Saturday, 5 October 2019

கதை நேரம் பொறுத்தார் பூமி ஆள்வார்

  பொறுத்தார் பூமி ஆள்வார்

இறைவன் நமக்கு  வழங்கிய அருட்கொடைகள் ஏராளம். 

கல்வி செல்வம், பணம் பதவி , வீடு , வாசல் , உடல் நலம், மன நலம், வணிகத்தில் வெற்றி நல்ல விளைச்சல் நல்ல குடிப்பிறப்பு, நல்ல பெற்றோர் உடன்பிறப்புகள் ,வாழ்க்கைத் துணை, பிள்ளைகள் .,உற்றார் உறவினர் , நட்பு வட்டம்  தொழுகை, வணக்கம் என எல்லாமே அவன் அள்ளிக்கொடுத்த அருட்கொடைகள்தாம் 

ஆனால் இவற்றிற்கெல்லாம் மேலான  அருட்கொடை ஓன்று இருக்கிறது –

.நல்ல பண்பு நல்லகுண நலம் .
இது இல்லாவிட்டால் ஒருவனுக்கு இறைவன் வழங்கிய மற்ற அருட்கொடைகள் எல்லாம் வீண்தான் ஆம் தொழுகை வணக்கம் தான தர்மம் உட்பட

அந்த நல்ல குணத்துக்கு அடையாளமாக பலவற்றை சொல்வதுண்டு . அவற்றில் சிறப்பான மூன்று  பொறுமை, குடும்ப நலம் பேணிப்பாதுகாத்தல், சக மனிதர்களை மதிக்கும் பண்பு

ஓன்று பொறுமை பொறுமை என்றால் சாதாரணப் பொறுமை இல்லை .தன்னை ஒருவன் அவமானப்படுத்தினாலும் வசைபாடினாலும் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் சொல்லாலும் செயலாலும் நடந்து கொண்டாலும் சிறிதும் சினம் கொள்ளாமல் பொறுமை காப்பது

இப்படி ஒரு பொறுமை எல்லோருக்கும் வந்துவிடாது
கண்மணி நாயகம் (சல்) அவர்கள் வாழ்வில் ஒரு நிகழ்வு
மதீனா நகரில் நாயகங்கள் ஒரு சபையிலே அமர்ந்திருக்கிறார் . அப்போது ஒருவர் மிக வேகமாக நபி அவர்களை நோக்கி வந்து உரத்த குரலில்
“ கடன் வாங்கி எத்தனை நாளாயிற்று ! திருப்பிக்கொடுக்கும் எண்ணம் உமக்கு இல்லை போலும் “ என்கிறார்

நாயகம் ஸல் அவர்கள் சிறிதும் சினம் கொள்ளாமல்

“ நான் உங்களிடம் கோதுமை கடனாக வாங்கியது உண்மை, ஆனால் அதை திருப்பித்தர நீங்கள் கொடுத்த காலக்கெடு இன்னமும் இரண்டு நாள் மீதம் இருக்கிறது : என்றார்கள்

“ அதெல்லாம் பேசாதீர் . உமக்கு கடனை திருப்பி செலுத்தும் பழக்கமே கிடையாதே .உமக்கென்ன , உமது பெற்றோர், உமது பரம்பரை, உமது குலம் உமது ஊர் வாசிகள் எல்லோருமே கடன் வாங்கி திருப்பிக்கட்டாமல் ஏமாற்றும் எத்தர்கள் “
என்று வாய்க்கு வந்த படி வசை பாடினார்

நாயகங்கள் வாயே திறக்கவில்லை, சினம் கொள்ளவும் இல்லை

ஆனால் அருகில் இருந்த நபித்தோழர்கள் வெகுண்டு எழுந்தனர் . வீரத்துக்கும் பலத்துக்கும் புகழ் பெற்ற உமர் ரலி அவர்கள் தம் வாளை உருவி வசை பாடியவரின் கழுத்தில் வைத்து விட்டார்

பதைத்துப்போன நபி (ஸல்)
உமரே என்ன காரியம் செய்யத் துணிந்தீர் ! அவர் பேச்சு தப்பானதாக இருக்கலாம் ஆனால் நீர் பொறுமை இழந்தது, சினம் கொண்டது எல்லாமே பெரிய தவறுகள். அதை விடப் பெரிய பிழை அவரைக் கொல்லப் பார்த்தது
இதற்குப் பரிகாரமாக,அவரிடம் நீர் மனம் வருந்தி  மன்னிப்புக் கேட்க வேண்டும்
மேலும் அவரிடம் நான் வாங்கியதைப்போல் மூன்றுபங்கு கோதுமையை அவரிடம் கொடுத்து விடும் “
என்று கட்டளை இட்டார்கள்

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக அந்த வசை பாடிய மனிதர்
“ எல்லாப்புகழும் ஏக இறைவனுக்கே .
வணக்கத்துக்குரிய இறைவன் ஒருவனே .. .
முகமது (ஸல்) அவர்கள் இறைவனின் திருத்தூதர் “
என்று சொல்லி இசுலாத்தில் இணைகிறார் “
பிறகு அவர் சொல்கிறார்

“ நபி பெருமானே என்னை மன்னியுங்கள் .நான் இசுலாத்தில் இணைவதற்காகத்தான் இங்கு வந்தேன்
எங்கள் வேதத்தில் உங்கள் வருகை பற்றியும் உங்களுக்கு இறைவன் அருள இருக்கும் வேதம் மார்க்கம் பற்றியும் மிகத்தெளிவாக பல முறை கூறப்பட்டுள்ளது .உங்கள் பண்பு நலன்கள் பற்றியும் கூறப்பட்டுள்ளது

நீங்கள் மதீனா நகருக்கு வந்ததில் இருந்து உங்கள் சொற்கள் செயல்களை கூர்ந்து கவனித்து வருகிறேன் எங்கள் வேதத்தில் சொல்லப்பட்ட பண்புகள் அனைத்தும் உங்களிடம் நிறைந்து இருப்பதையும் காண்கிறேன்

மிகச்சிறந்த பொறுமையாளர் என்று உங்களைப்பற்றி சொல்லப்பட்டு இருக்கிறது . அதை அறிந்து கொள்வதற்காகவே மிகப் பிழையாக உங்களிடம் பேசினேன் . உங்கள் பொறுமைக்கு எல்லையே இல்லை எனபதை மெய்ப்பித்து உங்கள் மேன்மையை வெளிக்காட்டிவிட்டீர்கள்
என்னை மன்னித்து , இசுலாத்தில் இணைத்துக் கொள்ள்ளுங்கள் “ என்றார்  

இசுலாம் இன்றளவும் உலகெங்கும் நாடு, மொழி , இனம் என்ற எல்லைகளைக் கடந்து உலகெங்கும் பரவி வருவதற்கு நபி பெருமான் அவர்களிடம் நிறைந்திருந்த நற்பண்புகள் ஒரு தலையாயகாரணமாகத் திகழ்கிறது

“மேலும் நபியே நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர் ( அல் குர் ஆன் 68:4)

மீண்டும் அடுத்து சந்திப்போம் இறைவன் நாடினால்

sherfuddinp.blogspot.com
B F W 06102019




     

No comments:

Post a Comment