Friday, 15 June 2018

வண்ணச்சிதறல் 19 தங்க மலை







 ஈகைத்திருநாள் வாழ்த்துக்கள்

 
முழு மாதமும் நோன்பு நோற்று உணவின் மாண்பை உணர்ந்து
.  நிறைய தான தருமங்கள் செய்து  ஈத்துவக்கும் இன்பம் அறிந்து  புனிதப்பெருநாளை நிறை மனதுடன் கொண்டாடி மகிழ்கிறோம்
இந்த இனிய நன்னாளில்  சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
முதலில் ஒரு சிறிய  கதை
அர்ச்சுனன் ஒரு நாள் கண்ணனிடம் கேட்கிறார்
“நாங்களும் நிறைய தான தருமங்கள் செய்கிறோம் .எங்களை நாடி வரும் வறியவர் யாரும் வெறுங்கையுடன் திரும்பிப் போவதில்லை 
ஆனால்  கர்ணன் மட்டுமே கொடையில் சிறந்தவர் என்பது போல் உலகமே பேசுகிறது , எல்லாம் அறிந்த நீங்களும் பேசுகிறீர்கள் இது ஏன்?”
அதற்கு கண்ணன் சொல்கிறார்
நாளை அதிகாலையில் என்னிடம் வா இதற்கு விளக்கம் சொல்கிறேன் “
அடுத்த நாள் காலைப்பொழுதில் கண்ணன் தங்க மலை ஒன்றையும் , வெள்ளி மலை ஒன்றையும் அர்ச்சுனனிடம் கொடுத்து
“இன்று பொழுது சாய்வதற்குள் இந்த இரண்டு மலைகளையும் தருமம் செய்து முடித்து விட வேண்டும் முடியுமா ?”
என்கிறார்
ஒப்புக்கொண்ட அர்ச்சுனன் ஒரு கோடாரியை வைத்துக்கொண்டு அந்த வழியே போவோர் வருவோர்க்கெல்லாம் தங்கத்தையும் வெள்ளியையும் வெட்டிககொடுத்துக்கொண்டே இருக்கிறார்
மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வாங்கிக்கொண்டே இருக்கிறார்கள்  உச்சிப்பொழுதும் வந்து விட்டது  .ஆனால் மலைகள் மட்டும் அரைக்கால் பங்கு கூட குறைந்த பாடில்லை
நேரம் செல்லச்செல்ல கூட்டமும் குறைந்து ஒன்றிரண்டு பேராக வரும் நிலை..பொழுது சாய இன்னும் பத்து நிமிடமே இருக்கிறது . தங்கமும் வெள்ளியும் பாதி கூடக் குறையவில்லை . அர்ச்சுனன் தன் இயலாமையை ஒப்புகொண்டார்.
உடனே கண்ணன் கர்ணனை அழைத்து வரச் செய்து
“இன்னும் பொழுது சாய சில நொடிகளே இருக்கின்றன. அதற்குள் இந்த தங்கம் வெள்ளி மலைகளை கொடை கொடுத்து தீர்க்க முடியமா ?’
என கண்ணன் வினவ அவருக்கு மறுமொழி கூட சொல்லவில்லை கர்ணன் 
இருவரை அழைத்து தங்க மலை உனக்கு , வெள்ளி மலை இன்னொருவருக்கு என்று கொடை கொடுத்து பொழுது சாய்வதற்குள் ஒரே நொடியில்  இரண்டு மலைகளையும் காலி செய்து விட்டார் .
, கண்ணன் கர்ணன் அர்ச்சுனன் எல்லாம் உருவகப்பெயர்கள்தான் . கதையின் கருத்துத்தான் நாம் நினைவில் கொள்ளவேண்டியது
இரண்டு மலைகளையும் பொழுது சாய்வதற்குள் கொடை கொடுத்து தீர்க்க வேண்டும் என்பது மட்டுமே கண்ணன் சொன்னது
எத்தனை பேருக்குக் கொடுக்க வேண்டும், ஒருவருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று எந்த வரையறையும் வகுக்கவில்லை .
அதுபோல் பொழுது சாய்வதற்குள் என்று சொன்னாரே ஒழிய
 பொழுது சாயும் வரை என்று சொல்லவில்லை
ஆனால் அர்ச்சுனன் தனக்குள் ஒரு அளவை வகுத்துக்கொண்டு அந்த அளவு மீறாமல் வெட்டிக்கொடுத்துக்கொண்டே இருந்தார் பொழுது சாயும் வரை .
உளவியலில் இவை ஊகத்தின் அடிப்படையில் மனதில் ஏற்படுத்திக்கொண்ட தடைகள் என்பார்கள் ( Mental barriers based on assumptions)

இதே போல்தான் சக்காத்து எனும் கட்டாயத் தருமம்  கொடுப்பதிலும் நாமாகவே ஒருவருக்கு இவ்வளவுக்கு மேல் கொடுக்கக்கூடாது என்று வகுத்துக்கொள்கிறோம்.-நாம் எனபதில் நானும் உண்டு
நான் கொடுக்க வேண்டுய தொகை முப்பது ஆயிரம் என்றால் ஐநூறிலிருந்து ஐந்து ஆறு ஆயிரம் வரை பல பேருக்குப் பிரித்துத்தான் கொடுக்கிறேன்
ஒருவர் அல்லது இருவருக்கு இதை முழுமையாகக்  கொடுத்து அவர்கள் ஒரு சிறு வணிகமோ தொழிலோ துவங்க உதவி செய்ய நானும் நினைப்பதில்லை .
அப்படியே நான் கொடுத்தாலும் அதை வைத்து தொழில் துவங்க எத்தனை பேர் முன் வருகிறார்கள் ? பணத்தைக் கொடுத்துவிட்டு நடையைக்கட்டுங்கள் என்பதுதான் வாங்குவோர் எண்ணமாக இருக்கிறது
ஏழ்மையில் இருக்கும் ஒருவருக்கு ஒருவரோ அல்லது சிலரோ சேர்ந்து அவர்கள் முழு சக்காத்து தொகையும் கொடுத்து அவர் வாழ்வில் முன்னேற்றம் காண வைத்து அடுத்த ஆண்டு சக்காத்து வாங்காத நிலைக்கு உயர்த்தி அதற்கு அடுத்த ஆண்டு அவர் பிறருக்குக் கொடுக்கும் நிலையை உருவாக்குவதுதான் உண்மயான சக்காத்தின் அடையாளம் என்று படித்த நினைவு
முயற்சி செய்து பார்ப்போமா ?
இதை எல்லோரும் முழு மனதுடன் தொடர்ந்து  செயல்படுத்தினால் காலப்போக்கில் நம் சுற்று வட்டத்தில் வறுமை, ஏழ்மை  இல்லாமல் ஆக்கிவிடலாம் இறைவன் நாடினால்
இப்படி இல்லை என்போர் இல்லாத நிலை வந்து விட்டால் பின் யாருக்கு சக்காத் கொடுப்பது என்ற எண்ணம் தோன்றுகிறதா ?
கவலையே வேண்டாம்
தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் உலகத்தையே அழிக்க எண்ணினான் பாரதி
தனி ஒருவன் உணவிற்கு வழியில்லாமல் உறங்கப்போனால் அந்த ஊரே இறைவனின் பாதுகாப்பை விட்டு விலகிச் செல்கிறது என்பது நபி மொழி
ஆனால்
யேமன், தெற்கு சுடான் ,சோமாலியா ,வடகிழக்கு நைஜீரியா இந்த நான்கு நாடுகளில் மட்டும் இரண்டு கோடி பேர் போதிய உணவு கிடைக்காமல் உயிர் துறக்கும் நிலையில் இருக்கிறார்கள் .
அந்த உயிர்களைக் காப்பாற்ற உடனடியாக 4.4 பில்லியன் டாலர் – ஏறத்தாழ இருபத்தியேழு ஆயிரம் கோடி ரூபாய்  தேவை என்கிறது ஐ. நா. சபை(
நம் நாட்டினர் அனைவரும் ஒன்றிணைந்து சக்காத் தொகையை அங்கு அனுப்பி
அந்த நிலையும் முழுதாக மாறி
இறைவன் அருளால்
வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால் என்ற நிலை வந்தால் அதை விட மகிழ்ச்சி வேறென்ன இருக்க முடியும் ?
(வண்மை-வள்ளல் தன்மை)
தவறாக ஏதும் சொல்லவில்லை என எண்ணுகிறேன் .தவறு இருந்தால் இரக்கமே உருவான ஏக இறைவன் என்னை மன்னித்தருள மனமார வேண்டுகிறேன்.
மீண்டும் ஈத் வாழ்த்துக்கள்
மூளைக்கு வேலை

              0              0              0
                                0              0              0
                                0              0              0

இந்த ஒன்பது புள்ளிகளை கையை எடுக்காமல், கோட்டின் மேல் கோடு வராமல் நான்கு நேர் கோடுகளால் இணைக்க வேண்டும்
விடை அடுத்த பகுதியில்
இ(க)டைச்செருகல்
ஒரு காலம் வரும் –தங்கத்தை தானமாகக் கொடுத்தாலும் வாங்க ஆள் இருக்காது
என்று ஒரு நபிமொழி எதிலோ படித்த நினைவு
இறைவன் நாடினால்
 மீண்டும்
சந்திப்போம்
வலைநூல் முகவரி
கூகிள் தேடலில்
sherfuddinp.blogspot.com



No comments:

Post a Comment