மன(ணி)க்கோட்டை
Some are born great
Some achieve greatness
And some have greatness thrust upon them
சிலர் புகழுடன் பிறக்கிறார்கள்
சிலர் புகழைத்தேடி அடைகிறார்கள்.
சிலருக்கு புகழ் அவர்களைத்தேடி
வருகிறது
(மொழி பெயர்ப்பு என்னுடையது ஓரளவு சரி
என நினைக்கிறேன்)
இந்த சொல் வழக்கை பல நேரங்களில்
படித்திருப்போம் , கேள்விப்பட்டிருப்போம்
இந்த சொல் வழக்கு எதில் வந்தது என்பது
பற்றி பின்பு பார்ப்போம்
இப்போது
குடகு மலைப்பகுதி .- வண்ண வண்ணப் பூக்கள் வானை முட்டும் மரங்கள்
சலசலக்கும் ஓடை, இடியோசையுடன் கொட்டும் அருவி அடர்ந்த காடு ஆண்டு முழுதும் இதமான
தட்ப வெப்பம் என இயற்கை எழில் முழுமை பெற்ற
ஒரு பகுதி
அந்தக்குடகுப்பகுத்யில் பரந்து
விரிந்த ஒரு பெரிய காப்பித்தோட்டம்
தோட்ட உரிமையாளரின் வீடு – ஒரு
மாளிகை, அரண்மனை என்று சொல்லும்படி
வசதியான விசாலமான ஓன்று
வீட்டுப்பணிக்கு, தோட்ட வேலைக்கு
சமையலுக்கு என பலதரப்பட்ட பணியாட்கள்
அவர்களை நிர்வகிக்கும் மேலாளர்
மணி
அவர்தான் இந்தக்கதையின் நாயகன்
மிக நல்லவர்
உயர்ந்த குணமுடைய உத்தமர்
அழகும் அறிவும் மிக்கவர்
ஆண்மையின் கம்பீரம் மிளிர்பவர்
இளமை ததும்புபவர்
என்றெல்லாம் தன்னைப்பற்றி கற்பனை செய்து கொண்டு
நெஞ்சைத் தூக்கி செருக்கு நடை போடும்
சுமாரான நல்லவர்
;நாற்பதை நெருங்கும் இளைய முதியவர்
அல்லது முதிய இளைஞர்
சிரிப்பு நகைச்சுவை, ஆடல் பாடல் இசை இதெல்லாம் அவருக்கு தெரியாது- பிடிக்காது
தன்னை எல்லோரும் குறிப்பாக பெண்கள்
அதிலும் அழகிய இளம்பெண்கள் விரும்புகிறார்கள்
நட்பு கொள்ளத் துடிக்கிறார்கள்
மணமுடிக்க வரிசையில் மாலையோடு
காத்திருகிறார்கள் என்ற ஒரு மிகத் தவறான எண்ணம், திடமான நம்பிக்கை அவர் நெஞ்சில் நிறைந்து வழிந்துகொண்டேயிருந்தது
பாலு
மாரியம்மாள்
அந்தோனி
அந்த வீட்டின் மற்ற பணியாளர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்
மணிக்கும் அவர்களுக்கும்ஏழாம்
பொருத்தம்
அவர்கள் மூவரும் எப்போதும் அரட்டை
சிரிப்பு ஆட்டம் பாட்டம் என்று குதூகலமாக பணியில் ஈடுபடுவார்கள்
குறிப்பாக பாலு நல்ல குடிகாரர்
நகைச்சுவை உணர்வு மிக்கவர்
மணியின் அதட்டல்
அதிகாரத்தை கண்டு கொள்ளவே மாட்டார்
மேற்கொண்டு மணியை கிண்டல் செய்து
கொண்டே இருப்பார்
மணி கடுப்பாகி மேலும் அதிகாரத்தை நிலை
நிறுத்த முயற்சிப்பார்
இப்படி ஒரு பனிப்போர் தொடர்ந்து
கொண்டே இருக்கும்
இதையும் தாண்டி வீட்டு உரிமையாளரிடம்
மணி இவர்கள் பற்றி புகார் செய்வதும் உண்டு
வீட்டு உரிமையாளர் ஓவியா
பெயருக்கேற்ற அழகுப்பதுமை
திருமணம் ஆகாத இளம்பெண்
அறிவிலும் சிறந்த பெருந்தன்மையான
சீமாட்டி
பணச்செருக்கு சிறிதும் கிடையாது
மணியின் வயதுக்கு ஒரு
மரியாதை வைத்து அவர் சொல்லும் புகார்களை ஒரு புன்னகையுடன் காது கொடுத்துக்
கேட்பார்.
பாலு மாரி அந்தோனி மூவரும் ஆடினாலும்
பாடினாலும் தங்கள் பணிகளை நிறைவாகச்
செய்வார்கள் என்பது ஓவியாவுக்குத் தெரியும்
எனவே தேவையில்லாமல் அவர்களைக்
கண்டிக்க மாட்டார்.
அந்த ஊர் தட்ப வெப்பத்துக்கு குடியை ஒரு பெரிய குற்றமாக
யாரும் பார்ப்பதில்லை
ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்தது
போல்
மணி தனக்கு படியளக்கும் ஓவியாவும் தன்னை மணமுடிக்க விரும்புவதாய் ஒரு கற்பனயை வலுவான கற்பனையை வளர்த்துக்
கொண்டார்
அவர் சொல்லுவதையெல்லாம் ஓவியா
புன்னகையுடன் காது கொடுத்துக் கேட்பது இந்த எண்ணத்தை மேலும் வலுவாக்கியது
தான் ஓவியாவை மணம் செய்து அந்த
பெருந்தோட்ட உரிமையாளர் ஆகி பெரிய செல்வந்தர்
ஆனது போல் கற்பனையில் வலம்
வந்தார்
அந்த நினைப்பில் பாலு மாரி அந்தோணியை
மிகவும் பாடாய்ப்படுத்தினார்
மூவர் குழு மணியைப் பழி
வாங்கத் துடித்தது
குறிப்பாக பாலுவும் மாரியும் சேர்ந்து
சிந்தித்தார்கள்
ஓவியா பற்றி மணியின் மனக்கோட்டையை
அறிந்த அவர்கள் அதன் அடிப்படையில் ஒரு சதித்திட்டம் தீட்டினார்கள்
ஓவியா மணிக்கு எழுதியது போல் ஒரு காதல் மடல் வரைந்தார்கள் வழக்கமான
மானே , தேனே சிங்கமே யானையே தேக்கு மரமே
போன்ற காதல் மொழிகள் போக சில சிறப்பு மொழிகளையும் சேர்த்தார்கள்
‘ நீங்கள் என்னைப்பார்த்து புன்னகைப்பது எனக்கு மிகவும் பிடிக்கிறது “
“ இன்னும் நீங்கள் வெற்றிலை போட்டு அந்தக்காவிப்பல் தெரியச்சிரித்தால்
என் மனம் மயங்கும் “
“மஞ்சள் நிற ஆடை உங்கள்
அழகுக்கு மேலும் அழகூட்டும் “
அந்தகடிதத்தை மணி கண்ணில் படும்படி தோட்டத்தில் போட்டு விடுகிறார்கள்
அதைப் படித்த மனி கள்ளுண்ட குரங்காகி விட்டார் .காதல் போதையும்
செருக்கும் தலைக்கேற தன்னிலை மறந்து ஆடிப்பாடினார்.
உடனே ஒரு மஞ்சள் நிற உடை
வாங்கி அணிந்து கொண்டு வாய் நிறைய வெற்றிலை போட்டு குதப்பிக்கொண்டு விரைந்து
சென்று ஒவியாவைப்பார்த்து விடாமல் பல்லிளித்தார்
உண்மை என்னவென்றால்
மஞ்சள் நிற ஆடை ஓவியாவுக்கு
பிடிக்கவே பிடிக்காது
வெற்றிலை போடுபவர்களைக் கண்டாலே விலகிப் போய்விடுவார்
மேலும் தன் நெருங்கிய உறவினர் ஒருவர் மறைந்த வருத்தத்தில் இருந்த ஒவியா
மஞ்சள் நிற உடையில் வெற்றிலைக்காவி பல்
தெரிய விடாமல் புன்னகைத்த மணியைக்கண்டு மிகவும் கடுப்பாகிப் போனார்
காதல் போதையில் நிலைமை புரியாமல் தொடர்ந்து இந்தக் காட்சியை மணி அரங்கேற்றுகிறார்
ஒரு நிலையில் கடுப்பு தாங்க முடியாத ஓவியா காவல்துறை மூலம் மணியை
சிறையில் அடைத்து விடுகிறார்
சிறையில் அடைக்கப்பட்ட மணி ஒரு மனநிலை சரியில்லாதவர் போல்
நடத்தப்படுகிறார் . .அவருடைய செருக்கு
அவருக்கு நிறைய பகைவர்களை சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது
அதனால் மிகக்கடுமையாக அவர் தண்டிக்கபடுகிறார்
இதை அறிந்து ஓவியா மனம் வருந்துகிறார்
பலருக்கு, குறிப்பாக என் வயதை ஒத்தவர்களுக்கு இந்தக்கதை எங்கோ
கேள்விப்பட்டது போல் தோன்றும்
ஆம். இளநிலை பட்ட வகுப்பில் ஆங்கிலபாடத்தில் படித்த பனிரெண்டாம் இரவு
(Twelfth Night or What
You will) என்ற
ஷேக்ஸ்பியர் எழுதிய புகழ் பெற்ற நாடகத்தில் வரும் ஒரு பாத்திரம்தான் மணி
பெயர்களை சற்று
மாற்றியிருக்கிறேன்
மணி மல்வோலியோ
ஓவியா. ஒலிவியா
பாலு சர் டோபி பெல்ச்.
மாரி
மரியா
அந்தோனி ஆன்ட்ரூ
பொள்ளாச்சி நல்ல முத்துக் கவுண்டர்
மகாலிங்கம் கல்லூரியில் ஆங்கிலப்
பேராசிரியர் திரு நாயர் அவர்களின் குரல் அரை நூற்றாண்டு தாண்டியும் என் காதுகளில்
ஒலிக்கிறது
Charles Lamb said of Malvolio that
Malvolio is not a ludicrous character but becomes one by
accident
சரி அந்தக்கதை இப்போது எதற்கு
என்கிறீர்களா ?
சில நிகழ்வுகள், சில மனிதர்களைப்
பார்க்கும்போது , கேள்விப்படும்போது மல்வோலியோவை நேரில் பார்த்த உணர்வு .
ஏற்படுகிறது
நீங்களும் இது போன்ற ஒரு எண்ணத்தை
உணர்ந்திருப்பீர்கள்
யார் கண்டது என்னையே மல்வோலியோவோடு
ஒப்பிடுபவர்களும் இருக்கலாம்
எனவே இதை மேற்கொண்டு விளக்காமல்
உங்கள் சிந்தனை,கற்பனைக்கு விட்டு விடுகிறேன்
நிறைவாக
இந்தப் பதிவின் துவக்கத்தில் நீங்கள் புகழ் பெற்ற சொல்வழக்கு
Some are born great
Some achieve greatness
And some have greatness thrust upon them
நாம் இப்போது பார்த்த பனிரெண்டாம் இரவு Twelfth Night என்ற நாடகத்தில் வருவதாகும்
இதைச்சொல்லும்போது மீண்டும் சிந்தனை பொள்ளாச்சிக்குப்
பறக்கிறது .இப்போது சமத்தூர் ராம ஐயங்கார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி –
பதினொன்றாம் (பள்ளியிறுதி) வகுப்பு. ஆங்கில ஆசிரியர்
பெயர் நினைவில் இல்லை. குடுமி, பஞ்சகச்சத்துடன் மிகத்தெளிவான அழகான ஆங்கில
உச்சரிப்பு
நேரு பற்றிய பாடம்
Nehru was born great
Achieved greatness and
Had greatness thrust upon him
எங்கள் அத்தா – நகராட்சி ஆணையராக இருந்த ஹாஜி கா. பீர்முகம்து இந்த
வரிகளுக்கு மிகப் பொருத்தமாக பிறப்பிலும்
சிறப்பு வாழ்வும் சிறப்பு மறைவும் சிறப்பு, மறைந்த பின்னும் சிறப்பு என வாழ்ந்தவர்கள்
.
இ(க)டைச்செருகல்
இளமை நினைவுகள் அதிலும் மாணவப்பருவ நினைவுகள் மனதை
வருடும்போது தென்றல் வீசும் சோலையில் மரக்கிளையில் ஊஞ்சல் கட்டி ஆடுவது போன்ற ஒரு இனிமை சுகம் .பரவசம்
இறைவன் நாடினால் மீண்டும் சந்திப்போம்
வலைநூல் முகவரி
sherfuddinp.blogspot.com
B F W 24072019 Wed
[25/07, 08:04] Jothy Liakath: குடகு மலையின் இயற்கை அழகை வர்ணித்து, ஷேக்ஸ்ப்பியரின் டொல்த் நைட்டில் பயணித்து, நேருவிடம் வந்து, அத்தாவில் முடிந்த விதம்,அழகு,
ReplyDeleteகிரேட், சூப்பர்.
[25/07, 08:06] Jothy Liakath: இடையில் பள்ளி, கல்லூரி நினைவுகள் இதமான தென்றல் வருடல்.jothy liakath