Sunday 21 February 2016

வாழ்க்கைப் பயணமும் வங்கி அனுபவங்களும் 7.கோவை (கோயம்புத்தூர்) 1


இதமான கோடை.நடுக்கும் குளிர்காலம்.இதுதான் அன்றைய கோவை. நகரின் முக்கிய குடியிருப்புப் பகுதியான ஆர் எஸ் புரத்தில் மைதானத்தை ஒட்டி அத்தாவுக்கு நகராட்சிக் குடியிருப்பு.வீட்டின் பின் தெருவில் பெண்கள் உயர் நிலைப் பள்ளி.மைதானத்தை தா.ண்டினால்  ஆண்கள் உயர்நிலைப் பள்ளி.
பெண்கள் பள்ளியில் அக்காக்கள் மெகராஜ், ஜோதி படித்தார்கள். ஆண்கள் பள்ளியில் நான் ஏழு /எட்டாம் வகுப்புப் படித்த நினைவு..  தம்பி சகாவும் தங்கை சுராஜும் ஆரம்பப்பள்ளியில் படித்தார்கள்.
காரைக்குடியில் இருந்து கோவைக்கு மாறுதல் காரைக்குடியில் கோடை மிதமான  கோடை  மட்டுமே பார்த்திருந்த எங்களுக்கு கோவையின் தட்ப வெட்ப நிலையும் பருவ மாறுதல்களும் புதுமையாகத் தெரிந்தன. குளிர் காலம் முடியும் நேரத்தில் செடிகள் புதிய இலைகளும் மொட்டுக்களும் விடுவது நல்ல வசந்தத்தை நினைவூட்டும்..தேங்காய் எண்ணெய் உறையும் அளவுக்கு குளிர் காலம் அதுவும் தலை முடி நன்கு வளர எங்கள் வீட்டில் தேங்காய் எண்ணெயில் கஷ்மீர் குசும் சேர்த்து வைத்திருப்பார்கள் ‘அந்த இளஞ்சிவப்பு நிறத்தில் எண்ணெய் உறைவது மிகவும் அழகாக இருக்கும்
காரைக்குடியில் நகராட்சி ஆணையராக இருந்த அத்தாவுக்கு கோவை பெரிய ஊர் என்பதால் அங்கு ஆணையரின் நேர் முக உதவியாளாராக பணி மாறுதல் ...இது போன்ற பதவி,,பணி மாற்றங்களில் ஊதியத்தில் பெரிய மாற்றம் இருக்காது. ஊதியம் அதிகமாகக்கூட இருக்கலாம். ஆனால் ஒரு அலுவலகத்தில் முதலாம் இடத்தில இருந்து இன்னொரு பெரிய அலுவலகத்தில் இரண்டாம் இடத்தில் பணி புரிவது மனதளவில் ஒரு பெரிய  சுமையாக இருக்கும்.
இதே கோவையில் பிற்காலத்தில்  நான் வங்கியில் இரண்டாம் நிலை மேலாளராகப் பணியாற்றியபோது இதை, இந்த வேறு பாட்டை , மனச்சுமையை  நன்கு உணர முடிந்ததுகாரைக்குடியில் இருந்து கோவைக்கு மாறுதல் காரைக்குடியில் கோடை மிதமான  கோடை  மட்டுமே பார்த்திருந்த எங்களுக்கு கோவையின் தட்ப வெட்ப நிலையும் பருவ மாறுதல்களும் புதுமையாகத் தெரிந்தன. குளிர் காலம் முடியும் நேரத்தில் செடிகள் புதிய இலைகளும் மொட்டுக்களும் விடுவது நல்ல வசந்தத்தை நினைவூட்டும்..தேங்காய் எண்ணெய் உறையும் அளவுக்கு குளிர் காலம் அதுவும் தலை முடி நன்கு வளர எங்கள் வீட்டில் தேங்காய் எண்ணெயில் கஷ்மீர் குசும் சேர்த்து வைத்திருப்பார்கள் ‘அந்த இளஞ்சிவப்பு நிறத்தில் எண்ணெய் உறைவது மிகவும் அழகாக இருக்கும்
காரைக்குடியில் நகராட்சி ஆணையராக இருந்த அத்தாவுக்கு கோவை பெரிய ஊர் என்பதால் அங்கு ஆணையரின் நேர் முக உதவியாளாராக பணி மாறுதல் ...இது போன்ற பதவி,,பணி மாற்றங்களில் ஊதியத்தில் பெரிய மாற்றம் இருக்காது. ஊதியம் அதிகமாகக்கூட இருக்கலாம். ஆனால் ஒரு அலுவலகத்தில் முதலாம் இடத்தில இருந்து இன்னொரு பெரிய அலுவலகத்தில் இரண்டாம் இடத்தில் பணி புரிவது மனதளவில் ஒரு பெரிய  சுமையாக இருக்கும்.
இதே கோவையில் பிற்காலத்தில்  நான் வங்கியில் இரண்டாம் நிலை மேலாளராகப் பணியாற்றியபோது இதை, இந்த வேறு பாட்டை , மனச்சுமையை  நன்கு உணர முடிந்தது.
கோவைக்கு வருமுன் அக்காக்கள் முத்து ,ஜென்னத்,மும்தாஜூக்குத் திருமணம் ஆகி விட்டது.
கோவையில் இருக்கும்போது அக்கா மெஹராஜுக்குத் திருமணம் நடந்தது. திருமணப் பேச்சுக்களுக்காக பீ.மூ.மாமாவும் சுல்தான் மாமாவும் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார்கள். சுல்தான் மாமாவோடு நான் விடுமுறையைக் கழிக்க திருநெல்வேலி சென்றேன்.. அங்கு விடுமுறை முழுதும் தங்கியிருந்து விட்டு மாமாவோடு சேர்ந்து மெஹராஜ் அக்கா  திருமணத்துக்கு திருப்பத்தூர் வந்து விட்டேன்,
திருநெல்வேலியில் தங்கியிருந்த நாட்களில் மாமா , மாமி (சையது பாத்து அக்கா,),மாமா மக்கள் மைதீன் ரஷீதா எல்லோரும் அன்பைப் பொழிந்து உபசரித்தார்கள். மாமா வீட்டுக்கு எதிரில் பள்ளிவாசல். அங்கு காலையில் ஒதப் போவேன். மாமா வேலை பார்த்த ஈனா கடைக்கு நானும் போவேன்..நகரின் முக்கியப் பகுதியான ரத வீதியில் உள்ள அந்தக் கடையில் பொழுது நன்றாகக் கழியும்..அடிக்கடி மாமாவோடு திரைப்படங்களுக்கும் செல்வேன்.
மெஹராஜ்அக்கா  திருமணம் முடிந்த கையோடு அத்தாவுக்கு திருநெல்வேலிக்கே ஆணையராக மாறுதலும் வந்து விட்டது..
அக்காமாரின் துணைவர்கள் –கரீம் அண்ணன், முத்தலீப் அண்ணன் ரஹீம் அண்ணன் மூவரும் என்னிடம் மிக அன்புடன் பழகுவார்கள்..சகா சின்னப் பையன். எனவே நான்தான் அவர்களுக்கு வேண்டிய சேவைகளைச் செய்வேன். அவர்களிடமிருந்து நிறையக் கற்றுக்கொண்டேன்.(எங்கள் குடும்பத்தில் தடை செய்யப்பட்ட பல சொற்களில் மச்சான் என்பதும் ஒன்று..எனவே மைத்துனர்களை அண்ணன் என்றே விளிப்போம்)
கரீம் முத்தலீப் அண்ணன்களுக்கு இலக்கியம் கலை ஆர்வம் அதிகம்.ஆங்கில நூல்கள் குறிப்பாக துப்பறியும் புதினங்கள்—பெரி மேசன்-.நூல்களைப் படிக்கத்தூண்டுதல் எனக்கு  கரீம் அண்ணன் மூலம் ஏற்பட்டது. பிறகு ஜேம்ஸ்பாண்ட்,ஜேம்ஸ் ஹாட்லி சேஸ், ஹெரால்ட் ராபின்ஸ்,அலிஸ்டர் மக்லின் போன்ற பல எழுத்தாளர்களின் நூல்களையும் ஏர்போர்ட், மணி சேஞ்சர்ஸ் ஹாஸ்பிடல்என்று பல நூல்களையும் படித்தேன்.
முத்தலீப் அண்ணன் ஒரு நல்ல கலைஞர், வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் ரசித்து அனுபவிப்பவர்.சுகவாசி. அத்தா, முத்தலிப் அண்ணன் ஜென்னத்அக்கா ,தம்பி சகாவுடன் காரில் ஊட்டி போய் வந்தோம். அத்தா ரம்சான் நோன்பில் இருந்ததாய் நினைவு..ஊட்டி ஏரியில் படகில் போகும்போது அண்ணன் படகோட்டியிடம் துடுப்பைக் கொடுங்கள் நான் ஓட்டிப் பார்க்கிறேன் என்று கேட்க அவர் நீங்கள் நினைப்பது போல் படகோட்டுவது எளிதல்ல என்று பணிவாக மறுத்து விட்டார். அண்ணன் கொண்டு வந்த தலையில் தேய்க்கும் எண்ணெயின் ரோஜா மணம் இன்றும் பரவசமூட்டுகிறது
ரகீம் அண்ணன் ஒரு கலைக்களஞ்சியம்.அரசியல். பொருளாதாரம் குரான் ஹதீஸ் என்று எல்லாவற்றிலும் ஆழ்ந்த அறிவு.நல்ல்ல்ல நினைவுத்திறன் ..மைத்துனர்களில் அவர் மட்டும்தான் முது நிலைப் பட்டதாரி. எனக்குத் தெரியாத என் உறவினாகள் பற்றி அவர் முழு விபரமும் விரல் நுனியில் வைத்திருப்பார்- அவர்கள் பிறந்த தேதி உட்பட. சற்று முரட்டுத்தனாமாகத் தோன்றினாலும் எனக்கு அவரை மிகவும் பிடிக்கும்
தொடர்ந்து மூன்று அக்காக்கள் திருமணம், நூரக்கா வெளியூரில் கல்லுரிப்படிப்பு இதற்கிடையில் மெகராஜ் அக்காவின் திருமணப்பேச்சு-அத்தாவைத் தவிர வேறு யாரும் இப்படி ஒரு சூழ்நிலையை மனதிடத்துடன் எதிர்கொண்டிருப்பார்களா என்பது ஒரு மிகப்பெரிய வினா.
வீட்டுக்கு எதிரில் உள்ள திடலில் ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்ற வந்த மூதறிஞர் ராஜாஜியை நேரில் பார்த்தேன். முதுமையால் நடக்க முடியாத . அவரை நாற்காலியோடு சேர்த்துத் தூக்கி மேடையில் வைத்தார்கள்..கோவை நகராட்சியில் ஒரு விழாவுக்காக வந்த (உதவி) குதியரசுத்தலைவர் டாகடர் சார்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களையும் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.
அலுவலக சைக்கிள் ஓன்று வீட்டில் இருந்தது. அதில் நகரின் பல இடங்களுக்கும் சென்று வருவேன், அந்த வயதில் ,அப்போதிருந்த குறைந்த போக்கு வரத்து நெரிசலில் தூரம் ஒரு பொருட்டாகவே தெரியாது..நூல் நிலையத்துக்கு அடிக்கடி போவேன். விவசாயக் கல்லூரி அருகில் நூல் நிலையம் இருந்ததாய் நினைவு.
வீட்டைச் சுற்றி பெரிய தோட்டம் அதில் வான்கோழி (சேவல் ஒன்று கோழி ஒன்று ) வளர்த்தோம். வேலியோரத்தில் நிறைய முட்டைகள் இட்டு குஞ்சுகளும் பிறந்தன . ஆனால் ஓரிரு தினங்களில எல்லாக்குஞ்சுகளும் செல் பிடித்து பரிதாபமாக இறந்து விட்டன
வீட்டுக்கு  அருகில் மிகப்பெரிய அதி நவீன பால் பண்ணை இருந்தது. அங்கு போய் அவ்வப்போது வீட்டுக்கு ஐஸ் கிரீம வாங்கி வருவேன். தெருவில் ஸ்டேட் ஐஸ் என்று தள்ளு வண்டியில் விற்பார்கள் ஒரு அணாவில்(ஆறு பைசா ) இருந்து ஒரு ரூபாய் வரை பல வகையான ஐஸ்கள் கிடைக்கும்
வீட்டின் முன் gate  ஐ இரவில் யார் பூட்டுவது என்பதில் எனக்கும் தங்கை சுராசுக்கும் எனக்கும் அடிக்கடி சண்டை வரும்.
அத்தாவோடு வெள்ளிகிழமை கூட்டுதொழுகை(ஜும்மா)க்குப் போகத் துவங்கியது  கோவையில்தான்,
வீட்டிற்கு எதிர்த்தாற்போல் மைதானம் தாண்டி ஒரு சிறப்பு உறைவிடப்பள்ளி (பார்வை அற்றவற்கு என நினைவு இருந்தது. தீப ஒளித்திருநாள் இரவில் அந்தப்பள்ளியின் பெரிய மதில்ச்சுவர் முழுதும் அழகாக அகல் விளக்குகளை எரிய விட்டது கண்கொள்ளாக் காட்சியாய் நினைவில் நிறைந்து. நிற்கிறது.
தொ;ழில் மேதை ஜி டி நாயுடுவின் அற்புதக் கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்தும் பொருட்காட்சி கோவையில் இருந்தது.. விருந்தினர்களை அங்கே அழைத்துச் செல்வோம்.பலமுறை முகம் மழிக்கக்கூடிய பிளேடு, ,தானியங்கி புகைப்படக்கருவி, திறவுகோல்.இருந்தும் திறக்க முடியாத பேழை மூடியில் இருந்து எடுத்து விட்டால் கைசூட்டில் விரிவடைந்து மூடிக்குள் நுழையாத உலோக உருளை எனப் பல வியப்பூட்டும் பொருட்களைப் பார்க்கலாம். பெற்றோரைப்பற்றி சில விசித்திரமான வாசகங்களும் ஆங்காங்கே காணலாம்.
கோவையில் பேருந்து சேவையை அறிமுகப்படுதியவர் நாயடுதான்,.தன இல்லத்திருமண விருந்தில் இலையில் ஒரு துண்டு  பப்பாளிப்பழம் மட்டும் முழு உணவாக் வைத்து அசத்திய அதிசய மனிதர் அவர்.
அத்தாவின் நெருங்கிய நண்பர்கள் சிலர் பற்றி குறிப்புகளோடு இந்தப் பகுதியை முடிக்க எண்ணுகிறேன், வேளாண் கல்லூரியில் பேராசிரியராக இருந்த ஜனாப் வரிசை அஹமது அத்தாவின் மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவர்..ஆராய்ச்சிப் படிப்புக்காக  நீண்ட விடுமுறையில் இருந்த அவர் ஒரு சிறிய வீட்டில் குடியிருந்தபோதும் பின்னர் படிப்பு முடிந்து பதவியில் அமர்ந்து கல்லூரி வளாகத்தில் மிகப் பெரிய அரசு இல்லத்தில் குடியேறிய பின்பும் எங்கள் குடும்பமும் அவர் குடும்பமும் அடிக்கடி சந்தித்துக் கொள்ளும். அவர் மகன் என் வயதுடையவர் என நினைக்கிறேன். (ஐம்பது ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஜனாப் வரிசை அகமதின் வாரிசிற்கும் எங்கள் அக்கா பேத்திக்கும் திருமணப் பேச்சு வார்த்தை நடந்தது.அது நிறைவுறவில்லை))
அடுத்தது ஜனாப் ஆதம் ஷா ஆசிரியர் பணிபுரிந்த அவர் அத்தாவுக்கு உறு துணையாய் இருந்தார்.
மூன்றாவது ஒரு நீதி அரசர் பெயர் நினைவில்லை..  அவரின் விசாலமான அரசு இல்லத்திற்கும் ஆடுதுறையில் உள்ள அவர் சொந்த வீட்டிற்கும் சென்று வந்ததுண்டு..அவரது அரசு இல்லத்திற்கு எங்கள் அக்கா மகன்  ஒரு முறை எங்களுடன் வந்திருந்தார்.பள்ளிக்குச் செல்லா இளஞ்சிறுவனாய் இருந்த அவர் அங்கு எல்லோருக்கும் கொடுத்த பானம் சிவப்பு நிறமாகவும் அவருக்குக் கொடுத்தது மட்டும் நீர் நிறமாகவும் இருந்ததனால் ஐயமுற்று பானத்தில் விரலை விட்டு நாக்கில் வைத்து சோதித்தது ஒரு நகைச்சவை நினவு..
சென்ற பகுதியைப்பற்றி கருத்துக்கள் கூறிய இதயத்துல்லாவுக்கும் அக்காமார் ஜோதி மெகராஜுக்கும் மகள் பாப்டிக்கும் நன்றி. தங்கை சுராஜ் போந்தாக்கோழி என்றால் என்ன என்று பலருக்கும் தெரியாது என்றார். நானும் கோழி படம் இணய தளத்தில் தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை.
  அந்தப்பகுதியில் நான் கேட்ட இரு சிறிய வினாக்களுக்கு விடை :
வாட்சப் தமிழில் கட்செவி அஞ்சல் (முனைவர் ஞானசம்பந்தம் தினமணியில் எழதியது..)
மெய்ப்புல அறைகூவலர்  சென்னை விமான நிலையத்தில் உடல் ஊனமுற்றோருக்காண கழிப்பறையில் கண்ட அறிவிப்பு. Physically challenged என்பதன் நேரடி மொழி பெயர்ப்பு.(பெயர்த்து உடைத்தது போல் உள்ளது)
இந்தப்பகுதியிலும் ஒரு சிறிய வினா –ஐயம் , மரம் செடி கொடி எதுவுமில்லாத  பாலைவன நாடுகளில் வசிக்கும் லட்சக் கணக்கான மக்களுக்கு ஆக்சிஜன் போதுமான அளவுக்கு எப்படிக் கிடைக்கிறது ? இதற்கு விடை எனக்கும் தெரியாது. தெரிந்த  அறிஞர் பெருமக்கள் விடை அளிக்கவும்
பயணம் தொடரும்

 










Tuesday 9 February 2016

வாழ்க்கைப் பயணமும் வங்கி அனுபவங்களும் 5.சிதம்பரம்


மீண்டும் ஆரம்பப்பள்ளிப்பருவம்
The Illiterate School Master என்ற கதை கல்லூரியில் பாடமாகப் படித்தததாக நினைவு. கல்வி அறிவே இல்லாத ஒருவர் எப்படி ஒரு பள்ளியைத் துவங்கி தானே ஆசிரியாரக இருந்து வெற்றிகரமாக வகுப்புகளை நடத்துகிறார் என்ற கதை அது. கிட்டத்தட்ட அது மாதிரி ஒரு பள்ளியில் படித்த அனுபவம் சிதம்பரத்தில்.  .
அப்பாவுக்கு மேட்டூரிலிருந்து சிதம்பரத்திற்கு இட மாறுதல். நான் மூன்று அல்லது நான்காம் வகுப்பு படித்ததாக நினைவு. முதலில் ஊருக்கு சற்று வெளியே ஒரு புதிய அழகான வீட்டுக்குக் குடி போனதாக நினைவு..அங்கு பாதுகாப்பு குறைவு என எண்ணி சில நாட்களிலேயே ஊருக்கு நடுவே ஒரு பெரிய பழைய வீட்டுக்கு இடம் பெயர்ந்தோம்
பெரிய .தாழ்வாரம் .கீழேயும் மாடியிலும் என விசாலமான வீடு. பின்னால் கொல்லைபபுறம். மாடிச்சுவரில் பெரிய பெரிய ஓவியங்கள் வரையப்பட்டிருக்கும்.. வீட்டில் நிறைய போந்தாக் கோழிகள் வளர்த்தோம்..மேட்டூரில் நாங்கள் இருந்தது மிகப்பெரிய தோட்டத்துடன் கூடிய அமைப்பான வீடு.தனியாக மாட்டுகொட்டகை கோழி புறா என்று இனிமையான நினைவுகள். அதோடு ஒப்பிட்டுப்பார்த்தால் சிதம்பரம் வீடு மனதுக்குப் பிடிக்கவில்லை.
வீட்டுக்கு எதிரில் ஒரு வீட்டில் பள்ளிக்கூடம். ( மக்குப் பள்ளிக்கூடம் என்று செல்லப்பபெயர் சூட்டியுருந்தோம்.) சமையல்,காபி,சாப்பாட்டுக்கு  இடையே பாடமும் நடக்கும்.. அந்த வீட்டுதலைவர் பல்கலைகழகத்தில் பணியாற்றி வந்தார் .மிகவும் ஒல்லியாக இருப்பார்.. அவர் துணைவி அதற்கு நேர் எதிர்..அவர்தான் பள்ளியின் தாளாளர் தலைமை ஆசிரியை ,ஆசிரியை எல்லாம்.
நல்ல பள்ளியில்தான் படிக்கவேண்டும் என்பது போன்ற சிந்தனைகள் அப்போதெல்லாம் பெரிதாகப்பரவவில்லை. பள்ளிதரத்தினால் யாரும் சோடை போகவும் இல்லை.
  அக்காமார் இருவர் -நூர், ஜென்னத்-  அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் படித்ததாக நினைவு.
அப்பாவின் அலுவலகப் பணிகளை என் மனதில் பதிய வைத்தது இந்தப் பருவத்தில்தான்.காலையில் பெரும்பாலும் அப்பா அலுவலகம் செல்வது கிடையாது. காலை ஏழு மணி அளவில் ஒரு சுகாதார ஆய்வாளர் வீட்டுக்கு வந்து விடுவார். அப்பாவும் அவரும்    ஒரு நாளைக்கு ஒரு பகுதிக்கு சென்று துப்புரவுப் பணிகளைக் கண்காணிப்பர். ஏதேனும் குறைகள் தென்பட்டால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் பத்து மணிக்கு மேல் நகராட்சிப் பள்ளிகள் மருத்துவமனைகள் தினசரிச் காய் கறிச் சந்தைகள் கறி, மீன் விற்கும் இடங்கள் உணவு விடுதிகளில் ஆய்வு.  திரைப்பட அரங்குகளில் இரவில் அவ்வப்போது ஆய்வு. எந்தக் குறைகள் எங்கு தென் பட்டாலும் உடனடி அதிரடி நடவடிக்கை
இது ஏதோ முதல்வன் திரைப்படத்தில் வரும் கற்பனைக்  காட்சி அல்ல.(முதல்வன் படக்கதை ஒரு Fairy Tale குழந்தைகளுக்குச சொல்லும் தேவதைக் கதை என்று படத்தின் கதை ஆசிரியர் சுஜாதா சொன்னார்.)  அன்றாடம் நடைபெறும் நிர்வாக இயல்பு நடவடிக்கை..
இன்னொன்று அப்பா சொல்லிக்கேட்டது நகராட்சிக்கான கட்டிடங்கள் கட்டும்போது செங்கற்களை இரவு முழுதும் நீரில் ஊற வைத்து காலையில் ஒவ்வொரு செங்கலாகாத் தூக்கி வீசுவார்களாம் அதில் உடையாமல் இருக்கும் செங்கற்களை மட்டும் கட்டிடம் கட்ட வைத்துக்கொண்டு உடைந்தவற்றைக் கழித்து விடுவார்களாம்.( நான் பூந்தமல்லியில் சொந்த வீடு கட்டும்போது ஒப்பந்தக் காரரிடம் இது பற்றி சொல்லிப்பார்த்தேன். அதற்கு அவர் “இப்படியெல்லாம் செய்யச் சொன்னால் நம்மைத்தூககிப் போட்டு உடைத்து விடுவார்கள்” என்று சிரித்தவாறே பயமுறுத்தினார்
சிதம்பரத்திற்கு சற்றுத் தொலைவில் நகராட்சிக் குடி நீர் அமைப்பு இருந்தது. அங்கு தண்ணீர் சேகரிப்பு, வடிகட்டுதல் தேக்கி வைத்தல் குளோரின் சேர்த்தல் என்று பல நிலைகளில் பல தொட்டிகள் எந்திரங்கள் இருக்கும். அந்த இடம் ஒரு அழகான பூங்கா போல் அழகிய செடிகளுடன் பசுமையாக இருக்கும். அங்கு அவ்வப்போது எல்லோரும் சிற்றுலா சென்று வருவோம்.
இன்னொரு பசுமையான நினைவு பரங்கிபேட்டை. அத்தா (இனிமேல் அப்பாவுக்குப் பதில் அத்தா) அங்குள்ள தன் நண்பரைப் பார்க்கப் போகும்போது நானும் போவேன். அங்கு ஒரு பெரிய மீன் கண்காட்சிக்குப் போவோம். அங்கே திமிங்கிலத்தின் முதுகெலும்பு பார்த்ததாக நினைவு. ஒரு வகை மீன் தன் உடம்பை காற்றடித்த பலூன் போல் உப்ப வைத்து நீரின் மேல் மட்டத்தில் மிதக்கும். சிறிது நேரம் கழித்து உடம்பை பழைய படி சுருக்கிக்கொண்டு நீந்த ஆரம்பிக்கும். அதைப்பார்க்க மிகவும் அழகாவும் வியப்பாகவும் இருக்கும்.
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கும் சென்று பார்த்திருக்கிறோம். அண்ணாமலைப் –பல்கலைக்கழகம் சென்றுருக்கிறேன்.நல்ல அடர்த்தியான மரம் செடி கொடிகள், நெடிது உயர்ந்த கட்டிடங்கள் என்று ஒரு கம்பீரமான இனிய நினைவாகப் பதிந்திருக்கிறது  அத்தா படித்த,, அக்காமார் படித்த அண்ணாமலையில் நானும் தொலை தூரக் கல்வியில் ஒரு முதுகலைப் பட்டயமும் யோகாவில் முதுநிலைப்பட்டமும் பெற்றேன் (ஐம்பத்தைந்து, அறுபது வயதுக்கு மேல்.)
அத்தா பள்ளிப்படிப்பை (பதினோராம் வகுப்பு SSLC) முடித்திருந்தபோது பல்கலைகழக நிறுவனர் திரு அண்ணாமலை செட்டியார் வீட்டுக்கு வந்துஅத்தாவிடம் “நம் ஊர்ப்பிள்ளைகள் வேறு எங்கும் போகக்கூடாது. அண்ணாமலையில்தான் படிக்கவேண்டும் “ என்று சொன்னதோடு தன் வண்டியிலேயே அழைத்துச் சென்று பல்கலைக்கழகத்திலும் விடுதியிலும் இடம் கொடுத்து கல்வி உதவித்தொகைக்கும்(மாதம் ஒரு ரூபாயா ஒரு அணாவா என்பது நினைவில்லை.) ஏற்பாடு செய்து கொடுத்தாராம்
அண்ணாமலையில் முதன் முதலில் விடுதியில் அசைவ உணவு ஏற்பாடு செய்த பெருமை அத்தாவையே சேரும்.
தம்பி சகாபுதீன் நிகழ்வுகளை விவரிக்கும்போது பெயர்களைத் தெரிவித்தால் இன்னும் சுவையாக இருக்கும் என்று சொன்ன கருத்தின் படி இந்தப்பகுதியிலிருந்து  பெயர்களைக் குறிப்பிடுகிறேன்.
இது போல் படிக்கும் அனைவரும் கருத்துக்களையும் நிறை குறைளையும் தெரிவித்தால் எனக்கு  உற்சாகமாக இருக்கும்.
நான் இதுவரை வாட்சப்பில் இல்லை .எனவே தொலைபேசியிலோ telegram மிலோ மின்அஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம். sherfuddinp@gmail.com .
Blog இல் படிப்பவர்கள் blog/ facebook இல் பதிவு செய்யலாம்.  வாட்சப்பில்தான் முடியும் என்பவர்கள் பைசல் /இதயத்துல்லாவுக்கு அனுப்பலாம்.
இ(க)டைச்செருகல்- வாட்சப் வந்ததில் பலருடைய தமிழறிவும் இலக்கிய ஆர்வமும் கவிதைத்திறனும் வெளிஉலகிற்கு தெரிய ஆரம்பித்தது. உங்கள் தமிழ் பசிக்குத் தீனி போட இரண்டு சிறிய வினாக்கள்
ஒன்று வாட்சப் –தமிழ்ச் சொல் என்ன ?
இரண்டு மெய்ப்புல அறைகூவலர் இந்தத்தமிழ்ச் சொல்லுக்குப் பொருள் என்ன ?
தெரிந்தவர்கள் எனக்குத் தெரியப்படுத்தலாம்.தெரியாதவர்கள் என்னிடம் கேட்கலாம் .அல்லது அடுத்த பகுதி வரை பொறுமை காக்கலாம்
பயணம் தொடரும்

  .”

Friday 5 February 2016

வாழ்க்கைப் பயணமும் வங்கி அனுபவங்களும்


2.சண்டிகர்

ஆம்பூருக்கும் சண்டிகருக்கும் முப்பது ஆண்டுகள் இடைவெளி.
இப்போது நான் வங்கியில் மேலாளர் பீகாரில் பணியாற்றிகொன்றிருந்த நான் அங்கே பள்ளிபடிப்புக்கான வசதி இல்லாததால் அங்கே குடும்பத்தை அழைத்துச் செல்ல முடியவில்லை. அப்போது வங்கியில் ஊழியர் பயிற்சிக் கூடங்களில் பணியாற்ற மேலாளர்களைத் தேர்ந்த்தெடுப்பதாக அறிவிப்பு வந்தது,  அதற்கு விண்ணப்பித்த எனக்கு  ஜலந்தர் மையத்திற்கு தேர்வாகி இருப்பதாகவும் ஜலந்தர் மையம் திறப்பதில் சில நிர்வாகப் பிரச்சனைகள் இருப்பதால் சண்டிகர் மையத்தில் பணியாற்றும்படியும் ஆணை வந்தது.
பெங்களூர் தலைமைப் பயிற்சி மையத்தில் இரு வாரம் கடுமையான பயிற்சிக்குப்பின் சண்டிகர் பயணம்
டெல்லி வரை தொடர் வண்டியில் பயணித்து அங்கு விமானப்படை உயர் அதிகாரியாக இருந்த என் சகோதரன் அஜ்மல் கான்வீட்டில் சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு பேருந்தில் சண்டிகர் பயணித்தேன். வசதியான இருக்கைகள் கொண்ட குளிரூட்டப்பட்ட வண்டி என்பதால் பயண அலுப்புத் தெரியவில்லை. மேலும் உணவுக்காக நிறுத்தும்போது ஆங்கிலத்தில் தெளிவான அறிவிப்பு-குரலிலும் எழுத்திலும், உணவகம் அமைத்திருந்த இடம் ஒரு பெரிய பூங்கா போல் மனதுக்கு இதமாக இருந்தது. சுத்தமான கட்டணமில்லா (விலையில்லா ?)க் கழிப்பறைகள். உணவும் சுவையாக இருந்தது
சண்டிகர் பேருந்து நிலையத்துக்கு வந்திருந்த என் நண்பர் ராஜன்- என்னோடு துறையூரில் பணி புரிந்தவர்- அன்புடன் தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார் . அங்கு ஓரிரு நாட்கள் தங்கினேன்.. பிறகு பயிற்சி கூடத்தில் பணி புரிந்த இரண்டு தமிழர்களும் நானும் சேர்ந்து ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்து தங்கி உணவகங்களில் சாப்பாட்டைப்பார்த்துக்கொண்டோம்.
நேருவின் கனவு நகரம் சண்டிகர்
முழுக்க முழுக்க    திட்டமிட்டு திட்டத்தை செயல் படுத்திக் கட்டப்பட்ட ஒரு ஒழுங்கான நகரம். தரைத்தளம், முதல் தளம் இதற்கு மேல் கட்ட அனுமதி கிடையாது. வீடுகள் ஒரு தெருவில் ஒரே மாதிரி இருக்கும்.பெரிய பெரிய சன்னல்கள் கம்பியில்லாமல். .தங்கள் விருப்பத்திற்கு யாரும் பெட்டிக்கடை பீடாக்கதை டீக்கடை போட முடியாது. சீராக அமைக்கப்பட்ட சாலைகள் .ஆங்கங்கே பூங்காக்கள் செயற்கை நீருற்றுக்கள்.  ,,,கடைகளுக்கு ,அலுவலங்களுக்கு தனித்தனி வளாகங்கள்.,நகருக்குப் பெருமை சேர்க்கும் கல் பூங்கா என்று சண்டிகரின் பெருமையை சொல்லிக்கொண்டே போகலாம்.
இதையெல்லாம் தாண்டி நான் அங்கே உணர்ந்தது ஒரு வெறுமை,ஒரு உயிர் ஓட்டம் இல்லாமை. வீதிகளில் கூட்டம் பரபரப்பு எதுவும் இருக்காது.. இருட்டும்போது ஊர் அடங்கி விடும் கண சோர்வடையச்செய்யும் ஒரே மாதிரி வீடுகள், ஒரு தீப்பெட்டி வாங்கக்கூட குறிப்பிட்ட இட்டதிற்குத்தான் போக வேண்டும் இதெல்லாம் பார்க்க எனக்கு அலுப்புத்தட்டியது..
சண்டிகர் நகரம் பஞ்சாப் ஹரியாணா என்ற இரு மாநிலங்களின் தலை நகர் என்பதும் அந்த நகரம் ஒரு தனி யூனியன் பிரதேசம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.
சண்டிகரில் எனக்கு மிகவும் பிடித்த்து அங்கு கிடைக்கும் ஐஸ்க்ரீம்.நம் ஊர் ஆவின் போல் அங்குள்ள அரசு பால் நிறுவனம் விற்பனை செய்யும் ஐஸ்க்ரீம் அளவிலும் சுவையிலும் நிறைவாகாவும் விலை மிக மலிவாகவும் இருக்கும். அதற்கடுத்து கேக் வகைகள்.அங்குள்ள இந்தியா காபி ஹௌசில் சுவையான காபி , தோசை இட்லி கிடைக்கும்.
பயிற்சிக் கூடம் தொடங்கி வகுப்புக்கள் ஆரம்பிப்பதில் சில பல நடைமுறைச் சிக்கல்கள், விடுதி வசதி  வேண்டும் என்று வகுப்பைப் புறக்கணித்த ஊழியர்கள் போன்ற பல புதிய அனுபவங்கள். இதெல்லாம் தமிழ் நாட்டில் கற்பனை கூட செய்ய முடியாதவை.
எங்கள் வங்கி ஊழியர் ஒருவர் தவறுதலாகா அதே வளாகத்தில் அமைந்த வேறு வங்கி பயிற்சிக் கூடத்திற்குப் போய் சில மணி நேரம் கழித்து தவறை உணர்ந்து வந்தது ஒரு வேடிக்கை.
முதன் முதலில் லேசான நில நடுக்கத்தை நான் உணர்ந்தது சண்டிகரில்தான்..திடீரென்று மேசைகள மெதுவாக ஆடுவதையும் குவளையில் உள்ள நீரில் அதிர்வலைகள் உண்டாவதையும் உணர்ந்திருக்கிரேன்..
குளிர்காலத்தில் மின் விசிறிகளின் இறக்கைகளை கழற்றி வைத்து விடுவார்கள் . அப்படிச் செய்யா விட்டால் அவற்றில் ஈக்கள் முட்டையிட்டு நீக்க முடியாத கறை படிந்து விடுமாம்.
சண்டிகரில் குறுகிய காலமே பணியாற்றியதால் இந்தப்பகுதியும் விரைவில் நிறைவுருகிறது.
இ(க)டைச்செருகல் : இந்தப் பகுதியை நிறைவு செய்த பின் மனதில் ஒரு எண்ண ஓட்டம், ஏன் சண்டிகர் அவ்வளவு ஒழுங்காய்  வடிவமைக்கப்பட்ட ஒரு நகர் அலுப்பூட்டுவதாய்த் தோன்றியது? ஒழுங்கு என்பதே நமக்குப் பிடிக்காத,ஒத்து வராத ஒன்றா? இது போல் பல வினாக்கள
இது பற்றி ஒன்றிரண்டு செய்திகளைப் பார்ப்போம்.பொதுவாகத் திருமணத்திற்கு பையனைத் தெரிவு செய்யும்போது அவன் தன மத ஒழுக்கப்படி குடுமியோ தாடியோ வைத்திருந்தால் அதற்காகவே அவன் பெண்ணாலும் பெண்ணின் பெற்றோராலும் நிராகரிக்கப்படும் வாய்ப்புகள் மிக மிக அதிகம்..
அதே போல் ஒருவர் தொழுகை வணக்கம் இவற்றை ஒழுங்காகக் கடைப் பிடித்தால் அவர் ஒரு வித்தியாசமான பிறவியாகக் கருதபபடுவார்
ஒரு பெண் தன் கணவனிடம் புகைத்தல் போன்ற தேவையற்ற பழக்கங்கள் இருந்தால் பெரிய எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்.. ஆனால் கணவன் யோகா தியானம் போன்ற ஒழுங்குகளைக் கடைபபிடித்தால் பெண்களுக்குப் பெரும்பாலும் பிடிக்காது..
இவ்வளவு ஏன் நாம் எல்லோரும் இறைவன் வகுத்த ஒழங்கு முறையை மீறிய உலகின் முதல் மனிதரும் முதல் நபியுமான ஆதம் (அலை) அவர்களின் மக்கள்தானே !.
ஆதம் (அலை) அவர்களின் வாரிசான மனித இனத்தின்  மனம் ஒழுங்கை எதிர்த்து ஒழுங்கீனத்தை நாடுவதும் இயற்கைதானோ !  
பயணம் தொடரும்
.




Monday 1 February 2016

வாழ்க்கைப் பயணமும் வங்கி அனுபவங்களும்

   4. குதிரைகளைப்  பறக்க விடுவோமா !


கடந்த மூன்று பகுதிகளில் தொடர்ந்து என் வாழ்க்கையைப் பற்றிப் படித்தவர்களுக்கு சலிப்பு ஏற்படாமல் இருக்க ஒரு சிறிய கதை
இந்தக்கதையும் என் வாழ்வில் ஒரு பகுதிதான். பீகாரில் பணியாற்றிக்கொண்டிருந்தந்தபோது வங்கிப் பயிற்சிக் கூடத்தில் பணியாற்ற தேர்வு செய்யப்பட்டேன்.. அதற்காக  பெங்களூரில் பதினைந்து நாட்கள் கடுமையான பயிற்சி – பயிற்சியாளர்களுக்கான பயிற்சி கொடுத்தார்கள்.. நிறைய பொருட் செலவில் வெளியில் இருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.                                               அந்த வகையில் மும்பையில் இருந்து வந்த ஒரு நிபுணர் சொல்லிய  சிறு கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்களில் சிலருக்கு இந்தக் கதை ஏற்கனவே தெரிந்திருக்கலாம். பரவாயில்லை.தொலைக் காட்சியில் எத்தனையோ தொடர்கள்,,திரைப்படங்கள்,பாடல்கள்,விளம்பரங்களைத திரும்பத் திரும்ப அலுக்காமல் பார்க்கிறோம்.. ஒரு நல்ல கதையை திரும்பக் கேட்பதில் தவறில்லை.
ஒரு அரசவை.  மதி மந்திரி,.ஐம்பெரும் குழு, எண்பேராயம் சூழ்ந்திருக்க மன்னர் அரியணையில் வீற்றிக்கிறார்..பெரிய பிரச்சனைகள் ஒன்றும் நாட்டில் இல்லாத ஒரு நல்ல ஆட்சி. எனவே அரசவை கூட்டத்தில் விவாதம் சூடு பிடிக்கவில்லை .                                                அரசனுக்கு திடீரென ஒரு எண்ணம் –சற்று வித்தியாசமான ஒன்று.தன சேனைத்தளபதியிடம் “நம் குதிரைப்படையில் எத்தனை குதிரைகள் இருக்கின்றன ? “” என்று வினா தொடுத்தார். “மன்னர் மன்னா ஆயிரத்திற்கு மேல் உள்ளன” என்று தளபதி பதிலுரைத்தார்.. அடுத்த கேள்வி “அதில் சிறந்த குதிரை எது?” “நம்மிடம் அரேபிய வெள்ளைக்குதிரை ஒன்று இருக்கிறது. அது நம் படையில் மட்டுமல்ல.உலகத்திலேயே சிறந்த குதிரைகளில் ஒன்று மன்னா”
“அந்த சிறந்த குதிரையை உடனே அரசவைக்கு கொண்டு வரச் சொல்லுங்கள்” “மன்னர் மன்னா குதிரை அரசவைக்கா ? எதற்கு மன்னா ?“” “கேள்விகள் வேண்டாம் சொன்னதைச் செய்யுங்கள் “ என்று அரச கட்டளை.
ஒரு வழியாக மிகச் சிரமத்துடன் குதிரை அரசவைக்கு கொண்டு வரப்பட்டது. அது மிரண்டு ஓடாமல் இருக்க பத்து குதிரை வீரர்கள், அரசவையை அசுத்தம் செய்து விடதிருக்க ஏற்பாடுகள் என்று பலமுனை பாதுகாப்பு .
மன்னர் தன் திரு வாயைத்திறந்தார் “இதோ உங்கள் முன்னே நிற்பது சாதாரணக் குதிரை அல்ல. உலகிலேயே மிகச் சிறந்த குதிரை என்று நம் தளபதி தெரிவிக்கிறார் உங்கள் திறமைக்கு ஒரு அறைகூவல் .இவ்வவளவு சிறப்பு மிக்க இந்தக் குதிரையை பறக்க வைக்கவேண்டும்.யார் இந்த அறைகூவலை ஏற்றுக்கொள்ள முன் வருகிறீர்கள்? “
இது என்ன விபரீத ஆசை ! குதிரையைப பறக்க வைப்பதா !என்று எண்ணிய அனைவரும் மன்னரின் பார்வை தம் மேல் விழாமல் இருக்க சட்டென்று தலையைக் குனித்து கொண்டார்கள்.
ஏதோ ஒரு சிந்தனையில் இருந்த மதிமந்திரியின் கண்களும் மன்னரின் கண்களும் சந்தித்துக்கொள்ள “  மந்திரியாரே நீர்தான் இந்த வேலைக்குப் பொருத்தமானவர்.. இந்தக் குதிரையைப பறக்க வைக்க வேண்டும்” என்றார் மன்னன்.”மன்னா குதிரை எப்படிபறக்கும்? அதுவும் நான் எப்படி?
அரசர் அனல் பறக்கும் குரலில் பேசினார் “இது அரசகட்டளை .இந்தப் பொறுப்பை நீர் ஏற்க மறுத்தால்  உமது தலை துண்டிக்கப்படும்”
“மன்னர் சொன்னால் சரியாகத்தான் இருக்க வேண்டும் . நான் ஒப்புக்கொள்கிறேன் மன்னா “ என்றார் மந்திரி.”.
“நல்லது! உமக்கு ஒரு ஆண்டு கால அவகாசம் தருகிறேன். இந்தக் ஒரு ஆண்டு காலத்தில் நீர் அரசவைக்கு வரவேண்டியதில்லை. குதிரைக்கும் உமக்கும் ஆகும் செலவை அரசாங்கக் கருவூலத்தில் பெற்றுக்கொள்ளலாம்.. ஓராண்டுக் கால இறுதியில் குதிரை பறக்க வேண்டும் .இலையேல் உம்தலைதுண்டிக்கப்படும் “என்றார் மன்னர்“மிக்க மகிழ்ச்சி மன்னா விடை பெற்றுக்கொள்கிறேன் “ என்றார் மதிமந்திரி. அரசவை கலைந்தது. .மந்திரி தன் இல்லம் நோக்கிச் செல்ல அவர் பின்னல் குதிரை அதற்குரிய காவலாளிகள் செல்ல அது போக ஒரு பெருங்கூட்டம் அமைச்சரைப பின் தொடர்ந்து சென்று துக்கம் விசாரிக்க ஆரம்பித்தது.                     என்ன மந்திரியாரே எப்படி இதற்கு ஒப்புக் கொண்டீர் ? குதிரையாவது பறப்பதாவது! இதென்ன தேவதைக் கதையா அல்லது மந்திர வித்தையா !அனாவசியமாக உயிரை இழக்க அசட்டுத்தனமாக சம்மதித்து விட்டீரே !” என்று பலவாறாக உண்மையான ,பொய்யான ,நடிப்பான கரிசனங்கள்”
எல்லாவற்றையும் காதில் வாங்கிக்கொண்ட மந்திரி அவர்கள் பேசி ஓய்ந்ததும் பதில் பேசினார்.                                           “இந்தப் பணியை ஒப்புக்கொண்டதில் எனக்கு எந்த வித வருத்தமும் கிடையாது. ஒப்புக்கொள்ள மறுத்திருந்தால் இன்றே மன்னர் என் தலையைததுண்டிக்க ஆணைஇட்டிருப்பார். எனவே குதிரையைப் பறக்க வைக்க நான் ஒத்துக்கொண்டதால் எனக்கு ஒரு ஆண்டு காலம் –முன்னூற்று அறுபத்தி ஐந்து நாட்கள் வாழ்வு கிடடைதிருக்கிறது .இந்த ஒரு ஆண்டில் எவளவோ நிகழலாம்.ஒன்று நானே இயற்கை மரணம் அடையலாம் .அப்போது எனக்கு தண்டனை கிடைக்காது.இரண்டு நான் கொடுக்கும் கடும் பயிற்சியினால் குதிரை இறக்க நேரிடலாம். அப்போதும் என்னைத் தண்டிக்க முடியாதுமூன்று மன்னர் நீடூழி வாழ்க ஒரு வேளை மன்னருக்கு ஏதாவது நிகழ்ந்து விட்டால் ! அப்போதும் நான் தண்டனையிலிருந்து விலக்குப் பெறுவேன்.
இதற்கெல்லாம் மேல் யார் கண்டது இறையருளால் குதிரையும் பறந்தாலும் பறக்கலாம்!.அப்படிப் பறந்தால் எனக்கு பரிசு பாராட்டு கிடைக்கும்
இத்தகைய ஆக்க பூர்வமான நேர்மறைச் சிந்தனைகள்  நம் ஆழ் மனதில் பதிந்து விட்டால் எந்த ஒரு சிரமமான பணியும் ஒரு வேடிக்கை விளையாட்டாக. ஒரு இனிய பொழுது போக்காக ஆகி விடும்
 மனக் குதிரையைப் பறக்க விட்டுப் பாருங்களேன்
இடையே கதைகள் துணுக்குகளுடன்         பயணம் தொடரும்