“செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா” என்ற
இனிமையான திரைப்பாடலை கேட்டும் கண்டும் களித்திருப்பீர்கள் (படம் முள்ளும் மலரும்
) இந்தப்பாடலின் பின்னணியாக அமைந்தது ஒரு அழகிய பெருந்தோட்டம். (எஸ்டேட்)
அதைவிடப் பன்மடங்கு அழகான ஒரு இடத்தைப் பார்க்க ஒரு வாய்ப்பு
கிடைத்தால் ? பார்க்க மட்டுமல்ல அங்கேயே
பல நாட்கள், மாதங்கள் வாழவும் ஒரு
வாய்ப்பு கிடைத்தது இறையருள் (நன்றி கனரா வங்கி)
காரைக்காலில் இரண்டரை ஆண்டுகளாகப் பணி புரிந்த என்னை குட்டாவுக்கு
மாற்றி அதிரடி ஆணை பிறப்பிகப்பட்டது..ஐம்பது வயதுக்குமேல் வேறு மாநிலத்திற்கு
மாற்றக்கூடாது, மூன்று ஆண்டுகளுக்குள் வேறு இடத்துக்கு மாற்றக்கூடாது என்ற பல
மரபுகளை மீறிய ஆணை.
அலுவலர் சங்கத்திலிருந்து (ஆபீசர்ஸ் அசோசியேஷன்) தொலைபேசி அழைப்பு.
அங்கெல்லாம் போகாதீர்கள், ஒரு மாதம் விடுப்பில் இருங்கள் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்
என்றார்கள் எனக்கு இதிலெல்லாம் பெரிய
நம்பிக்கை கிடையாது .விடுப்புதான் வீணாகும் என்று தெரியும்.எனவே குட்டா செல்லும்
வழி பற்றி கேட்கத துவங்கினேன். குட்டா கிளையையும் அதன் வட்ட அலுவலகததையும் தொலை
பேசியில் தொடர்பு கொண்டேன் .வட்ட அலுவலகத்தில் என் நண்பர் திரு சந்திரசேகர்
மேலாளராக இருந்தார். மைசூரிலிருந்து நூறு கிலோமீட்டர் பேருந்துபயணம் என்று தெளிவு
படுத்தினார்.
இதற்கிடையில் என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் அலுவலர் சங்கத்தில்
பொறுப்பாளராக இருந்தவர் எனக்காக ஒரு வாரமாவது விடுப்பில் போங்கள் என்று
வேண்டினார். எனக்கும் சிந்திக்க நேரம் தேவைப்பட்டதால் பத்து நாள் விடுப்பு
எடுத்தேன்.
காரைக்கால் கிளையில் என்னைத் தவிர எல்லோர் முகத்திலும் ஒரு கவலை,
இறுக்கம். விருப்ப ஓய்வில் போய்விடுங்கள். .முப்பது ஆண்டுகளுக்குமேல் நீங்கள்
பணியாற்றி விட்டீர்கள் எனவே ஓய்வில் போவதால் பெரிய இழப்பு ஒன்றும் வராது, முன்
பின் தெரியாதா இடத்தில் போய் சிரமப்படவேண்டாம் என்று பலரும் தங்கள் ஆதங்கத்தைத்
தெரிவித்தனர்.
என்னைப்பொருத்தவரை நான் மீதமுள்ள பதினெட்டு மாதப் பணிக்காலத்தை இழக்க
விரும்பவில்லை . மேலும் குட்டா. எப்படியிருக்கிறது என்பதைப் பார்க்கும் ஆவல் வேறு.
இதற்கிடையில் பைசல் அனுப்பிய ஒரு மின்னஞ்சலில் குட்டாவின் இயற்கை
எழில் பற்றி அறிந்து அங்கு போக ஆவல் அதிகமானது.
மயிலாடுதுறையிலிருந்து மைசூர் செல்ல தொடரியில் முன் பதிவு செய்தேன்...
பயணத்தில் ஒரு இ ஆ ப அலுவலர் உடன் பயணித்தார். அவருடன் உரையாடுகையில் நீங்கள் நீதி
மன்றம் சென்றால் உங்கள் மாற்றலை மாற்றி விடலாம் என்றார்.
பதினெட்டு மாதம் மட்டுமே பணிக்காலம் எஞ்சியுள்ள நிலையில் பொருளையும்
காலத்தையும் நீதி மன்றத்திற்கு அலைவதில் கழித்து உடலையும் மனதையும் வருத்திக்கொள்ள
நான் விரும்பவில்லை.
மைசூர் தொடரி நிலையத்தில் குட்டாவில் அப்போது மேலாளராகப் பணியாற்றிய
திரு ராமச்சந்திரா வரவேற்று அவரது மகிழுந்தில் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு
பேருந்து பற்றிய தகவல்களையும் தெரிவித்தார்.
பேருந்தில் பயணித்து குட்டா வந்து சேர்ந்தேன். வங்கிக்கு மிக
அருகிலேயே பேருந்து நிறுத்தம் வங்கி ஊழியர்கள் அனைவரும் அன்புடன்
வரவேற்றனர்..சூடான சுவையான கூர்க் காபி உடலுக்கும் மனதுக்கும் உற்சாகம் ஊட்டியது.
அருகிலுள்ள ஒரு விடுதியில் தங்கி சில நாட்கள் இருந்து விட்டு
காரைக்கால் திரும்பினேன். நான் மட்டும் குட்டா சென்று தனியே ஒன்னரை ஆண்டைக் கழித்து
வரலாம் என்ற என் எண்ணம் மறுக்கப்பட்டது. சேர்ந்தே போவது என முடிவு செய்து காரைக்கால் வீட்டை வங்கியில் ஒப்படைத்து
விட்டு, வீட்டுப்பொருட்களை குட்டாவுக்கு அனுப்ப சுமையுந்து ஏற்பாடு செய்து விட்டு
ஜோதியும் நானும் கடலூர் சென்றோம். அங்கு சில நாட்கள் தங்கி விட்டு குட்டா பயணம். பேரன்
பர்வேஸ் அழுது ஆர்ப்பாட்டம் செய்ய விடை பெற்றோம்.
காலையில் மைசூர் நிலையத்தில் இறங்கி ஒரு வாடகை மகிழுந்தில் குட்டா
பயணித்தோம். ராஜீவ் காந்தி தேசியப் பூங்கா என்று அழைக்கப்படும் நாகர்கோலே காடு (புலிகள் சரணாலயம்)
வழியே பயணம்.. பல முறை அவ்வழியே மகிழுந்திலும் பேருந்திலும் காட்டை
சுற்றிப்பார்க்கும் ஊர்தியிலும் பயணித்திருக்கிறோம். ஆனால் புலியைப் பார்த்தது
இல்லை..மான்கள், யானைகள், மயில்கள் காட்டெருமை பாம்பு நிறையப் பார்த்திருக்கிறோம்
ஒரு வழியாக குட்டாவுக்கு வந்து சேர்ந்து விட்டோம். ஆண்டிற்கு இருநூறு
நாள் மழை பெய்தாலும் தண்ணீர்ப் பஞ்சம் என்பது குட்டாவின் தனிச்சிறப்பு.
மழைபிடிப்புப் பகுதியான அங்கு மழை அளவை அங்குலத்தில்தான் குறிப்பிடுவார்கள் ..
இருபது அங்குல மழை இயல்பானது அறிந்தேன்.
இறைவனின் சொந்த நாடு என்று கேரளாவை அதன் இயற்கை எழிலுக்காகக் குரிப்பிடுவார்கள்.
குட்டாவின் எழில் கேரளாவை மிஞ்சியது.
எப்கு பார்த்தாலும் பச்சைப்பசேல். மேடும் பள்ளமுமான மலைப்பாங்கு
வேறெங்கும் காண முடியாத வகை வகையான பல வண்ண மலர்கள் .எங்கு பார்த்தாலும் காபித்
தோட்டங்கள். பரந்து விரிந்த புல்வெளிகள்.
மிகப்பெரிய வீடுகள், அவற்றை மிகச் சுத்தமாகப் பராமரிக்கும் பாங்கு இவை குட்டாவின்
சிறப்புகள் .
நாங்கள் இருந்த வீடு ஒரு பெரிய மேட்டின் மேல் இருக்கும்.
திரைப்படங்களில் காணும் தோட்ட வீடுபோல் வெளித்தோற்றம் இருக்கும். மேட்டில் ஏறப்
படிகள் கிடையாது.. சரிந்த நிலப்பகுதி ஒன்றுதான் படி . . தினமும் வண்டியில் அந்த
வழியில் ஏறி இறங்கும்போது சிறிது அச்சமாகத்தான் இருக்கும்.
வங்கிக்கும் வீட்டுக்கும் ஒன்னரை கி மி தான் இடைவெளி..அதற்குள் சில பல
திருப்பங்கள் மேடுகள் பள்ளங்கள் அதோடு சாலையும் மிக மோசமாக இருக்கும்..மழையோடு
காற்றும் சேர்ந்து விட்டால் யாரோ நம்மை மிக வேகமாக துரத்தி வருவதுபோல் ஒரு எண்ணம்
தோன்றும். அடித்துப்பெய்து கொட்டும் மழை என்றால் அங்கேதான் பார்க்கலாம்.
மின்சாரம் என்பது எப்போது வரும் போகும் யாருக்கும் தெரியாது. அது
பற்றி யாரும் பெரிதாகக கவலைப்படுவதில்லை .ஒரு மழைக்காலத்தில் தொடர்ந்து பத்து
நாட்கள் மின் தடை. அங்கிருப்பவர்கள் “சென்ற ஆண்டு தொடர்ந்து மூன்று வாரம் மின்தடை
அதற்கு முந்தைய ஆண்டு மூன்று மாதங்கள் .” என்று வரலாற்றைப்புரட்டுவார்கள் மின் தடை
என்றால் தண்ணீர் வரத்தும் துண்டிக்கப்படும்.
மழை நீரைப்பிடித்தே பத்து நாட்களும் சமாளித்தோம்.இரவு எட்டு
மணிக்கெல்லாம் படுத்து விடுவோம். குளிருக்கு சுகமான ஆழ்ந்த தூக்கம் வரும்/
அங்கிருந்த ஒன்னரை ஆண்டுகளில் இரண்டு பெருநாளும் இருமுறை வந்தன. முப்பது
நாளும் விடாமல் நோன்பு வைத்தோம்.
இவற்றையெல்லாம் கடந்து உடலுக்கு ,மனதுக்கு ஆன்மாவுக்கு இதமான இயற்கை
எழில். அதிகாலை தஹஜத் தொழுகையில் இறைவனோடு ஒன்றியது போல் ஒரு நிறைவு உண்டாகும்,
மாசு படாத இயற்கைக்காற்று –மின் விசிறி குளிர்பதனம் இவற்றுக்கெல்லாம்
வேலையே இல்லை. ஜோதிக்கு இதய நோய்க்கான மருந்துகள் அங்கு பயன்படுத்த சந்தர்ப்பமே
இல்லை. குளிர் மழைதான் தாங்க முடியவில்லை.
தினந்தோறும் பார்த்தாலும் சலிப்புத் தட்டாத பரவசமூட்டும் இயற்கை
எழில். நாம் காணபது கனவா நினைவா திரைப்படக்காட்சியா என திகைக்க வைக்கும் பலவண்ண
செடிகள் கொடிகள் மரங்கள் பூக்கள்.
வீடுகளின் பிரமாண்டமும் , அழகும் வசதிகளும் வியப்பூட்டுவதாய்
இருக்கும். வீட்டு வளாகத்துக்குள்ளேயே கூடைப்பந்து , கால்பந்து மைதானங்கள் அமைந்த
வீடுகளைப் பார்த்திருக்கிறேன்,.
கூர்கி என்பது ஒரு தனி இனம். பெரும்பாலும் நல்ல உயரம் ,நிறம் அழகு
உடைய ஆண் பெண்கள்., நல்ல படிப்பு, வாழ்க்கைத்தரம் உழைப்புக்கு அஞ்சாத மக்கள்..எண்பது
தொண்ணுறு வயது வரை நடமாடித்திரியும் உடல் நலம்., மகிழுந்து ஓட்டும் மன வலிமை .
கூர்கி மொழி. தமிழ், மலையாளம், கன்னடம் கலந்த ஒரு கலவையாக இருக்கும். எழுத்து
வடிவம் கிடையாது
சென்னை கிருத்துவக்கல்லூரியில் இன்றும் கூர்கிகளுக்கு இட ஒதுக்கீடு
இருக்கிறதாம்.
ஓரளவு வசதி படைத்தவர்களிடம் குறைந்தது ஒரு மகிழுந்து, ஒரு ஜீப்
,சுமையுந்து ஜெனரேட்டர், சூரிய ஒளி மின்கலங்கள் எல்லாம் இருக்கும்.
அங்கு எல்லோருக்கும் தமிழ், மலையாளம் ,கன்னடம் கூர்கி மொழி
பேசத்தேரியும். படிததவர்கள் மிக அழகான தூய்மையான ஆங்கிலம் பேசுவார்கள்..இசுலமியர்களுக்கு
உருது தெரியும்.
காபித்தோட்டங்களில் பணி புரிய நிறைய இலங்கைத்தமிழர்கள் வந்ததால் தமிழ்
பேசக்கற்றுக்கொள்வது அவசியமாகவும் எளிதாகவும் ஆகி விட்டது குட்டா கேரள மாநிலத்தின்
எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. மேலும் அம்மாநிலத்தினர் பலர் குட்டாவில் வணிகம்
செய்து வருகின்றனர். குறிப்பாக அங்குள்ள இசுலாமியர்களில் பெரும்பாலானோர் மலையாளிகள்.
வங்கிக்கு அருகில் அமைந்துள்ள பள்ளிவாசல் மலையாளிகளால் கட்டப்பட்டது.
குட்டாவுக்கு நான் முதலில வந்து விடுதியில் தங்கியிருந்த நாட்களில்
காலைத் தொழுகைக்குக் பள்ளி சென்று வந்தேன். அது யானைகள் நடமாடும் பகுதி அந்த இருள்
பிரியும் நேரத்தில் அங்கு போவது பாதுகாப்பானது அல்ல என்று பலரும் சொன்னதால்
வெள்ளிகிழமை ஜும்மாவுக்கு மட்டும் பள்ளிக்குச் சென்று வந்தேன்.
பள்ளி விடுமுறையில் பைசல் பாப்டி குடும்பம் வந்து சென்றார்கள்.
அவர்கள் வருமுன்னே சொல்லி விட்டேன். ஓன்று வீட்டுக்குள் அணியும் செருப்பு கம்பளி
உடைகள் கொண்டு வரவேண்டும். இரண்டு தினமும் குளிப்பதெல்லாம் முடியாது-குளிராலும்
தண்ணீர் பற்றாககுறையினாலும். பிள்ளைகளுடன் பல இடங்கள் சென்று வந்தோம்.
உள்ளூரில் வங்கி வாடிக்கையாளர்கள் உத்தையா, ஐயன்னா இவர்களின்
தோட்டங்களுக்கு சென்றோம். பச்சை மிளகுக் கொடி (பச்சை மிளகை வாயில் போட்டால் அப்படி
ஒரு காரம் ) இஞ்சிச செடி இவற்றையெல்லாம் விட தோட்டத்தை சுத்தமாக வைத்திருக்கும்
அழகு வியப்பூட்டியது. அய்யன்னா மிகச்சிறந்த வேட்டைக்காரர்.
காபித்தோட்டங்களில் வேலை அதிகம் இருக்கும் காலங்களில்
வெளியூரிலிருந்து மலை வாசிகளை (குட்டாவே மலைதான் ) பணியில் அமர்த்துவார்கள்.
இயற்கையோடு இணைந்து வாழும் இவர்கள் வாழ்க்கை முறை மிக அழகானது. எந்தக் குளிர்
மழையிலும் ஆண்கள் மேலுடை அணியமாட்டார்கள்.படுப்பது திறந்த வெளியில்தான். அவர்களே சமைத்த
உணவு தவிர வேறு எதையும் தொட மாட்டார்கள்..மூங்கில் குழாய்களை நிலத்தில் இடம்
பார்த்து சொறுகுவார்கள். அதில் கொட்டும் நிலத்து நீரை மட்டுமே பயன்படுத்துவார்கள்
.
குட்டாவில் எங்களுக்குக் கிடைத்த பணிப்பெண் (சுசீலா) ஒரு நாள் கூட
விடுப்பு எடுத்ததில்லை . ஒன்னரை மணி நேரம்தான் வீட்டு வேலை செய்தாலும் எந்த
வேலையும் மறுத்ததோ முகம் சுளித்ததோ இல்லை .நாங்கள் குட்டாவை விட்டுக்
கிளம்பும்போது அப்படி ஒரு அழுகை .இப்போதும் அவ்வப்போது தொலைபேசியில் ஜோதியோடு
பேசவது உண்டு .
குட்டாவில் இருந்த ஒன்னரை ஆண்டுக்காலமும் கறி வாங்கவில்லை. நாற்பது கி
மீ தொலைவில் கோனிக்கொப்பல் என்ற ஊரில்தான் கறிக்கடை..அந்த ஊருக்குப்போகும் வழியில்
குட்டா அருகில் காட்டாறு ஓடிக்கொண்டிருக்கும். அதன் மேல் உள்ள பெரிய பாலத்தில் ஒரு
பக்க பாதுகாப்புக் கம்பி உடைந்து தொங்கிக்கொண்டிருக்கும். அது சரி செய்யப்படவேயில்லை..
செட்டிநாடு நகரத்தார் பலருக்கு அங்கு தோட்டங்கள் உண்டு. அழகப்பச்
செட்டியார் என்பவர் வங்கியின் வாடிக்கையாளர்.. அவரது தோட்டத்தில் காபி விதை
எப்படிப் பதப்படுத்தப் படுகிறது என்பதைப் பார்த்தோம்..
குட்டாவுக்கு அருகில் அருவி ஓன்று இருக்கிறது. கோயிலை ஒட்டி அமைந்துள்ள
அந்த அருவியின் பெயர் இருப்பு. ஒரு தொங்கும் பாலத்தைத் தாண்டி அருவிக்குப்
போகவேண்டும். திரைப்படங்களில் மிக அழகாகக் காட்சி அளிக்கும் தொங்கும் பாலம்,
நேரில் பார்க்க வயிற்றைக் கலக்குவதுபோல் இருக்கும். காட்டருவி போல்
கொட்டிகொண்டிருந்த அதில் குளித்துப்பார்க்க மனம் துணியவில்லை.
அருவிக்கு சென்று வீடு திரும்பியவுடன் பார்த்தால் பேரன் பர்வேஸ்
காலில் நிறைய அட்டைப்பூச்சிகள் ஒட்டிக் கொண்டிருந்தன பதறியடித்து அரசு
மருத்துவரிடம் போனோம். அவர் அட்டைப்பூச்சி கடிப்பதால் குருதி சுத்தம்
செய்யப்படுகிறது எனவே பதட்டம் தேவையில்லை மருந்தும் தேவையில்லை என்று சொல்லி
அட்டைப்பூச்சிகளை எடுத்து விட்டார்.
குடகு மாவட்டத் தலைநகர் மடிக்கேரி – ஆங்கிலேயர்கள் வைத்த பெயர்
மர்காரா; குடகு, கூர்க் என்ற பெயரில் ஊர்கள் கிடையாது. மடிக்கேரியில் ஒரு பெரிய
பூங்கா இருக்கிறது. வெகு தொலைவு மேடு பள்ளத்தில் நடந்து சென்றால் ஒரு அருவி (அபி )அருவி)யைக்
காணலாம். இதைப்பார்க்கவா இவ்வவளவு சிரமப்பட்டோம் என ஒரு அலுப்பு வரும்.
காவேரி நதி உற்பத்தியாகும் தலைக்காவேரி மடிக்கேரிக்கு அருகில் உள்ளது.
குட்டாவுக்கு மிக அருகில் உள்ளது ராஜீவ் காந்தி தேசியப்பூங்கா என்று
அழைக்கப்படும் நாகர்ஹோலே காடு .புலிகள் சரணாலயம்
கேரளாவில் உள்ள மீன் முட்டி என்ற அருவியையும் பார்த்து வந்தோம். மீன்
ஏதும் முட்டவில்லை.
இவற்றையெல்லாம் விட குட்டாவில் எங்கள் வீட்டில் உட்கார்ந்து
பார்த்தால் தெரியும் இயற்கை எழில் சூரியன் உதிக்கும் மறையும் காட்சிகள் பறவைகள்
ஒலி, வண்டுகள் பூச்சிகளின் ரீங்காரம், காட்டுக்கே உரிய இனம்புரியாத ஓசைகள் எங்கோ
ஓடும் நீரோடையின் சலசலப்பு எனக்கு மிக
அழகாகத் தோன்றும்.
காபி பூப்பது,காய்ப்பது கனிவது எல்லாம் வீட்டிலிருந்தே பார்க்கலாம்
மைசூர் போய் மிருகக்காட்சி சாலை, அரண்மனைகளைக் கண்டு வந்தோம்.
மிருகக்காட்சி சாலையில் பேரன் பர்வேஸ் (மூன்று வயது) அவன் அத்தம்மாவின் கையைப்
பிடித்து வேகமாக காட்சி சாலை முழுதும் அழைத்துச்சென்றது இன்றும் நினைவில்
நிற்கிறது.
சிறுவயதில் பார்த்த பிருந்தாவன் எனப்படும் கிருஷ்ணா சாகர் அணையில்
பழைய பொலிவு, அழகு, பரப்பளவு எல்லாம் மங்கியது போல் தோன்றியது.
மைசூருக்கு அருகில் உள்ள புத்தக் கோயில் பார்க்க வேண்டிய இடங்களில்
ஓன்று .புலம் பெயர்ந்து வந்த திபெத்தியர்கள் ஒரு ஊரையே அமைத்து திபெத்தில் உள்ளது
போல் ஒரு பிரமாண்டமான புத்தக் கோயிலை நிறுவியுள்ளார்கள். அங்குள்ள புத்த சிலை
தங்கத்தால் ஆனதென்று சொல்கிறார்கள். பத்து வயது பையனெல்லாம் புத்தத் துறவி உடையில்
திரிவதைப்பார்க்க வியப்பாக இருக்கும். கோவில் வளாகத்தில் மிகப்பெரிய பூங்கா
அமைத்து நன்கு பராமரித்து வருகிறார்கள், கட்டிட சுவர்கள், சன்னல்களில் மிகப்பெரிய
தேன் கூடுகளைப் பார்க்கலாம்.
இவ்வவளவு அழகான இடங்கள் உள்ள குட்டாவுக்கு நம்மை வரவிடவில்லையே என
உடன்பிறப்புக்கள் முனு முணுப்பது காதில்
விழுகிறது .என்ன செய்வது சந்தர்ப்பம் சூழ்நிலை அப்படி முதலாவதாக நாங்கள் ஏற்கனவே
பெருநாளைக்கு கடலூர் போய் அதற்குப்பின் பதினைந்து நாட்கள் தங்கி விட்டுத்தான்
குட்டா வர எண்ணி விடுப்புக்கு எழுதிக் கொடுத்து விட்டேன்.
இரண்டாவது தண்ணீர் பற்றாக்குறை. வீட்டில் கிணறு ஆழ் துளைகிணறு எதுவும்
கிடையாது. எங்கள் வீட்டுக்கு மேலே உயரத்தில் வீட்டு உரிமையாளர் தோட்டமும் வீடும்.
அங்கிருந்து குழாயில் தண்ணீர் ஓரளவுக்கு வரும். அதற்கு மேல் தேவைபட்டால் அவர்
தோட்டத்தில் உள்ள தொட்டியில் ஓரளவு எடுத்துக்கொள்ளலாம் அதுவும் நம்மால் அந்த
உயரத்தில் ஏற முடியாது ,அண்ணாந்து பார்த்தாலே கழுத்து வலிக்கும்.
மூன்றாவது கட்டில் மெத்தை கம்பளி இல்லாமல் யாரும் படுக்க முடியாது.
செருப்பில்லாமல் வீட்டுக்குள்ளேயே தரையில்
கால் வைக்க முடியாது.
இருக்கும் ஒரே விடுதியிலும் தண்ணீர் பற்றாக்குறை . தோட்டங்களை ஒட்டி
இல்லத் தங்கல் விடுதிகள் இருக்கும் (ஹோம் ஸ்டே) கட்டணம் ஒரு நாளைக்கு ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் அல்லது
அதற்கு மேல் .சாலையில் இருந்து எழு எட்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும்
அவற்றிற்குப் போகும் வழி கரடு முரடான வழியாக இருக்கும்.
கூர்க் மாவட்டம் ஒரு காலத்தில் புதுச்சேரி போல் தனி யூனியன் பிரதேசமாக
இருந்தது. அது வேண்டாம் என்று எண்ணிய கூர்கிகள் கர்நாடக மாநிலத்தில் இணைந்து
கொண்டார்கள். இன்றும் சில சிறப்பு சலுகைகள் கூர்கிகளுக்கு உண்டு. துப்பாக்கி
உரிமம் தேவையில்லை, வீட்டில் மது வைத்துக்கொள்ள அனுமதி, இறந்தவர்களை தோட்டத்திலேயே
அடக்கம் செய்யலாம்
இப்போது குட்டா ஏன் குடகு மாவட்டமே ஒரு மிகப்பெரிய முதியோர் இல்லமாக
மாறி வருகிறது. படித்த ஆண் பெண்கள் பணி, வணிகம், தொழில் என்று மைசூர் , பெங்களூர்
அல்லது வெளி நாடுகளுக்குப் போய் விடுகிறார்கள். தட்ப வெப்ப நிலை ஒத்து வராததால்
சென்னைக்கு வர மாட்டர்கள். ஏன் குட்டாவில் பணியாற்றும் தமிழர்கள் கூட சொந்த
ஊருக்குப்போனால் ஒத்து வரவில்லை என்கிறார்கள். சரியான இணை கிடைக்காமல் கூர்கி பெண்கள் பலர்
திருமண வயது கடந்து நிற்கிறார்கள்
பீல்ட் மார்ஷல் காரியப்பா,, ஜெனரல் திம்மையா – இந்திய
பாதுகப்புப்படையில் மிக உயர்ந்த தலைமை நிலையில் பணியாற்றிய இவர்கள் கூர்கிகள்
.விளையாட்டுத்துறையில் கேள்விப்படும் போபண்ணா , உத்தப்பா அஸ்வினி நாச்சப்பா ஜோசுவா
சின்னப்பா இவர்களும் கூர்கிகளே. பெயர்கள் எல்லாம் பா, யா , நா என்று நெடிலில்
முடியும்..
நாற்பது ஆண்டுகளும் நூறு நாட்களும் வங்கிப்பணி நிறைவுற்று ஓய்வு
பெற்றது குட்டாவில்தான், நெல்லை
சந்திப்பில் துவங்கி குட்டா வரை பதினெட்டுக் கிளைகள் /அலுவலகங்கள் ஏழு மாநிலங்கள் .ஆங்காங்கே சில இடர்கள்
இருந்தாலும் மொத்தத்தில் நிறைவான பணி. எப்போதும் யாருக்காகவும் விதிகளை மீறியதாகவோ
வளைந்து கொடுத்ததாகவோ நினைவில்லை. அதுவே பணியில் மிகப்பெரிய மன நிறைவு , மகிழ்ச்சி
சென்ற பகுதி பற்றி கருத்துக்களும் பாராட்டுகளும் தெரிவித்த ராஜா,
சாகுல், அஜ்மல், சகோதரிகள் மெகராஜ் ஜோதிக்கு நன்றி.
ரம்ஜான் விருந்து கொடுத்த்து போல் இருந்தது என்று மெஹராஜ் அக்கா
பாராட்டியிருந்தது .
அஜ்மல் முகநூலில் என் நினைவுத்திறனையும் கூர்ந்து கவனிக்கும்
ஆற்றலையும் பாராட்டியிருந்தார்.
ஜோதியக்கா பல புதிய செய்திகளைத் தந்திருந்தது.
முத்தக்கா மகள் அமீதா அம்மா செய்த தொக்கை உறைப்பு அல்வா
என்றது,,பர்ஜானா சாகுலை ஆம்பிளை என்று கண்டு பிடித்தது , அம்மா கொட்டங்கச்சியை
அடுப்பில் வைத்து எரிக்கும்போது நூரக்கா இடுக்கியால் அதை எடுத்து வெளியே போடுவது ,
பாசமலர் திரைப்படம் பார்க்க போய்கொண்டிருந்த என்னோடு சேர்வதற்காக தெருவில் ஒடி
அதற்காக அத்தாவிடம் கொட்டு வாங்கியது, தாவண்ண பெரியம்மாவின் ஞான நிலை, மம்மு
கொடுத்த பல நிறச் சம்கிகள் , அதனால் பள்ளியில் கிடைத்த புகழ் கடலூர் ஜோதி காது
குத்தும்போது முகம் சுளிக்காதது என்று
நிறைய சுவையான செய்திகள் நல்ல இலக்கிய நடையில்.
இது போன்ற செய்திகளை கட்செவியில் போடுவதோடு வலை நூலில் . என் தொடர்
பகுதிக்கு கருத்தாகத்(comments in Blog)
தெரிவித்தால், அது ஒரு அழியாத பதிவாக இருக்கும்.
கடலூர் ஜோதி கொடுத்த சில செய்திகள்
காது குத்தும்போது முகம் சுளிக்காமல் இருந்ததற்கு அக்காமார்
செல்லமாய்க் கடிந்தது , மும்தாஜ் அக்கா திருமண விருந்திற்கு தொண்டி போனபோது அக்கா
உதட்டுச்சாயம் பூசி விட , அது அழிந்து விடாமல் இருக்க சுவையான சிற்றுண்டியை
உண்ணாமல் தவி(ர்)த்தது,, ஷஹாவுக்கு வாங்கிய இரும்பினாலான விளையாட்டு சமையல்
சாதனங்களை ஜோதி பிரியமாகக் கேட்க, ஷஹாவுக்குத் தெரியாமல் குப்பி ஊருக்குப்
போகையில் குப்பியின் பையில் அம்மா எடுத்து வைத்தது, அம்மா ஜோதிக்குக் கொடுத்த மிக
உறுதியான சில்வர் சாப்பாட்டுத்தட்டு, கிண்ணம் குவளை என்று பல நினைவுகள்
இ*க(தைச்செருகல்:
, "I
do not know where family doctors acquired illegibly perplexing
handwriting;."
இந்த ஆங்கில வாக்கியத்தின் சிறப்பு என்ன ?
தெரிந்தவர்கள் சொல்லலாம். விடை அடுத்த
பகுதியில்
நிறைவுற்றது வங்கிப் பணி மட்டுமே,
இறைவன் அருளால்
பயணம் தொடரும்.
.வலை நூல் முகவரி
கூகிள் தேடுதலில்
sherfuddinp.blogspot.com
“
.
, . . , .
,
.
No comments:
Post a Comment