பொள்ளாச்சி, திருநெல்வேலி திரூர், திருச்சி துறையூர் என்று வரிசையாகத்
தொடர்ந்து எழுதுவது எனக்கே மூச்சு முட்டுவது போல் இருக்கிறது .அதுவும்
திருநெல்வேலி பற்றி மூன்று பகுதி எழுதியது உடல் மனமெல்லாம் புரட்டிப்போட்டது போல்
ஒரு அலுப்பு களைப்பு உணர்ச்சிக்கலவைகள். .விரைவில் இந்தத்தொடரை நிறைவு செய்ய எண்ணியும்
திருநெல்வேலியை தொடர்ச்சியாக எழுத எண்ணியும் இடைவேளை இல்லாமல் பயணித்து விட்டேன்
திருச்சியில் இரண்டாண்டுப் பணிக்குப்பின் துறையூருக்கு மாறுதல்
.திருச்சிக்கும் துறையூருக்கும் நாற்பது கிலோமீட்டர் தூரம். நிறையப் பேருந்துகளும்
இருக்கின்றன. .துறையூரில் பணி புரியும் பலர் திருச்சியிலிருந்து தினமும் வந்து
போய்க்கொண்டிருந்தனர்.
எனக்கு அதெல்லாம் ஒத்து வராது. எனவே திருச்சியிலிருந்து சில நாட்கள்
துறையூர் போய் வந்து வீடு பார்க்கத துவங்கினேன்.
இலங்கைத்தமிழர் பிரச்சனை மிகப்பெரிய அளவில் வெடித்து வன்முறைக்குப்
பயந்து பலர் அகதிகளாக தமிழகம் வந்த காலம் அது. .அதனால் வீடு கிடைப்பது சற்றுச்
சிரமாமாக இருந்தது . இலங்கைக்கும் துறையூருக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு.
. கிட்டத்தட்ட ரயில் பெட்டி போல் ஒரு வீடு கிடைத்தது. அதுவும்
உரிமையாளரின் மிகப் பெரிய வீட்டுக்குப்பின்னால். வேறு வழியில்லை பள்ளிகள்
திறக்கும் நாள் நெருங்கி விட்டது எனவே அந்த வீட்டைப் பிடித்தேன். அதில்
இருந்துகொண்டே வேறு வீடு பார்க்கும்
முயற்சியில் இறங்கினேன்.
வங்கிக்கிளை ஒரு பெரிய மிகப்ழமையான வீட்டில் இருந்தது .கிட்டத்தட்ட ஐம்பது பேர்
பணிபுரியும் பெரிய கிளை...மின் தடை ஏற்பட்டால் இருட்டு குகை போல் ஆகி விடும்.
வங்கியில் மின்னாக்கி (ஜெனேரட்டர்) வைக்க ஒரு நீண்ட கடிதப்போராட்டம்
நடத்தி வங்கி வட்ட அலுவலகம் ஒரு வழியாய் மின்னாக்கிக்கு அனுமதி வழங்கிய நேரத்தில்
வங்கி கட்டிட உரிமையாளர் அவருக்கு வாடகை ஏற்றித்தரவில்லை என்ற கடுப்பில்
மின்னாக்கி வைக்கத் தடை விதித்து விட்டார்.
நான் துறையூரில் பணியில் சேரும்போது அங்கிருந்த மேலாளர் பீகாருக்கு
மாற்றல் ஆகி மிகுந்த சோகத்தில் இருந்தார் . அவருக்குப்பின் வந்த சீ ஆர் வீ எனக்கு
மிகவும் தெரிந்த பழைய நண்பர் . கிளை வீடு போல் இருந்தது . அதனாலோ என்னவோ கிளை
ஊழியர்கள் அனைவரும் ஒரு குடும்பம் போலவே `பழகுவார்கள். .உதவி மேலாளர் திரு ராவ்,
அவருக்குப்பின் வந்த திரு காகூ , அதிகாரிகள் முத்துராமன், கிருட்டிணமூர்த்தி,
செந்தில், ரமேசு அனந்தராமன்,இது போக மூன்று சிறப்பு உதவியாளர்கள், நிறைய
எழுத்தர்கள் மூன்று கடை நிலை ஊழியர்கள், மூன்று தற்காலிகப் பணியாளர்கள் , ஒரு
சுத்திகரிப்புத் தொழிலாளி என்று பெரிய அளவில் ஊழியர்கள் அது போக தினசரி
சேமிப்புக்கணக்கு முகவர்கள் மூன்று பேர் , நகை மதிப்பீட்டாளர் ஒருவர் . அந்த
அளவுக்கு வேலையும் கூட்டமும் இருக்கும்.
திருச்சி போல் பெரிதாக இல்லாவிட்டாலும் துறையூர் நல்ல வசதியான ஊர்.
.பல சிற்றூர்களுக்கு மையப் பகுதியாக இருந்தது. நல்ல விவசாயப்பகுதி. நிறைய பேருந்து
உரிமையாளர்கள் என செல்வச் செழிப்பான பகுதி.
அருகில் பெருமாள் மலையில் ஒரு பெரிய கோயில். பச்சைமலை என்பது மிக அடர்த்தியான காடுகளை உள்ளடக்கிய ஒரு செழிப்பான
மலை. அதுவும் துறையூருக்கு மிக அருகில்
.கொல்லி மலை அடிவாராம் புளியஞ்சோலை என்றழைக்கப்படும் . கொல்லி
மலையில் பல அரிய மூலிகைகள் கிடைப்பதாகவும் சித்தர்கள்
அங்கு வசிப்பதாகவும் சொல்வார்கள். மலைவாசிகள் தூய்மையான மலைத்தேன் விற்க ஊருக்குள்
வருவார்கள்.
வங்கி ஊழியர்களுடன் புளியஞ்சோலை சிற்றுலா போய்வந்தேன். சலசலக்கும்
நீரோடைகள், சிறிய அருவிகள் காணுமிடமெல்லாம் தெரியும் பச்சை நிறமென மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி ஊட்டும்
இயற்கை எழில்.
வங்கியின் பெரிய
வாடிக்கையாளர் ஒருவர் தன் வீட்டு மாடியை வாடகைக்குத் தருவதாய்ச் சொன்னார். மிக
வசதியான வீடு என்று சொல்ல முடியாது . பார்க்க அழகாய் இருந்தது. மேலும் ரயில்
பெட்டி வீட்டை விட பலவிதத்திலும் மேல். அங்கே குடி வந்தோம். வீட்டுக்கு எதிரே
தெப்பக்குளம்., மிக அருகில் பள்ளிவாசல் ,மிக அழகான மாடம் (பால்கனி ) விசாலமான
திறந்த வெளி மாடி
இந்த வீட்டில் இருக்கும்போதுதான் பைசலுக்கு சுன்னத் , பாப்டிக்கு காது
குத்து விழா நடத்தினோம்,.
சுன்னத்துக்கு முன்னால் பரிசோதனை செய்ய பைசலுடன் அத்தா, மாமா
,சக்கரவர்த்தி எல்லோரும் திருச்சி பீம
நகரில் உள்ள ஒரு மருத்துவரிடம் சென்றோம்.. மருத்துவர் இப்போதே செய்து விடலாம்
என்று சொன்னார். இது சற்றும் எதிர்பாராத ஒரு திருப்பம். இறைவனருளால் நல்ல விதமாக
செய்து, முடித்தார் .உடனே நடக்கவும் சொன்னார் பேருந்திலே போகலாம் எந்த தயக்கமும் வேண்டாம்
என்று சொல்லி அனுப்பினார். இறைவனுக்கு நன்றி .
விழாவுக்கு அழைத்தவர்கள் எல்லோரும் (ஒரு சிலரைத்தவிர ) வந்து
சிறப்பித்தார்கள்.. மெகராஜ் அக்கா தனியாக (கடைப்பையனுடன்) வந்தது
குறிப்பிடத்தக்கது
உன் வீட்டு முதல் விழாவிலே உணவு தாராளமாக இருப்பது உன் வாழ்க்கை
சிறப்பாக அமைவதற்கான அறிகுறி என்று கரீம் அண்ணன் வாயார,மனதார வாழ்த்தியது
இந்த நிகழ்வுக்கு வந்திருக்கையில்தான் சச்சா நுங்கு சாப்பிட்டும்
அழகைக் கண்டு வியந்தேன்.. ஒரு துளி கூடத் தோல் இல்லாமல் வெள்ளை வெளேரென்று உரித்துச் சாப்பிடும்.
எஸ் பி ஐ சலாம் ரசியா வின் ஆண்குழந்தை நான்கைந்து வயது இருக்கும்.
காணாமல் போய் விட்டது ஒரு சலசலப்பையும் பரபரப்பையும் உண்டாகியது . .
தேடிக்கண்டுபிடித்து விட்டார்கள்/
ஷஹா அமீதா திருமண நாள் அங்கே கொண்டாடப்பட்டது
சகோதரிகள் மும்தாஜ், சுராஜ் சில தினங்கள் தங்கி சிறப்பூட்டினர்கள்
துறையூரில்தான் வண்ணத் தொலைகாட்சிப்பெட்டி வாங்கினோம்..சாலிடேர் என்ற
பெயர் மட்டும்தான் . முழுக்க முழுக்க ஜெர்மனி தயாரிப்பு. .இலங்கைத் தொலைக்காட்சி
ரூபவாகினி மிகத்தெளிவாகத் தெரியும் அந்த ஊரில் ஜமீந்தார் வீட்டுக்கு அடுத்து
வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டி வாங்கியது நாங்கள்தான். வங்கி ஊழியர்களும், அக்கம்
பக்கம் உள்ளவர்களும் வந்து பார்த்துப் போனார்கள்..
வாரம் ஒருநாள் ஒளிபரப்பாகும் ஒளியும் ஒலியும், எப்போதாவது தேசிய
ஒளிபரப்பில் வரும் தமிழ் திரைப்படம் எல்லாவற்றையும் மிக ஆர்வமாகப்பார்ப்போம் . ரூபவாஹினியில்
பெண் அறிவிப்பாளர் துள்ளிக்குதித்தபடி ஆங்கிலத்தில் செய்தி வாசிப்பது பார்க்க
உற்சாகமாக இருக்கும்
இந்திராகாந்தியின் இறுதி ஊர்வலக்காட்சியைப் பார்க்க ஊரே எங்கள்
வீட்டில் கூடியது
பல ஊர்களுக்கு எங்களுடன் பயணித்த அந்தத் தொ.கா பெட்டி இருபது ஆண்டுகளுக்கு
மேல் நன்றாக உழைத்த்து. சென்னையில் பணியாற்றும்போதுதான் வேறு புதிதாய் வாங்கினோம்.
வெளிநாட்டுப் பொருட்கள் துறையூரில் நிறையக் கிடைக்கும். வங்கி ஊழியர்
தயாளன் என்பவர் ஒரு ஒன்றில் இரண்டும் (டூ இன் ஒன்) ஒரு பெரிய செயற்கை
கம்பளிப்போர்வையும் வாங்கிக்கொடுத்தார் போர்வை சிவானிலும் ஜலந்தரிலும் குளிருக்கு
மிகநன்றாகப் பயன்பட்டது .
.ஒன்றில் இரண்டும் மிக நீண்ட நாள் உழைத்தது. ஜலந்தரில் அதைப்
பார்பவர்கள் எல்லாம் இது போல் ஓன்று வாங்கிக்கொடுங்கள் என்று கேட்பார்கள்
அத்தா ஹஜ் புனிதப்பயணம் மேற்கொண்டது துறையூரில் நான்
இருக்கும்போதுதான். வழியனுப்ப சென்னை வந்த நான் திடீரென முடிவு செய்து அத்தா கரீம் அண்ணன் ஷஹாவுடன் பம்பாய்க்குப்
பயணித்தேன்.. பம்பாயில் ஹஜ் கமிட்டி விடுதியில் தங்கினோம் .விடுதி அமைந்திருந்த
அப்துல் ரகுமான் தெரு முழுக்க முழுக்க இசுலாமியர்கள் வாழும் பகுதி .
தஞ்சாவூரிலிருந்து அண்ணன் தம்பி இருவர் ஹஜ் பயணமாக வந்திருந்தார்கள். செல்வந்தர்களான
அவர்கள் ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்குப் பார்த்து செலவழிப்பது பார்க்க சற்று வேடிக்கையாக
இருக்கும்.
பம்பாயை சுற்றிப்பார்க்க அத்தா எல்லோரும் கிளம்பினோம். அடுத்த சில நாட்களில்
ஹஜ் பயணம் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் அத்தாவுக்கு தொடர்ந்து எங்களோடு
வரமுடியவில்லை . ஒரு பள்ளிவாசலில் அத்தாவை உட்கார வைத்து விட்டு கரீம் அண்ணன் ஷஹா
நான் மூவரும் சுற்றிப்பார்த்தோம்.
துணிச் சந்தையில் துணிமணிகள் வாங்கினோம். விளையாட்டுச் சாமான்கள் ,
காலணிகள் வாங்கினோம்..
ஹஜ் பயண நாளும் வந்து விட்டது. விமான நிலையத்துக்கு எல்லோரும் போனோம்.
.இரவு விமானம் . ஒரு எல்லைக்கு மேல் ஹாஜிகளைத் தவிர யாரும் போகக்கூடாது என்று
அதிகாரிகள் தடுத்துக்கொண்டு இருந்தார்கள் .அதைச் சட்டை செய்யாமல் கரீம் அண்ணன்
உள்ளே போய்விட்டது . .
இந்தியப்பணம் யாரும் வைத்திருந்தால் அது பறிமுதல் செய்யப்படும் என்ற
அறிவிப்பு வந்ததும் தஞ்சாவூர் சகோதரர்கள முகத்தில் ஒரு மிரட்சி, திகைப்பு. நிறைய
இந்தியப்பணம் அவர்களிடம் இருந்தது..அவர்களோடு உறவினர்கள் யாரும் வரவில்லை
(சிக்கனம் ) . வேறு வழியில்லாமல் அரை, கால், அரைக்கால் மனதோடு பணத்தைக் கரீம்
அண்ணனிடம் ஒப்படைத்தார்கள் .ஹஜ்பயணத்தின் ஒவ்வொரு நொடியிலும் அந்த இருவரும் கரீம்
அண்ணனை நினைத்து துவாக்கேட்டிருப்பர்கள் (இது பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன் )
துறையூரில் மிகச் செல்வாக்காக இருந்த ஜமீந்தார் குடும்பம் இன்று அந்த
அளவுக்கு செல்வச் செழிப்பு இல்லாவிட்டாலும் பழைய மரியாதை குறையமல் மக்கள்
நடத்துகிரார்கள்.. அங்குள்ள உயர் நிலைப்பள்ளி ஜமீந்தார் பள்ளி என்றே
சொல்லப்படுகிறது
துறையூரில் நெல் அரைக்கும் இடங்களில் சொன்னால் அவர்களே வீட்டில் வந்து
நெல்லைஎடுத்துக்கொண்டு போய் அவித்து, அரைத்து சலித்து தவிட்டை அவர்கள்
எடுத்துகொண்டு நமக்கு அரிசியும் கொஞ்சம் பணமும் கொடுப்பார்கள்
ஒரே ஒரு முறை நெல் வாங்கினோம்.. அது சற்றுப் பழைய நெல் என்பதால் சோறு
நிறைய வரும். ஒரு ஆண்டுக்கு என்று வாங்கிய நெல் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நீடித்து
நெல் வாங்கும் எண்ணத்தையே மறக்கடித்து விட்டது .
கருப்பண்ண முதலியார் துணிக்கடை அந்த ஓரில் ஒரு பெரிய கடை .இரவில்
கடையை அடைத்து விட்டு உரிமையாளர், அவர் மகன், இரண்டு ஊழியர்கள் ஒரு அரிக்கேன்
விளக்குடன் சிறிய ஊர்வலம்போல் தினமும் போவது பார்க்க வேடிக்கையாக இருக்கும்..
எழுத்தர் ஒருவரின் திருமணத்திற்காக வங்கி ஊழியர்கள் அனைவரும் ஒரு
பேருந்து பிடித்து கடலூர், சிதம்பரம் போய் சுற்றிப்பார்த்து வந்தோம்.
பிறகு ஒரு முறை பேருந்து பிடித்து தேக்கடி, சின்னமனூர், தேனீ கம்பம்
போய் வந்தோம். .
அத்தாவுக்கு துறையூர் மிகவும் பிடிக்கும் . மிக நல்ல கறி கிடைக்கிறது
என்று சொல்லும். நகராட்சி துப்புரவு ஊழியர்கள் மிக சிறப்பாக செயல்
படுகிறார்கள் என்று சொல்லும்.
நூரக்கா குடும்பம் ஒரு முறை திடீர்பயணமாக வந்து சில நாட்கள்
தங்கிச்சென்றார்கள் .
கரீம் அண்ணன் முத்தக்கா திருமண அழைப்புக் கொடுக்க ஒரு முறை வந்தார்கள்
(பானு திருமணம் என நினைவு) .அப்போது முத்தக்கா ஒரு கவுன் மாதிரி கொண்டு வந்தது.
ஒரே நாளில் துணி வாங்கி ,தைத்து பாப்டிக்கு போட்டு விட்டது
எங்கள் வங்கியில் பெரிய
அளவில் ஊழல் நடைபெற்று உயர் மட்ட அதிகாரிகள் ( top executives )
பெயர்கள் படத்துடன் ஊடகங்களில் வெளியானது இந்தக் கால கட்டத்தில்தான்
எனக்கு வங்கியில் மேலாளராகப் பதவி உயர்வு கிடைத்தது துறையூரில்தான் .அந்த மகிழ்ச்சியைக் குலைக்கும்
வகையில் பீகார் சிவான் கிளைக்கு மாறுதல் வந்தது . இது பற்றி சிவன் அல்ல சிவான்
என்ற பகுதியில் விரிவாக எழுதியிருக்கிறேன்.
திரைப்படப் பிடிப்பு ஒன்றும் துறையூரில் நடந்தது .ஒரு கிளி உருகுது ஒ
மைனா என்ற பாடல் காட்சி அங்கு படமாக்கப்பட்டது .படம் பெயர் ஆனந்தக்கும்மி என்
நினைவு
துறையூரில் ஜும்மா தொழுகத் துவங்கினேன்
எத்தனையோ கிளைகளில் பணியாற்றிய எனக்கு துறையூர் கிளை இன்னும் மனதில்
நிற்கிறது
இத்துடன் இப்பகுதியை நிறைவு செய்கிறேன்
சென்ற பகுதி பற்றி பாராட்டும் கருத்துகளும் தெரிவித்த பாப்டி மைத்துனர் அஜ்மீர் அலிக்கு நன்றி. வழக்கத்துக்கு மாறாக சில பிழைகள்
இருந்ததாய் பாப்டி சொன்னது. .இந்தப்பகுதியின் துவக்கத்தில் குறிப்பிட்டது போல் பயணக்களைப்பு
காரனாமாக இருக்கலாம். எனினும் பிழைகள் பிழைகள்தான் .பொருத்தருளுங்கள் .
இ(க)டைச்செருகல்
அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகம்- என் சமகாலத்தவர்களுக்கு
நினைவிருக்கலாம்
அறிஞர் அண்ணாவுக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கியதாக சொல்லப்படும் அதே யேல் பல்கலைக்கழகம்தான்
எலிஹு யேல் என்ற இங்கிலாந்து நாட்டுக்காரர் பெயரில்தான் யேல் பல்கலைக்கழகம்
அழைக்கப்படுகிறது .
சென்னை மாநிலம், சென்னை மாநகரம் மற்றும் கடலூரோடு மிக நெருங்கிய
தொடர்புடைய இவர் வெள்ளையரின் ஆட்சிக்காலத்தில், ஊழல், சொதுக்குவிப்பில்
முன்னோடியாக விளங்கியவர்
இது பற்றியும் முனைவர் பட்டம்
ஓற்றியும் இன்னும் சில பல சுவையான தகவல்கள் பின்னர்
இறைவன் அருளால் பயணம்
தொடரும்
வலை நூல் முகவரி
கூகிள் தேடலில்
sherfuddinp.blogspot.com
ReplyDeleteGood writing. Mix of humour, adventure and lot of information about people, places and culture.
Every place, town, you describe makes us feel we have missed living in that place.