மெல்லினம் வல்லினம்
வங்கியில் ஒரு விழா,.சிறப்புக்கூட்டம் என்றால் தங்கள் இல்ல நிகழ்வாக எண்ணி வங்கியை
அலங்கரிப்பதும் சிறப்பான உடை உடுத்தி வருவதும் பெண்களின் சிறப்புக்கள் ..நல்ல சமூக உணர்வுடன் குருதிக்கொடை கொடுக்க முன்வரும் பெண்களும்
உண்டு பணியில் நல்ல சிரத்தை காட்டுவார்கள் .
ஆனால் ஆணும் பெண்ணும்
ஒன்றாகப் பணிபுரியும்போது சில பிரச்சனைகள் வருவது தவிர்க்கமுடியாத ஓன்று
தற்காலிக ஊழியராக
இருந்த ஒரு இளம்பெண், அடிக்கடி ஆண் ஊழியர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருப்பார். அந்தபெண்ணை
அழைத்து எச்சரித்தேன் “ நீங்கள் இருவரும் என்ன பேசிக்கொள்கிறீர்கள் என்பது
எனக்குத் தெரியாது அது பற்றி தெரிந்து கொளளவும் நான் விரும்பவில்லை. ஆனால் இது
வங்கியில் தொடர்வதை என்னால் அனுமதிக்க முடியாது. அவர் நிரந்தர ஊழியர் அவரை ஒன்றும்
செய்ய முடியாது. எதாவது பிரச்சனை வரும்போல் தெரிந்தால் உங்களை வீட்டுக்கு அனுப்ப
நான் தயங்க மாட்டேன் “ என்று உறுதியாகச் சொன்னேன்.
முதலில் என்
சொற்களை தவறாக நினைத்த அந்தப் பெண் பின்
சிந்தித்துப்பார்த்து தன்னை சரி செய்து கொண்டார்.
பிறகு அவர் நிரந்தரப்
பணியாளராகி விட்டார் .இப்போதும் என் அறிவுரைக்கு நன்றி சொல்வார்.
பெண அதிகாரி
ஒருவருக்கும் ஆண் ஊழியர் ஒருவருக்கும் மிக நெருக்கமான நட்பு ஏற்பட்டது.இருவரும்
முற்றிலும் வேறுபட்ட மதங்களைப் பின்பற்றுபவர்கள் சக அதிகாரியாகிய என்னிடம் தன்னைப்பற்றிய
எல்லா செய்திகளையும் இயல்பாகப் பேசும் அந்தப்பெண் இது பற்றி என்னிடம் சொன்னதில்லை
.நானும் அது பற்றி தெரிந்ததாய்க் காட்டிக்கொள்ளவில்லை
ஒரு நாள் அவராகவே
முன் வந்து இது பற்றிப்பேச ஆரம்பித்தார்.
“ இது போன்றவற்றில் பெண்கள் மிகவும் ஏமாந்து போகிறார்கள் கொஞ்சம் எச்சரிகையாக
இருப்பது உங்களுக்கு நல்லது “ என்று என் கருத்தைச் சொன்னேன்
“அந்த நிலைஎல்லாம்
தாண்டி விட்டது. எங்கள் நட்பு தெய்வீகமானது” என்றார்.
“எல்லாம் இறைவனருளால்
நல்ல விதமாக நடந்தால் எனக்கும் மகிழ்ச்சி “ என்றேன்
சில காலம் கழித்து
அந்த ஆண் ஊழியர் தன் மதத்தைச் சார்ந்த வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.
நீண்ட
இடைவெளிக்குப்பின் அந்தப் பெண் ஊழியரை சந்தித்தபோது அவர் திருமணம் ஆகாமலேயே
இருந்தார். “ இப்போதும் ஒன்றும் காலம் கடந்துவிடவில்லை . ஒரு நல்லவரைப் பார்த்து
திருமணம் செய்து கொள்ளுங்கள் “ என்று சொன்னேன். “உங்களைப்போல நல்ல ஆணைக்
கண்டுபிடிப்பதுதான் .சிரமமாக இருக்கிறது “ என்றார். அதற்கப்புறம் அவர் தொடர்பில்
இல்லை
பணியில் மிக
சிரத்தையுடன் செயலாற்றும் அந்த நல்ல பெண் நலமுடன் வாழ்வார் என நம்புகிறேன்
ஒருதலை நட்பு ஓன்று
உருவானது . ஆண் பெண்ணை நினைத்து உருகிக்கொண்டிருக்க பெண்ணுக்குத் துளியும் அப்படி
ஒரு எண்ணம் இல்லை இருவரும் ஒரே மதம். அதனால் ஆண் பெண் வீட்டில் போய் தானே பெண்
கேட்கும் அளவுக்குத் துணிந்து விட்டார். நல்ல வேளையாக வாயைக்
கட்டுப்படுத்திக்கொண்டதால் மானம்
மதிப்புக்கெடாமல் திரும்பி வந்தார்
அந்தப்பெண்ணுக்கு
வேறொரு இடத்தில் திருமணமாகி விட,, சில நாள் தாடி வளர்த்து சோகமாக இருந்த ஆண்,
பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டார்.
ஆணும் பெண்ணும்
ஒருமித்து நட்பு கொண்டு அதுவும் கைகூடாமல் போனதும் உண்டு. வழக்கம் போல் ஆண் தாடி வளர்த்தார் . பிறகு சரியாகிவிட்டார்..
ஆண் ஊழியர்களாலும்
அவ்வப்போது பிரச்சனைகள் வருவது உண்டு..
வங்கிப்பணியில்
சேர்ந்து சில மாதங்களே ஆன எழுத்தர் ஒருவர்
திடீரென என் காலில் விழுந்து நீங்கள்தான் என்னைக் காப்பாற்ற வேண்டும் என்றார்..
பதறிப்போன நான் அவரைத்தூக்கி விட்டு என்ன ஏது என்று கேட்டேன்
நான் எங்கு போனாலும்
என்னைப்பின் தொடர்ந்து இருவர் வருகிறார்கள் . நான் உணவு விடுதிக்குப் போனால் கூட
பின்னாலேயே வருகிறார்கள் என்றார்.
சிறிய ஊர், சிறிய
கிளை .அங்கு வேற்று மனிதர்கள் வரும் வாய்ப்பு இல்லை. அவருடன் உணவு உண்ணச் செல்லும்
மற்ற ஊழியர்களிடம் விசாரித்தேன்,. எங்களுக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லை
என்றார்கள் .
அடுத்த சில நாட்களில்
அந்த ஊழியர். அஞ்சல் அலுவலகத்தில் போய் என்னைப்பற்றி விசாரித்திருக்கிறார்கள் .
என் வேலை போய்விடுமோ என்று அச்சமாக இருக்கிறது என்றார்.
அஞ்சல் அலுவலகத்தில்
தொலைபேசியிலும் அஞ்சல் அலுவலரிடம் நேரிலும் கேட்டேன். அப்படி யாரும் வரவில்லை
என்று சொன்னார்கள்
அடுத்து அந்த ஊழியர்
சொன்னது என் ஐயத்தை உறுதிப்படுத்துவது போல் அமைந்தது “ என்னைத் தொடர்ந்து வானூர்தி
ஓன்று பறந்து என்னைக் கண்காணிக்கிறது “ என்றார். சரி இது ஒரு மனப்பிறழ்வு என்று
தெளிவாகியது
இப்போது இது என்னுடைய
பிரச்சனையாகி விட்டது. தமிழ் நாட்டின் ஒரு பின் தங்கிய மாவட்டத்தைச் சேர்ந்த அவர் எளிய குடும்பத்தின் முதல் பட்டதாரி
அவர் பற்றி மேலிடத்துக்குப் அறிக்கை
அனுப்பினால் அவரின் பணி
பாதிக்கப்படலாம் .சொல்லாமல் விட்டு நாளைக்கு அவரால் வங்கிக்கு எதாவது பிரச்சனை
வந்தால் ஏன் முன்பே தெரிவிக்கவில்லை என்று என்னைக் கேட்பார்கள்.
நன்கு சிந்தித்து அவர்
பற்றிய விவரங்களை எழுதிவட்டார அலுவலகத்தின் தலைமை அதிகாரிக்கு அவர் பெயரில்
தனிப்பட்ட கடிதமாக அனுப்பி வைத்தேன்.
நீண்ட
இடைவெளிக்குப்பின் அந்த ஊழியரை அண்மையில் சந்தித்தேன். இப்போது அவர் வங்கியில்
மேலாளர்
வட்டார அலுவலத்தில்
இருந்து ஒரு நாள் தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு . என் கிளையில் பணி புரிந்த
ஒருவரின் பெயரைக்குறிப்பிட்டு “ அவர் குடும்ப வாழ்க்கை பற்றி விசாரித்து ஒரு
அறிக்கை அனுப்புங்கள் “ என்றார்கள். இது அலுவலக ஆணையா இல்லை தனிப்பட்ட வேண்டுகோளா
(official order
/personal request ) என்று கேட்டேன் ,
இது கோட்ட மேலாளரின் ஆணை என்றார்கள். ஆணையை எழுத்து வடிவில் அனுப்புங்கள் என்று
சொன்னேன் எழுத்து வடிவில் ஆணை வரவே இல்லை..
அதிகாரியாக நான்
பணியாற்றிய கிளையில் ஒரு எழுத்தர் என்னிடம் வந்து I feel something strange என்றார். ஏன் என்ன என்று கேட்டேன். நீங்களே பாருங்கள் மேலே பான் (fan) ஓடுகிறது . கீழே
மெழுகுவர்த்தி எரிகிறது என்றார்.
அது ஒன்றும் இல்லை
மின் அழுத்தம் குறைவாக இருப்பதால் குழல் விளக்குகள் எரியவில்லை .அதனால்
வெளிச்சத்துக்கு மெழுகுவர்த்தி பயன். படுத்துகிறார்கள். மின் விசிறிகள் மெதுவாக
ஓடுகின்றன என்று விளக்கினேன்
அவரோ புரிந்துகொள்ள
மறுத்து தான் சொன்னதையே திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார் . இன்னொரு பிறழ்
மனம்
பல்லாயிரக்கணக்கான
ஊழியர்கள் பணி புரியும் வங்கியில் இது போல் ஒன்றிரண்டு பேர் இருப்பது இயல்பானதே
ஒரு நாள் காலை
வங்கிக்கிளை திறந்த சிறிது நேரத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு -.பேசியவர் தன்னை ரிசர்வ் வங்கியின் துணை ஆளுனர் என்று
அறிமுகப்படுத்திக்கொண்டார் .தன்னிடம் உயர் மதிப்பிலான அமெரிக்கன் டாலர்
(பத்தாயிரம் டாலர்) நோட்டுக்கள் இருப்பதாகவும் தன் வாகனம் பழுதடைந்து விட்டதால்
தன்னால் வெளியே போக முடியவில்லை அதனால் தான் தங்கியிருக்கும் விடுதிக்கு இந்தியா
ரூபாய் நோட்டுக்கள் கொண்டு வந்து மாற்றித் தர வேண்டும் என்றும் கூறினார்/.
நீங்கள் எங்கே
இருக்கிறீர்கள் என்று கேட்டேன். அருகில் உள்ள ஒரு நகரில் உள்ள ஒரு விடுதியின்
பெயரைச் சொன்னார்.
நீங்கள் இருக்கும் ஊரில் நிறைய வங்கிகள் இருக்கின்றன,.
இன்னும் சற்றுத் தொலைவில் உங்கள் ரிசர்வ் வங்கிக் கிளையே இருக்கிறது போய்
மாற்றிக்கொள்ளுங்கள் என்றேன்.
ரிசர்வ் வங்கி
கவர்னரிடம் பேசுகிறோம் என்பதை நினைவில் நிறுத்திப் பேசுங்கள் என்று மிரட்டினார்
தெளிவாகத்
தெரிந்துதான் பேசுகிறேன் என்று சொல்லி தொடர்பைத் துண்டித்தேன். உடனே உயர்
அலுவலகத்துக்கும் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தேன்
அமெரிக்க டாலரில்
பத்தாயிரம் டாலர் நோட்டெல்லாம் கிடையவே கிடையாது என்பது அவருக்குத் தெரியவில்லை
பாவம் .
அமெரிக்க டாலரில்
நூறு டாலர் நோட்டுக்கு மேல் அச்சிடப்படுவதில்லை .அதற்குமேல் அதிக மதிப்புள்ள டாலர்
நோட்டுகள் சட்டத்துக்கு புறம்பான பணப் பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்துப்படுவது
கண்டறியப்பட்டு அவை புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டன.
இதற்கு நேர் மாறாக
நம் நாட்டில் ஆயிரம் ரூபாய் நோட்டை விலக்கி விட்டு இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள்
அறிமுகப்படுத்தபட்டன . எதற்காகவோ , யாருக்காகவோ தெரியவில்லை
மிக நன்றாகத் தெரிந்த
ஒருவர் வங்கிக்கு வந்தார். தன் உறவினர் வெளிநாட்டிலிருந்து பெருநாள் செலவுக்காக
வங்கிக் காசோலை அனுப்பியிருக்கிறார். அதை மாற்றித்தர வேண்டும் என்றார் .சரி
கொடுங்கள் என்றேன்.வங்கி முறைப்படி வெளிநாட்டுக் காசோலையை சரிபார்த்து என்
கணக்கில் வரவு வைத்து பிறகு என் காசோலைக்கு நான் பணம் வாங்க எப்படியும் இருபது
முப்பது நிமிடம் ஆகிவிடும். நான் விரைந்து ஒரு இடம் போக வேண்டியிருப்பதால் நீங்களே
பணம் வாங்கிக்கொடுத்து விடுங்கள் என்றார்.
சரி
வெளிநாட்டிலிருந்து உங்களுக்கு வந்த காசோலையைக் கொடுங்கள் என்றேன். ஒரு பையைத்
திறந்து அதை எடுத்துக் கொடுத்தார் .
மிக நேர்த்தியாக
எடுக்கப்பட்ட ஒளிநகல் அது. அதைச்சொன்னவுடன் அவர் முகத்தில் ஈயாடவில்லை. கண்டு பிடித்து விட்டார்களே எனஒரு சலிப்போடு
எழுந்து போய் விட்டார்.
பொறுப்பான
அரசுப்பணியிலிருந்து ஓய்வுபெற்ற அவர் தாடி தொப்பி, நீண்ட உடையுடன் இருப்பார்.
முன்பு ஒரு முறை வீட்டுக்கு வந்த அவர், நான் சொல்கிறவர்களுக்கு வங்கிக்கடன்
கொடுத்தால் உங்களுக்கு ஒரு நல்ல தொகை கிடைக்கும் என்று பேரம் பேசினார்.
மிகக்கடுமையாக திட்டி
விட்டு பிறகு வயதில் மூத்தவரை இப்படிபேசி விட்டோமே என்று வருந்தினேன்
வெளித்தோற்றம், உடை
இவற்றிற்கும் எண்ணம் செயல்களுக்கும் தொடர்பு இல்லை என்பது தெளிவானது.
வங்கி வாடிக்கையாளர்
ஒருவர் அரசு உயர் பதவியிலிருந்து ஒய்வு பெற்றார். பணியில் ஏற்பட்ட சில
இடையூறுகளால் அவருக்குக் கிடைக்கவேண்டிய தொகையில் ஒரு பகுதிதான் கிடைத்தது என்று
வருத்ததுடன் சொன்னார். வந்த பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்யுங்கள் என்று
சொன்னேன்
இரண்டு நாள் கழித்து
தனியார் நிதிநிறுவனத்துக்கு அவர் கொடுத்த காசோலை வங்கிக்கு வந்தது . பணி ஓய்வில்
கிடைத்த முழுத் தொகைக்கும் நிதி நிறுவனத்துக்கு காசோலை கொடுத்திருந்தார்..
காசோலை வங்கிக்கு
வந்த நேரத்தில் அந்த வாடிக்கையாளரும் வங்கிக்கு வந்தார். அவரிடம் சொன்னேன் “
இப்போது கூட நீங்கள் எழுதிக் கொடுத்தால் காசோலையை
திருப்பி அனுப்பி விடுகிறேன் :”
“இல்லை இல்லை , நான்
அந்த நிறுவனத்தின் நிதி அறிக்கைகளை கவனமாகப்
படித்துப் பார்த்துத்தான் அதில் வைப்பு நிதியில் முதலீடு செய்ய முடிவு
செய்தேன். மிக வலுவான நிறுவனம். மேலும் வங்கி வட்டி போல் இருமடங்கு கொடுக்கிறார்கள் .ஒரு பவுன் தங்க
நாணயம் பரிசும் கொடுத்தார்கள் “ என்று சொன்னார்.
சரி உங்கள் விருப்பம்
என்று சொன்னேன். எண்ணி ஏழாவது நாள்- அந்த நிதி நிறுவனம் மூடப்பட அழாக்குறையாக
வந்து அங்கலாய்த்தார்.
அண்டை நாட்டுப்படை
வீரர்களால் போர்க்கைதியாக பிடிக்கப்பட்டு பல மாதம் அங்கு சிறையில் இருந்து பின்
விடுவிக்கப்பட்டமுன்னாள் படை வீரர் ஒருவர் எங்கள் வங்கியில் ஓய்வூதியம் வாங்க
வருவார். . பகை நாட்டில் போர்க்கைதியாக இருந்தது ஒரு துயரமான நிகழ்வு. ஆனால்
விடுதலை பெற்று நம் நாட்டுக்கு வந்த பின்
அதை விட சிரமத்தை அனுபவித்தேன்.என்றார்.
அவர் பகை நாட்டின்
ஒற்றனாக மாறி வந்திருக்கலாம் என்ற
ஐயத்தில் அந்த ஐயம் தீர்ந்து ஒரு தெளிவு பிறக்கும் வரை ஒரு பகை நாட்டு வீரன் போலவே நடத்துவார்களாம்..எண்பது
வயதைத் தாண்டிய அவர் பகலில் தூங்க மாட்டாராம் . ஆயுள் குறைந்து விடுமாம்.
நல்ல வசதியாகத்
தோற்றமளிக்கும் மூத்த குடிமகன் ஒருவர் எப்போதும் ஒரு கவலை தோய்ந்த முகத்துடனே
இருப்பார். ஒரு நாள் அவரிடம் கேட்டேன் என் இப்படி கவலையாகவே இருக்கிறீர்கள் என்று
.கண்களில் மளமளவென்று கண்ணீர் வர அவர் சொன்னார்.
எனக்கு மூன்று
மகன்கள் .மூவரையும் நன்கு படிக்க வைத்தேன். ஒரு மகன் அமெரிக்காவிலும் மற்ற இருவரும் வளைகுடா நாடுகளில் மிக நல்ல
ஊதியத்துடன் பணியில் சேர்ந்தபோது பெருமையில் பூரித்துப்போனேன். மூவருக்கும்
திருமணமாகி குடும்பத்துடன் வெளி நாடுகளில் இருக்கிறார்கள் .குறைவில்லாமல் எங்கள்
தேவைக்குமேல் மாதம் தவறாமல் பணமும் அனுப்புகிறார்கள் .ஆனால் இந்தியாவுக்கு வருவது
பற்றி சிந்திப்பதே இல்லை.முதுமையின் இயலாமையினால் நானும் அவர்கள் இடதுக்குப் போக
முடியவில்லை .என் மக்கள், மருமக்கள், பேரன் பேத்திகளைப் பார்க்க மிக மிக
ஆசைப்படுகிறேன். என் ஆசை நிறைவேறுமா என்று தெரியவில்லை. தேவைக்கு, அளவுக்கு
மிஞ்சிய.பணத்தால் எந்தப்பயனும் இல்லை என உணர்கிறேன் என்று புலம்பித்தள்ளி விட்டார்,
எல்லோருக்கும் தங்கள்
உணர்வுகளுக்கு ஒரு வடிகால் தேவைப்படுகிறது . ஆறுதலாக யாரவது ஒரு சொல் சொன்னால்
தங்கள் வரலாறு முழுவதையும் கொட்டித் தீர்த்து விடுகிறார்கள் . பல மேலைநாடுகளில்
தன் மனச்சுமைகளை தொலைபேசியில் தெரிவித்து ஆறுதல் பெறுவது ஒரு கட்டண சேவையாக
வளர்ந்துள்ளதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்..இங்கும் அதுபோல் நம் நாட்டிலும் வரலாம்
வந்திருக்கலாம்,
இத்துடன் தொடரின்
இப்பகுதியை நிறைவு செய்கிறேன்
சென்ற பகுதி பற்றி கருத்துக்களும் பாராட்டுகளும் தெரிவித்த உடன் பிறப்புக்கள்
மெஹராஜ். ஜோதி. ஓய்வுபெற்ற வங்கியாளர்கள் ரவி ராஜ், ராஜா சுப்பிரமணியம்,
முருகேசன், தொலைபேசியில் பாராட்டிய பாப்டி அனைவருக்கும் நன்றி
Meharaj 070917
அஸ்ஸலாமு
அலைக்கும் ஷர்புதீன்! எல்லோரும் நலமா?
உன்
வங்கி அனுபவங்கள் பற்றிய தொடரை இன்று தான் படித்தேன். முன் வந்ததெல்லாம் படிக்க
நேரமில்லாமல் போய் விட்டது. மிகவும் சுவாரஸ்யமான அனுபவங்கள். அதோடு மிகவும் கவனத்தோடு இருந்த உன் அனுபவங்களை
பகிர்ந்து கொண்டது மிகவும் நன்றாக இருக்கிறது. அதற்கெல்லாம் மேல் உன் ஞாபகத்தில் இவ்வளவு விஷயங்கள் ஸ்டோர் பண்ணி
வைத்திருப்பது பெரிய விஷயம்
மாஷா
அல்லாஹ்!
இன்னும்
உன் எழுத்துப் பணி தொடர்ந்து உன் நினைவாற்றல்கள் வெளி வரட்டும்.
அல்ஹம்துலில்லாஹ்
10 09 17
Jothy Liakath
தம்பி...
அஸ்ஸலாமு அலை கும். 'மனி தரில் இத்தனை நிறங்களா ? ..... தலைப்பிற்கேற்றபடி, பல்வேறு குனா திசியங்கள் கொண்ட , நல்லவர், கெட்டவர் என்ற பல்வேறுபட்ட பாகுபாடு களிலிருந்தாலும், 'வங்கிப் பணி, என்ற ஓர் அமைப்பின் கீழ் பணிபுரிந்தவர்
களைப்பற்றி எழுதியிருந்த விதம் அருமை. என்ன? நம்
குடும்பம், குடும்ப உறுப்பினர்கள் , வாழ்ந்த, பழகிய இடங்கள், மனிதர்களைப்
பற்றி எழுதும் போது அவரிசியம் அதிகமிருந்தது. இப்போதும் நடை, எடுத்துக் கொண்ட தலைப்பில் , சற்றும் விலகாமல் விஷயங்களை சேகரம்
செய்து எழுதும் பாணியில் துளி குறை யும் கண்டுபிடிக்க முடியாது. எழுதும்
விஷயங்களில் தான் சற்று வறட்சி காணப்படுகிறது. நிறை, குறை களைப்பற்றி தயங்காமல் எழுதுங்கள் என்று நீ ஒரு முறைகேட்டிநந்த
தால் தான் இதை தெரிவிக்கி றேன். உனக்கு தப்பாகப் பட்டால் மன்னிக் கவும்.
இன்ஷாஅல்லாஹ் மீண்டும் சந்திப்போம்......
100917 CBRA Murugesan Mdu
Thanks with expectation
of next chapter
CB Rtd
Raviraj
Really
interesting and educative to all banking personnel and common man...
CB Rtd
Raja Subramani
[22:07,
9/8/2017] i: Good. You could have mentioned the places at least. We find all
sorts of people in the bank as we find varied customers.
[22:37,
9/8/2017] +91 81242 45405: purposely I avoided mentioning places and
branches
[07:10,
9/9/2017] cb retd rajs subramani: I understand. However mentioning of
places will give a better picture. There are certain characters which are to
tamed. Good day
இ(க)டைச்.செருகல்
இப்பகுதிக்கு தலைப்பு
மெல்லினம் வல்லினம் என்று சொல் வழக்குப்படி வைத்திருக்கிறேனே தவிர பெண்கள் ஆண்களை
விட வலிமையானவர்கள் என்பது என் கருத்து . தாய்மைப்பேறு ஓன்று போதும் அவர்கள் உடல்
உறுதிக்கும் மன வலிமைக்கும் சான்று கூற . . பிரிவைத் தாங்கிக்கொள்வதிலும் அவர்கள் வலிமை
புலப்படுகிறது. பெரும்பாலான ஆண்கள் நொறுங்கிப் போகிறார்கள்
சென்ற பகுதியில்
ஒரிகாமி என்ற ஜப்பான் நாட்டு காகிதக் கை வினை பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். நாம்
காகிதக்கப்பல் செய்வோம். அதிலேயே சற்று மேம்பட்டு வண்ணக்காகிதத்தில் பல அழகிய
பறவைகள் இன்னும் பல உருவங்கள் செய்யவதுதான் ஒரிகாமி.
இது பற்றி ஒரு
நெஞ்சம் நெகிழும் நினைவு
ஹிரோசிமா அணுகுண்டு
கதீர் வீச்சினால் பாதிக்கப்பட்டு புற்றுநோய்வாய்ப்பட்டார் சடகோ என்ற பத்து வயது
சிறுமி..அவரைப்பார்க்க வந்த தோழி சதுர வடிவான காகிதத்தில் ஜப்பானியர் வணங்கும்
கொக்கு செய்து ,இது போல் ஆயிரம் கொக்கு செய்தால் நோய் குணமாகும் என்பது நம் நாட்டு
நம்பிக்கை என்று ஆறுதல் சொன்னாள். இதைக்கேட்டு தன்னம்பிக்கையும் துணிச்சலும்
அடைந்த சடகோ நிறைய கொக்குகள் செய்யத் தொடங்கினார்.. உடல் வலிமை குறைந்து கொக்கு
செய்ய முடியாத நிலையில் இறந்துபோன சடகோவின் படுக்கையில் அறுநூற்று நாற்பத்தி
நான்கு.கொக்குகள் இருந்தன. தோழிகள் கூடி கொக்குகள் செய்து ஆயிரம் எண்ணிக்கையை
நிறைவு செய்தனர் .அதோடு நில்லாமல் நிதி திரட்டி ஹிரோஷிமா நகரின் மையப்பகுதியில் குழந்தைகள் அமைதி நினைவாலயம்
ஓன்று அமைத்து
உலகத்தில் அமைதி வேண்டும் இது
எங்கள் கதறல்,இது எங்கள்.வேண்டுகோள்
என்று எழுதி
வைத்தார்கள்
(ஆறாம் வகுப்பு தமிழ்
பாட நூலிலிருந்து- நன்றி பேரன் பர்வேஸ்)
நிறைவாக அண்மையில்
கட்செவியில் படித்த ஒரு நல்ல செய்தி
Disability can be measured
Ability cannot be measured
இறைவன் நாடினால் மீண்டும் சந்திப்போம்
வலை நூலில் படிக்க
கூகிள் தேடலில்
sherfuddinp.blogspot.com
.