Tuesday, 3 May 2016

இசுலாமிய இறைவணக்கம் – யோகாசனங்கள் ஒரு ஒப்பு நோக்கு பகுதி 1

வாழ்க்கைப்பயணமும் வங்கி அனுபவங்களும்

தொடரில் சில பல பணிகளால் ஒரு மாத கால இடைவெளி தேவைப்படுகிறது..தொடர்பு விட்டுப்போகாமல் இருக்க நான் முதுநிலை யோகா படிப்பில் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரையின் மிகச் சுருக்கமான தமிழ் வடிவத்தை மூன்று ,நான்கு பகுதிகளாக வெளியிடுகிறேன்..படிப்பதற்கு சற்று சிரமமாக இருந்தாலும் படித்து நிறை,குறிப்பாக குறைகள்,பிழைகளை சுட்டிக்காட்டி, கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டுகிறேன், இதை இறைவன் நாடினால் நூலாக வெளியிடவும் எண்ணுகிறேன்.    
இசுலாமிய இறைவணக்கம் –         யோகாசனங்கள் ஒரு ஒப்பு நோக்கு பகுதி 1
இசுலாம் யோகா இரண்டுக்கும் ஒரு மிகப்பெரிய ஒற்றுமை உண்டு. இரண்டுமே மிகத் தவறாக புரிந்து கொள்ளப்படுகிற (அல்லது சரியான புரிதல் இல்லாத )  மிகப்பெரிய தலைப்புகள்.
முதலில் யோகாவைபற்றிப்பார்ப்போம் .யோகா என்ற வார்த்தை இப்போது மிகச் சாதாரணமாக உச்சரிக்கப்படும் சொல் ஆகிவிட்டது.. யோகப்பயிற்சி, யோகா முகாம், ஊடங்களில் யோகா பள்ளிகளில் யோகா இளைஞர்களுக்கு யோகா முதியவர்களுக்கு யோகா காவல் துறைக்கு யோகா கணினியில் தொடர்ந்து பணி புரிபவர்களுக்கு குறிப்பாக தகவல் தொழில் நுட்பத்துறை பணியாளர்களுக்கு  யோகாகுடும்பப் பெண்களுக்கு யோகா  ஒய்வு பெற்றவர்களுக்கு யோகா என்று பலவாறாகப் பரவலாக யோகா பற்றிப் பேசப்படுகிறது.
இருந்தாலும் யோகா என்ற சொல்லின் முழு அர்த்தமும் பரிமாணமும் எத்தனை பேருக்குத் தெரியும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.
என் அறிவுக்கு எட்டிய யோகா பற்றிய தவறான் புரிதல்களை சொல்கிறேன்.:
-யோகா என்பது ஒரு மதம் சார்ந்த பொருள்                  -துறவிகளுக்கும் சாமியார்களுக்கும் மட்டுமே உரியது யோகா          -யோகா என்பது ஒரு வகையான உடல் பயிற்சி.                 யோகக்கலை பயில கடுமையான உணவுக் கட்டுப்பாடு அவசியம்.     -யோகா இல்லற வாழ்வில் நாட்டத்தைக் குறைத்து விடும்.
என்று இன்னும் பலப்பல.
இவற்றுள் மிகப்பரவலானது யோகா என்பது ஒரு வகை உடற்பயிற்சி என்ற தவறான கருத்து.
அடுத்து இசுலாம் யோகா அளவுக்குப் பரவலாக இசுலாம் பற்றிப் பேசப்படுவதில்லை. அதுவே தவறான புரிதல்களுக்கு ஒரு காரணம் போல் தெரிகிறது. இதில் மிகப்பெரிய துயரம் என்னவென்றால் இசுலாமியர்களில் கூட  சிலருக்கு இசுலாமைப்பற்றிய சரியான புரிதல் இல்லை.
இசுலாம் பற்றிய தவறான சில புரிதல்கள் –நான் அறிந்த மட்டில்:
-உருது மொழி பெசுபவர்கள்தாம் உண்மையான முசுலீம்கள்.
-அரபு மொழியும் உருது மொழியும் வேறு வேறு அல்ல.
-இசுலாமியர்கள் காபா எனப்படும் ஒரு கருப்புக்கல்லை வணங்குகிறார்கள்.
-இறை தூதர் நபி பெருமானார் (சல்) இசுலாமியர்களின் கடவுள்
--இசுலாமியர்கள் இந்தியக் குடி மக்கள் அல்லர்.
-அவர்கள் தினமும் அசைவம் சாப்பிடுவார்கள்- குறிப்பாக மாட்டு இறைச்சி
-இவற்றை எல்லாம் மிஞ்சும் இன்னுமொரு பயங்கரமான தவறான புரிதல் –அதைப்பற்றி எல்லோருக்கும் தெரியும்.-அதனால் நான் அதை குறிப்பிடவில்லை.
யோகக்கலை இசுலாம் இரண்டுமே பெருங்கடல்கள் , அவற்றைப்பற்றி விரிவாகப் பார்ப்பது இந்நுலின் நோக்கம் அல்ல.
இனி வரும் பக்கங்களில் யோகக்கலை, இசுலாம் பற்றிய தெளிவுகளை சுருக்கமாகப் பாப்போம்.
யோகக்கலையும் யோகாசனமும்   . .  
முன்பே குறிப்பிட்டது போல் யோகா என்பது மிகபெருங் கடல்.
யோகாசனம் என்பது அதில் ஒரு சிறு பகுதி – எட்டில் ஒரு பங்கு என்று சொல்லலாம்.
பலவித யோகங்களில் ஒன்று அட்டாங்க யோகா எனப்படும் என்கிளை யோகா. அதாவது எட்டு பெரும் பிரிவுகள் அடங்கிய யோகா .
அந்தப்பிரிவுகள்
யமம் நியமம் ஆசனம் பிரணாயாமம்                             
பிரத்தியாகாரம் தாரணா தியானம் சமாதி
சொற்களைப் பார்த்து மிரள வேண்டாம். அவற்றின் பொருள் புரிந்தால் மிகவும் எளிதாகத் தோன்றும்
யமம் என்பது சமூக வாழ்வுக்கான ஒழுங்கு முறைகளைப் பற்றிப் பேசுகிறது.
தனி நபர் ஒழுக்ககோட்பாடுகள் பற்றியது நியமம்
ஆசனம் என்பதுதான் நமக்கெல்லாம் நன்கு தெரிந்த உடல் பயிற்சிகள். பொருள் விளங்குவதற்காக உடற் பயிற்சி என்று குறிப்பிட்டாலும் ஆசனங்களுக்கும் உடல் பயிற்சிகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. அது பற்றி பின்னால் பார்க்கலாம்.
பிராணாயாமம் என்பது பொருள் புரிவதற்காக மூச்சுப் பயிற்சி என்று குறிப்பிடலாம்.
புலனகளைக் கட்டுப்படுத்தும் பயிற்சி பிரத்தியாகாரம்
மனதை ஒருநிலைப் படுத்துதல் தாரணா  ..
தியானா- தியானம் என்று குறிப்பிடலாம்.
தன்னை அறிந்து தெளிவு பெறுவது சமாதி (தன்னை அறிந்தால் இறைவனை அறியலாம் என்று நபி மொழி சொல்கிறது)
இந்த எட்டுப் பிரிவுகளுக்கும் விளக்கம் ஒரு பெரிய நூல் அளவுக்கு வரும். இப்போதைய தலைப்புக்கு இவ்வளவு எளிதான விளக்கம் போதும்.
இந்த எட்டுப்பிரிவுகளில் முதல் இரண்டான யமம் நியமம் இரண்டுக்கும்  ஐந்து ஐந்து உட்பிரிவுகள் உண்டு. அவற்றை அடுத்து சுருக்கமகப்பர்ப்போம்.

யமம் நியமம் - உட்பிரிவுகள்.
சமூக ஒழுக்கங்கள் பற்றி பேசும் யமம் ஐந்து பிரிவுகளைக்கொண்டது.
அவை அகிம்சை சத்யம் அட்டயா பிரமசசாரியம் அபாரிக்ரகம்
ஒவ்வொரு சொல்லுக்கும் மிக விரிவான விளக்கம் தரலாம்..அதைத்தவிர்த்து இந்த நூலுக்குத் தேவையான சுருக்கமான விரிவைக் குறிபிடுகிறேன்
இந்திய சுதந்திரப்போராட்ட வரலாறு படித்தவர்களுக்கு அகிம்சையின் பொருள் நன்றாகத்தெரியும்,. வன்முறை தவிர்த்தல் என்று பொருள் கொள்ளலாம்.
சத்யம்   மீண்டும் மகாத்துமா அவர்களை நினைவு படுத்தும் (சத்திய சோதனை மகாத்துமாவின் வாழ்க்கை வரலாறு).) எளிதாக உண்மை என்று குறிப்பிடலாம்.
அட்டயா திருட்டினைத் தவிர்த்தல்
பிரமசசாரியம்- பால் உணர்வுகளை முறைப்படுத்துதல்
அபாரிக்ரகம் தான்,, தனது என்ற எண்ணங்களைத் தவிர்த்தல் ; பிறர் பொருளை விரும்பாமை.

தனி மனிதன் ஒழுக்கம் பற்றிப்பேசும் நியமம்- ஐந்து  உட்பிரிவுகள்:
சௌச்சா சந்தோசா தபசு சுவாத்யா  ஈசுவர பிரநிதகன்
இவை தரும் பொருளை சுருக்கமாகப் பார்ப்போம்
சௌச்சா   தனி மனித  சுத்தம் சுகாதாரம் பற்றிச் சொல்கிறது
சந்தோசா- இருப்பதைக்கொண்டு சிறப்புடன் வாழ்வது – போதும் என்ற மனம்.
தபசு பகட்டு, ஆடம்பரம் தவிர்த்த எளிய வாழ்க்கை முறை
சுவாத்யா – புனித நூல்களை படித்து அறிந்து அதன் மூலம் தன்னைப்பற்றித் தெளிதல் 
ஈசுவர பிரநிதகன் –எப்போதும் இறை நினைப்பில் இருத்தல்.

யோகாவின் எட்டுப்பிரிவுகளில் இறுதியில் இருப்பது சமாதி – தன்னை அறிந்து அதன் மூலம் இறைவனை அடைவது. அந்த இறுதி நிலையை அடைவதற்கு உள்ள படிகள்தாம் மற்ற ஏழு பிரிவுகளும் அவற்றின் உட் பிர்வுகளும் என்பதை மனதில் நிறுத்திக்கொள்ளவேண்டும்.
இசுலாம் ஒரு அறிமுகம் 
முன்பே குறிப்பிட்டது போல் இசுலாம் பரவலாக பேசப்படாததினாலேயே மிகவும் தவறாப்புரிந்து  கொள்ளப்பட்ட ஒன்று..எனவே இது பற்றி சற்று விரிவான விளக்கம் சுருக்கமாகத் தேவைப்படுகிறது
இசுலாம் ஐந்து தூண்கள்:
இசுலாத்தின் மிக அடிப்படையான கொள்கை ஏக இறைத் தத்துவம் ஆகும். அதாவது இறைவன் ஒருவனே ஒருவன் மட்டுமே அந்த ஏக இறைவனுக்கு இணையாக யாரையும் எண்ணுதலோ பேசுவதோ மிகப் பெரிய மன்னிக்க முடியாத பாவம்.,
இதைப் புரிந்து மனதில் பதிய வைத்தல் இசுலாம் பற்றிய ஒரு எளிதான தெளிவை உண்டாக்கும்.
அடுத்து இசுலாத்தின் ஐந்து தூண்கள் பற்றிப் பார்ப்போம்
அ.ஈமான்        ஆ-.தொழுகை
இ.-.நோன்பு      ஈ-.சக்காத்து
உ.-புனித  ஹஜ் பயணம்
ஈமான்
ஈமான் என்றால் மனதில் உறுதி அல்லது திடமான அசைக்க முடியாத நம்பிக்கை என்று கொள்ளலாம். ஏக இறைவன் ஒருவனே வணக்கத்துக்கு உரியவன் என்றும் முகமது (சல் )  ஏக இறைவனின் திருத் தூதர் என்றும் மனதாலும் நாவாலும் மொழிதல்.
தொழுகை
தினம் ஐந்து முறை ஏக இறைவனை வணங்குதல்- இது பற்றி பின்பு விரிவாகப்பார்ப்போம்(
நோன்பு                                                                   ரமலான் என்ற புனித இசுலாமிய மாதத்தில் சூரிய உதயம் முதல் சூரியன் மறையும் வரையில் உண்ணாமல் பருகாமல் துணையை சுகிக்காமல் இருப்பது- பொய், கடுஞ்சொல் சினம் தவிர்ப்பது                          இது ஒரு புலனடக்கப் பயிற்சியாகும்                         செல்வந்தர்கள் பசியை அறியும் ஒரு சமூக நெறியாகவும் செயல்படுகிறது
சக்காத்து (ஜக்காத்)
இது வசதி படைத்தவர்கள் செய்ய வேண்டிய கட்டாய தருமம். தங்கள் செலவு கடன்கள் போக மிஞ்சியிருக்கும் பொருளின் மதிப்பில்     இரண்டரை சதவீதம் தருமம்வாங்கத் தகுதி உள்ளோருக்குக் கொடுப்பது . பொருள் எனபதில் சில வரைமுறைகளுக்கு உட்பட்டு பணம் காசு தங்கம், வெள்ளி வீடு வயல் வாகனங்கள் வணிகப்பொருட்கள் அனைத்தும் அடங்கும் இது செல்வம் ஒரு சிலரிடம் குவியாமல் பரவலாக்கும் ஒரு சமுக நீதி நெறி.
புனித ஹஜ் பயணம்
பொருள் வசதியும் உடல் நலமும் உடையவர்கள் வாழ் நாளில் ஒரு முறை புனித துல்ஹாஜ் மாதத்தில் புனித மக்கா நகர் சென்று அங்கு சில பல மத வழி முறைகளை மேற்கொள்வது. இந்தப்பயணத்தின் போது ஆண்கள் இஹ்ராம் என்ற ஒரு சிறப்பு ஆடையை சில நாட்கள் அணிய வேண்டும். தையல் இல்லாத இரண்டு துணிகள் மட்டுமே கொண்ட இந்த உடை கிட்டத்தட்ட சவதிற்குப் போடும் ஆடை போல இருக்கும். குறிப்பாக இந்தியாவில் இருந்து போகும் ஹஜ் பயணிகள் (நேரம் காரணமாக) இந்த உடையோடுதான் பன்னாட்டு சேவை வான் ஊர்தியில் பயணிக்க வேண்டி இருக்கும்.
தான் என்ற அகந்தையை முற்றிலும் போக்கிவிடுவதால் இதுவும் ஒரு புலனடக்கப் பயிற்சியாக அமைகிறது.
ஈமான், தொழுகை நோன்பு இவை மூன்றும் இசுலாமியர்கள் எல்லோர்க்கும் கட்டாயக் கடமையாகும். கடைசி இரண்டும் வசதி படைத்தோர்க்கு கடமை.

முன்பு குறிப்பிட்ட இசுலாம் பற்றிய தவறான புரிதல்களுக்கு ஒரு  தெளிவு காண்போம்:
உருது மொழியும் அரபு மொழியும்
அரபு மொழி நம் தமிழ் மொழி போல் தொன்மை வாய்ந்த செம்மொழியாகும். இது அரபு நாடு மக்களின் தாய் மொழியாகும். இந்த மொழியில்தான் இசுலாமியப் புனித நூலான குர் ஆன் இறைவனால் நபிகள் நாயகம் (சல) மூலமாக இறக்கி வைக்கப்பட்டது.
இந்திய மொழிகளில் ஒன்றாக அங்கிகாரம் பெற்றுள்ள உருது மொழி அரபு நாட்டில் யாருக்கும் தெரியாது. இந்திய இசுலாமியர்களில் எல்லோருக்கும் உருது தெரியாது.
இரண்டு மொழிகளுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை எழுத்துக்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதுதான்
இசுலாமியர்கள் வணங்குவது கண்ணுக்குப் புலப்படாத ஏக இறைவனை மட்டுமே, உலகளாவிய இசுலாமிய ஒற்றுமையை வலியுறுத்த புனித மக்கா நகரில் அமைந்துள்ள காபா என்னும் வணக்கத்தலத்தை நோக்கி வணங்குகிறார்கள். மற்றபடி காபாவின் படத்தையோ அதன் உருவத்தையோ வைத்து வணங்கக்கூடாது.
நபிகள் பெருமான் (சல்) ஏக இறைவனின் தூதரே அன்றி அவர் கடவுள் இல்லை, வணக்கத்துக்கு உரியரும் அல்லர்.  அவரை வணங்குவது முன்பே குறிப்பிட்டது போல் மன்னிக்கமுடியாத பெரும் பாவமாகும்.
இறைவன் என்ற சொல்லை இசுலாமியப் புனித நூலான குர் ஆன் வரையறுக்கிறது:
அவன் ஏகன் எந்தத் தேவையும் இல்லாதவன் அனைவரும் அவனிடம் தேவை உடையவர்கள். அவன் பெறவுமில்லை, பெறப்படவுமில்லை அவனுக்கு இணையானோர் யாருமே இல்லை  “
இந்தியாவில் உள்ள இசுலாமியர்கள் இங்கேயே பிறந்து பலதலை முறைகளாக இந்தியக்குடி மக்களாக வாழ்பவர்கள். இந்திய விடுதலைப்போராட்டத்தில் இசுலாமியர்களின் பங்கு மிகப் பெரிது..இன்னும் சொல்லப்போனால் இசுலாமியர்கள் ஆங்கிலேய எதிர்ப்பாக ஆங்கில மொழியைப் புறக்கணித்தது அவர்கள் கல்வியில் பின்தங்க ஒரு காரணமாக அமைந்தது      
  தினமும் அசைவம் சாப்பிடுவதை நபிபெருமானார்(சல்) ஆதரிக்கவில்லை.
ஒரு வாழ்க்கை நெறியாகத் துவங்கிய இசுலாம் நாளடைவில் ஒரு நாடாக ஒரு அரசாக ஒரு வல்லரசாக விரிந்து பரவியது. இந்த நிலையில் நாட்டைக் காக்கவும் மக்களை நெறிப்படுத்தவும் போர், படைகலன்கள் போர் வீரர்கள் போர் நெறிமுறைகள் அனைத்தும் தேவைப்பட்டன .இது இன்றளவும் அரசுகள் கடைப்பிடிக்கும் உலகளாவிய இயல்பு நடைமுறை
தொடரும்

வலை நூலில் (blog)) எப்படிப் படிப்பது என்று தெரியவில்லை என்று பலரும் தெரிவித்தனர்

கூகிள் தேடுதலில் (Google search)   sherfuddinp.blogspot.com  என்று தட்டச்சுச் செய்தால் வலை நூல் திறக்கும்..

No comments:

Post a Comment