வங்கி மேலாளர்களுக்கு மாற்றலாகிப்போகும் இடங்களில் எல்லாம் வங்கி
குடியிருப்பு(Quarters) வசதி
செய்து கொடுக்கும்
ஆனால் எனக்கென்னவோ பெரும்பாலான இடங்களில் நான் போய்தான் ஒரு நல்ல
வீட்டைத் தேடிக்கண்டுபிடித்து அதை வங்கிக்குடியிருப்பாக பதிவு செய்வது போல்
அமையும்
ஒரு ஊரில் வங்கிக்கு அருகிலேயே ஓரளவு நல்ல வசதியான குடியிருப்பு
இருந்தது. அதன் உரிமையாளர் வங்கி கொடுத்ததை விட அதிக வாடகை வரும்படி வேறொரு அரசு அலுவலருக்குக் கொடுக்க எண்ணி வங்கியுடன உள்ள
ஒப்பந்தத்தை நான் அந்த ஊருக்குப் போகுமுன்பு முறித்து விட்டார்.
நான் அந்த ஊருக்குப்போய் நல்ல வீடு ஓன்று பார்த்து அதைக்குடியிருப்பாக
பதிவு செய்தேன்.
வங்கி விதிகளுக்கு உட்பட்டு நான் பேசிய வாடகைத் தொகையைக் கேட்டு அந்த
பழைய குடியிருப்பு உரிமையாளர் ஒரு பெருமூச்சோடு
இவ்வளவு வாடகை என்றால் நான் உங்களுக்கே கொடுத்திருப்பேனே என்றார் .
நீங்கள் இதைப்பற்றி என்னிடம் எதுவுமே பேசவில்லையே என்று நான்
பதிலுரைக்க
ச்சே பழைய மேனேஜர் எனக்கு சரியான தகவல் சொல்லாமல் விட்டு விட்டார்
என்று அங்கலாய்த்தார்
அந்தப்பழைய குடியிருப்பு சில அரசு நடைமுறைகளால் ஓராண்டுக்கு மேலாக
யாரும் குடிவராமல் வாடகை இல்லாமல் பூட்டியே கிடந்தது.
பேராசை பெரு இழப்பு
என்னைப்பார்க்கும் போதெல்லாம் புலம்பித்தள்ளுவார் அந்த உரிமையாளர்..
இதே கிளையில் இன்னும் சில நிகழ்வுகள்:
ஒரு நல்ல வாடிக்கையாளர். அந்த ஊரின் பல நிறுவனங்களின் உரிமையாளர் .தன்
நகையை தன் ஊழியர் ஒருவரின் பெயரில் வங்கியில் அடகு வைத்துப் பணம் வாங்கினார்.
அந்த ஊழியர் தன் குடும்பப்பிரச்சனையால் ஒரு இரவில் யாருக்கும்
தெரியாமல் ஊரை விட்டுப் போய்விட்டார்.
அவர் கையெழுத்துப் போட்டால்தான் நகையை திருப்ப முடியும். அந்த நல்ல
வாடிக்கையாளர் ஒருநாள் என்னிடம் அந்த நகைக்குப் பணம் கட்டி விடுகிறேன்,, நகையைக்
கொடுத்து விடுங்கள் என்று சொன்னார் .
இதன் பின்புலம் எல்லாம் தெரியாத நான், பணம் கட்டினால் நகையைக்
கொடுத்து விடலாம் என்று சொன்னேன்.
அடுத்தநாள் அந்த வாடிக்கையாளரின் ஊழியர் ஒருவர் வங்கிக்கு வந்து பணம் கட்டி விட்டு நகையை
வாங்கக் காத்திருந்தார். .என்ன நகை வைத்தீர்கள் என்று வழக்கமான கேள்வியை நான்
அவரிடம் கேட்க அதெல்லாம் எனக்குத் தெரியாது .எங்கள் உரிமையாளர் பணத்தைக்கட்டி
நகையை வாங்கி வரும்படி சொன்னார் , இது பற்றி ஏற்கனவே உங்களிடம் சொல்லிவிடாராமே
என்றார். உங்கள் பெயர் என்ன என்று கேட்டேன், அவர் சொன்னது நகை வைத்தவரின்
பெயரில்லாமல் வேறு பேராக இருந்தது.
நகை வைத்தவர் எங்கே என்று கேட்டேன். அவர்தான் ஊரை
விட்டுப்போய்விட்டாரே என்றார்.
நான் அந்த வாடிக்கையாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். இது
என்ன குழப்பம் என்று கேட்டேன். குழப்பம் இருப்பதால்தான் உங்களிடம் சொன்னேன். பணம்
கட்டினால் நகையைத் தருவதாய் நீங்கள் ஒத்துக்கொண்டீர்களே என்றார்
இந்த வரலாறு எல்லாம் எனக்குத் தெரியாது நீங்களும் ஒன்றும் விளக்கமாக
சொல்லவில்லை என்றேன்.
இப்போது நான் அனுப்பிய ஊழியரிடம் நகையைக் கொடுக்க முடியாதா, அது என்
நகைதான் என்றார்.
சரி நீங்கள் ஒரு நல்ல வாடிக்கையாளர் என்பதால் ஒரு சிறிய விதி மீறல்
செய்து நகையைக் கொடுத்து விடுகிறேன் , நீங்கள் ஒரு சாட்சிக் கையெழுத்துப் போட்டு
விடுங்கள் என்றேன்,.
ஐய்யையோ நான் எப்படி சாட்சி போட முடியும் என்றார் .அப்படிஎன்றால்
நானும் நகையைத் தர முடியாது என்றேன்.
அப்போ நகையை ஏலம் விடுங்கள் நான் யாரையாவது வைத்து வாங்கிக்கொள்கிறேன்
என்றார்.
நகைக்கடன் முழுதும் கட்டிவிட்டீர்கள் , வங்கிக்கு வர வேண்டிய தொகை
எதுவும் இல்லை .எனவே ஏலம் விடமுடியாது என்று சொல்லி விட்டேன்,
நான் அந்தக்கிளையை விட்டு மாறுதல் ஆகிப்போகும் வரை நகை வங்கியில்தான்
இருந்தது
அடுத்து சில பணியாளர்கள் பற்றி
வேறு கிளையில் இருந்து மாற்றலாகி வந்த அலுவலர் (ஆபிசர்) ஒரு விவசாய
அதிகாரி. எங்கள் கிளையில் பெரிதாக விவசாயக்கடன் ஒன்றும் கிடையாது . எனவே விவசாய
அதிகாரி தேவையும் இல்லை. இருந்தாலும் அவரை கடன் பிரிவில் அமர்த்தினேன்.
அவரின் சில செயல்பாடுகள் விரும்பத்தகாதவையாக இருந்ததால் கடன் பிரிவில்
வேறு ஒரு அலுவலரை அமர்த்தி விட்டு அவரை வைப்பு நிதிப்பிரிவில் அமரச்செய்தேன்.
அவர் எதோ காயம் பட்டது போல் குரல் எழுப்பினார், நான் விவசாய அதிகாரி
என்னைக் கண்ட கண்ட வேலையெல்லாம் பார்க்கச் சொல்ல முடியாது என்று வாதிட்டார்.
கிளை மேலாளர் என்ற முறையில் நான் சொல்லும் அலுவலகப்பணியை நீங்கள்
செய்துதான் ஆக வேண்டும். மேலும் உங்கள் மாற்றல் ஆணையில் உங்களை ஒரு விவசாய
அதிகாரியாகக் குறிப்பிடவில்லை பணி செய்ய மறுத்தால் நான் மேலதிகாரிகளுக்கு எழுத்து
மூலம் புகாரளிக்க வேண்டியிருக்கும் என்று சொன்னவுடன் அரை மனதோடு பணியைத் தொடர்ந்தார் .
அலுவலர் சங்கதிடம் (ஆபிசர்ஸ் அசோசியன்) என்னைப்பற்றி புகார் செய்தார் .அவர்கள் வங்கிக்கு வந்து
பேசிவிட்டு மேலாளர் தரப்பில் எந்தத் தவறும் இல்லை .உங்களை நீங்கள் சரி செய்து
மனநிலையை மாற்றிகொள்ளுங்கள் என்று அவரிடம் சொல்லிப்போனார்கள்
அவரோடு தினமுமே பிரச்சனைதான். அவருக்கு ஏதாவது தேவை என்றால் மட்டும் பல்லைக்காட்டிக்கொண்டு பணிந்து குழைந்து
பேசுவார்..அவர் குடும்பம் அவரை விட்டுப் பிரிந்து போய் விட்டதாய் பின்னால்
அறிந்தேன்.அதற்காக ஒரு பரிவு காட்ட முடியாத அளவுக்கு அவருடைய நடவடிக்கைகள்
எரிச்சல் ஊட்டுவதாய் இருக்கும்.
இப்படி இருந்தும் அவருக்கு ஆண்டு இறுதி மதிப்பீட்டில்(annual appraisal report) நல்ல
மதிப்பெண் கொடுத்தேன். அதற்கு நன்றி தெரிவித்து தான் நடந்து கொண்ட முறைக்கு
வருத்தமும் தெரிவித்தார் .
இவருக்கு எதிர் மாறாக ஒரு எழுத்தர் அதே கிளையில் .மிகச் சிறப்பாக பணி
செய்வார். சற்று பேச்சுத்தான் அதிகமிருக்கும். ஆனால் ஆண்டு இறுதி கணக்கு
முடிக்கும் காலம் வந்து விட்டால் பேச்சு நின்று விடும். பணியில் முழு கவனமும்
செலுத்தி அவரே மற்ற எழுத்தர்களுக்கும் வேலையைப் பகிர்ந்து கொடுத்து நல்ல முறையில்
எளிதில் முடித்து விடுவார் .கிளையின் ஆண்டு இறுதி அறிக்கையில் கையெழுத்துப்
போடுவது மட்டுமே என் வேலையாக இருக்கும்..
பொதுவாக ஆண்டு இறுதி கணக்கு முடிக்கும் நேரம் என்றால் அலுவலர்களும்
மேலாளரும் இரவும் பகலுமாக பல நாட்கள் கடுமையாக பணியாற்ற வேண்டியிருக்கும். அந்த
நிலையை மாற்றி அமைத்த அந்த எழுத்தரை இன்று கூட நன்றியுடன் நினைக்க முடிகிறது.
அவர் மட்டும் அல்ல அந்தக்கிளையில் இருந்த எல்லா எழுத்தர்களுமே மிக
நல்ல முறையில் பணியாற்றி ஒத்துழைப்பார்கள்
அதற்கு நேர்மாறாக சில அலுவலர்கள் .ஏற்கனவே ஒருவர் பற்றி
குறிப்பிட்டேன். இன்னொருவர் தாமரை இலைத் தண்ணீர் போல் பட்டும் படாமல் ஒட்டாமல்
இருப்பார்.
அருகிலுள்ள நீதிமன்றத்துக்கு வங்கிப் பணிக்காக சென்ற அவர் அடுத்தநாள்
காலையில்தான் வங்கிக்கு வந்தார்.வந்து நீதி மன்றம் போய்வந்ததற்காக பயணப்படிப்
பட்டியலை என்னிடம் கொடுத்தார் அன்று
நீதியரசர் விடுமுறையில் சென்று விட்டதால் வழக்குகள் எதுவும்
எடுதுக்கொள்ளப்படவில்லை என்பதும் அந்த அலுவலர் அன்று முழுதும் தன் சொந்த வேலையாக வேறு
ஒரு ஊரில் உள்ள கிளையில் இருந்தார் என்பதும் எனக்கு ஒரு நண்பர் மூலம் தெரிய வந்தது
.
இது பற்றி மேலதிகாரியை நேரில் சந்தித்துத் தெரிவித்தேன் , அவர் சொன்ன
பதில் எனக்கு திகைப்பை ஏற்படுத்தியது
“ அவரைப்பற்றிஎல்லாம் என்னிடம் சொல்லாதீர்கள் . அவர் மேல் நடவடிக்கை
எடுத்தால் எனக்குப் பிரச்சினை வரும் “
என்று அச்சத்துடன் பேசினார்.
“அச்சம் என்பது மடமையடா “
என்று பாட நினைத்தேன். . நாக்கைக்
கட்டுப்படுத்திக்கொண்டேன்
அந்த அலுவலர் கொடுத்த பயணப்படிப்பட்டியலை நான் மேலிடத்துக்கு அனுப்பவும் இல்லை. அவரும்
அது பற்றிக் கேட்கவும் இல்லை –
குற்றமுள்ள நெஞ்சு
பொதுவாக அந்தக்கிளை வாடிக்கையாளர்கள் நல்லவர்கள் . ஓரளவு நல்ல சேவை
செய்தால் நிறைய வைப்பு நிதி வரும் வரும் என்பதை விட வந்து குவியும் என்பதே
பொருத்தமாக இருக்கும்
கடன் கேட்டு வருபவர்கள் மிகக்குறைவே . காலை பத்து மணிக்கு ஒரு வாடிக்கையாளர் வந்து
எனக்கு இன்றே ஒரு லட்சம் ரூபாய் டிராக்டர் வாங்க கடன் தர முடியுமா என்று கேட்டார்.
அவருடைய வரவு செலவுகளைப் பார்த்து விட்டு
மதியம் ஒருமணிக்குள் நான் சொல்லும் ஆவணங்கள் எல்லாம் கொண்டு வந்தால்
இன்றே கடன் தர முயற்சிக்கிறேன் என்றேன்
அதே போல் எல்லா
ஆவணங்களையும் கொண்டு வந்து, அன்றே கடன்
பெற்று மகிழ்ச்சியாகச் சென்றார்.
இது என் தனி முயற்சி அல்ல. முன்பு குறிப்பிட்டதுபோல் நல்ல எழுத்தர்கள்
, நல்ல ஒரு சில அலுவலர்களின் ஒத்துழைப்பினால்தான் இது சாத்தியமாயிற்று
இன்னும் சில வாடிக்கையாளர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வைப்பு
நிதியில் பணம் செலுத்த வருகிறேன் . வைப்பு நிதிச் சீட்டு எழுதி வையுங்கள் என்று
விபரங்கள் சொல்வார்கள். அவர்கள் வருமுன் சீட்டு எழுதி வைத்து அவர்கள் பணம்
செலுத்தியவுடன் கொடுத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்து அடுத்தடுத்து நிறைய பணம் போடுவார்கள்
இப்போதுள்ள முழுதும் கணினி மயமான சூழ்நிலையில் இது போல் விரைவில் கடன் கொடுப்பதோ , வைப்பு நிதிச் சீட்டு முன்பே எழுதி வைப்பதோ முடியுமா என்று தெரியவில்லை
இன்னும் ஒரேயொரு நிகழ்வைச்சொல்லி தொடரின் இப்பகுதியை நிறைவு
செய்கிறேன்.
பெரிய கட்டைப்பையோடு லுங்கி கட்டிய ஒருவர் என் அறைக்குள் வந்தார்
.இதற்குமுன் அவரைப்பார்த்த நினவு இல்லை.ஒரு ஐம்பதுக்கு மேற்பட்ட வைப்பு நிதி
விண்ணப்பங்களை என் முன் வைத்தார். எல்லாம் முறையாகப் பூர்த்தி செய்து கையொப்பம்
இட்டு அறிமுகப்படுத்தியவரின் கையெழுத்தும் இருந்தது .
எல்லாவற்றிலும் தொகை இருபதாயிரம் ரூபாய்க்கும் சற்று குறைவாக..
மொத்தத்தொகை பத்து லட்சம் ரூபாயை கட்டைப்பையில் இருந்து எடுத்து
என்னிடம் கொடுத்தார்
. அந்தக் கால கட்டத்தில் அது
மிகப்பெரிய தொகை..எந்த ஒரு வங்கி மேலாளருக்கும் அவ்வளவு பெரிய வைப்பு நிதியை
வேண்டாம் என்று சொல்ல மனம் வராது
ஒரு சில நொடிகள் குழப்பம் தயக்கம் .இதில் எதாவது விதி மீறல்
இருக்கிறதா என்று. .ஒரு நபரிடமிருந்து மொத்தம் இருபதாயிரத்துக்கு மேல் பணமாக
வைப்பு நிதி வாங்கக்கூடாது ஆனால் இதில் எல்லாம் வேறு வேறு பெயர்கள், முதிர்ச்சி
தொகை கூட இருபதாயிரத்தைத் தாண்டாது .
அறிமுகக் கையெழுத்துப் போட்டவர் வங்கியின் மிகப்பெரிய நல்ல
வாடிக்கையாளர். அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். .
“வேறு வங்கிக்குப் போக வேண்டிய தொகை அது. நான்தான் உங்களுக்காக,
உங்கள் சிறப்பான சேவைக்காக உங்களிடம் அனுப்பி வைத்தேன். அங்கு வந்திருப்பவர்
எனக்கு நன்கு தெரிந்தவர், உறவினரும் கூட. எந்தத் தயக்கமும் இன்றி நீங்கள் தொகையை
வாங்கிக்கொள்ளலாம். இதில் சிக்கல் எதுவும் வராது “
என்று உறுதியளித்தார்
கடன் வழங்குவதில் மட்டுமல்ல , வைப்புநிதி, சேமிப்புக்கணக்கு
இவற்றிலும் விதிமுறைகளை மீறக்கூடாது . . மீறினால் குற்றப்பத்திரிகை ,
புலனாய்வுத்துறை விசாரணை ஏன் பணி நீக்கம் வரை போகும் வாய்ப்புண்டு,.
பலருக்கு இது நடந்திருகிறது .
நீ மட்டும் எப்படி மீறினாய் என்று கேட்கிறீர்களா ? நான் செய்தது விதி
மீறல் அல்ல. .வங்கியின் நலனுக்கும் , மேலாளரின் நலனுக்கும் பாதிப்பு ஏற்படாமல்
விதியை சற்று வளைத்தல்.,வளைக்கும்போது ஒடியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் .
சென்ற பகுதி
பற்றி கருத்துகளும் பாராட்டுக்களும் தெரிவித்த
ஜோதி அக்கா , ரவிராஜ் ராஜா சுப்ரமணியம் அனைவருக்கும் நன்றி
[11:37, 7/16/2017] Cb rtd Raviraj:
_Really good
introspection _
[11:3 8, 7/16/2017] :
All
good individuals are looking alike …
Jothy
Liakath
[11:47, 7/17/2017] : எதிர்ப்புகளை
கண்ணியத்துடன் அணுகி கட்டுப்பாடு குறையாமல் கடமைகள் பணியாற்றுவது சினிமா கா
நாயர்களுக்கு மட்டு மல்ல. சாதாரணமான மனிதர் மனிதர் களுக்கும் அத்திய மே என்பது
வங்கி ஊழியர் சரவணன் கதை மூலம் நிரூபனமானது.சம்பவங்களை அழகான வரிகளாகச் கோர்த்து
சுவாரசியமா க வெளிக்கொண்டு வரும் உன் எழுத்து நடைக்கு மீண்டும் ஒரு சபாஷ்.
CB rtd Raja Subramaniaiam
It is all in the game!
இ(க)டைச்செருகல்
சாந்தியும் சமாதானமும் நிறைந்த
(சலாமத்தான) இம்மை வாழ்வும் , மறைவும் மறுமை வாழ்வும் அருள இறைவனிடம் இறைஞ்சி
வேண்டுவது இசுலாமியர் வழக்கம்
ஒரு ஊழியரின் தந்தையின் மறைவுக்கு
வங்கியில் இருந்து போயிருந்தோம் . மறைந்தவர் .தொடரி துறையில் பணியாற்றி
ஓய்வுபெற்றவர்
சாதிப்பிரச்சனையால் எங்களுக்கு
இடுகாட்டில் இடம் கிடயாது. ஆற்றங்கரையில்தான் புதைப்போம். ஆற்றில் வெள்ளம் வந்தால்
மண் கரைந்து மிதக்கும் என்று அந்த ஊழியர் சொன்னது நெஞ்சைப் பிசைவது போல் இருந்தது
.
சலாமத்தான மறைவு என்பதில் நல்லடக்கமும்
உள்ளடக்கமோ என்ற சிந்தனை வந்தது
நள்ளிரவில் விடுதலை பெற்றோம் விடியவே
இல்லை என்ற வரிகளும் நினைவில் வந்தன.
தங்கள் கருத்துக்களை எதிர்நோக்குகிறேன் .
இறைவன் நாடினால்
மீண்டும்
சந்திப்போம்
வலை நூல் முகவரி
கூகிள் தேடலில்
sherfuddinp.blogspot.com