Thursday, 14 July 2016

வாழ்க்கைப்பயணமும் வங்கி அனுபவங்களும் 19 .மதுரை(திருப்பத்தூர்)


தமிழ் நாட்டில் உள்ள  இரண்டு திருப்பத்தூர்களை மதுரை திருப்பத்தூர் என்றும் வாணியம்பாடி திருப்பத்தூர் என்றும் குறிப்பிட்டுக் காண்பிப்போம்.ஆனால் மதுரை திருப்பத்தூர் என்பது திருப்பத்தூரை வைத்து மதுரையை அடையாளம் சொல்வது போல் இருக்கிறதே என்று எண்ண வேண்டாம்.                                                    
அத்தாவுக்கு மதுரையில் ஒரு குறுகிய காலப்பணி. எனவே அத்தா அம்மா மதுரையில் இருக்க சகோதரிகள் மெஹராஜ், ஜோதி ,சுராஜோடு நானும் திருப்பத்தூரில் பெரியத்தா வீட்டில் தங்கிப்படிப்பதாக ஒரு ஏற்பாடு .. நாங்கள் எல்லாம் சமாளித்து இருந்து விட்டோம். சுராஜ் மட்டும் கத்தியின்றி ரத்தமின்றி  ஒரு விடுதலைப்போர் நடத்தி மதுரை போய்ச்சேர்ந்து விட்டது . ஆகஸ்ட்டில் பிறந்த்ததல்லவா !  
முதல் முறையாக அத்தா அம்மாவைப் பிரிந்த வாழ்க்கை. சஹா சிறுவன் என்பதால் மதுரையில் இருந்தான்,. முத்தக்காக்கவுக்கு திருமணமாகி விட்டது. அக்காமார் நூர் ஜென்னத்,மும்தாஜ் கல்லூரி என நினைவு.
திருப்பத்தூர், பெரியத்தா வீடு எங்களுக்கு மிகப் பழகிய இடம் என்பதால் பெரிய சிரமம் எதுவும் தெரியவில்லை. கழிப்பறை ,குளியலறை இல்லாதது கூட பழகி விட்டது. நீச்சல் தெரியா விட்டாலும் சீதேவிக் குளியல் தனி சுகம்தான்.
அஜுமலும் நானும் ஒரே வகுப்பு(ஏழாம் வகுப்பு), ஒரே பிரிவு என்பதால் நல்ல ஒரு நட்பு எங்களுக்குள் உருவானது. சக்ரவர்த்தி, வாச்சா பெரியத்தா மகன் ராஜா என் வகுப்பு, வேறு பிரிவுகள் , ஒரே பள்ளி. (அப்போது இருந்ததே ஒரே பள்ளிதான் என நினைவு)
பள்ளியில் டோண்டாக் என்ற செல்லப்பெயருடன் ஒரு ஆசிரியர் இருந்தார். .மாணவர்களைத் தண்டிக்க எண்ணினால் அருகிலிருக்கும் மாணவனைக் கூப்பிட்டு அவன் தலையில் ஓங்கி ஒன்னரைக்கொட்டு கொட்டு என்பார்.. கொட்டு பலமாக விழாவிட்டால் திரும்பவும் கொட்டச்சொல்வார்.    ஒல்லியாக ஒரு தமிழாசிரியர் ( நாச்சியப்பன் ?) இருந்தார். இரு விரல்களுக்கு இடையில் பேனாவை வைத்துத் திருகுவது அவர் தண்டிக்கும் முறை .பிரின்ஸ் என்ற பெயரில் ஒரு ஆசிரியர். மாணவர்கள்  அதை தமிழில் மொழி பெயர்த்து ள வுக்குப்பதில் சிறப்பு ழ போட்டு நக்கல் செய்வார்கள் 
வகுப்பு ஆசிரியராக இருந்த ஆங்கில ஆசிரியர் அஜ்மலுக்கும் எனக்கும் ஆறு மாதம் ஆங்கிலத்தில் சிறப்புப் பயிற்சி அளித்தால் பள்ளி இறுதி ஆங்கிலத்தேர்வு எழுதச்செய்யலாம் என்று எங்கள் ஆங்கில அறிவைப் பாராட்டினார்.
திருப்பத்தூரின் அப்போதைய விலை நிலவரம் : இட்லி கால் அணா தேனீர் ஒரு அணா. பரோட்டா ஒரு அணா. அளவு சாப்பாடு நான்கு அணா..முட்டை இரண்டு அணா (ஒரு ரூபாய்க்குப் பதினாறு அணா.. ஒரு ரூபாய்க்கு அறுபத்தி நான்கு இட்லி )
அத்தா அம்மா மாதம் ஒருமுறை திரு வந்து போவார்கள். மதுரையில் தல்லாகுளம் தமுக்கம் மைதானத்தில் பொருட்காட்சியில் மக்கள் பார்வைக்காக ஒரு மாதிரி இல்லம் கட்டியிருந்தார்கள். அத்தா அம்மா அந்த வீட்டில் வசித்து வந்தார்கள்.                                         உசேன் அண்ணன் ஊர்தி ஓட்டுனர். பார்வையிலும் சொற்களிலும் பாசத்தைப் பொழிவார்.. சய்யது சச்சா மதுரை ஈனா கடையில் பணியாற்றியது . அவ்வப்போது பணி நிமித்தமாகவும் சும்மாவும் வீட்டுக்கு வரும்.   பட்டர்ப்லை மண்ணெண்ணெய் அடுப்பு ஒரு புதுமையான வடிவில் வந்ததை சச்சா கடையிலிருந்து .கொண்டு வந்து செயல் விளக்கம் அளித்தது. ஒரு பெரிய கண்ணாடிகுடுவையில் மண்ணெண்ணெய் ஊற்றி கவிழ்த்து வைத்தால் எண்ணெய் சொட்டுச்சொட்டாய் இறங்கி எரிவாயு அடுப்பு போல் ஊதா நிறமாக சீராக எரியும்
திருப்பத்தூரில் கல்வியாண்டு முடிந்து நாங்கள் விடுமுறையில் மதுரை போனோம். அப்போது நிறைய விருந்தினர்கள் – மாணவப்பருவத்தினர் வந்திருந்ததாக நினைவு. நினைவில் வருபவர்கள் லியாகத் அலி அண்ணன்,, சின்னபொட்டு அக்கா மக்கள், சி ஹெச்  அண்ணன் மகன் ஸ்டாலின். .. ஸ்டாலின் ஊருக்குபோகும்போது  அம்மா அவர்கள் வீட்டுக்கு ரவை லட்டு செய்து கொடுத்து அனுப்பியது. அதை ஸ்டாலின் வெகு நாட்களாக பெருமையாக சொல்லிகொண்டிருந்தார் .
மதுரையில் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு பெரிய கிளப் இருந்தது. அதில் ஸ்னூக்கர் விளையாட்டைப் பார்த்திருக்கின்றோம்...
திருப்பத்தூரில் மார்கழி மாதத்தில் கோயிலில் அதிகாலையில் திருப்பாவை திருவெம்பாவை ஒலிபரப்புவார்கள். சீதேவித் தண்ணீரில் எதிரொலித்து கேட்கும் ஓசை மிக இனிமையாக இருக்கும்.
நாங்கள் திருவில் இருக்கும்போது ஜமால் அண்ணனுக்கு விமானப்படையில் பணி நியமன ஆணை வந்தது.                                    கருத்தக்கிளி அண்ணன் வானொலி தொழில் நுட்பப் பயிற்சிக்காக காரைக்குடி போய்வரும். .                                                  சரிவண்ணன் ஊராட்சி அலுவலகத்தில் பணியாற்றியது.
மாமா மகன் சக்ரவர்த்தி சொல்லாற்றல் செயலாற்றல் வணிக ஆற்றல் எல்லாம் நிறைந்தவர். தொழில் முனைவர் அல்லது வணிகராகப் பெரிய அளவில் வராமல் முடங்கிப்போனது ஏன் என்று தெரியவில்லை .இப்போது கூட அவர் ஒரு சுய பரிசோதனை  செய்து தன் குறைகளைக்கண்டு ,களைந்து ஓர்மையோடு செயல்பட்டால் இறையருளால் வெற்றி நிச்சயம்..வயது ஒரு தடையல்ல.
திரு வாழ்க்கையின் அடுத்த பகுதி கால் நூற்றாண்டுக்குப்பின்  எனக்கு சிவான் (பீகார்) கிளைக்கு மாறுதல் வந்தபோது,. சிவானில் பிள்ளைகள் படிக்க தகுந்த பள்ளிகள் இல்லாததால் குடும்பத்தை திருவில் விட்டு நான் மட்டும் சிவான் சென்றேன். .என் நாற்பது ஆண்டு வங்கிப்பணியில் தொடர்ந்து அறுபத்தியொன்பது நாள் விடுப்பு எடுத்தது அப்போதுதான். இது பற்றி சிவன் அல்ல சிவான் என்ற தலைப்பில் ஓரளவுக்கு சொல்லியிருக்கிறேன். நீண்ட விடுப்பில் இருந்ததால் வேலை போய்விட்டதோ என சில நெருங்கிய உறவினர்கள் கேலி பேசினர் மாமா ,குப்பி, சிராஜுதீன் மிக அக்கறையுடன் குடும்பத்தைப் பார்ததுக்கொண்டனர் ..
அடுத்து ஜலந்தரிளிருந்து தமிழ்நாட்டுக்கு மாற்றலாகி வருகையில் பத்தாம் வகுப்பில் இருந்த பைசலுக்கு நாங்கள் இருந்த மங்கலப்பட்டியின் அருகிலுள்ள பள்ளியில் இடம் கிடைக்காததால் திரு . அப்சா பள்ளியில் சேர்த்தோம். மாமா வீட்டில் தங்கிப்படித்தான். பள்ளி தலைமை ஆசிரியர் திரு ராதாகிருஷ்ணன் பைசல் மேல் தனிகவனம் செலுத்திப் பார்த்துக்கொண்டார்.. ஆறுமுகம் பிள்ளை குடும்பத்தினர் தங்கள் குழந்தைகளுக்காகத துவங்கிய கல்வி நிறுவனங்கள் – மழலை வகுப்பு முதல் கல்லூரி வரை- திரு மக்கள் கல்விக்குப் பேருதவியானன. .
திரு சொந்த ஊர் என்றாலும் எனக்கு அடுத்த தலைமுறையில் பலருக்கு அந்த ஊரைப்பற்றி ஒன்றும் தெரியாது. அதற்கு அடுத்த தலைமுறையில் பலர் திருவைப்பார்த்தே இருக்க மாட்டர்கள்.
அவர்களுக்காக சொந்த ஊர் பற்றி எனக்குத் தெரிந்த, கேள்விப்பட்ட (சில) செய்திகளைப் பதிவு செய்கிறேன்
திரு.தட்ப வெப்பம் உடல் நலத்துக்கு மிக மிக ஏற்றது. அங்கு இப்போது போனால் கூட நல்ல பசியையும் தூக்கத்தையும் உணரலாம்.. அதனால்தான் ஸ்வீடிஷ் மிஷன் மருத்துவ மனை திரு.வில் அமைக்கப்பட்டது. மிகக்குறைந்த கட்டணத்தில் சிறப்பான வைத்தியம் செய்த அந்த மருத்துவ மனை அந்தப் பகுதி மக்களுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்..பைசல்,பாப்டி அங்கேதான் பிறந்தார்கள்.அந்த மருத்துவமனை இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை 
திருவின் முதன்மையான பகுதி சீதேவி வடகரை, .அங்கேதான் எங்கள் வீடு இருந்தது,.அதோடு, பெரியத்தா வீடு, சச்சா வீடு, மாமா வீடு ,சரிவு மாமா வீடு, கட்டிடம் என்று பெயர் பெற்ற எஸ்.ஐ. மன்சில், ரஹ்மத்தலி அண்ணன் பூர்விக வீடு, தாசில்தார் பெரியத்தா வீடு, எல்லாம் அதே தெருவில்தான் அதை ஒட்டிய சந்தில் கருப்புத்தொப்பி மாமா (பஷீர் அத்தா) வீடு, பாப்பா மாமனார் வீடு.                                            கட்டிடத்தில்தான் அந்தப்பகுதியில் முதலில் மொசைக் தரை வந்தது என்று சொல்வார்கள்.. விசாலமான அந்தக்கட்டிடம் உறவினர்களுக்கு ஒரு திருமண மண்டபமாகப பயன் பட்டது .என் திருமணம், சஹா திருமணம் அங்கேதான் நடைபெற்றது..                                                 கோடையில் பலருக்கு அது தூங்குமிடமாகவும் பயன்பட்டது.
திருவில் குடும்பங்களுக்கும் நபர்களுக்கும் வழங்கிய சில பட்டபெயர்கள்(யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை)             முனுசு அம்பலார் வீடு, ஒரு வண்டி பேத்தி, கொரங்கன் பேத்தி, , குட்டை அம்பலம், குதாம்பு, பொக்காகுருதை, தவுட்டுப்பாத்து, தகரப்பாத்து, பூலாங்குறிச்சி அத்தம்மா ,கருப்புத்தொப்பி மொளகு தண்ணி, மொச, பல்லுக்கடிச்சா , சூத்தக்கத்திரிக்கா, கொடிக்கா கிழவன் கொன்னையூர்க்கிழவன் ,பட்டதட்டி, கெளுத்தி மீசை,நீலப்பெட்டி  (பெரும்பாலும் காரணப்பெயர்கள்)                                                    பதவி சார்ந்து கமிசனர், தாசில்தார், கணக்குப்பிள்ளை போன்ற பெயர்கள்.
இதில் முனுசு அம்பலார்,, கமிசனர், எங்கள் குடும்பத்துக்கான பெருமை மிகு பெயர்கள் .முனுசு என்பது கிராம முன்சீப் என்பதன் திரிபு என்பர். ஊர் வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கும் பொறுப்பு எங்கள் குடும்பத்துக்கு .ஒரு முறை எங்கள் ஐயா மீது ஒரு புகார் வர, உடனே தலைமைபதவியிலிருந்து இறங்கி, வேறு ஒருவரை அந்த வழக்கை விசாரிக்கச்சொல்லி தன் மேல் குற்றம் இல்லை என்பது நிருபனமானபின் தலைமைப்பதவியை ஏற்று நீதியை நிலை நாட்டியது ஒரு வரலாறு  .பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் பதவியும் எங்கள் குடும்பத்துக்கே . காலப்போக்கில் இது மாறி விட்டது
அத்தா நகராட்சி ஆணையர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற  சில காலம் கழித்து திரு.பெரிய பள்ளி ஜமாஅத் தலைவர் பொறுப்பு வகித்தபோது மலேசியா பாங்காக் நாடுகளுக்குப் போய் பெருந்தொகை பள்ளிக்காக கொண்டு வந்தது ஒரு. சாதனை
ஜவஹர்லால் நேரு திரு. வந்தபோது அவருக்கு மாலை அணிவித்த பெருமை எங்கள் ஐயா(அத்தாவின் அத்தா)வுக்கு உரியது. அதை ஒரு புகைப்படம் எடுக்ககூட யாருக்கும் தோன்றவில்லை .ஐயா பெயர் காதர் அம்பலம்.
ஐயா பேருந்து சேவை நடத்தியதாகவும் அத்தா சொல்லக் கேள்வி.
அத்தா அண்ணாமலையில் கௌரவ பட்ட இறுதி வகுப்பு (B.Sc., Honours) படிக்கையில் ஐயா காலமாகிவிட்டார்கள்.அத்தா எங்கள் ஊரின் முதல் பட்டதாரி; முதல் அரசிதழ் பதிவு அதிகாரி (gazetted  officer). எங்கள் உற்றார் உறவினர்களில் முதல் ஹாஜியும் அத்தாதான் என நினைவு.. அத்தாவின் செல்லப்பெயர் சின்னதுரை .
அத்தம்மா பெயர் மீராம்பீவி. நல்ல ஞானி அவர் உயிர் பிரியும்போது அவரிடமிருந்து ஒரு ஒளி புறப்பட்டுப் போனதாய்ச் சொல்வார்கள்
அம்மாவின் அத்தா மாங்குடியார் என்றும் கொன்னயூர்க் கிழவன் என்று அழைக்கப்படும் பீர் முகமது .எளிதில் சினம் கொள்பவர், கடுகடுப்பவர் என்று சொல்வார்கள், ஒரே ஒரு முறை அவர் வீட்டுக்குப் போனேன். மிக அன்பாக உபசரித்து இட்லியும் சிகப்புச் சட்னியும்  சாப்பிடச் சொன்னது நினைவிருக்கிறது .அவர் ஒரு நாள் லொகர் தொழுகை முடித்து வீட்டுக்கு வருகையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்த செய்தி கேட்டு குழந்தைக்கு லொகர் வாச்சா என்று பெயர் வைத்து விட்டாராம். நோயென்று படுக்காமல் நடமாடிய நிலையிலேயே அவர் உயிர் பிரிந்ததாய்ச் சொல்வார்கள்.
சீதேவி ஊரின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கியது .நான்கு கரைகளும் எட்டுப் படித்துறைகளும் கொண்டது. ஊர் மக்கள் குளிக்க, துவைக்க பாத்திரம் கழுவ உடல் சுத்தம் செய்ய, கோயில் யானை குளிக்க  என்று பல்முனைப்பயன்பாடு. திருவில் பிறந்து வளர்ந்த எல்லோருக்கும் நீச்சல் தெரியும் (சையது சச்சா விதிவிலக்கு)..மழை காலத்தில் சீதேவி நிரம்பிவிட்டால் அந்த ஆண்டு முழுதும் தண்ணீர் பற்றாக்குறை வராது . படிகள் முடியும் இடத்தில் ஒட்டுப்படி ஓன்று இருக்கும் அதைதாண்ட வேண்டாம் என்று எச்சரிக்கை செய்வது போல்.                      இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த நீர் நிலை இப்போது ஒரு பூங்காவாக மாற்றப்பட்டு வருவது ஒரு அதிர்ச்சி தரும் உண்மை .
.ஈனா தோட்டபைப் இனொரு நீர் ஆதாரம் எஸ் இப்ராஹீம் மாமா  அவர்களின் வயல்களுக்கு நீர் பாய்ச்சுவதற்காக அமைக்கப்பட்ட கிணறும் மோட்டரும் மக்கள் குளிக்க்கப்பயன் படும் விதமாகா பெரிய தொட்டியுடன் அமைக்கபட்டிருந்தது..இப்போது அதுவும் பயன்பாட்டில் இல்லை என கேள்வி..
எளிய முறையில் வாழ்வைத் துவங்கி இடைவிடாத உழைப்பால் ஒரு பெரிய வணிகராகவும் தொழில் முனைவராகவும் உயர்ந்த ஈனா (எஸ். இப்ராஹிம்) மாமா தன் நிறுவனமாகிய ஈனா கடை (எஸ் .ஐ அண்ட் கோ) யின்  சென்னை, மதுரை, காரைக்குடி, திருநெல்வேலி , பெங்களூர் ,திருவனந்தபுரம் கிளைகள் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பை வழங்கினார். ஊழியர்களுக்கு அருமையான உணவு ஈனா  கடையின் சிறப்பு அம்சம்..
ஈனா மாமா அம்மாவின் ஓன்று விட்ட அண்ணன்; . அவருடைய ஐந்து மகன்களில் நான்காமவர் மைத்துனர் எஸ் ஐ பீ என்று அழைக்கப்படும் பீர் அண்ணன் (மெஹராஜ் அக்கா) மூத்தவர்  எஸ் ஐ எஸ் (சம்சுதீன் அண்ணன் )- தம்பி சஹாவின் மாமனார் .மூன்றாமவர் உயர் காவல் அதிகாரியாகப் பணி மூப்புப்பெற்ற டி ஐ ஜி ஜாபர் அலி அண்ணன் . ஈனா .மாமாவை ஒரு முறை அத்தாவுடன் சென்று பார்த்த நினைவு. படுக்கையில் சாய்ந்த நிலையில் அமர்ந்திருந்த அவர் என்னை அன்புடன் மாப்ளே என்று அழைக்க நான் கூச்சத்தால் நெளிந்தேன்
சாமாங்குளம், கல்வெட்டு மேடு ,மருதநாடி இவை திரு.வின் குடிநீர் ஆதாரங்கள் ..  சாமாங்குளம்  பேருக்கேற்றாற்போல் சாமானிய மக்கள் பயன்படுத்தியது. செம்மை நிறத்தில் இருக்கும் தண்ணீரை தேத்தான்கொட்டையை வைத்து சுத்தம் செய்தால் தெளிவாகிவிடும். வேதிப்பொருள் கலப்பில்லாத எளிய சுத்திகரிப்பு முறை. (தற்போதைய கண்டுபிடிப்பு –தேத்தான் கொட்டை உடலுக்கு வலிமை கொடுத்து, சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் மிகச்சிறந்த கொட்டை).
மற்ற இரண்டும் தொலைவு காரணமாகவும். அவற்றின் சுவையான நீரினாலும் விலை அதிகம் .வீட்டிற்கு வரும் சிறப்பு விருந்தினருக்கு மட்டுமே வழங்கப்படும்.
மழை நீரையும் சேமித்து பல மாதங்களுக்கு பயன்படுத்தவதுண்டு. பொதுவாக திரு.வில் நல்ல மழை பெய்யும். பெரியத்தா வீட்டிற்கு எதிர்த்தாற்போல் சீதேவிக்கரையில் இருந்த ஒரு பெரிய புளிய மரம் புயல் மழையில் விழுந்து விட்டது 
விவசாயத் தேவைக்காக ஒரு பெரிய கண்மாய் மதுரை சாலையில் இருந்தது. அது கோடையில் அழியும்போது( வற்றும்போது) ஏராளமாக விரால்  மீன் விலை மலிவாகக்கிடைக்கும். , அந்தப் பருவத்தில் பெரும்பாலான வீடுகளில் மீன் சாப்பாடு கமகமக்கும். கோடைக்காலம் என்பதால் நிறைய மாம்பழம் கிடைக்கும். ஈக்களுக்குக் கொண்டாட்டம்
சிறிய ஊராக இருந்தாலும் சுவையான உணவு மலிவாகக்கிடைக்கும். ராசாக்கிலி கடையில் நெய்.புரோட்டா சிறப்பு அம்சம். சாப்பிட வருபவர்கள் நெய் புரோட்டா வேண்டும் என்று சொன்ன பிறகுதான் நெய் வாங்க ஆள் அனுப்புவார்கள் . மாதவன் கடையின் சிறப்பு ரொட்டி குழம்பு . சைவத்துக்கு மதகு பட்டி உணவு விடுதி . இது போக சாலை ஓர விடுதிகளில் இட்லி, இடியாப்பம், ஆப்பம் ,குழிப்பணியாரம் நல்ல சுவையுடன் மிக மலிவாகக்கிடைக்கும் ..கரீம் அண்ணன் பெட்டிகடை  அந்தப்பகுதிக்கு  ஒரு பேரங்காடி, கமர்கட், சோத்து முறுக்கு,கோகோ அச்சு  மாம்பழம், சவக்காரம் .நீல சோப்பு எனப்பலபோருட்கள் கிடைக்கும். வண்டுண்ட மாம்பழம் அந்தக் கடையின் சிறப்பு .. தெருவில் விற்கும் பருத்திப்பால், சேமியா பாயாசம் சுவையாக இருப்பதாய்ச் சொல்வார்கள் .
விருந்துகளில் தாளிச்சோறு, பொடிக்கறிக்குழம்பு, காய்க்குழம்பு வழமையான மெனு காலையில் இட்லி வடை கேசரி சாம்பார் சட்னி . ஐந்தாறு இட்லியை உடைத்துப்போட்டு அணைகட்டி அதற்குள் சாம்பாரை ஊற்றி சுவைக்கும் அழகைப்பார்த்தாலே வயிறும் மனதும் நிரம்பிவிடும்
சோறை சிறிய மலைபோல் குவித்து உச்சியில் ஒரு பள்ளம் தோண்டி அதில் குழம்பை ஊற்றி மெதுவாக சுவைத்துச் சாபிடுவது ஒரு கலை ,
ஹோட்டல் பரோட்டாவை “பிச்சுப்போட்டு (குருமாவில்) ஊற வைத்து “ உண்பது தனி சுவை 
மண்ணில் விளையாடும்போது காக்கப்பொன் என்று அழைக்கப்படும் மைக்கா என்ற கனிமப்பொருள் சிறிய துண்டுகள் கிடைக்கும். இந்த மைக்காவை அடிப்படையாக வைத்து ஒரு பெரிய தொழிற்சாலை வரப்போவதாக பேச்சு அடிபட்டது .
திருவின் சிலபாத்திரங்கள் பற்றி சொன்னால்தான் இந்தப்பகுதி முழுமை அடையும்.
  பெரியத்தா – அத்தாவின் அண்ணன்(சாகுல் ஹமீது) –அதற்குரிய மரியாதையை மதிப்போடுதான் எண்ணுவோம். தெருவை ஒட்டிய அவர்கள் வீட்டுக்கூடத்தில் சுகமாக சோபாவில் சாய்ந்தபடி போவோர் வருவோரை குரலை உயர்த்தாமல் கிண்டல் கேலி செய்வதில் வல்லவர் . ஒரே ஒரு எடுத்துக்காட்டு
“ ஏண்டா  ரொம்பவா நொடிச்சுப்போயிட்ட “
“ ஏமாமு நல்லாத்தான இருக்கே(ன்). ஏ(ன்} இப்படி கேக்கிறைய “”
“ இல்ல விடாமத் தொளுகப்போரையே அதாங் கேட்டேன் “
(சொற்களை மட்டும்தான் இங்கே வெளியட முடியும். அந்த குரல் ஏற்ற இறக்கம் , முகபாவம் ,உடல் மொழி அதெல்லாம் மனதில் உளது எழுத்தில் வடிக்க முடியாது )
** சையது சச்சா –அத்தாவின்  தம்பி,. தனியே ஒரு நூல் எழுதும் அளவுக்கு சாதனைகள் சாகசங்கள் .சச்சா நுங்கு சாப்பிடும் அழகே தனி. நுங்கில் ஒரு துளி கூட தோல் இல்லாமல் , நுங்கும் உடையாமல் பளிங்கு போல் எடுத்து பொறுமையாகச் சுவைக்கும்  .தன்னந்தனியாக வாழ்ந்த சச்சாவின் மறைவுக்கு உற்றார் உறவினர் பலரும் திரண்டு பல ஊர்களில் இருந்தும் வந்தது சச்சா எல்லோரிடமும் காட்டும் உண்மையான பாசத்தின் எதிரொலி
*** பீயன்னா மூனா மாமா – அம்மாவின் அண்ணன் . நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை .உரத்தகுரலில் கலகலவென்று நகைசுவையோடு பேச்சு கதைகள்.குழந்தைத்தனமான உற்சாகத்துடன் வேலை செய்வது        .ஜமீலா குப்பி- அத்தாவின் தங்கை – ஏழு வயதிலேயே தொழுக ஆரம்பித்து ஞான வழி, ஆன்மீகத்தில் இறங்கியவர் .சமையல் கலையிலும்  உலக அறிவிலும் வல்லவர் 
****அமீர் குப்பி (கோட்டையிருப்புக் கணக்கபிள்ளை) .அத்தாவின் தங்கை. திருவிளிருந்து ஐந்து கி மி தொலைவில் உள்ள கோட்டையிருப்புக்கு .ஓரிரு   முறை போய் வந்திருக்கிறேன்,கிராமிய மணத்துடன் சுவையான உணவும் மனமார்ந்த உபசரிப்பும் கிட்டும்.குப்பி மகன்  லியாகத்தலி அண்ணன் (ஜோதி அக்கா) வயதில் மூத்தவரானா.லும்  நெருங்கிய பழக்கம் . அந்தப்பழக்கதிலே பல நாள் வா(டா) போ(டா) என்று அழைத்தேன் யாரோ சுட்டிக்காட்டித் திருத்தும் வரை
*****உற்றார் உறவினரை அரவணைத்து உபசரிக்கும் ஆசா பெரியம்மா (ஈனா மாமாவின் உடன் பிறப்பு?) அதிகாரமான கம்பீரமான குரல், அதே போல் உடல் வாகு . வெற்றிலை போட்டு துப்பும்போது  சற்றுத் தொலைவில் உள்ள பணிக்கத்துக்கும் வாய்க்கும் ஒரு பாலம் அமைத்தது போல் சிந்தாமல் சிதறாமல் குறிதவறாமல் துப்புவது அவருடைய தனித்திறமை
******கலகலவென்று நகைச்சுவையாகப் பேசும் சீ ஹெச் (ஹமீது அண்ணன்) .தீவிர அரசியலில் இருந்தும் பெரிதாக சம்பாதித்து இல்லை . அவர் தம்பி.   ரஹ்மத்தலி அண்ணன்-,எங்கள்  தங்கை சுராஜ்   திருமணத்திற்காக முழு முயற்சி செய்தார்
.தொடரின் இப்பகுதியை நிறைவு செய்யுமுன் திரு. தமிழ் பற்றி சில வரிகள்.:
எங்கள் ஊர் வாசிகள் பச்சைதமிழர்கள். அசந்து மறந்து கூட ஷ, ஜ ,ஸ, ஹ போன்ற வடமொழி உச்சரிப்புகள் வாயில் வராது .ராஜா ராசாதான். மக்கா ஹரம் அரம்தான்.சம்சுதீன் சம்சுதான் .ஷஹா சகாதான் பெயர்த்திரிபுகள் எங்கள் ஊரின் ,தனிச்சிறப்பு  மைமூனாத்  மைம்பொண்ணு. . கதிஜா –கத்துசா
சென்ற பகுதி பற்றி கருத்துக்கள் ,பாராட்டுகள் தெரிவித்த ராஜா, பாப்டி ஷேக்  சகோதரிகள் ஜோதி ,சுராஜ் எல்லோருக்கும் நன்றி .
குட்டவில் நான் பணியிலிருந்து ஓய்வு பெற்றதால் இந்தப் பயணத்தொடர் நிறைவுற்றது என்ற எண்ணத்தில் மங்களப்பட்டி, துறையூர், கேரளா பற்றி எழுதவில்லையே என சேக், ராஜா , ஜோதியக்கா கேட்திருந்தார்கள் . நான் சென்ற பகுதியில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தேன்- பயணம் இன்னும் முடியவில்லை . இறைவன் நாடினால் இன்னும் பல மாதங்களுக்குத் தொடரும் .
இ(க)டைச்செருகல் :
சென்ற பகுதியில் ஒரு ஆங்கில வாக்கியம் கொடுத்து அதன் சிறப்பு என்ன என்று கேட்டேன். இது வரை பதிலேதும் வரவில்லை. எத்தனை பேர் படித்தார்கள் என்று தெரியவில்லை .
அந்த வாக்கியத்தில் முதல் சொல் ஒரு எழுத்து கொண்டது .அடுத்த சொல் இரண்டு எழுத்து அடுத்து மூன்ற என்று எழுத்து எண்ணிக்கை ஓன்று ஒன்றாகக் கூடிக்கொண்டே போகும் . நான் போன பகுதியில் வெளியிட்டது ஒரு பெரிய வாக்கியத்தின் ஒரு பகுதி . முழு வாக்கியம்(நன்றி ஹிண்டு )   
"I do not know where family doctors acquired illegibly perplexing handwriting; nevertheless, extraordinary pharmaceutical intellectuality, counterbalancing indecipherability, transcendentalises intercommunications' incomprehensibleness."
இது போன்ற வாக்கியங்கள் rhopalic என அழைக்கப்படும் தமிழில் இது போன்ற அமைப்பில் வாக்கியங்கள் பற்றி தெரிந்தவர்கள் சொல்லலாம்
இறைவன் அருளால்                                                                                                          பயணம் தொடரும்
வலை நூலில் படிக்க கூகிள் தேடுதலில்
sherfuddinp.blogspot.com

.
  .

     
  

  
.

 . 

  





  

4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. என்னோட சொந்த ஊர் பத்தி படிக்க பெருமையா இருக்கு. அதுவும் அந்த சீதேவி ஊரணி, ராஜாக்கிளி பரோட்டா, மாதவன் கடை பரோட்டா லாம் என்னோட சின்ன வயசு நீங்கா நினைவுகள்! உங்கள பத்தி நா அத்தா கிட்ட கேக்குறேன், எப்படி சொந்தம்னு. வெட்டு நோட்டு அம்பலம் மர்ஹூம் முகமது மீரா ஐயாவோட பேரன் நான் (என்னோட பேர்ல கடைசியா வர்ற 'meera' அது தான்.. எங்க அத்த ஜனாப் சையது அலி. அவுங்க பூலாங்குறிச்சில தான் 'B.Com' படிச்சாங்க. முதல் ல திருவனந்தபுரம் ஈனா கடைல வேல பாத்தாங்க அப்பறம் இப்ப காரைக்குடி 'S.Ibrahim&Co' கு மேனேஜரா இருக்காங்க. அதுனால நாங்களும் கரைக்குடிலயே இருக்கோம். உங்க பதிவை படிச்சதும் சின்ன வயசுல சிங்கம்புணரி ரோடுல இருக்குற எங்க பூர்வீக வீட்ல பாத்தியா, பெருநாள்க்கு பெரியத்தா-பேரியம்மா, குப்பி-மாமா, அண்ணன்மார் அக்காமார், மச்சான்மார் னு ஒரு பெரிய கூட்டமா கொண்டாடுன நினைவுகள்..! இப்போ லாம் அப்டி இல்ல.. திருப்பத்தூர்லேயே விருந்துக்கு பிரியாணி போட ஆரம்பிச்சுட்டாங்க. ராஜாகிளி ஹோட்டல் புரோட்டா குருமா கூட டேஸ்ட் மாறிப்போயிடுச்சு.. ப்ஸ்ஸ்....

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. அஸ்ஸலாமு அலைக்கும்
      சையத் அலி, குலாம் அலி, ரஷீத் அலி , உங்கள் ஐயா எல்லோரும் நன்றாகத்தெரியும், நாம் நெருங்கிய உறவினர்கள். அத்தாவிடம் கேட்டுப்பார் தெரியும்- கனரா பேங்க் மேனேஜர் என்ற

      Delete