Saturday, 3 November 2018

அத்தாவின் எழுத்துக்கள் 1கம்பன் காட்டும் இலக்கியச் சுவை 1



 


 கம்பன் காட்டும்  இலக்கியச் சுவை 1


பாலகாண்டத்தில் மிதிலைக்காட்சிப்படலம் என் கண்முன் காட்சியளிக்க அதில் கண்ட காட்சி சிறிது கூறுகிறேன்
.மிதிலையில் மணிக்கொடிகள் வருக வருகவென இராம, லக்குமான , முனிவரை வரவேற்கின்றன.
நகருக்குள் நுழைந்ததும் மாடவீதிகளைப் பார்க்கின்றனர்..வீதிகளில் மாலைகள் துவண்டு கிடக்கின்றன..அவற்றினின்று தேன் பெருக்கெடுத்து ஓடுகின்றது ..வண்டுகள் அவற்றின் மேல் மயங்கிக்கிடக்கின்றன
இந்த மாலைகள் ஏது? இனிய மொழியுடைய மாதர்கள் தங்கள் கணவருடன் ஊடிய காலத்து கோபித்து எடுத்தெறிந்த மாலைகள் அவை..
’ பண்தரு கிழவியார்கள் புலவியில் பிரிந்த கோதை’வண்டெனக்கிடந்து தேன் சொரிகின்றன
இவற்றைப் பார்த்ததும் கம்பனது கற்பனைத்தேர் வெகுவிரைவாக காமபுரிக்குப் புறப்படுகிறது .சோர்ந்த மாலை, அவற்றினின்று பெருகியோடும் தேன்,அங்கு மயங்கிக் கிடக்கும் களிவண்டுகள் இவற்றிற்கு உவமை என்ன தெரியுமா ?
கலவிப்போரில் ஒசிந்த மாதர் ,காமநீர் பெருக்கி மயங்கிய மைந்தர் ,
     கலவிப்போர் எத்தகையது என்றால் ,ஒருதலைக்காமத்தால் ஏற்பட்டதல்ல.. அவ்வாறாயின் மாதரும் மைந்தரும் இப்படி மயங்க மாட்டார்கள் .இது தலைத்தலை சிறந்த காதல் .மேலும் இது கள்ள நட்பல்ல .முறைப்படி சேர்ந்த பயமற்ற கலவிப்போர் .பயமற்ற மனமொத்த காதலால் ஏற்பட்ட கலவிப்போரில் மயங்கிய மாதர்போல தேன்பெருக்கு. அதே மயக்கத்தில் அவர் மீது கிடக்கும் ஆடவர் போல வண்டுகள் பாட்டைப் பருகுங்கள்

தண்டுதல் இன்றி ஒன்றி.
   
தலைத்தலைச் சிறந்த காதல்
உண்டபின். கலவிப் போரின்
   
ஒசிந்த மென் மகளிரேபோல்.
பண் தரு கிளவியார்தம்
   ?
புலவியில் பரிந்த கோதை.
வண்டொடு கிடந்து. தேன்சோர்.
   
மணி நெடுந் தெருவில் சென்றார்.

இனிஅவர்களின் செவிகளில் இன்பத்தேன் பாய்கிறது.சங்கீத விருந்து அளிக்கப்படுகிறது .தென்விளி என்னும் ராகம் அவர்கள் காதில் பாய்கிறது .தென்விளிப்பாணி தீந்தேன் செவிமடுக்கின்றார்கள்;. இந்தக்கீதம் ஏது! இது புன்முறுவலோடுபெண்கள் அளித்த விருந்து !
“வெள்ளிய முறுவல் தோன்ற விருந்தென மகளிர் அளித்த தென்விளிப்பாணித் தீந்தேன் “
இந்த அழகிகள் புன்முறுவல் பூத்தார்கள் . ஆனால் வாயால் பாடவில்லை

பின்னர் பாட்டு ஏது!
“கள்ளென நரம்பை ஊக்கி கையொடு மனமும் கூட்டி ஈந்த விருந்து;

தளிர்கை தோல் வீணையைப்பற்றி கள்ளென நரம்பை ஊக்கி கையொடு மனமும் கூட்டி வெள்ளிய முறுவல் தோன்ற விருந்தென மகளிர் ஈந்ததென்விளிப்பாணித் தீமதேன்”
செவி மடுத்தார்கள்

வள் உகிர்த் தளிர்க் கை நோவ மாடகம் பற்றி, வார்ந்த
கள் என நரம்பு வீக்கி, கையொடு மனமும் கூட்டி,
வெள்ளிய முறுவல் தோன்ற, விருந்து என மகளிர் ஈந்த
தெள் விளிப் பாணித் தீம் தேன் செவி மடுத்து, இனிது சென்றார்.

.
அடுத்து நாட்டியம் ; ஐயநுண் இடையார் ஆடுகிறார்கள் ;கைவழியே நயனம் செல்கிறது; கண் வழியே மனமும் செல்கிறது
   
கை வழி நயனம் செல்ல, கண்வழி மனமும் செல்ல,
ஐய நுண் இடையார் ஆடும் ஆடக அரங்கு கண்டார்

இம் மாதிரி பந்தாடுதல், வட்டமாடுதல் முதலிய பல பல காட்சிகளைக் கண்டனர் .ஓரிடத்தில் பெண்கள் ஊஞ்சல் ஆடுகிறார்கள் . ஊஞ்சல் மரகதம் போன்ற பச்சைக் கமுகில்கட்டப்பட்டுள்ளது . கமுகு மரங்களில் பவளச் செங்காய்கள் கொத்துக் கொத்தாகத் தொங்குகின்றன. இதிலிருந்து பெண்கள் ஆடுகிறார்கள் . ஆனால் அவர்கள் மட்டுமா ஆடுகிறார்கள் !

 Image result for கமுகுபச்சைக் கமுகில் பவளச் செங்காய்கள்

ஒவ்வொரு ஆட்டத்தின் போதும் அதைப்பார்த்து ஆடவரின் உள்ளமுமல்லவா ஊசலாடுகிறது .இந்த ஆட்டத்தால் அவர் கூந்தலின் மலர்களில் மொய்க்கும் வண்டுகள் வெகுண்டெழுகின்றன,.ஆனால் அந்த மங்கையரின் இடை இவ்வளவு சிறிதாக இருக்கின்றதே என ஏங்குகின்றன
இந்த ஆட்டத்தை கற்பனை செய்கிறான் கம்பன் .எப்படி ! பாபிகள் உலகில் வந்து வந்து போவது போல் ஊசலில் வந்து போகிறார்கள்  இந்த நுண்  இடை மாந்தர்கள்
பாட்டைப் பாருங்கள்

பூசலின் எழுந்த வண்டு மருங்கினுக்கு இரங்கிப் பொங்க,
மாசு உறு பிறவி போல வருவது போவது ஆகி,
காசு அறு பவளச் செங் காய் மரகதக் கமுகு பூண்ட
ஊசலில், மகளிர், மைந்தர் சிந்தையொடு உலவக் கண்டார்.

 இனி சீதையைக் கண்டு கண்ணொடு கண்ணினைக் கௌவி இதயம் மாறிப்புக்கு இப்படியெல்லாம் ஆகித் திரும்பி விட்டான் ராமன்

சீதை பாடு என்ன !

(அடுத்த பகுதியில்)


எழுத்தாக்கம்
ஹாஜி கா. பீர் முகமது
நகராட்சி ஆணையர் பணி ஓய்வு

(கம்பராமாயணத்தில் இலக்கியச் சுவை
என்ற தலைப்பை மட்டும்  சற்றே சுருக்கியுள்ளேன் –பீ.சர்புதீன் )

வலைநூல் முகவரி
sherfuddinp.blogspot.com
B/F/W    04112018 sun 




 


No comments:

Post a Comment