உடன்குடி என்றல் பலருக்கு நினைவில் வருவது உடன்குடி கருப்பட்டி
.சிலருக்கு உடனே குடி எனத் தோன்றும்.
சிறிய ஊரான உடன்குடிக்கு பல பெயர்கள் இருப்பது ஒரு சிறப்பு,.அஞ்சல்
அலுவலகப் பெயர் கிரிஸ்டியா நகரம்.. வங்கிக்கிளை உடன்குடி என அழைக்கப்படும் .அரசு
மருத்துவ மனை இருக்குமிடம் காலங்குடியிருப்பு .(காலன் ???)..உழக்கில் கிழக்கு
மேற்குப் பார்த்தது போல்
இதில் எந்தப் பெயரைப் போட்டாலும் கடிதங்கள் வெளி
மாநிலம், வெளிநாட்டிலிருந்து தவறாமல்
வந்து விடுவது இன்னொரு சிறப்பு..
நெல்லை சந்திப்புக் கிளையிலிருந்து உடன்குடிக்கு மாறுதல்
.நெல்லையிலிருந்து நாற்பது கி மீ தொலைவு. அத்தாவின் பழக்கமோ என்னமோ இடமாறுதல்
என்றால் ஒரு தயக்கமோ அச்சமோ என்றும் எனக்கு இருந்ததில்லை .
பையில் துணிமணிகளுடன் உடன்குடி சென்ற எனக்கு கிளையில் ஒரு அன்பான வரவேற்பு
கிடைத்தது நான் தங்க அறை, உணவுக்கு
அங்குள்ள வீட்டு விடுதி, எல்லாம் சொல்லி வைத்திருந்தார்கள்.
மேலாளர் ராமையா , சிறப்பு உதவியாளர் ராமசுப்ரமணியம், அவருக்குப்பின்
வந்த பீட்டர் பெர்னாண்டஸ், எழுத்தர்கள் செந்தில், கந்தசுப்பு, மாணிக்கம் ,கடை நிலை
ஊழியர் மாரியப்பன் எல்லோருமே நன்றாகப் பழகியதில் ஒரு ஆண்டு கால உடன்குடி வாழ்க்கை
மிக இனிமையாகக் கழிந்தது .
சிறிய கிளை அதிகம் பணிச் சுமை இருக்காது. வங்கிப்பணியின் அடிப்படைகளை
நன்கு கற்றுக்கொள்ள முடிந்தது .
வங்கியோடு இணைந்து மேலாளர் குடியிருப்பு,. அவர் அடிக்கடி வீட்டுக்குப்
போய் வருவார் . வரும்போதெல்லாம் வாய் அசைந்து கொண்டே இருக்கும். .எங்களுக்கும்
அவ்வப்போது சுவையான வீட்டுச் சிற்றுண்டி
கிடைக்கும் .
சிறப்பு உதவியாளராக இருந்து அதிகாரியாப் பதவி உயர்வு பெற்று மாறுதலில்
போன ராமசுப்ரமணிமும், அவருக்குப்பின் வந்த
பீட்டர் பெர்னாண்டசும் மற்ற எழுத்தர்களும் வங்கிப்பணியின் ஒவ்வொரு பிரிவையும் சிரத்தையுடன்
எனக்கு சொல்லித் தருவார்கள்.
பீட்டர் என்னை சாச்சா என்று அழைக்க , அதுவே என் பெயராக நிலைத்து
விட்டது .ஒரு முறை அவருடன் அருகில் உள்ள வீர பாண்டிய பட்டிணம் என்ற ஊருக்குச்
சென்றேன். அங்கு ஒரு திருவிழா நேரம். பீட்டருக்கு நிறைய நண்பர்கள் உறவினர்கள்.
அவர்கள் வீட்டுக்கெல்லாம் அழைத்துச் சென்றார். காப்பி சாப்பிடுகிறாயா என்பது போல்
ஒவ்வொரு வீட்டிலும் கேட்கும் முதல் கேள்வி தண்ணி (மது) சாப்பிடுகிறாயா என்பதுதான்
. ஒரு வழியாக இறைவன் அருளால் கற்பு
கெடாமல் அறைக்கு நடு இரவுக்குமேல் வந்து
சேர்ந்தேன்.
உடன்குடிக்கு அருகில் உள்ள இன்னொரு ஊர் குலசேகரப்பட்டினம். பெரிய
பக்தித்தலம். அங்கு ஒரு காலத்தில் பெரிய சர்க்கரை ஆலை இருந்ததாய்ச் சொல்வார்கள்.
.அதன் அடையாளமாக ஒரு தொடர்வண்டிப்பாதை மணலில் புதைந்து கிடப்பதைக் காணலாம்.
நான் தங்கியிருந்த விடுதியில் மொத்தம் ஐந்தாறு அறைகள்தான். ஒரு
அறைக்கு ஒருவர் மட்டுமே. ஒரு திருகு பல்ப் பொருத்தியிருக்கும்..மின் விசிறி இருந்த
நினவு இல்லை அது அவசியமாகவும் தெரியவில்லை. ஒரு அறையில் நான், இன்னொன்றில் வங்கி
மாணிக்கம், இரண்டு அறைகளில் பள்ளி ஆசிரியர்கள், ஒரு அறையில் அஞ்சலர் (போஸ்ட்மேன்)
இன்னொன்றில் அரசு அலுவலர் ..மாதம் பத்தோ பதினைந்தோ வாடகை.
அஞ்சலர் தன் பணி நிமித்தம் தினமும் வெகு தொலைவு நடப்பதால் இரவெல்லாம்
கால் வலிப்பதாய்ச் சொல்வார்..அப்போது அஞ்சலருக்கு ஆண்டு ஊதிய உயர்வு ஒரே ஒரு
ரூபாய்தானாம்.
விடுதிக்கு எதிரே ஆண்கள் உயர்நிலைப்பள்ளியும் அதைச் சேர்ந்த பெரிய
திடலும் இருக்கும். நான் நெல்லை சாப்டர் உயர்நிலைப்பள்ளியில் படிக்கும்போது எனக்கு
ஆங்கிலம் எடுத்த திரு ஜெசுமணி அருமை தேவதாஸ் உடன்குடி பள்ளியில் தலைமை ஆசிரியராக
இருந்தார்.
உணவு விடுதியில் சைவப்பிள்ளைமார் வீட்டுச் சாப்பாடு. நல்ல சுவையாக
இருக்கும்..மூன்று வேளை உணவுக்கும் மாதம் நாற்பத்தி ஐந்து ரூபாய் திருநெல்வேலி சிறப்பு உணவான சொதி,இஞ்சிதுவையல் முட்டைகோஸ்
துவரம் அந்த விடுதியில் அடிக்கடி கிடைக்கும்
.
ரம்ஜான் மாதம் முழுமையாக முதலில் நான் நோன்பு நோற்றது
உடன்குடியில்தான். காலை சகருக்கு ரொட்டி(பிரட்) பழம். நான் சாப்பிடும் உணவு விடுதியில் இரவு எனக்காக
சோறு குழம்பு வைத்துக்கொடுப்பர்கள்
சனிக்கிழமை மாலை வீட்டுக்கு வந்து விட்டு திங்கள் காலை உடன்குடி
திரும்புவேன். .அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு. , அம்மா சுட்டுத்தரும் தோசையை
முதல் நாள் வைத்த கறிக்குழம்புடன்
சுவைத்துச் சாப்பிட்டுவிட்டுக் கிளம்புவேன்..
காலை தொடர் வண்டியைப் பிடிக்க ஷஹாவும் நானும் மிதி வண்டியில் நெல்லை
சந்திப்புக்குப் போவோம். போகும்போது நான் ஓட்டிக்கொண்டு போவேன்.நெல்லை சந்திப்பு-
திருச்செந்தூர் பயணிகள் தொடரியியில்
நாசரேத் என்ற ஊரில் இறங்கி அங்கிருந்து பேருந்து மூலம் உடன்குடி பயணம்.
திருச்செந்தூர் பயணிகள் தொடர் வண்டியின் வேகம் குறித்து சொல்லப்படும்
செவி வழிச் செய்தி ஒன்று
ஒருநாள் காலை நெல்லையில் இருந்து புறப்பட்ட இந்த வண்டி தொடர்ந்து
பயணிக்க முடியாமல் வழியில் ஒரு இடைஞ்சல்
இருப்புப்பாதையில் ஒரு எருமை மாடு படுத்துக்கொண்டு அசையாமல் அடம்
பிடித்தாது. ஓட்டுனர், பாதுகாவலர் ,பயணிகள் எல்லாம் இறங்கி ஒரு வழியாக மாட்டைக்
கிளப்பிவிட்டபின் :தொடரி பயணித்தது. ஒரு அரை மணி நேரம் கழித்து மீண்டும்
இருப்புப்பாதையில் தடங்கல். இறங்கிப்பார்த்தால்
மீண்டும் எருமை மாடு.- முதலில் கிளப்பி விட்டார்களே அதே எருமை மாடு.
(இந்தத் துணுக்கை பைசல் எழுதி அனுப்பி கோகுலம் இதழில் பல ஆண்டுகளுக்கு
முன் வெளியானது )
வங்கிப்பணியாளர்கள் அனைவரும் ஒருமுறை குற்றாலம் சிற்றுலா போய்
வந்தோம். மற்றொரு முறை மணிமுத்தார் ,பாபநாசம் போய்வந்தோம்.
வங்கிக்கு எதிரே ஒரு திரையரங்கு இருக்கும். அங்கே படம் எதுவும்
பார்த்த நின்வில்லை..நெல்லையில் வார. விடுமுறையில் நிறைய படங்கள்
பார்த்திருக்கிறேன்.
உடன்குடியில் நான் இருக்கும்போது ரஹீம் அண்ணனின் சகோதரர் என்னைப்பார்க்க வந்தார். ரகீம் அண்ணன்
ஒருமுறை இசுலாமியக் கலைக்களஞ்சியம் விற்க வந்ததாய் நினைவ.
எழுத்தாளர் கள்ளத்தோணி அப்பாசுக்கும் உடன்குடிக்கும் பிறப்பாலோ
மணமுடித்த வகையிலோ சம்பந்தம் செய்த வகையிலோ எதோ ஒரு தொடர்பு இருக்கிறது. அது எது
என்பது நினவிலில்லை. அறிந்தவர்கள் தெரிவிக்கலாம்
உடன்குடியில் பணியாற்றுகையில் அத்தாவும் நானும் ஏறுவாடி தர்காவுக்குப்
போய் வந்தோம். கீழக்கரையில் சரிவு அண்ணன் ஊராட்சி நிர்வாக அதிகாரியாக இருந்தது.
அவர்கள வீட்டில் தங்கி அங்கிருந்து ஏறுவாடி போய் வந்தோம்.
தர்கா இருக்கும் கடற்கரைபகுதியில் ஒரு அச்சமூட்டும் அமைதி குடி
கொண்டிருக்கும்.
தர்காவிலிருந்து திரும்பும்போது இரவாகிவிட்டது.நிறையப்பேர் கீழக்கரை
செல்லக் காத்திருந்தனர். அப்போது வந்த பேருந்து கீழக்கரை போகாது. அதில் போய் ஒரு
இடத்தில் இறங்கி அடுத்த பேருந்து பிடித்து கீழக்கரை போக வேண்டும்.. அந்தப்பேருந்து
வருமா அது வருவதற்குள் இந்தப்பேருந்து அங்கு போய்ச் சேருமா என்பதெல்லாம் மிகப்பெரிய வினா. அந்தப்பேருந்து
கிடைக்காவிட்டால் பல கி மி தூரம் நடந்துதான் கீழக்கரை போக வேண்டும்.
இந்த சூழ்நிலையில் அத்தாவின்
மேலாண்மைத்திறனையும் நிர்வாகச் செயல் பாட்டையும் கண்டு வியப்படைந்தேன்..கீழக்கரை
செல்லும் பயணிகள் அனைவரிடமும் ஒரு தொகை வசூலித்து அதை ஓட்டுனர் நடத்துனருக்குக்
கொடுத்து பேருந்தை கீழக்கரைக்கே ஓட்டச் செய்தது எல்லோருக்கும் நிம்மதி, மகிழ்ச்சி
.
முன்பொரு முறை இதே ஏறுவாடிக்கு என் ஆரம்பப்பள்ளி பருவத்தில்
(மேட்டூரில் இருந்து என நினைவு) எங்கள் மகிழுந்தில் (MSZ 7736 Hillman) போனோம்.
அப்போது கடற்கரை அருகில் போகையில் சக்கரம் மணலில் சிக்கிக்கொள்ளும். பெரிய
கட்டைகளை வைத்து ஆட்கள் வண்டியைத் தூக்கி விடுவார்கள்
என் முழுப்பெயர் நிறைப்பேருக்குத் தெரிந்திருக்காது எனக்கே
திருமணத்தின் போதுதான் தெரியும்.- சர்புதீன் இப்ராஹீம் (ஏறுவாடி அவுலியா பெயர் சேர்த்து ).
ஒரு ஆண்டு உடன்குடி வாசத்திற்குபின் நெல்லை நகர் கிளைக்கு மாறுதல்
வந்தது
Short and
sweet ஆக இருந்த உடன்குடி வாழ்க்கைப் பயணம் பற்றி இதற்குமேல் எழுத பெரிதாக
ஒன்றும் இல்லாததால் இத்துடன் இப்பகுதியை நிறைவ செய்கிறேன் .
சென்ற பகுதிகள் பற்றி கருத்துக்கள் பாராட்டுகள் தெரிவித்த பாப்டி, சகோதரி மெஹராஜ் ஜோதி
சுராஜுக்கு நன்றி.
பாப்டி சென்ற பகுதி நன்றாக இருந்ததாய்த் தெரிவித்தது ஜோதி
திருநெல்வேலிக்குப்பிறகு வந்த பகுதிகள் சலிப்புத் தட்டுவதாய்த் தெரிவித்தது
,சுராஜ் சென்ற பகுதிகள் எல்லாம் சிறப்பாக இருந்ததாய்ச் சொன்னது. துறையூரில்
எல்லோரும்கண் சிவந்தால் மண் சிவக்கும் படம் பார்த்ததையும் படம் நன்றாக இருந்ததால்
அடுத்த நாள் அத்தா அந்தப் படத்தைப் பார்க்கப போனதையும் நினைவு கூர்ந்தது
மெஹராஜ் சென்ற பகுதி
நகைச்சுவையாக நன்றாக இருந்ததாய்த் தெரிவித்தது
இ(க)டைச்செருகல்
கீழக்கரை பற்றி நான் கேள்விப்பட்ட சில செய்திகள் :
மிக செல்வந்தர்களான வெளி நாடு வாழ் இந்தியர்கள் (பெரும்பாலும்
இசுலாமியர்கள் வாழும் ஊர்.
பதினாறு தெருக்கள் எல்லாம் மண்., மணல் தெருக்கள்தான்.
வீடுகள் வெளியே பார்க்க எளிமையாகவும் உள்ளே மிகப்பிரமாண்டமாகவும்
இருக்கும்.
ஒரே வீட்டில் உடன்பிறப்புகள் நான்கு பேருக்கு தனிததனி நீச்சல் குளம், சிறு
திரையரங்கு வைத்துக் கட்டிஇருக்கின்றதாம்
ஒரு தெருவைத்தாண்டி அடுத்த தெருவில் சம்பந்தம் செய்ய மாட்டார்கள்
திருமண பேச்சுக்கள் எல்லாம் அமெரிக்க டாலரில்தான்
ஈகைத்திறன் மிக்க செல்வந்தர்கள் புனித ரமலான் மாதத்தில் காசை
ஏழைகளுக்கு வாரி இறைப்பார்கள். இதில் கூட்ட நெரிசல் காரணமாக அசம்பாவிதங்கள்
நடைபெறுவதும் உண்டு.
ஈஸ்ட் கோஸ்ட் கன்ஸ்ட்ரக்ஷன், கிரெசென்ட் கல்வி நிறுவனங்கள் (சீதக்காதி அறக்கட்டளை)
இவற்றின் நிறுவனர்கள் கீழக்கரையைச் சேர்ந்தவர்கள்
கிரசன்ட் பள்ளியில் ரஹீம் அண்ணன் சில காலம் முதல்வராகப் பணிபுரிந்தது
இறைவனருளால்
இன்னும்
மூன்று நான்கு வாரங்கள்
பயணம் தொடரும்
.
வலை நூல் முகவரி
கூகிள் தேடலில்
sherfuddinp.blogspot.com
அருமையான பேச்சு நடையில் எழுதி இருக்கிறீர்கள். உடன்குடிக்கு நான் நெல்லை DO வில் இருந்த போது போயிருந்தாலும் அதிகம் கவனித்ததில்லை. பாராட்டுகள்.
ReplyDelete