ஹஜ் என்றவுடன் ஒரு சிறிய நினைவுப் பின்னோட்டம். முப்பது நாற்பது
ஆண்டுகளுக்கு முன் ஹஜ் பயணம் பற்றி ஒரு திரைப்படம் பார்த்தேன். அதில் மக்க
மாநகரின் வீதியில் உள்ள ஒரு வழிகாட்டுப் பலகை(sign board ) இன்னும் என் நினைவில் நிற்கிறது . ஆங்கிலத்தில் இருந்த அந்தப்
பலகையில் இருந்த சொற்கள் சற்று வித்தியாசமாக எனக்குத் தோன்றின .அந்த சொற்களை
இந்தப் பகுதியின் இறுதியில் சொல்கிறேன்
ஹஜ் பயணம் பற்றி .எப்போது எண்ணம் தோன்றியது என்பது நினைவிலில்லை..
ஆனால் பணி மூப்பு பெறுமுன் இருவருமாய் ஹஜ் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக
மனதில் வேருன்றியிருந்தது. எண்ணம் மட்டும்தான் இருந்தது ; வேறு எந்த ஆயத்தமும்
செய்யவில்லை .அதற்காக பணமும் சேர்க்கவில்லை.
கடலூரில் பணியாற்றும்போது சென்னைக்குப் போயிருந்தேன். அங்கு மைத்துனர்
சிராஜுதீன் வீட்டில் முஸ்லிம் முரசு இதழில் பல ஹஜ் பயண விளம்பரங்களைப் பார்த்தேன்.
அதில் சிலவற்றைக் குறித்துக் கொண்டு கடலூர் திரும்பியவுடன் மூன்ற பேரை
தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். நான் எதிபார்க்கவே இல்லை. மூவருமே கடலூருக்குப்
புறப்பட்டு வந்து விட்டார்கள்..
அதில் புதுக்கோட்டை அல் சபா வில் போக எண்ணினேன். புதுக்கோட்டையில்
அல்சபா பற்றி விசாரித்ததில் நல்ல விதமாகவே சொன்னார்கள். குறிப்பாக சாப்பாடு நம்
ஊர் சுவையில் நன்றாக இருக்கும் என்றும் பயணிகளை நல்ல விதமாகக் கவனித்துக்
கொள்வார்கள் என்றும் சொன்னார்கள்.
முதலில் ஒரு ஆளுக்கு ஒரு லட்சத்து முப்பதாயிரம் கேட்டார்கள்.பேரம்
பேசிப் படிப்படியாகக் குறைத்து தொன்நூராயிரத்தில் முடிந்து, முன்தொகை ஆளுக்குப்
பத்தாயிரம் கொடுத்து பதிவு செய்து கொண்டோம்.பிறகு விமானக்கட்டண உயர்வுக்காக
ஆளுக்குப் பத்தாயிரம் வாங்கினார்கள்
இனி கடவுச் சீட்டுக்கும் பணத்துக்கும் ஏற்பாடு செய்யவேண்டும்,..
எனக்கு வங்கி வட்ட அலுவலகத்தில் கேட்டு தடையில்லாச் சான்றிதழ் வங்கி விட்டேன்.
அதனால் கடவுச்சீட்டு வாங்குவது எளிதாக இருக்கும் என்று எண்ணினேன். ஜோதிக்கு
படிப்புச் சான்றிதழ் பிறப்புச்சான்றிதழ் எதுவுமே கையில் இல்லை. திருப்பத்தூரில்
பள்ளியில் ,ஊராட்சி அலுவலகத்தில் முயற்சித்து ஒன்றும் கிடைக்கவில்லை.
உறுதி ஆவணம் ஓன்று கொடுத்து அதில் சான்று உறுதி அலுவலரிடம் கையெழுத்து
வாங்கி அதை வைத்து கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்தோம்.. வங்கி வழக்கறிஞர் திரு
இராமநாதனும் அவரது நண்பர் திரு சம்பத்தும் கடவுச்சீட்டு வாங்க பெரிதும் உதவினர்.. திரு
ராமநாதனாவது வங்கி வழக்கறிஞர் என்ற முறையில் பழக்கமானவர்.. அறிமுகமில்லாத திரு
சம்பத் செய்த உதவிகளை மறக்க முடியாது. அவருடைய மகிழுந்தில் ஒரு முறை இருவரையும்
சென்னை கடவுச்சீட்டு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றார். அவர்கள் இருவருக்கும் என்
நன்றி
ஒரு வழியாக கடவுச் சீட்டுக்கள வீடு வந்து சேர்ந்தன.. என்னுடைய
சீட்டில் குடியேற்றச சான்று தேவை (immigration clearance required) என்று தவறுதலாகக் குறித்து விட்டார்கள், பட்டப்படிப்பு படித்தவர்கள்,
அலுவலகத் தடையில்லா சான்று பெற்றவர்கள், ஐம்பது வயதைத் தாண்டியவர்கள் இவ்ர்களுக்கு
குடிஎற்றச்சன்றிதழ் தேவையில்லை என்பது விதி. தேவை என்று தவறாகக் குறித்தது என்
விதி போலும்.
சென்னையில்(வங்கி) பயிற்சிக்காக மூன்று நாள் போயிருந்தேன், உணவு
இடைவேளையில் கடவுச்சீட்டு அலுவலரைப் பார்த்து இது பற்றிச் சொன்னேன். அதெல்லாம்
மாற்ற முடியாது என்று அடம் பிடித்த அந்தப் பெண் அலுவலர், நான் சற்று குரலை
உயர்த்தி அவர்கள் தவறைச் சுட்டிக் காட்டியதும் உடனே தவறைத் திருத்தி, கையெழுத்தும்
முத்திரையும் போட்டுக் கொடுத்தார்.
அடுத்து பணத்துக்கு என்ன செய்வது என்ற சிந்தனையில் இருக்கும்போது சுனாமியும்
வெள்ளமும் அடுத்து அடுத்த ஆண்டுகளில் முன்பு வந்ததற்காக நிவாரணக் கடன் வங்கியில்
அறிவித்தார்கள இப்படி தீமையிலும் ஒரு நன்மை விளைந்தது இறைவன் நாட்டம். பைசல் தன்
பங்களிப்பாக ஒரு நல்ல தொகையை நான் மறுத்தும் வற்புறுத்திக் கொடுத்ததால் வாங்கிக்
கொண்டேன்,கடவுசீட்டு, பணம் இரண்டும் கிடைத்து விட்டது இனி ஒன்றும் தடங்கல்
இருக்காது என்று எண்ணினேன்
ஆனால் அடுத்து வந்தது நான் சற்றும் எண்ணிப் பார்க்காத ஓன்று- ஜோதியின்
உடல் நலக்குறைவு. ஹஜ் பயணத்திற்கான மருத்துவ சோதனையில் கண்டறியப்பட்ட இருதய
சுகவீனம். பயணமே தடைப்படுமோ என்று எண்ணிக் கொண்டுஇருக்கும்போது ஆறுதல் சொன்னவர்
மருத்துவர் நாராயணசாமி. மாவட்ட அரசு மருத்துவ மனையில் உயர் பதவியில் இருந்த அவர்
மனைவி, மகன் எல்லோரும் மருத்துவர்கள். “ பெரிய இடத்துக்குப் பயணம் போகிறீர்கள்
எந்த வித தடங்கலும் வராது “ என்று நம்பிக்கை ஊட்டினார். மேலும் அறுவை சிகிச்சை
தேவை இல்லை, மருந்து மாத்திரையிலேயே சரி பண்ணிவிடலாம் என்றார்.
அந்த மருந்து மாத்திரையே ஒரு பூதாகரமான பிரச்சனையாக தலைவலியாக
உருவெடுத்தது. ஆம்- மாத்திரை சாப்பிட்டால் பொறுக்க முடியாத தலைவலி வரும்.
மாத்திரையைப் பார்த்தாலே குழந்தை போல அழுகை வந்து விடும்.
மருத்துவரிடம் சொல்லி மாற்று மாத்திரை கொடுத்து தேவைப்படும்போது
மட்டும் சாப்பிட்டால் போதும் என்று சொன்னார். எந்த விதத் தயக்கமும் இல்லாமல்
பயணத்தை மேற்கொள்ளலாம் என்று நம்பிக்கை ஊட்டினார்.
புதுக்கோட்டையில் ஒன்றும், சென்னையில் ஒன்றுமாக ஹஜ் பயிற்சி வகுப்பில்
கலந்து கொண்டோம்.
சென்னையில் உள்ள ஆதம் என்ற வணிக நிறுவனத்தில் ஹஜ் புயணத்திற்கு
தேவையான அனைத்துப் பொருட்களும் கிடைக்கும். டிசம்பர் ஜனவரியில் பயணம் என்பதால்
குளிர் கால ஆடைகளும் வாங்கினோம். இறையருளால் அவற்றைப் பயன் படுத்தும் வாய்ப்பு
ஏற்படவில்லை.
சவுதியில் பணி புரியும் எங்கள் வங்கி வாடிக்கையாளர் ஒரு பைபேசி (சவூதி
சிம்முடன்) யும் சவூதி ரியால்களும் கொண்டு வந்தார். விலை கொடுத்து அவற்றை
வாங்கிக்கொண்டேன்.
இன்னொரு வாடிக்கையாளர் சவுதியில் உள்ள அல் பேக் உணவு விடுதி பற்றி
மின்னஞ்சல் அனுப்பி புகழ் பெற்ற அந்த விடுதிக்குப் போய் உண்ணாமல் சவுதி பயணம்
நிறைவேறாது என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
அறுபது நாள் விடுமுறை கேட்டு வட்ட அலுவலகத்துக்கு விண்ணப்பம்
அனுப்பினேன். சில நாள் கழித்து பொது மேலாளர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வங்கிக்
கிளை மேலாளர் அறுபது நாள் விடுப்பில் போனால் கிளையை யார் பார்த்துக் கொள்வார்கள் ,
கேரளாவில் இரு வாரத்தில் ஹஜ் முடிப்பது பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறேன் அது
போல் நீங்களும் போகலாமே என்று கருத்துத் தெரிவித்தார். நான் போவது நாற்பது நாள் பயணம் அதற்கு முன் பின் பத்து
நாட்கள் விடுப்பு அவசியம் என்று சொன்னவுடன் சம்மதம் தெரிவித்து பயணம் சிறக்க
வாழ்த்தினார்
கடவுச்சீட்டு கிடைத்து விட்டது, பணம் செலுத்தியாகி விட்டது.
மருத்துவரும் பயணிக்கலாம் என்று பச்சைக்கொடி காண்பித்து விட்டார்..வங்கியில்
விடுமுறை கிடைத்து விட்டது. ஆனாலும் சில பிரச்சனைகள் .
, மைத்துனர் பீர் முற்றிய
நிலை புற்று நோயால் பீடிக்கப்பட்டு மருத்துவ மனையில் இருந்தார். குப்பியின் முதுமை
,சுகவீனம் என்று விமானத்தில் ஏறும் வரை ஒவ்வொரு வினாடியும் ஒரு திகில்தான்.
ஒரு வழியாகப் பயண நாளும் நெருங்கி விட்டது.. பைசலோடு நாங்களும் ஒரு
மகிழுந்தில் சென்னை பயணித்தோம். பாப்டி வீட்டில் இறங்கினோம்.
உடன் பிறப்புகள் அனைவரும் வழியனுப்ப வந்தார்கள்.அனைவருக்கும் பாப்டி
வீட்டில் உணவுக்கு ஷேக் ஏற்பாடு செய்திருந்தது.
வடபழனி பேஷ் இமாம் வந்து . இஹ்ராம்
கட்டி விட்டு தொழுகை நடத்தினார். பரக்கத்தான வயிறு என்று சொன்னார்.
இஹ்ராம் உடை அணிந்ததும் ஒரு இனம் புரியாத உணர்வுத் தாக்கம்.கர்வம்,
பெருமை அழுக்காறு சினம் எல்லாம் விலகி ஒரு துறவு நிலைக்கு வந்து இறைவனிடம்
கையேந்தி நிற்கும் யாசகன் போன்ற மன நிலை. அதையும் தாண்டி இறப்பை எதிர் நோக்கும்
ஒரு மனப்பாங்கு..
ஆள் பாதி ஆடை பாதி என்பதன் முழுப் பொருளையும் உணர வைத்து மனதைப்
பண்படுத்தியது இஹ்ராம் உடை.
இதே அரை குறை ஆடையுடன்தான் பன்னாட்டு சேவை விமானத்தில்
பயணிக்கவேண்டும். விமான நிலையத்துக்கு வந்து அல்சபா குழுவோடு சேர்ந்து விட்டோம்.
ஹஜ் காலம் என்பதால் நிலையத்தில் கட்டுக்கடங்காத கூட்டம். ஹாஜிகள் விரைந்து
விமானத்தில் ஏற ஒலி பெருக்கியில் வேண்டுகோள் வந்து கொண்டே இருந்தது. அதை யாரும்
காதில் வாங்கிக் கொண்டதாய்த் தெரியவில்லை.
ஒரு வழியாக சுற்றங்களிடம் விடை பெற்று விமானத்தில் ஏறினோம். எதோ
நடந்து கொண்டே இருக்கையில் திடீரென்று விமானத்தில் நுழைந்து விட்டது போல்
இருந்தது. மிகப்பெரிய சவுதி விமானம்
எங்கள் இருவருக்கும் இதுதான் முதல் விமானப் பயணம் ,முதல் வெளி
நாட்டுப் பயணம் . அதுவே புனிதப் பயணமாக அமைந்தது இறையருள்
இருக்கையில் அமர்ந்து
விட்டோம். முழுக்க முழுக்க ஹஜ் பயணிகள் மட்டுமே இருந்ததால் பேச்சு ஓசை எல்லாம்
குறைவாகவே இருந்தது.
பயணதுவாவுடன் விமானம் புறப்பட்டது. நமக்குத் தெரிந்த அளவுக்கு நாம்
பயணம் செய்யும்போது பயண துவாவை அரபியிலோ தமிழிலோ ஓதிக் கொள்வோம். அதே பயண துவாவை
தூய அரபு மொழியில் பன்னாட்டு சேவை விமானத்தில் ஓதுவதைக் கேட்க மெய் சிலிர்த்துப்
போனது. .இதுபோல் பேருந்துகளிலும் ஓதுவார்கள்
விமானம் மேலே எழும்போது எதிபார்த்த காது அடைப்பு, வயிற்றுக் கலக்கம்
எதவுமே இல்லை
விமானக் கணினித் திரை விமானம் பறக்கும் உயரம் ,,வேகம், இன்னும் கடக்க
வேண்டிய தூரம் ,காலம் எல்லாவற்றையும்
மிகத்துல்லியமாகக் காண்பித்துக் கொண்டிருந்தது.
என் அருகில் இருந்த பயணி இருக்கையின் கைப்பிடியில் இருந்த iகாதுப்பொறியை
விடாமல் காதில் மாட்டிகொண்டே பயணித்தார்- அதில் ஓசை எதவும் இல்லை
ஒரு சிலர் தாங்கள் இயல்பாக இருப்பதாகக் காண்பித்துக் கொள்வதற்காக
பணிப்பெண்களிடம் அவ்வப்போது எதாவது கேட்டுக் கொண்டே இருந்தார்கள் ஆனால் எல்லோர்
மனதிலும் ஒரு இனம் புரியாத ,வெளியே சொல்ல
முடியாத இறையச்ச உணர்வு.
கடலூரிலிருந்து சென்னை செல்லும் பயணத்தை விட சென்னை ஜித்தா பயணம்
எளிதாகவும் விரைவாகவும் முடிவுற்றது போல் தோன்றியது..நடு இரவில் சவூதியின் தலை
நகரான ஜித்தா விமான நிலையத்தில் இறங்கினோம். வெகு நேரம் விமான நிலையத்தில்
காத்திருந்தோம். அதிகாரி ஒருவர் சிகரட்
ஒரு கையிலும் பயணிகள் பட்டியல் ஒரு கையிலுமாக வந்து எதோ சரிபார்த்தார்.
பிறகு பேருந்தில் தங்குமிடமாகிய அஜீசியாவுக்குப் போனோம்.. ஒரு அறையில்
எட்டுப் பேர் தங்க வைத்தார்கள். கிட்டதட்ட எண்பது பேர் தங்கிய அந்தக் கட்டிடத்தில்
மொத்தமே ஐந்தாறு குளியல் அறைகள்தான் இருந்தன .அல்சபா உரிமையாளரிடம் சற்றுக் கோபமாக
இது பற்றிக்கேட்டேன். ஓரிரண்டு நாட்கள் இங்கே தங்க வேண்டியிருக்கும் பிறகு மக்கமா
நகருக்குள் உள்ள விடுதிக்குப் போய்விடலாம். இது சவூதி அரசு செய்த ஏற்பாடு, எல்லாப்
பயணிகளும் இதற்குக் கட்டுப்பட்டே ஆக வேண்டும் என்று சமாதானம் செய்தார்.
அல்சபா உரிமையாளர் ஜனாபா தங்கமணி(இசுலாமியார்தான் ) அவரது துணைவர்
ஜனாப் சிராஜுதீன் இருவரும் நல்ல அனுபவமும் திறமையும் உடையவர்கள். சிராஜுதீன் பல
ஆண்டுகள் சவுதியில் பணி செய்தவர். அரபு மொழி நன்றாகப் பேசுவார். உணவுக்கு வேண்டிய
பொருட்களை அவரே சந்தைக்குச் சென்று வாங்கி வருவார்..
பயண வழிகாட்டியாக வந்தவர் திருப்பத்தூர் பெரிய பள்ளி பேஷ் இமாம் ஜனாப்
பாருக் அசரத். அவருக்குத் துணையாக வந்த ஜனாப் யஹ்யா நன்கு தெரிந்த உறவினர். .
எங்கள் குழுவில் திருப்பதூரைச் சேர்ந்தவர்கள் நிறையப் பேர் இருந்தனர்.
அவர்கள் எல்லோருக்கும் எங்களைத் தெரிந்திருந்தது,.எங்களுக்கு சிலரைத்
தெரிந்திருந்தது.
கொழும்பார் என அழைக்கப்படும் முதியவர் ஒருவர், ஒரு வழக்கறிஞரும் அவரது
துணைவியாரும் , வழக்கறிஞரின் மைத்துனரும் அவரது
துணைவியாரும் ரஹ்மத் என்ற மூதாட்டி , மும்தாஜ் (கான் ராவுத்தர் மகள்)
இவர்கள் உறவினார்கள்
இத் போக புதுக்கோட்டையிளிருந்து ஒய்வு பெற்ற பேராசிரியர்,துணைவி,
,மைத்துனர் சம்சுவின் துணைவி வழி உறவினர் (வழக்கறிஞர்) தொலைபேசித்துறையில் பெரிய
பொறுப்பிலிருந்து ஒய்வு பெற்ற ஒரு தம்பதி, ஒரு வணிகர் துணையுடன்,ஜிகிர்தண்டா
தயாரிப்பவர் தன் தாயுடன் ,மையத்துக் குழி வெட்டுபவர், மலேசியாக்காரர் ஒருவர் என்று
பலதரப்பட்ட மக்கள் .
முனுசு அம்பலார் குடும்பம்,.கமிஷனர் குடும்பம் ஜமீலா குடும்பம், வங்கி மேலாளர், படித்தவர்
என்று பலதரப்பட்ட தகுதிகள் எங்களுக்கு. எனவே பெரும்பாலோர் நல்ல அன்புடன்
பழகினார்கள்..பெரும்பாலானோர் கதை எழுதும் அளவுக்குத் தம் வாழ்க்கை பற்றிச்
சொன்னார்கள் .பின்னர் சுருக்கமாக் அவற்றைச் சொல்கிறேன் இடமிருந்தால்.
அஜீஜியாவில் அழகிய பள்ளி ஓன்று இருக்கிறது. .நடந்தே ஐந்து வேளையும்
போய் வருவோம். அதன் அருகில் நிறைய சிறிய சிறிய நடைமேடைகடைகள் இருக்கும் .
..அந்தக்கடைகளில் பலவிதமான
பொருட்கள் கிடைக்கும்..சவூதி அரசு பொருட்களின் தரத்தில் மிகவும் கவனமாக இருப்பதால்
பொருட்களை நம்பி வாங்கலாம் என்று சொல்வார்கள்.
மக்கா,சுற்றுப்புறமுள்ள பள்ளிகளில் ஒரு சிறிய ஒலிப்பெட்டி இருக்கும்.
காபதுல்லாவில் ஒலிக்கப்படும் பாங்கோசையை அந்த ஒலிப்பெட்டியில் கேட்டு, அதை ஒட்டி
மற்ற பள்ளிகளில் பாங்கு சொல்வார்கள்.
மாலைப்பொழுதில் முதல் தவாபுக்காக காபதுல்லாவுக்கு அழைத்துச்
சென்றார்கள். அப்போது ஒன்றும் தெரியவில்லை. காபா வளாகத்துக்குள் நுழையும் போது எதோ
ஒரு பெரிய பள்ளிவாசலுக்குள் நுழைவது போல்தான் தோன்றியது.. பாபுல்சலாம் என்னும்
வாசல் வழியாக கண்களை மூடிய நிலையில் அழைத்துச் சென்றார்கள்
கண்களைத்திறந்தால ! காணக் கண் கோடி வேண்டும் என்று நாகூர் ஹனீபா
பாடியது சற்றும் மிகையில்லை என்ற எண்ணம். சொற்களால் விவரிக்க முடியாத உணர்ச்சி
வெள்ளம். கண்களில்கண்ணீர் பெருக்கு. .எதற்காக அழுகிறோம் என்று தெரியவில்லை.ஆனந்தமா,
துக்கமா, இறையச்சமா எதுவம் புரியாவில்லை .ஆனால் அடக்க முடியாமல் அழுகிறோம் . அழுது
ஓய்ந்த பின்தான் காபாவின் அழகும் பிரமாண்டமும் புலப்படுகிறது.
அடுத்தடுத்த முறைகளில் பார்க்கும்போது அந்த அழுகை வருவதில்லை. ஆனால்
காபாவைப் பார்க்கும் ஆசையும் ஆனந்தமும் குறைவதில்லை..
உலக அதிசயங்களாக சொல்லப்படும் தாஜ் மஹால், பிரமிட் இவை காபா, ஜம்ஜம்
கிணறு இவற்றின் அற்புதத்துக்கு முன் ஒன்றுமேயில்லை என்று எண்ணம் தோன்றியது..மேலும்
எதவாது ஒரு சிறிய வேலை கிடைத்தால் கூட இங்கேயே தங்கி காபாவைப் பார்த்துக் கொண்டே
காலத்தைக் கழித்து விடலாமே என்ற எண்ணமும் தலைதூக்கியது.
சயி செய்வதற்கு முன் அருகிலுளள கதீஜா பள்ளிக்கு சென்று வருவது
மரபு.அங்கு எங்கள் குழுவில் வந்த பெண் வெள்ளந்தியாக “ஏத்தா இங்கே கதீஜா நாச்சியார்
தர்கா எங்கத்தா இருக்கிறது /” என்று கேட்டார்.
ஹஜ்ஜைப் பற்றி நமக்குத் தெரிந்தது மிகக் குறைவு என்ற மனப்பான்மையுடன்
செல்லும் எனக்கு, சிலரைப் பார்க்கும்போது நாம் இந்த அளவுக்காவது தெரிந்து
வைத்திருக்கிறோமே என்று இறைவனுக்கு நன்றி செலுத்தத் தோன்றுகிறது.
உண்மையிலேயே எங்கள் குழுவில் ஒருவருக்கு அல்கம்து சூரா,முதல் கலிமா
கூடத் தெரியவில்லை. ஊரைச்சுற்றிப் பார்க்கப் போன அவர் காணாமல் போய்விட்டார்.
கையில் அடையாள அட்டையும் கொண்டு செல்லவில்லை. படிப்பறிவும் கிடையாது. எப்படியோ சில
நாட்கள் கழித்து கை நிறைய சவுதிப் பணத்துடன் வந்து சேர்ந்து விட்டார்.
இது மாதிரி நிறையப்பேர் தொலைந்து விடுவார்களாம். அவர்களையெல்லாம் அரபாத்
தினத்தன்று அரசு வண்டிகளில் ஏற்றி அரபாத் மைதனத்தில் இறக்கி விட்டு விடுவார்கள் .
இதனால் அவர்கள் ஹஜ் பயணம் நிறைவு பெற்று விடும்.
மினாவில் கூடாரங்களில் தங்க வேண்டும். கூடாரம் அவ்வளவு அழகாகவும்
வசதியாகவும் வடிவகைக்கப்பட்டு குளிர் பதனம் செய்யப்பட்டிருக்கும் .புத்தம் புது
மெத்தைகள் ,தலையணைகள் இருக்கும். ; கழிவறையில் வரிசையில் நிற்பது ஒன்றுதான் அங்கே
சிரமமாக இருக்கும். அதற்கு ஒரே வழி உணவின் அளவை குறைத்து அதிகாலையில் –மூன்று
நான்கு மணிக்குள் கடன்களை முடித்து விடுவதுதான். இஹ்ராம் உடையில் இருப்பதால்
குளிக்கவும் முடியாது.
ஒரு பெரிய பரப்பில் பல்லாயிரக்கணக்கான கூடாரங்கள் ஒரே மாதிரித்
தோற்றமளிக்கும். சிறிது வழி தவறிப் போய்விட்டால் மிகவும் சிரமம். .இவ்வளவுக்கும்
கூடார உச்சியில் அந்த அந்த நாட்டுக்கொடி பறக்கும், கூடார எண் நமது அடையாள
அட்டையில் இருக்கும்.
கூடாரத்தில் தங்கி இருக்கும்போது நானும் இன்னும் இருவரும் அருகிலுள்ள
கூபா பள்ளியைப் பார்த்து வரலாம் என்று புறப்பட்டோம்.கூட்டத்தில் நாங்கள் பிரிந்து
விட்டோம். அவர்களைத்தேடிப் பார்த்து, கிடைக்காமல், கூபா பள்ளியில் லொகர் தொழுக
அமர்ந்திருந்தேன்.. அருகில் இருந்தவர்(எந்த நாட்டுக்காரர் என்று தெரியவில்லை) நான்
மிகவும் களைப்பாக இருந்ததைப்பார்த்து விட்டு அவர்டமிருந்த ஜம் ஜம் நீரைப் பருகக்
கொடுத்தார்..நாடு,மொழியைக் கடந்த இசுலாமிய சகோதரத்துவத்தை அங்கே உணர்ந்தேன்.
தொழுது விட்டு வெளியே வந்து அருகில் உள்ள வழிகாட்டு மையத்தை
அணுகினேன். அங்கு குளிர்பானமும் குளிர் நீரும் சிற்றுண்டியும் கொடுத்தார்கள் என்
அடையாள அட்டையைக் காண்பித்ததும் காவலர் போலிருந்த ஒருவர் இருசக்கர வண்டியில்
என்னைக் கூடாரத்தில் இறக்கி விட்டார்..
ஹஜ் பயணம் பற்றி நான் கேள்விப்படவற்றையும் நேரில் கண்டவாற்றையும்(சிலவற்றைக்
கீழே சொல்கிறேன்)
முதலாவது உடை பற்றியது.
ஹஜ்ஜூக்குப்போகும் ஆண்கள் வெள்ளை உடை அதுவும் முழுக்கை சட்டைதான் அணிய
வேண்டும் என்று சொன்னார்கள். இதற்காவே நான்கைந்து வெள்ளை முழுக்கைச் சட்டை
வாங்கினேன்.
ஆனால் அங்கு ஆண், பெண் இருவருக்கும் எந்த உடை அணிய வேண்டும் என்று
கட்டுப்பாடு கிடையாது. மறைக்க வேண்டிய உடல் உறுப்புக்களை மறைக்கும் எந்த உடையும்
அணியலாம். அது அடக்கமான உடையாக இருக்க வேண்டும்.
இந்தோனேசிய இளம் பெண்கள்
கூட்டம் கூட்டமாக் ஹஜ்ஜுக்கு வருவார்கள் .(அங்கு ஹஜ் முடித்தால்தான் திருமணம்
என்று கேள்விப்பட்டேன்) அவர்கள் அனைவரும் ஒரே மாதிரி கால் சராய் (pants
) சட்டை அணிந்து தலையில் அணியும் துணி (மக்கானா)உடல் மேல்பாகம் முழுதும்
மூடும்படி அணிந்திருப்பார்கள்.
. பொதுவாக எட்டு முழ வேட்டி மெல்லியதாக இருப்பதால் உள்ளாடை
பளிச்சென்று தெரியும் எனவே நம் ஊர் எட்டு
முழ வேட்டிக்கு அங்கே அனுமதி இல்லை
இரண்டாவது காபாவை சுற்றி வரும் தவாப் பற்றியது. .மிக அதிகமான கூட்டம்
வருவதால் தவாப் மிகவும் சிரமாக இருக்கும், கீழே விழுந்த பொருளைக் குனிந்து
எடுத்தால் கூட்டத்தில் மிதித்து நசுக்கப்படுவிடுவோம் என்று சொல்வார்கள்.
கூட்டம் மிக அதிகம்தான் . அவ்வளவு
கூட்டத்திலும் கால்கள் முடமாகிப்போன ஒருவர் ஒரு சிறிய பலகை வண்டியில்
அமர்ந்து கைகளால் தள்ளித்தள்ளி தவாப் செய்தார். இறையருளால் அவருக்கு ஒன்றும்
ஆகவில்லை.
மூன்றாவது அரபாத் மைதானம் பற்றி மிகவும் அச்சம் கொள்ளும்படி சொல்வார்கள்.
கூட்ட நெரிசலில் சிக்காமலிருக்க உடல்
நலமில்லாதவர்கள், முதிவர்களை எல்லாம் நடக்க விடாமல் தூககிகொண்டு போவது
பாதுகாப்பானது என்று சொல்லப்படும்.
ஹஜ் செய்யும் எல்லோரும் ஒரு நாளில் ஒரே இடத்தில் கூடும் இடம் அரபாத்
மைதானம். எனவே எங்கு பார்த்தாலும் உலகமே சுருங்கி மனிதர்கள் அதிகமானது போல்
தோன்றும். அங்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான் –எந்தக் காரணத்தைககொண்டும்
நம் கூடாரத்தை விட்டு விலகிப்போய்விடக்கூடது. தொழுகை, துவா எல்லாவற்றயும்
அதற்குள்ளே முடித்துக்கொள்ள வண்டும்.
இறையருளால் நாங்கள் போன காலத்தில் மழை, வெயில் , குளிர் எதுவும்
இல்லாமல் மிக சுகமான அருமையான தட்ப வெப்ப நிலை நிலவியது.
உடல் நிலை சரியில்லாமல் வந்த ஜோதிக்கு இந்த தட்ப வெப்ப நிலை
பேருதவியாக, இறையருளாக அமைந்தது. உடல் நிலை சரியில்லை என்று எந்த அமலையும் விட்டு
விடவில்லை . தவாப் , சயீ செய்ய வண்டியும் பயன்படுத்தவில்லை. மிக வேகமாக வண்டியைத்
தள்ளுவதைப் பார்க்க , நடப்பதே மேல் என்று தோன்றும்.. பெரும்பாலும் உணவு உண்ணாமலேயே
நாட்களைக் கழித்தது. மதீனா போனபின்புதான் ஓரளவு சாப்பிட ஆரம்பித்தது.
ஷைத்தான் மேல் கல்லெறியும் இடத்தில் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுப்
பலர் இறந்த செய்தி, தமிழ் நாட்டிலிருந்து தொலைக்காட்சியில் பார்த்து தொலைபேசியில் தொடர்பு கொண்டபின்தான்
எங்களுக்கே தெரியும் .முதல் நாள் கூட்டம் அதிகமாயிருக்கும் அதனால் நாளை போகலாம்
என்று எங்களைக் கூடாரத்திலேயே தங்க வைத்து விட்டார்கள் .
அரபாத்தில் தங்கி குர்பானி கொடுத்து விட்டால் ஹஜ் நிறைவேறியதாகக்
கொள்ளலாம். அதன் பின் ஆண்கள் தலைமயிரைக் களைந்து இஹ்ராம் உடையில் இருந்து நீங்கி
மாற்று உடை அணிந்துகொள்ளலாம்.
பயணத்துக்கு முன்பு படிக்கும் வழிகாட்டி நூல்களும்,பயிற்சி வகுப்பில்
கேட்கும் செய்திகளும் ,பார்க்கும் குறுந்தகடுகளும் நம்மால் இதையல்லாம் ஒழுங்காகச்
செய்து ஹஜ்ஜை நிறைவேற்ற முடியுமா என்ற ஒரு தயக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் புனித
பூமியில் காலெடுத்து வைத்தவுடன் மனதில் தெளிவு பிறந்து விடும்.
கூடிய மட்டும் விரைந்து ஹஜ்ஜை முடிப்பது நல்லது .ஆண்டுகள் போகப்போக
உடலும் மனமும் தளர்ந்து விடும். எவ்வளவுதான் வசதிகள் பெருகி பயணம் எளிதானாலும் ஹஜ்
என்பது உடல்,மனம் ஆன்மாவுக்கு ஒரு கடுமையான பயிற்சி
ஹஜ்ஜில் என்னை வியப்பில் ஆழ்த்தியவற்றில் முதன்மையானது கூட்ட்
மேலாண்மை, அடுத்து சுத்தம் . லட்சக்கணக்கில் மக்கள் கூடும் இடத்தில் ஒரு சிறிய
பிரச்சனை வந்தால் உடனே ஏதோ மாய மந்திரம் போல் நூற்றுக்கணக்கான பெண் காவலர்கள் –உடல்
முகம் எல்லாம் மூடியிருக்கும் –அவர்களிடம
என்ன ஆயுதம் இருக்கிறது என்றும் நமக்குத் தெரியாது.-ஏதும் பேசவும்
மாட்டார்கள் விரட்டவும் மாட்டார்கள். வரிசையாக நின்று மனிதச்சங்கிலி உருவாக்கி மிக
நேர்த்தியாக பிரச்சனையை நொடியில் சரி செய்து விடுவார்கள்.
உலகெங்கும் இருந்து லட்சக்கணக்கில் கூடும் மக்களை அரபு மட்டுமே தெரிந்த அலுவலர்கள், காவலர்கள் மிக
அழகாக சமாளிக்கிறார்கள்.
அரபாத் மைதானத்தில் இருந்து ஒரே நாளில் லட்சக்கணக்கான மக்கள் திரும்பி வருவது மனித சக்திக்கு
அப்பாற்பட்ட ஓன்று. ஒரு தடவை ஊடகங்கள் சவுதி அரசு இந்தக்கூட்டத்தை சரியாகக்
கையாளவில்லை என்று கருத்துத் தெரிவித்தன.. உடனே சவுதி அரசு அவர்களை வானூர்தியில்
ஏற்றி மேலே அழைத்துச்சென்று அங்கிருந்து எவ்வளவு வாகனங்கள், எவ்வளவு மக்கள் எப்படி
அவர்களை வானிலிருந்து கண்காணித்து கட்டுப்படுத்துகிறோம் என்று விளக்கினார்கள்.
இதைவிட சிறப்பாக இவ்வளவு கூட்டத்தை யாரும் கையாள முடியாது என்று ஒத்துக்கொண்டனர்
ஊடகத்தினர்.
காபாவின் சுத்தமும் பராமரிப்பும் என்னை வியக்க வைத்தது. அவ்வளவு கூட்டத்தில்
மக்களுக்கு எந்த இடைஞ்சலும் இல்லாமல் சுத்தகரிப்புப் பணி தொடர்ந்து கொண்டே
இருக்கும். ஒரு பேரிச்சம்பழ விதை கீழே விழுந்தால் கூட உடனே அதை அப்புறப்படுத்தி
விடுவார்கள். கழிப்பறைகளின் சுத்தம் பார்த்தால்தான் விளங்கும், நம்ப முடியும்.
இன்னொரு வியப்பு ஜம் ஜம் தண்ணீர் விநியோகம். ஆங்கங்கே குழாய்களில்
வருவது போக பெரிய பெரிய சாடிகளில் வெந்நீரும் தண்ணீரும் தனித்தனியாக இருக்கும்.
ஹஜ் பயண நாற்பது நாட்களில் எந்த ஒரு சாடியும் காலியாக இருந்ததைக் காணமுடியவில்லை,
காபாவில் ஆண்களும் பெண்களும் சேர்ந்தே தவாப் செய்யலாம் தொழுகலாம்.
தொழுபவர் முன்னால் குறுக்கே செல்லக்கூடாது என்ற விதி காபாவில் கிடையாது.
மிதிக்காமல் போனால் சரி ..நாள்தோறும் ஜனாஸாத் தொழுகை நடைபெறும் .காபாவிலும்
மதீனாவிலும் தஹஜத் தொழுகைக்கு பாங்கு சொல்வார்கள்.
காபா வளாகத்தில் காக்கை குருவி புறா போன்ற பறவைகள் எதையும் காண
முடியாது, அங்கு பறந்து திரியும் ஒரே பறவையினம் எச்சம் இடாதாம்..இந்தப்பறவைதான்
திருக்குர்ஆன் அல் பில் சூராவிலசொல்லப்படும் யானைப்படையை கற்களை வீசி அழித்த பறவை
என்கிறார்கள்
ஹஜ்ஜை முடித்ததும் மனதில் உள்ள இறுக்கம் பாரம் நீங்கி அமைதியடைந்து
விடும்
காபாவுக்கு மிக அருகில் தவாப்
செய்ய எண்ணி ஜோதி கூட்ட நெரிசலுக்குள் சிக்கிக்கொண்டது .பெரும்பாடு பட்டு
மீட்கவேண்டியதாய்ப்போயிற்று
ஒரு இரவு தவாபுக்குப் புறப்படுகையில் கான் ராவத்தர் மகள் மும்தாஜ் அக்கா
எங்களுடன் வந்தது. மருமகனுக்கு உடல் நிலை
சரியில்லை என்று மிகவும் வருத்தமாய் இருந்த அது ஆறுதல் தேடி தவாப் செய்ய வந்தது.
எங்காவது பிரிந்து விட்டால் ஏழாம் எண் வாயிலுக்கு வந்து காத்திருங்கள் என்று
சொல்லி விட்டு தவாப் செய்ய ஆரம்பித்தோம்.இடையிலேயே பிரிந்து விட்ட அந்த
அக்காவுக்காக வெகு நேரம் ஏழாம் எண் வாயிலில் காத்திருந்தோம் காணோம். நேரமோ
நள்ளிரவைத்தாண்டி விட்டது. இதற்கிடையில் தவாப் செய்கையில் மயக்கமுற்ற நிலையில்
ஒருவரை தூக்கிக்கொண்டு வந்து படுக்க வைத்தார்கள் . அது மும்தாஜ் அக்காவோ என்று
பயந்து ஜோதி வாய் விட்டு அழத தொடங்கியது,.மயங்கி விழுந்தவர் ஆண் என்று அறிந்து
சற்று மனம் அமைதி அடைந்தது .யஹ்யாவை தொலைபேசியில் அழைத்து, அவரும் வந்து தேடி
விட்டு காணோம் என்று சொல்லிவிட்டார். பதற்றத்துடன் விடுதிக்கு வந்தால் எங்களுக்கு
முன்பே அங்கு வந்து சேர்ந்திருந்தது .
கடலூர் வங்கி வாடிககையாளார் ஜனாப் அன்வர் சவுதி ரியாத்தில் வானூர்தி பொறியராகப்
பணி புரிந்தார், அவரது துணைவி பல் மருத்துவர். மக்கா வந்து நாங்கள் .மறுத்தும்
வற்புறுத்தி அவர்கள் இல்லத்துக்கு அழைத்துச்சென்று, சில நாட்களாவது தங்கிச்
செல்லச் சொன்னார்கள்..ரியாத் என்பது சவூதியின் வர்த்தகத் தலைநகர்..மிகப்பெரிய வணிக
வளாகத்துக்கு எங்களை அழைத்துச் சென்றார். மகிழுந்தை நிறுத்தவே வெகு தூரம் வளைந்து வளைந்து சென்றார் . நிறைய
தொழுகை விரிப்புகள், தொப்பிகள நறுமணப் பொருட்கள் எல்லாம் வாங்கினோம்.
அவற்றையெல்லாம் அன்வரே சுமந்து வந்தார்..
இரவு அவர்கள் வீட்டில் தங்கினோம்.. வீடு, குறிப்பாக குளியலறை, மிகச்
சுத்தமாக இருந்தது.
அன்று அதிகாலை மைத்துனர் பீர் முகமது காலமாகி விட்டதாக் தொலைபேசிச்
செய்தி பைசலிடமிருந்து வந்தது..உடனே அன்வரிடம் சொல்லி மக்கா சென்று விட்டோம்.
திருப்பத்தூரைச் சேர்ந்த அன்வர் பத்தி என்ற குடும்பத்தைச்
சேர்ந்தவர்கள் பல ஆண்டுகளாக மக்காவில் வணிகம் செய்து வருகின்றனர். .எங்கள்
குழுவில் திருப்பத்தூர் மக்களை புகழ் பெற்ற உணவு விடுதியான அல் பேக்குக்கு
அழைத்துச் சென்றார்.. அந்த விடுதியின் சிறப்பு அம்சம் கோழி, கோழி கோழி மட்டுமே..
கோழிக்கறியில் மிகச்சுவையான பலதரப்பட்ட உணவு வகைகள். தொட்டுக்கொள்ள சின்ன சின்ன
ரொட்டிகள் கொடுப்பர்கள். திரையரங்கு போல் நுழைவுச்சீட்டு வாங்கிகொண்டு அவர்கள்
நம்மை அழைக்கும் வரை காத்திருக்க வேண்டும். அப்படியொரு கூட்டம்..
அரபு மக்களுக்கு வெள்ளிகிழமை வார விடுமுறை. வியாழன் இரவு முழுதும்
விடிய விடிய உணவு விடுதிகளிலும் வணிக வளாகங்களிலும் கழித்து விட்டு காபாவில்
சுபுஹு தொழுகையை முடித்து விட்டு வீட்டுக்குப் போய் உறங்கி ஓய்வெடுத்து,
ஜும்மாவுக்கு காபா வந்து விடுவார்கள்
எங்கள் குழுவில் வந்த ஒரு தம்பதியில் கணவர் தன உறவினரைப் பார்க்க
மக்காவில் செய்ய வேண்டிய அமல்களை எல்லாம் முடித்து விட்டு எங்களுக்கு சில நாட்கள்
முன்பு மதீனா போய்விட்டார். அங்கு உள்ள அமல்களையும் விரைந்து முடித்த அவர்,
நாங்கள் மதீனா போன அன்று காலமாகி விட்டார். அதை எதிர்பார்த்தது போல் கடவுச்சீட்டு
போன்ற எல்லா ஆவணங்களுக்கும் பிரதி எடுத்து வைத்திருந்தார். முகத்தை மூடிய படி அவர்
மனைவி அழுது புலம்பியது மனதைப் பிசைந்தது..
ஹஜ் முடிந்தபின் உள்ளூர் இடங்களுக்கு சிற்றுலா அழைத்துச்
சென்றார்கள்.. அசம்பாவிதம் நடந்த கல்லெறியும் இடம் முற்றிலுமாய்
இடிக்கப்பட்டிருந்தது . நம் ஊர் போல் ஒப்பந்தபுள்ளி (டெண்டர்) கோரும்
நடைமுறைஎல்லாம் இலை..
திரளாக மக்கள் கூடியிருந்த அரபாத் பெருவெளி அமைதியாக தனிமையில்
இருந்தது,. ஆதாம் (அலை) அவர்களும்
ஹவ்வாவும் (Adam and Eve)நீண்ட
பிரிவுக்குப்பின் சந்தித்த இடம் ஒரு சிறிய குன்றுபோல் அமைந்துள்ளது..அதன் மேல் ஏற
படிகள் உண்டு. குன்றின் பல இடங்களில் அங்கு வந்து பார்த்தவர்கள் தங்கள் பெயர்களை
செதுக்கியிருந்தது எனக்கு பிரான் மலையை நினைவூட்டியது .
ஒரு இடத்தில் மரத்தில் புதிதாகப் பறித்த பேரிச்சம் பழம்
கொத்துக்கொத்தாக விற்றது. மிகவும் சுவையாக இருந்தது.பதப்படுத்தப்படாத அது ஒரு
நாளில் அழுகி விடும்.
திரு குர்ஆனில் இறைவனால் சபிக்கப்பட்ட ஒரே நபரான அபு லஹப் அடங்கிய
இடம் இன்றும் ஒரு துர் நாற்றத்துடன் இருக்கிறது
ஒரு மாத மக்கா வாழ்கையை விடைபெறும் தவாபோடு முடித்துக்கொண்டோம். எதோ
நெருங்கிய உறவினரையம் , நீண்ட நாள் வாழ்ந்த இடத்தையும் விட்டுப் பிரிவது போல்
மனதில் ஒரு துயரம்.. காபாவை இனி ஒருமுறை பார்ப்போமா என்ற ஏக்கம். ஏன் மக்கள்
திரும்ப திரும்ப ஹஜ்ஜும் உம்ராவும் செய்ய
எண்ணுகிறார்கள் எனபது அப்போதுதான் புலப்பட்டது.
மதீனப்பயணம் ஹஜ்ஜின் ஒரு பகுதி அல்ல..ஆனால் நபிகள் நாயகம் ஸல் அவர்கள்
வாழ்வின் இறுதிப்பகுதியில் வாழ்ந்து மறைந்த இடம் மதீனா. இசுலாத்தை நிலை நிறுத்தி
ஒரு பேரரசாக உருவாக்கியதில் மதினாவின் பங்கு மிக மிக அதிகம்.
மக்கா மதீனாவுக்கு இடையே நானூறு கி மீ தொலைவு. பேருந்துகள் விரைந்து
செல்வதால் பயணம் ஐந்து மணி நேரத்தில் முடிந்து விடும். வழியெங்கும் பரந்து
விரிந்து நிற்கும் பாலைவன மணல் வெளி. ஆங்காங்கே கொஞ்சம் புல்பூண்டுகள் ,
ஒட்டகங்கள்,
மக்காவில் நுழையும்போதும் முதல் தவாப் செய்யும்போதும் இஹ்ராம் உடையில்
சற்று அழுக்காக இருப்போம். அதற்கு மாறாக மதீனத்தில் மணமக்கள் போல் உடுத்திக் கொள்ள
வேண்டும் என்பார்கள் .
மதீனாவில் ஒன்பது நாள் தங்கி
நாற்பது வேளை தொழுவது சிறப்பு. நபிகள் (ஸல்) அவர்கள அடக்கம் செய்யப்பட்ட ரவ்ளா,,நபிகளின்
சொந்தப் பள்ளியான மஸ்ஜிதுன் நபவி , பல புனிதர்கள் அடக்கம் செய்யப்பட்ட ஜன்னத்துல்
பக்கி –இவை மதீனத்தின் சிறப்புக்கள்.
இங்கேயும் தங்கு தடையின்றி ஜம் ஜம் நீர் கிடைக்கிறது..நபவி பள்ளியில் மேல்கூரை
திறந்து மூடும்படி அமைக்கப் பட்டிருக்கிறது. மிகப்பிரமாண்டமாக
அமைக்கப்ப்ட்டிருக்கிருக்கும் இது கட்டிடக்கலையில் ஒரு பொறியியல் அற்புதம்.
பூமிக்குக் கீழ் அமைக்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய பல அடுக்கு ஊர்தி
நிறுத்துமிடம் மற்றுமோர் அற்புதம்.
பள்ளியின் குளிர்பதன அமைப்பில் வெளியாகும் வெப்பக்காற்று, மக்களுக்கு
இடையூறு செய்யாமல் பல கிலோ மீட்டர் தொலைவு தள்ளி வெளியேறும்படி அமைக்கப்
பட்டிருக்கிறது..
என்றும் மாறாத நம்பமுடியாத வியப்பு சுத்தம் குறிப்பாக கழிவறைகள்
ஜன்னத்துல் பக்கியில் இன்னார் இங்கே அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்
என்பது யாருக்கும் தெரியாது
மதீனாவில் தவாப் சயி போன்ற
அமல்கள் கிடையாது. எனவே கடைகளுக்குப்போகவும் பொருட்கள் வாங்கவும் நிறைய நேரம்
கிடைக்கும்
மதீனாவில் ஆண் பெண் தனியாத்தான் தொழவேண்டும் . அதில் ஒருமுறை ஜோதி
காணாமல் போய் விட்டது. தொலைபேசி, காசு எதுவும் வைதுக்கொள்ளாது.. எப்படியோ வேறு ஒரு
தமிழ்நாட்டுக் குழுவொடு சேர்ந்து தங்குமிடத்துக்கு வந்து சேர்ந்து விட்டது.
பத்து நாள் போனதே தெரியவில்லை .நாடு திரும்பும் தினம் நெருங்கி
விட்டது. மறுபடி மனதில் ஒரு ஏக்கம்.
மதீனாவில் இருந்து சென்னைக்கு விமானம். செனையிலிருந்து ஜித்தா
வரும்போது எவ்வளவு அமைதியாக பயணம் இருந்ததோ அதற்கு நேர் மாறாக எதோ கூட்டம் நிறைந்த
நகரப் பேருந்தில் பயணம் செய்வது போல் இருந்தது..
சென்னை விமான நிலையம் வந்து இறங்கினோம். இப்போதுதான் ஜித்தா விமான
நிலையத்தின் பிரமாண்டம் உரைத்தது. ஏறுவதற்கு
எளிதான படிகள் கொண்ட பேருந்துகள் , கழிவறை சுத்தம் எல்லாம்
ஒப்பிட்டுப்பார்க்கையில் சென்னை விமான நிலையம் ஒரு பேருந்து நிலையம் போல்
தோன்றியது
விமான நிலையத்திலிருந்து வெளியே வரும்போது சரிபார்க்கும் இடத்தில் கடவுச்சீட்டில் உள்ள என் படத்தையும் என்னையும்
மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தார். இப்போது புதிதாகத் தாடி வைத்ருக்கிறேன்
என்று சொன்னவுடன்தான் அரை மனதோடு வெளியே விட்டார்..
சுற்றத்தார் அனைவரும் விமான நிலையத்துக்கு வந்திருந்தார்கள்.பாப்டி
வீட்டில் போய் இறங்கினோம். அங்கு அனைவருக்கும் உணவு சேக் ஏற்பாடு செயதிருந்தது.
மெஹராஜ் அக்கா நாங்கள் போன
அதே சமயத்தில் கட்டணம் கூடுதலான ஒரு குழுவில் ஹஜ் செய்தது. மினாவில்
தங்கியிருக்கும்போது என் கல்லூரி நண்பரும் சக வங்கி ஊழியருமான அப்துல் காதர்
என்பவரைச் சந்தித்தேன்.
ஹஜ்ஜை முடித்த கையோடு தாடி வளர்ப்பதையும் தொப்பி அணிவதையும் வழக்கமாககினேன்.மீசைக்கு
வண்ணம் பூசுவதை நிறுத்தி விட்டேன்,. இந்தப் புதிய கோலத்தில் பலருக்கு என்னை
அடையாளம் தெரியவில்லை. எனக்கே சில நேரங்களில் கண்ணாடியில் பார்க்கும்போது என்னை
அடையாளம் தெரியாது..
சில பல நாட்கள்,, மாதங்கள், ஆண்டுகள் ஏன் இப்போது கூட நானெல்லாம்
ஹஜ்ஜை நிறைவேற்றியது உண்மையா இல்லை கனவா என்ற ஐயம் தோன்றும்
காபா போன்ற ஒரு பிரமாண்டமான மககள் திரளும் அமைப்பு நம் நாட்டில்
இருந்திருந்தால் ?
நினைக்கவே மனம் கூசுகிறது
என்னதான் இருந்தாலும் கடையிசியில் நம் ஊருக்கு வந்துதானே தீரவேண்டும் “To
every journey there is a return journey “ இதற்குப் புனிதப்பயணமும் விலக்கல்ல
ஹஜ் முடித்து வந்ததும் வகாப் “மாமா ஹஜ்ஜில் அற்புதங்கள் ஏதும்
நிகழ்ந்ததா” என்று கேட்டார், என்னைப் பொறுத்தவரை ஹஜ்ஜே மிகப் பெரிய அற்புதம்தான்
அதோடு வாழ்வின் ஒவ்வொரு நொடியும் ஒரு அற்புதம்தான்
சென்ற பகுதி பற்றி
கருத்துக்களும் பாராட்டுக்களும் தெரிவித்த அஜ்மல் கான், நூர் கான்,, சகோதரிகள்
ஜோதி சுராஜ் , ஷாகுல், கலிபுல்லாஹ் ,பாப்டி அனைவருக்கும் நன்றி
இ(க)டைச்செருகல்
இந்தப்பகுதி மிக நீளமாகிவிட்டதை நன்கு உணர்கிறேன். இருந்தாலும்
இரண்டாகப் பிரிப்பதற்கு தோதாக இல்லை. எனவே அப்படியே விட்டு விட்டேன்
.இந்தபகுதியின் துவக்கத்தில் நான் குறிப்பிட்ட பலகையில் இருந்த சொற்கள்
.
TO
DOCTOR
&
BUTCHER
(மக்காவில் இந்தப் பலகையை நேரில் பார்க்க முடியவில்லை )
நிறைவு செய்யுமுன் ஒரு வினா:
கொய்னாபு என்றால் என்ன? ஹஜ்ஜுக்குப் போனவர்கள் இந்த சொல்லைக் கேட்டிருக்கலாம்
.தெரிந்தால் சொல்லுங்கள் .விடை அடுத்த பகுதியில்
இறைவன் அருளால்
பயணம் தொடரும்
வலை நூல் முகவரி கூகிள் தேடுதலில்
sherfuddinp.blogspot.com
.
..
,
No comments:
Post a Comment