Thursday, 6 July 2017

கதைப்பயணம்






வாழ்க்கைப் பயணமும் வங்கி அனுபவங்களும் என்ற தலைப்பில் முப்பதுக்கும்மேற்பட்ட  பதிவுகள் வெளியிட்டேன்
அந்தந்த ஊர் பற்றி எழுதும்போது வங்கி அலுவலர் பற்றி எழுதினால் அந்தகிளை அலுவலர்கள்  பற்றி குறிப்பிட்டு எழுதுவது போல் இருக்கும் என்பதால்..  அதில் பெரும்பாலும் வங்கி , அதன் அலுவலர்கள் பற்றிய செய்திகளை தவிர்த்து விட்டேன்.   
மேலும் வங்கி பற்றிய செய்திகளை சொல்லும்போது எனக்குப் புரிந்தது எல்லோருக்கும் புரியும்படி சலிப்புத்தட்டாமல் சற்று சிரத்தை எடுத்து எழுதவேண்டும்
இதை மனதில் நிறுத்திக்கொண்டு வங்கி நிகழ்வுகள், அலுவலர்கள் பற்றி கதை வடிவில் சில பகுதிகளாக எழுத எண்ணி இறைவன் துணையுடன் துவங்குகிறேன்
எழுதும் நிகழ்வுகள் அனைத்தும் முழுக்க முழுக்க உண்மை . பெயர்களை மட்டும் மாற்றிக் குறிப்பிடுகிறேன்,

 

 

 

கடவுளின் கணக்கு


தகவல் தொழில் நுட்ப பெரு நிறுவனங்கள் நம் நாட்டின் கலாச்சாரம், சமூகம், பொருளாதாரம் தனி மனிதன் உடல் மன நலன்களில் ஏற்படுத்திய தாக்கம் நாம் எல்லோரும் அறிந்ததே.
சில பல புதிய சொற்களையும் பழைய சொற்களை புதிய பொருளிலும் புழங்க வைத்து மொழியிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது . Gang; escalate போன்ற சொற்கள் மிகவும் மாறுபட்ட பொருளில் பயன்படுத்தப்படுகின்றன
குற்றம் புரியக் கூடும் கூட்டம் என்பது gang  என்ற சொல்லுக்கு அகராதி சொல்லும் பொருள் .
தகவல் தொழில்நுட்பத்துறையில்  gang leader என்ற சொல் குழுத்தலைவர் என்ற பொருளில் பயன்படுகிறது
மிக வேகமாக அதிகரிக்கும்) (rapidly increasing) என்பது escalate என்ற சொல்லுக்கு அகராதிப்பொருள் .
உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்வது என்ற பொருளில் இது பயன்படுகிறது
இன்னொரு சொல்  தனியார் பெரு நிறுவன ஊழியர்கள் குறிப்பாக தகவல் தொழில் துறை பணியாளர்கள் மிகவும் பரவலாகப் பயன்படுத்தும் சொல் HR manager .மனித வளத்துறை மேலாளர் – இவர்தான் ஆக்கல் காத்தல் அழித்தல் எல்லாம் செய்யும்  ஆற்றலும் வல்லமையும் படைத்தவர் என்பது போல் .ஒரு அச்சம் கலந்த மரியாதையுடன்  பார்க்கப்படுபபவர்
வங்கியில் இந்த சொல் இன்னும் சற்று விரிவாக  HRD  (Human resources development ) மனித வள மேம்பாடு என்று பயன்படுத்தப் படுகிறது.
பெயர்தான் மாற்றம் மற்றபடி இங்கும் HRD மேலாளர் என்றால் எதோ மாறுபட்ட உயர் பிறவி  போல்தான்.. அவர் யாரையும் கனிவாகப்பார்ப்பதோ புன்னகை புரிவதோ கூடாது. அவர் கையில் இருந்துதான் எல்லோருக்கும் ஊதியமே கொடுக்கிறார் என்பது போல் ஒரு மனோ நிலை
 சில நல்ல மாறுபட்டவர்களை மிக அரிதாக மிக மிக அரிதாகக் காணலாம்.

பதவி கொடுக்கும்அதிகார போதையின் உச்ச கட்டத்தில் இருக்கும்(இருந்த) ஒருவர்
நாகராசன் .
வட்ட அலுவலகத்தில் HRD manager
பாம்பு போல் சீறிக்கொண்டே இருப்பார்.
வயதில், பணியில், பதவியில் மூத்தவர்கள் யாரையும் சட்டைசெய்யாமல் தூக்கி எறிந்து தாக்கிப்பேசுவார்  காரணமேயில்லாமல் சிடுசிடுப்பார் சீறுவார் ,
அவர் பயன் படுத்தும்  சொல்லாயுதங்கள் – ஓன்று வேறு ஊருக்கு மாற்றி விடுவேன் . மிகவும் முதியவர்கள் என்றால்
 you will not retire peacefully   .,
இந்த இரண்டாவது ஆயுதம் முதியவர்கள் மனத்தைக் குத்திக்கிழித்து புண்ணாக்கிவிடும் மிகக்கொடுமையான ஓன்று
வங்கியில் நல்ல முறையில் பணி ஓய்வு பெறுவது ஒவ்வொருவரின் கனவு, விருப்பம், வேண்டுதல் .குறிப்பாக மேலாளர், அதற்கு மேல் உள்ள அலுவலர்கள் எல்லோரும் விரும்பி வேண்டுவது ஆயுள் கால பணி வீணாகாமல் நல்ல முறையில் ஒய்வு பெறுவதுதான்.
வங்கியின் எல்லா நடவடிக்கைகளும் பணம் சம்பந்தப்பட்டதாக இருப்பதால் சிறிய தவறு கூட பெரிய இழப்பில் முடியலாம். என்றோ எங்கோ செய்த தவறுகள் பணி ஒய்வுக்குத்தடைக் கல்லாகி விடும் .இது கிளை மேலாளர் முதல் பொது மேலாளர் வரை பலரும் எதிர்கொள்ளும் ஒரு பூதாகரமான பிரச்சனை
பணி ஓய்வை எதிர் நோக்கி ஆவலுடன் காத்திருப்பவர்கள் ஒய்வு நாளன்று இடை நீக்கம் செய்யப்படுவது வங்கியில் ஒரு வழமையான கொடுமையான நிகழ்வாக இருந்தது. அப்படி ஒரு நிகழ்வு நடந்தால் பணிக்கொடை , ஓய்வூதியம் எல்லாம் நிறுத்தி வைக்கப்படும் .அதற்கெல்லாம் மேல் தாங்கமுடியாத மன உளைச்சலை உண்டாக்கும்
இது போன்ற கொடுமை நடக்கிறதோ இல்லையோ இப்படிச்சொல்லி அச்சுறுத்துவது ஒரு கீழ்த்தரமான , கயமைத்தனமான செயல்..
என்ன செய்வது பரமசிவன் கழுத்திலுள்ள பாம்பு கருடனை சீண்டிப்பார்க்கிறது .
ராமலிங்கம் ஒரு கிளை மேலாளர்.
தானுண்டு தன வேலையுண்டு என அமைதியாக நேர்மை தவறாமல் பணியாற்றுபவர். இந்த நேர்மை அவருக்குப் பல வகையில் இடைஞ்சலாக இருந்தாலும் உயர் அதிகாரிகள் பலர் அவரை பெரும்பாலும் நல்ல மதிப்பாக நடத்துவார்கள்
அவர்  தலைஎழுத்து அவர் பணி நிறைவேறும் காலத்தில் நாகராசன் பணியாற்றிய வட்டத்தில் ஒரு கிளையில் மேலாளராகப் பொறுப்பேற்றார் .
நாகராசனும் ராமலிங்கமும்  நேரில் சந்தித்த தருணங்கள் வெகு சிலவே. இருந்தாலும் நாகராசன் அடிக்கடி ராமலிங்கத்தை  சொல்லம்புகளால் தாக்கிக்கொண்டே இருப்பார்
ராமலிங்கம்  அமைதியாக இருந்துவிடுவார். அவருக்குத்தெரியும் .தன் நீண்ட பணிக்காலத்தில் மனதறிந்து எந்தத் தவறும் செய்தது கிடையாது.. முன்பு பணியாற்றிய கிளைகளில் இருந்த சிறு சிறு பிரச்னைகள் எல்லாம் சரி செய்யப்பட்டு, அதற்கான சான்றுக்கடிதமும் பெற்று மேலதிகாரிகளுக்கு அனுப்பி விட்டார்
இருந்தாலும் நாவினால் சுடும்போது பொறுக்க முடியாத வடுவும் வலியும் ஏற்படுகிறதே  .
மனதுக்குள் ஒரு எண்ணத்தை உறுதியாக வளர்த்துக்கொண்டார். நல்ல முறையில் பணி ஓய்வுபெற்ற பின் நாகராசனைத் தொடர்பு கொண்டு  நான் இறைவன் அருளால்  இன்று எந்த சிக்கலுமின்றி பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டேன் ..பலரின் சாபத்துக்கும் வெறுப்புக்கும் உள்ளான உங்கள் கதி என்னவென்று யாருக்குத் தெரியும் என்று சொல்லி விட வேண்டும் என்பதுதான் அது

இதற்கிடையில் வட்ட அலுவலகத்தில் நடந்த ஒரு நிகழ்வு யாரும் எதிர்பார்க்காத , கனவிலும் நினைக்காத ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது
வட்ட அலுவலகத்தில் பணியாற்றிய ஓரு எழுத்தர் தன் சொந்த ஊருக்கு மாற்றல் கேட்டு பல ஆண்டுகள் முயற்சித்து மாற்றல் ஆணையும் பெற்று விட்டார்.
சாமி வரம் கொடுத்தும் பூசாரி வரம் கொடுக்க மறுத்துவிட்டார். மாற்றப்பட்டவருக்கு பதிலாக ஒரு எழுத்தர் வரும் வரை இவரை விடுவிக்க முடியாது என வன்மையாக மறுத்துவிட்டார் நம் நாகராசன் .
பல நாட்கள், வாரங்கள் மாதங்கள் கெஞ்சிக் கேட்டுப்பார்த்த எழுத்தர் மனம் சலித்து ஒரு புதுமையான போராட்டத்தில் இறங்கி விட்டார் ,.
எல்லோரும் வியக்கும்  விதமாக ஒரு நாள் அலுவலகத்துக்கு வெறும் உள்ளாடையோடு வந்து தன் இருக்கையில் அமர்ந்து பணியாற்றத் துவங்கினார்
குரங்குக்கு தேள் கொட்டியதுபோல் சினத்தின் உச்சிக்குப்போன நாகராசன் தன்னை மறந்தார், தன் நிலையை மறந்தார் . அந்த எழுத்தரை  கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு போய் ஓர் அறையில் அடைத்து அறையைப் பூட்டி விட்டார். வங்கியின் கண்ணியத்தையும் மானத்தையும் காப்பாற்றி விட்டோம் என்பதை விட தவறு செய்த ஒருவரை கடுமையாய்த்தண்டித்து தன் அதிகார பலத்தை வெளிப்படுத்திய  பெருமை அவருக்கு.
அலுவலகம் முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது இந்த நிகழ்வு. .ஊழியர்கள் சிலர் ஊடகங்களுக்குத் தகவல் தெரிவிக்க , காட்சி ஊடகத்தினர் உடனே வந்து உடைக்கும் செய்தியாக நேரலையில் ஒளிபரப்ப அந்த ஊர், மாநிலம் , நாடு ,உலகம் என்று எல்லா இடங்களுக்கும் பரவி விட்டது .
வங்கியின் தலைமை அலுவலகத்துக்கும் செய்தி பறந்தது. உடனடியாக அவர்கள் செயல்பட்டு ஒரு அதிரடி முடிவெடுத்தார்கள் .
நாகராசனை  வட கிழக்கு  மாநிலத்தில் உள்ள ஒரு கிளைக்கு மேலாளராக (Branch in charge ) மாறுதல் செய்து உடனடியாக வட்ட அலுவலகத்தில் இருந்து விடுவித்து ஆணை பிறப்பித்தனர்
 ஒரு நொடி முன்பு வரை சீறிய  பாம்பு இப்போது புழுவாக  நெளிகிறது
முடிசூடா மன்னராக வலம் வந்த அதே அலுவலகத்தில் எல்லோராலும் புறக்கணிக்கப்பட்ட ஒருவராகி விட்டார். அலுவலர் சங்கம் கூட அவருக்கு பரிந்து பேச முன்வரவில்லை .அந்த அளவுக்கு வெறுப்பை சம்பாதித்து சேமித்து வைத்திருந்தார் நாகராசன்
அவர் மாற்றப்பட்ட  கிளை மிகப்பெரிய அளவில் பிரச்சனைகள் நிறைந்த ஒரு பெரிய கிளை என்பது கூடுதல் தகவல்.
வினை விதைத்தவருக்கு அறுவடைக்காலம் .
இந்த நிகழ்வு நடந்த அன்றுதான் ராமலிங்கம் நல்ல முறையில் எந்த விதமான இடர்பாடும் இல்லாமல்  பணி ஒய்வு பெறுகிறார் என்பது இறைவன் போட்ட கணக்கு. .
கூட்டிக்கழித்து பெருக்கி வகுத்து கணக்கை நேர் செய்து விட்டான் அவன்  .
ராமலிங்கத்துக்கு  நாகராசனிடம் பேச வேண்டிய அவசியம் இல்லாமல் போய் விட்டது.
                     @@@@@@ @@@@@  @@@@@

பின் குறிப்பு
மனதில் தோன்றுவதை அப்படியே எழுதித்தான் இது வரை பழக்கம்.. இப்போது அதை சற்று மாற்றி சிறிது சிந்தித்து எழுத வேண்டியுள்ளது
இது எழுத்தின் ஒட்டத்தில் எதிர் மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்பதை படிக்கும் நீங்கள்தான் சொல்ல வேண்டும்.
உங்கள் கருத்துக்களை எதிர் நோக்குகிறேன். நீங்கள் தெரிவிக்கும் நிறை குறைகளை மனதில் கொண்டு எழுத்து நடையை மாற்ற வேண்டுமா தொடர்ந்து எழுதலாமா அல்லது வேறு ஏதாவது எழுதலாமா என்பது பற்றி சிந்திக்க வேண்டும்.
எனவே நிறை குறைகளை குறிப்பிட்டு உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டுகிறேன்

இறைவன் நாடினால்
 மீண்டும் விரைவில்
சந்திப்போம்

வலை நூல் முகவரி
கூகிள் தேடுதலில்
sherfuddinp.blogspot.com



  



No comments:

Post a Comment