Tuesday, 9 February 2016

வாழ்க்கைப் பயணமும் வங்கி அனுபவங்களும் 5.சிதம்பரம்


மீண்டும் ஆரம்பப்பள்ளிப்பருவம்
The Illiterate School Master என்ற கதை கல்லூரியில் பாடமாகப் படித்தததாக நினைவு. கல்வி அறிவே இல்லாத ஒருவர் எப்படி ஒரு பள்ளியைத் துவங்கி தானே ஆசிரியாரக இருந்து வெற்றிகரமாக வகுப்புகளை நடத்துகிறார் என்ற கதை அது. கிட்டத்தட்ட அது மாதிரி ஒரு பள்ளியில் படித்த அனுபவம் சிதம்பரத்தில்.  .
அப்பாவுக்கு மேட்டூரிலிருந்து சிதம்பரத்திற்கு இட மாறுதல். நான் மூன்று அல்லது நான்காம் வகுப்பு படித்ததாக நினைவு. முதலில் ஊருக்கு சற்று வெளியே ஒரு புதிய அழகான வீட்டுக்குக் குடி போனதாக நினைவு..அங்கு பாதுகாப்பு குறைவு என எண்ணி சில நாட்களிலேயே ஊருக்கு நடுவே ஒரு பெரிய பழைய வீட்டுக்கு இடம் பெயர்ந்தோம்
பெரிய .தாழ்வாரம் .கீழேயும் மாடியிலும் என விசாலமான வீடு. பின்னால் கொல்லைபபுறம். மாடிச்சுவரில் பெரிய பெரிய ஓவியங்கள் வரையப்பட்டிருக்கும்.. வீட்டில் நிறைய போந்தாக் கோழிகள் வளர்த்தோம்..மேட்டூரில் நாங்கள் இருந்தது மிகப்பெரிய தோட்டத்துடன் கூடிய அமைப்பான வீடு.தனியாக மாட்டுகொட்டகை கோழி புறா என்று இனிமையான நினைவுகள். அதோடு ஒப்பிட்டுப்பார்த்தால் சிதம்பரம் வீடு மனதுக்குப் பிடிக்கவில்லை.
வீட்டுக்கு எதிரில் ஒரு வீட்டில் பள்ளிக்கூடம். ( மக்குப் பள்ளிக்கூடம் என்று செல்லப்பபெயர் சூட்டியுருந்தோம்.) சமையல்,காபி,சாப்பாட்டுக்கு  இடையே பாடமும் நடக்கும்.. அந்த வீட்டுதலைவர் பல்கலைகழகத்தில் பணியாற்றி வந்தார் .மிகவும் ஒல்லியாக இருப்பார்.. அவர் துணைவி அதற்கு நேர் எதிர்..அவர்தான் பள்ளியின் தாளாளர் தலைமை ஆசிரியை ,ஆசிரியை எல்லாம்.
நல்ல பள்ளியில்தான் படிக்கவேண்டும் என்பது போன்ற சிந்தனைகள் அப்போதெல்லாம் பெரிதாகப்பரவவில்லை. பள்ளிதரத்தினால் யாரும் சோடை போகவும் இல்லை.
  அக்காமார் இருவர் -நூர், ஜென்னத்-  அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் படித்ததாக நினைவு.
அப்பாவின் அலுவலகப் பணிகளை என் மனதில் பதிய வைத்தது இந்தப் பருவத்தில்தான்.காலையில் பெரும்பாலும் அப்பா அலுவலகம் செல்வது கிடையாது. காலை ஏழு மணி அளவில் ஒரு சுகாதார ஆய்வாளர் வீட்டுக்கு வந்து விடுவார். அப்பாவும் அவரும்    ஒரு நாளைக்கு ஒரு பகுதிக்கு சென்று துப்புரவுப் பணிகளைக் கண்காணிப்பர். ஏதேனும் குறைகள் தென்பட்டால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் பத்து மணிக்கு மேல் நகராட்சிப் பள்ளிகள் மருத்துவமனைகள் தினசரிச் காய் கறிச் சந்தைகள் கறி, மீன் விற்கும் இடங்கள் உணவு விடுதிகளில் ஆய்வு.  திரைப்பட அரங்குகளில் இரவில் அவ்வப்போது ஆய்வு. எந்தக் குறைகள் எங்கு தென் பட்டாலும் உடனடி அதிரடி நடவடிக்கை
இது ஏதோ முதல்வன் திரைப்படத்தில் வரும் கற்பனைக்  காட்சி அல்ல.(முதல்வன் படக்கதை ஒரு Fairy Tale குழந்தைகளுக்குச சொல்லும் தேவதைக் கதை என்று படத்தின் கதை ஆசிரியர் சுஜாதா சொன்னார்.)  அன்றாடம் நடைபெறும் நிர்வாக இயல்பு நடவடிக்கை..
இன்னொன்று அப்பா சொல்லிக்கேட்டது நகராட்சிக்கான கட்டிடங்கள் கட்டும்போது செங்கற்களை இரவு முழுதும் நீரில் ஊற வைத்து காலையில் ஒவ்வொரு செங்கலாகாத் தூக்கி வீசுவார்களாம் அதில் உடையாமல் இருக்கும் செங்கற்களை மட்டும் கட்டிடம் கட்ட வைத்துக்கொண்டு உடைந்தவற்றைக் கழித்து விடுவார்களாம்.( நான் பூந்தமல்லியில் சொந்த வீடு கட்டும்போது ஒப்பந்தக் காரரிடம் இது பற்றி சொல்லிப்பார்த்தேன். அதற்கு அவர் “இப்படியெல்லாம் செய்யச் சொன்னால் நம்மைத்தூககிப் போட்டு உடைத்து விடுவார்கள்” என்று சிரித்தவாறே பயமுறுத்தினார்
சிதம்பரத்திற்கு சற்றுத் தொலைவில் நகராட்சிக் குடி நீர் அமைப்பு இருந்தது. அங்கு தண்ணீர் சேகரிப்பு, வடிகட்டுதல் தேக்கி வைத்தல் குளோரின் சேர்த்தல் என்று பல நிலைகளில் பல தொட்டிகள் எந்திரங்கள் இருக்கும். அந்த இடம் ஒரு அழகான பூங்கா போல் அழகிய செடிகளுடன் பசுமையாக இருக்கும். அங்கு அவ்வப்போது எல்லோரும் சிற்றுலா சென்று வருவோம்.
இன்னொரு பசுமையான நினைவு பரங்கிபேட்டை. அத்தா (இனிமேல் அப்பாவுக்குப் பதில் அத்தா) அங்குள்ள தன் நண்பரைப் பார்க்கப் போகும்போது நானும் போவேன். அங்கு ஒரு பெரிய மீன் கண்காட்சிக்குப் போவோம். அங்கே திமிங்கிலத்தின் முதுகெலும்பு பார்த்ததாக நினைவு. ஒரு வகை மீன் தன் உடம்பை காற்றடித்த பலூன் போல் உப்ப வைத்து நீரின் மேல் மட்டத்தில் மிதக்கும். சிறிது நேரம் கழித்து உடம்பை பழைய படி சுருக்கிக்கொண்டு நீந்த ஆரம்பிக்கும். அதைப்பார்க்க மிகவும் அழகாவும் வியப்பாகவும் இருக்கும்.
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கும் சென்று பார்த்திருக்கிறோம். அண்ணாமலைப் –பல்கலைக்கழகம் சென்றுருக்கிறேன்.நல்ல அடர்த்தியான மரம் செடி கொடிகள், நெடிது உயர்ந்த கட்டிடங்கள் என்று ஒரு கம்பீரமான இனிய நினைவாகப் பதிந்திருக்கிறது  அத்தா படித்த,, அக்காமார் படித்த அண்ணாமலையில் நானும் தொலை தூரக் கல்வியில் ஒரு முதுகலைப் பட்டயமும் யோகாவில் முதுநிலைப்பட்டமும் பெற்றேன் (ஐம்பத்தைந்து, அறுபது வயதுக்கு மேல்.)
அத்தா பள்ளிப்படிப்பை (பதினோராம் வகுப்பு SSLC) முடித்திருந்தபோது பல்கலைகழக நிறுவனர் திரு அண்ணாமலை செட்டியார் வீட்டுக்கு வந்துஅத்தாவிடம் “நம் ஊர்ப்பிள்ளைகள் வேறு எங்கும் போகக்கூடாது. அண்ணாமலையில்தான் படிக்கவேண்டும் “ என்று சொன்னதோடு தன் வண்டியிலேயே அழைத்துச் சென்று பல்கலைக்கழகத்திலும் விடுதியிலும் இடம் கொடுத்து கல்வி உதவித்தொகைக்கும்(மாதம் ஒரு ரூபாயா ஒரு அணாவா என்பது நினைவில்லை.) ஏற்பாடு செய்து கொடுத்தாராம்
அண்ணாமலையில் முதன் முதலில் விடுதியில் அசைவ உணவு ஏற்பாடு செய்த பெருமை அத்தாவையே சேரும்.
தம்பி சகாபுதீன் நிகழ்வுகளை விவரிக்கும்போது பெயர்களைத் தெரிவித்தால் இன்னும் சுவையாக இருக்கும் என்று சொன்ன கருத்தின் படி இந்தப்பகுதியிலிருந்து  பெயர்களைக் குறிப்பிடுகிறேன்.
இது போல் படிக்கும் அனைவரும் கருத்துக்களையும் நிறை குறைளையும் தெரிவித்தால் எனக்கு  உற்சாகமாக இருக்கும்.
நான் இதுவரை வாட்சப்பில் இல்லை .எனவே தொலைபேசியிலோ telegram மிலோ மின்அஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம். sherfuddinp@gmail.com .
Blog இல் படிப்பவர்கள் blog/ facebook இல் பதிவு செய்யலாம்.  வாட்சப்பில்தான் முடியும் என்பவர்கள் பைசல் /இதயத்துல்லாவுக்கு அனுப்பலாம்.
இ(க)டைச்செருகல்- வாட்சப் வந்ததில் பலருடைய தமிழறிவும் இலக்கிய ஆர்வமும் கவிதைத்திறனும் வெளிஉலகிற்கு தெரிய ஆரம்பித்தது. உங்கள் தமிழ் பசிக்குத் தீனி போட இரண்டு சிறிய வினாக்கள்
ஒன்று வாட்சப் –தமிழ்ச் சொல் என்ன ?
இரண்டு மெய்ப்புல அறைகூவலர் இந்தத்தமிழ்ச் சொல்லுக்குப் பொருள் என்ன ?
தெரிந்தவர்கள் எனக்குத் தெரியப்படுத்தலாம்.தெரியாதவர்கள் என்னிடம் கேட்கலாம் .அல்லது அடுத்த பகுதி வரை பொறுமை காக்கலாம்
பயணம் தொடரும்

  .”

1 comment: