Friday, 11 November 2016

திருப்பத்தூர் வட்டார வழக்கு வாழ்க்கைப்பயணமும் வங்கி அனுபவங்களும் 36..


(பயண இடைவேளை)


கவிஞர் கண்ணதாசனையும் சங்கப்புலவர் கணியன் பூங்குன்றனாரையும் (யாதும் ஊரே யாவரும் கேளிர் ) உலகுக்கு அளித்த பெருமை திருப்பத்தூர் வட்டாரத்துக்கு உண்டு.
பொதுவாக மக்கள் பேசும் பேச்சிலேயே உவமைகள் உவமானங்கள் பழமொழிகள் சொல்லடைகள் நக்கல் கேலி பகடி எல்லாம் துள்ளி விளையாடும் .
நான் திரு.வில் வாழ்ந்த நாட்கள் மிகக்குறைவே. என் காதில் விழுந்து நினைவில் நிற்கும் திரு.வின் சிறப்புச் சொற்கள்,பழமொழிகள் போன்றவற்றைத தொகுத்துத் தருகிறேன். எனக்குத்தெரிந்த அளவுக்குப் பொருளையும் குறிப்பிடுகிறேன்
என்னை விட வயதில் மூத்தவர்கள், திரு,வில் அதிக நாட்கள் வாழ்ந்தவர்கள் ,வாழ்பவர்கள் தங்களுக்குத் தெரிந்தவற்றைப் பங்களித்தால் தொகுத்து ஒரு ஆவணமாக வலை நூலிலும் கூகிளிலும் பதிவு செய்யலாம் . விக்கிபீடியாவிலும் வெளியிட முயற்சிக்கலாம்
உள் நுழையுமுன் ஒரு சிறிய ஐயம் :
திரு.பேருந்து நிலையத்தில் முறுக்கு , பலாச்சுளை போன்ற தின்பண்டங்கள் கூடையில் வைத்துப் பேருந்தின் உள்ளேயும் வெளியிலும் கூவி   விற்பார்கள் .யாராவது வேண்டாம்  என்று சொன்னால் அவர்கள்“ டே இவரு நமமூருடா “.என்று நக்கலாகச் சொல்வார்கள் . இதன் உட்பொருள், கருத்து  என்ன என்பதைத் தெரிந்தவர்கள் அறிவிக்கலாம் .
பழமொழிகளும் சொல்லடைகளும் –இரண்டையும் பிரித்துப்பார்க்க முடியாத அளவுக்கு பின்னிப் பிணைந்திருப்பதால் இரண்டையும் கலந்தே தருகிறேன்
1..தாஞ்சமத்திக்குத் தாவாணாம்
கொளுத்த கறிக்கு நெய்வானாம்
(சாமர்த்தியமான பெண்ணுக்குத் தாய் துணை தேவையில்லை .நன்கு கொழுத்த ஆட்டுக்கறி சமைக்க நெய் தேவையில்லை).
(  (குப்பி சொல்லக்கேட்டு ,  ஜோதி சொன்னது)
2. .கடலலை ஓயாப்போரதுமில்ல
கருப்பாயிக்கெலவி குளிக்கப்போரதுமில்லை  
(அலை ஓய்ந்து குளித்தாற்போல் என்பதன் திரு, வடிவம் ).
(மைத்துனர் பீர் சொன்னதாய் சிராஜுதீன் சொன்னது )
.3.சிறுவர் இட்ட வெள்ளாம வீடு வந்து சேராது
(அம்மா அடிக்கடி சொல்வது)
4.  சமத்தி சந்தைக்குப்போனாலாம் வட்டி கிண்ணியாச்சாம்
(பேரம் பேசி விலை குறைக்கும் திறமையைக் குறிப்பது என எண்ணுகிறேன்)
5.தோட்டக்காரன் சும்மா இருந்தாலும் தொனதொனக்கி சும்மாயிருக்க மாட்டான் (மைத்துனர்கள் சொல்லக்கேட்டது)
6.பாம்பு திங்கிர ஊருக்கு போனா நடுத்துண்டம் எனக்குன்னு கேட்டு வாங்கணும் ( பீ.மு .மாமா அடிக்கடி சொல்வது) .
7.ஐங்கலமும் கொள்ளும் அவசரம் என்றால் பைங்கலமும் கொள்ளும்
(உணவு, பணம் பொருள் எல்லாவற்றிற்கும் அளவுக்கு மேல் ஆசை கொள்பவர்களைக் குறிப்பது ) (குப்பி,ஜோதி)
8. அறிவையும் மதியையும் அந்திக்கடையில் விற்றவன்.
வசைச்சொல் ( (குப்பி)
9, பாடாப்படுத்தி பலனகொரச்சு(குப்பி)
10.தாடிக்கு வேறே அரப்பு தலைக்கு வேறே சீயக்காய் (ஜோதி)
11.யோக்கியரு வராரு சொம்பத்தூக்கி உள்ள வையுங்க  (பேச்சு வழக்கில் எல்லோரும் பயன்படுத்துவது))
இதன் சுருக்கிய வடிவம்தான் சீ செம்பு என எண்ணுகிறேன்
12.மக வாள்ர வாள்வுக்கு மாதம் எட்டுகட்டு வெளக்குமாறு சீதனம் (ஜோதி)
13.முகத்தில் தெரியாத சீதேவியா பின்னாலே தெரியப்போகுது (ஜோதி)
14.அரசாளுவா, மன்னாளுவா மகளே (வசவு போல் தோன்றும் வாழ்த்துரைகள்)
15.. நீலிக்குக் கண்ணீர் நிமையிலே (இமை நிமையாக மாறியது )
16.. தலைப்பிள்ள ஆண் பெறுவே தகப்பனார் பேரிடுவே
     மறுபிள்ள ஆண் பெறுவே மாமுமார்  பேரிடுவே(தாலாட்டு)
17.. கண்ணுமான கண்ணோடி கவரிமான் பெண்ணாடி(தாலாட்டு)
18.. மன்னன் போல் வழங்க மகன் ஒருத்தன் போதுமுள்ளே
மகுந்த முறை செலுத்த மக்களுந்தாம் போதுமிள்ளே (மக்கள் செல்வம் பற்றி சலிப்புடன் கூடிய பெருமை )
19. சின்னிக்கி வாதம் சினிக்கிக்கி ஓதம்
பாக்க வந்தவனுக்குப் பப்பையில  விப்ரிக்கட்டு ( வீட்டில் பலரும் நோயுற்றிருக்க பார்க்க வந்தவனும் நோயுற்றிருப்பது  பற்றி-— பப்பையில  விப்ரிக்கட்டு பொருள் தெரியவில்லை )
20.. எல்லாருஞ்சாமியாடினா யார் தீவட்டி பிடிப்பா .
21. பிள்ளைகளினால் நான் பெரிய குடி ஆவேன் என்றிருந்தேன்
மக்களால் நான் மகுந்த குடி ஆவேன் என்றிருந்தேன் (மக்கள் செல்வம் பற்றி சலிப்புடன் கூடிய பெருமை )
22. மனுசாமனுசருக்கு வாசமுள்ள மல்லிகை
பெரிய மனுசருக்கு பிரியமுள்ள மல்லிகை (பேரன் காதர் பற்றி)
23. பார்த்தாருக்கு பச்ச மரம்
     பளுப்பளுவா இத்த மரம்
     கண்டார்க்கு கட்ட மரம்
     களுக்களுவாய் இத்த மரம் (சுய சரிதை)
24 நாம்பட்டதொரு பாட்டை படிப்படியாய்ச் சொன்னேனா
பட்டு நிலா விட்டெரியும் பாதி நிலா கொம்பெரியும் ( சுய புலம்பல்)
25. செட்டிச்சி வேல செய்யப்புரியாது
பாப்பனத்தி வேல பாக்கப்புரியாது ( சில சமுதாயதினரின் வேலை நேர்த்தி பற்றி)
26 சட்டி அடுக்கும் சட்டாத்தி ஒப்பனையும்
பானை அடுக்கும் பாப்பாத்தி ஒப்பனையும் (சில சமுதாயதினரின் வேலை நேர்த்தி பற்றி)
27 மன்னாதி மன்னனெல்லாம் மன்னைக்கவ்வும்போது                                                ( சிலரின் வீண் முயற்சி பற்றி)
(வரிசை எண்   14 முதல் 27 வரை குப்பி சொல்லக்கேட்டு ஷர்மதா தொகுத்து ஜனாப் அயுப்கான் கட்செவியில் அனுப்பியது – நன்றி அயுப்கான், ஷர்மதா)
இனி திரு, வட்டாரத்தில் மட்டும் காதில் விழும் சில சொற்கள்/ மாறுபட்ட ஒலி வடிவங்களைப் பார்ப்போம்
கடகம் (ஓலைப்பொட்டி/ ஓலைக்கூடை)
கொட்டாப்புளி (சுத்தியல் )
வெஞ்சனம் (பக்க உணவு)
முட்டத்தட்டு (வெஞ்சனம் வைக்கும் சிறிய தட்டு)
ஆணம் (குழம்பு)
கவுறு (கயிறு)
பத்துக்கொரடு (கட்டிங் பிளையர்)
சீர் எனத்தி (சீர் வரிசை)
பைய (மெதுவாக)
செத்த நேரம் (சிறிது நேரம்)
வெள்ளனே (அதிகாலையில்)
உசுப்பு (எழுப்பு)
அங்குட்டு, இங்குட்டு எங்குட்டு (அங்கே இங்கே எங்கே)
சோறு திண்டாச்சா (சோறு சாப்பிட்டாச்சா )
பகுமானம் (பெருமை)
களவாணி (கள்வன்,  திருடன்)
ரவைக்கு (இரவில்)
கோக்கு மாக்கு ( கோணல்)
தடுமன் ( சளிப் பிடித்தல்)
தடுக்கு (ஒருவர் அமரும் அளவுக்கு சிறிய ஓலைப்பாய் )
அண்ணம்பொஞ்சாதி (அண்ணி)
இட்லிக்கட்டி (இட்லி வடிவில் உள்ள சவுக்காரம்- சலவை சோப்பு )
தட்டுவாணி (பெண்களை வசை பாடும் சொல்)
நேதோ (நிதமும் – தினமும்)
அறந்தாங்கி – (தேங்காய்த் தலையன் – அறந்தாங்கி தேங்காய் அளவில் பெரிதாய் இருக்கும்)
அடியாத்தி (வியப்புச் சொல்)
குத்தமில்ல (பரவாயில்லை)
சொளகு (முறத்தின் நீள் வடிவம் )
மூளி முக்காடு (பொருள் தெரியவிலலை )
வாவரிசிச் சோறு ( வாழ்வரசி – சுமங்கலிகளுக்கு உணவளிப்பது )
மானங்கானாப் பாத்தியா (பூரி பாத்தியா என்றும் சொல்வார்கள்)
ரோதை (மாவு அரைக்கும் பொறி – Flour Mill)
வைவாக (திட்டுவார்கள்)
ஏம்புட்டு , ஒம்புட்டு (என்னுடையது , உன்னுடையது )
காக்குளம்பு-சரியானா உச்சரிப்பை எழுத முடியாது KAAEYKKULAMBU (காய்க்குளம்பு., -சாம்பார்) தாளிச்சோறு (புலவு சோறின். திரு. வடிவம்) ,பொடிக்கறிகுளம்பு
(இவை மூன்றும் (மூன்று மட்டும்தான் )  திரு.வில் திருமணம் போன்ற விழாக்களில் பரிமாறப்படும் சிறப்பு உணவு .பிரியாணி,நெய்ச்சோறு உண்பதைப்போல் பல மடங்கு உண்ணச் செய்யும் அப்படி ஒரு சுவை . மறந்து மறைந்து போன சுவைகளில் ஓன்று ) .
நீதி மன்றத்தில் சாட்சி சொல்கிறார் ஒரு திரு, வாசி
“வக்காக்ரையோரமா இருந்தே .
சரிவுண்டாக
ம் ண்டே
சாக்கிண்டாக
சரிண்டே. அல்லாவுக்குப் பொதுவா அதுக்கங்குட்டு ஒன்னுந்த்தெரியாது (அத்தா சொன்னது)
ஒப்பாரிப்பாடல்கள் திரு. வட்டாரத்திலும் செட்டி நாட்டிலும் ஒரு முக்கிய சடங்கு. இதற்காவே பெண்களை அழைத்துச் செல்வார்கள் . இது பற்றி அத்தா சொலலிக்கேட்ட இரண்டு வேடிக்கைக் கதைகள்
ஒப்பாரிப்பாடல் தெரியாத ஒரு பெண்ணை அழைத்துச் சென்று விட்டர்கள் . அவர் உரக்கப் பாடுகிறார்
“அழுகத் தெரியாதுன்னு அப்பாவே சொன்னனே .
புதுப்பட்டி ஆச்சி கூட்டியாந்து விட்டுட்டாளே”
இன்னொரு வீட்டில் ஒப்பரிப்பாடல் பாட போன பெண்களில் ஒரு பெண்  அந்த வீட்டில் பாவக்காய் நிறைய காய்த்துத் தொங்குவதைப் பார்த்து விட்டு அதை இன்னொரு பெண்ணுக்கு ஒப்பாரி பாடுவது போலவே
“பந்தலிலே பாவக்கா “ என்று தெரிவிக்கிறார் .
சோகத்தின் ஊடேயும் இதைக் கவனித்த வீட்டம்மா
“ வெதக்கி  விட்டிருக்கே “
என்று எதிர்ப்பாட்டுப் பாடினர்
(விதை எடுப்பதற்காக பாவக்காயை பறிக்காமல் விட்டிருக்கிறேன் . நீங்கள் பறித்து விடாதீர்கள் என்று உணர்த்துகிறார் )
நிறைவாக ஒரு சிறிய வேடிக்கைக்கதை- அடிக்கடி கரீம் அண்ணன் சொல்லக்கேட்டது
விருந்தினர்கள் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் விருந்து கொடுப்பவர் சாப்பாடு திகட்டுமாறு ஒரு நறுமணத்தைக் கலந்து விடுவார்.
விருந்துக்கு வருபவர்கள் அந்த நறுமணத்தை முறித்து வயிறார உண்பதற்காக மடியில் எலுமிச்சம்பழத்தை மறைவாக வைத்துக்கொண்டு வருவார்கள்.
மடியை சோதனை போட்டு எ. பழத்தைப் பறிமுதல் செய்ய நுழைவாயிலில் ஒரு ஆளை விருந்தளிப்பவர் நிற்க வைத்திருப்பார்.
சென்ற பகுதி பற்றி கருத்துக்களும் பாராட்டுக்களும் தெரிவித்த பாப்டி, சகோதரி  சுராஜ் .மெஹராஜ் ஜோதிக்கு நன்றி
ஜோதி
வேலூர், சி.எம்.சி. தோன்றிய விதம் பற்றிய செய்தி சிலிர்க்க வைத்தது.
எங்களுக்கு, சி.எம்.சியுடன் நெருக்கம் அதிகமென்பதால்'பழைய நினைவுகள், அதிகம் வந்தது .வேலூர் பயணக் கட்டுரை மிகச் சிறப்பாக இருந்தது. வேலூர் அருகில் காட்பாடி டவுன்ஷிப்பில் நாங்கள் கொஞ்ச நாள் இருந்தோம். மிக அழகான ஊர். இதய துல்லா, இப்று மட்டுமிருந்தார்கள். கிஷோர் இல்லை. அத்தா, அம்மாவுடன் கடைசியாக இரண்டு நாள் தங்கி சென்றது. வழியனுப்ப அவன் அத்தா வுடன் வழியனுப்ப ஸ்டேஷனுக்குச் சென்ற இதய துல்லாவிற்கு அம்மா ஒரு ரூபாய் கொடுத்தது. அம்மாவின் மறைவிற்கு பின் அத்தா அங்கு கொஞ்ச காலம் தங்கியது. ஷஹா வுக்கு நல்ல கம்பனியில் வேலையும் வாங்கிக் கொடுத்தது. கொஞ்சம் நாள் தங்கியு மிருல்தான். (பேயிங் கெஸ்ட் . ) சி. எம்.சி. மெயின் , கண் ஆஸ்பத்திரி, பாகாயம் எல்லாமே ரொம்ப பரிச்சியம். சிட்டுக் கும், சி.எம்.சி.யில் வைத்தியம் பார்க்கப்பட்டது. சுரா வுக் கும் அங்கு தான் ஆப்ரேடின் செய்யப்பட் டது.முத்து, கரீம் அண்ணன், கதீ ஜா , சமீமுடன் ஒரு முறை வந்தார் கள். எல் லோரம் சேர்ந்து, பதினாறு வயதினி லே, படம் பார்த்தோம். அப்புறம் நூறு ரூபாய் சில்லறைக்கு , நீ நம் குடும்ப வளர்ப்பு முறை பற்றி எழுதியது நெஞ்சைத் தொட்டது. இன்ஷா அல்லா அடுத்த பயணத்தில் சந்திப்போம்.                        இப்று அங்கு ரொம்ப பாப்புலர் .அக்கம் பக்கம் எல்லோருக்கும் ரொம்ப செல்லம்.'ஏதாவது திட்டினால் கோபித்துக் கொண்டு பக்கத்து வீட்டிற்குப் போய் விடுவான். சு ராஜ் வந்தால் ரொம்ப சந்தோக்ஷப்படுவான். அத்தா வந்தால் கட்டிலில் ஏற வேமாட்டான். கிஷோ ரை தேவையற்ற வரவாக, கடைசி வரை எதிரியாகத்தான் பாவித்தான். சொல்லிக் கொண்டே போகலாம்..
...மெஹராஜ்
வேலூர் பயணக்கட்டுரை மிக நன்றாக இருந்தது.  நான் அங்கு எல்லாம் வந்ததே இல்லை.  அதனால் அந்த ஊர் பற்றி நீ எழுதியவை மிக சுவாரஸ்யமாக இருந்தது.
சுராஜ் .
வேலூர் பயணக்கட்டுரை மிகவும் அருமை.
வேலூரில்தான் எனது பள்ளி வாழ்க்கை முடிந்தது.
வெள்ளைசீருடை மிகவு,ம் நன்றாக இருக்கும்.
கொத்துக்கொத்தாய்க் காய்க்கும் அவரைக்காய் போட்டு அம்மா வைக்கும் கறிக்குழம்பு மிகவும் ருசியாக இருக்கும்.
அபபொ ழுதெல்லாம் குடைமிளகாய்  மிக வும்அபூர்வ,ம். 
சிட்டுஅத்தா  ஊட்டுயி  லிருந்து குடைமிளகாய்,பட்டாணி  எல்லா,ம் வாங்கி வரும்.
அதில் அம்மா வித விதமாக சமைக்கும்.
அத்தா அம்மாவிற்கு மகளாக இருந்த கடைசி ஊர்.1967.
1977 சிட்டுவிற்கு உடம்பிற்கு முடியாமல் வந்து   ஜோதியும்,லியாகத் அலி அண்ணனும் c.m.c.மருத்துவ மனையில் சிட்டுவைச் சேர்த்து வைத்தியம் பார்த்தை வாழ்க்கையில் என்றுமே மறக்க முடியாது,மறக்க வும் கூடாது.
இன்னும் நிறைய c.m. c.யி ல் இருந்த  நினைவுக ள் இருக்கி ன்றன.அதெல்லாம் வேண்டா,ம்.அடிக்கடி தோதி வீட்டிற்கு போவது மகிழ்ச்சியாக இருக்கும்.
பயணம் தொடரட்டு,ம்.☪✍👌 .
இ(க)டைச்செருகல்
சங்கப்புலவர் கணியன் பூங்குன்றனார் திரு.வின் அருகில் உள்ள மகிபாலன்பட்டி என்ற ஊரைச்சேர்ந்தவர். மயிவாலம்பட்டி என்று பேச்சு வழக்கில் சொல்லப்படும் இந்த ஊரில்தான் பெரிய குப்பி (பாத்துக்குப்பி ) வாழ்ந்தது அவரின் துணைவர் ஆ இ ஆசி முகமது ராவுத்தர் பூங்குன்றனாருக்கு சிலை அமைக்க ஏற்பட்ட குழுவில் இடம் பெற்றிருந்தார் . இது பற்றிய குறிப்பு யுனிவர்சல் பதிப்பகம் வெளியிட்ட இசுலாமியக் கலைக்களஞ்சியத்தில் இடம் பெற்றுள்ளது . ஆணையராக இருந்த பீர் முகமதின் (அத்தாவின்)  மைத்துனர் என்று குறிப்பிட்டிருப்பதாய் நினைவு
பூங்குன்றனார் பாடல் சங்க காலத்திலேயே உலகளாவிய உறவு பற்றிப் பேசுவது ,நன்மை தீமைகளுக்கு அவரவரே பொறுப்பு எனபது – இவை இசுலாமியக் கருத்துகளோடு ஒத்துப்போவதாய் எனக்குத் தோன்றுகிறது   

பாடல்  
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 192)

பொருள்[தொகு]

எல்லா ஊரும் எம் ஊர்
எல்லா மக்களும் எம் உறவினரே
நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை
துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை
சாதல் புதுமை யில்லை; வாழ்தல்
இன்பமென்று மகிழ்ந்தது இல்லை
வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை
பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல
இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று
தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்
ஆதலினால்,பிறந்து வாழ்வோரில்
சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை
பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை

பாடலும் பொருளும் வலையில் பிடித்தது
சென்ற பகுதியில்
செருப்பு பிய்ந்து விட்டது இதை எப்படி ஆங்கிலத்தில் எழுதுவது” என்று தமிழ் இந்துவில் வந்த வினாவைக் கேட்டிருந்தேன், இந்த வாரம் வந்த இந்துவில் செருப்புப் பிய்ந்து போகும் என்று மிரட்டுவதற்கு .I will slipper you என்று சொல்லலாம் என்று போட்டிருந்தார்கள் . இது சரி எனத்தோன்றவில்லை
Chappell is torn off என்பது நான் அனுப்பிய விடை. பாப்டி slipper tore  என்று அனுப்பியிருக்கிறது .இரண்டுமே ஓரளவு பொருத்தமாகத் தெரிகிறது

 

 இறைவன் அருளால்                      
அடுத்த வாரம்

நிறைவுப்பகுதி
வலைநூல் முகவரி
கூகிள் தேடலில்
sherfuddinp.blogspot .com














No comments:

Post a Comment