டுக் கூடமாக மாறியது.அதற்கு மேலும் வளரும் .ஆனால் ஆச்சி இது போதும் என்று ஒரு வரையறை வைத்துக்கொண்டார்
தெளிர் நீரோடையாகப் போய்க்கொண்டிருந்த மெஸ்ஸில் புதிதாக ஒரு அரசு அதிகாரி வந்து சேர்ந்தார். கண்ணியமான தோற்றம், அமைதியான பேச்சு அடக்கமான சுபாவமாக இருந்த அவரை ஆச்சிக்கு மிகவும் பிடித்து போயிற்று. முன்பணம் கொடுக்கையில் மிகவும் கூச்சத்தோடு தனக்கு காலை உணவு ஏழரை மணிக்கெல்லாம் தேவைப்படும் என்றும் சற்று அதிகமாக வேண்டியிருக்கும் என்று தெரிவித்தார். “அதற்கென்ன ஏழு மணியளவில் இட்லி தயாராகிவிடும் வந்து வயிற்ருக்கு வஞ்சகம் செய்யாமல் நன்றாக சாப்பிடுங்கள் “என்றார் ஆச்சி வரப்போகும் பிரச்சனையை உணராமல்,.
அடுத்த நாள் காலை சரியாக ஏழு பதினைந்துக்கு கொக்குபோல் சத்தமில்லாமல் வந்தார் புதியவர்.. வயிற்றுப்பசி முகத்தில் தெரிந்தது. உட்காரவைத்து இலை போட்டு தண்ணீர் வைதது இட்லி தட்டை வைத்து விட்டுப பொடி எண்ணை எடுக்கப்போனார்ஆச்சி. அதற்குள் அவர் வெறும்  இட்லி ஒன்றை சாப்பிடத்தொடங்கி விட்டார். சற்றுபொறுங்கள் இதோ எண்ணை பொடி.ஒரு நிமிடத்தில் சட்னி சாம்பார் எல்லாம் ரெடி ஆகிவிடும் என்று சொல்லி விட்டுத்திரும்புவதற்குள் இரண்டு இட்லியை இலையில் வைத்து தாரளமாக எண்ணையை மட்டும் ஊற்றிக்கொண்டு சாப்பிட்டார்.. அடுத்து மூன்று இட்லியை இலையில் அழகாக அடுக்கி எண்ணை பொடியில் குளிப்பாட்டி சுவைத்தார். அதற்குள் சுடச்சுட சட்னி ரெடியாகி விட்டது.அதன் துணையோடு நாலு இட்லி அடுத்து சாம்பாருடன் ஐந்து என்று காலி பண்ணினார். கடைசியாக ஒரு ஆறு இட்லியை இலையில் வைத்து அணை கட்டினார். வெள்ளம்போல் சாம்பாரை ஊற்றி அதன் மேல் சட்னி பிறகு பொடி எண்ணை என்று ஊற்றி நிதானமாக ஒவ்வொரு விள்ளலாக ரசித்து சுவைத்து சாப்பிட்டார். பிறகு ஒரு \ஒரே ஒரு குவளை காபி.
ஆச்சிக்கு லேசாக தலை சுற்றியது. ஒன்று , இரண்டு ,மூன்று என்று எண்ண ஆரம்பித்தார். பிறகு சே சே எங்கேயோ சரியான சாப்பாடு கிடைக்காமல் நாக்கு செத்துப்போய் வந்திருக்கிறார். சுவையான உணவில் மயங்கி முதல் நாள் என்பதால் நிறைய சாப்பிட்டார். போகப்போக சரியாகிவிடும் என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திகொண்டார்..  
ஆனால் ஆச்சியின் கணக்கு பொய்த்துப்போனது. முதல் நாளைப் போலவே வரும் எல்லா நாட்களும் இருந்தன இட்லியோ தோசையோ சரியாக இருபத்தொன்று அதற்கு கூடவும் மாட்டார் குறையவும் மாட்டார். ஆச்சிக்கு மெதுவாக ஒரு பய உணர்ச்சி தோன்றியது. இப்படியே விட்டால் அவர் ஒரு மாதத்திற்கு கொடுக்கும் பணம் காலை சிற்றுண்டிக்கே பத்தாது.. அதற்கும்  மேல் இவரைப்போல் இன்னும் சிலபேர் சாப்பிட ஆரம்பித்தால் மெஸ் பெருத்த நஷ்டத்தில் போய் மூட வேண்டிய நிலை வந்து விடும்.
ஆச்சியும் நேரடியாகவும் மறைமுகமாகவும் சொல்லிப்பார்த்தார். அவர் அதையெல்லாம் காதில் வாங்கவே இல்லை. அவர் சாப்பிட வந்தால் கண்டுகொள்ளாமல் முகம் திரிந்து நோக்குவது ; இட்லி வைத்து விட்டு சட்னி சாம்பார் பரிமாறாமல் விட்டு விடுவது,; இருபத்தயொன்று இட்லிகளை மொத்தமாக் அவர் இலையில் கொட்டுவது என்று பல முயற்சிகளை ஆச்சி கையாண்டு பார்த்தார். ஆனால் அவரோ விடாக்கண்டன் கொடாக்கண்டனாக இருந்தார் .
சரியாக காலை எழு இருபத்துக்கு உள்ளே நுழைபவர் தன் இலக்கான இருபத்திஒன்றை கர்ம சிரத்தையுடன் முடிக்காமல் நகர மாட்டார்..அதற்காக மதியம் இரவெல்லாம் குறைத்து சாப்பிட மாட்டார்..
இந்தா அந்தா என்று ஒரு மாதம் முடியப்போனது. ஆச்சி யோசித்து யோசித்து இறுதியாக ஒரு வழி கண்டுபிடித்தார்..
அன்று விடுமறை நாள் மதியம். சாப்பாடுக்கூடம் நிரம்பியிருந்தது. ஆச்சி நேராக அந்தப் புதியவரிடம் போனார். ஒரு பெரிய கும்பிடு போட்டு “அண்ணா என்னை மன்னியுங்கள். இதோ நீங்கள் கொடுத்த முன்பணம் . இது வரை நீங்கள் சாப்பிட்டது இந்த தங்கை கொடுத்த விருந்தாக இருக்கட்டும் தயவு செய்து இத்துடன் விட்டுவிடுங்கள் “என்று அழாக் குறையாக கூறி பணத்தை அவர் முன் வைத்தார்.
ஒரு நிமிடம் திகைத்து நின்ற அந்தப் புதியவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. பணத்தை அங்கேயே விட்டு விட்டு விருட்டென்று வெளியே போய்விட்டார்.. ஆச்சிக்கு வருத்தம் கலந்த ஒரு நிம்மதி.
ஆச்சி மெஸ்ஸின் எழுதப்படாத சட்டங்களில் ஒரு புதிய சேர்க்கை- காலை சிற்றுண்டி எண்ணிக்கை ஏழைத்தான்டக் கூடாது .
புதியவர் கொடுத்த பணத்தை ஆச்சி சற்றும் தயங்காமல் தர்மத்துக்கு கொடுத்துவிட்டார்..      
 
  


No comments:

Post a Comment