Monday, 1 February 2016

வாழ்க்கைப் பயணமும் வங்கி அனுபவங்களும்

   4. குதிரைகளைப்  பறக்க விடுவோமா !


கடந்த மூன்று பகுதிகளில் தொடர்ந்து என் வாழ்க்கையைப் பற்றிப் படித்தவர்களுக்கு சலிப்பு ஏற்படாமல் இருக்க ஒரு சிறிய கதை
இந்தக்கதையும் என் வாழ்வில் ஒரு பகுதிதான். பீகாரில் பணியாற்றிக்கொண்டிருந்தந்தபோது வங்கிப் பயிற்சிக் கூடத்தில் பணியாற்ற தேர்வு செய்யப்பட்டேன்.. அதற்காக  பெங்களூரில் பதினைந்து நாட்கள் கடுமையான பயிற்சி – பயிற்சியாளர்களுக்கான பயிற்சி கொடுத்தார்கள்.. நிறைய பொருட் செலவில் வெளியில் இருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.                                               அந்த வகையில் மும்பையில் இருந்து வந்த ஒரு நிபுணர் சொல்லிய  சிறு கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்களில் சிலருக்கு இந்தக் கதை ஏற்கனவே தெரிந்திருக்கலாம். பரவாயில்லை.தொலைக் காட்சியில் எத்தனையோ தொடர்கள்,,திரைப்படங்கள்,பாடல்கள்,விளம்பரங்களைத திரும்பத் திரும்ப அலுக்காமல் பார்க்கிறோம்.. ஒரு நல்ல கதையை திரும்பக் கேட்பதில் தவறில்லை.
ஒரு அரசவை.  மதி மந்திரி,.ஐம்பெரும் குழு, எண்பேராயம் சூழ்ந்திருக்க மன்னர் அரியணையில் வீற்றிக்கிறார்..பெரிய பிரச்சனைகள் ஒன்றும் நாட்டில் இல்லாத ஒரு நல்ல ஆட்சி. எனவே அரசவை கூட்டத்தில் விவாதம் சூடு பிடிக்கவில்லை .                                                அரசனுக்கு திடீரென ஒரு எண்ணம் –சற்று வித்தியாசமான ஒன்று.தன சேனைத்தளபதியிடம் “நம் குதிரைப்படையில் எத்தனை குதிரைகள் இருக்கின்றன ? “” என்று வினா தொடுத்தார். “மன்னர் மன்னா ஆயிரத்திற்கு மேல் உள்ளன” என்று தளபதி பதிலுரைத்தார்.. அடுத்த கேள்வி “அதில் சிறந்த குதிரை எது?” “நம்மிடம் அரேபிய வெள்ளைக்குதிரை ஒன்று இருக்கிறது. அது நம் படையில் மட்டுமல்ல.உலகத்திலேயே சிறந்த குதிரைகளில் ஒன்று மன்னா”
“அந்த சிறந்த குதிரையை உடனே அரசவைக்கு கொண்டு வரச் சொல்லுங்கள்” “மன்னர் மன்னா குதிரை அரசவைக்கா ? எதற்கு மன்னா ?“” “கேள்விகள் வேண்டாம் சொன்னதைச் செய்யுங்கள் “ என்று அரச கட்டளை.
ஒரு வழியாக மிகச் சிரமத்துடன் குதிரை அரசவைக்கு கொண்டு வரப்பட்டது. அது மிரண்டு ஓடாமல் இருக்க பத்து குதிரை வீரர்கள், அரசவையை அசுத்தம் செய்து விடதிருக்க ஏற்பாடுகள் என்று பலமுனை பாதுகாப்பு .
மன்னர் தன் திரு வாயைத்திறந்தார் “இதோ உங்கள் முன்னே நிற்பது சாதாரணக் குதிரை அல்ல. உலகிலேயே மிகச் சிறந்த குதிரை என்று நம் தளபதி தெரிவிக்கிறார் உங்கள் திறமைக்கு ஒரு அறைகூவல் .இவ்வவளவு சிறப்பு மிக்க இந்தக் குதிரையை பறக்க வைக்கவேண்டும்.யார் இந்த அறைகூவலை ஏற்றுக்கொள்ள முன் வருகிறீர்கள்? “
இது என்ன விபரீத ஆசை ! குதிரையைப பறக்க வைப்பதா !என்று எண்ணிய அனைவரும் மன்னரின் பார்வை தம் மேல் விழாமல் இருக்க சட்டென்று தலையைக் குனித்து கொண்டார்கள்.
ஏதோ ஒரு சிந்தனையில் இருந்த மதிமந்திரியின் கண்களும் மன்னரின் கண்களும் சந்தித்துக்கொள்ள “  மந்திரியாரே நீர்தான் இந்த வேலைக்குப் பொருத்தமானவர்.. இந்தக் குதிரையைப பறக்க வைக்க வேண்டும்” என்றார் மன்னன்.”மன்னா குதிரை எப்படிபறக்கும்? அதுவும் நான் எப்படி?
அரசர் அனல் பறக்கும் குரலில் பேசினார் “இது அரசகட்டளை .இந்தப் பொறுப்பை நீர் ஏற்க மறுத்தால்  உமது தலை துண்டிக்கப்படும்”
“மன்னர் சொன்னால் சரியாகத்தான் இருக்க வேண்டும் . நான் ஒப்புக்கொள்கிறேன் மன்னா “ என்றார் மந்திரி.”.
“நல்லது! உமக்கு ஒரு ஆண்டு கால அவகாசம் தருகிறேன். இந்தக் ஒரு ஆண்டு காலத்தில் நீர் அரசவைக்கு வரவேண்டியதில்லை. குதிரைக்கும் உமக்கும் ஆகும் செலவை அரசாங்கக் கருவூலத்தில் பெற்றுக்கொள்ளலாம்.. ஓராண்டுக் கால இறுதியில் குதிரை பறக்க வேண்டும் .இலையேல் உம்தலைதுண்டிக்கப்படும் “என்றார் மன்னர்“மிக்க மகிழ்ச்சி மன்னா விடை பெற்றுக்கொள்கிறேன் “ என்றார் மதிமந்திரி. அரசவை கலைந்தது. .மந்திரி தன் இல்லம் நோக்கிச் செல்ல அவர் பின்னல் குதிரை அதற்குரிய காவலாளிகள் செல்ல அது போக ஒரு பெருங்கூட்டம் அமைச்சரைப பின் தொடர்ந்து சென்று துக்கம் விசாரிக்க ஆரம்பித்தது.                     என்ன மந்திரியாரே எப்படி இதற்கு ஒப்புக் கொண்டீர் ? குதிரையாவது பறப்பதாவது! இதென்ன தேவதைக் கதையா அல்லது மந்திர வித்தையா !அனாவசியமாக உயிரை இழக்க அசட்டுத்தனமாக சம்மதித்து விட்டீரே !” என்று பலவாறாக உண்மையான ,பொய்யான ,நடிப்பான கரிசனங்கள்”
எல்லாவற்றையும் காதில் வாங்கிக்கொண்ட மந்திரி அவர்கள் பேசி ஓய்ந்ததும் பதில் பேசினார்.                                           “இந்தப் பணியை ஒப்புக்கொண்டதில் எனக்கு எந்த வித வருத்தமும் கிடையாது. ஒப்புக்கொள்ள மறுத்திருந்தால் இன்றே மன்னர் என் தலையைததுண்டிக்க ஆணைஇட்டிருப்பார். எனவே குதிரையைப் பறக்க வைக்க நான் ஒத்துக்கொண்டதால் எனக்கு ஒரு ஆண்டு காலம் –முன்னூற்று அறுபத்தி ஐந்து நாட்கள் வாழ்வு கிடடைதிருக்கிறது .இந்த ஒரு ஆண்டில் எவளவோ நிகழலாம்.ஒன்று நானே இயற்கை மரணம் அடையலாம் .அப்போது எனக்கு தண்டனை கிடைக்காது.இரண்டு நான் கொடுக்கும் கடும் பயிற்சியினால் குதிரை இறக்க நேரிடலாம். அப்போதும் என்னைத் தண்டிக்க முடியாதுமூன்று மன்னர் நீடூழி வாழ்க ஒரு வேளை மன்னருக்கு ஏதாவது நிகழ்ந்து விட்டால் ! அப்போதும் நான் தண்டனையிலிருந்து விலக்குப் பெறுவேன்.
இதற்கெல்லாம் மேல் யார் கண்டது இறையருளால் குதிரையும் பறந்தாலும் பறக்கலாம்!.அப்படிப் பறந்தால் எனக்கு பரிசு பாராட்டு கிடைக்கும்
இத்தகைய ஆக்க பூர்வமான நேர்மறைச் சிந்தனைகள்  நம் ஆழ் மனதில் பதிந்து விட்டால் எந்த ஒரு சிரமமான பணியும் ஒரு வேடிக்கை விளையாட்டாக. ஒரு இனிய பொழுது போக்காக ஆகி விடும்
 மனக் குதிரையைப் பறக்க விட்டுப் பாருங்களேன்
இடையே கதைகள் துணுக்குகளுடன்         பயணம் தொடரும்







3 comments: