Friday, 14 October 2016

பொன் (வெள்ளி , பித்தளை ,தகரம்) மொழித் தொகுப்பு (பயண இடைவேளை )32.வாழ்க்கைப்பயணமும் வங்கி அனுபவங்களும்




போன பகுதியில் குறிப்பிட்டது போல் தொடர்ந்து ஆறு வாரம் பயணித்ததில் உடலும் மனதும் சோர்வாகி எண்ண ஓட்டத்தையும் எழுத்தையும் பாதிக்கும் அளவுக்கு வந்து விட்டது. எனவே இந்த இடைவேளை எனக்கு மிகவும் தேவைப்படுகிறது
ரீடர்ஸ் டைஜஸ்ட் என்ற மாத இதழ் பற்றி முன்பு ஒரு முறை நான் குறிப்பிட்டிருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த அந்த இதழ் பொருளாதாரச் சிக்கலினால் நிறுத்தப்பட்டது அறிந்து மிகவும் வருத்தமாக இருந்தது. சந்தா கட்டி வாங்கி எல்லாம் படிக்க முடியாது. எப்போதாவது பயணத்தில் தெருஓர பழைய நூல் கடையில் ஓன்று வாங்கினால் பல மாதங்கள் படித்து ரசித்து சுவைக்கலாம்.
பிற இதழ்களில் வெளியாகும் கட்டுரைகள், சம்பவங்களைத் தொகுத்து சுவைபட வெளியிடுவார்கள்.நிறைய துணுக்குகள் நடந்தவை, நகைச்சுவை ,சொற்புதிர்கள் எல்லாம் இருக்கும்.
பல பொன்மொழிகளைத் தொகுத்து quotable quotes  என்ற தலைப்பில் வெளியிடுவார்கள்...
அதன் தாக்கம்தான் இந்த  அன்கோட்டபில் கோட்ஸ் தொகுப்பு.
எல்லாம் என் காதில் விழுந்த மொழிகள் . பெயர், நபரைக்குறிப்பிட்டு எழுதினால் இன்னும்  சுவையாக இருக்கும். சபை, எழுத்து நாகரீகம் கருதி ஒரு சிலவற்றைத்தவிர மற்றவற்றில் பெயரைக்குறிப்பிடவில்லை


1. தோசை பற்றி கேட்டால் நீ ஏன் இட்லி பற்றி பேசுகிறாய் 

சாப்பாட்டு மேசையில் எட்டு வயது பையனுக்கும் அவன் அம்மாவுக்கும் நடந்த உரையாடல் :
பை.: என்னம்மா பொடி டேஸ்ட் வித்தியாசமாக இருக்கே. நீ அறைத்ததா பாட்டி அறைத்ததா

அ:   நான் அறைத்ததாண்டா .

பை: இல்லைம்மா இந்த டப்பாவில் பாட்டிதானே பொடியைக் கொட்டி வைப்பாங்க. 

அ:  நான் தான்  அறைத்து இந்த டப்பாவில் கொட்டி வைத்தேன்.,

பை : நீ என்ன சொன்னாலும் பொடி வேறே டேஸ்ட்டாகதான் தெரியுது

அ : தோசைமாவு விலைக்கு வாங்கினது அதனால் வேறே மாதிரி தெரியும்

பை  எல்லா மாவும் விலைக்குதானே வாங்குவ

அ : ஏண்டா இட்லிக்கி மாவு அரைப்பதை நீ பார்த்ததில்லையா 

பை : தோசை பற்றி கேட்டால் நீ ஏன் இட்லி பற்றி பேசுகிறாய் 

2.இவரப்பத்தா பாய் மாதிரிலே இருக்கு
வங்கி அலுவலாக நீதிமன்றம் செல்ல வேண்டியிருந்தது . வங்கி வழக்கறிஞர் “நான் மற்றொரு நீதிமன்ற வேலையே முடித்து வர சிறிது தாமதமாகும்.நீதி மன்ற வளாகத்தில் உள்ள சிற்றுண்டி விடுதி அருகில் என் உதவியாளர் உங்களை சந்தித்து நீங்கள் செல்ல வேண்டிய நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்வார் “ என்றார்
நானும் சரியான நேரத்திற்குப்போய்க காத்திருந்தேன். அங்கு யாரும் என்னை எதிர்கொள்ளவில்லை. சிறிது நேரம் கழித்து வந்த வழக்கறிஞர் என் அருகில் இருந்த ஒருவரைப்பார்த்து “ஏம்பா சாரைக் கூட்டிக்கொண்டு போகவில்லையா” என்று கேட்டார். அவர்தான் வழக்கறிஞரின்  உதவியாளர்;
அதற்கு அந்த உதவியாளர் சொன்ன பதில்தான்   இவரப்பத்தா பாய் மாதிரிலே இருக்கு.
தாடி தொப்பியுடன் கூடிய ஒரு பாயை வங்கி மேலாளராக  நினைத்துப்பார்க்க அவரால் முடியவில்லை 
3. you will be shifted
ஒரு கிளைக்கு மேலாளராக மாற்றலாகி வந்து ஒரு சில நாட்களில் இருபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள இன்னொரு கிளைக்கு எங்கள் கோட்ட அலுவலத்தின் தலைமை அதிகாரியான உதவிப் பொது மேலாளர் வந்திருந்தார். .நான் புதிதாகச் சேர்ந்த கிளையின் முந்தய மேலாளர் “ வாங்க போய் ஏ ஜி எம்மைப் பார்த்து வரலாம்” என்றார். நான் “ சார் .எனக்கு இதெல்லாம் பழக்கமில்லை நீங்கள் போங்கள் “என்றேன்.
மிகவும் வற்புறுத்தி அழைத்துச் சென்றார்.. ஏ ஜி எம் மைப்பார்த்து ஒரு கூழைக்கும்பிடு போட்டு விட்டு என்னை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். என்னைப் பார்த்து ஏ ஜி ஏம் சொன்ன முதல் சொற்கள் :
You will be shifted  ( வேறு இடத்திற்கு உங்களை மாற்றி விடுவேன் )
எனக்கு உண்மையிலேயே மிக வியப்பாக இருந்தது . இட மாற்றம் பற்றி அல்ல. இவ்வளவு மலிவான அதிகாரிகளும் நம் வங்கியில் இருக்கிறார்களா என்று.
இதற்கு முன் நான் அவரை சந்தித்தது கிடையாது, தொலைபேசியில் கூட பேசியது இல்லை .
என் பெயரைப் பார்த்து வெறுப்பா என்னவென்று புரியவில்லை .முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல் அவரை சந்தித்த ஒவ்வொரு முறையும் வெறுப்பை உமிழ்வார். என்னைச் சீண்டுவது போல் “விருப்ப ஓய்வில் போகும் எண்ணம் இருக்கிறதா “ என்று கேட்பார் .
(சில மாதங்களில் அவர்தான்(அவர் விருப்பத்துக்கு எதிராக ) மும்பைக்கு  மாற்றப்பட்டு அங்கு சமாளிக்க முடியாமல் விருப்ப ஓய்வில் போய்விட்டார்)
4,அல்லா எல்லா இடத்திலயுந்தான இருக்கான்   
ஹஜ்புனித பயணத்துக்காக சென்னையில் மகள் பாப்டி வீட்டில் இருந்தோம். அப்போது பாப்டி மகள் ஐந்தாறு வயது இருக்கும் – தன் நனிமாவிடம் “எதுக்காக ஹஜ்ஜுக்குப் போறீங்க” என்று கேட்டது. நனிமா என்ன சொல்வது என்று தெரியாமல் “அல்லாவைப் பார்க்கப்போறோம் “ என்று சொன்னது அதற்குப பேத்தி கேட்ட எதிர்க் கேள்விதான்
அல்லா எல்லா இடத்திலயுந்தான இருக்கான்  

5.வயிறு சரியில்லை  மூனே மூணு முட்டை தாங்க
ஒரு திருமணத்திற்காக உறவினர் வீட்டில் குழுமியிருந்தோம். .திருமணத்திற்கு  முதல் நால் இரவு உணவுக்குப் பக்க உணவாக அவித்த முட்டை வைத்திருந்தார்கள்
நெருங்கியு உறவினரான முதியவர் ஒருவர்
எனக்கு சாப்பாடு வேண்டாம், வயிறு சரியில்லை  மூனே மூணு முட்டை தாங்க
என்று கேட்டு வாங்கி சாப்பிட்டார் .
வயிற்றுக் கோளாறை அதுவும் இரவில் சரி பண்ண இப்படி ஒரு எக் தெரபி இருப்பது அப்போதுதான் எனக்குத் தெரிய வந்தது .செய்து பார்க்கத் துணிவு  வரவில்லை
6.வேல ஒன்னுதே இருந்துச்சு அதுவும் போச்சா
அரசு அதிகாரி ஒருவர் தன் சொந்தப் பணிகளுக்காக இரண்டு மாத விடுப்பில் தன் சொந்த ஊரில் குடும்பதுடன் இருந்தார்/
அவர்கள் வீட்டுக்கு அடிக்கடி வரும் அவரை விட வயதில் இளைய  நெருங்கிய உறவினர் மிக இழிவுபடுத்தும் வகையில் அவரைப்பார்த்து உதிர்த்த மொழிதான்
வேல ஒன்னுதே இருந்துச்சு அதுவும் போச்சா
இங்கே சொற்களை மட்டும்தான் வெளியிட முடியும். அவர் காட்டிய முகபாவம் குரலில் இருந்த நக்கல் கேலி உடல் மொழி  இதெல்லாம் அந்த அரசு அதிகாரியை காயப்படுத்தி வீழ்த்தும் நோக்கில் இருந்தது  
இந்த சொல்லம்பை எய்தவர் சகாயம் இறையன்பு அளவுக்கு உயர்ந்திருக்க வேண்டியவர். என்ன செய்வது விதி சதி செய்து அவரை பள்ளியிறுதித் தேர்வை தாண்டவே பல பல ஆண்டுகள் போராட வைத்து விட்டது.
.7. .இன்னும் மத்தியான சாப்பாடு சாப்பிடலை
திருமண அழைப்புக் கொடுக்கச் சென்ற மணமகன் வீட்டார் மணமகள் வீட்டு சார்பில் அவர்களோடு எங்கள் உறவினர் ஒருவரை அழைத்துச் சென்றனர் .அக்கம் பக்கம் ஊர்களில் அழைப்புக்கொடுத்து ஊர் திரும்ப மதியம் இரண்டு மணியைத் தாண்டி விட்டது.. நேரந்தவறாமல் சாப்பிடும் பழக்கமுடையவர் எங்கள் உறவினர்.
அவருக்கு இரண்டு மணி வரை மதிய உணவு உண்ணாமல் இருப்பது மிகப் பெரிய சாதனையாகத் தோன்றியது போலும்
மிக உரத்த குரலில்  
இன்னும் மத்தியான சாப்பாடு சாப்பிடலை
என்று பல முறை அறிவித்தார். அவர் அறிவித்த தோரணையையைப் பார்த்தால் இரண்டு மணி வரை மதிய உணவு உண்ணாமல் இருக்கும் அவரைப் பாராட்டி ஒரு விருதும் விருந்தும் வழங்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது போல் இருந்தது
8 கையிலே .ஏழாயிரம் ரூபாய் இருக்கு என்ன பண்ணலாம்.
மதிய உணவை முடித்து வீட்டு ஓய்வில் இருந்த என்னை தட்டி எழுப்பி என் உறவினர் ஒருவர் கேட்ட கேள்விதான்
கையிலே .ஏழாயிரம் ரூபாய் இருக்கு என்ன பண்ணலாம்.
நான்: “ பாங்கில் போட்டு வைக்கலாம்
அவர் : ஹ்ம் , நீங்கள் என்ன அரை வட்டி முக்கால் வட்டி கொடுப்பீர்கள், பிசிநெஸ்ஸில் ஒரு சுத்து விட்டால் ஒரே நாளில் டபுள் ஆகிவிடும்.
நான் விடு நான் வேண்டாம் என்று சொல்லவில்லை எனக்குத் தெரிந்ததைத்தான் நான் சொல்ல முடியும்.
அவர் வண்டி வாங்கப்போறேன்
நான் என்ன ஒத்தை மாட்டு வண்டியா
அவர் உங்களுக்கு பிசிநெஸ் பற்றியும் ஒன்னுந்தெரியலை .பாங்க் பற்றியும் தெரியலை .என்னைபோன்ற படித்த (???) இளைஞர்கள் கால் பங்கு கட்டினால் முக்கால் பங்கு கடன் கொடுப்பார்கள். நீங்க குடுபீங்கள்ளலே .
நான் ; யாருக்குக் கொடுத்தாலும் உனக்குத் தர மாட்டேன்


இன்னும் நிறைய (பொன்) மொழிகள் கைவசம் இருகின்றன,. எல்லாம் ஒரு சிலரைச்சுற்றியே வருகின்றன.. அவற்றையெல்லாம் எழுதினால் அந்த ஒரு சிலரைச் சுட்டிக்காட்டுவது போல் இருக்கும்.
எனவே இத்துடன் இந்தப்பகுதியை நிறைவு செய்கிறேன்
சென்ற பகுதி பற்றி கருத்துகள், பாராட்டுகள தெரிவித்த பாப்டி, அஜ்மல், சகோதரிகள் மெஹராஜ் ஜோதிக்கு  நன்றி.
(ஜோதி திரூர் பற்றி முறையற்ற திருமணங்கள் என்று சொன்னது தெளிவாக இல்லை)
பாப்டி துறையூர் பகுதி மிக நன்றாக இருப்பதாகத் தெரிவித்ததொடு ஒரு பிழையையும் சுட்டிக்காட்டியது . கவுன் பற்றி நான் எழுதியிருந்தேன். அது நூரக்கா மகள் மினி போட்டிருந்த கவுன்  அழகாக இருந்ததால் பாப்டியே துணிக்கடைக்குப் போய் துணி எடுத்து தைத்து வாங்கியதாம்..பாப்டிக்கு அப்போது எட்டு வயது இருக்கும்.
Ajmal
Good writing. Mix of humour, adventure and lot of information.
Every place, town, you describe makes us feel we have missed living in that place.
Please continue writing.
இடை(கடை)ச்செருகல்
சென்ற பகுதியில் யேல் பல்கலைக்கழகம் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாக மேலும் சில பல செய்திகள் :
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் ஆளுநர் பதவி வகித்த இரண்டாவது வெள்ளையர் யேல். அப்போது அந்தப்பதவி பிரெசிடென்ட் என்று அழைக்கப்பட்டது
கோட்டையில் உள்ள தேவாலயத்தில் முதலாவதாகப் பதியப்பட்டது இவர் திருமணம்தான்
இவர் கோட்டையில் ஆட்சி செய்த காலத்தில்தான் சென்னை மாநகராட்சி ஒரு மேயர், பதினேழு ஆல்டர்மேன்களுடன் துவக்கப்பட்டது .
பதவியைத் தவறாகப்பயன்படுத்தி ஊழல் புரிந்து பணம் சேர்த்த முதல் அதிகாரி என்ற பெருமையும் இவருக்கே உரியது
ஊழல்பணத்தில்  கடலூர் தேவனாம்பட்டணக் கோட்டையை வாங்கி வம்பையும் விலைக்கு வாங்கினார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த முதல் வழக்கு இவர் மேல் பாய்ந்து, பதவி இழந்த அவர் , தன் பணத்துடன் அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்றார் 
பொருளாதாரச் சிக்கலில் தவித்த பல்கலைக்கழகத்துக்கு தன் பெயரைச்சூட்ட வேண்டும் என்ற நிபந்தனையோடு பெருந்தன்மையாக பண உதவி செய்தார்.
ஒரு வணிகர் ஆட்சியாளராகி,ஊழல் பொருள் மூலம் கல்வித்தந்தையான முதல் கதை யேலுடையதுதான்  
இனிமேல்தான் இன்னொரு சுவை மிக்க திருப்பம்.
நாட்குறிப்பு எழுதும் பழக்கமுடைய யேல், சென்னையை விட்டுத் தப்பி ஓடும்போது கோட்டையில் அதைத் தவற விட்டார். அது கோட்டை அருங்காட்சியகத்தில் சேர்க்கப்பட்டது
அதில் என்ன எழுதியிருந்தார் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் அதைகைப்பற்ற யேல் பல்கலைக்கழகம் பல ஆண்டுகளாக முயற்சித்தது. அதற்கு அரசு இடம் கொடுக்கவில்லை
 தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அறிஞர் அண்ணா முதல்வரானார் .
விசிடிங் பெல்லோஷிப்(முனைவர் பட்டம் அல்ல) பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டு., அதைப் பெறச் சென்ற அண்ணாவிடம் பல்கலைக்கழகம் யேலின் நாட்குறிப்பைத்  தங்களிடம் தர வேண்டுமென்று பணிவான வேண்டுகோள் விடுத்தது
மகிழ்ச்சியில் இருந்த அண்ணாவினால் மறுக்க முடியவில்லை .அதிகாரிகளின் எதிர்ப்பையும் மீறி, முதல் ஊழல்வாதியான , வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த யேலின் நாட்குறிப்பு திருப்பித்தரவேண்டும் என்ற நிபந்தனையுடன் அமெரிக்கா போய் ஏறத்தாழ அரை நூற்றாண்டு கடந்து விட்டது..இது வரை திரும்பி வரவில்லை
(03 09 2015 தினமணியில் வந்த கட்டுரையிலிருந்து )
இறைவன் அருளால்
இன்னும் சில வாரங்கள்                                                                                                  பயணம்தொடரும்
  
வலை நூல் முகவரி
கூகிள் தேடலில்
sherfuddinp.blogspt.com





No comments:

Post a Comment