சிங்கப்பூரின் சுத்தம் பற்றி காய்ந்த இலை
கூட மரத்திலிருந்து விழத் தயங்கும் என்று சொல்வார்கள். கிட்டத்தட்ட அந்த அளவுக்கு
வீடு தோட்டம் வயல் எல்லாம் சுத்தமாக இருக்கும் மங்கலப்பட்டியில் .இதிலேயே
முழு கவனமும் செல்வதால் உடல்
சுத்தத்திற்கு நேரம் கிடைக்காத உழைக்கும் வர்க்கம். உழைப்பென்றால் அப்படியொரு அயராத
உழைப்பு..மெய்வருத்தம் பாராத கண் தூங்காத உழைப்பு..உண்ண
மறந்த உழைப்பு. (அப்புறம் எதற்கு உழைப்பு ?)
ஜலந்தரிலிருந்து மங்கலப்பட்டிக்கு மாறுதல். நான் சீ பீ எஸ் சீ பள்ளிகள் உள்ள இடத்துக்கு மாறுதல்
கேட்டிருந்தேன். வழக்கம் போல் ஏட்டிக்குப்போட்டியாக ஒரு இடத்துக்கு மாறுதல்.
பத்தாம் வகுப்பு படித்த பைசலை திருப்பத்தூரில் பள்ளியில் சேர்த்து
விட்டு அவர்கள் ஐயா வீட்டில் தங்க வைத்தோம். பாப்டியை உள்ளூர் பள்ளியில் சேர்த்து
விட்டோம்.
மங்கலப்பட்டி கிளைக்குப்போகுமுன் ஈரோடு கோட்ட அலுவலகம் சென்றேன்.
கோட்ட மேலாளர் திரு கிருஷ்ணமூர்த்தி
அன்பாக வரவேற்றார் .. என்னோடு திருச்சியில் பணியாற்றிய திரு சுப்ரமணி ஈரோடு
கோட்ட அலுவலகத்தில் பணியில் இருந்தார். அவர் விளக்கமாக கிளையின் பெயர்தான்
மங்கலப்பட்டி, அது இருக்குமிடம் முத்தூர், மங்கலபட்டிக்கும் முத்தூருக்கும் ஐந்து
கி மி தொலைவு என்று சொல்லி ஈரோடு பேருந்து நிலையத்திற்கு அழைத்துச்சென்று முத்தூர்
செல்லும் பேருந்தில் ஏற்றி விட்டார்.
(இனிமேல் முத்தூர் என்றே குறிப்பிடுகிறேன்)
மேலாளராகப் பதவி உயர்வு பெற்று மூன்று ஆண்டுகள் ஆனாலும் கிளை
மேலாளராகப் பொறுப்ப ஏற்கப்போகும் முதல் கிளை முத்தூர். விவசாயம் என்பது எவ்வளவு
சிரமமான ஓன்று என்பதை எனக்குப் புரிய வைத்ததும் முத்தூர்தான்.
மருத்துவர் திரு பழனிச்சாமி மருத்துவ
மனைக்கு மேலே இருந்த அறை ஒன்றில் தங்கி வீடு பார்க்கத துவங்கினேன் எனக்கு முன்
இருந்த மேலாளர் குடியிருந்த வீடு எனக்குப்பிடிக்கவில்லை.
சர்கரைப்பாளயம் என்ற பகுதியில் ஒரு வீடு பிடித்தேன். கிராமிய
மணத்துடன் கூரை வேய்ந்த விசாலமான திண்ணை, சீமை ஓடு வேய்ந்த வீடு. வெளியே கழிவறை,
குளியலறை ,தென்னை மரம், கொய்யா மரம் எல்லாம் இருந்தது . தண்ணீர் பற்றாக்குறையினால்
வேறு வீடு பார்க்கும் முயற்சியில் இறங்கினேன். .மற்றபடி இந்த வீட்டிலும் நல்ல
மகிழ்ச்சியாகவே இருந்தோம்.
ஜலந்தரிலிருந்து வீட்டுபொருட்கள் , ஸ்கூட்டர் ,கார் எல்லாம் ஒரு பெரிய
சுமையுந்தில் ஏற்றி நேரே முத்துருக்கு அனுப்பியிருந்தேன்,.ஒரு
பெரிய சுமையுந்து வந்ததும் அதிலிருந்து கார் இறக்கப்பட்டதும் அந்த ஊரில் ஒரு
பரபரப்பை ஏற்படுத்தியது . காரின் எண்
PJQ 7777 என்பது பரபரப்பை மேலும் அதிகரித்தது.
வங்கிக்கு அருகில் திரு பிரகாசம் என்பவர் ஒரு பட்டறை வைத்திருந்தார்.
காரை லாரியிலிருந்து இறக்க அவர் பெரிதும் உதவினார். எரிபொருள் சேமிப்பில் ஆரரய்ச்சி செய்து வந்த அவரைப்பற்றி ஊரில்
பலவிதமான பேச்சுக்கள். என்னைப் பொறுத்த வரையில் ஒரு நல்ல நண்பராகவும் அண்டை
வீட்டுக்காரராகவும் இருந்தார்.
முத்தூர் வந்த சில நாட்களில் நான் மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்தபோது
வாசலில் ஒரு கூடை நிறைய தேங்காய் இருந்தது. முன்பின் தெரியாத ஒருவர் எவ்வளோ
சொல்லியும் வைத்து விட்டுப் போனதாக அறிந்தேன். சாப்பிட்டு விட்டு வங்கி சென்று
அங்குள்ள பணியாளர் மூலம் அவர் யார் என்று விசாரித்து அவரை அழைத்து உடனே
தேங்காய்க்கூடையை எடுத்துச்செல்லும்படி சற்று கடுமையாகச் சொன்னேன். இந்த செய்தி
ஊரில் காட்டுதீ போல் பரவியது .
முத்தூர் சிறிய ஊர் என்றாலும் மிகச் செழிப்பான ஊர். பட்டிக்காடா
பட்டணமா என்று சிறிது குழப்பமாக இருக்கும்.
ஈரோட்டில் இருந்து முத்தூர் வழியாக வெள்ளக்கோயிலுக்குப் போகும்
விரைவுப் பேருந்துகள் ஒரு மணி நேரத்துக்கு ஓன்று வரும்.நாற்பது நிமிடத்தில்
ஈரோட்டில் இருந்து முத்தூர் வந்து விடலாம். பேருந்துகள் பெரும்பாலும் நேரம் தவறாது
வரும்.
முத்தூர் மக்களின் உழைப்பு பற்றி துவக்கத்திலேயே
குறிப்பிட்டிருந்தேன்.. உழைப்பு மட்டுமல்ல விவசாயம் பற்றி அவர்கள் அறிவும்
தெளிவும் மிக ஆழமானதாகும். விசாயம் பற்றி ஆணா ஆவண்ணா கூடத்தெரியாத எனக்கு இது மிக
வியப்பாக இருந்தது,
செடிக்கன்றுகள் வாங்க பெரியகுளம் போய் வருவார்கள்.பட்டுப்பூச்சிக்
கூடுகளை விற்க கர்நாடகா வில் உள்ள கொள்ளேகால் என்ற ஊருக்குப் போய்வருவார்கள்,
எல்லாம் பேருந்துப்பயணம்தான். அதிகாலையில் போய், இரவிற்குள் திரும்பி
விடுவார்கள்..
அறுவடை காலம் வந்து விட்டால் மழை வெய்யில் எதையும் பொருட்படுத்தாமல்
வயலில் நிற்பார்கள். நடு இரவில் நீர்
பாய்ச்சப் போவார்கள். மத்தியானக் கரண்டு ராத்திரிக் கரண்டு என்று( எனக்குப்)
புரியாத மொழியில் பேசுவார்கள்.. தண்ணீர் இல்லையா நானூறு அடிக்கு ஆழ்துளை போட்டு
இரண்டு மோட்டார் வைத்துத் தண்ணீர் எடுப்பார்கள்,
நம் வீட்டுக்குப் பால் கொடுக்கப் பால்காரர் வருவார் .. இங்கோ பால்
வாங்கிப்போக வருவார். பாலை விற்று விட்டு கடுங்காப்பி குடிப்பார்கள்.
விவசாயத்திற்கு அடுத்த பெரிய தொழில் விசைத்தறி. இவர்கள் பாடு இன்னும்
திண்டாட்டம் .வாரத்தில் ஆறு நாட்கள் இரவு பகலாலக உழைத்து விட்டு ஏழாம் நாள்
தொழிலாளர்களுக்கு விடுப்பு. உரிமையாளரோ அந்த வார உற்பத்தியை கரூர் கொண்டு போய்க்
கொடுத்து பணம் பொருட்கள் வாங்கி வரவேண்டும்..
பல ஊர்கள் பல மாநிலங்கள் பார்த்திருந்தாலும் சில ஊர்மக்களின் பழக்க
வழக்கங்கள் சற்று வேறுபட்டதாகத் தெரியும். முத்தூர் அப்படியான ஒரு ஊர்.
எந்த வீட்டிலும் கோலம் போடும் பழக்கம் கிடையாது. மாலை நேரத்தில்
விளக்கேற்ற மாட்டார்கள். எங்கே வெளிச்சம் தேவையோ அங்கே மட்டும்தான்
விளக்கெரியும்..
தீபாவளியும் கொண்டாடமாட்டர்கள். உழவர் திரு நாளும் கொண்டடமாட்டர்கள் .
அவர்களுக்குத் தெரிந்த ஒரே கொண்டாட்டம் கிடா வெட்டு.
பெரும்பாலும் ஒன்றிரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெற மாட்டார்கள். ஒரு
பெண் பேறு காலத்திற்கு மருத்துவமனை வரும்போது குறைந்து பத்து உறவினர்கள் கூட
வருவார்கள். பெண் குழந்தை என்று தெரிந்தால் அனைவரும் பறந்தோடி விடுவார்கள்..
சிறு வயதிலேயே பிள்ளைகளை (ஆணாயிருந்தாலும் பெண்ணாயிருந்தாலும) பள்ளி
விடுதியில் தங்கிப் படிக்க வைப்பார்கள், பெண்கள் மிகவும் விவரமாக இருப்பார்கள்
எந்த வேலை இருந்தாலும் மாலை நான்கு மணிக்கு மாட்டில் பால் கறக்க
வீட்டுக்கு வந்து விடுவார்கள்.
குழம்பு தனியாக வைக்காமல் காய்கரிகூட்டை சோறுடன் கலந்து
சாப்பிடுவார்கள்.
ஆண் பிள்ளைகளுக்கு அளவுக்கு மீறி செல்லம் கொடுப்பார்கள். அதனால்
தற்கொலைகளும் அதிகம்
பொதுவாக சட்டங்களை விலைக்கு
வாங்குவதை ஒரு பெருமையாக நினைப்பார்கள்.,
இன்னும் நிறைய சொல்லிகொண்டே போகலாம் . .பணம்,சொத்து மேல் அதிகம்
பற்றுடைய ஒரு சமூகம்.
. ஒரு சாலை விபத்தில்
பள்ளிச்சிறுவன் உயிரிழந்து விட்டான். உடலை வீட்டுக்குக் கொண்டு போய்விட்டார்கள்.
காவல் துறையினர் வரும்போது . உடல் விபத்து நடந்த இடத்தில் கிடந்தால்தான் பணம்
கிடைக்கும் என்று யாரோ சொல்ல உடனே பையனின் தந்தை உடலை இரு சக்கர வண்டியின்
பின்னால் வைத்து விபத்து நடந்த இடத்தில்
கொண்டு போய் போட்டு விட்டார்.
அந்தப்பகுதியில் சாண எரிவாயு அடுப்பு மிகவும் பரவலாக
பயன்படுத்தப்படும் .வங்கியில் அதற்கு கடன் கொடுப்போம். கடன் தொகையை சரியாகப் பயன்
படுத்தியிருக்கிரார்களா என்பதை ஆய்வு
செய்ய வீடுகளுக்குப்போவேன். அடுப்படியில் சமைத்த சுவடே தெரியாமல் அவ்வளவு சுத்தமாக
இருக்கும்.
ஒரு விளக்கெண்ணை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு வங்கியில் கடன்
கொடுத்திருந்தோம். அது கூட, தினமும்
சோடாக்காரம் போட்டு கழுவப்பட்டு தரை பளீர் என்று ஒரு பிசுக்கில்லாமல் இருக்கும்.
நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் உடையவர்கள் கூட நிலத்தில்
குடும்பத்துடன் இறங்கி வேலை செய்வதைப் பார்கலாம் .
எவ்வளவு பணம் இருந்தாலும் வங்கி மேலாளர் வந்து கேட்டால்
நம்பிக்கையுடன் கொடுத்து விடுவார்கள்
நெல், சோளம் விளைந்து கதிர் முற்றிய நிலையில் ஒரு மிக இனிமையான
நறுமணம் காற்றில் தவழ்ந்து வரும்..
எங்கும் வயல்களாய் இருப்பதால் தார் சாலையை விட்டு இறங்கி விட்டால்
எனக்கு வழி , திசை தெரியாது. அதனால் தனியே எங்கும் போக மாட்டேன்,
எந்த வீட்டுக்குப் போனாலும் வணக்கம் சொல்லி வரவேற்று குடிக்கத்தண்ணீர் கொடுப்பார்கள். எதாவது சாப்பிடச்சொல்லி
வற்புறுத்துவார்கள். தர ஒன்றும் இல்லாவிட்டால் பானைத் தண்ணீரில் இனிப்பு சேர்த்து
ஏலக்காய் பொடி கலந்து கொடுப்பாகள் .வெயிலுக்கு மிக இதமாக இருக்கும்.
முத்தூரில் மூன்றாவது பெரிய தொழில் நிதி நிறுவனங்கள். குறிப்பாக
தினசரி, வாரந்திர, மாதாந்திர வருடாந்திர ஏலச்சீட்டு நிறுவனங்கள் .ஒரு குடும்பத்தில்
பொருளாதார சிக்கல் வந்தால் உறவினர்கள் சீட்டுச் சேர்த்து கை கொடுக்கும் பழக்கமும்
உண்டு.
ஒரு பொதுத்தேவை என்றால் ஊர் கூடி பணம் சேர்த்து கொடுக்க
வேண்டிய இடத்தில் கொடுத்து முடித்துக் கொள்வார்கள்
பெரியார் பிறந்த மாவட்டத்தில் இன்னும் தீண்டாமை ஒழிந்ததாய்த்
தெரியவில்லை
முத்தூரில் காவல் நிலையம் கிடையாது. திருட்டு மிகக்குறைவு .
முத்தூர் வங்கிகிளையில் எழுத்தர்கள் இரண்டு பேர். மேற்பார்வை
அலுவலர்கள் ஒரு மேலாளர், இரண்டு அதிகாரிகள், இரண்டு சிறப்பு உதவியாளர்கள் என ஐந்து
பேர். . அங்கிருந்த இரண்டு எழுதர்களைப் பார்த்துத்தான் எனக்கு மேலே படிக்க
வேண்டும் என்ற ஒரு ஆவல் உண்டானது. ஒரு எழுத்தர்(மருத முத்து கணபதி) இலங்கைத்தமிழர்
.பள்ளி இறுதிப்படிப்போடு இந்தியா வந்தவர்
கணக்கியலில் மிகக்கடினமான ஐ சீ டபுள்யு
எஸ் படித்து தேறி விட்டார் .
இன்னொருவர் மதுரைக்காரர்(சுந்தரராஜன் ) .வணிகத்தில் முது நிலைப்பட்டம்
பெற்ற அவர் ஏ சீ எஸ் படித்துக்கொண்டிருந்தார்.
இதைப்பார்த்து நானும் இக்னோ (இந்திரா காந்தி தேசிய திறந்த
பல்கலைகழகம்) வில் எம் பீ எ படிப்பில் சேர்ந்தேன்.தொடர்பு வகுப்புக்கு கோவை
போகவேண்டும் . இருபத்தியொரு தேர்வுகள் தேறினால் எம் பீ எ . பணிச்சுமையினால் ஏழு
தேர்வுகளோடு முடித்துக்கொண்டு டி ஐ எம் பட்டயம் வாங்கினேன்.
பங்குச்சந்தையில் நான் காலடி எடுத்து வைத்ததும் முத்தூரில்தான்.
அப்போது பங்குச்சந்தை ஹர்சத் மேத்தாவினால் உச்சத்தில் இருந்தது . ஊர் முழுக்க
சேர், சேர் என்ற பேச்சு.. இருக்கும் பணத்தைஎல்லாம் திரட்டி பங்குச்சசந்தையில் கண்
மூடித் தனமாக முதலீடு செய்தார்கள். இதில் எங்கள் வங்கி ஊழியர் ஒரு சிலரும்
அடக்கம்.. நிறையப்பேர் கையைச் சுட்டுக் கொண்டார்கள் (நான் இல்லை).
கரீம் அண்ணனும் முத்தக்காவும் திருமண அழைப்புக் கொடுக்க முத்தூர்
வந்தார்கள் .வீட்டைப் பார்த்ததும் கரீம் அண்ணன் நக்கலாக அநேகமாக காலையில் சொம்பில்
தண்ணீர் எடுத்துக்கொண்டு வயல் பக்கம் போகவேண்டியிருக்கும் என்று சொன்னதாம் .
அதற்கு முத்தக்கா என் தம்பி அப்படிப் பட்ட
வீட்டில் இருக்க மாட்டன் என்று சொன்னதாம் .. இந்த அமைதியான இடத்திலேயே தங்கி
விடலாமா என்று தோன்றுகிறது என்று சொன்னது கரீம் அண்ணன்
நாங்கள் முததூரில் இருக்கும்போது கரீம் அண்ணன் காலமானது எங்களை
சோகத்தில் ஆழ்த்தியது .முடிந்த அளவு விரைந்து சென்னை சென்றும் பார்க்க முடியவில்லை
மைத்துனர் ஷம்சும் பஜ்ரியாவும் வந்து சில நாட்கள் தங்கிச் சென்றார்கள்.
பெரும்பாலும் மரங்களிலேயே குடியிருந்தார்கள் .
நூரக்கா முஸ்தபா அண்ணன் பிள்ளைகள் வந்து சில நாட்கள்
தங்கிப்போனார்கள்.
முத்தூரில் முஸ்லிம்களும் கிடையாது பள்ளிவாசலும் கிடையாது..கறி வாங்க
பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள வெள்ளக்கோயில் போக வேண்டும்..
மாமா குப்பி வந்தபோது முதல் நாள் கறி வாங்கி குளிர் பெட்டியில் வைத்து
அடுத்த நாள் சமைத்ததை சாப்பிட மறுத்து விட்டார்கள் .
வங்கி பெண் வாடிக்கையாளர் ஒருவர் வங்கிக்கு அருகில் வீடு கட்டித்தருவதாய்ச்
சொன்னார். பள்ளிகல்வி இல்லாத அவருக்கு உலக அறிவு மிக அதிகம்.. வங்கியில் வீடு கட்ட
கடனும் வாங்கவில்லை. இருப்பில் இருந்த தொகையையும் தொடவில்லை . ஆனால் வீடு அழகாகக்
கட்டி முடித்து விட்டார். .வீட்டிற்குள் கழிப்பறை குளியலறை வைக்க மறுத்த அவரை
சம்மதிக்க வைப்பதற்குள் எதோ நானே வீடு கட்டியது போல் ஒரு களைப்பு.
வீடு வாடகைக்கு விட வங்கியுடன் ஒரு ஒப்பந்தத்தில் அவர் கையொப்பம் இட
வேண்டும். அதற்கான படிவத்தை அவரிடம் கொடுத்தேன். அதைக்கொண்டு போய் ஊரிலுள்ள பெரிய
மனிதர்கள், படித்தவர்கள் அனைவரிடமும் காண்பித்து அவர்கள் எல்லாம் இதில் தவறு
ஒன்றும் இல்லை என்று சொல்லியும் மனம் ஒப்பவில்லை அவருக்கு,. எனக்கு வீடே வேண்டாம்
என்று சற்று கோபமாகச் சொன்னபிறகுதான் வேறு வழியில்லாமல் கையொப்பம் (ரேகை)
வைத்தார்.
அந்தப்பெண்ணைப் பற்றி சில செய்திகள் சொல்லியாக வேண்டும். பல லட்சங்களும்
ஏக்கர் கணக்கில் வயலகளும் கால்நடைகளும் உடைய அவரின் பொருளாதார சிந்தனைகள்
வியப்பளிப்பவை. எங்கேயாவது மாட்டுச்சாணம் , வேப்பம்பழம் கிடந்தால் உடனே
பொறுக்கிக்கொண்டு வந்து விடுவார். அவருடைய உடை – சொல்லாமல் விடுவதே நல்லது. ஒரு
ரவிக்கை தைக்கக் கொடுத்து அதற்கு கூலி கொடுக்க மனமில்லாமல் பல மாதங்கள் தையல் காரரை அலையை விட்டு, அதைப் பெருமையாகச்
சொல்லியும் காண்பிப்பார். .
ஊரில் பெரிய மனிதர் ஒருவர் ஒரு நாள் வங்கிக்கு வந்தார். என் அறையில்
உள்ள இருக்கைகள் அனைத்தும் நிறைந்திருக்க அவருக்கு உட்கார இடம் இல்லை,. அதனால்
அவர் சினமுற்றுப் போய் விட்டார். அடுத்த நாள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு
ஒருமையில் நீ, வா என்று பேசத்துவங்கினார். நான் இதை விட மோசமாகப் பேச வேண்டி
இருக்கும் என்று சொன்னவுடன் தொடர்பைத் துண்டித்து விட்டு உடனே வங்கியின் கோட்ட
அலுவலத்துக்கு ஒரு மொட்டைக் கடிதம் எழுதினார்.
இந்த ஊர் வங்கி மேலாளர் நிறைய கையூட்டு வாங்குகிறார் . இதுவரை யாரும்
கண்டிராத ஆடம்பரப் பொருட்கள் அவர்
வீட்டில் இருக்கின்றன என்று எழுதியிருந்தார்.. வங்கி கொடுக்கும் சோபா சாப்பாடு
மேசை இவற்றைத்தான் அவர் ஆடம்பரப்
பொருட்கள் என்று குறிப்பிட்டிருந்தார். எனக்கு முன்பு இருந்த மேலாளர்கள்
இவற்றையெல்லம் வாங்கியது கிடையாது..
இது பற்றி என்னைத் கோட்ட
அலுவலகத்தில் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்கள். அனுப்புனர் விலாசம் இல்லாத
மொட்டைக்கடிதங்களுக்கு எங்கள் வங்கியில் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள்.
கடிதத்தின் நகலை எனக்கு அனுப்பி , பதில் ஏதும் அனுப்ப வேண்டாம் என்று அந்த விசயத்தை
முடித்து விட்டர்கள் .கடித நகலை வங்கி வாடிக்கையாளர் சிலரிடம் காண்பித்தபோது இது
இன்னார்தான் எழுதியது அந்தப் பெரிய மனிதரின் மருமகன் உறுதியாகச் சொன்னார்
கீழ் பவானிக் கால்வாய் அந்த ஊரின் உயிர் நாடி. வாய்க்காலில் தண்ணீர்
திறந்து விட்டால் ஊரே களை கட்டி விடும். வங்கியிலும் வேலை மிக அதிகமாகிவிடும்.. பயிர்க்கடன் நிறையக்
கொடுக்கவேண்டி வரும்.
இந்தப்பகுதியை எழுதத துவங்கும்போது முத்தூரைப் பற்றி எழுத ஒன்றுமே
இல்லாதது போல் தோன்றியது. ஆனால் எழுத எழுத ஒன்றன் பின்னாக நினைவலைகள் தொடர்கின்றன,
ஒரு சில செய்திகளைச் சொல்லி இபகுதியை நிறைவு செய்ய எண்ணுகிறேன்,
மைத்துனர் சிராஜுதீன் காட்டுப்புத்தூர் என்ற ஊரில் காவல் துறை
அதிகாரியாகப் பணியாற்றினார். அவ்வப்போது அவரும் வருவார், நாங்களும் போய் வருவோம்.
நாங்கள் முத்தூரில் இருக்கும்போதுதான் அவருக்கு ஆர் எஸ் மங்கலத்தில் திருமணம்
நடந்தது .
செருப்புக் கடியயைக் கவனிக்காமல் விட்ட எனக்கு ஒரு நாள் இரவு மிகக்
கடுமையான குளிர் காய்ச்சல் தாக்கியது. ஜலந்தரில் வாங்கிய கம்பளிகள் ,துறையூரில்
வாங்கிய வெளிநாட்டுக் கம்பளம் எல்லாம் போர்த்தியும் உடல் தூக்கித்தூக்கிப்
போட்டது. மேலுலகம் போய் விட்டது போல் அலை அலையாய் எண்ணங்கள் .காலையில் கண் விழித்த
பின்தான் இவ்வுலகிலேயே இருப்பது தெளிவானது..
நல்ல நண்பராகிய மருத்துவர் பழனிச்சாமியிடம் போனேன். எப்படி வந்தீர்கள
என்று கேட்டார் . இரு சக்கர வண்டியில் வந்தேன் என்றேன். .துணைக்கு யார் வந்தது
என்று கேட்டார். நான் மட்டும்தான் வந்தேன் என்றேன்.. காய்ச்சல் மிக அதிகமாக் 105 க்கு
மேல் இருக்கிறது. வண்டியில் தனியாக வந்தது
எனக்கு வியப்பாக இருக்கிறது என்றார்.
ஏன் இரவில் எனக்குத் தெரிவிக்கவில்லை என்றார். இரவில் உங்களைத்
தொல்லைப் படுத்த விரும்பவில்லை என்று சொன்னேன். இந்த ஊரில் நடு இரவில்
தொலைபேசியில் தொடர்பு கொண்டு “ டாக்டர் , எனக்குப் பசியே இல்லை என்ன செய்யலாம்”
என்று கேட்பார்கள். நீங்கள் இப்படி இருக்கிறீர்களே என்றார்..சிறு
நீரகத்தொற்று என்று கண்டறியப்பட்டு பதினைந்து நாட்கள் வீட்டுக்கு வந்து ஊசி
போட்டார்...
முத்தூரில் எனக்குக்கிடைத்த இன்னொரு இனிய நண்பர் திரு குப்புசாமி
.எப்போது கேட்டாலும் வங்கியில் பணம் போடுவார். உடுக்கை இழந்தவன் கை போல பாப்டி
திருமண நேரத்தில் ஒரு தொலைபேசி அழைப்புக்கு ஒரு லட்ச ரூபாய் கடனாகக்
கொடுத்தார்..ஈரோடுக்கு மாற்றலானபோது அவருடைய
நண்பர் திரு கார்மேகம் என்பவர் மூலம் எனக்கு வீடு பிடித்துக் கொடுத்தார்.
முத்தூருக்குப்போன அடுத்த ஆண்டு பைசல் பாப்டியை பத்து கிமி
தொலைவிலுள்ள அந்தப்பகுதியில் புகழ் பெற்ற நவரசம் பள்ளியில் சேர்க்கப்போனேன்..
பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்க வந்த உள்ளூர் மக்கள் கேட்ட நன்கொடையை
ஆயிரக்கணக்கில் எந்த வித எதிர்ப்பும் காட்டாது செலுத்தியது எனக்கு வியப்பாக
இருந்தது.
என்னிடம் எவ்வளவு நன்கொடை தருகிறீர்கள் என்று பள்ளித் தாளாளர் (அவர்
ஸ்டேட் வங்கி ஊழியர் ) என்று கேட்க நூறு
ரூபாய் தருகிறேன் என்று சொன்னேன். நீங்கள் உட்காருங்கள் பிறகு பேசிக்கொள்ளலாம்
என்று சொன்னார். கூட்டமெல்லாம் கலைந்த பிறகு என்னை அழைத்து என்ன இப்படிச்
சொல்கிறீர்கள் என்றார். நீங்களும் வங்கிப்பணியாளர், நானும் வங்கி மேலாளர் இதில் என்ன நன்கொடை என்று
கேட்டேன். சரி நன்கொடையில்லாமல் சேர்த்துக் கொள்கிறேன் . யாரிடமும் சொல்லி
விடாதீர்கள் என்றார்.
பைசல் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் அவனது பிரிவில் முதல்
மாணவனாகவும் , பள்ளியில் இரண்டாம் மாணவனாகவும் தேறினான் .
ரங்கா என்ற தனியார் பேருந்தில் பிள்ளைகள் பள்ளிக்குச் சென்று
வருவார்கள். பள்ளிப்பேருந்து போல் நின்று நிதானமாக ஏற்றிச் செல்வார்கள். பள்ளிக்கு
உள்ளே போய் நிறுத்தி பிள்ளைகளை ஏற்றி, இறக்கி விடுவார்கள் .
முத்தூருக்கென்று தனி ஒரு அகராதி இருக்கிறது. முட்டு- முட்டை .
ட்ராட்டர்- ட்ராக்டர் . முட்டுவலி- விவசாயச் செலவு சேர்- ஷேர்
மொத்தத்தில் நான்கு ஆண்டு முத்தூர்
வாழ்க்கை இனிமையாகவே கழிந்தது.
சென்ற பகுதி பற்றி கருத்துக்களும் பாராட்டுக்களும் தெரிவித்த ஹாஜி
அஜ்மீர் அலிக்கும் தங்கை சுராஜுக்கும் பாப்டிக்கும் நன்றி . அஜ்மீர் அலி தன் அனுபவம் ஒன்றைப் பகிர்ந்திருந்தார் ..
இ(க)டைச்செருகல் ;
இதய நோய்க்கும் புற்று நோய்க்கும் அடுத்தபடியாக மரணத்துக்குக் காரணமாக
இருப்பது மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அதிகப்படியான அல்லது தேவையற்ற மருந்துகள்
- லண்டனைச் சேர்ந்த இதய மருத்துவர் அணில்
மல்ஹோத்ரா கார்டியனில் – நன்றி தி இந்து
தமிழ்
இறைவன் அருளால் பயணம்
தொடரும்
வலை நூல் முகவரி
கூகிள் தேடுதலில்
sherfudddinp.blogspot.com