Saturday, 23 July 2016

வாழ்க்கைப்பயணமும் வங்கி அனுபவங்களும் 20. அற்புதங்கள் உண்மையா ?


இப்படிக்கேட்பது சரியா ?
கருவறை முதல் மண்ணறை வரையில் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் அற்புதம்தான் .இரவும் பகலும் ஓய்வில்லாமல் இதயம் துடிக்கிறது,, சுவாசம் நடைபெறுகிறது . இதய்துடிப்பிலோ, மூச்சிலோ தடங்கல் வந்தால்தான் அதன் அற்புதம் நமக்கு தெளிவாகிறது. இது போல்தான் பசி, தூக்கமும் அதில் தடங்கல் வரும்போது , பசிக்க ,தூக்கம் வர மருத்துவரை தேடிச் செல்பவர்களைப் பார்க்கும்போது நமக்குக்கிடைத்த அற்புதங்கள் நமக்கு விளங்குகின்றன .இது போல் முடிவில்லாமல் சொல்லிக்கொண்டே போகலாம்
இவற்றைத்தாண்டி  நம்ப முடியாத நிகழ்வுகள் பலவற்றை நாம் உணர்கிறோம். நமக்குப்புரியாதது , அறிவியலுக்குக்குள் அடங்காதது இதெல்லாம் மூட நம்பிக்கை, பத்தாம் பசலித்தனம் என்று ஒதுக்கி நகைக்கிறோம்.
நம் வாழ்வில் அப்படியான நிகழ்வுகள் நடக்கும்போது உண்மையென நம்ப வேண்டியதாகிறது
தொடர்ந்து பயணம் செய்தால் வரும் அலுப்பு,சலிப்பைத் தவிர்க்க அவ்வப்போது இடைவெளி தேவை . இந்தப்பகுதி ஒரு இடைவேளை
நான் கேள்விப்பட்ட , நான் உணர்ந்த சில நிகழ்வுகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் .இவை எல்லாம் அற்புதங்களா , உண்மையா என்பதை உங்கள் முடிவுக்கு விட்டு விடுகிறேன் .
முதலில் நான் கேள்விப்பட்ட இரண்டு –இரண்டுமே அத்தா சொன்னது
ஒரு இரவில் அத்தா மகிழுந்தில் பயணித்துக்கொண்டு இருக்கையில் மழை பெய்யத்துவங்கியது, தூறலாகத் துவங்கி பெரு மழையாக மாறி விட்டது. மேற்கொண்டு பயணம் தொடர முடியாத அளவுக்கு மழை வலுத்து விட்டது. எனவே வண்டியை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு அத்தா வண்டிக்குள் படுத்து உறங்கி விட்டார்கள்.
விடியலில் எழுந்து பார்த்தால் வண்டி இரவில் நிறுத்தப்பட்ட திசைக்கு எதிர் திசையில் திரும்பி சற்றுத்தள்ளி நின்றது
இரவில் வண்டி நிறுத்தப்பட்ட இடத்தில் ஒரு பெரிய மரம் விழுந்து கிடந்தது
இறைவன் மிகப்பெரியவன் என்பதைத்தவிர வேறு எதுவும் சொல்ல எனக்கு வாய் வரவில்லை.
அடுத்தது அத்தாவின் ஹஜ் பயணத்தில் நிகழ்ந்தது முப்பது ஆண்டுகளுக்கு மேல் கடந்து விட்டது அத்தா ஹஜ் பயணம் சென்று . இப்போது உளது போல் அவ்வளவு வசதிகள், சௌகரியங்கள் அப்போது கிடையாது. ஹஜ் கமிட்டி மூலம் மட்டுமே பயணம். பம்பாயில்தான் விமானம் ஏற வேண்டும். .மினா போன்ற இடங்களில் ஒரு நாளைக்கு ஒரு ஹாஜிக்கு ஒரு வாளி தண்ணீர்தான் கிடைக்குமாம்.
அத்தாவை வழி அனுப்ப கரீம் அண்ணன், ஷஹவுடன் நானும் பம்பாய் போயிருந்தேன். அங்குள்ள ஹஜ் கமிட்டி விடுதியில் தங்கி இருந்தோம்..தஞ்சாவூரிலிருந்து அண்ணன் தம்பி இணை வந்திருந்தார்கள். நல்ல வசதி படைத்த அவர்கள் ஒவ்வொரு பைசாவும் மிகத்தயக்கத்துடன் செலவு செய்வார்கள். விமானத்தில் ஏறுவதற்கு முன் இந்தியப்பணம் யாரும் வைத்திருந்தால் பறிமுதல் செய்யப்படும் என்ற அறிவிப்புக் கேட்டு திரு திருவென்று முழித்தார்கள். நிறைய இந்தியப்பணம் அவர்களிடம் இருந்தது.. அவர்களை வழியனுப்ப யாரும் வரவில்லை. வேறு வழியின்றி பணத்தை கரீம் அண்ணனிடம் ஒப்படைத்து விட்டு கனத்த இதயத்துடன் விமானம் ஏறினார்கள்

.
சொல்ல வந்த செய்தியை விட்டு வேறு எதோ சொல்லிகொண்டிரூக்கிறேன். அத்தா மக்காவில் இருக்கும்போது ஒருநாள் ஆவணங்கள் அடங்கிய கைப்பை தவறி விட்டது. தேடி அலுத்துப்போன அத்தா தன்னையறியாமல் கண் அயர ஒரு அற்புதக்கனவு. நாயகம் (ஸல்) அவர்கள் அத்தாவுக்குக் கை கொடுக்கிறார்கள் .விழித்துப்பார்த்தால் அருகில் உள்ள ஒரு கல் மேல் பை இருந்தது.
அடுத்து இரண்டும் சொல்வதற்கு சற்று கூச்சமாக இருக்கிறது . அவை என் வாழ்வில் நான் உணர்ந்தவை .
ஜலந்தரிலிருந்து மாற்றாலாகி ஈரோடு மாவட்டம்  மங்கலபட்டி கிளையில் பணியில் சேர்ந்து விட்டு திருப்பத்தூரிலிருந்து குடும்பத்தை அழைத்து வர மகிழுந்தில் துணைக்கு ஒரு ஓட்டுனருடன் கிளம்பினேன்..அவருக்குக் காரோட்டத் தெரியாதது மட்டும் அல்ல கண்ணும் சரியாகத்தெரியாது என்பது போகப்போக புரிந்தது.
திரு. போன இடத்தில் மைத்துனர் சிராஜிதீனுக்குப் பெண் பார்க்க ஆதனக்கோட்டை என்ற ஊருக்கு மகிழுந்தில் பயணித்தோம். துணைக்கு வந்த ஓட்டுனரை திருப்பி அனுப்பி விட்டு நானே காரை ஓட்டினேன்.
மாலை மயங்கும் மகரீப் நேரம். ஒலி நாடாவில் சுகமான சுசிலா குரலில் இனிமையான பாடல் . இருளா ஒளியா என இனம்புரியாமல் சாலை நீண்டு சென்றது. சாலை நெடுக ஓரத்தில் அகலமான ஆழமான பள்ளம் தோண்டியிருந்தார்கள் .எதிரே வந்த வண்டிக்காக நான் ஓரத்தில் ஒதுங்க எங்கள் வண்டி பள்ளத்தின் விளிம்புக்குப் போய்விட்டது.
இம்மியளவு நகன்றாலும் வண்டி பள்ளத்தில் சாய்ந்து விடும். அதனால் வண்டியின் கதவைத் திறந்து இறங்கவும் முடியாது.
இறைவனிடம் இறைஞ்சுவதைத் தவிர வேறு எதுவும் தோன்றவில்லை .மன அழுத்தம் , பயம், படபடப்பு எல்லாம் நிறைந்த மன நிலை..
வலுவான உடல் வாகு கொண்ட ஆண்கள் சிலர் திடீரென்று வந்தார்கள். வண்டியை அப்படியே அலாக்காகத் தூக்கி பாதுகாப்பாக வைத்து விட்டார்கள் .இறைவனுக்கு நெஞ்சார நன்றி சொல்லி, நிம்மதிப் பெருமூச்சு விட்டோம்.
இடுக்கணில் உதவிய அந்த மாமனிதர்களுக்கு நன்றி செலுத்தி எதாவது அன்பளிப்புக் கொடுக்கலாம் என்று வண்டியை விட்டு இறங்கினால் அவர்கள் யாரையும் காணவில்லை.
இப்போது கூட அந்த நிகழ்வை எண்ணிப்பார்த்தால் எனக்கு மெய் சிலிர்த்து ஒரு வித வியப்பும், அச்சமும் கலந்த உணர்வு ஏற்படுகிறது. இறைவன் நம் அருகிலே இருக்கிறான், நாம் கூப்பிட்ட குரலுக்கு வருவான் என கேள்விப்பட்டதும்,.படித்ததும் உண்டு . ஆனால் எனக்கெல்லாம் அப்படி நடக்கும் என்பது நான் கற்பனை, கனவில் கூட நினைத்.ததில்லை. தொழுகை, வணக்கமெல்லாம் கூட அப்போது அதிகமாகக் கிடையாது .
இது பற்றி நான் எழுதியது தினமணிக் கதிரில் இது நிஜமா என்ற தலைப்பில் வெளியானது .
அடுத்தது நான் துறையூரில் பணியாற்றியபோது நிகழ்ந்தது. தர்காகளுக்கு போகும் வழக்கம் இல்லாத எனக்கு, கனவில் ஒரு தர்கா மிகத்தெளிவாகத் தெரிந்தது. மினராக்கள், பச்சைக்கொடிகள் எல்லாம் ஒளிப்படம் போல் துல்லிதமாகத் தெரிந்தன .
அப்போது நான் சில நாட்களாக பணி நிமித்தமாக பணிக்கம்பட்டி என்ற ஊருக்கு தினமும் பேருந்தில் பயணம் செய்து துறையூர் திரும்பிக்கொண்டிருந்தேன்.. முசிறி என்ற ஊரில் இறங்கி அங்கிருந்து பணிக்கம்பட்டி போகவேண்டும்.  துறையூர் முசிறிக்கு நான்கு வழித்தடங்கள் உண்டு, அந்த நான்கிலும் பேருந்துகள் செல்லும்.
நான் வழக்கமாகப் பயணிக்கும் பேருந்து அன்று வராததால்,(கனவுக்கு அடுத்த நாள் ) முசிறி செல்லும் வேறுஒரு பேருந்தில் பயணித்தேன். பேருந்து என் அன்றாடப் பயணப்பாதையை விட்டு  வேறு பாதையில் போனது.
துறையூரிலிருந்து சிறிது தொலைவில் ஒரு தர்கா கண்ணில் பட்டது. நான் கனவில் கண்ட அதே தர்கா எந்த வித மாற்றமும் இல்லாமல்..
இது எப்படி என்று எனக்குப் புரியவில்லை. அதற்கு முன் அந்த தர்காவை நான் நேரில் பார்த்தது இல்லை .தர்காக்களுக்குப் போவதில் எனக்கு அன்றும் இன்றும் பெரிய நாட்டம் கிடையாது.
இதற்கு மேல் எழுதினால் என்னை நானே மிகவும் புகழ்த்திக்கொள்வது போல் தோன்றும். எனவே இந்தப்பகுதியை இத்துடன் நிறைவு செய்கிறேன்,
சென்ற பகுதி பற்றி பாராட்டுக்கள், கருத்துக்கள் தெரிவித்த ஷஹா, ஹமீதா அஜ்மல், அஜ்மீர், பாப்டி,யுனி.வர்சல் சக்ரவர்த்தி  சகோதரிகள் மெஹராஜ், ஜோதி, சுராஜுக்கு நன்றி..
எல்லோருமே என் நினைவாற்றலையும், எழுத்துத் திறமையையும் பாராட்டினார்கள். இறைவனுக்கு நன்றி. அஜ்மல் திருப்பத்தூரில் நானும் அவரும் ஒன்றாகப்படித்த காலத்தில் நடந்த ஒரு சிறு நிகழ்வை நெகிழ்வுடன் நினவு கூர்ந்து எங்கள் அம்மாவுக்கு நன்றி தெரிவித்திருந்தார். இந்த எளிமைதான் அஜ்மலின் சிறப்பு.
அஜ்மீர் தன்னைப் பார்க்க வந்த ஜமால் அண்ணன், கருத்தக்கிளி அண்ணனுக்கு அவர்கள் அத்தா (எங்கள் பெரியத்தா) பற்றி நான் எழுதியதைப் படித்துக் காண்பிக்க ,, அவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்களாம்.
இ(க)டைச்செருகல்:
 எரிவாயு மானியத்தை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்குக்கு அனுப்புவதால் இருபத்திரண்டு ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகும் என நடுவன் அரசு அறிவித்தது சரியல்ல .வெறும் இரண்டாயிரம் கோடி மட்டுமே மிச்சமாகும் என தணிக்கைக் குழு தகவல்.
* பண வீக்கம் குறைவாக உள்ளது என்று பொருளாதார விமர்சகர்கள் கூறுவது ஆதாரமற்றது என்கிறார் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன்
மெய்யிலே பிறந்து மெய்யிலே வளர்ந்த புலவர் பெருமான்கள் நம்மை ஆள்பவர்களாக இருப்பது எல்லாவற்றையும் மிஞ்சிய அற்புதம்.
இறைவன் அருளால்
பயணம் தொடரும்.
வலைநூல்  முகவரி
கூகிள் தேடுதலில்
sherfuddinp.blogspot.com

.  .    

No comments:

Post a Comment