வாழ்க்கைப்பயணமும் வங்கி அனுபவங்களும்
17.காரைக்குடி
இனிக்கும் இளமைப்பருவம் நீண்ட இடைவெளிக்குப்பின். அதுவும்
காரைக்குடியில் முத்தக்காவைத்தவிர எல்லோருக்கும் மாணவப்பருவம். மேலும்
திருப்பத்தூருக்கு மிக அருகில் உள்ளதால் அடிக்கடி நெருங்கிய, தூரத்து
உறவினர்கள் வந்து போவது, நாங்கள்
அவ்வப்போது திரு போய் வருவது ., ஜென்னத்தக்கா, மும்தாஜ் அக்கா திருமணங்கள் . கரீம் அண்ணன்முத்தக்கா) வீடு காரைக்குடியில்,
மாமா கடை (எஸ் ஐ & கோ ) என்று பல நிகழ்வுகள்,நினைவுகள் காரைக்குடியில்.
நான் பட்டம் பெற்று முதலில் வேலை கிடைத்தது காரைக்குடி மத்திய மின்
வேதியல் ஆராய்ச்சி நிலையத்தில் (CECRI). சகா
பொறியியல் கல்வி பயின்றது காரைக்குடி அழகப்பாவில் ரஹீம் அண்ணன் (மும்தாஜ் அக்கா)
விரிவுரையாளராகப் பணியாற்றியது அழகப்பா கலைக் கல்லூரியில்
எங்கள் குடும்பத்தின் அடுத்த தலை முறையின் முதல் வாரிசான ஷாகுல்
(முத்தக்கா மகன்) பிறந்ததும் அங்கேதான்.
இப்படி எல்லோர் வாழ்விலும் பின்னிப்பிணைந்து நிற்கிறது காரைக்குடி .
அண்மையில் நடந்த முத்தக்கா பேரன் (பானு மகன்) திருமணத்தில் கலந்து
கொள்ள காரைக்குடி வந்த எங்கள் உடன் பிறப்புகள் அனைவருக்கும் இளமை திரும்பி வந்தது
போல் ஒரு உற்சாகம் பீறிட்டது
,மதுரையில் வீட்டு வரி சீராய்வு சிறப்பு அலுவலராய் சில மாதங்கள்
பணிபுரிந்த அத்தாவுக்கு காரைக்குடி மாறுதல் வந்தபோது நான் எட்டாம் வகுப்புப்
படித்துக்கொண்டிருந்தேன்
காரைக்குடியின் பசுமை நிறைந்த இனிய நினைவுகள், நிகழ்வுகளுக்கு
அடித்தளமாய் இருந்தது நாங்கள் குடியிருந்த வீடு. செக்காலை சாலையில் இருந்த அந்த
பெரிய வீட்டுக்கு ஒரு பெரிய கேட் (கேட் தமிழ்ச்சொல் தெரிந்தால் சொல்லுங்கள்)..
அதிலேயே ஒருவர் நுழையும் அளவுக்கு ஒரு கதவு .கேட்டுக்கும் வீட்டுக்கும் நான்கு வீடு கட்டும் அளவுக்கு இடைவெளி . அந்த இடைவெளியில் மதில் சுவரை ஒட்டி
மாட்டுக்கொட்டகை, அதையடுத்து ஒரு பெரிய கொய்யா மரம், பலாமரம் . மர நிழல்
குளிர்ச்சியில் ஒரு கிணறு- மிகச்சுவையான நீருடன்
அதையொட்டி குளியல் அறை. தென்னை மரம்.
ஒருபுறம் வைக்கோல்போர் , வரிசையாக ஐந்தாறு கொடுக்காய்ப்புளி மரங்கள்
மகிழுந்து கொட்டகை , கோழிகூண்டுகள் , ஒரு ஓரமாகக் கழிவறை .
இதை எல்லாம் கடந்து போனால் மிக நீள அகலமான வராண்டா .அதற்கப்புறம்தான்
வீடு வீட்டிற்கு பின் புறம் கொல்லைப்பகுதி,
இரண்டு பகுதிகளாக இருந்த அந்த வீட்டின்.. ஒரு பகுதியில் குடியிருந்த
காவல் துறை அதிகாரி குடும்பம் வேறு இடத்திற்குப் போனவுடன் அதையும் சேர்த்து
நாங்களே எடுத்துக்கொண்டோம். ஒரு வீட்டுக்கு முப்பத்தி ஐந்து ரூபாயாக இருந்த வாடகை,
இரண்டு வீட்டுக்கும் சேர்த்து ஐம்பது ரூபாய் ஆனது
அந்த வீட்டுக் கிணற்று நீரின் சுவைக்காகவே எங்களுக்குப்பின் சோடா பான
நிறுவனம் ஓன்று அங்கு வந்தது என்று அறிந்தோம். அண்மையில் பானு மகன் திருமணம் நடந்த
மண்டபத்திற்கு அருகிலேயே .இருந்த அந்த வீட்டில் இப்போது மதுபானக் கூடம் (பார்)
இருப்பது அறிந்து அருகில் போய்ப் பார்க்கும் எண்ணம், ஆசை எல்லாம் மறைந்து விட்டது.
வீட்டிற்குள் குழாய்களோ குளியல் அறைகளோ இருந்த நினைவில்லை..
வீட்டின் வெளிப்புறம் அளவுக்கு உள்புறம் நினைவில் இல்லை. பெரும்பாலும்
மரத்தடியிலும் கொய்யா மரத்தின் மேலும் பொழுதைக் கழித்ததனாலா தெரியவில்லை.
குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித்திரிந்தோம்
குயில்களைப்போலே இரவும் பகலும் கூவித்திரிந்தோம்.
வீட்டில் மூன்று நகராட்சி ஊழியர்கள் மாறி மாறி இருப்பார்கள். (பெயர்
பொன்னம்பலம் மூக்கையா ,முத்துசாமி என நினைவு. ) இது போக பெண் ஊழியர்(இருளாயி ?)
மாடுகளைப் பராமரிக்க ஒருவர், ஊர்தி ஓட்டுனர் ஒருவர் இருப்பார்.
மாடுகளில் பால் கறக்க கோனார் ஒருவர் வருவார் . அவர் அப்போதைய மாநில
உள்ளாட்சி அமைப்பு துறை அமைச்சரின் நெருங்கிய நண்பர் (அமைச்சர் பெயர் அப்துல் மஜீத் என நினைவு ).
உள்ளூர் பயணம் முழுக்க நடைதான் –பள்ளி சென்று, மதிய உணவு வீட்டில்
வந்து சாப்பிட்டுத் திரும்பிப் போக வேண்டும் முருகன்,, ஜான், இவர்கள் நெருங்கிய பள்ளி
நண்பர்கள்
பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு சொக்கலிங்கம் வேட்டியும் ஜிப்பாவும் அணிந்து வருவார். தமிழ்
ஆர்வலர் என்ற முறையில் அத்தாவுக்கு நெருக்கமானவர். எஸ் எஸ் என்ற பெயரில் ஒரு
ஆசிரியர் இருந்தார் .அவர் வகுப்பு நடத்தும் முறை சற்று மாறுபட்டதாக யாருக்கும்
புரியாமல் இருக்கும்.
பள்ளி புதிய கட்டடிடம், பழைய கட்டிடம் பாதி முடிந்த கட்டிடம் என்று பல
இடங்களில் இயங்கியதால் ஒருங்கிணைத்துக் கட்டுப்படுத்துவது சற்று சிரமம் .ஆத்மராமன்
என்றொரு ஆசிரியர் நீதிபோதனை வகுப்பு எடுக்க வருவார். கேலியும் கிண்டலுமாகப் பேசி
மாணவர்கள் அவரைப் படுத்தி வைப்பார்கள்.
சகோதரிகள் மெஹராஜ் , ஜோதி அதே பள்ளியில் படித்தார்கள் சகாவும்
சுராஜும் ஆரம்பப்பள்ளி என நினைவு.. மும்தாஜ் அக்காவும் நூரக்காவும் மதுரை டோக்
பெருமாட்டி கல்லூரியில் புகுமுக, பட்ட வகுப்பில் இருந்தனர்
பள்ளிக்கு மட்டுமல்ல- மாமா கடைக்குப் போவது, கடையின் கிட்டங்கிகக்குப்
போவது,தேவைப்பட்டால் கடைக்குப்போவது எல்லாமே நடைப்பயணம்தான்..வெளியூர் பயணம்
என்றால் குடும்பத்துடன் மகிழுந்தில்.
காரைக்குடி வாழ்வதற்கு மிக வசதியான ஊர்.. செட்டிநாட்டுச் சுவை ,
செட்டி நாட்டுப் பாத்திரங்கள் நகைகள் எல்லாம் கிடைக்கும்.
எங்கள் வீட்டுக்கு எதிரே ஒரு பெட்டிக்கடை இருக்கும். அங்கே விற்கும்
முறுக்கு, பலாச்சுளை கூட நல்ல சுவையாக இருக்கும் .பாம்பே ஆனந்த பவன் என்று ஒரு
இனிப்பகம். அங்கே கிடைக்கும் கீரை பக்கோடாவும் சோன்பாப்டியும் தின்னத்தின்னத்
திகட்டாது..சிறிய இனிப்பகங்களில், தள்ளுவண்டிகளில் கூட பால்கோவா நல்ல தரமாக
இருக்கும். மாதம் முப்பத்தைந்து ரூபாய்க்கு மூன்று வேளையும் வாரம் இருமுறை
அசைவத்தோடு சுவையான உணவு கொடுக்கும் வீட்டு உணவகங்கள் காரைக்குடியில் நிறைய
உண்டு., எங்கள் வீட்டை அடுத்து ஓன்று இருந்தது
வீட்டுக்கு அருகில் ஒரு எள் எண்ணெய் செக்கு இருந்தது, ஒரு சிறிய
தொகைக்கு (ஆறு காசு) கை நிறைய கருப்பட்டியும் அரைத்த எள்ளும் கலந்த ஒரு கலவை
கிடைக்கும்.. அந்த சுவையும் மணமும் இந்தத்
தலைமுறைக்கு கிடைக்க வாய்ப்பே இல்லை
ஒரு கடையில் சட்னி சாம்பார் ஏதும் இல்லாமல் பச்சி மட்டும் சுடச்சுடக்
கிடைக்கும். சிறிய அந்தக் கடையின் முன் எப்போதும் நல்ல கூட்டம் நிற்கும்.
மாமா கடைக்குப்போகும்போது வாங்கித்தரும் குளிர்பானம்- மஞ்சள் பால் சுவை
மனதிலும் நாவிலும் நிற்கும்.
நன்னாரி சர்பத்தும் நெய் வறுவல் சீவல் பாக்கும் காரைக்குடியின்
சிறப்புக்கள் .மாட்டு வண்டியில் ஆள் உயர பித்தளைக் குடங்களில் சர்பத் தயாரிக்க
தண்ணீர் கொண்டு செல்வது ஒரு புதுமையாகவும் விளம்பரமாகவும் இருக்கும்.
காரைக்குடிக்கு பெரும்புகழ் சேர்த்த பெருமை வள்ளல் அழகப்பச்
செட்டியாருக்கு உரியது .அழகப்பா கல்வி நிறுவனங்கள் –மழலையர் பள்ளி ,, மாதிரிப்பள்ளி.,
கலைக்கல்லூரி ,பொறியியல் கல்லூரி, உடற்பயிற்சிக் கல்லூரி என்று பணத்தை கோடி
கோடியாய்க் கொட்டிக்கொடுததொடு தன் வீட்டையும் கொடையாய்க் கொடுத்தவர். அவருடைய பெரு
முயற்சியால் Central
Electro Chemical
Research Institute (CECRI) காரைக்குடியில் வந்தது. பிரதமர் ஜவஹர்லால் நேரு விடம் தனக்குள்ள
நெருக்கத்தைப் பயன்பாடுத்தி செகரி திறப்பு விழாவுக்கு நேருவை வரச்செய்து ஊருக்குப்
பெருமை சேர்த்தார்.
பொறியியல் கல்லூரியில் நடக்கும் அறிவியல் கண்காட்சி நூற்றுக்கணக்கான
பகுதிகளைக் கொண்டிருக்கும் . ஒரு தடவை கட்டணம் செலுத்தி நுழைவுச்சீட்டு வாங்கி
விட்டால் நாம் வசதிக்கேற்ப ஒவ்வொரு பகுதியாக பல நாட்கள் கண்டு வரலாம்.. பார்க்க
மிக நன்றாக இருக்கும்.
நகராட்சி மருத்துவர் பத்மாவதி அவர்கள் வீடு எங்கள் வீட்டுக்கு அருகில்
இருந்தது. அவர்கள் வீட்டில் மயில் வளர்த்தார்கள் . அங்கும் இங்கும் பறப்பதும் தோகை
விரித்து ஆடுவதும் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும்..
பல் மருத்துவர் பெர்க்மன் –அத்தாவின் நெருங்கிய நண்பர்- அவர் வீடும்
எங்கள் வீட்டை அடுத்து இருந்தது,.அவருக்கு நிறைய பிள்ளைகள் பெற ஆசையாம் .எனவே
நாங்கள் இருந்த வீட்டுக்கு எங்களுக்குப்பின் வர விரும்புவதாய்ச் சொல்வார்.
பிற்காலத்தில் மத போதகராகிவிட்டார். அவரது மகனை பல் மருத்துவராக நெல்லையில்
சந்தித்தாய் நினைவு,
அத்தாவின் இன்னொரு நண்பர் தங்க பஸ்பம் புகையிலை திரு மாரிமுத்து
.சுழல் கழகத்தில் பொறுப்பாளராக இருந்தார்.
சம்பை ஊற்று என்ற நீர் நிலையிலிருந்து நகராட்சிக் குடி நீர்
பகிர்மானம் செய்யப்பட்டது . சுவையான அந்த நீர் காரைக்குடியின் தேவைக்கு மேல்
இருந்ததால் திருப்பத்தூருக்கு அதை வழங்க அத்தா செய்த முயற்சிகள் சில அரசியல்
குறுக்கீடுகளால் நிறைவேறாமல் போய்விட்டது.
பெருநாள் தொழுகையை ஒரே இடத்தில் மைதானத்தில் அனைவரும் தொழுக ஏற்பாடு
செய்தது அத்தாவின் சாதனை.
அத்தா ஐ வேளை தொழத் துவங்கியது காரையில்தான் என நினைவு. அத்தா
தொழுகும்பொது வானொலியை உடனடியாக நிறுத்தி விடுவோம்.
அரசின் ஒரு திட்டத்தில் நூறு வெள்ளைக் கோழிக்குஞ்சுகள் இலவசமாகக்
கொடுத்தார்கள். தீனி வீணாகாமல் குஞ்சுகள் உண்ணும் வகையில் ஒரு அழகிய பாத்திரமும்
கொடுத்தார்கள் . மாதமிருமுறை குஞ்சுகளுக்கு இலவச மருத்துவப பரிசோதனை செய்து
மருந்து ,சத்து மாத்திரையும் கொடுப்பார்கள், கொல்லைப்புரத்தில் கூடு அமைத்து அதில்
(தாய்க்கோழியின் )கதகதப்பை உணர இரவில் ஒரு விளக்கு வைப்போம். இரவில் குஞ்சுகளை
எண்ணி சரி பார்த்து கூண்டில் அடைப்பது எனக்கும் சுராசுக்கும் ஒரு நல்ல பொழுது
போக்கு.
காரைகுடியில் இருக்கும்போது ஜென்னத் அக்காவின் திருமணம் சென்னையில்
நடைபெற்றது. இன்றும் சிறப்பாக எண்ணிப் பேசப்படும் திருமணம் அது. சுற்றத்தாரை அழைத்துச்
செல்ல இரண்டு பேருந்துகள் அமைக்கப்பட்டன.ஒரு பேருந்துக்கு அம்மாவே தயிர் சோறும் மாங்காய்த்தொக்கும்
மதிய உணவுக்கு செய்து கொடுத்தது..சுற்றத்தார் பலருக்கும் அதுதான் முதல்
சென்னைப்பயணம் .அதோடு மண விழாவில் நடிகர்கள் எம் ஜி ஆர் , ஜெமினி கணேசன், அசோகன்,
நடிகைகள் சரோஜா தேவி , சாவித்திரி போன்றோர் கலந்து கொண்டதில் திரு மக்களுக்கு
உற்சாகம் கரை புரண்டு ஓடியது,.இருபத்தியொரு வகையான உணவுகளுடன் சைவ விருந்து. மேசை
உப்பை பலரும் முதல் முறை பார்த்ததால் என்னவென்று தெரியாமல் வாயில் போட்டது ஒரு
நகைச்சவை
திருமண புகைப்படத்தொகுப்பு (ஆல்பம்) திறந்தால் ஒரு இனிய இசை கேட்குமாறு
அமைக்கபட்டிருந்தது..அநேகமாக எல்லாப் புகைப்படங்களிலும் சக்ரவர்த்தி இடம்
பெற்றிருந்தார்
முத்தலீப் அண்ணனின் தம்பி மம்மு எனது நெருங்கிய நண்பரானார்.
மும்தாஜ் அக்காவின் திருமணம் காரைக்குடியில் நடைபெற்றது. அதற்குள்
அத்தாவுக்கு கோவைக்கு மாறுதல் வந்து அங்கு பணியில் சேர்ந்து விட்டது. விடுப்பில்
வரும்போது கோவையிலிருந்து பாஸ்மதி அரிசி வாங்கி .வந்து.அந்த அரிசியில்தான் திருமண
விருந்து –பிரியாணி ஆக்கப்பட்டது. நம்மூர் மக்களுக்கு பாஸ்மதி அரிசியை
அறிமுகப்படுத்தியது அத்தாவின் இன்னொரு சாதனை..
அத்தாவுக்கு கோவை மாற்றலானபின் மாமா அடிக்கடி வீட்டுக்கு வந்து தங்கை
வீட்டை கவனித்துச் செல்லும், இரு திருமணங்களிலும் மாமா முழு முனைப்புடன் தனக்கே
உரிய உற்சாகத்துடன் ஈடுபட்டது, வேலை மும்முரத்தில் ஒரு முறை சட்டை போடாமல்
பனியனுடன் சைக்கிளில் வெளியே போய் போன இடத்தில் சட்டைப்பையில் எதோ எடுக்க எண்ணிய
போதுதான் சட்டையே போடாமல் வந்ததது புலப்பட்டது
திருமண வரவேற்புக்கு தொண்டி போனோம்.. ஆசிரியர் அப்துல் ரஹீம்
தொண்டியின் பெருமை பற்றி சிறப்பாக உரையாற்றியதும், கடலில் படகில் பயணித்ததும்
இன்னும் பசுமையாய் நெஞ்சில் நிற்கிறது.
அழகப்பா கலைக்கல்லூரியில் பண்டகசாலையில் பணியாற்றிய ஜனாப் குத்தூஸ் மும்தாஜ் அக்கா ரஹீம் அண்ணன் திருமணம் தொடர்பாக
எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவதில் குடும்ப நண்பராகிவிட்டார். அண்மையில்
திருமணத்தில் அவரை சந்தித்தேன் .அதே பழைய அன்பு, உரிமையுடன் வீட்டுக்கு அழைத்தார்
. தோற்றமும் அன்று பார்த்த அதேதான் .
அம்மாவும் நானும் ஒரு முறை மும்தாஜ் அக்காவை அழைத்து வர மகிழுந்தில்
தொண்டி போனோம். வழியில் ஒரு சிற்றூரில் அமைச்சர் வருகைக்காகக் காத்திருந்த மக்கள்
எங்கள் வண்டியைப் பார்த்து அமைச்சர் வண்டி என எண்ணி தாரை தப்பட்டை முழங்க சிறப்பாக
வரவேற்றார்கள்..
காரைக்குடியில் பெரும்பாலும் விருந்தினர் இல்லாத நாளே இருக்காது.
அனைவருக்கும் சிறப்பு உணவு அலுக்காமல் தயாரிக்கும் அம்மா பிரியாணி செய்வதென்றல்
பலநாட்களாய் அதிகப்பால் வாங்கி, தயிர் ஊற்றி துணியில் கட்டிப்போடுவது இன்றும்
நினைவில் நிற்கிறது. அது போல் ஊறுகாய் தாளிப்பது கொட்டாங்கச்சியை எரித்துத்தான்.
இப்போது அப்படி யாரும் சிரமப்படுவதில்லை.
புத்தாண்டு அன்று நகராட்சி
ஊழியர்கள் அத்தாவுக்கு வாழ்த்துச் சொல்ல வருவார்கள் அவர்களில் ஒருவர் அழகிய
காகிதப்பூ செய்து அதில் நறுமணம் தெளித்து உண்மைப்பூ போலாக்கிக் கொண்டு வருவார். வரும்
அத்தனை பேருக்கும் காபி கிடைக்கும்.. விருந்துகளில் ஜாம் (jam) மை ஒரு
துணை உணவாக அறிமுகப்படுத்தியது அம்மாவின் சாதனை
நகராட்சி ஊழியர் ஒருவர், அத்தாவுககும் அவருக்கும் ஒரே பேர். அவரை
எல்லோரும் ஊமைசினிமா என்று அழைப்பார்கள். அரசின் செயல் விளக்கப் படங்களை ஊருக்குள்
அங்கங்கே போட்டுக் காண்பிப்பது அவர்தான் . எனவே அந்தப்பெயர்.
எங்கள் வீட்டில் ஒரு நாட்டுச் சேவல் இருந்தது. . சிறுவர்களைப்
பார்த்தால் நாய் துரத்துவது போல் விரட்டி விரட்டிக் கொத்தும் . கேட் முதல் வீடு
வரை விடாமல் துரத்தும்.. தாவன்னா பெரியாத்த மகன் நாசர் ,மாமா மகன் பீர் போன்ற சிறுவர்கள் ஒரு
அச்ச உணர்வோடுதான் கேட்டைத் திறப்பார்கள் .
கரீம் அண்ணன் (தாவண்ண பெரியத்தா வீட்டில் பெரிய முருங்கை மரம்
இருக்கும். நானும் சுராஜும் அவ்வபோது போய் முருங்கைக்காய் பறித்து வாங்கி வருவோம்.
சிறுவர் சிறுமியரைக்கூட மதிப்பாகவும் மரியாதையாகவும் அன்புடனும் நடத்தும் சிறப்பு
குணம் பெரியாத்தாவுக்கும் அவர்கள் வீட்டினருக்கும்.. முஸ்தபா அண்ணன்(அப்போது
திருமணம் ஆகவில்லை) வயது வித்தியாசம் பார்க்காமல் நட்போடு பழகும்.
கோடம்பாக்கத்தில் குதிரைகள் அதிகம் இருந்ததால் அந்தப் பெயர் வந்தது
என்று சொல்வார்கள் (கோடா- இந்தியில் குதிரை) காரைக்குடியில் குதிரை வண்டிகள் மிக
அதிகம். வீட்டுக்குள் இருந்தாலே குதிரைகளின் சீரான குளம்பொலி அடிக்கடி கேட்டுக்கொண்டே இருக்கும்.
கிட்டத்தட்ட பத்து ஆண்டு இடைவெளிக்குப்பின் காரைக்குடி செக்ரியில்
பட்டதாரிப் புற்சியாளராக பணியில் சேர்ந்தேன்.
முழுக்க முழுக்க வேதியல் பாடத்தில் நுழைவுத்தேர்வு. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு
உடனே நேர்முகத்தேர்வு – அதுவும் முழுக்க வேதியல்தான் . நான்கு வேதியல் அறிஞர்கள்
அரை மணி நேரம் நடத்தினார்கள். தேர்வுக்கு சில நாட்கள் முன்பே மும்தாஜ் அக்கா
வீட்டுக்குப் போய்விட்டேன். ரஹீம் அண்ணன் தனக்குததெரிந்த செக்ரி நண்பரை (ஜனாப்
கமால் என்று நினைவு) அறிமுகப்படுத்தி , அவர் எனக்கு தேர்வுகள் பற்றி நிறையச்
சொல்லிக் கொடுத்தார்.,
அறிவியலில் மிகுந்த ஆர்வம் உடைய எனக்கு செக்ரி சூழ் நிலை மிகவும் பிடித்திருந்தது.
மிகப்பெரிய வளாகம்., நிறைய நூல்கலுடன் பெரிய நூலகம் .ஆராய்ச்சிக்கூடம்.அங்கேயே
முதுநிலைப்படிப்பு, ஆராய்ச்சி தொடர
வாய்ப்பு..மாலையில் ஜெர்மன் மொழி வகுப்பு. ,மும்தாஜ் அக்கா வீட்டில் தங்கி ரஹீம்
அண்ணன் வாங்கிக்கொடுத்த சைகிளில் போய் வந்தேன்
ஆனால் மூன்று மாதங்களில் கனரா
வங்கி நெல்லையில் வேலை கிடைத்துவிட அதில்
சேர்ந்து விட்டேன். .செக்ரிதான் எனக்குப் பிடிக்கிறது என்று சொல்லும் அளவுக்கு மன
முதிற்சியோ உலக அறிவோ அப்போது இல்லை
நினைப்பதெல்லா நடந்து விட்டால் ?
நடந்ததையே நினைத்திருந்தால் ?
நினைவுச்சிதறல்கள்
*வீட்டுக் கூடத்தில் ஒரு மின் விசிறி பொருத்தப்பட்டது (அப்போது மின்
விசிறி மிக அரிதான ஓன்று)..விசிறியை ஓட
விட்டதும் அத்தம்மா எழுந்து சன்னல் கதவுகளை எல்லாம் அடைத்தது.. “என்னம்மா பண்ற “
என்று அத்தா கேட்க, “காற்று வெளியே போய்விடாமல் அடைத்தேன் “ என்று சொன்னது..
தற்போது குளிர் பதனம் (ஏ சி) போடுமுன் சன்னல்களை அடைக்கும்போது அத்தம்மாவின்
தீர்க்க தரிசனம் தெரிகிறதோ ?
** அத்தாவின் அலுவல்
அறையையும் அடுப்படியையும் இணைக்கும் தொலைபேசி ஓன்று பொருத்தப் பட்டிருந்தது. வெளிநாட்டுப்
பொருளான அது பச்சை நிறத்தில் மிக அழகாக இருக்கும்..மாமா எங்கள் வீட்டுக்கு வந்தால்
அதன் மணியை மட்டும் அழுத்தி ஒலிக்கச்செய்யும். பேசாது .
***ஒலிநாடாப்பதிவுபெட்டி (டேப் ரெக்கார்டர் ) ஓன்று வீட்டில் இருந்தது
.ஒரு பெரிய பயணப்பெட்டி அளவுக்கு இருக்கும்) .பொழுது போக்காக அதில் பேசி, பாடி
பதிவு செய்வோம். பிறகு அழித்து விடுவோம் ஒரு முறை மாமா பேசியது அதில் பதிவானது.
உரத்த குரலில் பேசியதால் அதை அழிக்க முடியவில்லை
**** எங்கள் வீட்டருகே இருந்த
சரளா என்ற குழந்தை நடிகை நடித்த “குழந்தைகள் கண்ட குடியரசு “ என்ற படம்
வெளிவந்தது . சிவாஜி கணேசன் அந்தப்படத்தில் நடித்ததாய் நினைவு . பெரிய செலவில்
எடுக்கப்பட்த்தாக்ச் சொல்லப்பட்ட அது பெரும் தோல்வியைச் சந்தித்து..
***** ஒரு விடுமுறையில் எம் பீ சச்சா சக்ரவர்த்தியையும் என்னையும்
நாகர்கோவிலில் உள்ள அவர்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றது. அங்கு ஏற்கனவே அஜ்மல்
இருந்ததால் மிக இனிமையாக நாட்கள் கழிந்தன .அருகிலுள்ள பல இடங்களைச்
சுற்றிப்பார்த்தோம் .முத்தக்கா சச்சாவின் உபசரிப்பும் ஊருக்குப்போகும்போது நிறைய
நேந்திரம் வறுவல், முந்திரி வாங்கிக்கொடுத்ததும் மறக்க முடியாத இனிய
நினைவுகள்
******காரை நகராட்சிப் பூங்காவும் (ஊஞ்சல், சறுக்கு, ) அதனுள்
நூலகமும் எனக்குப் பிடித்த பொழுது போக்கு இடங்கள்..
நிறைவாக ஒரு வேண்டுகோள் இந்தப்பகுதி அரை நூற்றாண்டுக்கு முந்தைய
நிகழ்வுகளின் நினைவு மலர்ச்சி .இதில் பிழைகள், விடுதல்கள் இருந்தால் தெரிவித்தால்
எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்
சென்ற பகுதி பற்றி பாராட்டுக்களும் கருத்துக்களும் தெரிவித்த பர்வேஸ்
(பேரன்),சகோதரிகள் மெஹராஜ் ஜோதி , சுராஜ் நெய்வேலி ராஜா ,ஷாஜஹான்(யுனிவர்சல்
பதிப்பகம்) பாப்டி சாகுலுக்கு நன்றி.
மெஹராஜ் அக்கா எல்லோரும் சேர்ந்து மீண்டும் ஒரு புனிதப்பயணம் செய்ய
விரும்புவது நிறைவேற இறைனிடம் வேண்டுவோம்.
நெய்வேலி ராஜா சுஜாதாவோடு என்னை ஒப்பிட்டது –வஞ்சப்புகழ்ச்சியோ
எனத்தோன்றியது. ராஜாவுக்கு வஞ்சம் எலாம் தெரியாது என்பதால் புகழ்ச்சியாகவே
எடுத்துக்கொண்டு பெருமிதம் கொள்கிறேன்.
ஜோதியக்காவின் அதிகப்படியான( பாராட்டுக்கு அதிகப்படியான நன்றி சுராஜின் ஹஜ் பயணத்துக்கு எங்கள்
பயணத்தில் ஓதிய தமிழ் துவா ஒரு தூண்டுகோலாக அமைந்தது இறைவன் நாட்டம். அதேபோல் என்
தமிழ் நடையும் இறைவன் நாட்டம்தான். படிப்பில் தமிழில் அதிக மதிப்பெண்கள்
எடுத்ததில்லை. எப்போதும் ஆங்கிலத்தில்தான் வகுப்பில் முதல் மதிப்பெண்
ஷாஜஹான் என் நினைவுத் திறனைப் பாராட்டி, தன் ஹஜ் பயணம் பற்றி என்னோடு
பகிர்ந்துகொண்டார் .
இ(க)டைச் செருகல்
நெய்வேலி ராஜா எழுத்தாளரின் தலைக்கனம் பற்றிக் குறிப்பிட்டது நான்
கேள்விப்பட்ட நிகழ்வு ஒன்றை எனக்கு நினைவூட்டியது. ஒரு கூட்டத்தில் சிறப்புப்
பேச்சாளராக அழைக்கப்பட்டிருந்த எழுத்தாளர் , அவருக்கு முன் ஒரு பேச்சாளர்
உரைஆற்றிக்கொண்டிருக்கும்போது தன அருகில் இருந்தவரிடம் உரத்த குரலில்
பெசிக்கொண்திருந்தார். கூட்ட அமைப்பாளர், அமைதி காக்கும்படி பணிவாக
வேண்டிக்கொண்டார். இதனால் சினமுற்ற எழுத்தாளர் தன் முறை வந்துடன் பேச எழுந்தவர்,
“நன்றி, வணக்கம் “ என்ற இரு சொல்லோடு உரையை முடித்து அமர்ந்து விட்டார்.
கொய்னாபு பற்றி சென்ற பகுதியில் கேட்டிருந்தேன். அது நம்மூர் இட்லி
போல் ஆவியில் வேகவைத்து காலை உணவாகும் இந்தோனேசிய சிற்றுண்டி..காபாவில் பஜர் தொழுகை
முடிந்து வெளியே வரும்போது இந்தோனேசியப்பெண்கள் கொய்னாபு என்று கூவி விற்கும் ஒலி
கேட்கும்.
இறைவன் அருளால்
பயணம் தொடரும்
வலை நூல் முகவரி
கூகிள் தேடுதலில்
sherfuddinp.blogspot.com
No comments:
Post a Comment