Sunday, 11 November 2018

கதை நேரம் 10 செல்விருந்தும் வருவிருந்தும்


செல்விருந்தும் வருவிருந்தும்

அந்த மிக  நல்ல மனிதருக்கு ஒரு மிக மிக  நல்ல பழக்கம் .விருந்தாளி இல்லாமல் சாப்பிட மாட்டார்.. சுற்றம் நட்பு மட்டும்தான் விருந்தாளி என்று இல்லை . பசி என்று யார் வந்தாலும் அவர் விருந்தாளிதான்.அவரோடு சேர்ந்து உட்கார்ந்துதான் சாப்பிடுவார்
ஒரு நாள் இப்படி விருந்தாளியை எதிர்நோக்கி வெகு நேரம் காத்திருந்து ஒரு வழியாக வழிப்போக்கர் ஒருவரைக்கண்டு மகிழ்ந்து அவரை அழைத்து வந்து சாப்பிட இருவரும் உட்கார்ந்தனர்
தன் வழக்கப்படி இறைவனை புகழ்ந்து  வணங்கி விட்டுசாப்பிடத் துவங்கிய அந்த நல்லவர் விருந்தாளியிடம் நீங்கள் இறைவணக்கம் செய்யவில்லையா என்று கேட்க எனக்கு இறைவன் மேல் பெரிய நம்பிக்கை எல்லாம் கிடையாது என்று அவர் சொன்னார்
இறை வழியில் முழுமையாக இருந்த அந்த அன்பருக்கு கட்டுக்கடங்காத சினம் வந்து “இறை நம்பிக்கை இல்லாதவருக்கு என் வீட்டில் சாப்பாடு கிடையது “ என்று விரட்ட அந்த வழிப்போக்கர் பசியோடு எழுந்து போய்விட்டார்.
இப்போது அந்த நல்லவருக்கு குழப்பம் . தான் செய்தது சரியா , பசியோடு உணவு உண்ண உட்கார்ந்தவரை விரட்டி விட்டோமே இது மிக இழிவான செயல் அல்லவா ஏன் இந்தத் தடுமாற்றம் என்று பலவாராக எண்ண ஓட்டங்கள்
இந்த நிலையில் அந்த நல்லவரோடு இறைவன் பேசுகிறான்
“ மிகப்பெரிய தவறு செய்து விட்டிர்கள் . என் மேல் நம்பிக்கை கொள்ளாத அவருக்கு நான் அறுபது ஆண்டுகளாக உணவு அளித்து பாதுகாத்து வருகிறேன் .ஒரு வேளை உணவு அளிக்க உங்களால் முடியவில்லை .
அவர் நல்லவரா கெட்டவரா என்பதை படைத்த நான்தானே தீர்மானிக்க வேண்டும் ! உங்களுக்கு யார் அந்த உரிமையைக் கொடுத்தது
. .உங்களையும் அவரையும்  படைத்த ஏக இறைவன் அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் என்பது உங்களுக்கு மறந்து விட்டதா “
பதைபதைத்துப்போன அந்த நல்லவர் தாம் விரட்டிய முதியவரைத் தேடிக்கண்டுபிடித்து உணவருந்த வரும்படி அழைத்தார்..
பசியில் வாடியிருந்த அவர் உடனே வந்து உணவருந்தினார். பசி,, சோர்வு நீங்கியபின்  தங்கள் மனமாற்றத்துக்கு என்ன காரணம் என்று கேட்டார்
தனக்கு இறைவன் தெரிவித்ததை அவரிடம் எடுத்துச்சொல்ல அந்த முதியவர் கண் கலங்கி மனம் மாறி இதுவரை செய்த தவறுக்கு வருந்தி இறை நம்பிக்கையாளராக மாறி விட்டார்
நபி இப்ராஹீம் அலை அவர்கள் வாழ்வில் நடந்த நிகழ்வு இது . இறைவனே நட்பு கொள்ள விரும்பிய அந்த மாமனிதர் இப்ராஹீம் நபியின் சிறப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம் .
.இறைவன் ஆணையிட்டால் எதையும் இழக்கத் துணிந்த தியாகச்செம்மல். அந்த இறைவனையே கேள்வி கேட்ட பகுத்தறிவாளர்  கடும் தண்டனை கிடைக்கும் என்று தெரிந்தும் சிலை வணக்கத்தை எதிர்த்து போராடிய புரட்சியாளர் .இறைவன் உன்னை பலிகொடுக்கச் சொல்கிறான் இது பற்றி உன் கருத்தென்ன என்று சிறுவனாகிய தன மகனிடம் கேட்ட சமத்துவவாதி  இதற்கெல்லாம் மேல் அன்பும் பண்பும் இரக்க சிந்தனையும் நிரம்பியவர்
இத்தனை நற்குணங்கள் கொண்ட அந்த மாமனிதருக்கு இறைவன் மிகப்பெரும் சிறப்புகளை வழங்கியிருக்கிறான்
அவரை நினைவு கூறும் ஒரு கட்டாயக் கடமை- புனித ஹஜ் பயணம் , ஒரு தியாகத்திருநாள் , அவர் பெயரில் புனித மறை குர்ஆனில் ஒரு முழு அத்தியாயம் , ஒவ்வொரு தொழுகையிலும் அவர் பெயர் உச்சரிக்கப்படும் சிறப்பு புனித மறையாம் குரானில் அவர் பெயர் 69 இடங்களில் சொல்லப்படுவது  தாடி வளர்த்தல், மீசைகுறைத்தல் நகம் வெட்டுதல் போன்ற அவரின் வழிமுறைகள் இன்றளவும் பின்பற்றப்படுவது 
இப்ராகிம் நபி அவர்கள் வாழ்வில் ஒரு நிகழ்வு பற்றிப்பார்த்தோம். சிறிய நிகழ்வென்றாலும் உயர்ந்த வாழ்வியல் சிந்தனைகளைத் தருகின்றது
ஒன்று பசியென்று யார் வந்தாலும் உணவளிப்பது மனித நேயக்கடமை .அவர் இனம் என்ன மொழியென்ன, தேசமென்ன இதெல்லாம் ஆராயக்கூடாது
அடுத்து ஒரு மனிதனை நல்லவனா தீயவனா   இறை அருளுக்கு உரியவனா என்பதெல்லாம் தீர்மானிக்கும் உரிமை படைத்த ஏக இறைவனுக்கு  மட்டுமே உரியது .படைப்புகளான நமக்கு அந்த தகுதி கிடையாது   
இந்த நிகழ்வு பற்றி பலமுறை பலரும் கேட்டு, படித்து இருக்கலாம். அண்மையில் ஜனாப் அமீர் அலி இதை முக நூலில் வெளியிட்டிருந்தார்
நல்ல செய்திகளை எத்தனை முறை படித்தாலும் நல்லதுதான் 

மீண்டும் அடுத்த பகுதியில்
Blog Address
sherfuddinp.blogspot.com
B/F /w   11112018   





No comments:

Post a Comment