பெரியாரின் ஊரான ஈரோடைத் தெரியாதவர்கள் இருக்க
முடியாது. .ஈரோடு என்றதும் ஒரு நகைசசுவைத் துணுக்கு நினைவுக்கு வருகிறது .(அத்தா
சொல்லக் கேட்டது என எண்ணுகிறேன்) மதுரைக்குப் புதிதாய் வந்த ஒருவர் தான் செல்ல
வேண்டிய இடத்திற்கு ஒரு கடையில் வழி கேட்கிறார். .கேரளத்தைச் சேர்ந்த கடைக்காரருக்கு
தமிழ் சரியாக வராது. இருந்தாலும் வழி கேட்டவருக்கு உதவி செய்யும் ஆர்வத்தில்
“ஈரோடு போய் திரிச்சி வரணும்”“என்கிறார்.
வழி கேட்டவருக்கு வியப்பும் சினமும். மதுரையில் உள்ள ஒரு இடத்திற்கு வழி
கேட்டால் இவர் ஈரோடு திருச்சி என்கிறாரே நம்மைக் கேலி செய்கிறாரோ என்ற எண்ணம்.
கடைக்காரர் சொன்னதில் தவறு ஒன்றும் இல்லை. இந்த ரோட்டில்(ஈரோடு) போய் திரும்பி
(திரிச்சி) போக வேண்டும் என்பதை அவர் தம் மொழியில் சொல்லியிருக்கிறார்.
(Erode
என்ற ஆங்கில வார்த்தைக்கு அரித்தல் என்று
பொருள்)
ஈரோடு மாவட்டம் மங்கலப்பட்டியில் நான்கு
ஆண்டுகள் கிளை மேலாளராகப் பணி நிறைவுற்றவுடன் அதே மாவட்டத்தில் கொளப்பலூர் என்ற
ஊருக்கு மாறுதல் வந்தது. பிள்ளைகள் படிப்பு வசதிக்காக ஈரோடு கொடுங்கள் என்று
மேலிடத்தில் கேட்டேன். ஈரோட்டில் கிளை மேலாளர் பதவி இப்போது கிடைக்காது தணிக்கை (எங்கள் வங்கியில் inspection ஆய்வுப்பணி என்று சொல்வார்கள்) மேலாளராகப போக நீங்கள்
சம்மத்தித்தால் ஈரோடுக்கு மாற்றல்
தருகிறேன் என்றார்கள். சரி என்று ஒத்துக்கொண்டேன்.
ஈரோட்டில் வீடு தேட மிகவும் உதவி செய்தவர் திரு
கார்மேகம் என்பவர். இவரை மங்கலபட்டியிலேயே ஓரளவுக்குத் தெரியும். மிக நல்ல நண்பரான
திரு குப்புசாமியின் நண்பர் இவர். கிட்டத்தட்ட ஒரு மாத காலம் அலைந்து ஒரு நல்ல
வீட்டைப் பிடித்துக் கொடுத்தார்.
வீடு நகரின் மையப் பகுதியில் இருந்தது. பெரிய
கூடம், சாப்பாட்டுக் கூடம். ஒரு பெரிய படுக்கை அறை மற்றொரு சிறிய அறை என்று வசதியாகத்தான்
இருந்தது.. ஆனால் அந்த வீடு எங்களுக்கு சரிப்பட்டு வரவில்லை. ஒரு தனி வீடாகவும்
இல்லை அடுக்ககம் மாதிரியும் இல்லை, ஒரு கட்டிடத்தில் கீழ் தளத்தில் ஒரு வீடு.
முதல் தளத்தில் நாங்கள்,அதற்கு மேல் இன்னொரு வீடு. இது வரை தனி வீட்டிலேயே இருந்து
பழகியதால் இந்த அமைப்பு சற்று வித்தியாசமாகப் பட்டது. வீட்டு உரிமையாளர் அருகிலேயே
இன்னொரு வீட்டில். வீட்டுக்கு அருகில் வாகனங்களுக்கு வண்ணம் பூசும் பட்டறை ஓன்று
இருந்தது. அந்த நாற்றம் மூக்கைத் துளைக்கும். வேலைக்காரியும் சரியாக அமையவில்லை.
இருந்தாலும் ஈரோடு வாழ்க்கை முழுக்க அந்த வீட்டிலேயே கழிந்தது.
மகன் பைசல் ஈரோடு கலைககல்லூரியில் படித்தார். அவரோடு
பள்ளியில் படித்த தோழர்கள் பலரும் அந்தக் கல்லூரியில் படித்தார்கள். மதிப்பெண்
அடிப்படையில் கல்லூரி மாணவர் தலைவனாகத் தேர்வு செய்யப்பட்டார். கல்லூரியில் முதல்
மாணவனாக பட்டப் படிப்பை முடித்து தங்கப் பதக்கமும் பெற்றார் .
மகள் பாப்டி ஒரு நல்ல கிறித்தவப் பள்ளியில்
பன்னிரெண்டாம் வகுப்புப் படிப்பை முடித்தார்.
ஆய்வுப்பணி என்பதால் அடிக்கடி வெளியூர் பயணிக்க
வேண்டியிருக்கும். ஆனால் பெரும்பாலும் மாலை வீடு வந்து விடுவேன்.
பொதுவாக ஈரோடு மாவட்டமே ஒரு நல்ல முன்னேற்றம்
காணும் பகுதி. மக்களின் கடும் உழைப்பே அதற்குக்காரணம்.. நல்ல,நேரம் தவறாத பேருந்து வசதி, சிற்றூர்களில் கூட இரு சக்கர
வாகனங்கள் பழுது பார்க்குமிடங்கள்.
ஈரோடு மஞ்சள் சந்தையும் துணிச் சந்தையும் உலக
அளவில் புகழ் பெற்றவை...மஞ்சள் விளைந்து அறுவடை செய்யும் காலத்தில் மஞ்சள் சந்தை..
ஆண்டு முழுதும் வாரம் மூன்று நாள் துணிச் சந்தை. துணிச் சந்தையில் மட்டும் தினமும்
பல கோடி ரூபாய் அளவில் வணிகம் நடப்பதாய்ச் சொல்வார்கள்.
வங்கியின் ஒரு பெரிய கிளைக்கு ஆய்வுக்காகப்
போயிருந்தேன்.உணவுக் கூடத்தில் நுழைந்த எனக்கு அதிர்ச்சி, வியப்பு, சினம் எல்லாம்
ஓன்று சேர வந்தது. கூடத்தின் தரை முழுதும் ஒரு அங்குல உயரத்திற்கு கருப்பாக
அழுக்குப் படிந்திருந்தது,. கிளை மேலாளரிடம் காண்பித்து உடனே அதை சுத்தம் செய்யப்
பணிக்குமாறு கேட்டுக்கொண்டேன். அந்தக் கிளையில் துப்புரவு ஊழியர்கள் மூன்று பேர்
இருந்தார்கள்..மூவரும் சேர்ந்து மூன்று மணி நேரம் சுத்தம் செய்தார்கள்.எத்தனை
ஆண்டு அழுக்கோ !
சையது சச்சா ஈரோடு வருவதற்காக பீ.மு.மாமாவிடம்
முகவரி கேட்க, மாமா தர மறுக்க, அதை ஒரு அறைகூவலாக எடுத்துக்கொண்டு முகவரி இல்லாமலே
ஈரோடு வந்த சச்சா தொடர் வங்கி விடுமுறையால் எங்கள் வீட்டைக் கண்டு பிடிக்க
முடியாமல் திரும்பி திருப்பத்தூர் போனது சச்சாவின் பயண சாதனைகளில் ஒரு பின்னடைவு.
பின்னர் ஒரு முறை சச்சா தனியாகவும் பிறகு ஜனாப் அஜ்மீர் அலியுடன் ஒரு முறையும் எங்கள்
வீட்டுக்கு வந்து போனது.
பொங்கல் விளையாட்டுப் போட்டிகளையொட்டி அலுவலகப்
பணியாக ஈரோடு வந்த லியாகத் அலி அண்ணன்
வீட்டுக்கு வந்து ஒரு நாள் தங்கிச் சென்றது.
ஒருநாள் மாலைப்பொழுதில் முத்தக்காவிடமிருந்து
தொலைபேசி அழைப்பு வந்தது அத்தாவுக்கு உடல் நலம் சரியில்லை நீங்கள் உடனே புறப்பட்டு
வரவும் என்று சொன்னது. உடனே எல்லோரும் பேருந்தில் பயணித்து சென்னை சென்றோம்.
அத்தா பூந்தமல்லியில் நூரக்கா வீட்டில்
இருந்தார்கள் .படுத்தபடி இருந்தாலும் மிகத்தெளிவான சிந்தனையில் இருப்பது போல்தான்
தோன்றியது. தேறி எழுந்து இன்னும் சில காலமாவது நம்முடன் இருப்பார்கள் என்ற
நம்பிக்கையோடுதான் நான் (எல்லோரும்) இருந்தேன்,
ஒரு வழியனுப்பு
நிகழ்வு போல பிள்ளைகள் அனைவரும்
அத்தாவைச் சுற்றி இருந்தோம். மருத்துவர் வந்து பார்த்து விட்டு he is
alright என்று சொல்லி விட்டு வாசல் வரை போயிருப்பார்..என் மகன்
பைசல் ஐயா வாயில் காபி ஊற்ற அத்தாவின் உயிர் பிரிந்தது என்று சொல்வதை விட ஒரு
சகாப்தம் நிறைவடைந்தது என்பதே பொருத்தமாக இருக்கும்.
பிறப்பிலும் சிறப்பு, வளர்ப்பிலும்
சிறப்பு,படிப்பிலும் சிறப்பு, பணியிலும் சிறப்பு, இல்லறத்திலும் சிறப்பு
இலக்கியத்திலும் சிறப்பு இறை வழியிலும் சிறப்பு
பணி மூப்பிலும் சிறப்பு ,முதுமையிலும் சிறப்பு என வாழ்வாங்கு வாழ்ந்த அத்தாவின்
பிரிவும் மிகச் மிகச் சிறப்பாகவே இருந்தது.
பிறந்த ஊரான திருப்பத்தூர் கொண்டு
செல்லவேண்டும்,,சென்னையில் அதிகமாக அத்தா வாழ்ந்த வடபழனி கொண்டு செல்லவேண்டும்
போன்ற கருத்துக்களை எல்லாம் உறுதியாக மறுத்து பூந்தமல்லியிலேயே அடக்கம் செய்ய
முடிவு பண்ணி செயலாக்கப்பபட்டது.
அத்தா பூந்தமல்லியில் இருந்தது சில
மாதங்கள்தான். ஆனால் இது வரை யாருக்கும் வராத மக்கள் கூட்டம் அத்தாவுக்கு வந்தது.
இதையெல்லாம்தான் எச்சத்தால் அறியப்படும் என்று வள்ளுவன் சொன்னானோ என்ற எண்ணம்
எனக்குள் எழுந்தது.
இதற்கெல்லாம் மேலாக பூந்தமல்லிப் பள்ளிவாசலில்
தோன்றில் புகழோடு தோன்றுக என்ற குறளுக்கு இலக்கணமாய் வாழ்ந்த அத்தாவுக்காக ஒரு சிறப்புத் தொழுகை நடத்தினார்கள்.
அந்தத் தொன்மையான பள்ளியில் இப்படி ஒரு
தொழுகை முதல் முறையாய் நடப்பதாய் கேள்விப்பட்டேன்.
இவையெல்லாம் ஏற்படுத்திய ஒரு வகை பிரமிப்பு பிரிவுத் துயரைக்
குறைக்கத் துணை புரிந்தது.
ஆனால் இப்போது தொடர்ந்து எழுத முடியாத அளவுக்கு
நெஞ்சை அடைப்பது போல் இருக்கிறது.
இறைவனாருளால் பயணம்
தொடரும்
No comments:
Post a Comment