Saturday, 16 December 2023

மலர்ந்தும் மலராத பாதி மலர்



மலர்ந்தும் மலராத பாதி மலர் 
16122023sat

பகலவனைக் காணாமல்
பாதி மட்டும் மலர்ந்திருக்கும்
பார்த்தவிழி பூத்திருக்கும்
பாரிஜாதச் சீரிதழோ

மலர் வனத்தில் தனி யிருந்து
மன்னவனின் துணை இழந்து 
புலராதப் பொழு தெண்ணி
மலராதப் புது வரவோ

மழைத்துளிகள் முகம்பட்டு
விரியும் இதழ் பனிச்சிட்டு
இழையும் காலை இளமொட்டு
மலர மயங்கி நாணியதோ

விழை பரிதி விரைந்து வர
இழுத்தணைத்து இன்பம் தர
மழைமேகத் திரை விலக
மனமுருகி வாடியதோ

வண்டு வந்து தேனெடுக்க
வாசல்மூடும் பெண் நிலவோ
தென்றல் வந்து தீண்டினாலும்
தீர்ந்திடாத பெருந்துயரோ

செண்டுகளில் சேர எண்ணா
வண்ணமில்லா வடி மலரோ
கண்டு கண்டு காதல் கொள்ளா
கண் விழியால் பயன் உளதோ

விகர்த்தனனின் வரவெண்ணி
விழிபாதி விரிந்ததுவோ
வெண்கிரணக் கதிர் பட்டு
வெட்கி இதழ் மூடியதோ

இகமெங்கும் மலர்க் காதல்
இலக்கியங்கள் படைத்ததுவோ
சுகமான தமிழ் மொழிக்கு
சுவை கூட்டப் படைத்ததுவோ
somasekar

மலரின் அழகை மிஞ்சிய கவிதை நயம் mine


[12:26, 16/12/2023] CB Somaseker: மிக்க நன்றி ஐயா

அடி எடுத்து கொடுத்தது
ஐயா
அடியேன் சொல்வதென்ன
பொய்யா
மார்கழிக்குப் பின் மாதம்
தை யா
மயக்கும் மலரில் கவி பிறக்கும்
புதிதா
[12:29, 16/12/2023] SHERFUDDIN P: இதற்கு ஈடாக கவிதை எழுதும் அளவுக்கு எனக்கு தெரியாது
[15:46, 16/12/2023] CB Somaseker: எழுத்தை இணைத்தால்
வார்த்தை
வார்த்தையைப் பிணைத்தால் 
கவிதை
கருத்தாய்த் தொடுத்தால்
புதினம்
படிப்பவர் சுவைத்தால்
பழனம்

இறந்த கால
நிகழ்வுகளையும்
இலக்கிய நயத்தோடு
எல்லோரும்
சுவைக்கும்படி 
எளிய நடையில் 
உமது வழியில்
பதிவிடும் உங்கள்
கருத்தாழ விருத்தமே
கவிதைகளை 
மிஞ்சிடும் காதை
அதைக் கவினுற
எழுதுவதில் 
நீங்கள் மேதை

கவிதை, கதை, கட்டுரை,
காவியம்,ஓவியம் எல்லாமே 
எண்ணங்கள் 
நடை போடும் பாதை
அதில் கவிதை மட்டுமே
தெரிந்த நான் ஓர் பேதை🙏
[17:00, 16/12/2023] SHERFUDDIN P: ஐயா பேதைக் கவிஞரே போதும் போதும்
புகழ்ச்சியும் தன்னடக்கமும்

அளவுக்கு மிஞ்சினால் ------++
[19:09, 16/12/2023] SHERFUDDIN P: இறந்த காலம் என்பதை
கடந்த காலம் என்று சொன்னால் தங்கள் எழுத்து மேலும் அழகாகும் என்பது என் கருத்து

காலம்தான் நான் என்கிறான் ஏக இறைவன் திருமறையில்

பகவத் கீதையிலும இது போல வருவதாய் நினைவு

எனவே காலம் என்பது பிறப்பு இறப்புக்கு அப்பாற்பட்டது
[19:17, 16/12/2023] CB Somaseker: அழகான அர்த்தமுள்ள
திருத்தம்
அகமகிழ்வுடன் ஏற்பதில்
இல்லை வருத்தம்

இறந்த காலம் என்பது
எதிர்மறையாய் இருக்குது
கடந்தகாலம் என்பதே
கொஞ்சம் கனிவாய்க் காதில் ஒலிக்குது

நன்றி ஐயா🙏🙏


 

No comments:

Post a Comment