(பல வியப்பான செய்திகள் கொண்ட இப்பகுதியின் தலைப்பிலேயே
வியப்புக்குறி போட்டிருக்கிறேன்)
எனக்குத் தெரிந்த வரை அஞ்சல் குறியீட்டு எண் (PIN) மிகப் பொருத்தமாக அமைந்திருப்பது ஜலந்தருக்குத்தான் -144 001.
144 தடையுத்தரவு நம்மூரில் எப்போதாவது போடப்படும். ஆனால்
ஜலந்தரில் அது ஒரு வாழ்க்கை முறையாக இருந்தது.
பீகாரில் உள்ள சிவான் கிளையில்
பணியாற்றிக்கொண்டிருந்தேன். அப்போது வங்கியின் பயிற்சிக் கூடங்களில் பணியாற்ற
விண்ணப்பங்கள் கேட்டு சுற்றறிக்கை வந்தது. விண்ணப்பித்த எனக்கு கல்கத்தாவில் நடை
பெற்ற நேர்முகத்தேர்வுக்குப் பிறகு ஜலந்தரில்
புதிதாகத் திறக்கப்படஉள்ள பயிற்சிக் கூடத்திற்கு போக ஆணை கொடுத்தார்கள்.
ஜலந்தர் பயணமே ஒரு
மாறுபட்ட அனுபவமாக இருந்தது. திருப்பத்தூரிலிருந்து
ஒரு வண்டி (van
)பிடித்து அதில் வீட்டு பொருட்களை ஏற்றி அந்த வண்டியிலேயே
நாங்களும் சென்னை வரை பயணித்தோம். மைத்துனர் சிராஜுதீனும் சென்னை வந்தார்..
குடும்பத்தை ஷஹா வீட்டில் இறக்கி விட்டு விட்டு அதே வண்டியில் சென்னை சென்ட்ரல்
நிலையம் போய் நாங்கள் தில்லி பயணிக்க முன்பதிவு செய்திருந்த அதே தொடர் வண்டியில்
பொருட்களும் வருமாறு பதிவு செய்தோம்.
தில்லி ஜலந்தர்
பயணத்திற்கும் முன் பதிவு செய்திருந்தோம். ஜென்னத் அக்கா மகள் திருமணம் முடிந்த
கையோடு வழியில் சாப்பிட பிரியாணி எடுத்துக் கொண்டு பயணித்தோம்.
தில்லி வரை நலமாக
வந்து சேர்ந்தோம். தில்லியில் வங்கி அதிகாரி திரு சாமிப்பிள்ளை என்பவர்
நிலையத்திற்கு வந்திருந்தார்.. தில்லியில் இறங்கிய சில மணி நேரங்களில் ஜலந்தர்
செல்லும் வண்டியில் ஏற வேண்டும்.
ஆனால் அன்று பாரத்
பந்த் எந்தத் தொடர் வண்டியும் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஓடாது அறிவிப்பு எப்போது
வேண்டுமானாலும் வரலாம் என்று சொல்லி விட்டார்கள். .அதாவது நிலையத்தை விட்டு வெளியே செல்லவும்
முடியாது. ஒரு நாள் முழுதும் காத்திருப்பு அறையிலும் நடை மேடையிலும் கழித்தோம்..
வீட்டுச்சாமான்கள் வேறு துணைக்கு. தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு சுமை தூக்கி
எங்களுடன் இருந்தார்.
இதுவும் ஒரு புதிய
அனுபவமாக நன்றாகத்தான் இருந்தது.. தில்லி நாட்டின் தலை நகர் என்பதால் தொடர் வண்டி
நிலையம் மிகத் தூய்மையாக இருந்தது. மக்கள் வருவதும் போவதும் ஒரு இந்தியாவையே
பார்ப்பது போல் இருந்தது, மேலும் பீகார் பயணத்திற்குப் பிறகு எனக்கு எந்த இடமும்
ஒரு புது இடம் என்ற தயக்கம் அச்சத்தை ஏற்படுத்துவதில்லை.
திரு வாஜ்பாயே
அவர்களை நிலையத்தில் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.
இரவு பத்து மணிக்கு
ஒரு வண்டி ஜலந்தர் செல்வதாக அறிவிப்பு வந்தது. முதல் வகுப்புப் பெட்டியில்
ஏறிக்கொண்டு வீட்டுச் சாமான்கள் அனைத்தையும் அந்தப் பெட்டியிலயே ஏற்றச் செய்தோம்.
காலை ஆறு ஏழு மணியளவில் ஜலந்தர் செல்லும். அங்கே மூன்று நிமிடங்கள்தான் நிற்கும்
என்று அறிந்தோம். மூன்று நிமிடத்தில் அவ்வளவு பொருட்களையும் இறக்க வேண்டும்.
வண்டி புறப்பட்ட
சிறிது நேரத்தில் பயணச்சீட்டுப் பரிசோதகர் வந்தார். இவ்வளவு பொருட்களை
ஏற்றியிருக்கிரீர்கள் , மற்ற பயணிகளுக்கு இடைஞ்சலாக இருக்குமே என்று இந்தியும்
ஆங்கிலமும் கலந்த மொழியில் சொன்னார். நான் பந்த் பற்றியும் அதனால் ஏற்பட்ட சிரமங்கள்
பற்றியும் எடுத்துச் சொல்ல அவர் தான் சொன்னதையே கிளிப்பிள்ளை போல்
சொல்லிகொண்டிருந்தார்..
இது வரையில்
கையூட்டுக் கொடுத்துப் பழக்கமில்லாத எனக்கு இப்போது வேறு வழியில்லை என்று
தோன்றியது. ஒரு பத்து ரூபாயை எடுத்து நீட்டியவுடன் சூழ்நிலை தலை கீழாக மாறி விட்டது. எதோ நெடு
நாள் நட்புள்ளவர் போல் தேனீர் வாங்கிக்கொடுத்தார் பரிசோதாகர்.. அது மட்டுமல்ல
காலையில் ஜலந்தர் நிலையம் வந்தவுடன் அவரே சுமை தூக்கிகளை அழைத்து மளமளவென்று
பொருட்களையும் இறக்க உதவியும் செய்தார். .
ஜலந்தரில்
மூட்டைமுடிச்சோடு குடும்பத்துடன் இறங்கி விட்டோம். இனி வீடு போய்ச்சேர வேண்டும்.
பொருட்களைக் கொண்டு செல்ல ஒரு சிறிய சுமயுந்தைத் தேடினேன். அதற்கான கூலி மிக
அதிகமாக இருந்தது.. இதற்கிடையில் ஒரு ரிக்சாக்காரர் வந்து சுமயுந்துக்கு கேட்ட
தொகையில் பாதித் தொகைக்கு பொருட்களையும் ஆட்களையும் கொண்டு போய் வீட்டில்
சேர்ப்பதாகாச் சொன்னார்.
பொதுவாக பஞ்சாபில்
யாரும்இந்தியில் பேசமாட்டார்கள்..படித்தவர்கள் ஆங்கிலம் பேசுவார்கள். ஆனாலும் மொழி
ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுக்காமல் எப்படியோ சமாளித்து விடுவோம்.. அப்படித்தான்
இந்த ரிக்சாகாரருடன் உரையாடலும். தொகை பேசி முடிவானவுடன் ஏழு ரிக்சாக்களில்
பொருட்களை ஏற்றினார்கள் .எட்டாவது ரிக்சாவில் நாங்கள் ஏறி அமர்ந்தோம்.
அரசியல் ஊர்வலம் போல்
ஏழு ரிக்சாக்கள் பின் தொடர வீட்டை
அடைந்தோம் . வீடு புதிதாகக் கட்டப்பட்ட மிக விசாலமான வசதியான ஓன்று.. வங்கியில் புத்தம்புது அறைக்கலன்கள் (furniture) மிக நயமாகக் கொடுத்திருந்தது வீட்டுக்கு மேலும்
மெருகூட்டியது. வீட்டு உரிமையாளர் நங்கல் அணைக்கட்டில் மிக உயர்ந்த பொறுப்பில்
உள்ள ஒரு பொறியர். அவ்வப்போது குடும்பத்துடன் வந்து போவர். மிக நட்பாகப்
பழகுவார்..நான் புகைப்பதில்லை என்பதில் அவருக்கு மட்டில்லா மகிழ்ச்சி,
சர்தார்ஜிகள் யாரும் சிகரெட்டைத் தொடக்கூட மாட்டார்கள். (குடிப்பழக்கம் மிக
அதிகமாய் இருக்கும்)
வீட்டை ஓரளவு ஒழுங்கு
படுத்தி விட்டு மாலை எல்லோரும் அருகில் உள்ள மாடல் டவுன் என்ற இடத்திற்குப்
போனோம். அங்கு நிறைய வணிக நிறுவனங்களும் உணவு விடுதிகளும் இருக்கும். அங்கு போன
சற்று நேரத்தில் எதோ கச முச வென்று ஒலிகள் . என்ன என்று விசாரித்தால் தீவிர
வாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலால் இருவர் உயிர் இழந்ததாகச்
சொன்னார்கள் .முதல் நாள் என்பதால் சிறிது அச்சத்துடன் வீடு திரும்பினோம்.
எனக்குத்
தெரிந்தவர்கள் சொன்ன கருத்து ஓன்று-- யாரிடமும் மதம்,அரசியல் பற்றிப் பேசாதீர்கள் இரண்டு -----தீவிர வாதிகள் ஒரு குறிப்பிட்ட
இலக்கை நோக்கித்தான் துப்பாக்கிச்சூடு
நடத்துவார்கள்..அதில் எங்காவாது குறுக்கே போய் மாட்டிக்கொள்ளாமல் கவனமாக இருக்க வேண்டும். மூன்று ------அதிகக்கூட்டம்
கூடும் திரைஅரங்கு போன்ற இடங்களைத் தவிர்க்க வேண்டும்
மற்றபடி ஜலந்தர் மிக
அமைதியான வசதியான ஊர் .பெரிய வசதியான மாநகரம்..”உன் வணிக நிறுவனத்தை
அமிர்தசரசிலும் தொழில் நிறுவனத்தை லுதியானாவிலும் இல்லத்தை ஜலந்தரிலும்
வைத்துக்கொள் “ என்பது அங்குள்ள சொல் வழக்கு,
மாநகராட்சி
விநியோகிக்கும் குடிநீரை வண்டிகளைக் கழுவவும் தோட்டத்துக்குப் பாய்ச்சவும் பயன்
படுத்துவதைப் பார்க்கும் போது வியப்பும் எரிச்சலும் கலந்து வரும். அந்த அளவுக்கு
செழிப்பு. இவ்வளவுக்கும் பெரிதாக மழையெல்லாம் பேயாது.. மின் தடை என்பதே கிடையாது.
பொதுவாக திருட்டு
பயம் கிடையாது. வீடுகளில் குறுக்குக் கம்பிகளே இல்லாமல் பெரிய பெரிய சன்னல்கள்
இருக்கும். பொருட்கள் வாங்க கடைகளுக்குப் போகும்போது பொருட்களை வண்டியில்
வைத்துவிட்டு அடுத்த கடைக்குப் போவார்கள். .முப்பது ஆண்டுகளுக்கு முன்பே ஒரு
ரூபாய்க்கு கீழே உள்ள சில்லறைகள் அங்கு புழக்கத்தில் கிடையாது.
Sardarji jokes apart. சிங்குகள் பொதுவாக அமைதியான அன்பான மக்கள்.
உருவம்தான் முரடாக இருக்கும. (முரட்டுப்பலா உள்ளே இனிப்புச்சுளை). உடல் உழைப்புக்கு
அஞ்சாதவர்கள்,நல்ல மனோ திடம். பிச்சை எடுக்கும் சிங்கை எங்கும் பார்க்க முடியாது. சிக்
என்பது ஒரு இனம் அல்லது மதம் என்று சொல்லலாம். அதிலும் சாதிப் பிரிவினை,
தாழ்த்தபட்டோர் எல்லாம் உண்டு
ஜலந்தரிலும் பிச்சை
எடுப்பவர்கள் குப்பை பொறுக்குபவர்கள் மறத் தமிழர்கள்தான்
பஞ்சாபிகள் நன்றாக சுவையாகச் சாப்பிடுவார்கள்.குளிர்
காலத்தில் மிக அதிகமாக நெய், வெண்ணெய் பயன்படுத்துவார்கள் உணவு விடுதிகளில் உணவுப் பொருட்கள்அளவிலும் தரத்திலும் நிறைவாகவும் விலை
மலிவாகவும் இருக்கும்..பொதுவாக உணவு விடுதிகளில் விலை அதிகமாக இருப்பது தமிழ்
நாட்டில்தான் என்பது நான் உணர்ந்தது, அரிசியே விளையாத அண்டை மாநிலமான கேரளாவில்
கூட நம் மாநிலத்தை விட உணவு விடுதிகளில் மலிவாக உணவு கிடைக்கும்.
லவ்லி இனிப்பகம்
என்று மிகப் பெரிய நிறுவனம். அங்கு மிகச் சுவையான தரமான இனிப்புகள் ஒரு கிலோ
பதினாறு ரூபாய்க்கு கிடைக்கும் .ஜலந்தரில் இருந்து ஒரு முறை விடுமுறையில்
வரும்போது இனிப்பு (ரசகுல்லா என்று நினவு)
ஒரு பெரிய தூக்குச்சட்டி நிறைய வாங்கி வந்தோம். அப்போது பீர் அண்ணன் மறைந்த சோகமான
செய்தி வந்ததால் விரைந்து திருப்பத்தூர் சென்றோம். அதனால் இனிப்பை சரியாக
பகிர்ந்து அளிக்க முடியாத நிலை.
ஒரு பெரிய பள்ளிக்கு பிள்ளைகளை
சேர்க்க அழைத்துச் சென்றேன் . நுழைவுத்தேர்வில் சிறப்பாகச் செய்யாவிட்டாலும்
வெகு தொலைவில் இருந்து வருகிறோம் என்ற மனிதாபிமான அடிப்படையில் பிள்ளைகள்
திருப்பத்தூரில் படித்துக்கொண்டிருந்த அதே வகுப்புகளில் சேர்த்துக் கொண்டார்கள்.
அதை விட ஒரு வியப்பு-
கல்வி ஆண்டின் இடையில் நாங்கள் வந்ததால் ஜலந்தரில் கட்ட வேண்டிய கட்டணத்தில் திருப்பத்தூரில்
அது வரை கட்டியிருந்த கட்டணத்தைக் கழித்து மீதியைக் கட்டினால் போதும் என்று
சொன்னார்கள்.. மாணவர்களின் தேர்வு மதிப்பெண்களை அறிவிக்க ஒரு சிறுவிழா போல்
பெற்றோரை அழைத்து, சிற்றுண்டி கொடுத்து பிறகு மதிப்பெண் தாளைக் கொடுப்பார்கள்..மிகவும்
கனிவாக மனித நேயத்துடன் பேசுவார்கள்.
(ஜலந்தரில் நாங்கள்
இருந்தது இரண்டு ஆண்டுகள்தான். முற்றிலும் புதிய இடம் என்பதால் சிறிய பெரிய
சுவையான நிகழ்ச்சிகள் பலப்பல. அதோடு நான் பணி நிமித்தம் அடிக்கடி வெளியூர் –வெளி
மாநிலங்கள் செல்ல வேண்டியுருந்தது.. அதிலும் நிறைய புதிய புரிதல்கள் நிகழ்வுகள்.
எல்லாம் சேர்தது எழுதினால் மிக நீளமாக வரும். எனவே ஜலந்தர் நிகழ்வுகளை இந்தப்
பகுதியில் சொல்லி விட்டு, வெளியூர் நிகழ்வுகளை அடுத்த பகுதியில் சொல்ல
எண்ணுகிறேன்)
ஜலந்தரில்
குளிகாலத்தை வரவேற்க . பெண்கள் வண்ண வண்ண நூல்களால் குளிர்காலஆடைகள் பின்னுவது மிக
அழகான காட்சியாகத் தெரியும். அந்தக் குளிர் காலையில் சின்னஞ்சிறு குழந்தைகள்
பள்ளிக்குத் தனியாக கிளம்பிப்போவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். பெற்றோர்கள்
வந்து பேருந்தில் ஏற்றி விடுவதெல்லாம் கிடையாது.
தென்
மாநிலங்களுக்கும், வட மாநிலங்களுகும் இடையில் உள்ள ஒரு வேறுபாட்டை நாம் மனதில்
கொள்ள வேண்டும். நமக்கெல்லாம் விடுதலைப் போராட்டம் , நாடு பிரிவினை அசோகர்
படையெடுப்பு, பாபர் படையெடுப்பு போன்றவை வரலாற்றில் படிக்கும் பாடங்கள்
மட்டுமே.ஆனால் பெரும்பாலான வட மாநிலத்தினர் இவற்றின் கொடுமைகளை கோரங்களை நேரடியாக
உணர்ந்து உள்வாங்கி இருக்கின்றார்கள்.. அதோடு தட்ப வெட்ப மாறுபாடுகள்- கடும்
குளிர், கடும் வெப்பம் புழுதிப்புயல் என்று பலவற்றையும் பார்க்கிறார்கள. அதன்
விளைவு- உறுதியான உடல்,மனத்திடம், போராடும் குணம்., தன்னம்பிக்கை.
தட்ப வெப்ப நிலை
மாறுபாடு பற்றி பாடத்தில் படித்திருந்தாலும் கோடையில் இரவு ஏழு மணிக்குமேல் மறையும்
கதிரவன் குளிர்காலத்தில் ஐந்தரை மணிக்கெல்லாம் மறைவதை நேரில் பார்க்கும்போது
வியப்பாக இருக்கும்.
பைசலும் பாப்டியும்
பள்ளிக்கு ரிக்சாவில் போய்க்கொண்டிருந்தார்கள். சில மாதங்கள் சென்ற பின்
இருவருக்கும் சைக்கிள் வாங்கினோம். சைக்கிள் ஓட்ட எந்த முயற்சியும் எண்ணமும் இல்லாமல்
இருந்தார்கள். ஒருநாள் ரிக்சாவை நிறுத்தி விட்டேன். உடனே சைக்கிளில் போகத் துவங்கி
விட்டார்கள்.
இதே பைசல் நான்
வெளியூர் போயிருந்தபோது ஒரு தேவை வந்ததும்
ஆறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கண்டோன்மென்ட் பகுதிக்கு சைக்கிளில் போய்
கருப்பட்டி, நல்லெண்ணை எல்லாம் வாங்கி வந்து விட்டான். கண்டோன்மென்ட் என்பது
பொதுவாக பாதுகாப்புப் படையினர் குடியிருக்கும் பகுதி.நிறையத் தமிழர்கள் வசிப்பதால்
அங்குதான், புளி,கருப்பட்டி போன்ற பொருட்கள் கிடைக்கும்..
ஜலந்தரில் கோதுமை
மாவை யாரும் விலைக்கு வாங்க மாட்டார்கள். கோதுமை வாங்கி அதை ஆட்டா சக்கி என்று
சொல்லப்படும் எந்திரங்களில் கொடுத்து அறைதுக்கொள்வார்கள்.
வண்டிகளில் அடுப்பை
வைத்துக்கொண்டு வீடு தேடி வந்து குறைந்த கட்டணத்தில் ரொட்டி செய்து , குழம்பு வைத்துக் கொடுக்கும் .
வழக்கமும் அங்கே உண்டு.
உணவு விடுதிகளில்
ரொட்டி மாவை செந்தணலாக எரியும் அடுப்புக்கு உள்ளேயே போட்டு சுடச்சுட எடுத்துப்
பரிமாறுவது கண்ணுக்கும் விருந்தாய் இருக்கும்..
ஒரு முறை வெளியூர்
செல்லும்போது பேருந்து வழியில் தடங்கலாகி
நின்று விட்டது. முப்பது ரூபாய் பயணச் சீட்டுக்கு நூறு ரூபாய் கொடுத்து
மீதி வாங்கவில்லை. வழியில் பேருந்து நின்றவுடன் நடத்துனர் எங்கோ மறைந்து
விட்டார்...
வேறு பேருந்தில் போக
வேண்டிய இடத்துக்குப் போய், அங்கிருந்து மீதப் பணத்தை திருப்பித்தரும்படி கேட்டு
போக்குவரத்துக் கழகத்துக்கு மடல் அனுப்பினேன்.
ஒரு வாரமாகியும்
பதில் வரவில்லை. ஜலந்தர் வந்த பின் போக்குவரத்துக் கழக அலுவலகத்து அதிகாரியை
நேரில் சந்தித்துப் பேசினேன். இன்னும் சில தினங்களில் பதில் வரும் என்று சொன்னார்.
நம்பிக்கை இல்லாமல் வீடு திரும்பினேன். அடுத்த நாள் போக்கு வரத்து ஊழியர் ஒருவர்
வீடு தேடி வந்து நூறு ரூபாயைத் திருப்பிக் கொடுத்து விட்டார். என்று மீண்டும் ஒரு
வியப்பான செய்தி.
அதே போல் சமையல்
எரிவாயு இரண்டாவது உருளையும் எழுதிக் கொடுத்த அன்றே கொடுத்து விட்டார்கள்.
பொதுவாக ஜலந்தரில்
குடிக்கத் தண்ணீர் என்றால் குளிர் நீர்தான். பணியாட்கள், ரிக்சாகாரர்கள் உட்பட
யாருமே குளிர்விக்காத நீர் குடிக்க மாட்டார்கள். இதற்காகவே ஒரு குளிர்பதனப் பெட்டி
(பிரிட்ஜ்) வாங்கினோம். இளம் நீல நிறத்தில் வீட்டுச்சுவர் நிறத்திற்கு பொருத்தமாக
அழகாக இருந்தது. ஆறு ஊர்களுக்கு மாற்றலாகி பதினைந்து ஆண்டுகள் உழைத்த அந்த
பிரிட்ஜில் வாயு (gas) கூட மாற்றியதில்லை. வெளித்தோற்றம் மிகவும் பழுதடைந்ததால்
சென்னையில் பணியாற்றும்போது அதைக் கொடுத்து விட்டு புதிது ஓன்று வாங்கினோம்.
ஜலந்தரில் இருந்து
மாற்றலாகிப் போகையில் பிரிட்ஜை.பாதுகாப்பாக பாக் செய்ய மட்டும் இருநூறு ரூபாய் கூலி
கேட்டார்கள். இது மிக அதிகமாகத் தோன்றியது. ஆனால் அவர்கள் பாக் செய்த அழகைப்
பார்த்தபோது அந்த எண்ணம் மறைந்தது. தூக்கி எறிந்தால் கூட உடையாத அளவுக்கு,
சுற்றிலும் மரச்சட்டங்கள் அடித்து ஒரு கூண்டுக்குள் பிரிட்ஜ் அடைக்கப்பட்டது போல்
தோன்றியது. அது போன்ற ஒரு சிறப்பான வேலைத்திறனை ஜலந்தரைத் தவிர வேறு எங்கும்
பார்க்க முடியவில்லை.
பிரிட்ஜைப்போல் அங்கு
இரு சக்கர வண்டி (ஸ்கூட்டர்) மிக அவசியமான ஓன்று. ஒரு பழைய வண்டியை வாங்கினேன்.
அதன் பதிவு எண் PAK என்று வரும். (பஞ்சாப் கபுர்தலா வின் சுருக்கம்)
வண்டியின் நிறம் பச்சை . தமிழ் நாட்டில் அந்த வண்டியைப் பார்ப்பவர்கள் இது பாகிசுதானில்
வாங்கியதா என்று கேட்பார்கள்.
ஸ்கூட்டர் வாங்கிய
புதிதில் பைசல் அதை ஓட்டிப் பார்க்கும்போது நடைப் பயிற்சி சென்ற ஒரு முதியவர் மேல்
இடித்து விட்டான். அவரோ சினம் கொள்ளாமல் அவனைத்தட்டிக் கொடுத்து பார்த்து ஓட்டு
குழந்தை என்று சொன்னார். (மீண்டும் பஞ்சாப் வியப்பு)
பெண் குழந்தைகளை
லவ்லி என்றும் ஆண் குழந்தைகளை ஹாப்பி என்றும் செல்லமாக அழைப்பது அவ்வூர் வழக்கம்.
வீட்டிற்கு எதிரில்
இரண்டு வீடுகள்.. ஒன்றில் வெளி நாட்டில் பணி புரிபவரின் குடும்பமும் மற்றொன்றில்
மிக எளிமையான இளம் கணவன் மனைவியும் இருந்தனர்.
அந்த இளம் பெண்ணுக்கு
முதல் குழந்தை மருத்துவ மனையில் பிறந்து அடுத்த நாளே குழந்தையைத் தூக்கிக்கொண்டு
நடந்தே வீட்டுக்கு வந்தார்.!!! அவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்..எனவே
இரு வீட்டாரின் உதவியும் இல்லை.
வெளி நாட்டில் பணி
புரிபவரின் குடும்பம் மிக உரிமையாகப் பழகுவார்கள். ஆனால் போகப்போக அவர்களின் குணம்
தெரிய வந்தது. இரண்டு படுக்கை அறைகள் உங்களுக்குத் தேவையில்லை ஒன்றை வாடகைக்கு
விட்டால் பணம் கிடைக்குமே என்று பேச்சு வாக்கில் சொல்லிக்கொண்டிருந்தவர்கள் ஒரு
மாதிரி நச்சரித்ததோடு ஒரு குடும்பத்தையும் குடியமர்த்தக் கூட்டிக்கொண்டு வந்தனர்.
நான் சற்றுக்
கடுமையாகத் திட்டி விரட்ட வேண்டியிருந்தது. அதற்குப் பழி வாங்குவதுபோல் நாங்கள்
விடுமுறையில் தமிழ் நாடு வந்திருந்தபோது தண்ணீர் மோட்டாரைத் திருடி விட்டனர்.
எங்களுக்கு அவர்கள் மேல் முதலில் ஐயம் உண்டாகவில்லை. ஆனால் எங்கள் வீட்டு
உரிமையாளரிடம் இது பற்றித் தெரிவித்தபோது இது அவர்கள் வேலைதான் என்று உறுதியாகச்
சொன்னார்..திருட்டே இல்லாத ஜலந்தரிலும் புல்லுருவிகள்,கருப்பு ஆடுகள்.
பொதுவாக பஞ்சாபில்
இசுலாமியர்கள் மிகக்குறைவு. இருந்த இசுலாமியர்கள் எல்லாம், நாடு பிரிக்கப்பட்டபோது
பாகிசுதான் சென்று விட்டார்கள். பஞ்சாபில் உள்ள மல்லர்கோட்லா என்ற ஊரில்தான் ஓரளவு
இசுலாமியர்கள் எண்ணிக்கை அதிகம். பெரிய நகரமான ஜலந்தரில் ஒரே ஒரு பள்ளிவாசல்தான் இருக்கிறது.
உருது அங்கே அலுவலக மொழியாக முன்பு இருந்ததால் முதியவர்கள் பலருக்கு உருது
தெரியும். இக்பால் என்பது அங்கு கிறித்தவர்கள் வைக்கும் பெயர்.
இசுலாமியர்களின்
கடைகளில் ஹலால் கறி,கோழி கிடைக்கும். கறிக்கடைகள் மிகவும் சுத்தமாக இருக்கும்.
.ஜலந்தரில் ரிக்சா ஓட்டுபவர்கள் பெரும்பாலும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.
அவார்களில் ஓரளவு இசுலாமியர்கள் உண்டு.
ஒரு ஈகைத் திரு நாளை
ஜலந்தரில் கொண்டாடினோம். ஈகைத் தொகையை (பித்ரா) கொடுப்பதற்கு ஆள் தேடியபோது
ரிக்சாக்காரர்கள் வாங்கிக் கொள்வார்கள் என்று கேள்விப்பட்டு அவர்கள் இருக்கும்
பகுதிக்குச் சென்றோம். ரிக்சாகாரர்கள் நாங்கள் உழைத்துச் சம்பாதிக்கிறோம். இது
போல் தான தருமங்கள் எங்களுக்குத் தேவை இல்லை என்று மறுத்து விட்டார்கள்.!!!
பின் அவர்களிடமே
கேட்டு மிக எளிய மக்களைத் தேடிக் கண்டு பிடித்துக் கொடுத்தோம். .
ரிக்சக்காரர்களைப்பற்றி
ஒரு செய்தி. பாதை எவ்வளவு கரடு முரடாக
இருந்தாலும் வழியில் எல்லாம் இறக்கி விட மாட்டார்கள். முடிந்தால் வீட்டுக்குள்ளேயே
உங்களை இறக்கி விட முயற்சிப்பரர்கள். !!!..
ஜலந்தரில் மிளகாய்ப்பொடி அறைக்கப்போனது ஒரு சுவையான நிகழ்வு. கொண்டு போன
மிளகாய்ப்பொடி தீர்ந்து விட, எப்படியோ தேடிப்பிடித்து தேவையான பொருட்களை வாங்கிச்
சேர்த்துக் காய வைத்தாயிற்று. இனி அதை அரைக்க வேண்டும். ஒரு ரிக்சா பிடித்து சோதி,
குழந்தைகள் நான் என நால்வரும் உட்கார்ந்து
மசாலாப் பொருட்கள் அடங்கிய பாத்திரங்களையும் அதில் ஏற்றிவிட்டோம். மிளகாய்ப்பொடி
அரைக்கும் இடம் பற்றி யாருக்கும் ஒரு தெளிவு இல்லை. கிட்டத்தட்ட் ஜலந்தர் நகர்
முழுதும் சுற்றி வந்து விட்டோம். இறுதியில் ஒரு மளிகைக் கடையின் பின்புறத்தில் ஒரு
சிறிய எந்திரம் மூலம் அரைப்பதைக் கண்டு பிடித்தோம்.. எப்படியோ அவருக்குப் புரிய
வைத்து அரைத்து வாங்குவதற்குள் பெரும் பாடாய்ப் போயிற்று, நைசாக அறையுங்கள் என்று சொன்னால் நைஸ்
முகத்தூளை எடுத்து நீட்டுகிறார், நல்ல வேலை முகத்தூளை மசாலாத்தூளில் கலக்காமல்
விட்டார்.
விடுமுறையில் தமிழ்
நாடு வந்து போகையில் அத்தாவையும் ஜலந்தர் அழைத்துச் சென்றோம். வழக்கம்போல்
அத்தாவுக்கு ஒரு ரசிக ரசிகையர் கூட்டம் உருவாகிவிட்டது.ஆனால் அவர்கள் எல்லாம் கை
ரேகை பார்க்க கூட்டமாக வீட்டுக்கு வருவது எனக்குப் பிடிக்கவில்லை என்பதை
அத்தாவிடம் வெளிப்படுத்தினேன். இதில் அத்தாவுக்கு என் மேல் கோபம். மேலும்
குளிகாலம் வந்து விட்டால் அங்கு மிகவும் கொடுமையாக இருக்கும். நான் ஏற்கனவே பிகார்
குளிரில் பழகி விட்டதால் எனக்குப் பெரிய பாதிப்பில்லை சோதிஎல்லாம் குளிரில்
மிகவும் சிரமப்பட்டது. அதானால் அத்தாவின் முதுமையையும் உடல் நிலையையும் கருதி
குளிர் காலத்திற்கு முன்பு அத்தாவை தமிழ் நாட்டுக்கு அனுப்ப எண்ணினேன். இதையும்
அத்தா தவறாகப் புரிந்து கொண்டு என் மேல் கோபப்பட்டது.
ஜலந்தரில் இருநது
மாற்றல் ஆணை வந்தபோது அங்கு ஒரு பழைய மகிழுந்து பிரீமியர் பத்மினி வாங்கினேன். PJQ 7777 என்ற பதிவெண் உடைய அந்த வண்டியை வாங்க பெரிதும்
உதவி செய்த ஒரு நல்லவர்((பெயர் மறந்து விட்டேன்) பற்றி ஒரு செய்தியோடு இந்தத்
தொடரை நிறைவு செய்கிறேன் .
ஜலந்தரில் இருக்கும்
மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒருவர் அவர். .மகிழுந்தின் சக்கரங்கள் மொத்த
விற்பனையில் ஈடு பட்டிருந்த அவர் வீடு திரைப்படங்களில் காண்பது போல் மிகப்
பெரியதாக ஒவ்வொரு அறைக்கும் தனி மாடம் (Balcony) புல் வெளி(Lawn) -யுடன் இருக்கும்.
ஒருநாள் அவர்
வணிகஇடத்திற்குப் போயிருந்த நான் குடிப்பதற்குத் தண்ணீர் வேண்டும் என்று கேட்டேன்.
நான் சிறிதும் எதிர் பார்க்கவில்லை. அவரே தன் இருக்கையை விட்டு எழுந்து சென்று
குளிர்பதனப்பெட்டியில் இருந்து தண்ணீர் எடுத்து எனக்குக் கொடுத்தார். எனக்கு சற்று
சங்கடமாகி விட்டது. நீங்கள் போவதற்குப் பதில்உங்கள் பணியாட்கள் யாரிடமாவது
சொல்லியிருக்கலாமே என்று கேட்டேன். அதற்கு அவர் கூறிய பதில் “எங்கள் சீக்கிய மத
நெறிப்படி தாகத்துக்குத் தண்ணீரோ பசிக்கு உணவோ கொடுக்காமல் இருப்பதோ, தாமதம்
செய்வதோ மிகப்பெரும் பாவம்”
எல்லா மதங்களும் மனித
நேயத்தின் அடிப்படையில்தானே அமைகின்றன . பின் ஏன் மதங்களின் பெயரால் சண்டைகள்,
சச்சரவுகள் படுகொலைகள் ? தெரியவில்லை புரியவில்லை
(இரண்டாகப்
பிரித்தும் இப்பகுதி நீண்டு விட்டது எனவே (இ)கடைசெருகல் இல்லை)
இறையருளால் ஜலந்தர்
இரண்டாம் பகுதியில் சந்திப்போம்.
பயணம் தொடரும்
வலை நூல் முகவரி
கூகிள் தேடுதலில் (Google search )
Sherfuddinp.blogspot.com
(
.
No comments:
Post a Comment