“நெருநல் உளனொருவன் -----உலகு”
என்ற குறளை பலமுறை படித்து
பொருள் உணர்ந்து உள்வாங்கியிருக்கிறேன், இது தொடர்பான பல நீதி நூல்கள், ஹதீஸ்
குரான் வரிகள் படித்து துவக்கம் என்று ஓன்று இருந்தால் நிறைவு ஓன்று உறுதி
என்பதிலும் எல்லாம் அவன் செயல் என்பதிலும்
தெளிவாக இருக்கிறேன்.
இருந்த போதிலும் இவை எல்லாவற்றையும் மீறி சில நிகழ்வுகளை ஏற்றுக்கொள்ள
மனது மறுத்து சண்டித்தனம் செய்கிறது.
அறிவு வேறு உணர்ச்சி வேறு போலும். இரண்டும் ஒன்றாகிற அளவுக்கு
எனக்குள் தெளிவு பிறக்கவில்லை.
பள்ளியில் மதியத் தொழுகை தொழுது கொண்டிருந்தவர் திடீரென மயங்கி
விழுகிறார் சற்று நேரத்தில் உயிர் பிரிந்து விடுகிறது
இது என்ன மாதிரியான அமைப்பு?
மறைந்த ஜனாப் இப்ராஹிமிற்கு வயது ஐம்பது + தான். மிக ஒழுங்கான
வாழ்க்கை நடைமுறை, தொழுகை, வணக்கம், உணவுக்கட்டுப்பாடு.
ஒரு அறிகுறியாவது தெரியவேண்டாமா . நோயில் படுக்கவில்லை அசதிஎன்று
வீட்டிலேயே தொழவில்லை .
இப்படியெல்லாம் சிந்திப்பது தவறா என்றும் தெரியவில்லை.
மனதில் பட்டதை அப்படியே வடிகட்டாமல் எழுதிவிட்டேன்.
இரக்கமே உருவான ஏக இறைவன் பிழைஇருந்தால் மன்னிப்பானாக.
மறைந்த ஜனாப் இப்ராஹிமிகிற்கு மண்ணறையின் வேதனையிலிருந்தும் கேள்விக்
கணக்கில் இருந்தும் விடுதலை அளித்து ,நல்ல சுவனப்பதவியைக் கொடுக்கவும்
தலைவன் இன்றித் தவிக்கும் அவர் குடும்பத்துக்கு இந்த ஈடு செய்ய
முடியாத இழப்பைத் தாங்கும் மன வலிமையைக் கொடுக்கவும்
எல்லாம் வல்ல ஏக இறைவனிடம் இறைஞ்சுவோம்.
நிறைவாக
நேற்று என்பது காலாவதியான காசோலை, நாளை என்பது பின் தேதியிட்ட காசோலை
;இரண்டினாலும் எந்தப்பயனும் இல்லை .
இன்று என்பது நம் கையில் உள்ள பணம் என்று சொல்வார்கள்.. இதெல்லாம்
பழைய மொழி ஆகிவிட்டது .
இந்த நொடி மட்டும்தான் நமக்கு உரியது.
எனவே கூடிய மட்டும் வீண் விவாதங்கள், பகைமை, காழ்ப்புணர்ச்சி எல்லாம்
தவிர்த்துஇறை வணக்கத்திலும் இறை நினைப்பிலும் ஈடு பட்டு எளிய இனிய நிறைவான
மகிழ்வான பயனுள்ள வாழ்க்கை வாழ்வோம்
வாழ்க்கை வாழ்வதற்கே
No comments:
Post a Comment