Thursday, 21 April 2016

வாழ்க்கைப்பயணமும் வங்கி அனுபவங்களும் 12.கண்டது கேட்டது உணர்ந்தது படித்தது

வாழ்க்கைப்பயணமும் வங்கி அனுபவங்களும் 12.கண்டது கேட்டது உணர்ந்தது படித்தது
22042016
பயணம் அலுப்புத் தட்டாமல் இருக்க அவ்வப்போது இடைவெளி தேவைப்படுகிறது.. இந்தப்பகுதியில் நினைவில் நிற்கும் நகைச்சுவைகள் துணுக்குகள் போன்றவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன்.
ஒரு நகைச்சுவை- நீண்ட நாட்களுக்கு முன் குமுதத்தில் வந்தது என எண்ணுகிறேன்:
ஒரு பல் மருத்துவ மனையில் .நோயாளி இருக்கையில் மயங்கிய நிலையில் சாய்ந்திருக்கிறார். மருத்துவர் நினைக்கிறார். “ அடடே பல்லைப்  பிடுங்குவதற்குப்பதில் நாக்கைப்பிடுங்கி விட்டேனே . பணம் தருவானோ மாட்டானோ தெரியலையே “
சாவி (ஆம் அப்படி ஒரு வார இதழ் இருந்தது )யில் வந்தது:
“ஏன் வெற்றிலையின் நடுவில் சுண்ணாம்பு தடவாமல் ஓரத்தில் தடவுகிறீர்கள்?”
“எனக்குக் கை கொஞ்சம் குட்டை . நடுவில் தடவ எட்டாது “..
விகடன் புகழ் பெற்றதே அட்டைப்பட சிரிப்புகளாலும் தொடர் கதைகளாலும்தான்,.
(இரண்டு வாரங்களுக்கு முன் வந்த விகடனைப் படித்த எனக்கு யதார்த்தம் என்ற போர்வையில் ஏன் இப்படி விகடன் தரம் தாழ்ந்து போனது என எண்ணத் தோன்றியது. பீப் பிரியாணி என்ற சிறு கதை ஒவ்வொரு சொல்லும் வரியும் குமட்ட வைக்கும் அளவுக்கு அருவெறுப்பு . கதையைப் படித்து முடித்தால் வாந்தி எடுத்து விடுவோம் என்ற எண்ணத்தில் பாதியிலேயே நிறுத்தி விட்டேன், அடுத்து துபாய் பாச்சிலர் என்ற கவிதை (?) ஆபாசத்தை அள்ளித் தெளித்தது போல் இருந்தது, விகடன் வாங்குவதையே நிறுத்தி விட எண்ணுகிறேன் இந்த வாரம் வெளியான காதல் 2086 சிறுகதை படிக்கவே ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்துகிறது)
பழைய விகடனில் வந்த அட்டைப்பட சிரிப்பொன்று :
தென்னை மரத்தில் இரண்டு பேர் காய் பறிக்க ஏறிய நிலையில் அந்த மரத்தை யானை ஓன்று வேரோடு பறித்து தூக்கிக்கொண்டு ஓடுகிறது.. அப்போது மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒருவர் இன்னொருவருக்கு ஆறுதல் கூறுகிறார்
“அண்ணே கவலைபடாதீங்க யானைக்கு மரம் ஏறத் தெரியாது “
இன்னொரு விகடன் அட்டைப்பட சிரிப்பு
“என்ன அடுப்பைப் பத்த வைக்காமல் சமையல் பண்றே ?”
“சமையல் புக்கில் அடுப்பைப் பற்ற வைக்கச் சொல்லவில்லையே “ 
அத்தா அருப்புக்கோட்டையில் பணியாற்றியபோது (அப்போது நான் பிறக்கவில்லை) வீட்டுக்கொல்லையில் நிறைய தக்காளிச்செடி குப்பை போல வளர்ந்து பழங்கள் நிறைந்து நிற்குமாம். இதை சமையலுக்கு பயன் படுத்தலாம் என்று யாரோ அம்மாவிடம் சொல்ல அதெல்லாம் தெரியாத பொருட்களை சமைக்க முடியாது என்று மறுத்து விட்டதாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன். இன்றோ தக்காளி இல்லாமல் சமையலே இல்லை எனும் நிலை..
சச்சாவின் புகழ் பெற்ற ‘ஒரு மொளகா’ நிகழ்வும் அருப்புக்கோட்டையில்தான் என நினைவு.. விருந்தாளிகள் வந்ததால் பரபரவென சமைத்துக் கொண்டிருந்த அம்மா பச்சை மிளகாய்களை சச்சாவிடம் கொடுத்து இரண்டிரண்டாக கிள்ளித் தரும்படி சொல்லி விட்டு சமையலைக் கவனித்துக் கொண்டிருக்கையில் திடீரென ஒரு  உரத்த குரல் ஒலித்தது “ அக்கா ஒரு மொளகா மிஞ்சிப் போச்சு “ ஒன்றும் புரியாமல் அம்மா போய்ப் பார்த்தால் மிளகாய்களை இரண்டிரண்டாக தொடர் வண்டி போல் அடுக்கி வைத்து விட்டு ஒரு மிளகாய் மிஞ்சியதால் அதை என்ன செய்வதென்று புரியாமல் குரல் கொடுத்திருக்கிறார்.

வெளியூர் பேருந்துகள் அரசு அலுவலர்கள் வீட்டு வாசலில் காத்துக்கிடந்து அவர்கள் ஏறிய பின்தான் புறப்படுமாம் அருப்புக்கோட்டையில் .
Readers Digest  எனும் ஆங்கில மாத இதழ் பலருக்கும் நினைவிருக்கலாம். ஒவ்வொரு இதழும் ஒரு கலைக்களஞ்சியம் போன்று துணுக்குகள்      உண்மைச் சம்பவங்கள் நகைச்சவைகளை உள்ளடக்கியதாக இருக்கும் . ஒரு இதழை முழுதாகப் படிக்க ஒரு மாதம் போதாது. பொதுவாக வார மாத நாளிதழ்கள் இத்தனை பிரதிகள் விற்கிறோம் என்று விளம்பரம் செய்வது வழக்கம் .ஆனால் Readers Digest  சற்று மாறுபட்டு இத்தனை பிரதிகள் வாங்கப்படுகின்றன என்று போடுவார்கள். பொருளாதார நெருக்கடியால் சில ஆண்டுகளுக்கு முன் அந்த இதழ் நிறுத்தப்பட்டது.
அதில் வந்த ஒரு துணுக்கு. : அமெரிக்காவில் ஒரு மருத்துவர் தன் மருத்துவ மனையில் நீர்க்குழாயில் ஏற்பட்ட ஒழுக்கை சரி பண்ண குழாய் சரி செய்பவரைக்கூப்பிட்டார் . விலை உயர்ந்த மகிழுந்தில் வந்த அவர் ஐந்து நிமிடத்தில் வேலையே முடித்து விட்டு நூறு டாலர் கூலி கேட்டார். மருத்துவர் நானே இவ்வளவு தொகை  வாங்குவதில்லையே என்றார். அதற்கு குழாய்ககாரர்  ஐயா நானும் உங்களைப்போல் தகுதி வாய்ந்த மருத்துவர்தான் . அந்தத் தொழில் கட்டு படியாகமல்தான் இந்த தொழிலுக்கு வந்து நிறைய சம்பாதிக்கிறேன் என்றாராம் .
Readers Digest   இதழில் Drama in real life  என்ற தலைப்பில் வெளியான ஒரு உண்மைச் சம்பவம் இன்னும் என் மனதில் நிற்கிறது. பல பக்கங்களில் வந்த அதை சுருக்கமாக இங்கே தருகிறேன். மூழ்கும் நிலையில் இருக்கும் கப்பல் ஓன்று எங்களைக் காப்பாற்றுங்கள் என்று செய்தி அனுப்புகிறது..அந்தச் செய்தியைப் பெற்ற மீட்புப்பணிக் கப்பல் ஓன்று மூழ்கும் கப்பலை நோக்கி விரைகிறது..மூழ்கும் கப்பல் உண்டாக்கும் சுழல்களால் மீட்புக் கப்பல்  ஒரு அளவுக்கு மேல் நெருங்கிப் போகமுடியாது. மீட்புக் கப்பல் தலைவர் நான்கு இளம் வீரர்களை அழைத்து அவர்களிடம் மீட்புப் பணியை ஒப்படைத்து அவர்களில் ஒருவரை குழுத்தலைவராய் நியமித்து அவரிடம் சொல்கிறார் “உங்களுக்கு வேண்டிய படகுகள் இதர கருவிகள் தேவைப்பட்டால் அதிக வீரர்களை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லி விட்டு “விசைப் படகா கைப்படகா என்பதையும் உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன் “ என்று முடித்து விட்டார்.
பலமணி நேரக் கடுமையான, மிகக் கடுமையான போராட்டத்திற்குப் பின் மூழ்கும் கப்பலில் உள்ள அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப் பட்ட பின் மூழ்கும் கப்பல் மூழ்கிய கப்பலாகி விட்டது.
மீட்புக் கப்பலின் தலைவர் குழுத் தலைவரிடம் குழுவின் வீரம் , தீரம் , விடா முயற்சி உயிரைப்பணயம் வைத்த துணிச்சல் அனைத்தையும் மனதாரப் பாராட்டுகிறார். இறுதியில் சொல்கிறார் “ விசைபடகைத் தவிர்த்து , கைப்படகை எடுத்துச் சென்றது மிகத் துணிச்சலான மிகச் சரியான முடிவு . உங்கள் குழுவின் வெற்றிக்கு இந்த முடிவு பெரிதும் பங்களித்தது “ என்கிறார்.
அப்போதுதான் குழுத் தலைவருக்கு ஒரு மிகப் பெரிய உண்மை புலப்படுகிறது.  விசைப் படகை எவ்வளவு முயன்றாலும் அதன் சக்திக்கு மேல் இயக்க முடியாது .கைப்படகு அப்படியல்ல . மனிதன் தன் வலிமை, முயற்சிககேற்ப சூழ்நிலைக்கேற்ப  மிக வேகமாக இயக்க முடியும். இது அனுபவம் கற்றுத்தரும் ஒரு படிப்பினை.
அத்தா பயணத்திற்காக மாட்டு வண்டி வாங்கியதும் அருப்புக்கோட்டையில்தான்  என நினைக்கிறன். அலுவலக வேலையாகமாட்டு வண்டியில் பயணிக்கும்போது கடை நிலை ஊழியரை(Peon) வண்டி ஓட்டச் சொல்வது வழக்கம். இது பெரிய குற்றம் போல் மன்ற உறுப்பினர்களால்(கவுன்சிலர்ஸ்) பேசப் பட்டு  இது பற்றி மன்றம் ஒரு மடலும் வரைந்து மாநில அரசுக்கு அனுப்பி வைத்தது. இது பற்றி அரசு அத்தாவிடம் விளக்கம் கேட்க அதற்கு அத்தா அனுப்பிய மறுமொழி மடல்தான் இந்த நிகழ்வின் உச்ச கட்டம்::
“அரசு அதிகாரி என்ற முறையில் அலுவலகப் பணிக்காக வெளியே செல்லும் போது ஒரு கடை நிலை ஊழியரை என்னுடன் அழைத்துச் செல்ல எனக்கு அனுமதி உண்டு.
என்னிடம் உள்ள வாகனமான மாட்டு வண்டியை பயன் படுத்தவும் எனக்கு அனுமதி இருக்கிறது.
`வண்டிக்கு ஒரு வண்டிக்காரர் (ஓட்டுனர்) வைத்துக் கொள்ளும் அளவுக்கு எனக்கு வசதி இல்லை.
இந்த நிலையில் ஓன்று நான் வண்டிக்குள் உட்கார்ந்து கொண்டு ஊழியரை ஓட்டச் சொல்லலாம். அல்லது ஊழியரை வண்டிக்குள் உட்கார வைத்து நான் வண்டியை ஓட்டலாம்.
இதில் எது  சரி என்று அரசு கருதுகிறதோ அதன் படி நான் செயல் படுகிறேன்”
இப்படி ஒரு மறுமொழியினால் வாயடைத்துப் போன அரசு “ அரசு அதிகாரிகள் அலுவல் நிமித்தமாய் தங்கள் மாட்டு வண்டியில் பயணிக்கும்போது கடை நிலை ஊழியரை வண்டி ஓட்டப் பயன்படுத்திக் கொள்ளலாம் “  என்ற ஒரு பொது ஆணையே பிறப்பித்ததாம் .
தொடர் கதைகளில் முதலில் நான் படித்தது சுஜாதாவின் நைலான் கயிறு என்று நினைக்கிறன்- குமுதத்தில் வந்தது..விறுவிறுப்பான நடை, நல்ல கதை, ஒரு மாறுபட்ட கதை சொல்லும் பாணி எதிர் பாராத முடிவு- இன்னும் மனதில் நிற்கிறது.
குமுதத்தின் திரைப்பட விமர்சனங்கள் வாசகர்களால் விரும்பிப் படிக்கப்படும். ஒரு படத்திற்கு கதாநாயகியின் படத்தைப் போட்டு –இவர்தான் கொஞ்சப்படுபவர் என்றும் நாயகனின் படத்தைப்போட்டு –இவ்ர்தான் கொஞ்சுபவர் என்றும் காதில் பூ சுற்றப்படுபவர்கள் ரசிகர்கள் என்றும் சுருக்கமாக முடித்திருந்தது. (படம்-கொஞ்சும் குமரி)
இன்னொரு படம் –பெயர் மறந்து விட்டது- படத்தில் இருவர் பேசிக்கொள்ளும்  ஒரு காட்சியைப்போட்டு   ------------------படத்தைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள் என்று போட்டு அடுத்து படத்தில் ஒருவர் மற்றவர் சட்டையைப் பிடிக்கும் காட்சியை போட்டு “அதைப் பற்றிக் கேட்டால் கொன்று விடுவேன் “ என்று சொலவது போல் போட்டு  முடித்து விட்டார்கள். தாய் மகளுக்கு கட்டிய தாலி என்ற படத்திற்கு வெட்கக்கேடு என்ற ஒரு சொல் விமர்சனம்.
குமுதத்தில் வந்த இன்னொரு சிரிப்பு
வீட்டுக்கு வந்த விருந்தாளியிடம் வீட்டுக்காரர் இதை உங்கள் வீடாக நினைத்துக் கொள்ளுங்கள் என்கிறார். அடுத்த நொடி படாரென்று ஒரு ஓசை –வீட்டுக்காரரை உதைத்து வெளியேற்றி விடுகிறார் விருந்தாளி.
அம்புலி மாமா என்ற சிறுவர் இதழ் இப்போது வருகிறதா என்று தெரியவில்லை) .அதில் வரும் விக்ரமாதித்யன், வேதாளம் கதை படிக்க நன்றாக இரூக்கும். ஒவ்வொரு பகுதியும் ஒரே மாதிரி- தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன்- என்று துவங்கி- இந்தப் பதிலால் விக்கிரமாதித்தன் மௌனம் கலைந்ததால் வேதாளம் மறுபடி முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது. -என்று முடியும்.
இந்தக்கதையின் இறுதிப்பகுதிதான் இயக்குனர் பாலச்சந்தரின் அபூர்வ ராகங்கள் படத்தின் கரு (பதிலேதும் இல்லாத கேள்வி)
அத்தா அடிக்கடி சொல்லக்கேட்ட ஒரு நகைச்சுவைத் துணுககுடன் இந்தப்பகுதியை நிறைவு செய்கிறேன்”
மிக ஐதீகமான ஆசாரமான ஒரு குடும்பத்தில் பெண் பார்க்க பையன் வீட்டார் வந்திருக்கிறார்கள். பெண்ணின் அப்பா மெதுவாகத் தயங்கியபடி பையனைப்பற்றி விசாரிக்கிறார்.. “மாப்பிள்ளை வெங்காயம் சாப்பிடுவாரா ?” (வெங்காயம் சாப்பிடுவதே ஒரு  பாவமாகக்கருதும்  ஆசாரம்). பையனின் நண்பன் மிக அலட்சியமாக - எப்போவாவது நான் வெஜ் சாப்பிடும்போது வெங்காயம் சேரும் -
“ஐயையோ நான் வெஜ் எல்லாம் சாப்பிடுவாரா “
-ஏன் பதறுகிறீர்கள் இருக்கிற விலை வாசியில் டெய்லியா நான் வெஜ் சாப்பிட முடியும்?  எப்போதாவது தண்ணி போடும்போது மட்டும்தான் நான் வெஜ் சாப்பிடுவார் –
“கடவுளே தண்ணிப் பழக்கமும் உண்டா!”
-பெரியவரே நீங்கள் பயப்படும் அளவுக்கு மொடாக்குடியர் இல்லை. எப்போதாவது சீட்டாடும்போது மட்டும்தான் தண்ணி போடுவார் ;-
“எனக்கு தலை சுற்றுகிறது ஒன்னொன்னாகச் சொல்லாமல் மொத்தமாகச் சொல்லி முடியப்பா” என்றார்
-நீங்கள் நினைப்பது போல் ஒன்றும் இல்லை ,எப்போதாவது இரவு விடுதிக்குப் போகும்போது மட்டும் சீட்டாடுவார்.
அடிக்கடி இரவு விடுதிக்குப் போகமாட்டார்.. எப்போதாவது ஜெயிலை விட்டு வெளியே இருக்கும்போது மட்டும்தான் போவார் .அவ்வளவுதான்,-

  ஏறுவாடி பகுதியில் கேட்ட வினாக்களில் முதல் வினாவிற்கு யானை என்ற  சரியான விடை அளித்த இதயத்திற்குப் பாராட்டுக்கள்..;நெய்வேலி ராஜா (புதிய வாசகர்) கதையின் நடையைப் பாராட்டி பழைய பகுதிகளுக்கு மறு பதிப்பு உண்டா என்று கேட்டிருந்தார். எனது எல்லா எழுத்துக்களும் sherfuddinp.blogspot.com   என்ற வலைப்பதிவில் வெளியிடப்பட்டுள்ளன. .கட்செவியில் படிப்பதை விட எளிதாக வலைப்பதிவில் படிக்கலாம்.
அக்கா ஜோதி தொடர் விறுவிறுப்பாகச் செல்வதாகக் கூறி தொடர்ந்து எழுதும்படி சொன்னது .தங்கை சுராஜ் ஏறுவாடிக்குப்போய்ப் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுவதாக இருந்தது அந்த ஊர் பற்றிய வர்ணனை என்று எழுதியிருந்தது
பாராட்டுக்களுக்கு நன்றி.
வாத்து ஒலி பற்றி வந்த வினாவுக்கு  :வாத்தின் ஒலிக்கு எதிரொலி கிடையாது என்பதே விடை . ஏனென்று யாருக்கும் தெரியவில்லை.
இ(க)டைச்செருகல்
சென்ற ஆண்டு மகள் வீட்டுக்குப் போயிருக்கையில் ஒன்பதாவது வகுப்புப் படித்துக் கொண்டிருந்த என் குட்டிப் பேத்தி ரிபாத் –அய்யா தமிழ் ப்ராஜெக்ட்டுக்கு வறட்சி என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதிக் கொடுங்கள் என்று கேட்டது (என்ன தமிழ் ப்ராஜெக்டோ தமிழுக்குத்தான் வெளிச்சம். ) எனக்கு கவிதையெல்லாம் தெரியாது என்று நான் மறுக்க இல்லை வேண்டும் என்று பேத்தி நச்சரிக்க கைப்பேசியில் எழுதிப் பார்த்தேன் .கவிதை மாதிரி ஏதொ வர அதைப் பேத்தியிடம் கொடுத்தேன், அடுத்த நாள் பள்ளியிலிருந்து திரும்பிய பேத்தி கவிதை நன்றாக இருந்தது என்று தமிழாசிரியை பாராட்டியதாகச் சொன்னது . எனக்கு வியப்பாகவும் பெருமிதமாகவும் இருந்தது. அந்தக் கவிதை:
அணை கட்டினோம்                                              ஆழ்துளை போட்டோம்                                          ஆழியையும் பகுத்தோம்                                          தீரவில்லை நீர் வறட்சி
மருந்தடித்தோம்                                            உரம்போட்டோம்                                                    மரபணுவும் மாற்றினோம்                                            தீரவில்லை உழவர் வறட்சி
அனலில் எடுத்தோம்                                                புனலில் எடுத்தோம்                                             அணுவிலும் எடுத்தோம்                                          தீரவில்லை மின் வறட்சி
பருத்தி எடுத்தோம்                                                      பட்டு எடுத்தோம்                                                   பல்லிழையும் எடுத்தோம்                                             தீரவில்லை உடை வறட்சி
முன்தோன்றி மூத்த செம்மொழிக்குடியில்                                     பண்பாட்டு வறட்சி                                                      கலாச்சார வறட்சி                                                      மொழியிலும் வறட்சி
இறைதுதித்து                                                        இயற்கை போற்றி                                                               மனித நேயம் காத்து                                                வறட்சி போக்கி வளம்.பெற வாழ்வோம்
இறைவன் நாடினால் பயணம் தொடரும்


வலைப்பதிவு முகவரி

Sherfuddinp.blogspot.com

No comments:

Post a Comment