என்றும் மாறா இளமைத் தோற்றம் இறைவன் காரைக்கால் மக்களுக்குக் கொடுத்த
வரம். எல்லா இடங்களிலும் ,எல்லா ஊர்களிலும் ஒரு சிலர் என்றும் இளமையாக
இருப்பார்கள். காரைக்காலில் நிறையப் பேர் – பெரும்பாலானோர் இப்படி வயது தெரியாமல்
இருப்பார்கள். தோற்றத்தில் முப்பது வயது உண்மை வயது ஐம்பதுக்கு மேல். பள்ளி மாணவர்
போன்ற தோற்றம் – திருமணமாகி ஒன்றிரண்டு பிள்ளை பெற்றிருப்பார்கள். இதில் ஆண் பெண்
பாகுபாடு கிடையாது. இது பற்றி யாராவது
ஆராய்ச்சி செய்து காரணம் கண்டு பிடிக்கலாம்.
காரைக்கால் அம்மையார் தன் இளமை, அழகைத் துறந்து பேய் உருவம் வேண்டிப்
பெற்றதாய்ப் படித்ததுண்டு.
முதியவர்கள் மிக அதிகம் வசிக்கும்
காரையில் முதுமையில் திருமணங்களும்
அதிகம் . அறுபது, எழுபது வயது கடந்த ஆண்களும் பெண்களும் திருமணம் செய்துகொள்வது
காரைக்காலில் மிக இயல்பான ஓன்று.
கடலூரில் மூன்று ஆண்டுப்பணி நிறைவேறியபின் காரைக்காலுக்கு மாறுதல் வந்தது. காரைக்கால்
பாண்டி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த ஊர் என்பதால் பெரும்பாலோர் – எங்கள் வங்கி
உயர் அலுவலர்கள் உட்பட காரைக்கால் பாண்டிக்குஅடுத்த ஊர் என தவறாக எண்ணுவார்கள்.. பாண்டி காரைக்காலிடையே இருநூறு கி மி இடைவெளி .
சிறிய ஊரான காரை ,மாவட்டத் தலை நகர். வாழ மிக வசதியான ஊர். குறிப்பாக
முதியோருக்கு. நடந்து போகும் தூரத்தில் அரசு பால் விற்பனைநிலையங்கள், உணவு
விடுதிகள், பள்ளிவாசல்கள்,, மீன்,கறிக்கடைகள்
ஏ டி எம் கள் வங்கிகள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
வீட்டு வாடகை, விலைவாசி சற்று அதிகம்தான். அதற்குக் காரணம் அந்த சிறிய
ஊரில் இந்தியாவின் வணிகத் தலைநகரமான மும்பை அளவுக்கு பணப்
புழக்கம் இருப்பதாய்ச் சொல்வார்கள்.
சென்னையில் இருக்கும் பெரிய நகைக்கடைகள் அனைத்தும் காரையில் கிளைகள்
திறந்து விட்டன. அனைத்து வங்கிக் கிளைகளையும் ஒரே தெருவில் வரிசையாக ஏழு எட்டு
பணப் பட்டுவாடா எந்திரங்களையும் பார்க்கலாம். இவற்றையெல்லாம் பணப்புழக்கத்துக்கு
ஒரு அளவீடாகக் கொள்ளலாம்.
வெளி நாடு வாழ் இந்தியர்கள் நிறைய உண்டு. வெளி நாடு என்றால் மலேசியா ,சிங்கபூர் , துபாய் , சவூதி
,அமெரிக்கா போன்ற நாடுகள்தான் நம் நினைவுக்கு வரும.. ஆனால் லெபனான் செஷெல்ஸ்
நெதர்லாந்து போன்ற நாம் அதிகம் கேள்விப்படாத
நாடுகளில் பணி புரிவோரை இங்கே பார்க்கலாம்
அதுபோல் பிரஞ்சுக் குடியுரிமை
பெற்றவர்கள் இங்கு அதிகம். (பிரஞ்சு அரசு வழங்கும் தாராளமான ஒய்வு
ஊதியத்துக்காகவே பிரஞ்சுக் குடியுரிமையை புதிப்பித்து வருவார்கள்,)
ஒரு சிறிய ஊரான காரையில் ஆண்கள் பெண்களுக்குத் தனித்தனியாக அரசு கலைக்
கல்லூரிகள், தனியார் பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரி, ,நூறு படுக்கைகள்
கொண்ட அரசு மருத்துவ மனை . தொடர் வண்டி நிலையம், ஊருக்கு நடுவில் தொடர்வண்டி
முன்பதிவு நிலையம்,, மத்தியப் பள்ளி (சென்ட்ரல் ஸ்கூல்) விமான நிலையம், துறைமுகம்
, கடற்கரை, வானொலி நிலையம் என எல்லாம் உண்டு, இருந்தாலும் காரை மக்கள் பாண்டிசேரி
அளவுக்கு இங்கே வசதிகள் இல்லை என்று ஒரு மனக்குறையை வெளிப்படுத்துவார்கள்.
தனிக் காரைக்கால் மாநிலம் வேண்டிப் போராடும் குழுவும் அங்கே உண்டு.
முதியோர்கள் அதிகம் வசிப்பதனால் சில வசதிகள் காரையில் உண்டு. அதுதான்
இல்லச்சேவை., ஒரு பரோட்டா விலை நான்கு அல்லது ஐந்து
ரூபாய். .தொலைபேசி மூலம் நான்கு பரோட்டா வேண்டும் என்று தெரிவித்தால்
வீட்டுக்கு வந்து கொடுத்து விட்டு காசு வாங்கிக்கொள்வார்கள்.. சகர் சாப்பாடு
முப்பது ரூபாய்.காலை மூன்றரை மணிக்கு வீட்டுக்கு வந்து விடும். கறி கூட சொன்னால்
வீட்டுக்கு வந்து விடும்.தெருவில் மீன்கள் விற்கும் . அது போல் குருதி, நீர் எல்லாம் வீட்டில்
வந்து எடுத்து பரிசோதனை செய்து முடிவும் வீட்டில் கொடுத்து விடுவார்கள்.
நகராட்சியின் நிறைவான குடி நீர் விநியோகம் ,மிகக் குறைந்த மின்
கட்டணம் இவை காரையின் மற்ற சிறப்புக்கள். நான் அங்கு இருந்த இரண்டரை ஆண்டுகளில்
மொத்தமே மின் கட்டணம் இரண்டாயிரத்திற்குள் தான் செலுத்தியதாக நினைவு..இதில்
இன்னும் ஒரு வியப்பு.(எரிச்சல்) தமிழ் நாட்டில் இருந்துதான் மின்சாரம் அங்கே
போகிறது..
நகராட்சிக் குடி நீரை மேல் நிலைத் தொட்டியில் ஏற்றி எல்லாப்பயன்
பாட்டுக்கும் வரும் அளவுக்கு தாராளமான தண்ணீர் விநியோகம்.
தெருக்கள் எல்லாம் நேராக இருப்பது புதிதாக வருபவர்களுக்கு வழி கண்டு
பிடிப்பதில் ஒரு குழப்பத்தை உண்டாக்கும்.
நிறைய பெரிய பெரிய பள்ளிவாசால்கள், பெரிய சிறிய தர்காக்கள்
மிகப்பழமையான சர்ச் காரைக்கால் அம்மையார்
ஆலயம், அருகில் திருநள்ளார் என்ற ஊரில் சனீஸ்வரன்
கோயில், சற்றுத்தொலைவில் நாகூர் தர்கா , இன்னும் சற்றுத்தள்ளி வேளாங்கண்ணி ஆலயம் என்று
பக்தி மழை பொழியும் பகுதி.
மாமா தம்பி மரைக்காயர் தெரு, தம்பி
மரைக்காயர் தெரு புளியங்கொட்டைத் தெரு,
என்று சற்று மாறுபட்ட தெருப்பெயர்கள் அதிகம்.. நூல்கடைத் தெரு,, வளையல் காரத்தெரு
,சுண்ணாம்புக்காரத்தெரு என்று ஊரின் வணிக வரலாற்றைச் சொல்லும் பெயர்களும் உண்டு .
நூல்கடைத் தெருவில் தம்பி
சகாவின் சம்பந்தி ஜனாப் உஸ்மான் வீடு இருக்கிறது. அவரது வீட்டில் உள்ள திறந்த வெளி
மாடி நல்ல மரநிழலோடு ஒரு இருக்கையும் இருப்பது அழகிய பூங்கா போல் இருக்கும்.
அரசு விவசாயத் துறையில் உயர் அதிகாரியாகப பணியாற்றிய உஸ்மான்
அவர்களின் தந்தை ஜனாப் காசிம் விடுதலைப்
போராட்டத்தில் ஈடு பட்டவர்.
காரையில் நாங்கள் இருந்த வீடு வெளியே பார்க்க எளிமையாக இருக்கும்.
உள்ளே பெரிய கூடம்,விசாலமான் படுக்கை அறைகள், சமயலறை, மூன்று குளியல் அறைகள் என்று
வசதியாக இருக்கும்.,
சகோதரிகள் மும்தாஜ் ,மெஹராஜ், ஜோதி ,சுராஜ் ரஹ்மத்தலி அண்ணன் இதயதுல்லா
, கிஷோர் குடும்பம் நாகூர் தர்காவுக்குப் போக காரை வந்து சில தினங்கள் தங்கிச்
சென்றார்கள் . அப்போது நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி தரங்கம்பாடி
போய்ப்பார்த்து வந்தோம். எடுத்துக்கட்டி சாத்தனூர் என்ற என்ற ஊரில் ஒரு உறவினர்
வீட்டுக்கும் போய் வந்தோம்.
நாகூருக்கும் வேளாங்கண்ணிக்கும் இடையே சுத்தம் சுகாதாரத்தில்
வெளிப்பட்ட இடைவெளி கண்ணையும் கருத்தையும் உறுத்தியது
தரங்கம்பாடியில் டானிஷ் கோட்டை ஓன்று இருக்கிறது..ஏற்கனவே
சிதிலமதைந்திருந்த அது சுனாமியில் மிகவும் பாதிக்கப்பட்டது. இருந்தாலும்
கோட்டைக்குறிய ஒரு கம்பீரம் குறையவில்லை.
தரங்கம்பாடி கடற்கரை ஒரு தனிமை உணர்வையும் இனம் புரியாத ஒரு அச்சத்தையும்
உண்டாக்கும்..அதோடு சிதிலமடைந்த கோட்டையையும் பார்க்க ஒரு கலக்க உணர்வு உண்டாகும்.
ஆனால் அமைதியாக இருந்தால் அலைகள் பாடும் இசை நம் காதில் தேனாகப்
பாயும். அதில் மனம் ஒன்றி அச்சம்,கலக்கம் எல்லாம் அகன்று விடும்.
காரையிலிருந்து பணி நிமித்தமாக எப்படியும் மாதம் ஒரு முறை பாண்டிக்கு
போக வேண்டியிருக்கும். கடலூரில் பைசல் வீட்டில் தங்கி அங்கிருந்து பாண்டி போய்
வருவேன். பைசல் பானு பர்வேஸ் அவ்வப்போது வந்து போவார்கள்..அதனால் பேத்தி ஆத்திக்காவைப்போல் பேரன் பர்வேசின் வளர்ச்சியை
படிப்படியாக பார்த்து ரசித்து அனுபவிக்க முடிந்தது.
ஷேக் ,பாப்டி , ஆத்திக்கா
ரிபாத் பள்ளி விடுமுறையில் வந்து
போவார்கள்.
தமிழ் நாட்டு பந்தா அரசியலைப் பார்த்தவர்களுக்கு பாண்டி, காரை அரசியல்
சற்று வியப்பாக இருக்கும். சட்ட மன்ற உறுப்பினர்கள் , அமைச்சர்கள் , எதிர் கட்சித்
தலைவர் , ஏன் முதல் அமைச்சரைக்கூட எளிதில் சந்திக்கலாம். திருமணம் போன்ற பொது
மக்கள் குடும்ப நிகழ்ச்சிகளில் அந்தப் பகுதி அமைச்சரோ சட்ட மன்ற உறுப்பினரோ கலந்து
கொள்வதை ஒரு மரபாகப் பின் பற்றுகின்றனர்.
பக்ரீத் பண்டிகைக்கு காரைக்கால் பகுதியில் வங்கி விடுமுறை இல்லாமல்
இருந்தது. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜனாப் நாஜிம் அவர்களை சந்தித்து
இது பற்றி எடுத்துரைத்தேன். அவர் உடனே மத்திய அரசைத் தொடர்பு கொண்டு விடுமுறை
அறிவிக்க ஏற்பாடு செய்தார். அவருக்கு என் நன்றியைத்
தெரிவித்துக்கொள்கிறேன்.(பாண்டி துணை நிலை ஆளுநருக்கு வங்கிக்கு விடுமுறை
அறிவிக்கும் அதிகாரம் கிடையாது)
(சின்ன ஊரில் இதுவெல்லாம் மிக எளிது என்று சாகுல் கருத்துத் தெரிவிப்பார்,.
சிறிய மாநிலம் மக்களுக்கு வசதி என்றால் அப்படி சிறிய பகுதிகளாகப்பிரித்து அதிகாரத்தைப்
பரவலாக்கலாமே!.)
பாண்டியில் ஒரு நட்சத்திரத தகுதி விடுதி (ஸ்டார் ஹோட்டல்) கட்ட காரை
வங்கியில் கடன் கொடுததிரூந்தோம்.அதன் உரிமையாளர் ஜனாப் நஜீம் மிகப் பெரிய
செல்வந்தர். பிரான்சு நாட்டில் பாரிஸ் நகரில் மிகப் பெரிய வணிக வளாகம் அவருக்கு
இருக்கிறது. அவருடைய மிக எளிமையான பழக்க வழக்கங்கள் பார்க்க எனக்கு வியப்பாக
இருக்கும்.
காரையில் இருந்து பாண்டிக்கு அவர் விடுதியைப் பார்வையிடப் போய்
வருவோம்..அவரே மகிழுந்தை ஓட்டி வருவார் . தன் கதை முழுதும் ஒளிவு மறைவின்றி
சொல்வார் .. ஆரம்ப காலத்தில் மிகவும் சிரமப்பட்டது ,உழைப்பால் உயர்ந்தது
,குடும்பம் பற்றிய செய்திகள் எல்லாம் சுவைபடச் சொல்வார்,.முதல் சந்திப்பிலேயே என்
நேர்மையைப் புரிந்து கொண்ட அவர் பெரிதும் உயர்வாக மதித்து நடத்தினார்.. நான் ஒய்வு
பெற்ற பிறகு நடந்த விடுதித் திறப்பு விழாவுக்கு மறக்காமல் அழைப்பு விடுத்தார்.
காரையில் கிடைத்த இன்னொரு இனிய தொடர்பு . – எம் ஓ ஹச் பாரூக்
குடும்பத்தைச்சேர்ந்த ஜனாப் பசிருதீன். வாழ்க்கை வாழ்வது எப்படி, அதை அனுபவிப்பது
எப்படி என்று இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும் .மக்களிடத்தில செல்வாக்கு மிக்கவர்
எதைப்பற்றியும் பெரிதாக கவலை கொள்ளாமல் மகிழ்ச்சியாக இருப்பது அவரின் சிறப்பு. ..
அக்குபஞ்சர் கற்றுக்கொண்டது காரையில்தான், ஜனாப் காதர் என்ற ஒரு நல்ல
மனிதர் ஆசிரியராகப் பணியாற்றி இளைப்பாறியவர் . அக்குபஞ்ச,ர் ஓமியோபதி, மூலிகை
மருத்துவம் சித்த மருத்துவம் என்று பல துறையிலும் வல்லுநர். தொலைபேசியில் தொடர்பு
கொண்டால் எந்த நோய்க்கும் உடனே ஒரு தீர்வு சொல்லும் நினைவாற்றல் உடையவர்.,அவர்
நடத்திய அக்குபஞ்சர் வகுப்பில் சேர்ந்தேன். அவரைப்போலவே வகுப்பு நடத்திய அனைவுருமே
நல்ல திறமையானவர்கள், திரு மோகன் ராஜ் அதில் குறிப்பிடத்தக்கவர்.
காரையில் கிடைத்த இன்னும் சில நட்புகள் : காதர் அவர்களின் மகன் குலாம்
அலி- பைசல் வயது இருக்கும். மகிழுந்து
வாடகைச் சேவை (cab service ) நடத்துகிறார் பொறையாரில் உள்ள
கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியாற்றுகிறார், இன்னொருவர் காரைக்காலில்
காசியாகப் பணியாற்றியவர். (பெயர் நினைவிலில்லை )
ஐ. நா சபையில் பணியாற்றி ஒய்வு பெற்ற அவருக்கு மாதந்தோறும் வங்கி மூலம்
அனுப்பப்படும் ஓய்வூதியம் தாமதமாக வருவது குறித்து சண்டை போடும் நோக்கில் வந்த
அவர் காலப்போக்கில் மிக நெருங்கிய நண்பராகி விட்டார்.. காரையிலிருந்து நான்
மாற்றப் பட்டதற்கு மிக மிக வருத்தப் பட்டார்.. இன்னொருவர் அவர் மருமகன் கப்பப்பா.
கப்பபா என்பது கப்பல் உரிமையாளர்கள் என்பதைக் குறிக்கும் பட்டப்பெயர்
விடுமுறையில் பாப்டி குடும்பம் காரை வந்திருந்தார்கள் .அப்போது
பேத்திக்கு கடுமையான தலைவலி.. பல மருத்துவர்களிடம் போயும் குணமாகவில்லை . அப்போது நான் அக்குபஞ்சர்
பயிற்சியில் இருந்தேன். திரு மோகன் ராஜ் அவர்களிடம் தலைவலி பற்றி சொன்னவுடன் வந்து
பார்த்தார். இந்தப் புள்ளிகளை அழுத்துங்கள் என்று என்னிடம் சொல்லிவிட்டு சில உணவு
முறைகளையும் சொல்லி விட்டுப் போய்விட்டார். அவர் சொல்லிய புள்ளிகளில் அழுத்தம்
கொடுத்த சிறிது நேரத்தில் வயிறு கல கலவென்று ஆக தலைவலி போயே போச்.
அதுமுதல் அக்குபஞ்சர் பயிற்சியில் என் ஆர்வம் மிகவும் அதிகமானது,
கடலூரைப்போல் சுனாமியால் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் காரைப்
பகுதியும் ஒன்று . மீனவர்கள் ஓரளவு வசதியுடன் வாழ்ந்தனர்... அவர்களிடம் சொன்னால் ,
உள்ள விலையை வாங்கிக்கொண்டு புதிய மீன் கொண்டு வந்து கொடுப்பார்கள்.
லாப்ஸ்டர் என்ற கடல் உயிரினம் ஒன்று ஒரு மீனவர் கொண்டு வந்தார். ஒரு
குடுவையில் தண்ணீரில் போட்டு உயிரோடு நீந்திக் கொண்டிருந்தது. பைசலின் பலத்த
எதிர்ப்பால் அதை வாங்க முடியாமல் போய்விட்டது.
கனவாய் என்ற மீன் அப்பகுதியின் சிறப்பு அம்சம். ஆனால் எனக்கு அதைப்
பார்க்கவே பிடிக்காது. கோலா என்ற மீன்
கோடைப் பருவத்தில் மாலையில் உயிருடன் கிடைக்கும. சொல்லப்படும் அளவுக்கு சிறப்பான
சுவை ஒன்றும் தெரியவில்லை.
காரைக்கென்று சில வேறுபட்ட பழக்கங்கள் உண்டு. காலை ஏழு மணிக்கு முன்
தேநீர் கடைகள் திறக்காது. காலை பதினோரு
மணிக்குமேல் காபி, தேநீர் கிடைக்காது. மாலை மூன்று மணி முதல் நாலரை மணி
பெரும்பாலான வணிக நிறுவனங்கள் –பெரியது சிறியது எல்லாம் மூடப்பட்டிருக்கும் இது
பிரஞ்சுக் கலாச்சாரம் என்று சொல்லப்படுவது உண்மையா என்று தெரியவில்லை.
பரோட்டாவில் முட்டை கறி எல்லாம் சேர்த்துச் செய்யும் முர்தபா என்பது
அந்தப் பகுதியின் சிறப்பு உணவு. அது போல் நானாகத்தான் , ஜாலர், இஞ்சிக்கொத்து போன்றவை
டெல்டா பகுதியின் சிறப்பு உணவுகள்.
மஸ்தான் பள்ளியில் மாதந்தோறும் பிறை பார்த்தவுடன் சங்கொலி (சைரன்)
எழுப்புவார்கள். அந்தப்பள்ளியில் புனித இருபத்தி ஏழாம் இரவுக்கு மிகச் சுவையான
உணவு வழங்குவார்கள் . அங்குதான் சகன் சாப்பாடு (ஒரே தட்டில் பலர் சாப்பிடுவது)
சாப்பிடக் கற்றுக்கொண்டேன். முதலில் சற்றுத் தயக்கமாக இருக்கும். ஆனால்
இசுலாத்திற்கே உரிய சுத்தத்துடன் மற்றவர்கள் சாப்பிடுவதைப் பார்த்து அந்தத்
தயக்கம் மாறி விடும்.
ஆறு நோன்புக்கும் கஞ்சி காய்ச்சும் வழக்கம் அங்கு உண்டு.
மஸ்தான் பள்ளியை அடுத்து வெளி நாட்டுப் பொருட்கள் விற்கும் பெரிய வணிக
வளாகம் இருக்கிறது, காரைக்காலில் வெளி நாட்டுப் பொருட்களை நம்பி வாங்கலாம் என்று
ஒரு பெயர் முன்பு இருந்தது.
காரைக்கால் தமிழுக்கும் நெல்லை தமிழுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு.
நெல்லையில் புழங்கும் வாரியல் (விளக்குமாறு) மேடை (மாடி) போன்ற சொற்கள் இங்கும்
பேச்சில் பயன்படுகின்றன
ஜனாப் சாயபு மரைக்கான் –அரசு கலைக் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர்
.இரண்டு வரி நீளத்துக்கு பட்டங்கள் வாங்கிய புலவர், எழுத்தாளர், பேச்சாளர்./புனித
ஹஜ் பயணம் முடித்து தன பெயருக்கு முன்னால் ஹாஜி என்ற பட்டத்தையும் சேர்த்தவர்
அவர் ஹஜ் செய்த அடுத்த ஆண்டு குர்பானி பற்றி ஒரு பேச்சு வந்தபோது
குர்பானி கொடுக்க மனம் ஒப்பாததால் கொடுக்கவில்லை என்றார் .
அவரது துணைவி கவி மணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்களின் பேத்தி .அவரும்
தமிழ்ப் பேராசிரியர், புலவர், பேச்சாளர் ,
இவர்கள் இல்லத்தில் ஆயிரக்கணக்கான நூல்கள் கொண்ட ஒரு வாசிப்பு அறை
உள்ளது
நாங்கள் காரை வந்த ஓரிரு தினங்களில் மைத்துனர் சிராஜுதீன் சம்சுதீன்
பீர் குடும்பம் குப்பி எல்லோரும் நாகூர். வந்தவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்து
சென்றார்கள்.
இன்னும் சில செய்திகளை சுருக்கமாகச் சொல்லி இந்தப் பகுதியை நிறைவு
செய்கிறேன்;
காரைக்கால் தண்ணீர் இரும்புச் சத்து நிறைந்தது ,அதைக் குடித்தால் பல
உடல் நலக் குறைவுகள் ஏற்படும். எனவே விலைக்கு விற்கும் சுத்தகரிக்கப்பட்ட நீரையே
குடியுங்கள் என்று பலரும் அறிவுறுத்தினார்கள்,, பயமுறுத்தினார்கள். நாங்கள்
வழக்கம்போல் நகராட்சிக் குடிநீரை அப்படியேதான் பயன்படுத்தினோம். இறையருளால்
ஒன்றும் ஆகவில்லை/
காரையில் இசுலாமியத் திருமணங்களுக்கு வரும் உறவினர்களுக்கு திருமண வீட்டார் உள்ளூர் பயணச் செலவை
ஏற்றுக்கொள்ளவேண்டும்
இறுதியாக காரையில்
கேள்விப்பட்ட ஒரு உண்மைக் கதை.
சென்னையில் மிகப் பெரிய மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தன் நண்பரைப்
பார்க்க காரையிலிருந்து போனவரின் செல்லப்பெயர் மாப்பிளை –வயது நாற்பது . நண்பரைப்பார்த்து விட்டு வந்தவர் மருத்துவ மனை
அறிவிப்புப் பலகையில் முழு உடல் பரிசோதனைக்கான கட்டணத்தைப் பார்த்திருக்கிறார்.
இவ்வளவு பெரிய மருத்துவமனையில் இவ்வளவு குறைந்த கட்டணமா என்று வியந்த அவர் அதற்கான
தொகையை செலுத்திவிட்டு உடல் பரிசோதனைக்குச் சென்றார்.
பரிசோதனையின் முடிவில் அவருக்கு இனம் புரியாத ஒரு உடல் நலக்குறைவு
இருக்கிறது, அது பற்றி மேலும் பரிசோதிக்க
இரவு பனிரெண்டு மணிக்கு( ?? !!) வரவேண்டும் என்று சொன்னார்கள். அவரும் ஒரு அச்ச உணர்வோடு நடு இரவில் போனார்.
அவருக்கு ஒரு சிறுநீரகம் மிகப் பெரியதாக இருப்பதாகவும் அதை உடனே சரி செய்யவேண்டும்
என்று சொன்னார்கள். அதையும் அங்கேயே சரி செய்து கொண்டு ஊர் திரும்பினார்
மாப்பிள்ளை. சில தினங்களில் அவருக்கு வயிறு பெரிதாக வீங்கி விட்டது. மீண்டும்
சென்னை அதே மருத்துவ மனை. வயிறில் ஓட்டை போட்டு நீரை வெளியேற்ற வயிறு ஓரளவு சுருங்கி
விட்டது. இது போல் தொடர்ந்து மூன்று முறை காரைக்கும் சென்னைக்கும் அலைந்து நீர்
எடுக்கப்பட்டது. நான்காவது முறை போனபோது இனி வயிற்றில் ஒட்டை போட்டால் உடம்பு
தாங்காது என்று கை விரித்து விட்டார்கள்.
காரை திரும்பிய அவரைப பற்றி
ஒரு நாட்டு மருததுவரிடம்(Quack) கேட்க , அவர் ஒரு மருந்தைக்கொடுத்து வயிறு முழுதும் தடவச்
சொன்னார்..தடவிய சிறிது நேரத்தில் மிக அதிகமான காய்ச்சல் உண்டாகும் வேர்த்து நீர்
வெளியாகும். காய்ச்சலுக்காக எந்த மருந்து, மாத்திரையும் கொடுக்ககூடது என்று
எச்சரித்திருக்கிறார். அவர் சொன்னதுபோல் காய்ச்சலும் வந்தது, நீரும் வடியத்
தொடங்கியது..
காய்ச்சலில் அவர் படும் வேதனையைக் கண்டு அவர் வாயில் யாரோ மாத்திரை
போட – மாப்பிள்ளை உயிர் உடனே பிரிந்தது
சென்ற பகுதி பற்றி கருத்துக்களும் பாராட்டுகளும் தெரிவித்த அஜ்மல்
,நூர்கான் , பாப்டி ,சகோதரிகள் மெகராஜ் ஜோதி இதயத்துக்கு
நன்றி.
அத்தா ஐடியா என்பது ஒரு தொழில்நுட்பத்தவறு. இங்கு அத்தா என்பது பைசல் என்னைக் குறிப்பிட்டுவது . .
இ(க)டைச் செருகல் :
டுப்லெக்ஸ் (Duplex ) என்பது எல்லோரும் அறிந்த ஒரு சொல் (டுப்லெக்ஸ் வீடுகள்,
அடுக்ககங்கள்). இரண்டு தளங்களில் உள்ள வீடு , அடுக்ககதைக் குறிக்கும்)
அதே உச்சரிப்பில் இன்னொரு சொல் –பெயர் இருக்கிறது. பிரன்ச் ஆளுநராக
பாண்டியில் ஆண்டவர் பெயர் டுப்லெக்ஸ்
ஆங்கிலத்தில் Dupliex என்று வரும் .வரலாற்றுப்பாடத்தில் டுப்ளே என்று வரும்.(தமிழ் வழி படித்தவகளுக்குத்
தெரியும்)
இறைவன்
அருளால்
பயணம்
தொடரும்
வலை நூலில் படிக்க
கூகுள் தேடுதலில் (Google search)
Sherfuddinp.blogspot.com
விரிவான பதிவு. பல விஷயங்களை உன்னிப்பாக கவனித்து எழுதி இருக்கிறீர்கள். கணவாய் மீன் பார்ப்பதற்கே என்னவோ போல் இருக்கும். அதனால் அதை வாங்குவதில்லை.
ReplyDelete